Marriage Menu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Marriage Menu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21.4.10

கல்யாண சாப்பாடு போட வா...

சில பல வருடங்களுக்கு முன்னால் திருமணம் என்பது இப்போதைய திருமணங்களிலிருந்து மாறுபட்டது. கல்யாண விருந்துகளும். 

அந்தக் காலத்தில் கல்யாணங்கள் என்பது ஒரு வாரம், மூன்று நாள் என்றெல்லாம் நடக்கும். இப்போதும் மூன்று நாள் திருமணங்கள் நடப்பதுண்டு. முதல் நாள் ரிசெப்ஷன், இரண்டாம் நாள் திருமணம், மூன்றாம் நாள் கட்டு சாதம்.

முன்பெல்லாம் திருமணத்துக்கு முதல் நாள் ரிசெப்ஷன் வைக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. திருமணம் நடந்து சில நாட்கள் கழிந்த பின்னர், வேறு ஊரிலோ, வேறு சவுகரியங்களுக்காகவோ மற்றொரு நாளில் வைப்பது உண்டு. அவ்வளவுதான். தாலி கழுத்தில் ஏறுமுன் பையனும் பெண்ணும் சேர்ந்து நிற்பதா...மூச்...என்பார்கள். இப்போது அது சர்வ சகஜம். தொண்ணுறுகளில் சகோதரி திருமணம் நடந்தபோது கூட இந்த முதல் நாள் ரிசெப்ஷன் தயக்கத்துடனேயே ஒத்துக் கொள்ளப் பட்டது. வந்திருந்தவர்கள் யாராவது ஏதாவது இதைப் பற்றி கமெண்ட் செய்கிறார்களா என்றும் கவலையுடன் பார்க்கப் பட்டது.

அந்தக்காலத் திருமணங்களில் ஒருவாரமோ மூன்று நாளோ திருமணம் நடக்கும் தெருவே அடைத்து பந்தல் போடப்பட்டு ஜே ஜே என்று இருக்கும். ஓரிரண்டு மாதங்களுக்கு முன்னாலிருந்தே திருமண ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டே இருக்கும். ஊரே அந்த வீட்டில் சாப்பிடும். 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பார்கள்...ஊர் என்ன ஊர், இப்போது போல வெற்றிடங்களை வளைத்துக் கட்டப் பட்ட கட்டிடங்கள் வராத காலத்தில் தொடர்பு எல்லைகள் துண்டிக்கப் பட்ட நிலையில் ஆறேழு தெருக்கள் கூடிய இடம்  ஊர்தான்...!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் யோசித்து அந்தந்த சமூகத்தில் புகழ் பெற்ற சிற்றுண்டிகள் முதல், சாப்பாடு வரை திட்டமிட்டு சமைக்கப் படும். வெளியிலிருந்து யாரும் வந்து சமைக்க மாட்டார்கள். அந்தந்த வீட்டுப் பெண்களே பெரிய அளவில் அடுப்புகள் (தனியாய் எடுக்கத் தேவை இல்லை...அந்த நாட்களில் இந்த மாதிரி கோட்டை அடுப்புகள் இல்லாத வீடுகளே இருக்காது..) வைத்து பெரிய அண்டாப் பாத்திரங்களில் சமைத்து கொண்டே இருப்பார்கள். செட்டி நாடு என்றாலே விசேஷம்தான்..பலவகை பணியாரங்கள், அப்பம் என்றும், ஆச்சாரமான வீடுகளில் பூண்டு வெங்காயம் கலந்த சமையல், கலக்காத சமையல் வித்யாசமாக, விதம் விதமாக...ஒவ்வொரு குடும்ப பாரம்பர்யத்துக்கும் தக்கவாறு...

விருந்து நீண்ட பந்தலின் கீழ் நீளமாக பாய் விரிக்கப் பட்டு வரிசையாக இலைகள் வைத்து பரிமாற, எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

இப்போது..

பல திருமணங்கள் ஒரு நாளிலும் (சில அரை நாளிலே கூட) சில திருமணங்கள் இரண்டு நாளிலும் முடிகின்றன. முதல் நாள் ரிசெப்ஷன் தொண்ணூற்றொன்பது சதவிகிதம்..

மெனு..?

ரிசெப்ஷன் அன்று அவியல், உருளைப் பொரியல், பச்சடி, ஸ்வீட், இதனுடன் இரண்டு சப்பாத்தி அல்லது பூரி, தொட்டுக் கொள்ள அதற்குக் குருமா அல்லது அதன் குடும்பத்தைச் சேர்ந்த பனீர் மசாலா..அப்புறம் ஒரு ஃப்ரைட் ரைஸ் அல்லது பிரிஞ்சி, கலந்த சாம்பார் சாதம், (பிசிபேளா பாத்) ரசம், பாயசம் கப்பில், தயிர் சாதம், (பஹாளா பாத்), ஐஸ் க்ரீம்.இடையே இரண்டு ஸ்வீட் வகை, வறுவல், லட்டு...ஆகக் கூடி ஃபிக்சட் மெனு.
காலை உணவில் காசினி அல்வா, மாலையில் மங்களூர் போண்டா...
மறுநாள் கல்யாணத்தில் சம்பிரதாயமான சாப்பாடு. கோஸ் பொரியல், உருளை வெங்காயப் பொரியல், தயிர் பச்சடி, அவியல், ஊறுகாய், அப்பளம்,
பருப்பு, சாம்பார் சாதம் (பெரும்பாலும் முருங்கைக்காய்) ரசம் சாதம், அப்புறம் பாயசம் (முன்பெல்லாம் இலையில் கொண்டு வந்து ஊற்றுவார்கள். இப்போது அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டது எனவே கப்பில்..) அப்புறம் தயிர் சாதம். சில சமயம் ஹோட்டல் போல சாம்பாருக்கும் ரசத்துக்கும் நடுவில் காரக் குழம்போ, மோர்க் குழம்போ உண்டு.!
இரண்டு நாளும் காலை வேளைகளில் இட்லி வடையுடன் பொங்கல் அல்லது கேசரி, அல்லது சேட் தோசையுடன் ஸ்வீட், சில சமயம் வெண் பொங்கல், அக்கார அடிசில், (வேறு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?) மாலை நேர டிஃபனாக பெரும்பாலும் இடியாப்பம்..லெமன், தேங்காய் சேவை என்று..அல்லது பஜ்ஜி போண்டா...!

மறுநாள் கட்டு சாதம் பற்றிக் கேட்கவே வேண்டாம்..அதே புளியோதரை , தயிர் சாதம்...கட்டு சாதத்தில் முருங்கைக்காய் போட்டு மிளகுக் குழம்புதான் லேட்டஸ்ட்...! 

எந்தச் சமூகத்து திருமணமானாலும் சரி, எந்த கான்ட்ராக்டரிடம் கொடுத்திருந்தாலும் சரி, எல்லாத் திருமண மெனுவும் இதே...இதே...என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்கள் என்னதான் செய்வது? இப்படி கட்டுரை இட்டு புலம்புவதைத் தவிர...

யோசித்துப் பார்த்தால்...


ஒரே மாதிரி மெனுவில் விருந்துகளுக்கு நம் ரசனையும் காரணம், பாஸ்கர் வீட்டில் இதெல்லாம் செய்திருந்தார்கள் நாமும் செய்ய வேணும் என்றில்லாமல், நாமாக மெனு உருவாகிக் கொள்ளக்கூடாதா என்ன ?

முந்தைய நாளில் மூன்று நாட்கள் கல்யாணங்களுக்கு ஒரு தேவை இருந்தது. முஹூர்த்தத்துக்கு வருபவர் இப்பொழுது போல அன்றி வண்டிகளிலும் குதிரை மீதும் நடந்தும் வந்ததால், சரியான நேரத்துக்கு முன்னரேயே வந்து இருந்து நடத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது மூன்று நாள் முன்னே வந்தால் மண்டபத்தில் வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பார் அல்லது வேறு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருக்கும்! விருந்து சமைப்பது வீட்டுப் பெண்களின் வேலையாக எப்பொழுதும் இருந்ததில்லை பெரிய விசேஷங்களுக்கு ஆண்கள் சமையல் என்பது வெகு காலமாக இருந்து வரும் பழக்கம்.


ஆனால் விருந்தில் பரிமாற அப்பளம், ஊறுகாய் வகைகள் வீட்டிலேயே பண்ண வேண்டிய கட்டாயமும் இருந்தது - கலப்படங்களைத் தவிர்க்க.

முன்பெல்லாம் தரையில் அமர்ந்து சாப்பிட்ட காட்சியை இப்போதெல்லாம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது. என் வாரிசுகளிடம் எங்கள் கல்யாணத்தில் தரையில் அமர்ந்துதான் சாப்பாடு பந்தி என்றால் நம்ப முடியாமல் இரண்டு பேரிடம் விசாரித்து ஆச்சர்யப் பட்டுப் போனார்கள்.


முன்பு உறவினரை சந்தோஷமாக அழைத்துப் பேசி மகிழ்ந்து கல்யாணம் கொண்டாடுவார்கள். இப்போது அதெல்லாம் போய் கௌரவப் பிரச்சினை யாக சாப்பாடு ஆகிவிட்டது. அதனால்தான், ஒரு இட்லி வடை பொங்கல் கேசரி என்பது போய், இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, தோசை, ஒரு அசோகா அல்வா என்று டம்பாச்சாரி விஷயமாகி விட்டது. சாப்பிடாமல் தூக்கி எறிவது குறித்து யாரும் கவலையோ வெட்கமோ படுவது இல்லை. முன்போல ஏழை மக்கள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே எச்சிலையோ எறியப் பட்டதையோ சாப்பிடுவதும் இல்லை.

அந்தஸ்து காட்டும் விஷயமாக சாப்பாடு ஆகிவிட்டதால், ஒன்றுக்கு இரண்டாக காண்டிராக்டர் காசு வாங்குகிறார். மெத்தப் படித்த தனவான்களும் வீண் படாடோபத்துக்காக கணக்குப் பார்க்காமல் அள்ளி விடுகிறார்.


ரேட் மாறாமல் இருந்தால் மெனுவும் மாறுவதற்கு சாத்தியம் இல்லை தானே

சாப்பாடு கதை இப்படி. அதை ஒட்டி, ரிசப்ஷன் கச்சேரி, வரவேற்பு ஆடம்பரங்கள், தாம்பூல படாடோபம் இவை தனிக்கதை. 

என் நண்பர் கே.கோவிந்தசாமி சொல்வார்.."சொல்ல வந்த விஷயம் ரெண்டு வரி பெறுமா? இழு இழுன்னு இழுக்கறியே...அனாவஸ்ய வரிகளை 'கட்' செய்.." என்பார். இதை அது போல எடிட் செய்தால் எப்படி வரும்..? 

"முன்பெல்லாம் திருமண விருந்துகளில் வித்யாசம் இருந்தது. இப்போது கான்ட்ராக்ட் விட்டு ஒரே மாதிரி மெனுவில் திருமண விருந்துகள்.."

அவ்வளவுதான்..! இப்படி எழுதினால் ஒரு இடுகையை எப்படி நிரப்புவது.?!!

படங்களுக்காக 'நெட்'டை' துழாவியபோது இந்த இரண்டு இடங்கள் பார்க்கக் கிடைத்தன...மெனு விவரங்களுடன்.

ஒன்று... மௌலி'ஸ்

இரண்டு... வி.ஹெச் எஸ்.