நிந்தாஸ்துதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நிந்தாஸ்துதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

1.2.12

உலகைக் காத்திடும் ....

               

வழக்கம்போல் எஃப் எம் ரேடியோவில் கச்சேரி கேட்டுக் கொண்டிருந்தேன். 
         
" உலகைக்காத்திடும் ஊமையின் மகனே! " என்று பாடகி பாடியதும் ஒரு கணம் திகைத்துப் போனேன். பாக்களில் இந்த மாதிரி பிரயோகங்களை நிந்தாஸ்துதி என்று சொல்வர்.  இறைவன் அல்லது இறைவியை திட்டுவது போல துதி செய்வது நிந்தாஸ்துதி. 
            
வாதக்காலாம் தமக்கு மைத்துனருக்கு நீரிழிவாம் 
போதப் பெருவயிறாம் புத்திரர்க்கு -- மாதரையில்
வந்த வினை தீர்த்தறியான் வேளூரான் 
எந்த வினை தீர்த்தான் இவன்?
                       
வைத்தீஸ்வரன் கோவில் ஆண்டவன் தீராத வினையெல்லாம் தீர்ப்பவன் என்று காளமேகப் புலவருக்கு யாரோ சொன்னார்களாம். அதற்கு பதிலாக அவர் சொன்னது இந்தப் பாடல் என்பார்கள். தன காலில் வாதம் வந்து ஒருகாலை தூக்கி ஆடுகிறான். மகன் விநாயகனுக்கு வயிறு வீங்கி மகோதரம். மாது அரை இல் பார்வதி பாதி உடம்பை பிடித்து வைத்துக் கொண்டாள். தனக்கு வந்த வினையையே தீர்க்க முடியாத இந்த நடராஜன் எந்த வினையை தீர்ப்பான்? இது நிந்தாஸ்துதிக்கு ஒரு பிரகாசமான உதாரணம். 
              
உலகைக் காத்திடும் ஊமை!  அடடா! இறைவன் அல்லது இறைவி இருவருக்கும் பொருத்தமான சொல்! உலகைக் காக்கும் இறை ஊமை! நீ என்ன கதறினாலும் அது பதில் சொல்வதில்லை. அது பாட்டுக்கு தன்னுடைய தொழிலை செய்து கொண்டு இருக்கிறது. நீயோ நானோ அந்த இறைவி அல்லது இறைவனின் மகன் தான்! என்னே சொல்லாட்சி! என்னே பொருள் வளம்!  
                     
என் ரசனையில் நானே மெய் மறந்திருக்கும் போது பாடகி அடுத்த முறை சரியாகப் பாடினார்! 
                     
" உலகைக் காத்திடும் உமையின் மகனே!....."