26.7.26

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள் - ராஜேந்திர விண்ணகரம் - நெல்லைத்தமிழன்

 

நாங்கள் தரிசனம் செய்த கோயில்கள்  - 65

ராஜேந்திர விண்ணகரம் – மன்னார்கோயில் - திருநெல்வேலி

குலசேகர ஆழ்வார் பாடிய திவ்யப்பிரபந்தப் பாசுரங்களைக் காணாமல் போகிறோமே என்று மனதுக்குக் கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் சனிக்கிழமை, வாரம் ஒரு பாசுரம் பகுதியில் பார்த்துக்கொள்ளலாம் என்று சமாதானப்படுத்திக்கொள்கிறேன். சேர அரச வரலாற்றை விட்டுவிடக் கூடாது என்று தோன்றுகிறது. அதைச் சொல்ல வேறு இடம் எப்போது அகப்படும் என்பது தெரியவில்லை.

முதலாம் சேரமான் பெருமாளுக்குப் பிறகு (668-712) அவர் மகன் தம்பிரான் தோழர் பெருமாள், சுமார் 42 வருடங்கள் அரசாண்டார். (712-754) அவருக்குப் பிறகு அவரது தாயாதியான குலசேகரன், இரண்டாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசாண்டார் (754-798). பிறகு தன்னுடைய மகன் மார்த்தாண்ட வர்மனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, பக்தி மார்க்கத்தில் சென்று குலசேகர ஆழ்வார் என்ற அழியாப் புகழைப் பெற்றார்.

இரண்டாம் சேரமான் பெருமாள், 798ல் தன் மகன் மார்த்தாண்டவர்மனிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்த சமயத்தில், தாயாதிகளுக்குள் மனவேற்றுமை வந்தது. அப்போது சேர நாட்டில் யூதர்களும், சிரியன் கிறித்துவர்களும், முகமதியர்களும் நிறைய இருந்தனர். வாணிபத்திற்காக வந்த இவர்கள் சேர நாட்டில் பல இடங்களைக் கைப்பற்றி, தங்கள் பாதுகாப்பிற்காக படைகளும் வைத்திருந்தனர்.

இரண்டாம் சேரமான் பெருமாள், தமிழகம் சென்றுவிட்டதும், தாயாதியான பாஸ்கர வர்மன், நம்பூதிரிகள், யூதர், கிறித்துவர் மற்றும் முகமதியர்களிடம், தான் அரசாட்சிக்கு வந்தால் வேண்டும் உதவிகளைச் செய்வதாக வாக்களித்து, அரசாட்சியைக் கைப்பற்றி, மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனானான்.  உள்நாட்டுக் குழப்பத்தையும் கலகத்தையும் தவிர்க்கும் பொருட்டு, மார்த்தாண்ட வர்மனுக்கு சேரநாட்டின் தென் பகுதியான வேணாட்டைக் (திருவிதாங்கோடு) கொடுத்து, அதற்கு அரசனாக்கித், தன் கீழ் இருக்கும்படிச் செய்தான். பாஸ்கரவர்மன் செய்தது அரசியல் சூழ்ச்சி.

மார்த்தாண்டவர்மன் ஆட்சிக் காலம் 798 முதல் 850 வரை. பரம வைணவரான இரண்டாம் சேரமான் பெருமாளின் மகனாக இருந்தபோதும், சேர அரச பரம்பரையின் வழக்கப்படி,  சைவ நெறியில் ஒழுகினான். இருந்தாலும் வைணவ மதத்திலும் வெறுப்புறாமல், திருவனந்தபுரம் பத்மநாபஸ்வாமி கோயிலைப் புதுப்பித்து, கோயிலுக்கு நிறைய தானங்கள் வழங்கியுள்ளான். அதனால் இவனுக்கு பத்மநாப தாசன் என்ற பட்டமும் ஏற்பட்டது.

தன் தந்தையைப் போலவே இரு மொழிகளிலும் சிறந்து விளங்கினான். கல்வியறிவு பெற்ற இவனுடைய சபையில், பல தமிழ்ப்புலவர்களும் வடமொழிப் புலவர்களும் சிறப்புப் பெற்றனர். வேணாடு வளங்களைப் பெற்றது. வாணிபம் சிறந்துவிளங்கியது. பகைவரைப் பற்றிய கவலை இன்றி அரசு செய்தான்.

இரண்டாம் சேரமான் பெருமாளின் (குலசேகர ஆழ்வார்) தாயாதியான பாஸ்கரவர்மன், சேர நாட்டிற்கு மூன்றாம் சேரமான் பெருமாள் என்ற பெயரில் அரசனானான். (குலசேகர ஆழ்வார் மகனான மார்த்தாண்டவர்மனை தன் கீழ், வேணாட்டிற்கு அரசனாகினான் என்று பார்த்தோம்).  இவருக்கு ஐந்து சகோதரிகளும் ஒரு சகோதரனும் உண்டு. ஐந்து சகோதரிகள் பெயர்கள் குறிப்பிடப்படுகின்றன. சேர அரச மகளிரைத் திருமணம் செய்த பாஸ்கரவர்மனுக்கு குழந்தைகள் இல்லை.  பட்டமேற்ற பிறகு வாக்களித்தபடி யூதர்கள், கிறித்துவர்கள் மற்றும் முகமதியர்களுக்கு வேண்டியதெல்லாம் செய்து தந்தார்.  இவர், முகமதியர்களுடன் அதிகமான பழக்கம் வைத்துக்கொண்டிருந்தார். பழக்கத்தில் முகமதியப் பெண்ணுடன் இவருக்கு தொடர்பு ஏற்பட்டுவிட்டது. இது வெளியே பரவலாகத் தெரிந்தவுடன், நாட்டு மக்கள் மற்றும் நம்பூதிரிகளின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் ஆளானார். ஏனைய செல்வந்தர்களுக்கும் அரசன் மீது கசப்பு ஏற்பட்டுவிட்டது.

அவர்கள் தூண்டுதலின் பேரில், பாண்டிய அரசனாக இருந்த கிபி 830ல் பட்டத்திற்கு வந்திருந்த ஸ்ரீமாறன் பரச்சக்ர கோலாகலன் என்ற ஏகவீரன் என்ற ஸ்ரீவல்லபன்  மூன்றாம் சேரமான் பெருமாளோடு போர் செய்து, விழிஞம் என்ற இடத்தில் நடந்த போரில் தோற்கடித்தான். விழிஞம் என்பது திருவிதாங்கூருக்கு அருகே பத்து மைல் தொலைவில் இருந்த கடற்கரைப் பட்டினம். அங்குதான் சேரர்களின் கடற்படை இருந்தது. (இந்த ஸ்ரீவல்லபன் காலத்திலிருந்துதான் பாண்டிய நாட்டு அரசர்களுக்கு வடமொழியில் பெயர் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஆரம்பித்தது என்று வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்)

சொந்த மக்களுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டது. தன்னைச் சுற்றியிருக்கும் அமைச்சர் பெருமக்களில் பலர் மற்றும் முக்கியத்துவம் நிறைந்த நம்பூதிரிகளுக்கும் தன்னைப் பிடிக்காமல் போய்விட்டது என்பதை மூன்றாம் சேரமான் பெருமாள் புரிந்துகொண்டார். பாண்டியப் படைகள் வஞ்சிநகர் நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள் என்பதை அறிந்த மூன்றாம் சேரமான் பெருமாள் (பாஸ்கரவர்மன்), அரசாட்சியில் வெறுப்புற்று, தன்னுடைய நாட்டை பன்னிரண்டு பகுதிகளாகப் பிரித்து, வேணாட்டையும் ஒட்டநாட்டையும் மார்த்தாண்டவர்மன் மற்றும் அவன் சந்ததிகளுக்கும், ஏரநாட்டை தன் தம்பியின் சந்ததிகளுக்கும், குட்ட நாட்டை (கொச்சின்) தன் சகோதரிகள் ஐவருக்கும், ஏனைய நாடுகளை தன் சுற்றத்தார் மற்றும் நண்பர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு, இரவோடு இரவாக, தன் முகமதிய மனைவியுடன் அரேபியாவிற்குச் செல்லும் கப்பலில் ஏறிச் சென்றுவிட்டான்.

அங்கு சகர்முகல் என்ற துறைமுகத்தில் இறங்கி, மெக்காவை அடைந்து, இஸ்லாமியனாக மதம் மாறி, அப்துல் ரஹ்மான் சாமரின் என்ற பெயரை வைத்துக்கொண்டான். அங்கிருந்து புறப்பட்டு இந்தியாவை நோக்கித் திரும்பும் வழியில் விஷக்காய்ச்சலினால் பாதிக்கப்பட்டு, ஓமான் தேசத்தில் சலாலா பகுதியில் இறந்தான். சலாலாவில் அவன் சமாதியில், 834ல் வந்து 838ல் மறைந்த சேர அரசன் அப்துல் ரஹ்மான் சாமரின் என்று எழுதப்பட்டுள்ளது (ஹிஜ்ரி ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. நம் புரிதலுக்காக பொது ஆண்டைக் குறிப்பிட்டுள்ளேன்) அவனுடன் கூட வந்தவர்கள் பிறகு கேரளா திரும்பி, கொடுங்களூரில் அவன் நினைவாக ஒரு பள்ளிவாசலை நிறுவினார்கள்.

No photo description available.

சலாலா (ஓமன்) அருகில் உள்ள ஸாஃபர் என்ற இடத்தில் உள்ள சேரமான் மூன்றாம் பெருமாளின் சமாதி

நான் சலாலா சென்றிருந்தபோது இந்த சமாதியைப் பார்க்கவில்லை. ஆனால் நான் பார்த்தது  நபி இம்ரான் என்பவரின் சமாதி. இந்த நபி இம்ரான் என்பவர், இயேசுவின் அன்னையான மரியத்தின் தந்தை. (அதாவது இயேசுவின் தாத்தாவின் சமாதி). இதில் உள்ள சிறப்பு அல்லது வித்தியாசம் என்னவென்றால், சமாதி 40 அடி நீளமுள்ளது, நபி இம்ரான் அவ்வளவு உயரமானவர் என்று நம்புகிறார்கள். (அந்தப் படத்தை விரைவில் பதிவு செய்கிறேன்)

No photo description available.

சேரமான் மூன்றாம் பெருமாளுடன் திரும்ப இந்தியா பயணித்த ஒருவர் கொடுங்களூரில் கிபி 840ல் கட்டிய முதல் மசூதி. (அதன் தற்போதைய நிலையைக் கீழே கொடுத்துள்ளேன்)

No photo description available. No photo description available.

வேணாட்டோடு ஒட்ட நாட்டையும் சேர்த்துக் கொடுத்த பிறகு, தனி அரசாக திருவிதாங்கூர் அரசு ஆனது. அதற்கு அரசனாக இருந்தவர் மார்த்தாண்டவர்மர். இவருக்கு வேணாட்டடிகள் என்ற பெயர் ஏற்பட்டது. அதுமுதல் சமீப காலம் வரை திருவிதாங்கூர் அரசராக இருந்தவர்கள் இவரின் சந்ததியினர்தான். திருவிதாங்கூர் அரசருக்கு வேணாட்டடிகள் என்ற பட்டப்பெயர் இப்போதும் உண்டு.

மார்த்தாண்டவர்மன் கிபி 850 வரை வேணாடு மற்றும் ஒட்டநாட்டின் அரசனாக இருந்தான் என்று பார்த்தோம். கிபி 850ல் இவருக்கு அரசனாக இருப்பதில் வெறுப்பு ஏற்பட்டு, தன் மகனை அரசனாக்கிவிட்டு, தவக்கோலம் பூண்டு தில்லைக்குச் சென்று திருவிசைப்பா என்ற பாமாலையைப் பாடினார்.

திருவிசைப்பாவில், இந்த பத்து பதிகங்களை இயற்றியவர் வேணாட்டடிகள் என்று குறிப்பிடுகின்றனர். வரலாற்றின்படி இதனை இயற்றியது மார்த்தாண்ட வர்மன் என்கின்றனர். ஆனால் சில நூல்களில் இந்தத் திருவிசைப்பா பத்தாம் நூற்றாண்டில் பாடப்பட்ட து என்று சொல்கிறார்கள். (வேணாட்ட டிகள் என்பது திருவிதாங்கூர் இராச்சியத்தைச் சேர்ந்தவர் என்று குறிப்பிடுகின்றனர்). அதில் இரண்டு பதிகங்களைப் பார்த்துவிடுவோம்.

துச்சான செய்திடினும் பொறுப்பரன்றே ஆளுகப்பார்
கைச்சாலும் சிறுகதலி   இலைவேம்பும் கறிகொள்வார்
எச்சார்வும் இல்லாமை  நீயறிந்தும் எனதுபணி
நச்சாய்காண்; திருத்தில்லை  நடம்பயிலும் நம்பானே!

பொருள்: தில்லையம்பலத்தில் நடனமாடும் என் தலைவனே!, அடியவனான நான் தீய செயல்களைச் செய்தாலும் என்னை ஆளும் அப்பனே, நீ பொறுப்பாய் அல்லவா?  அடியவர்கள் மனமுகப்புடன் கொடுக்கக்கூடிய சிறு வாழைக்காய் (கச்சக்காய்), வேப்பமர இலை, கறிவகைகளை ஏற்றுக்கொள்ளக்கூடியவனே. உன்னைத் தவிர எனக்கு வேறு புகல் இல்லை என்பதை அறிந்தும், என்னுடைய சேவைகளை நீ மனமுவந்து ஏற்றுக்கொள்கிறாய்.  (ஏற்றுக்கொண்டு என்னை நீ ஆட்கொள்ளவேண்டும் என்பது உள்ளுறைப் பொருள்)

விளக்கம்: துச்சான – தகாத செயல்களை, கைச்சாலும்-கசந்தாலும், எச்சார்வு-வேறு புகலிடம் அல்லது பற்றுக்கோடு, நம்பான் – அன்பன்.

படுமதமும் மிடவயிறும்   உடையகளி றுடையபிரான்
அடியறிய உணர்த்துவதும்   அகத்தியனுக்(கு) ஓத்தன்றே
இடுவதுபுல் ஓர்எருதுக்(கு)   ஒன்றினுக்கு வையிடுதல்
நடுஇதுவோ திருத்தில்லை   நடம்பயிலும் நம்பானே.

பொருள்: தில்லையில் நடனமாடும் நடராஜப் பெருமானே!, கண்ணில் வழியும் மதநீரையும் பானை போன்ற பெரு வயிற்றையும் உடைய விநாயகனை மகனாக உடைய தலைவனே, அகத்திய முனிவருக்கு  சிவஞானத்தை உணர்த்தியது எவ்வளவு பெருமைக்கு உரியது.  இரண்டு எருதுகளில் ஒன்றினுக்கு சத்தான புல்லை இட்டுவிட்டு, இன்னொன்றினுக்கு வெறும் வைக்கோலை இடுவது நடுநிலைமை ஆகாதல்லவா? அதுபோல அகத்திய முனிவருக்கு உம்மை உணர்ந்துகொள்ளும் உயர்ந்த ஞானத்தை அருளிவிட்டு, அடியேனுக்கு அடியேனுக்கு ஞானத்தை அருளாமல் இருப்பது (மிக க் குறைந்த ஞானத்தை அருளியிருப்பது) நடுநிலைமையாகுமா? இது நியாயம்தானா?

விளக்கம்:  படுமதம்- மதநீர் பெருகிய,  மிடவயிறு-பானை போன்ற பெரிய வயிறு, ஓத்தன்றே-ஒத்தது, பெருமை உடையது, புல்-சத்தான புல், வை-வைக்கோல், சாதாரண புல் என்ற அர்த்தம், 

வெறும்ன பட உலா மாதிரி புகைப்படங்களை மாத்திரம் பகிர்வதை விட, ஏதேனும் நல்ல விஷயங்கள், செய்திகள் தெரிந்துகொள்ளலாமே என்ற எண்ணத்தில் இவற்றையெல்லாம் எழுதுகிறேன். 

 

 

 

 

 

 

 

 

 

 

பொது ஆண்டுக்கு முன்பு, ரோமப் பேரரசில், ஆரம்பகால ‘Bra’ – அடிப்படை டிசைன், உபயோகப்படுத்தினார்கள், ஆனால் ஃப்ரெஞ்சுக்காரன் 1850ல் மாடர்னாக கண்டுபிடித்தான் என்று சொல்கிறார்கள். இப்படிச் சொல்பவர்கள் யாருமே இந்தியாவின் பாரம்பர்யத்தைத் தெரிந்துகொள்ளாமல், அவங்க கிராமத்தில் இருந்துகொண்டே கூசாமல் எழுதுகிறார்கள். ஒரு பயலுக்காவது நம்முடைய தென்னிந்தியச் சிற்பங்களைப் பார்த்தால் இப்படி பட்டவர்தனமாகப் புளுகத் தோன்றுமா? உலகத்திலேயே மிகவும் குறைவாகக் குளிப்பவர்கள், பல் தேய்ப்பவர்கள், சுத்தமில்லாதவர்கள் யார்னு பார்த்தீங்கன்னா, இந்த நாகரீக தேசம்தான் என்று சொல்லிவிடலாம்.

 

 

 

 

 

ஒரு காலத்தில் ஏகப்பட்ட வைணவர்கள் வாழ்ந்த ஊர் இது.

 

மன்னார்கோயிலைச் சேவித்த பிறகு சுமார் 20 கிமீ தூரத்தில் இருக்கும் அத்தாளநல்லூர் கஜேந்திர வரதரைச் சேவிக்கச் சென்றோம்.  கோடகநல்லூர், அத்தாளநல்லூர், மன்னார்கோயில் போன்றவை ஒரே திசையில் உள்ளன. அத்தாளநல்லூர் மற்றும் மன்னார்கோயில் இரண்டையும் என்னுடைய சித்தி சொன்ன பிறகுதான் சென்று சேவித்தோம். அதுவரை இந்த இரண்டு கோயில்களைப் பற்றியும் எனக்குத் தெரியாது. அதன் பிறகு, ஒவ்வொரு முறை திருநெல்வேலி செல்லும்போதும் இந்த இரண்டு கோயில்களுக்கும் சென்று வருவோம்.

அடுத்த வாரம் நாம் காணப்போவது, அத்தாளநல்லூர் கஜேந்திர வரதர் கோயில். தொடர்ந்து இணைந்திருங்கள்.

(தொடரும்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!