laila the storm லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
laila the storm லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19.5.10

லைலா விஜயம்

நேற்று லைலா வரப் போவதாகக் கேள்விப் பட்டதிலிருந்து வீடு வீடாகவே இல்லை.

விடுமுறைக்காக குழந்தைகளுடன் டெல்லி சென்றிருக்கும் திருமதி கூட செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊற்றினீர்களா என்று கேட்டதற்கு சாயந்திரம் லைலா வரப் போவதால் இன்னும் இல்லை என்று பதிலளிக்க, பிறகு தொடர்ந்த உரையாடல்கள்  பற்றி வேறொரு போஸ்டே போடலாம்.

வீடெல்லாம் ஒரே தூசியாக இருக்கிறதே என்றெண்ணிய உடனேயே லைலா நினைவு வந்து பெருக்குவதை ஒத்திப் போடுகிறது.

இன்று காலை முதல் லைலாவின் வருகையால் பாதிக்கப் படாதவற்றை ஒரு கை விரலில் எண்ணி விடலாம்;  காய் கறி, பால் பாக்கெட் இப்படி எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா - ஆனால் வீடு சுத்தம் செய்வது போன்றவைக்கு ஒத்திவைப்பு.

இதோ அதோ என்று காத்திருந்து அலுத்துப் போய் தூங்கியும் போனேன்,  சுமார் இரண்டரை மணிக்கு என்ன தான் தூக்கம் என்றாலும் மின் விசிறியின் ஓசை நின்று போனதும், "நான் அசைந்தால் அசையும்.. அகிலமெல்லாமே " என்று திருவிளையாடல் படத்தில் ஒரு காட்சி வருமே அந்த மாதிரி ஒரு நிசப்தம் - எழுந்து சுற்று முற்றும் பார்க்க, எல்லாமே ப்ளாக் & ப்ளாக்கில் தெரிய, மின்னல் ஒரு பளிச் வெளிச்சம் போட்டதும், லைலா வந்தாச்சு என்று எழுந்தால் காலில் ஈரம். எல்லாப் படங்களிலும் வரும் கிளைமாக்ஸ் காட்சி போல எல்லா ஜன்னல் கதவுகளும் அடித்துக் கொள்ள, பிறகு தான் நினைவுக்கு வந்தது கொக்கிகள் மாட்டும் தலையாய பணியை மறந்து போனது .

இந்திரன் தந்த ஃப்ளாஷ் வெளிச்சத்தில் எல்லா [55] கொக்கிகளையும் மாட்டி விட்டு எக்சாஸ்ட் ஃபான் வைத்தவர் அந்த டக்டுக்கு ஒரு புருவம் வைக்காமல் விட்டு விட்டாரே என்று நொந்து கொண்டு வந்து உட்காரவும் ஸ்ரீராம் நினைவு வந்தது. 

சரி, அவர் என்ன செய்கிறார் பார்ப்போம் என அவரைத் தொலை பேசியில் அழைத்து அவர் எடுக்கவும் அவருக்கும் மின்தடை ஏற்பட, அவரென்னவோ நான் செல் ஃபோன் மூலம் அவருக்கு ரிமோட் கண்ட்ரோலில் மின்தடை ஏற்படுத்திவிட்ட மாதிரி "போயிடுச்சு" என்றார்.  லைலா இன்னும் வரவில்லையா என்று கேட்டதும் 'லைலாவா, யார் .." என்று ஆரம்பித்தவர் "மழையும் இல்லை காற்றும் இல்லை வெளிச்சமும் இல்லை.  ஆனால் எதிர் வரிசையில் இருக்கும் குவார்ட்டர்சில் லைட்  இருக்கு" என்று சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது ப்ரௌனியின் குரல் குறுக்கிட,  கீழே போய் ஏதோ இரண்டு வார்த்தை [அடுத்த முறை ஞாபகமாக அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ன சொன்னால் நாய் அவ்வளவு சீக்கிரம் சமாதானமாகும் என்று] சொல்ல அதுவும் ஒரு சிறிய முனகலுடன் ஓர் ஓரத்தில் ஒண்டிக் கொண்டது.  திரும்பி வந்தவர் குவார்ட்டர்சிலும் இப்பொழுது லைட் இல்லை என்றவர் குரலில் சற்று நிம்மதி.  அவர்களுக்கு வரும் பொழுது நமக்கும் வரும் என்ற நம்பிக்கையா அல்லது மின்சார வாரியத்தின் ஜனநாயக சோஷலிச கைங்கர்யத்தினாலா என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.   அமைதி நிலவும் இடத்தில் நமக்கென்ன வேலை என்று நானும் ஃ போனை ஆஃப செய்தேன் .

காலையில் மீண்டும் ஒரு சர்வே.  பேப்பர் பையன் பழக்க தோஷத்தில் வீசிய தினசரி, தேங்கிய தண்ணீரில் விழுந்து அப்படியே பேப்பர் மாஷ் பொம்மை செய்யும் பதத்தில்.   கொய்யா மரத்தில் இருந்த இல்லை, பிஞ்சு, பூ எல்லாம் கொட்டி விட்டது, எலுமிச்சை பக்கத்து வீட்டு சமையலறை ஜன்னலுக்குள் எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது கூட துணைக்கு ஒரு வாழை மரம்.  








தாழ்வாரம் முழுக்க ஒரு பெயர் தெரியாத பூ. படம் பார்த்து தெரிந்து கொள்பவர்கள் எங்களுக்கும் சொல்லுங்கள்.  என்ன தான் மல்லிகையாக இருந்தாலும் லைலா விஜயத்துக்குப் பின் எல்லாமே குப்பை தான். 


விசிறியின்றி எனக்கும் வியர்க்குது - ஒ லைலா நீ சீக்கிரம் போய் என் தென்றலை மீட்டுக் கொடு.