தஞ்சாவூர்க் குடைமிளகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தஞ்சாவூர்க் குடைமிளகாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

23.2.15

'திங்க'க்கிழமை : தஞ்சாவூர்க் குடைமிளகாய்




வருடா வருடம் ஜனவரி மாதம் முடியும்போது நினைவுக்கு வருவது இந்த தஞ்சாவூர்க் குடைமிளகாய்!  ஜனவரி முடிவில் தொடங்கி ஃபிப்ரவரி 28 தேதிக்குள் பெரும்பாலும் குடைமிளகாய் சீசன் முடிவுக்கு வந்துவிடும்.  அப்புறம் கிடைப்பது கொஞ்சம் கஷ்டம்.

தஞ்சையில் இருந்த காலங்களில் வீட்டு வாசலிலேயே அல்லது,  ஈவினிங் பஜார் சென்று வாங்கி விடுவோம்.  அங்கு சல்லிசாகக் கிடைக்கும்.


சென்னையில் மாம்பலத்தில்தான் பெரும்பாலும் வாங்குவது.  நாங்கள் ரெகுலராக வாங்கும் பார்ட்டி என்று அறிந்து(ம்) சில மாம்பல விற்பனையாளர்கள் எங்களிடம் கொள்ளை வியாபாரம் செய்வார்கள்.
இந்த முறை நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவில் சென்றபோது, கோவில் இருக்கும் தெரு வாசலில் ஒரு பெரியவரும், பெரியம்மாவும் இந்தக் குடைமிளகாய் விற்றுக் கொண்டிருக்க, விலை கேட்டபோது மயக்கமே வந்து விட்டது.  படி முப்பது ரூபாய்!   மாம்பலத்தில் படி 100 ரூபாய், 120 ரூபாய் என்று வாங்கி இருக்கிறோம்.  

ஒன்று,  மாம்பலத்தில் கொள்ளை அடித்திருக்க வேண்டும். அல்லது, இந்த முறை விளைச்சல் அதிகமாய் இருந்திருக்க வேண்டும்!  ஏதோ ஒன்று,  எங்கள் காட்டில் மழை!



குடைமிளகாய் வாங்கிவந்து பெரும்பாலும் மோர் மிளகாய்தான் போடுவது வழக்கம்.  அப்பாவுக்காக மிகச்ச்சில சமயங்களில் புளி மிளகாய் போடுவது உண்டு என்றாலும்,  மோர்மிளகாய் அளவு அது சுவையாய் இருப்பதில்லை. 


முன்னுரை அதிகமாகி விட்டது!

 
குடை மிளகாய் வாங்கும்போதே அதற்குத் தகுந்தாற்போல் பால் வாங்கிக் காய்ச்சி தயிர் தோய்த்து வைத்துக் கொளல் நலம்.
இனி செய்முறை. 


குடைமிளகாயை முதலில் சுத்தமான நீரில் சுத்தம் செய்து கொள்ளவும்.  பின்னர், குடைமிளகாயின் காம்புகளை முழுவதும் நீக்காமல், கொஞ்சம் பாக்கி வைத்து வெட்டி எடுத்துவிட்டு, மிளகாயை ஒரு பாத்திரத்தில் போடவும்.  



பின்னர் ஒவ்வொரு மிளகாயாக எடுத்து ரொம்ப வெட்டி விடாமல், ஒரு சிறு கீறல் போட்டு பாத்திரத்தில் போடவும்.


 

கல்லு உப்பு வாங்கி தேவையான அளவு போடவும்.  சிலர் மிளகாயையும் உப்பையும் கொஞ்சம் கொஞ்சமாக அதாவது ஒரு ஒரு அடுக்காகப் போடுவார்கள்.  நாங்கள் அளவு பார்த்து மொத்தமாக அப்படியே போட்டு குலுக்கி விட்டு விடுவோம்.  இதற்கு மஞ்சள் தூள் போன்ற இன்னபிற சமாச்சாரங்கள் போடுவதில்லை.


உப்புப் போடப்பட்ட மிளகாயை குறைந்தபட்சம் பனிரண்டு மணி நேரம் அப்படியே விட்டு விடவும்.


பிறகு முதலிலேயே தோய்த்து வைத்துள்ள தயிரை பாத்திரத்தில் மிளகாய் மூழ்கும் அளவு அல்லது முக்கால் மிளகாய் மூழ்கும் அளவு ஊற்றவும்.  நன்றாகக் கிளறி விட்டு மூடி வைத்து விடவும்.



மறுநாள் முதலே மிளகாய் சாப்பிடத் தொடங்கலாம்.  முதல் இரண்டு நாட்களும் அவ்வப்போது ஊற, ஊற மோர் சாதத்துக்கு தொட்டுக்கொள்ளலாம்.  முரட்டு மிளகாயாய் இல்லாமல் பிஞ்சு மிளகாயாய், ஊறிய மிளகாயாய் எடுத்துத் தொட்டுக்கொள்ள வேண்டும்.  அது தனிச்சுவை.


இரண்டு நாட்களுக்குப் பிறகு மிளகாயை வெயிலில் காய வைக்க ஆரம்பித்து விடலாம்.  ஒவ்வொரு நாளும் கொஞ்சம் கொஞ்சமாய் அது காயக் காய ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுவை!


நன்றாகக் காய்ந்து,  நீர்ச்சத்தின்றி மொருமொருவெனக் காய்ந்ததும் எடுத்து ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால் வருடம் முழுவதும் மோர்க்கூழ், அரிசி உப்புமா, ரவா உப்புமா என்று செய்யும்போது அதில் இதை வறுத்துச் சேர்க்கலாம்.  சுவைக்குச் சுவை, வாசனைக்கு வாசனை.   வீண் செய்யாமல் கூழ் / உப்புமாவுடன் சேர்த்து சாப்பிடலாம்.


சும்மாவே எண்ணெயில் பொரித்து மோர் சாதத்துக்கும் தொட்டுக் கொள்ளலாம்.  கடையில் வாங்கும் மிளகாய் வற்றல்களில் உப்பு அதிகம் இருக்கும்.   மேலும் கடைகளில் நீள மிளகாய்தான் கிடைக்கும்.  இந்தத் தஞ்சாவூர்க் குடைமிளகாயின் சைஸும்,  வாசனையும் தனி!


அதுவும் தயிரில் ஊறவைத்து காயவைத்து எடுத்திருப்பதால் பொரிக்கும் போதெல்லாம் ஒரு நெய் வாசனை அடிக்கும் பாருங்கள்...


தூள் போங்க...


இந்த மாத இறுதி வரை மார்க்கெட்டில் இந்த மிளகாய்க் கிடைக்கும்.  இது முடிந்த உடன் இருக்கவே இருக்கு மாவடு சீசன்!