நாலாயிர திவ்யப் பிரபந்தம் – வாரம் ஒரு பாசுரம் தொடர்
நெல்லைத் தமிழன்
குரு பரம்பரை மற்றும் பாசுரம் – பகுதி 30
பிள்ளை உறங்காவில்லி தாசர் மற்றும் அவரது இரண்டு மருமகன்களான வண்டலங்கார தாசர், செண்டலங்கார தாசர், இராமானுஜரின் அடி பணிந்து கோயில் கைங்கர்யங்களில் ஈடுபட்டதைச் சென்ற வாரம் பார்த்தோம். பிறகு இராமானுஜர், அகளங்கனை, கோவில் கைங்கர்யங்களை மேற்பார்வையிடும் அதிகாரியாக நியமித்தார் என்பதையும் பார்த்தோம். இனி இந்த வாரம்.
பிள்ளை உறங்காவில்லி தாசரும் அவரது தர்மபத்னி பொன்னாச்சியாரும் இராமானுஜரின் அடி பணிந்து கைங்கர்யங்கள் செய்து தங்கள் வாழ்வை முழுமையாக அவருக்கே அர்ப்பணித்து வாழ்ந்தனர். பெருமாளின் திருமேனியைக் காப்பவராக பிள்ளை உறங்காவில்லி தாசரும் அவரைச் சேர்ந்தவர்களும் பணியாற்றினர்.
காவிரியில் தினமும் நீராடப் போகும்போது முதலியாண்டான் கைகளைப் பற்றிக்கொண்டு செல்லும் இராமானுஜர், நீராடி அனுஷ்டானங்களை முடித்த பிறகு பிள்ளை உறங்காவில்லியின் தோள்களைப் பிடித்துக்கொண்டு நட ந்து வருவார். இதனைக் கண்ணுற்ற அவரது சீடர்களில் சிலர், எப்படி சன்னியாசியாகிய இராமானுஜர், வேடுவக் குலத்தைச் சேர்ந்த பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பிடித்துக்கொண்டு வரலாம் என்று நினைத்து, இராமானுஜரிடமும் இதனை விண்ணப்பித்தனர்.
இராமானுஜர், ஒரு விசேஷ தினத்தில், அந்த சீடர்களைக் கூப்பிட்டு, இன்று இரவு பிள்ளை உறங்காவில்லி தாசரின் வீட்டில் பொன்னாச்சியார் மாத்திரம்தான் இருக்கிறார் (உறங்காவில்லி தாசர் கோயில் கைங்க்ரயங்களில் இருக்கிறார்). அந்த வீட்டில் நகையை அபகரித்து வாருங்கள் என்றார். அவர்களில் சிலர் பொன்னாச்சியார் வீட்டிற்கு நள்ளிரவில் சென்றனர். மிக மெதுவாக, அயர்ந்து தூங்கிக்கொண்டு இருந்த பொன்னாச்சியார் நகையைக் கழற்றத் துணிந்தனர். பொன்னாச்சியாரும் நடப்பதை அறிந்து வறுமையின் காரணமாக இவர்கள் திருடுகிறார்கள் என்பதை அறிந்து அமைதியாக இருந்தார். பிறகு அடுத்த பக்கத்தில் உள்ள (காது) நகையையும் கழற்றிக்கொள்ளட்டும் என்று நினைத்து இயல்பாக தூக்கத்தில் திரும்புவதுபோல ஒருக்களித்தார். அதைக்கண்டு, அவர் எழுந்துவிட்டார் என அச்சப்பட்டு சீடர்கள் அவரது வீட்டை விட்டு அகன்றுவிட்டனர். இராமானுஜரிடம் வந்து நடந்ததைச் சொல்லவும், திரும்பவும் தாசரின் இல்லம் சென்று என்ன நடக்கிறது என்று பார்த்து வாருங்கள் என்று அவர் சொன்னார்.
தாசர் தன் இல்லம் திரும்பியபின் பொன்னாச்சியைப் பார்த்து ஒரு பக்க நகையைக் காணவில்லையே என்று கேட்க, பொன்னாச்சியாரும் நடந்த விஷயங்களைச் சொன்னார். ஒருக்களித்துப் படுக்க நினைத்ததை நான் கண்விழித்துவிட்டதாக எண்ணி, அந்த ஸ்ரீவைணவர்கள் அகன்றுவிட்டனர் என்று சொல்ல, அதற்கு தாசர், நீ கல் போல் கிடக்கவில்லையோ? அப்படி இருந்திருந்தால் அந்தப் பக்க நகைகளையும் அவர்கள் எடுத்துக்கொள்ள ஏதுவாக இருந்திருக்குமே என்று சொல்லி வருத்தப்பட்டாராம்.
சீடர்கள் இதனைக் கண்டு, எப்படிப்பட்ட வைணவர் இவர் என்று வியந்துபோனார்களாம்.
பெரியாழ்வார் மற்றும் மற்ற ஆழ்வார்களும் எம்பெருமானிடத்தில் அவ்வளவு வாஞ்சையோடு கூடிய ஈடுபாட்டோடு இருந்தது போலவே பிள்ளை உறங்காவில்லி தாசரும் பெருமாள் கைங்கர்யத்தில் மாத்திரமல்ல, அறிவுக்கூர்மையுடனும் திகழ்ந்தார். அவரது தர்மபத்னி பொன்னாச்சியாரும் நல்ல கல்வி கேள்வி அறிவு பெற்றுத் திகழ்ந்தார்.
(அறிவு, ஞானம் மற்றும் ஈடுபாடு, பொருளாசை இன்மை, குலத்துடன் சம்பந்தப்பட்டதல்ல என்பதை ஆச்சார்யார்களின் வரலாற்றில் பல இடங்களில் நாம் காண முடிகிறது. அவை அவ்வப்போது வரும்)
நமக்கு இயல்பான சந்தேகம் வரும். அது எப்படி? மல்லராக, பாதுகாவலனாக இருந்த ஒருவருக்கு அப்படி பக்தியும், கல்வி அறிவும் ஏற்படும் என்று. வைணவராகப் பிறந்த ஒருவரை விட மற்ற குலத்தில் உள்ளவர்கள் அதிக பெருமாள் பக்தியும், கிரந்தங்களில் மற்றும் திவ்யதேசங்களில் ஈடுபாடு காட்ட இயலுமா எனச் சிலர் நினைக்கக் கூடும். அப்படி ஏகப்பட்டபேர்கள் தற்காலத்திலும் இருக்கின்றனர். அத்தகையவர்களில் சிலரைச் சந்திக்கும் பேறு எனக்கு வாய்த்திருக்கிறது. அப்போது நான் நினைத்துக்கொள்வேன், அவர்களைப் போன்ற பக்தி, ஈடுபாடு நூற்றில் ஒரு பங்குகூட எனக்கு இல்லையே என்று. (அதற்குரிய ஞானத்தை அவன் கொடுக்கவில்லை என்பதும் உண்மை என்றாலும், அதுவும் என் முன்வினைப் பயன் காரணமாகவே என்பதையும் உணர்கிறேன்) அதில் ஒருவரைப் பற்றி அடுத்த வாரம் எழுதுகிறேன்.
பிள்ளை உறங்காவில்லி தாசரின் ஞானம் பற்றி திவ்யப் பிரபந்தத்தின் வியாக்கியானங்களில் வருகிறது. ஏற்கனவே எவ்வளவு பேருரைகள் திவ்யப் பிரபந்தத்திற்கு உள்ளன (ஆறாயிரப்படி, ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி) என்று குறிப்பிட்டிருக்கிறேன்.
அவற்றில் சில இடங்களில் பிள்ளை உறங்காவில்லி தாசரைப் பற்றியும் வருகிறது. அவற்றை இங்கு காண்பது பொருத்தமுடைத்து என்று நினைக்கிறேன்.
இராமானுஜர் ஒருமுறை விபீஷண சரணாகதி பற்றி உபந்நியாசம் செய்துகொண்டிருந்தபோது, கோஷ்டியில் இருந்த பிள்ளை உறங்காவில்லி தாசர் எழுந்திருந்து, இராமர், தன்னைச் சேர்ந்த சுக்ரீவன், ஜாம்பவானுடன் விவாதம் செய்து எல்லாவற்றையும் துறந்து தன்னை வந்தடைந்த விபீஷணரை ஏற்றுக்கொண்டதைப் போல, கிருகஸ்தாஸ்ரமத்தில் இன்னும் இருக்கிற தனக்கு எவ்வாறு மோக்ஷம் கிட்டும் என்று கேட்டார். அதற்கு இராமானுஜர், ‘நமக்கு மோட்சம் கிட்டினால் உமக்கும் கிட்டும், பெரிய நம்பிக்கு மோட்சம் கிட்டினால் தமக்கும் கிட்டும், ஆளவந்தார் மோக்ஷமடைந்தால் பெரிய நம்பிக்கு அது கிட்டும். இது சங்கிலித் தொடர் போல் பரம்பரையில் மேற்செல்லும். மேலும் நம்மாழ்வார் தமக்கு மோட்சம் கிட்டியதென்று அறிவித்ததைப் போல, பெரிய பிராட்டியாரும் நாம் அனைவரும் மோட்சம் அடைய எம்பெருமானிடம் பரிந்துரை செய்கிறார்” என்று பதிலளித்தார். விபீஷணனுடன் உடன் வந்த நான்கு ராக்ஷசர்களும் விபீஷணனையே நம்பி வந்ததால் எப்படி இராமர் தானாக அந்த ராக்ஷசர்களுக்கும் நற்கதி அளித்தாரோ அதே போல ஆச்சார்ய சம்பந்தம் உடையவர்கள் அனைவரும் நற்கதி அடைவார்கள் என்பது திண்ணம். இந்தச் சம்பவம் ஆறாயிரப்படி குரு பரம்பரை பிரபாவத்தில் எழுதப்பட்டிருக்கிறது.
பெரிய திருமொழி இரண்டாவது பத்து, ஆறாவது பதிகம் முதல் பாசுரத்தில் (நண்ணாத வாள் அவுணர்* இடைப்புக்கு பாசுரம்) பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில், இந்தப் பாசுரத்தில் எம்பெருமானிடம் தாசருக்கு உள்ள அளவு கடந்த பற்று, யசோதை, பெரியாழ்வாரைப் போல, எடுத்துக் காட்டப்படுகிறது. நம்பெருமாள் புறப்பாடு நடக்கும் வேளையில், தாசர் எப்பொழுதும் தன் கையில் வாளை ஏந்திக்கொண்டு, பெருமாள் முன்பாக நடந்து செல்வது வழக்கம். தம்மை மீறி, நம்பெருமாளுக்கு ஏதேனும் இடையூறு நடந்துவிட்டால் தன்னை வாளால் மாய்த்துக்கொள்வதற்காக அப்படிச் செல்வாராம் என்று குறிப்பிடப்படுகிறது. இப்படிப்பட்ட அன்பு உடையவர்களை மஹாமதி என்று அழைப்பது வழக்கம். அப்படி தாசரை மஹாமதி என்று நம்பிள்ளை குறிப்பிடுகிறார்.
நம்பிள்ளை திருவிருத்தம் வியாக்கியானத்தில், 8ம் பாசுரத்தில், இராமானுஜர் வரலாற்றில் நடந்த நிகழ்வைத் தெரிவிக்கிறார். இராமானுஜர் திருவரங்கத்தில் இருந்தபோது ஏதோ ஒரு மனக்கசப்பு ஏற்பட்டு, திருமலைக்குச் செல்வதாகத் தீர்மானித்தார். அப்போது ஸ்ரீவைணவர் ஒருவருக்கு தமது மடத்திலிருந்து நெல் கொடுக்க விரும்பிய இராமானுஜர், தமது மோதிரத்தை அந்த ஸ்ரீவைணவரிடம் கொடுத்து, களஞ்சியத்தின் காவலர் பிள்ளை உறங்காவில்லி தாசரிடம் அந்த மோதிரத்தைக் காண்பித்து நெல் பெற்றுக்கொள்ளுமாறு கூறினார். ஸ்ரீவைணவரும் இராமானுஜர் மடத்திற்குச் சென்றபோது, பிள்ளை உறங்காவில்லி தாசர் தன் ஆச்சார்யார் இராமானுஜர், திருமலை செல்லப்போவதை அறிந்து, கதவைச் சாத்திகொண்டு, ‘காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்’ பாசுரத்தைச் சொல்லிக்கொண்டு அழுதுகொண்டிருந்தாராம். தன்னுடைய வரவை தாசருக்குத் தெரிவிக்க மடத்தில் யாரும் இல்லை என்பதைக் கண்டு, அந்த ஸ்ரீவைணவரும் இராமானுஜரிடம் திரும்பச் சென்றுவிட்டார். இராமானுஜர், ‘ஏன் இவ்வளவு சீக்கிரம் திரும்பிவிட்டீர்? நெல் பெற்றுக்கொள்ளவில்லையா?” என்று கேட்க, ஸ்ரீவைணவரும் அங்கு நடந்ததைக் கூறினார். “காண்கின்றனகளும் கேட்கின்றனகளும்” என்ற இந்தப் பாசுரத்தைச் சொல்லிக்கொண்டே அழுதுகொண்டிருந்தார் என்று சொன்னதைக் கேட்ட இராமானுஜர், ‘வண்பூமணிவல்லி யாரே பிரிபவர்தாம்” என்ற அடுத்த பாசுரத்தைக் கூறியிருக்கலாமே என்று சொன்னாராம்.
மேலே செல்வதற்கு முன்பு அந்த இரண்டு பாசுரங்களை இன்று பார்த்துவிடலாமா?
திருவிருத்தம் நம்மாழ்வார் முதன் முதலாக எழுதிய பிரபந்தம். நூறு பாசுரங்களைக் கொண்டது. அந்தாதி நடையில் அமைந்தவை. இதில் தலைவி, தன் தலைவனைப் பிரிந்த பிரிவாற்றாமையால் (அதாவது ஜீவாத்மா, பரமாத்மாவுக்காக ஏங்கும் நிலையில்) பாடுவதைப் போல பாசுரங்கள் அமைந்துள்ளன. பக்திச் சுவை மிகுந்த பிரபந்தம் இது. இதனைப் பாடும்போது (சேவிக்கும்போது) இயல்பாக துன்பச் சுவை ஒன்று மிளிர்வதைக் காண முடியும். அதில் எட்டாவது பாசுரம்.
காண்கின்றனகளும்* கேட்கின்றனகளும் காணில்,* இந்நாள்-
பாண்குன்ற நாடர் பயில்கின்றன,* இதெல்லாம் அறிந்தோம்-
மாண்குன்றம் ஏந்தி தண் மாமலை வேங்கடத்து உம்பர்நம்பும்*
சேண்குன்றம் சென்று,* பொருள்படைப்பான் கற்ற திண்ணனவே.
இது தலைவி, தன் தோழியிடம் வருத்தத்துடன் கூறுவதாக அமைந்த பாசுரம். தன்னை விட்டுப் பிரிந்து, பொருளீட்டுவதற்காக தலைவன் செல்லப்போகிறான் என்பதை நாம் அறிவோம் என்று வருத்தத்துடன் கூறுகிறாள்.
பொருள்: தற்போது கண்ணால் காண்பவைகளையும், காதால் கேட்பவைகளையுமான தலைவனின் செய்கைகளை வைத்து, தலைவன் பொருளீட்டுவதற்காக திருமால் உறைந்திருக்கும் திருவேங்கடமலைக்குச் செல்கிறான், தன்னைப் பிரியப்போகிறான் என்பதைப் புரிந்துகொண்டேன் என்கிறாள் தலைவி.
விளக்கம்: பாண்குன்ற நாடன் – பாணர்களை உடைத்தான மலை நாடு. அல்லது வண்டுகள் ரீங்காரமிடும் மலைக்குத் தலைவன். இதெல்லாம் அறிந்தோம் – அவன் நம்மைப் பிரியப்போகிறான் என்பதை அறிந்தோம். எதனால்? அவன் நம்மிடம் அன்போடு இருப்பது போல் சொல்பவைகளைக் கேட்டும், நடந்துகொள்வதைப் பார்த்தும், இது என்றுமில்லாததுபோல் இருக்கிறதே என்று நினைத்து. மாண் குன்றம் ஏந்தி – பெருமை மிக்க கோவர்தன மலையைக் குடையாகப் பிடித்த, சேண் குன்றம்-தொலைதூரமுள்ள மலை
உள்ளர்த்தம்: ஆழ்வார் எம்பெருமானது பிரிவாற்றாமையால் வருந்தி நிற்க, தன் மீது அன்பு கொண்ட பாகவதர்கள் (ஸ்ரீவைணவர்கள்), பரம்பொருள் மீது ஆசை கொண்டு திவ்யதேச யாத்திரையாக திருமலையை நோக்கிச் செல்லத் தொடங்கியதைக் கண்டு, அவர்களது பிரிவை ஆற்றாமையால் ஆழ்வார் வருத்தப்பட்டு அருளியது என்று அர்த்தம் கொள்ளலாம்.
அடுத்த பாசுரத்தில் தலைவன் பதில் கூறுவதாகப் பாடுகிறார் நம்மாழ்வார்.
திண்பூஞ் சுடர்நுதி* நேமியஞ் செல்வர்,* விண்ணாடு அனைய-
வண்பூ மணிவல்லி யாரே பிரிபவர் தாம்,* இவையோ-
கண்பூங் கமலம் கருஞ்சுடராடி வெண்முத்தரும்பி*
வண்பூங் குவளை,* மடமான் விழிக்கின்ற மாயிதழே.
பொருள்: வலிமையான அழகிய ஒளி வீசும் கூர்மையான முனைகளைக் கொண்ட சக்கராயுதத்தை ஏந்திய திருமால், சுவர்கம் போன்ற வளமான மலர்களைக் கொண்ட இரத்தினக் கொடி போன்ற தலைவியைப் பிரிவாரா? ஏனென்றால், இவளது கண்கள், தாமரை மலர்கள் போன்றும், அழகிய செங்கழுநீர் மலர்கள் போன்றும், பெரிய இதழ்களுமாய், கருப்பு நிற மையை அணிந்து ஒளி பெற்று, தலைவனைப் பிரிகிறோமே என்ற வருத்தத்தினால் கண்ணீராகிய வெளுப்பான முத்துக்கள் தோன்றப் பெற்று, தெரிந்த விஷயத்தையும் தெரியாதது போல நடிக்கும் அப்பாவித்தனம் கொண்ட மான் போல நோக்குகின்றன.
விளக்கம்: நுதி-கூர்மையான முனை, நேமி-சக்ராயுதம், செல்வர்-சகல ஐச்வர்யங்களையும் தன்னுடைத்தான திருமால். மணி வல்லி-ரத்தினக் கொடி, மட மான் - மருண்ட பார்வையை உடைய மான்.
இரண்டாம் திருவந்தாதி பிரபந்தத்தில் பூதத்தாழ்வாரின் வரிகள் “கோல் தேடி ஓடும் கொழுந்ததே போன்றதே மால் தேடி ஓடும் மனம்” இங்கு பொருத்தமாக உள்ளது. (இயல்பாக கொடி ஒன்று ஒரு கொழுகொம்பை நோக்கிச் செல்லும், அதனைப் பற்றி வளர்வதற்கு. அதுபோல இயல்பாகவே நம்முடைய மனம் இறைவனை நோக்கிச் செல்லும், கடைத்தேற)
8ம் பாசுரத்தில், தலைவி, தலைவன் தன்னைப் பிரிந்து திருவேங்கடமலைப் பக்கம் செல்லப்போகிறான் என்கிறாள். 9ம் பாசுரத்தில், தலைவியை விட்டு அவனால் பிரிந்து செல்ல இயலுமா என்ற பொருள் வருகிறது.
பொன்னாச்சிக்குக் குடை பிடிக்கும் உறங்காவில்லி.
நாம் பிள்ளை உறங்காவல்லி தாசரைப் பற்றி வியாக்கியானங்களில் வேறு என்ன கூறப்பட்டிருக்கிறது என்பதை அடுத்த வாரம் தொடர்வோம்...
===============================================================================
நான் படிச்ச கதை - JKC
இன்று இரண்டு ஆன்மீகக்கதைகள் இங்கு இடம் பெறுகின்றன. தங்கம் கிருஷ்ணமூர்த்தி எழுதியது.
தங்கம் கிருஷ்ணமூர்த்தி - தமிழ் விக்கிப்பீடியா
தங்கம் கிருஷ்ணமூர்த்தி தமிழின் குறிப்பிடத்தக்க சிறுகதை மற்றும் ஆன்மீக எழுத்தாளர். நிறைய ஆன்மீக மற்றும் சமூக கட்டுரைகளையும் சிறுகதைகளையும் எழுதியுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்தவர். தற்போது லண்டனில் வசித்து வருகிறார்.
அவள் விகடன் , குங்குமம் , கலை மகள் , கண்மணி , தேவி , மங்கையர் மலர் , மஞ்சுளா ரமேஷின் சிநேகிதி , இதயம் பேசுகிறது , ஞான ஆலயம் , சக்தி கோபுர விகடன் , சக்தி விகடன் . கோபுர தீபம் , கிருஷ்ண விஜயம் , ஞான பூமி & தினகரன் ஆகிய இதழ்களில் படைப்புகள் பிரசுரமாகியுள்ளன.
(நமது தளத்திலும் அவருடைய கதை ஒன்றை முன்னர் பிரசுரித்திருந்தோம். பின்னூட்டங்களின் இறுதியில் அவரே வந்து நன்றியும் சொல்லி இருந்தார். அதன் >>>>> சுட்டி. <<<<<<<< - ஸ்ரீராம் )
ஸ்ரீ பரசுராமர் கதை…
திருவனந்தபுரம் திருவல்லம் பரசுராமர் கோயில்.
காமதேனுவால் வந்த கோபம்!
உலகில் அதர்மம் அதிகரிக்கும்போது, அதை அழித்து தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களில் குறிப்பிடத்தக்கவை 10 அவதாரங்கள். இதில், 6-வது அவதாரம்- ஸ்ரீபரசுராமர்.
ஜமதக்னி முனிவர்- ரேணுகாதேவி தம்பதிக்கு மகனாக அவதரித்தவர் ஸ்ரீபரசுராமர். முனி குமாரனாக இருந்த போதிலும் அரசர்களுக்கே உரிய சகல போர்க் கலைகளிலும் தேர்ச்சி பெற்றவராகத் திகழ்ந்தார் ஸ்ரீபரசுராமர். இவர், பரமேஸ்வரனை தியானித்து தவம் இருந்து, அவரிடம் இருந்து மழுவாயுதம் (கோடரி) பெற்றார். (பரசுராமரது பக்தி மற்றும் தவத்தால் மகிழ்ந்த சிவனார், மழு ஒன்றைத் தோற்றுவித்ததாகவும், அதனால் இவருக்கு மழுவாளன், பரசுராமர் ஆகிய பெயர்கள் ஏற்பட்டதாகவும் கூறுவர்.)
ஒரு முறை க்ருதவீர்யன் என்ற மன்னன், தனது சேனையுடன் ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்தான். ஜமதக்னி முனிவரும் ரேணுகாதேவியும் தங்களிடம் இருந்த தெய்வீக பசுவான காமதேனுவின் உதவியுடன் அவர்களுக்கு சிறப்பான விருந்தளித்தனர். விருந்துண்ட க்ருதவீர்யனுக்கு, ‘சாதாரண முனிவர் ஒருவர், இவ்வளவு அருமையான- அறுசுவையுடன் கூடிய விருந்தளிப்பது சாத்தியமா?’ என்று சந்தேகம் எழுந்தது. அதை முனிவரிடமே கேட்டு விட்டான். ‘தனது ஆசிரமத்தில் வளரும் காமதேனுவின் கைங்கரியம் இது!’ என்று விளக்கினார் முனிவர்.
இதைக் கேட்ட க்ருதவீர்யன், காமதேனுவை தனக்குத் தரும்படியும் பதிலுக்கு ஏராளமான பசுக்களை தருவதாகவும் கூறினான். முனிவர் மறுத்து விட்டார். இதனால் சினம் கொண்ட க்ருதவீர்யன், காம தேனுவை கவர்ந்து செல்ல முற்பட்டான். ஆனால், காம தேனுவின் உடலில் இருந்து தோன்றிய ஏராளமான வீரர்கள், க்ருதவீர்யனையும் அவனது சேனையையும் அழித்தனர். க்ருதவீர்யன் இறந்த செய்தியைக் கேட்டு கோபமுற்ற அவன் மகன் கார்த்தவீர்யார்ஜுனன், ஜமதக்னி முனிவரது ஆசிரமத்துக்கு வந்து, அங்கு தவத்தில் இருந்த முனிவரின் தலையை வெட்டி வீழ்த்தினான்.
ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்துத் திரும்பிய ரேணுகாதேவி, தன் கணவரின் நிலை கண்டு கதறினாள். தன் மார்பில் 21 முறை அடித்துக் கொண்டு அழுதாள். அப்போது, அங்கு வந்த ஸ்ரீபரசுராமர் தன் தந்தை இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ந்தார். அருகில், ரத்தக் கறை படிந்த வாளுடன் நின்ற கார்த்தவீர்யார்ஜுனனை கண்டு சினமுற்று அவனை வெட்டி வீழ்த்தினார். ரேணுகாதேவி தீயில் மூழ்கி தெய்வநிலை எய்தினாள்.
பெற்றோரின் மரணத்துக்குக் காரணமான அரச குலத்தினர் மீது கோபம் கொண்ட ஸ்ரீ பரசு ராமர், அவர்களை அழிப்பதாக சூளுரைத்தார். 21 தலைமுறைகளாக… அரசர்களைக் கொன்று அவர்களின் குருதியை ஓரிடத்தில் சேகரித்து, அதில் பெற்றோருக்கு இறுதிக் கடன் செய்தார். இருந்தும் அவரது கோபம் தணியவில்லை. இதனால் பயந்த அரசர்கள் பலரும் இறுதியில் காசிப முனிவரைச் சரணடைந்தனர்.
அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு ஸ்ரீ பரசுராமரிடம் சென்ற காசிபர், ”எனக்கு ஓர் உபகாரம் செய்ய வேண்டும்!” என்று கேட்டார்.
”சொல்லுங்கள் செய்கிறேன்!” என்றார் ஸ்ரீ பரசுராமர்.
”பல்வேறு மன்னர்களை வெற்றி கொண்டு நீ அடைந்த பூமியை எனக்கு தானம் தர வேண்டும்!” என்றார் காசிபர். மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்ட பரசுராமர், பூமியை காசிபருக்கு தாரைவார்த்துக் கொடுத்தார். உடனே காசிபர், ”பரசுராமா… இனி, இந்த பூமி எனக்குச் சொந்தமானது. நீ இங்கிருந்து அகன்று, சினம் தணிந்து சிவபூஜை செய்வாயாக!” என்றார். அதன்படி அங்கிருந்து கிளம்பிய ஸ்ரீபரசுராமர் மேற்குக் கடற்கரை பகுதிக்குச் சென்றார். கரையில் நின்று தனது மழுவாயுதத்தை சமுத்திரத்தை நோக்கி வீசியெறிந்தார். அதன் தாக்குதலால் சமுத்திர நீர் உள்வாங்கியது. அங்கு தென்பட்ட நிலப் பரப்பை தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டார் (இந்தப் பகுதியே இன்றைய கேரளம்). பரசுராமர் உருவாக்கியதால் இதை ஸ்ரீபரசுராம «க்ஷத்திரம் என்பர். இங்கு, ஸ்ரீ பரசுராமர் அமைத்த சிவாலயங்களை ‘ஸ்ரீ பரசுராமப் பிரதிஷ்டைகள்’ என்பர். பரசுராமர் இந்த இடத்தை விட்டு நீங்காது, சிவபூஜை செய்வதாக ஐதீகம்.
‘அரசர்களைக் கொன்ற தனது பாவம் தீர ஸ்ரீ பரசுராமர், மகேந்திர மலையில் தவம் புரிந்து சிவனருள் பெற்றார்!’ என்கிறது சிவமகா புராணம். ஸ்ரீபரசுராமர் இன்னும் பல இடங்களில் சிவலிங்கம் அமைத்து பூஜித்ததாக புராணங்கள் கூறும். அவை, ‘பரசுராமேஸ்வரங்கள்’ எனப்படுகின்றன. அவற்றுள் சில:
பழுவூர்: இந்தத் தலம் அரியலூருக்கு தெற்கில் அமைந்துள்ளது. இங்குள்ள ஈசனின் திருநாமம் ஆலந்துறையீசர்; இறைவி- அருந்தவநாயகி.
ஒரு முறை தன் தந்தையின் கட்டளைப்படி, தாய் ரேணுகாதேவியின் தலையைக் கொய்தார் பரசுராமர். இந்த பாவத்தைப் போக்க எண்ணிய ஸ்ரீபரசுராமர், பழுவூர் வந்து, இங்கு ஆலமரம் ஒன்றின் கீழ் அதன் இலைகளைப் பரப்பி, அவற்றின் மீது படுத்த நிலை யில் தவமியற்றி, பாவம் நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில், மூலஸ்தானத்துக்கு முன்னே நிலைக்கல் ஒன்றில் சயனக்கோலத்தில் உள்ள ஸ்ரீபரசுராமரின் திருவுருவம் செதுக்கப்பட்டுள்ளது.
வேகாமங்கலம்: காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தலம் இது. இங்குள்ள இறைவன்- ஸ்ரீ பரசுராமேஸ்வரர். இவரை வழிபட்ட பரசுராமர், மழுவாயுதம் பெற்று, அரசர்களைக் கொன்று, தன் தந்தைக்கு இறுதிக்கடன் செய்ததாக ஸ்தல புராணம் கூறுகிறது.
திரைலோக்கி: கும்பகோணத்துக்கு அருகே உள்ள இந்த ஊரை, ‘திரை லோக்கிய மகா தேவி சதுர்வேத மங்கலம்’ எனக் கல்வெட்டுகள் சில குறிப்பிடுகின்றன. இங்கு, நந்திதேவர் மீது, அழகிய பிரபைக்குள் ஸ்ரீ உமா மகேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி அற்புதம்!
திருநின்றியூர்: மயிலாடுதுறைக்கு அருகிலுள்ள இந்தத் தலம் தேவாரப் பாடல் பெற்றது. ஸ்ரீ பரசுராமர் இங்கு வழிபட்டு, ஈசனின் திருவடி தரிசனம் பெற்றார் என்பர். இதையே தமது திருநின்றியூர் பதிகத்தில்,
மொய்த்தசீர் முந்நூற்றறுபது வேலி
மூன்றுநூறு வேதியரோடு நுனக்கு
ஒத்த பொன்மணிக் கலசங்கள் ஏந்தி
ஓங்கு நின்றியூர் என்று உமக் களிப்ப
பத்தி செய்த அப்பரசுராமர்க்குப்
பாதங்காட்டிய நீதிகண்டடைந்தேன்
_ என்று குறிப்பிடுகிறார் சுந்தரர்.
– ஜனவரி 2008
அமைச்சர் ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது?
மகாபாரதப் போர் முடிந்தது. பாண்டவர் வெற்றி பெற… கௌரவர்கள் அடியோடு அழிந்தனர். போர் புரிவதும், பகைவனைக் கொல்வதும் க்ஷத்திரிய தருமமாக இருப்பினும், சகோதரர்கள் மற்றும் உறவினர்களைக் கொன்று கிடைத்த பதவியும் செல்வமும் தனக்குத் தேவையில்லை என்று மனம் கலங்கினார் தருமர்.
எனவே தன் சகோதரர்களிடம், ”பிரியமானவர்களே! பூமி நமதாயிற்று என்பது உண்மைதான் என்றாலும் சுற்றத்தார் மாண்டனர். அன்புக்குரிய மைந்தர்களையும் பலி கொடுத்தோம்! எனவே, இந்த வெற்றி ‘அப ஜெயமாகவே’ எனக்குத் தோன்றுகிறது. துறவு பூண்டு வனத்தில் வாழ்ந்தால் தான் இந்தப் பாவம் நீங்கும். எனவே தேசத்தை நீங்கள் ஆளுங்கள்” என்றார் தருமர்.
இதைக்கேட்ட அர்ஜுனன் மற்றும் பீமன் ஆகிய இருவரும் தருமரை தேற்றும் விதமாக… இல்லற சிறப்பு, கிரகஸ்தாஸ்ரமத்தில் செய்யக் கூடிய புண்ணியங்கள் ஆகியவற்றைப் பற்றி எடுத்துக் கூறினர்.
இறுதியாக,”க்ஷத்திரியர்களுக்கு சந்நியாசம் கூடாது. கடமைகளைச் செய்வதே அவர்களது வாழ்க்கை முறை” என்றும் எடுத்துரைத்தனர். நகுல சகாதேவர்களும் தங்கள் பங்குக்கு பற்பல நியாயங்களை தர்மரிடம் எடுத்துரைத்தனர்.
தருமரை சமாதானப்படுத்தும் விதமாக பாஞ்சாலியும் சில கருத்துக்களை உரைத்தாள்: ”சுவாமி, துரியோதனன் மற்றும் அவனைச் சார்ந்தவர்களைக் கொன்றது எந்த விதத்திலும் குற்றமில்லை. எனவே, வருந்தாதீர்கள். அரசனது கடமைகளில் தண்டனை அளிப்பதும் ஒன்று. மேலும் இது, ராஜ தருமமும் கூட! எனவே இந்த தேசத்தை ஆளுவதே தங்களது கடமை!” என்றாள். ஆனால், எவரது சொற்களும் தருமரை சமாதானப் படுத்தவில்லை.
இறுதியில் அனைவரும், அம்புப் படுக்கையில் வீழ்ந்தபடி, உத்திராயன புண்ணிய காலத்தை எதிர் நோக்கியிருக்கும் பீஷ்மரிடம் சென்றனர். பிதாமகனான அவரை வணங்கியவர்கள், அவரிடம் தருமரின் சந்தேகங்களையும் மனக் கலக்கத்தையும் போக்கும்படி வேண்டினர்.
பீஷ்மரும், எண்ணற்ற நியாய தருமங்களை விளக்கிக் கூறி, நகரத்துக்கு சென்று ஆட்சி நடத்தும்படி தருமரை அறிவுறுத்தினார் (மகாபாரதத்தில் பீஷ்மர் செய்த இந்த தர்மோபதேசம், ‘சாந்தி பருவம்’ எனும் புகழ்மிக்க பகுதியாகும்).
அதன்பிறகு, அஸ்தினாபுரத்தில் முறைப்படி ராஜ்யாபிஷேகம் நடந்தது. பீஷ்மரின் தர்மோபதேசத்தால் தருமர் முடிசூட்டிக் கொண்டாலும், அவரது மனம் கலக்கத்துடனேயே இருந்தது.
ஒருநாள் சகோதர்களுடன் சென்று பீஷ்மருக்கு அருகில் அமர்ந்த தருமர், தமது உள்ளத்தில் இருந்த சந்தேகங்களைக் கேட்டார்: ”பிதாமகரே! நல்ல குலத்தில் பிறந்தவர்கள் எவரும் வாய்க்காத நிலையில், நற்குணமும் பண்பும் நிறைந்த வேற்று குலத்தவரை தனது அமைச்சராகவோ நண்பராகவோ ஓர் அரசன் ஏற்றுக் கொள்ளலாமா?”
பீஷ்மர் பதிலளித்தார்: ”தருமா! இதுகுறித்து ஒரு கதை கூறுகிறேன் கேள்… மனித நடமாட்டம் அதிகம் இல்லாத வனத்தில் முனிவர் ஒருவர் வசித்தார்.
மகா யோகியான அவர், முக்காலமும் உணர்ந்தவர். அந்த வனத்தில் உள்ள கொடிய விலங்குகள் கூட அவரிடம் சகஜமாக பழகி வந்தன. அங்கு, நாய் ஒன்றும் இருந்தது. முனிவரைப் போலவே அந்த நாயும் சாத்வீகமானது. மாமிசத்தை ஏறெடுத்தும் பார்க்காமல், காய் கனிகளை மட்டுமே சாப்பிட்டு வந்தது.
ஒரு நாள், அந்த நாயைக் கொன்று சாப்பிடும் எண்ணத்தில் சிறுத்தை ஒன்று அதை நெருங்கியது. இதனால் பயந்து போன நாய், ஒரே பாய்ச்சலாக ஓடி வந்து முனிவரைச் சரணடைந்தது.
உடனே முனிவர், அதன் உருவத்தை சிறுத்தையாக மாற்றினார். சிறுத்தையாக மாறிய நாயைக் கண்ட நிஜ சிறுத்தை, ‘அட… இதுவும் நம்ம இனம்தான்!’ என்ற எண்ணத் துடன் அதை தாக்காமல் திரும்பியது.
சிறுத்தை உருவத்துடனேயே உலவிய நாய், வழக்கம் போலவே காய் கனிகளைத் தின்று வாழ்ந்து வந்தது. இந்த நிலையில் ஒரு நாள், கொடிய புலி ஒன்று, சிறுத்தை உருவில் இருந்த நாயைத் துரத்தியது! தலை தெறிக்க ஓடி வந்த நாய், முனிவரிடம் ‘என்னை புலியிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கதறியது.
இந்த முறை, நாயை புலியாக மாற்றினார் முனிவர். உண்மையான புலியும், ‘இது நம்ம இனம்’ என்று நினைப்பில் அங்கிருந்து அகன்றது.
புலியாக மாறிய நாய், தனது பழைய குணங்களை விட்டு விட்டு, புலியைப் போலவே மற்ற விலங்குகளை அடித்துக் கொன்று, தின்று கொழுக்க ஆரம்பித்தது.
அடுத்து ஒரு நாள்! இந்த முறை மத யானை ஒன்று துரத்தியது! புலி வடிவில் இருந்த நாய் வழக்கம் போல், ஓடி வந்து முனிவரிடம் நின்றது. முனிவரின் கருணையால் யானையாக மாறியது நாய். நிஜ யானையும் ஒன்றும் செய்யாமல் விருட்டென கிளம்பியது.
யானை வடிவில் இருந்த நாய், எந்தக் கவலையுமின்றி நிம்மதியாய் வனத்தில் உலவியது. இந்த முறை சிங்கம், ஆக்ரோஷமாக துரத்த, யானை உருவில் இருந்த நாயும் அலறித் துடித்தபடி முனிவரிடம் செல்ல, அவரும் நாயை சிங்கமாக மாற்ற, அந்த சிங்கமும் ஒன்றும் செய்யாமல் திரும்பியது. பின்னர் சிங்க உருவில் இருந்த நாயை, எட்டுக் கால்களைக் கொண்ட சரபம் எனும் கொடிய விலங்கு துரத்த, பதறி
ஓடிவந்த நாயை, சரபமாக மாற்றினார் முனிவர்.
சரபமாக மாறிய நாய் வனத்தை சுற்றி வந்தது. ஒருநாள், நாய்க்கு உதித்தது அந்த எண்ணம்.’நாயாக இருந்தாலும், நம்மை சிறுத்தை, புலி, யானை, சிங்கம் மற்றும் சரபம் என்று மாற்றிய இந்த முனிவர், நாளை பிற விலங்குகளையும் என்னைப் போலவே சரபமாய் மாற்றி விட்டால் என்ன செய்வது? முனிவரை இனி உயிருடன் விடக் கூடாது. எனவே அவரைக் கொல்ல வேண்டும்’ என்று தீர்மானித்தபடி, அவரது ஆஸ்ரமத்துக்குச் சென்றது. தனது ஞானத்தால் நாயின் கெட்ட எண்ணத்தை உணர்ந்தார் முனிவர்.
நாயை தடுத்து நிறுத்தினார் முனிவர்: ”தீய எண்ணம் கொண்ட நாயே! நன்றி மறந்த நீ, நாயாகவே மாறக் கடவது’ என்று சபிக்க… அடுத்த நிமிடமே நாயாக மாறியது”
இந்த இடத்தில் கதையை முடித்தார் பீஷ்மர்: ”தர்ம புத்திரா… நாயின் மனப் போக்கைப் பார்த்தாயா?… இந்த குணத்தை கொண்டவன் எந்த குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தாலும் அவனை அமைச்சனாகவோ, நண்பனாகவோ ஒருபோதும் ஏற்கக் கூடாது. கல்வி, அறிவு, பொறுமை, நேர்மை, ஒழுக்கம் முதலான குணங்கள் கொண்டவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் அவர்களை ஏற்கலாம். இந்த குணங்கள் இல்லாமல், உயர் குலத்திலே பிறந்தவராக இருந்தாலும், அவர்களை நெருங்க விடவே கூடாது!’ என்று முடித்தார் பீஷ்மர்.
– ஜூன் 2008
என்னுரை
கதைகள் ஆன்மீகக் கதைகள். ஆகவே அவற்றைப் பற்றிக் கூற ஒன்றுமில்லை. புராணத்தையும் இதிகாசத்தையும் வாசிக்க ஒரு வாய்ப்பு. இரண்டாவது ‘அமைச்சராக ஆகும் தகுதி எவருக்கு இருக்கிறது’ ஒரு இடைச்செருகல் ஆகத் தோன்றுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!