வணக்கம்.
என்னுடைய ஒரு பதிவும் உங்கள் பக்கத்தில் வெளியிட நினைத்திருக்கும் உங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றி!
பொதுவாகவே எனக்குக் கவிதைகள், கதைகள் பிடித்திருந்தாலும், அதை எழுதும் அளவிற்கு தைரியம் இல்லை! :)
சில
மாதங்களுக்கு முன்னர் தானம் என்ற பெயரில், “கதையல்ல நிஜம்” என்று எனது
வலைப்பூவில் எழுதி இருந்தேன். அதையே இப்போது சில மாற்றங்களோடு உங்களுக்கு
அனுப்பி வைத்திருக்கிறேன்.
நெய்வேலியில் இருந்தபோது ஒரு வீட்டில் பார்த்த காட்சிகள் தான் இந்த கதை
பிறக்கக் காரணம். அம்மா உயிருடன் இருக்கும்போது பார்த்துக் கொள்ள ஆள்
வைத்து, இறந்த பிறகு பலருக்கு தானங்கள் கொடுத்தார் ஒருவர். அது நடந்தது பல
வருடங்களுக்கு முன்னர் என்றாலும் நினைவிலிருந்து நீங்காத நிகழ்வு அது.
அதுவே தான் இங்கே கதையாக.....
வெங்கட்.
==============================
==============================
=========
தானம்....
வெங்கட் நாகராஜ்
வீட்டின் வெளியே பெரிய பந்தல் போட்டு சில நாற்காலிகளும் போட்டு இருந்தனர். ஊரில் உள்ள
பலர் வருவதும் போவதுமாக இருந்தனர். தனது அம்மாவின் ஆத்மா சாந்தி அடைய
வந்தவர்களுக்கெல்லாம் தான-தர்மங்களை செய்து கொண்டு இருந்தார் வேணு.
சிலருக்கு கன்றுடன் பசுமாடு, சிலருக்கு ஒரு காணி நிலம், சிலருக்கு பாத்திரங்கள், வேறு சிலருக்கு
துணிமணிகள் என பலவிதமான தானங்கள் வழங்கிக் கொண்டு இருந்தார். தானம் பெற்ற பலரும்
வேணுவை வாழ்த்தி அவரின் அம்மாவின் ஆத்மா சாந்தியடையட்டும் என வாழ்த்திச்
சென்றார்கள். ஆனாலும் அவருக்குத் தனது தாயார் இறக்கும் முன் சொன்ன வார்த்தைகள்
மனதைத் தைத்துக்கொண்டே இருந்தது.
அசைவில்லாமல் படுத்துக் கிடந்தார் கிருஷ்ணவேணி அம்மாள். ஒரு மாதத்திற்கும் மேலாகவே
படுத்த படுக்கையிலேயே மல-ஜல உபாதைகள் எல்லாம். கடைசி இரண்டு நாட்களாக பேச்சு
இல்லை, உடம்பில் அசைவும் இல்லை. உயிர் மட்டும் ஊசலாடிக்கொண்டு இருந்தது.
மற்றவர்கள் பேசிக் கொண்டிருப்பது மட்டும் கேட்கத் தான் செய்தது.
பத்துமாதம் கஷ்டப்பட்டு சுமந்த மகன் வேணு தன் மனைவியுடன் பேசிக்கொண்டு இருந்தது
காதில் விழுந்தது. “எத்தனை நாளுக்குத்தான் இப்படி இழுத்துக்கொண்டு இருக்கப்போகுதோ
தெரியல? வேலைக்குப் போக முடியல, நிறைய செலவு, எப்பதான் முடியுமோ தெரியல”.
”இவங்க போன பிறகு வேறு நிறைய செலவு இருக்கு. காரியமெல்லாம் தடபுடலா செய்யணும்.
கோதானம், பூதானம் இப்படின்னு நிறைய தானமெல்லாம் பண்ணனும். என்ன பண்றதுன்னு
தெரியல. ஏதோ ஒரு முடிவு தெரிஞ்சா எல்லாவற்றிற்கும் ஏற்பாடு செய்யலாம்!” என்று
சொல்லிக்கொண்டு இருப்பது கிருஷ்ணவேணி அம்மாளின் காதில் விழுந்து
தொல்லைப்படுத்தியது.
கிருஷ்ணவேணி அம்மாளுக்கு தான் தன் மகன் வேணுவுக்காக பட்ட கஷ்டங்கள் மனதில் வந்து
போயிற்று. கணவன் இறந்த பிறகு தனியொருத்தியாய் அவனை வளர்த்து ஆளாக்கி பெரிய
பொறுப்பில் வேலையில் அமரும் வரை, தான் இழந்தது எத்தனை எத்தனை.
வேணு குழந்தையாக இருந்தபோது செய்த அத்தனை அசிங்கங்களையும் சகித்துக்கொண்டு சுத்தம்
செய்ததற்கு, இப்போது அவன் தனது மூக்கைப் பிடித்துக்கொண்டு என் அசிங்கங்களை சுத்தம்
செய்ய வேலையாளை அனுப்புகிறான். இதையெல்லாம் பார்த்து மௌனமாக கண்ணீர்
விடுவதைத் தவிர வேறொன்றும் சொல்ல முடியவில்லை கிருஷ்ணவேணி அம்மாளுக்கு....
இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த கஷ்டங்களோ? ஆண்டவன் நமக்கு ஒரு வழி சொல்ல
மாட்டானா? என்று நினைத்துக் கொள்ள கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வடிந்து
கொண்டிருந்தது.
ஆண்டவனும் செவி சாய்த்து விட்டான் போலும்.... இறப்பதற்கு முன்னர் ”வேணு, நான் செத்த
பிறகு நீ எத்தனை தானம் கொடுத்தால் தான் என்ன? அவை என்னுடைய தியாகங்களுக்கு
ஈடாகுமா” என்று கடைசியாக சொல்லிவிட்டு தான் தலைசாய்த்தாள்.
கன்றுடன் பசுமாடு தானம் பெற்ற ஒரு முதியவர் “இந்த தானங்களை விட நீ உனது தாயார்
முடியாமல் இருந்தபோது அவருக்குச் செய்த பணிவிடைகளே மிகப்பெரிய தானம்” என்று சொல்ல,
அவரின் அம்மா இறப்பதற்கு முன்னர் சொன்ன வார்த்தைகள் மீண்டும் கேட்டது போல, துக்கம்
பீறிட்டு அழ ஆரம்பித்தான் வேணு.