புதன், 21 ஏப்ரல், 2010

கல்யாண சாப்பாடு போட வா...

சில பல வருடங்களுக்கு முன்னால் திருமணம் என்பது இப்போதைய திருமணங்களிலிருந்து மாறுபட்டது. கல்யாண விருந்துகளும். 

அந்தக் காலத்தில் கல்யாணங்கள் என்பது ஒரு வாரம், மூன்று நாள் என்றெல்லாம் நடக்கும். இப்போதும் மூன்று நாள் திருமணங்கள் நடப்பதுண்டு. முதல் நாள் ரிசெப்ஷன், இரண்டாம் நாள் திருமணம், மூன்றாம் நாள் கட்டு சாதம்.

முன்பெல்லாம் திருமணத்துக்கு முதல் நாள் ரிசெப்ஷன் வைக்கும் வழக்கம் எல்லாம் கிடையாது. திருமணம் நடந்து சில நாட்கள் கழிந்த பின்னர், வேறு ஊரிலோ, வேறு சவுகரியங்களுக்காகவோ மற்றொரு நாளில் வைப்பது உண்டு. அவ்வளவுதான். தாலி கழுத்தில் ஏறுமுன் பையனும் பெண்ணும் சேர்ந்து நிற்பதா...மூச்...என்பார்கள். இப்போது அது சர்வ சகஜம். தொண்ணுறுகளில் சகோதரி திருமணம் நடந்தபோது கூட இந்த முதல் நாள் ரிசெப்ஷன் தயக்கத்துடனேயே ஒத்துக் கொள்ளப் பட்டது. வந்திருந்தவர்கள் யாராவது ஏதாவது இதைப் பற்றி கமெண்ட் செய்கிறார்களா என்றும் கவலையுடன் பார்க்கப் பட்டது.

அந்தக்காலத் திருமணங்களில் ஒருவாரமோ மூன்று நாளோ திருமணம் நடக்கும் தெருவே அடைத்து பந்தல் போடப்பட்டு ஜே ஜே என்று இருக்கும். ஓரிரண்டு மாதங்களுக்கு முன்னாலிருந்தே திருமண ஏற்பாடுகள் தயாராகிக் கொண்டே இருக்கும். ஊரே அந்த வீட்டில் சாப்பிடும். 'ஊர்ல கல்யாணம், மார்ல சந்தனம்' என்பார்கள்...ஊர் என்ன ஊர், இப்போது போல வெற்றிடங்களை வளைத்துக் கட்டப் பட்ட கட்டிடங்கள் வராத காலத்தில் தொடர்பு எல்லைகள் துண்டிக்கப் பட்ட நிலையில் ஆறேழு தெருக்கள் கூடிய இடம்  ஊர்தான்...!
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாய் யோசித்து அந்தந்த சமூகத்தில் புகழ் பெற்ற சிற்றுண்டிகள் முதல், சாப்பாடு வரை திட்டமிட்டு சமைக்கப் படும். வெளியிலிருந்து யாரும் வந்து சமைக்க மாட்டார்கள். அந்தந்த வீட்டுப் பெண்களே பெரிய அளவில் அடுப்புகள் (தனியாய் எடுக்கத் தேவை இல்லை...அந்த நாட்களில் இந்த மாதிரி கோட்டை அடுப்புகள் இல்லாத வீடுகளே இருக்காது..) வைத்து பெரிய அண்டாப் பாத்திரங்களில் சமைத்து கொண்டே இருப்பார்கள். செட்டி நாடு என்றாலே விசேஷம்தான்..பலவகை பணியாரங்கள், அப்பம் என்றும், ஆச்சாரமான வீடுகளில் பூண்டு வெங்காயம் கலந்த சமையல், கலக்காத சமையல் வித்யாசமாக, விதம் விதமாக...ஒவ்வொரு குடும்ப பாரம்பர்யத்துக்கும் தக்கவாறு...

விருந்து நீண்ட பந்தலின் கீழ் நீளமாக பாய் விரிக்கப் பட்டு வரிசையாக இலைகள் வைத்து பரிமாற, எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள்.

இப்போது..

பல திருமணங்கள் ஒரு நாளிலும் (சில அரை நாளிலே கூட) சில திருமணங்கள் இரண்டு நாளிலும் முடிகின்றன. முதல் நாள் ரிசெப்ஷன் தொண்ணூற்றொன்பது சதவிகிதம்..

மெனு..?

ரிசெப்ஷன் அன்று அவியல், உருளைப் பொரியல், பச்சடி, ஸ்வீட், இதனுடன் இரண்டு சப்பாத்தி அல்லது பூரி, தொட்டுக் கொள்ள அதற்குக் குருமா அல்லது அதன் குடும்பத்தைச் சேர்ந்த பனீர் மசாலா..அப்புறம் ஒரு ஃப்ரைட் ரைஸ் அல்லது பிரிஞ்சி, கலந்த சாம்பார் சாதம், (பிசிபேளா பாத்) ரசம், பாயசம் கப்பில், தயிர் சாதம், (பஹாளா பாத்), ஐஸ் க்ரீம்.இடையே இரண்டு ஸ்வீட் வகை, வறுவல், லட்டு...ஆகக் கூடி ஃபிக்சட் மெனு.
காலை உணவில் காசினி அல்வா, மாலையில் மங்களூர் போண்டா...
மறுநாள் கல்யாணத்தில் சம்பிரதாயமான சாப்பாடு. கோஸ் பொரியல், உருளை வெங்காயப் பொரியல், தயிர் பச்சடி, அவியல், ஊறுகாய், அப்பளம்,
பருப்பு, சாம்பார் சாதம் (பெரும்பாலும் முருங்கைக்காய்) ரசம் சாதம், அப்புறம் பாயசம் (முன்பெல்லாம் இலையில் கொண்டு வந்து ஊற்றுவார்கள். இப்போது அது அவுட் ஆஃப் ஃபேஷன் ஆகி விட்டது எனவே கப்பில்..) அப்புறம் தயிர் சாதம். சில சமயம் ஹோட்டல் போல சாம்பாருக்கும் ரசத்துக்கும் நடுவில் காரக் குழம்போ, மோர்க் குழம்போ உண்டு.!
இரண்டு நாளும் காலை வேளைகளில் இட்லி வடையுடன் பொங்கல் அல்லது கேசரி, அல்லது சேட் தோசையுடன் ஸ்வீட், சில சமயம் வெண் பொங்கல், அக்கார அடிசில், (வேறு என்ன செய்ய முடியும் என்கிறீர்களா?) மாலை நேர டிஃபனாக பெரும்பாலும் இடியாப்பம்..லெமன், தேங்காய் சேவை என்று..அல்லது பஜ்ஜி போண்டா...!

மறுநாள் கட்டு சாதம் பற்றிக் கேட்கவே வேண்டாம்..அதே புளியோதரை , தயிர் சாதம்...கட்டு சாதத்தில் முருங்கைக்காய் போட்டு மிளகுக் குழம்புதான் லேட்டஸ்ட்...! 

எந்தச் சமூகத்து திருமணமானாலும் சரி, எந்த கான்ட்ராக்டரிடம் கொடுத்திருந்தாலும் சரி, எல்லாத் திருமண மெனுவும் இதே...இதே...என்னைப் போன்ற சாப்பாட்டு ராமன்கள் என்னதான் செய்வது? இப்படி கட்டுரை இட்டு புலம்புவதைத் தவிர...

யோசித்துப் பார்த்தால்...


ஒரே மாதிரி மெனுவில் விருந்துகளுக்கு நம் ரசனையும் காரணம், பாஸ்கர் வீட்டில் இதெல்லாம் செய்திருந்தார்கள் நாமும் செய்ய வேணும் என்றில்லாமல், நாமாக மெனு உருவாகிக் கொள்ளக்கூடாதா என்ன ?

முந்தைய நாளில் மூன்று நாட்கள் கல்யாணங்களுக்கு ஒரு தேவை இருந்தது. முஹூர்த்தத்துக்கு வருபவர் இப்பொழுது போல அன்றி வண்டிகளிலும் குதிரை மீதும் நடந்தும் வந்ததால், சரியான நேரத்துக்கு முன்னரேயே வந்து இருந்து நடத்திக் கொடுக்க வேண்டியிருந்தது. இப்பொழுது மூன்று நாள் முன்னே வந்தால் மண்டபத்தில் வாட்ச்மேன் மட்டும் தான் இருப்பார் அல்லது வேறு ஏதோ விசேஷம் நடந்து கொண்டிருக்கும்! விருந்து சமைப்பது வீட்டுப் பெண்களின் வேலையாக எப்பொழுதும் இருந்ததில்லை பெரிய விசேஷங்களுக்கு ஆண்கள் சமையல் என்பது வெகு காலமாக இருந்து வரும் பழக்கம்.


ஆனால் விருந்தில் பரிமாற அப்பளம், ஊறுகாய் வகைகள் வீட்டிலேயே பண்ண வேண்டிய கட்டாயமும் இருந்தது - கலப்படங்களைத் தவிர்க்க.

முன்பெல்லாம் தரையில் அமர்ந்து சாப்பிட்ட காட்சியை இப்போதெல்லாம் கற்பனை பண்ணிக் கூட பார்க்க முடியாது. என் வாரிசுகளிடம் எங்கள் கல்யாணத்தில் தரையில் அமர்ந்துதான் சாப்பாடு பந்தி என்றால் நம்ப முடியாமல் இரண்டு பேரிடம் விசாரித்து ஆச்சர்யப் பட்டுப் போனார்கள்.


முன்பு உறவினரை சந்தோஷமாக அழைத்துப் பேசி மகிழ்ந்து கல்யாணம் கொண்டாடுவார்கள். இப்போது அதெல்லாம் போய் கௌரவப் பிரச்சினை யாக சாப்பாடு ஆகிவிட்டது. அதனால்தான், ஒரு இட்லி வடை பொங்கல் கேசரி என்பது போய், இட்லி, வடை, பொங்கல், பூரி, கேசரி, தோசை, ஒரு அசோகா அல்வா என்று டம்பாச்சாரி விஷயமாகி விட்டது. சாப்பிடாமல் தூக்கி எறிவது குறித்து யாரும் கவலையோ வெட்கமோ படுவது இல்லை. முன்போல ஏழை மக்கள் கல்யாண மண்டபத்துக்கு எதிரே எச்சிலையோ எறியப் பட்டதையோ சாப்பிடுவதும் இல்லை.

அந்தஸ்து காட்டும் விஷயமாக சாப்பாடு ஆகிவிட்டதால், ஒன்றுக்கு இரண்டாக காண்டிராக்டர் காசு வாங்குகிறார். மெத்தப் படித்த தனவான்களும் வீண் படாடோபத்துக்காக கணக்குப் பார்க்காமல் அள்ளி விடுகிறார்.


ரேட் மாறாமல் இருந்தால் மெனுவும் மாறுவதற்கு சாத்தியம் இல்லை தானே

சாப்பாடு கதை இப்படி. அதை ஒட்டி, ரிசப்ஷன் கச்சேரி, வரவேற்பு ஆடம்பரங்கள், தாம்பூல படாடோபம் இவை தனிக்கதை. 

என் நண்பர் கே.கோவிந்தசாமி சொல்வார்.."சொல்ல வந்த விஷயம் ரெண்டு வரி பெறுமா? இழு இழுன்னு இழுக்கறியே...அனாவஸ்ய வரிகளை 'கட்' செய்.." என்பார். இதை அது போல எடிட் செய்தால் எப்படி வரும்..? 

"முன்பெல்லாம் திருமண விருந்துகளில் வித்யாசம் இருந்தது. இப்போது கான்ட்ராக்ட் விட்டு ஒரே மாதிரி மெனுவில் திருமண விருந்துகள்.."

அவ்வளவுதான்..! இப்படி எழுதினால் ஒரு இடுகையை எப்படி நிரப்புவது.?!!

படங்களுக்காக 'நெட்'டை' துழாவியபோது இந்த இரண்டு இடங்கள் பார்க்கக் கிடைத்தன...மெனு விவரங்களுடன்.

ஒன்று... மௌலி'ஸ்

இரண்டு... வி.ஹெச் எஸ்.

19 கருத்துகள்:

  1. எல்லாமே மாறி தான் விட்டது. மாமன் மகளை, அத்தை மகளை கல்யாணம் பண்ணும் பழக்கம் போய்விட்டது. சத்திரம் என்ற எளிமை போய், மஹால் என்ற தேவையான ஆடம்பரம் வந்து விட்டது. இன்னும் நிறைய மாற்றங்களை சொல்லி கொண்டே போகலாம். காலமும், மனிதர்களும் எல்லாவற்றையும் ஏற்று கொண்டார்கள்.

    பதிலளிநீக்கு
  2. புலம்பல் ஜாஸ்தியா இருக்கே? ஆனா ஸ்ரீராமண்ணா, நீங்க சொன்ன ஒரு பாயிண்டை ஒத்துக்கறேன். வீண் ஆடம்பரம் ஜாஸ்தியாயிடுத்து. எல்லா விதத்துலேயும்.

    பதிலளிநீக்கு
  3. இன்னொரு விஷயத்தையும் விட்டுட்டீங்களே? சரவண பவன் ஹோட்டலில் (எல்லா?) இருப்பதுபோல் சாப்பிட்டு முடிப்பதற்குள் பக்கத்தில் ஒருவர் வந்து நின்றுகொண்டிருப்பார், நம் இடத்தை பிடிக்க! இன்னும் ஒரு கொடுமையான விஷயம், சில சமயங்களில் - காண்டிராக்டர் பந்திக்கு 10 நிமிஷம் ஒதுக்கிவிட்டதால் - நாம் மோர் அல்லது தயிர் சாதம் சாப்பிட்டுவிட்டு, ஏதாவது ஸ்வீட்டை எடுக்க முயலும்போது, லபக்கென்று இலையை இழுத்துவிடுவார்கள்! ***** தாலி கட்டுவதற்கு முன் ரிசப்ஷன் விஷயத்தை விசு ஒரு படத்தில் கருவாக எடுத்திருப்பார்!

    பதிலளிநீக்கு
  4. நிறைவாய் நிறைத்த ஆதங்கம் இன்றைய திருமண வீட்டுச் சாப்பாடுகள் பற்றி.

    நீங்கள் சொன்னதும் எனக்கு என் அம்மம்மா தாத்தா இருந்த நேரங்களில் என் மாமா,சித்திக்கு நடந்த திருமணங்கள் கண்ணில் வந்து போனது.சொந்தங்களின் கூடலும் நாட்கள் எண்ண முடியாத அளவுக்கு அதன் வாசனையும் சாப்பாடு விருந்து என்று...!

    இப்போ அப்படி எதுவுமே யில்லை.சம்பிரதாயங்களை அழியவிடாமல் பார்த்துக் கொள்கிறார்களாம்.அவ்வளவுதான் !

    சாப்பாடுகளைப் போட்டோவில் பார்கவே பசி வாறமாதிரியிருக்கு !

    பதிலளிநீக்கு
  5. ஹேமா சொன்னது போல நானும் அந்தக்கால திருமண வீடுகளுக்குள் ஒரு கணம் போய்த் திரும்பினேன்.

    மாற்றங்களை நல்ல அவதானித்து சொல்லியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  6. ஆதங்கம் சரிதான்..........
    இப்படி படங்கள போட்டு, பசியை
    கிளப்பி விட்டுட்டீங்களே :))

    பதிலளிநீக்கு
  7. அடேங்கப்பா....கலக்கிடீங்க..ஸ்ரீராம்..
    படங்களும்... விவரங்களும் அருமையோ அருமை..
    எல்லாம் சரி.. இப்படி வித விதமா சாப்பாடு காமிச்ச ஆச்சா??
    எப்போ சாப்பாடு போடறீங்க.??

    பதிலளிநீக்கு
  8. பிளாஸ்டிக் பொம்மை ஃபாக்டரி மாதிரி கல்யாண சாப்பாட்டில் ஐட்டங்கள், தரம் எல்லாம் நூல் பிடித்த மாதிரி ஸ்டாண்டர்டைஸ் ஆகி விட்டதால் கிட்டத்தட்ட எல்லா கல்யாண விருந்துகளும் ஒரே மாதிரி ஆகிவிட்டன. ஆடம்பரத்தை சாப்பாட்டில் உணர்த்த முடியாத ஆற்றாமை கிஃப்ட் ஐட்டம் கொடுத்தல், தாம்பூலத்தில் புதுமை, சாக்லேட் ஒட்டிய நன்றி அட்டை, குழந்தைகளுக்கு பலூன், பாப் கார்ன், பஞ்சு மிட்டாய் என்று திசை மாறி செல்ல ஆரம்பித்து விட்டது. பாவம் மணமக்களை உள்ளம் நிறைய வாழ்த்த யாரேனும் இருக்கிறார்களா என்று உணர முடியாத அளவுக்கு இந்த மேலோட்டங்கள் திருமண விழாவின் உயிரை பாத்தித்திருக்கின்றன. ஆத்மார்த்தமான விழா வேண்டும் என்றால் அனாவசிய கூட்டம் கூடக் கூடாது.

    பதிலளிநீக்கு
  9. ஹால் வாசல்ல அடுப்பு வெச்சு சுட சுட தோசை பரோட்டா தூசு பறக்க தர்ரத விட்டுட்டீங்களே:)

    பதிலளிநீக்கு
  10. சரியாகச் சொன்னீர்கள். எல்லாமே வியாபார நோக்கோடு அணுகப்படுவதால் ரசனையோ variety-யோ போயே போச்சு. ஆடம்பரம் அதிகமானதால் பல நேரங்களில் பெண்ணின் பெற்றோர்களுக்கே ஆனந்தத்திற்கு பதில் 'அப்பாடா ஒருவழியாய் முடிந்தது' என்ற ஆயாசம்தான் ஏற்படுகிறது.--கீதா

    பதிலளிநீக்கு
  11. மேலும் கல்யாண Recepción இல் ஜோக்கர்
    பொம்மைகளை அணிந்த மனிதர்கள்,
    நம் வீட்டு குழந்தைகள் மற்றும் வயது
    பெண்களிடம்ஒட்டிஉராய்தல். அவர்களின்
    உண்மை சொருபத்தை நேரில் கண்டால்
    நம் வீட்டு குழந்தைகளை கிட்டே நெருங்க
    விடமாட்டோம்.

    பதிலளிநீக்கு
  12. சார் இன்னொன்னு விட்டாச்சு. பந்தி பரிமாறும் கலை. ஒவ்வொரு ஊருக்கும் மாறுபடும் . இப்பொழுது பலருக்கும் பந்தி பரிமாறும் கலை தெரியாது. முன்பெல்லாம் பரிமாருவதற்கென்று தனி ஆட்கள் வைக்க மாட்டார்கள். கல்யாண வீட்டை சேர்ந்தவர்கள் செய்வார்கள். அதனால் யாருக்கு என்ன தேவை என்று கேட்டு செய்வார்கள். இப்பொழுது ? ? மிக அருமையான பதிவு.

    பதிலளிநீக்கு
  13. இது போன்ற நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித்து பல வருடங்கள் ஆகிப்போனாலும் . உங்களின் பதிவு மீண்டும் ஒரு மகிழ்ச்சிதான் எனக்கு .

    பகிர்வுக்கு நன்றி !
    தொடருங்கள் மீண்டும் வருவேன் .

    பதிலளிநீக்கு
  14. பதிவு அருமை. எனது வலைப்பூ இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளது .. நேரம் இருப்பின் இங்கே வரவும் http://romeowrites.blogspot.com/2010/04/blog-post_22.html

    பதிலளிநீக்கு
  15. என் கல்யாண சாப்பாடு போல் இதுவரை சாப்பிட்டதில்லை என்று இன்றும் சொல்லும் என் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வட்டாரம் உண்டு. அப்படி ஒரு சாப்பாடு. ஒவ்வொரு வேளையும் மிக சிறப்பாக அமைய கொடுத்து வைத்து இருக்கவேண்டும். எங்களுக்கு விரதம் அது இது என்று எங்களை பரிதாபமாக காய போட்டுவிட்டார்கள்.

    அதுவும் எனக்கு வந்த வாத்தியார் - மந்திரம் சொல்லுகின்றேன் என்று விடிகாலை முகூர்த்தம் என்று பெயரே தவிர மதியம் நலுங்கு வரை சொல்லி என் பசியோடு விளையாடி விட்டார். அதற்குமேல் என்னத்தை கிடைக்கும் ?

    என் மாமனார் பாவம் தன் மொத்த சேமிப்பையும் கல்யாணத்தில் செலவழித்து மிக கிராண்டாக நடத்தினார். அப்போது எல்லாம் அவரின் வருங்காலம் என்று நான் யோசித்ததில்லை. பாவம் அவர். இப்போது நினைத்தால் இறந்து போன அவருக்கு நன்றி சொல்லாமல் போய்விட்டமோ என்று தோன்றும்.

    பதிலளிநீக்கு
  16. நன்றி தமிழ் உதயம்.

    நன்றி அநன்யா உண்மைதான்.

    நன்றி ரவிஷா..

    நன்றி ஹேமா, சம்பிரதாயங்களை சாப்பாட்டிலும் காட்டலாமே...!

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி சைவக்கொத்துபரோட்டா...அஜீர்ண மருந்து..!

    நன்றி ஆனந்தி...

    நன்றி ரசிகன்,

    நன்றி வானம்பாடிகள், பின்னூட்டம் இட ஒரு சந்தர்ப்பம் தர வேண்டாமா?

    நன்றி கீதா சந்தானம், கல்யாணம் பண்ணிப் பார் என்று தெரியாமலா சொன்னார்கள்..

    நன்றி மாலி, உண்மை. அது மற்ற ஆடம்பர சமாச்சாரங்களில் வரும்...!

    நன்றி LK, உண்மை..அந்த சமாச்சாரம் விட்டுப் போச்சு..

    நன்றி பனித்துளி, மீண்டும் மீண்டும் வருக...

    நன்றி divya,

    நன்றி Romeo,

    நன்றி சாய், உணர்ந்த வரிகள்..

    பதிலளிநீக்கு
  17. முழுமையான அலசல்
    கட்டுசாதம் அன்று காலைச் சாப்பாட்டு மெனு கூட இப்போது ஃபிக்சட் ஆகி விட்டது-மிளகு குழம்பு,சேப்பங்கிழங்கு ரோஸ்ட்,கடும் பிட்லை முக்கியமாக உண்டு.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!