12.1.11

மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்.

                
இங்கே கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு, விடைகள் எல்லாமே மூன்றெழுத்து தான். சில விஷமக் கேள்விகளும் உள்ளன
:: எங்கள் (கொழுப்பு) ஆசிரியர். ::

1) இவர் ஒரு கிரிக்கட் ஆட்டக்காரர். இவருக்கு பெரிய தாடி உண்டு. இவர் பெயரில் ஒரு நடிகையும் இருக்கின்றார். (அவருக்கு தாடி கிடையாது)

2) கையில் ஒரு பைசா காசு இல்லை என்றாலும், இதை நீங்க வாங்கலாம்.

3) நீங்கள் இதால் ஒருவரை ஷூட்செய்தால், ஷூட் செய்யப்படுபவர், புன்னகை புரிவார்.

4) 'முஷாஃபெரி கானா, என் முத்து முத்து மைனா' என்ற இலக்கிய நயம சொட்டும் பாடல் இடம் பெற்ற படத்தின் பெயர் என்ன?

5) இதில் அடுத்த எண் என்ன?  0, 1,  01, --

6)  (three cubed + three squared) = how many dozens?

7) பல்லு இருக்கும் ஆனால் கடிக்காது.

8) பல்லு இருக்காது ஆனா கடிக்கும்.

9) --- என்றால் பல்லு இருக்காது

10)  மூன்றெழுத்து வார்த்தை. வித்தையிலே ஓரெழுத்து, தகரத்தில் ஓரெழுத்து, கப்பலிலே ஓரெழுத்து. அது, எது?

பதியுங்க - பதியுங்க - முதலில் வருகின்ற ஒவ்வொரு சரியான பதிலுக்கும் நூறு பாயிண்டுகள்.    
                

9.1.11

இசை விழா இனிதே முடிந்தது!

     

                  








  
ஒவ்வொரு வருடமும், டிசம்பர் முப்பத்து ஒன்று முடிந்தவுடனே இசைவிழா ஆர்வம் வெகுவாகக் குறைந்து விடுகிறது.  இது மீண்டும் தழைக்க திருவையாறு (தியாகராஜ ஆராதனை) விழா ஆரம்பமாக வேண்டும்.  டிசம்பர் 31 இசை கேட்கும் ஆர்வம் குறைய என்ன காரணம்?  யோசித்துப் பார்த்ததில், டிசம்பர் மாதம் முழுவதும் நிறைய கச்சேரிகள் கேட்ட களைப்பு என்பதுதான் முழு முதல் காரணம் என்று தோன்றுகிறது.

உண்மையில் திருவையாறு உத்சவம் கூட முன்பு போல் இல்லை என்ற எண்ணம் பலமாக இருக்கிறது. இதற்கு என்ன காரணம்?  நிறைய பேர் பாட வந்துவிட்டார்கள்.  அதனால் தரம் பின்னுக்குத் தள்ளப் பட்டுவிட்டது.  மேலும் தொலைக்காட்சியில் எல்லாம் பார்க்க முடிகிறது என்பதால் ஆர்வம் சற்று தளர்ச்சியடைந்து விட்டதாகத் தோன்றுகிறது.  மேலும் மூச்சுத் திணறும் அளவுக்குக் கூட்டம் கூடுவதும் சாப்பாட்டுக்கு சிரமப் படுவதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இம்முறை சென்னை இசை விழாவில் சீனியர்கள் வரிசையில் சஞ்சய் சுப்ரமணியம், மும்பை ஜெயஸ்ரீ, ரஞ்சனி காயத்ரி ஆகியோர்களை மட்டுமே கேட்க முடிந்தது.  எல்லாமே நிறைவை அளித்த நல்ல இசை நிகழ்ச்சிகள். குறிப்பாக சஞ்சய் அற்புதமான கற்பனையுடன் பாடி அனைவரையும் கவர்கிறார்.    
  
 மியுசிக் அகாடமியில் இசை நிகழ்ச்சியை விடியோ மூலமாக அருகில் இருக்கும் சிறு அரங்குக்கு அனுப்பி அதற்கு ஐம்பது ரூபாய் டிக்கெட் வைத்து விற்றனர். அதுவும் பெரிய நன்மையாகவே இருந்தது.  எனக்கு முன்னூறு, ஐநூறு என்று பணம் கொடுத்து அனுமதிச் சீட்டு வாங்க மனம் வருவதில்லை.  என் வரையில் நூறு ரூபாய்தான் லிமிட். எனினும் சில கச்சேரிகளுக்கு இரு நூறு ரூபாய் டிககட் வாங்கியது உடன் வந்த மகள் உபயம்.

பாரத் சுந்தர், பிரசன்னா வெங்கடராமன் ஆகியோர் இந்த ஆண்டு நட்சத்திர பாடகர்கள்.  மிக நன்றாகப் பாடினார்கள்.  நிஷா ராஜகோபாலன், அம்ருதா முரளி ஆகியோர் பாட்டும் நன்றாக இருந்ததன. மேலும் ஓர் இளம் தாரகையைக் குறித்து ஒரு நாளிதழில் மிகவும் சிலாகித்து எழுதியிருந்ததைப் படித்ததன் பேரில் ஆர்வமாகச் சென்றேன்.  துரதிருஷ்டவசமாக அன்று கச்சேரி எடுபடவில்லை.  அது ஒரு தனி நிகழ்வாக இருக்கலாம் என்பதால் அவரது பெயரைக் குறிப்பிட விரும்பவில்லை.

பெரும்பாலான இளம் பாடகர்கள் கச்சேரிகளில் பக்க வாத்தியம் ஒரே இரைச்சலாக இருந்தது ஒரு துரதிருஷ்டம்.

@ @ @ @ @ @ @ @ @ @ 
(செவிக்கு உணவு இல்லாத போது - அல்லது சரியாகக் கிடைக்காத போது - சிறிது அல்லது பெரிது வயிற்றுக்கும் ... க்கும் ! ....)   


இம்முறை காண்டீன் போட்டிகளில் வெற்றி பெற்றது (என்னைப் பொறுத்தவரை) நாரத கான சபா.  கண்டனத்துக்கு ஆளாவது அகாடமி.  ஆறுதல் பரிசு பார்த்தசாரதி சபா மற்றும் மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ். 



 மியூசிக் அகடமியின் மினி மீல்ஸ்! எல்லா நாட்களிலும் ஒரு கப் தயிர்சாதம் உண்டு. ஸ்வீட், சிப்ஸ் கூட அப்படியே. ஆனால், மற்றது மட்டும் ஒவ்வொரு நாளும் மாறும். சாம்பார் சாதம் / எலுமிச்சை சாதம் / புளியோதரை/  ரசம் சாதம் / காரக்குழம்பு (ஆக்சுவலா இந்தக் காரக் குழம்பு சாதம் காரமாகவே இல்லை - புளியோ புளி எனப் புளித்தது!) 
  
ஒரு முழுச் சாப்பாட்டின் விலை, மை ஃபைன் ஆர்ட்ஸில் எண்பது, அகடமியில் நூறு, பார்த்தசாரதி சபா காண்டீனில் நூற்றுப் பத்து. இந்த வகையில், பார்த்தசாரதி சபா மற்ற எல்லா காண்டீன்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது! மதுரை மணி அய்யர் பாட்டு போல மவுண்ட் மணி ஐயர் கேட்டரிங் போலிருக்கு! அகடமியில் மினி மீல்ஸ் ரூபாய் ஐம்பதுக்குக் கிடைத்தது. பாட்சா காண்டீனில் ஒரே சாப்பாடுதான். ஆனால் தரம் உயர்வாக இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை. எல்லா சபா காண்டீன்களிலும், அருகில் உள்ள ஐ டி கம்பெனிகளிலிருந்து மதியச் சாப்பாட்டிற்கு பலர் படை எடுத்து வந்து இரசித்துச் சாப்பிட்டுச் சென்றார்கள். அவர்களில் யாரும் பாடகர்கள் இருந்த மேடைப் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை!  
                         

6.1.11

விடியும் வரை காத்திரு




மரிஷ்காவின் பூதங்கள் படித்து விட்டு தூங்கப் போனேன். அப்போதே மணி பதினொன்றரை இருக்கும். காலை முதல் எங்கெங்கோ சுற்றி விட்டு வந்த களைப்பு ஒரு பக்கம் மரிஷ்கா மகன் கவலை ஒரு பக்கம் என்று எப்போது தூங்கினேன் என்று தெரியாது.

திடீரென கேட்ட சத்தத்தில் விழித்துக் கொண்டேன். நாராசமாய் இருந்தது சத்தம். 'சட்'டென தூக்கத்திலிருந்து விழித்துக் கொண்டதால் அது என்ன சத்தம் என்று கண்டு பிடிக்க சில வினாடிகள் பிடித்தன.

காலிங் பெல் சத்தம். இடை விடாமல் தொடர்ந்து...வெறுப்பேற்றும் வண்ணம் வீறிட்டபடி இருந்தது.

நான் எழுவதற்குள் வீடே எழுந்து விட்டது.

மனைவி ஒரு புறம் எழுந்து அலங்க மலங்க விழிக்க, மகன்கள் வாரிச் சுருட்டி எழுந்தார்கள்... அடுத்த அறையில் படுத்திருந்த அப்பாவும் எழுந்து வந்து விட்டார்.

"என்னடா அது...யாரது"

மணியைப் பார்த்தேன். இரவு ஒரு மணி.

இந்த நேரத்தில் யார்...? கதவைத் திறக்கச் சென்றேன்.

"நில்..! அவசரப் பட்டு கதவைத் திறக்காதே..." அப்பா அலறினார்.

"ஏன்? என்ன ஆயிடும்?" பெரியவன் கேள்வி கேட்டபடி கதவைத் திறக்க விரைந்தான். காரணம் சத்தம் சகிக்க முடியாதபடி இருந்தது.

"வேணாண்டா...நில்லு...மணியைப் பாரு..இது ஒருவகை டெக்னிக்...அவசரப் பட்டு திறந்து மாட்டிக்காதே..." என்ற அப்பா,

"ஏய்...யாரது..." என்று இரைந்தார். "யாராய் இருந்தாலும் கதவைத் திறக்க மாட்டோம்...யாருன்னு மரியாதையா குரல் கொடுங்க..."


பதில் இல்லை. சத்தம் கர்ண கடூரமாய் இருந்ததால் எல்லோருமே காதைப் பொத்திக் கொண்டோம்.

பெரியவன் செல்லை எடுத்து எதிர் வீட்டு நம்பருக்கு ஃபோனைப் போட்டான்.

"அங்கிள்...தூங்ககறப்போ எழுப்பிட்டேனா... ஸாரி அங்கிள்...எங்க வீட்டு காலிங் பெல்லை யாரோ விடாம அடிக்கிறாங்க...யாருன்னு பாருங்க அங்கிள்...பயமா இருக்கு"

"................."

"என்னடா என்ன சொல்றார்.." என்றேன், பையனின் சமயோசிதத்தை மனதுள் மெச்சியபடி...

"ஆண்ட்டி அங்கிளை கதவைத் திறக்காதங்கராங்கப்பா... பயப்படறாங்க..."

"எதிர் வீடுதானே..என்ன பயமாம்..பார்த்தால் என்னவாம்.." என்றாள் மனைவி!

காலிங் பெல் சத்தம் 'சட்'டென நின்றது.

மயான அமைதி.

"யாரு"

"ஏங்க... யாருங்க வெளில...பதில் கொடுங்க..."

"போலீசைக் கூப்பிட்டிருக்கோம். பதில் சொல்லிடுங்க.." இது சின்னவன். எல்லோரும் அவன்மேல் பாய்ந்து அவன் வாயை மூடினோம்.

செல் அடித்தது. பயத்துடன் எடுத்தால், எதிர் வீட்டுக்காரர்.

"யாருமே இல்லையே சார்! யாரையும் காணோமே..பெல் சத்தம் நின்னுடுச்சி போலேருக்கே.."

"அப்படியே வெளில பாருங்க.." என்றேன்.

"ஐ...நானே கொஞ்சமா கதவைத் திறந்து 'க்ரில்'லைத் திறக்காம பார்த்தேன்...எனக்கு மட்டும் ஜாக்கிரதை இருக்காதா சார்..?"

ஜாக்கிரதையா...பயமா...

செல்லை வைத்து விட்டு வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னேன்.

"ஐயோ...இது நிச்சயம் ஆவியோட வேலையாதான் இருக்கும்...நான் டீவில பார்த்துருக்கேன்...ராத்திரில போடுவான்.... 'நம்பினால் நம்புங்கள்'னு போடுவான் பார்த்துருக்கேன்..." என்றான் சின்னவன்.


"அட இவன் ஒருத்தன்...ஏதாவது சொல்லி குழப்பிகிட்டு...ஏண்டா நீ வேற...!" என்று சொன்னாலும் எல்லோருக்கும் சற்று உதைப்பாகவே இருந்தது.

இப்போது மின்சாரம் வேறு 'சட்'டென நின்று போனது. இருளும் அமைதியும் ஒரு சேர தாக்கியது.

"நம்ம வீட்டுல மட்டும்தான்பா கரண்ட் போய் இருக்கு...ஜன்னல் வழியாப் பாரு..எதிர் வீட்டுல எல்லாம் இருக்கு.."

ஆமாம். ஏதோ நடக்கிறது. யாரோ ஏதோ திட்டம் போட்டு ஏதோ செய்கிறார்கள்.

"போலிசுக்கு ஃபோன் செஞ்சுடலாமா..."

"லோகல் ஸ்டேஷன் நம்பர் என்ன.."

"தெரியாதே..."

"அட..இதெல்லாம் தெரிஞ்சி வச்சிருக்க வேணாமா... நூறுக்கு போடலாமா..?"

"என்னன்னு சொல்லுவே...பேய் பெல் அடிச்சுதுன்னா..?"

"பேய்னு எப்படிச் சொல்ல முடியும்? எவனாவது அடிச்சிட்டு ஒளிஞ்சு நிப்பான்...கதவைத் திறந்த உடனே ஒரே போடு..." பெரியவன்.

செய்வதறியாமல் எல்லோரும் கூடி நின்றோம். பயமாகவும், அந்த அமைதியில் அமானுஷ்யமாகவும் உணர்ந்தோம்.

உறவினர் யாருக்காவது தொலை பேசி சொல்லலாமா என்றால் யாரையும் எழுப்ப பாவமாக இருந்தது.

தூக்கமும் வரவில்லை. எதிர் வீட்டுக் காரரை மறுபடி எழுப்ப தயக்கமாக இருந்தது. மறுபடி பெரியவன் ஒரு காரியம் செய்தான். இந்த முறை மேல் வீட்டுக் காரருக்கு செல்லில் தொடர்பு கொண்டான். ஏதோ கேட்டு விட்டு வைத்து விட்டான்.

"என்னடா.."

"எதிர் வீட்டு அங்கிள் எல்லோருக்கும் ஃபோன் செய்து விஷயம் சொல்லிட்டாராம். எல்லாரையும் கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கிட்டு உள்ளே பத்திரமா இருக்கச் சொன்னாராம்.."

மறுபடி ஏதாவது சத்தம் வருகிறதா என்று கவனமாக பார்த்துக் கொண்டிருந்தோம். கிசுகிசுப்பாகப் பேசிக் கொண்டிருந்தாலும் சிறு சலனங்களுக்கு நிறுத்தி கவனமாக ஆராய்ந்தோம்.

"என்னமோ வாடைப்பா..." சின்னவன்.

எனக்கும் முன்னாலேயே தெரிந்திருந்தது. பயமுறுத்த வேணாம்னு சொல்லாமலிருந்தேன்.

"ஏதோ பொசுங்கற வாடை.." பெரியவன்.

"கொள்ளிவாய்ப் பேயா இருக்குமோ.." அப்பா நேரம் காலம் தெரியாமல் கேட்டார். நகைச் சுவையாம்.

காலை வரை விழித்திருந்தோம். ஒரே இடத்தில் இருந்தோம்.

விடிந்து வெளிச்சம் வந்தது. எதிர் வீட்டுக் காரர் செல்லில் பேசினார்.

"சார்! யாரும் இல்லை..தைரியமா வெளில வாங்க..."

வெட்கத்துடன் வெளியில் வந்தோம்.

வெளியே...

காலிங் பெல் ஷார்ட் ஆகி புகைந்திருந்தது.

படங்கள் : நன்றி கூகிள்.

4.1.11

"இசையால் மயங்காத..." - கிஷோர்.

அன்றைய பொழுதுகளில் மனதை வருடிய சில பாடல்களை சொல்லிப் பகிர்ந்து கொள்ள ஆசை.

நீண்ட நாள் ஆசை. சில பல காரணங்களால் தள்ளிக் கொண்டே போன் ஆசை.

அந்த நாள் 'ரங்காவளி, மன் சாஹே கீத், மனோ ரஞ்சன் ஜெய் மாலா சாயா கீத், ஆப் கே ஃபர்மாயிஷ்' காலங்களை நினைவு 'படுத்தும்' ஆசை.

ஹிந்திப் பாடகர்களில் மிகவும்....மிகவும் பிடித்த பாடகர் கிஷோர் குமார். கடவுள் இந்தியாவுக்கு அளித்த கொடைகளில் ஒருவர். முதலில் எல்லாம் கொஞ்சம் மூக்கால் பாடிக் கொண்டிருந்தார் என்று ஆரம்பக் காலப் பாடல்களைக் கேட்கும் போது தோன்றும். சல்தி க நாம் காடி படத்தில் அவர் பாடிய 'ஏக் லடுக்கி பீகி பாகி சி' பாடல் ஒரு புதிய பாணியில் அமைந்தது என்று சொல்லலாம். எஸ் டி பர்மனும் ஆர் டி பர்மனும் கிஷோரின் பல இனிய பாடல்களைக் கொடுக்கக் காரணமாயிருந்தவர்கள்.


குறிப்பாக ஆர் டி பர்மன் கிஷோர் காம்பினேஷன் பாடல்கள் பெரிய அளவில் ஹிட்டாயின.


ஆர் டி பர்மன் கிஷோர் கூட்டணியுடன் ராஜேஷ் கன்னா வும் சேர்ந்தால்... இதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட். ராஜேஷ் கன்னாவின் நடனத்தைப் பாருங்கள். அது தனிரகம். இந்தப் பாடலுக்கு (ஏ ஜோ மொஹப்பத் ஹை) தமிழில் நினைவுக்கு வரும் பாடல் சொல்ல முடிகிறதா,,,


கீழே வரும் பாடலில் வருபவர் சஞ்சீவ் குமார். அந்தக் காலத்தில் இது மாதிரி காட்சிகள் அதிகம். அதாவது ஒரு பார்ட்டி நடக்கும். 'அப்பாவி' இளம் ஹீரோ யாரோ கேட்டதற்கு பதிலாகவோ அல்லது எல்லோருடைய வற்புறுத்தலுக்கும் இணங்கியோ பாடுவார். குறிப்பாக தனது கனவில் நினைத்து வைத்திருக்கும் 'பெயரில்லா' தனது கனவுக் காதலியை நினைத்துப் பாடும் பாடல். கிஷோரின் குரல், ஆர் டியின் இசை, பாடல் வரிகள்..."என் அன்புக்கு பதிலாக நீ ஏன் எனக்கு இவ்வளவு துன்பத்தைத் தருகிறாய்?" என்று பாடுவதும் அழகு. இதே மாதிரி பார்ட்டியில் அப்புறமும் ஒரு ஹீரோ தன் வருங்கால மனைவியைப் பற்றி பாடிய பாடல் மிகப் பிரபலம்..என்ன சொல்லுங்கள்...!


மகனைப் பற்றியே சொன்னால் எப்படி? மறுபடி ஒரு எஸ் டி பர்மன் பாடல். காட்சியில் வருபவர் தேவ் ஆனந்த்.. ஹிந்தித் திரையுலகின் எவர் கிரீன் ஹீரோ...அவர் ஸ்டைல், அவர் நடையைப் பாருங்கள். ஹிந்தியின் எம் ஜி ஆர் அவர்! இந்தப் பாடல் ஒரு புதிய முறையில் அமைந்தது. வரிகளில் அந்தாதி கேள்விப் பட்டிருக்கிறோம். இது ட்யூனில் அந்தாதி போல மாலையாகக் கோர்க்கப் பட்ட அழகிய பாடல்! "பூக்களின் வண்ணம் கொண்டு இதயத்தின் பேனாவைக் கொண்டு உனக்கு தினமும் எழுதும் கடிதம்... நீ என் இதயத்தின் அருகிலேயே இருப்பதை எப்படிச் சொல்வேன்... மேக மின்சாரம், நிலவின் குளிர்ச்சி இரண்டையும் ஒருங்கே கொண்ட உன் காதல் என்னை பலப் பல ஜென்மம் எடுக்க வைக்கிறது..." பாடலில் வரும் இசை..சந்தூர் என்று நினைக்கிறேன்... அப்பா பர்மன் ஒன்றும் சளைத்தவரல்ல!


ஒரு வேண்டுகோள்...கிஷோர் கேள்விப் பட்டிருக்கிறேன் என்று சொல்லி விட்டுப் போய் விடாமல் எல்லாப் பாடல்களையும் முழுமையாகக் கேட்டு அனுபவிக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். நிறையப் பேருக்கு தெரிந்திருக்கும். இவரைத் தெரியாதவர்கள் இருந்தால் அல்லது கேட்காதவர்கள் இருந்தால் கேட்டு ரசியுங்கள்.

இது முதல் தவணை. இனி அவ்வப் போது தொடரும்..! கபர்தார்!

1.1.11

வாழ்த்துக் கூறுங்கள்!

இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டு நேற்றோடு விடை பெற்றுவிட்டது. புதிய  ஆண்டுக்கான வாழ்த்துக்கள், தீர்மானங்கள், இலவசங்கள், இனிய கற்பனைகள் என்று மனம் கணக்குப் பண்ணுவதற்கு ஆரம்பிக்கின்ற நாள்

எங்கள் வாசகர்கள் எல்லோரும் அலைபேசி மூலமாக, எங்களிடம் தங்கள் கருத்துக்களைக் கூற, இங்கே, இடது பக்கத்தில், ஓர் அலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. (மன்னிக்கவும். கொடுக்கப் பட்டிருந்தது. ஓர் அவசரக் குடுக்கை ஆசிரியர் அதற்கு சரியாக பத்தரை மணிக்கு கற்பூர ஆரத்தி காட்டி, 'நீ நாம ரூபமுலகு' பாடிவிட்டார்.) எங்கள் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்தது என்ன பிடிக்காதது என்ன, எந்த சப்ஜெக்டில் பதிவுகள் எதிர்பார்க்கின்றீர்கள் என்பது போன்ற விவரங்களை, வாசகர்கள் எங்களுடன் பகிர்ந்துகொள்ள இந்த முயற்சி. கருத்துக் கூறுபவர்கள், தங்கள் பெயர், (எங்கள் ப்ளாக் வலைப்பூவில்) தங்களுக்குப் பிடித்தது, பிடிக்காதது, எதிர் பார்ப்பது போன்ற விவரங்களை சுருக்கமாக கூறலாம். பேசுபவர்களின் பேச்சுக்களை, ஒலிப்பதிவு செய்துஅதை இது நம்ம ஏரியா  பதிவில் வெளியிட முயற்சிக்கின்றோம்

இந்தப் பதிவு, எங்களை அலைபேசியில் தொடர்புகொள்ள இயலாதவர்களுக்காக. இந்தப் பதிவிற்கு பின்னூட்டமாக உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். அதுமட்டும் அல்ல
நாம் சாதாரணமாக ஒருவரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்துவிட்டு, விடைபெறுகின்ற பொழுது, 'நன்றி வண்க்கம்' கூறுகின்றோம் அல்லவா? அதுபோல, இந்த ஆண்டிற்கு வண்க்கம் கூறுவதற்கு முன்பாக,  'நன்றி' சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். எனவே
இன்றோடு முடியும் இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டில் உங்களுக்கு நடந்த, கடந்த நிகழ்வுகளை, சற்று அசை போட்டுப் பாருங்கள். நீங்கள் யாருக்காவது எதற்காவது நன்றி சொல்ல விரும்பி சொல்லாமல் / சொல்லமுடியாமல் போயிருக்கலாம்; அல்லது சரியாகச் சொல்லாமல் போயிருக்கலாம். மொத்தத்தில், இரண்டாயிரத்துப் பத்தாம் ஆண்டிற்கு நன்றி. ஏன் என்றால், " ................................. ----------------- ............................." என்ற வகையில், இங்கு பின்னூட்டம் பதியுங்கள்.

பின்னூட்ட நண்பர்களுக்கு, வாசகர்களுக்கு எங்கள் ஆதரவாளர்களுக்கு, எங்கள் நன்றி,
வண்க்கம்!

உங்கள் எல்லோருக்கும் இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டு மிகவும் பயனுள்ளதாக, சுவையுள்ளதாக, இனிமையானதாக, வளமானதாக, உங்கள் எதிர்பார்ப்புகளை ஈடேற்றுவதாக அமைய எங்கள் நல்வாழ்த்துகள்.