வியாழன், 24 நவம்பர், 2016

நட்பு - துள்ளித் திரிந்தது ஒரு காலம்


     மூன்று நாட்களுக்கு முன் திருமதி பானுமதி வெங்கடேஸ்வரன் பள்ளிக்கால நண்பர்களை சந்தித்ததைப் பற்றி ஒரு பதிவு போட்டிருந்தார்.  
    

                        
     எனது பள்ளிக்காலத் தோழர்களுடன் நான் இப்போது தொடர்பில் இல்லை.  பாதிப்பெயர்கள் மறந்து விட்டன.  கல்லூரிக் கால நண்பர்களிலேயே நிறைய பேர் நினைவில் இல்லை.  ரொம்ப யோசித்த பிறகு இரண்டு பள்ளிக்கால நண்பர்களின் நினைவு வந்தது.  அவர்களின் அலைபேசி எண் என்னிடம் உள்ளது.  ஆனால் பேசுவது வருடத்துக்கு ஒருமுறை இருக்கலாம்.  அல்லது ஏதாவது முக்கிய சம்பவம் நிகழ வேண்டும்.  சமீபத்தில் என் அப்பா காலமான போது இந்த இரண்டு நண்பர்களில் ஒருவன் அலைபேசினான்.  இன்னொருவன் வாட்ஸாப்பில் துக்கம் தெரிவித்தான்.
Image result for friends clip art images

     இந்த 'பள்ளி நண்பர்கள்' பற்றி எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் பகிர்ந்து கொண்டது இது.


     "நண்பர்கள் எனக்கு சரிவர அமைய வில்லை என்று கூட எனக்கு சில சமயம் தோன்றும். இதற்கு காரணம் எந்த ஒரு ஊரிலும் நான் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் படிக்க வில்லை என்பதாக இருக்கலாம். கொஞ்சம் நெருங்கிப் பழகியவர்களிடம் இருந்த சில பழக்கங்கள் எனக்கு அவர்களை அன்னியமாக்கியது என்றால், என் சில நடவடிக்கைகள் அவர்களை என்னிடமிருந்து தொலைப் படுத்தி இருக்க வேண்டும். இப்போது என்னுடன் உறவாடும் சிலர் வேறு ஒரு தளத்தில் இருந்து பழகுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. தோள் மேல் கை போட்டு உறவாடும் பாந்தவ்யம் வரவில்லை யாருக்கும் என்னுடன் அல்லது எனக்கு எவருடனும்! நான் கற்பனையில் வைத்திருந்த தளத்தில் சிலர் இல்லை. சிலர் சுத்த மண்டுகளாகவோ அல்லது வீண் கர்விகளாகவோ இருக்கக் கண்டேன். இதைச் சொல்லும் போது, ஐயா குறை அங்கு இல்லை உங்களிடம் இருக்கக் கூடுமல்லாவா என்று கேட்பதில் உள்ள நியாயத்தையும் உணர்ந்து கொள்கிறேன். நண்பர் என்பவர் என்ன செய்யவேண்டும்? கேட்ட போது கடன் கொடுக்க வேண்டும். ஜாலியாக என்னுடன் விஸ்கி சாப்பிட வேண்டும்? என்னுடன் சினிமா சுற்றுலா வர வேண்டும்? அதெல்லாம் ஒன்றும் இல்லை. அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல் என்றால் எனக்கும் இரண்டு மூன்று நல்ல நண்பர்கள் உண்டு. யாவரும் என் அலுவலக அறிமுகம். அவ்வளவே..."
Image result for friends clip art images

     நண்பர்கள் பற்றியும் நட்பு பற்றியும் முன்னர் எழுதிய ஒரு பதிவு நினைவுக்கு வருகிறது அதை இப்போது மீள் பதிவு செய்கிறேன்.

                                                        


 Image result for friends clip art imagesசிறு வயதில் இருக்கும் நண்பர்கள் எண்ணிக்கை வளர்ந்த பிறகு இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். படிக்கும் காலத்தில் பெற்றோர்களின் ஊர் மாற்றம், பள்ளிப் படிப்பு முடிந்தபிறகு வேறு ஊரில் அல்லது அதே ஊரில் இருந்தாலும் வெவ்வேறு கல்லூரிகள் என்று மாறும் போது நண்பர்கள் வட்டம் பிரிந்து விடுகிறது, சுருங்கி விடுகிறது, அல்லது வெவ்வேறு வட்டங்களில் பழகும்போது முதலில் இருந்த நெருக்கமான நட்புகள் பிறகு வாய்ப்பதில்லை.  இன்னும் சில இடங்களில் திருமணம் ஒரு பிரிக்கும் புள்ளியாக வந்து விடுகிறது. இவற்றையும் தாண்டிப் புனிதமாக தொடரும் நட்புகள் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை. (நாகை நண்பர்கள் வட்டம் இதற்கு விதிவிலக்கு)


Image result for friends clip art images  ஆரம்பப் பள்ளி நாட்களில் தொடங்கும் கள்ளமில்லா நட்பு எச்சில் பார்க்காது...வித்யாசம் பார்க்காது...மறு உறவுகளாகத் தோற்றம் கொடுக்கும். அழுகையும் சிரிப்பும் கலந்த நட்பு நாட்கள் அவை. அந்த இடத்திலிருந்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி நிலை என்று மாறும்போது மனதில் சிறு கள்ளம் புகுந்து, உயர்ந்த நட்பு, தாழ்ந்த நட்பு என்றும் நெருங்கிய வட்டம், வெளி வட்டம் என்றும் மாறுபாடுகள் தெரியத் தொடங்கும் காலம். அதையும் தாண்டி கல்லூரிப் பருவம் வந்த பிறகு தேர்ந்தெடுத்த பாடத் திட்டங்களின் தகுதி காரணமாகவும், அந்தஸ்து புரியத் தொடங்கிய காலம் காரணமாகவும் நட்பு வட்டம் பெரிதாவதோ சுருங்குவதோ உண்டு. சில சமயங்களில் காதல் பிரச்னை நண்பர்களையும் காட்டும், கூட்டும். எதிரிகளையும் சேர்க்கும். பிரிந்து, சேர்ந்து சண்டை இட்டு, சமாதானமாகி ஒரு முடிவுக்கு வரும் காலம்... Image result for friends clip art images
     படிப்பு முடிந்து, வேலை தேடும் வரை இருக்கும் நேரம் நண்பர்கள் வட்டம் பெரிய வரப்பிரசாதம். ஏதோ ஒரு வகையில் வீட்டுடன் ஒரு மௌனப்பகை நிலவும் நேரத்தில் நண்பர்கள் பெரிய ஆறுதலாகத் தெரிவார்கள்.  வீட்டுடன் மௌனப் பகையாக தெரிவது வயதின் காரணமாக இருக்கலாம்...    Image result for friends clip art imagesஅல்லது ஒரு விதக் குற்ற உணர்வின் காரணமாக இருக்கலாம். குழுவில் முதலில் வேலை கிடைத்த நண்பர்கள் ஒன்று மற்றவர்களுக்கு உதவியாக, ஆறுதலாக இருப்பார்கள்...  அல்லது மெல்ல மெல்ல விலக ஆரம்பிப்பார்கள். அவர்களே நமக்குப் பாடமாகவும் இருப்பார்கள்.     நமக்கும் வேலை கிடைத்தபின் மேலே சொன்ன இரண்டு வகையில் ஏதாவது ஒன்றில் நாமும் சேர்ந்து விடுவோம்...!


                                                                                                         Image result for friends marriage clip art images     காதலித்தோ, வீட்டில் பெண் பார்த்தோ...  திருமணம் செய்யும் வயது...  நண்பர்களுடன் கலந்து பேசி சினிமா கடற்கரை பார்க் என்று நண்பர்களுடன் சுற்றி, பெண்களைப் பற்றி பேசி ஒருவழியாக திருமண நேரம் வரும்....நண்பர்களுடன் திட்டமிடுதல் நடக்கும். யாரை அழைப்பது...  பழைய நண்பர்கள் பெயர்கள்...    Image result for friends clip art imagesஎப்படி புதுமையாக அழைப்பு அச்சடிக்கலாம்...  வரவேற்பில் என்ன புதுசாகச் செய்யலாம்...  நண்பர்கள் வட்டம் வேலைகளைப் பகிர்ந்து தலைமேல் போட்டுக் கொண்டு செய்து முடிக்கும். அன்ன ஆகாரம் இன்றி டிரஸ் பற்றி கவலை இன்றி கிடைத்த இடத்தில் தூங்கி கிடைத்ததைச் சாப்பிட்டு...  ஒரு வழியாக திருமணமும் நடக்கும். மனைவியுடன் அறிமுகங்கள்.... "சிஸ்டர் எங்காளை உங்க கிட்ட கண்ணுபோல ஒப்படைக்கிறோம் கண் கலங்காமப் பார்த்துக்கோங்க..." டைப் வசனங்கள்....க்ரூப் போட்டோ...

     பிறகு ஒரு நீண்ட இடைவெளி...."மச்சான், ஸாரிடா...டயமே இல்லை...நான் யார் கூடவாவது பேசினாலே கோச்சுக்கரா...  பயங்கர பொசசிவ் தெரியுமா அவ..."

  Image result for friends marriage clip art imagesஇதற்குப் பிறகு சில வருடங்கள் கழித்து ஒவ்வொரு நண்பனாக கல்யாணம் ஆகும் போது மற்ற நண்பர்கள் ஓடியாடி வேலை பார்க்க,  திருமணமான நண்பர்கள் மனைவியுடன் கெத்தாக வந்து பரிசு கொடுத்து விட்டு காணாமல் போவார்கள்...  ஒரு நீண்ட இடைவெளியில் எல்லோரும் இந்த அனுபவங்களுக்கு ஆட்பட்டபின் பழைய நட்பை நினைவுக்குக் கொண்டு வந்து தொடரும் நேரம் வரும்...


                                                                Image result for old friends clip art images     வேலைகளிருந்து ஓய்வு பெற்றபின் ஒரு காலகட்டம்.  ஏதோ தனிமைப் படுத்த பட்டது போல ஒரு உணர்வு சிலருக்கு தோன்றும்.  அப்போது பெரும்பாலும் உறவுகளை விட நண்பர்களைதான் மனம் அதிகம் தேடும். இந்த கால கட்டத்தில் நினைத்துப் பார்க்கும்போது பல்வேறு கால கட்டத்தில் கிடைத்த பல்வேறு  நண்பர்கள் நினைவில் நிற்பார்கள். சிறுவயது முதல், கோலிகுண்டு விளையாடிய நாள் முதல் இந்த நாள் வரை எத்தனை நண்பர்கள் நம்முடன் இருக்கிறார்கள் என்று நினைத்துப் பார்த்தோமானால் சுவாரஸ்யமாக இருக்கும். இடையில் கல்லூரிக் காலத்திலும், வேலை செய்யுமிடத்து நண்பர்களும்.....

     இதற்குப் பின் எத்தனை நண்பர்களுடன் நாம் இன்னும் தொடர்பு வைத்துள்ளோம்? இவர்களில் எத்தனை பேர் நம் பள்ளிப் பருவத்திலிருந்தே தொடர்பவர்கள்? பிறகு அறிமுகமானாலும் நெருங்கியவர்கள் எத்தனை பேர்? இந்த அனுபவங்கள் சற்றே முன்பின் மாறுபட்டாலும் எல்லோருக்கும் பொதுதானே...

     நமக்கு எத்தனை நண்பர்கள் என்பதை வைத்து நம்மை எடை போடலாமா...?


     நாம் எத்தனை பேருக்கு நண்பராக இருக்கிறோம் என்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.  
 
படங்கள் நன்றியுடன் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது...

23 கருத்துகள்:

 1. தொடர்புண்டு, நட்பில்லை. மொத்தத்தில் நட்பென யாருமே இல்லை

  பதிலளிநீக்கு
 2. பள்ளிக் கால தோழிகள், கல்லூரித் தோழிகள், உடன் வேலை பார்த்தோர் என அனைத்து நட்புக்களும் என் நட்புச் சங்கிலியில் என்றும் பிணைக்கப் பட்டுள்ளனர். அந்தந்த காலத்து சுவராஸ்யங்களை அசை போடுவதே சுகம்.

  பதிலளிநீக்கு
 3. என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட்டுவரை எல்லா மட்டங்களிலும் உண்டு. வலுவான நட்புக்கள் அமைவதென்பது இறைவன் தரும் வரம். அது நாம் பழகுவதைப் பொறுத்தே அமையும்.

  பதிலளிநீக்கு
 4. என்னுடைய நட்பு வட்டம் மேல் தட்டிலிருந்து, கீழ்த்தட்டுவரை எல்லா மட்டங்களிலும் உண்டு. வலுவான நட்புக்கள் அமைவதென்பது இறைவன் தரும் வரம். அது நாம் பழகுவதைப் பொறுத்தே அமையும்.

  பதிலளிநீக்கு
 5. எனக்கும் பள்ளிக்கால நண்பர்கள் குறைவு. காரணம் என் தந்தைக்கும் தொடர்ந்து இடமாற்றம் இருந்ததுதான். அருமையான பதிவு.
  த ம 3

  பதிலளிநீக்கு
 6. ஒவ்வொரு காலகட்டத்திலும் நட்பு மிக அவசியம்.
  எங்கள் அப்பாவிற்கும் ஊர் ஊராக உத்தியோகம் மாறும். பள்ளி நட்புகள் மாறிக் கொண்டே இருப்பார்கள். கடித தொடர்புகள் கொஞ்சம் இருந்து பின் காலப்போக்கில் தேய்ந்து மறைந்து போனது. சில நட்புகள் போன் செய்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். இப்போது வலை நட்புகள் நலம் விசாரித்துக் கொண்டு இருக்கிறார்கள். பள்ளி, அக்கம் பக்கம், கோவில் நட்பு, வலை நட்பு என்று எப்போதும் நட்புகள் தொடர்வது மகிழ்ச்சி.

  பாடல் பகிர்வு அருமை. பதிவு பழைய நட்புகளை நினைக்க வைத்தது நன்றி.

  பதிலளிநீக்கு
 7. இந்த நட்புக்கான பகிர்வு அருமை! பாரதி சொன்னது போல நாம் பழகுவதற்கேற்பத்தான் உண்மையான நட்புக்கள் அமையும். மற்றதெல்லாம் காற்றில் பறக்கும் இலை போல அவ்வப்போவது சிதறிப்போகும். குழ்ந்தைப்பருவ நட்புகள் களங்கமில்லாதது. அதனால்தான் மனதில் இன்னும் அதைப்பற்றிய நினைவலைகள் அவ்வப்போது அடித்துக்கொன்டிருக்கின்றனவோ என்னவோ!

  பதிலளிநீக்கு
 8. முடிவில் ஒன்று சொன்னீர்களே, அது தான் மிகவும் முக்கியம்...

  பதிலளிநீக்கு
 9. yes... continuing school and college friendship is particularly difficult for ladies....

  பதிலளிநீக்கு
 10. முடிவில் அருமையான தத்துவம் தந்தீர்கள் நண்பரே ஒருவனது நட்பின் அழகு அவனது மரணத்தன்று தெரியும்.

  பதிலளிநீக்கு
 11. பள்ளி-கல்லூரிக் கால நட்புகள் தொடருகின்றன. ஒவ்வொரு காலக் கட்டத்திலும் ஏற்பட்ட நட்புகளில் சிலர் அதிக தொடர்பில் இல்லாது போனாலும், சிலர் மாதமிருமுறையேனும் நலம் விசாரித்துக் கொள்ளும் வகையில் நட்பைத் தொடருகிறோம். நட்பு ஒரு வரம்.

  நல்ல அலசல். நல்ல பதிவு.

  நல்ல அலசல்

  பதிலளிநீக்கு
 12. அருமையான பதிவு

  பலரோடு படித்தோம்
  சிலரோடு நட்பானோம்
  இன்றுவரை
  நட்புகள் உள்ளனர்

  பதிலளிநீக்கு
 13. 'நட்பு என்பதிலேயே நிறைய பிரிவுகள் (classifications) இல்லையா? எல்லா நட்புகளிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ள இயலுமா? 'Being friendly' வேறு, உண்மையான நட்பு வேறில்லையா?

  வெறும் நண்பர்கள் வட்டாரம், நம் பழகும் விதத்தில் அதிகரிக்கத்தானே செய்யும். இந்த technique நிறையபேரிடம் கிடையாது (நான் உள்பட). அதனால் அப்படிப்பட்டவர்களுக்கு நண்பர்கள் மிகவும் குறைவாகத்தான் இருப்பார்கள். சிலபேர் ரொம்ப பேசுற டைப்பா இருப்பாங்க. அவங்களுக்கு நண்பர்கள் ஜாஸ்தியா இருக்கும்.

  எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்வதுபோல் ஒருவருக்கு ஓரிரண்டு நட்பு கிடைத்தாலே ஆச்சரியமில்லையா? என் ஹஸ்பண்டு, துணைவி/துணைவர்தான் ஒருவருக்கு உண்மையான நட்பு என்று சொல்லுவா. (எனக்கு அதுல உடன்பாடு இல்லை. நட்பு என்பது அதுக்கும் மேல).

  பள்ளிக்கால, கல்லூரிக்கால நட்புக்கு அந்தஸ்து ஒரு தடையாக இருக்காது. அதனால, இப்போதும் அவர்களைச் சந்திக்க நேர்ந்தால், அந்தஸ்து குறுக்க வராதுன்னு நினைக்கிறேன். அதுவும் சந்தேகம்தான். (துரோணர் கதை ஞாபகம் இருக்கா? நட்பு சம அந்தஸ்து உள்ளவர்களிடத்தில்தான் வர முடியும்)

  ஆண்களுக்கு இருக்கும் சுதந்திரம்போல், பெண்களுக்கு நட்பைப் பேணும் சுதந்திரம் இதற்கு முன்னால் குறைவு. இப்போதான் 10+ வருடங்களாக இது மாறுகிறது என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 14. வாலிப வயதில் என்னுடன் பழகிய நண்பரை அடிக்கடி பார்க்க வேண்டுமென்று நினைத்துக் கொள்வேன் ,ஆனால் எங்கே இருக்கிறார் என்றே தெரியாமல் இருந்தது .சில நாட்கள் முன்,அவர் ஒரு வருடம் முன்பே காலமாகி விட்டார் என்பது அறிந்து ,இழக்கக் கூடாத ஒன்றை இழந்தது போல் உணர்ந்தேன் :(

  பதிலளிநீக்கு
 15. பள்ளிக் கால நண்பர்கள் இன்றும் அதிகமானோர் தொடர்பில் இருக்கிறார்கள் நண்பரே
  அருமையான பதிவு

  பதிலளிநீக்கு
 16. நல்ல அலசல் தான் என்றாலும் முழுக்க முழுக்க ஆண்களின் பார்வையிலேயே எழுதப் பட்டது பொதுவாகப் பெண்கள் தங்கள் சிநேகிதத்தைத் தி.பி. வளர்த்துக் கொள்வதில்லை. ஒரு சில விதி விலக்குகள் இருக்கலாம். ஆனால் ஆண்கள் தங்கள் நட்பைப் போற்றிப் பாதுகாக்கின்றனர். கணவனின் நண்பர்கள் அவர்கள் மனைவிமார்கள், குடும்பம் என அனைவரையும் மனைவிக்குத் தெரிந்து கொண்டு அவள் அவர்களை உபசரிக்கிற மாதிரி கணவன் மனைவியின் சிநேகிதிகளையோ அவர்களின் கணவன்மாரையோ வரவேற்று உபசரிப்பானா என்பது சந்தேகமே!

  ஹிஹிஹிஹி, நம்மபங்கு அரைக்காசு! :))))

  பதிலளிநீக்கு
 17. பல ஊர்ல ட்ரான்ஸ்பர் அப்பாவுக்கு அதனால் பள்ளி நட்புக்கள் தொடர்பில்லை .இப்போ எல்லாருமே நட்புக்கள் வலைப்பூ fb யில் ..

  பதிலளிநீக்கு
 18. சமீபத்தில் உறவுகளும் நட்பும் என்று எழுதி இருந்தேன்நட்பின் அளவுகோலைச் சரியாகச் சொல்லி இர்ருக்கிறீர்கள்/அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல்/ ஆனால் அது பல இடங்களில் இல்லை. அவுட் ஆஃப் சைட் அவுட் ஆஃப் மைண்ட்

  பதிலளிநீக்கு
 19. /அவரைக் கண்ட விடத்து நானும் என்னைக் கண்டபோது அவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும். இதுதான் அளவுகோல்/ / அதே அதே!!

  நட்புகள் நிறைய இருக்கலாம். ஹை பையுடன் புன்சிரிப்புடன்....ஆனால் நல்ல நட்பு என்பது அரிது. நல்ல பதிவு.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!