மூன்று நாட்களுக்கு முன் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் பள்ளிக்கால நண்பர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.
"நண்பர்கள் எனக்கு சரிவர அமைய வில்லை என்று கூட எனக்கு சில சமயம் தோன்றும். இதற்கு காரணம் எந்த ஒரு ஊரிலும் நான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படிக்க வில்லை என்பதாக இருக்கலாம். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களிடம் இருந்த சில பழக்கங்கள் எனக்கு அவர்களை அன்னியமாக்கியது என்றால், என் சில நடவடிக்கைகள் அவர்களை என்னிடமிருந்து தொலைப் படுத்தி இருக்க வேண்டும். இப்போது என்னுடன் உறவாடும் சிலர் வேறு ஒரு தளத்தில் இருந்து பழகுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தோள் மேல் கை போட்டு உறவாடும் பாந்தவ்யம் வரவில்லை யாருக்கும் என்னுடன் அல்லது எனக்கு எவருடனும்! நான் கற்பனையில் வைத்திருந்த தளத்தில் சிலர் இல்லை. சிலர் சுத்த மண்டுகளாகவோ அல்லது வீண் கர்விகளாகவோ இருக்கக் கண்டேன். இதைச் சொல்லும் போது, ஐயா குறை அங்கு இல்லை உங்களிடம் இருக்கக் கூடுமல்லாவா என்று கேட்பதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்கிறேன். நண்பர் என்பவர் என்ன செய்யவேண்டும்? கேட்ட போது கடன் கொடுக்க வேண்டும். ஜாலியாக என்னுடன் விஸ்கி சாப்பிட வேண்டும்? என்னுடன் சினிமா சுற்றுலா வர வேண்டும்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல் என்றால் எனக்கும் இரண்டு மூன்று நல்ல நண்பர்கள் உண்டு. யாவரும் என் அலுவலக அறிமுகம். அவ்வளவே..."
படிப்பு
முடிந்து, வேலை தேடும் வரை இருக்கும் நேரம் நண்பர்கள் வட்டம் பெரிய
வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் வீட்டுடன் ஒரு மௌனப்பகை நிலவும் நேரத்தில்
நண்பர்கள் பெரிய ஆறுதலாகத் தெரிவார்கள். வீட்டுடன் மௌனப் பகையாக தெரிவது
வயதின் காரணமாக இருக்கலாம்...
அல்லது ஒரு விதக் குற்ற உணர்வின் காரணமாக
இருக்கலாம். குழுவில் முதலில் வேலை கிடைத்த நண்பர்கள் ஒன்று மற்றவர்களுக்கு
உதவியாக, ஆறுதலாக இருப்பார்கள்... அல்லது மெல்ல மெல்ல விலக
ஆரம்பிப்பார்கள். அவர்களே நமக்குப் பாடமாகவும் இருப்பார்கள். நமக்கும்
வேலை கிடைத்தபின் மேலே சொன்ன இரண்டு வகையில் ஏதாவது ஒன்றில் நாமும்
சேர்ந்து விடுவோம்...!
காதலித்தோ,
வீட்டில் பெண் பார்த்தோ... திருமணம் செய்யும் வயது... நண்பர்களுடன் கலந்து
பேசி சினிமா கடற்கரை பார்க் என்று நண்பர்களுடன் சுற்றி, பெண்களைப் பற்றி
பேசி ஒருவழியாக திருமண நேரம் வரும்....நண்பர்களுடன் திட்டமிடுதல் நடக்கும்.
யாரை அழைப்பது... பழைய நண்பர்கள் பெயர்கள்...
எப்படி புதுமையாக அழைப்பு
அச்சடிக்கலாம்... வரவேற்பில் என்ன புதுசாகச் செய்யலாம்... நண்பர்கள் வட்டம்
வேலைகளைப் பகிர்ந்து தலைமேல் போட்டுக் கொண்டு செய்து முடிக்கும். அன்ன
ஆகாரம் இன்றி டிரஸ் பற்றி கவலை இன்றி கிடைத்த இடத்தில் தூங்கி கிடைத்ததைச்
சாப்பிட்டு... ஒரு வழியாக திருமணமும் நடக்கும். மனைவியுடன்
அறிமுகங்கள்.... "சிஸ்டர் எங்காளை உங்க கிட்ட கண்ணுபோல ஒப்படைக்கிறோம் கண்
கலங்காமப் பார்த்துக்கோங்க..." டைப் வசனங்கள்....க்ரூப் போட்டோ...
பிறகு
ஒரு நீண்ட இடைவெளி...."மச்சான், ஸாரிடா...டயமே இல்லை...நான் யார் கூடவாவது
பேசினாலே கோச்சுக்கரா... பயங்கர பொசசிவ் தெரியுமா அவ..."
வேலைகளிருந்து ஓய்வு பெற்றபின் ஒரு காலகட்டம்.
ஏதோ தனிமைப் படுத்த பட்டது போல ஒரு உணர்வு சிலருக்கு தோன்றும்.
அப்போது பெரும்பாலும் உறவுகளை விட நண்பர்களைதான் மனம் அதிகம் தேடும். இந்த
கால கட்டத்தில் நினைத்துப்
பார்க்கும்போது பல்வேறு கால கட் டத்தில் கிடைத்த பல்வேறு நண் பர்கள் நினைவில்
நிற்பார்கள். சிறுவயது முதல், கோலிகுண்டு விளையாடிய நாள் முதல் இந்த நாள்
வரை எத்தனை நண்பர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்துப்
பார்த்தோமானால் சுவாரஸ்யமாக இரு க்கும். இடையில்
கல்லூரிக் காலத்திலும், வேலை செ ய்யுமிடத்து நண்பர்களும்.....
இதற்குப்
பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம்? இவர்களில்
எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள்? பிறகு
அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்? இந்த அனுபவங்கள் சற்றே
முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே...
நமக்கு எத்தனை நண்பர்கள் என்பதை வைத்து நம்மை எடை போடலாமா...?
நாம் எத்தனை பேருக்கு நண்பராக இருக்கிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது...