22.7.11

இருபத்தொன்று முதல், முப்பது வரை ...


இருபத்தொன்று முதல், முப்பது பாயிண்டுகள் வரை பெற்றவரா? 

              
உங்கள் நண்பர்கள் உங்களை உடல் உழைப்புக்கு அஞ்சாதவராக, ஆனால் ஒரு குழப்பவாதியாக - ஒன்றும் இல்லாத விஷயங்களுக்கு அதிகம் அலட்டிக் கொள்பவராகப் பார்க்கின்றார்கள். முன்ஜாக்கிரதை முத்தண்ணா - ஆரஞ்சுப் பழத்தை உரிப்பதாக இருந்தால் கூட, அதற்கான செய்முறைப் பயிற்சிப் புத்தகம் ஏதாவது நூலகத்தில் இருக்கின்றதா என்று பார்ப்பீர்கள். நீங்கள் எந்த செயலையாவது உத்வேகத்தோடு தன்னிச்சையாக விரைவாகச் செய்துவிட்டீர்கள் என்றால் அதைக் கண்ணுறும் உங்கள் நண்பர்கள் மயக்கமாகிக் கீழே விழுந்து விடுவார்கள்! அவர்கள் பார்வையில், நீங்கள் எந்த ஒரு செயலையும் பல கோணங்களில் ஆ ஆ ஆ ரா ய் ய் ய் ந்து - கடைசியில் - அந்த செயலை செய்யாமல் இருப்பதே உத்தமம் என்று சும்மா இருந்து விடுபவர்! அவ்வாறு விடுவதற்கு - உங்கள் எச்சரிக்கை உணர்வே காரணம் என்று உங்கள் நண்பர்கள் நினைக்கின்றார்கள். 
                       
மிஸ்டர் எக்ஸ் பற்றி சொல்கிறேன். இவருடைய ஸ்கோர் என்ன என்று உங்களால் யூகிக்க முடிகிறதா? 

 உங்களுடன் கை குலுக்கினால், தனியாக அறையின் ஒரு மூலைக்குச் சென்று தன்னுடைய ஐந்து விரல்களும் சரியாக உள்ளதா என்று எண்ணிப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு 'செக்'கைக் கிராஸ் செய்வதாக இருந்தால் கூட ஜாக்கிரதையாக, இரண்டு பக்கங்களும் பார்த்துக் கொண்டே இருப்பார். ஒரு டி வி வாங்க வேண்டும் என்று கடைக்குப் போனார். அப்பொழுது காலை மணி பதினொன்று. ஒவ்வொரு மாடலாக அலசி ஆராய்ந்து, எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழம்பி, கடைசியில் இரவு பதினொரு மணிக்கு, கடையை மூட வேண்டிய நேரம் வரும்பொழுது, விற்பனையாளரிடம், 'நாளைக்குக் கடை எப்போ திறப்பீங்க?' என்று கேட்டார்...  
                      

21.7.11

இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே என்றால் ...


                             
வாசகர்கள், எங்கள் ப்ளாக் வெளியிட்ட, முந்தைய பதிவுகள் 
ஆகிய இரண்டு பதிவுகளை படித்து, பாயிண்டுகளைக் கணக்கிட்டு வைத்திருப்பீர்கள் என்று நினைக்கின்றோம். 

இப்போ படிப் படியாக - பெற்ற பாயிண்டுகளும், அவர்களை மற்றவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் பார்ப்போம். 

மறுபடியும் நாங்க சொல்வது என்னவென்றால் - இதில் உயர்வோ தாழ்வோ எதுவும் கிடையாது. இது, மற்றவர்கள் பார்வையில், நீங்கள் எப்படிப் பட்டவராகக் கானப்படுகிறீர்கள் என்ற ஒரு மதிப்பீடு. அவ்வளவுதான். 
                              
நீங்கள் இருபத்தொரு புள்ளிகளுக்குக் கீழே பெற்றவராக இருந்தால் .....

மற்றவர்கள் உங்களை, வெட்கமுறுகிற, தயக்க இயல்புடையவராகவும், கூச்ச சுபாவம் உள்ளவராகவும் பார்க்கின்றார்கள். எளிதில் எந்த முடிவுக்கும் வர இயலாதவர் என்று உங்களை நினைப்பார்கள். நீங்க தனித்து செயல்படுவது மிகவும் கடினம் என்றும் உங்கள் தேவையறிந்து உங்களுக்கு உதவுவதற்கு யாரேனும் வேண்டும் என்று எதிர்பார்க்கும் குணம் உள்ளவராகவும் தோற்றமளிக்கின்றீர்கள். நான் எதிலும் பட்டுக் கொள்ளமாட்டேன், என்னை யாரும் எதற்கும் தொந்தரவு செய்யாதீர்கள் என்பது நீங்கள் மற்றவர்களுக்கு உணர்த்தும் செய்தி. இல்லாத பிரச்னைகளை பெரிதாக்கி எப்பொழுதும் கவலைப் படுபவராக காணப்படுகின்றீர்கள். சிலர் உங்களை ஒரு அறுவை மன்னனாகக் காணக் கூடும். ஆனால், உங்களை நன்கு அறிந்து வைத்திருப்பவர்களுக்கு மட்டும் நீங்கள் அப்படிப்பட்டவர் இல்லை என்பது தெரியும். 
                               

18.7.11

காதல் மீடியா கேஸ் நித்யா நடனம் பொதுஜனம் -வெட்டி அரட்டை


                        
மாண்டலின் ராஜேஷுடன் காதல் முடிந்து விட்டது என்று மீரா ஜாஸ்மின் சொல்லியிருக்கிறாராம். காதல் என்ன கட்டுரையா நாவலா... முடிய? இந்தக் காதல் எல்லாம் எந்த வகையில் சேர்த்தி? அல்லது காதல் ஒரு ஜோக்கா? 
                     
தினமலரில் சமீபத்தில் ரசித்த ஜோக். ராகுல் காந்தி திடீர் திடீரென உத்தரப் பிரதேசத்தில் நுழைந்து ஏர் பிடிக்கிறேன், கூழ் குடிக்கிறேன், ஏழைகளுடன் குடிசையில் தங்குகிறேன் என்று ஃபிலிம் காட்டிக் கொண்டிருப்பதை கிண்டலடிக்கும் ஜோக். "சீக்கிரம் கூழைக் குடிச்சித் தொலை.. ராகுல் அடுத்த தெரு கிட்ட பாத யாத்திரை வந்துட்டாராம்.." நியூஸ் சானல்களுக்கு ராகுல் ஃபாலோ அப் நல்ல தீனி. 
                            
தயாநிதி ராஜினாமா செய்த நாளில் மற்ற அனைத்து சேனல்களும் அதைச் சொல்ல கலைஞர் டிவியில் மட்டும் 'பிரபுதேவா ரமலத் விவாகரத்துக்கு முக்கியத்துவம் தந்த அளவு இதைப் பற்றி ஒரு வரி கூட கிடையாது! தி மு கவுக்கு இரண்டு இடம் நிறுத்தப் பட்டுள்ளது என்கிறது காங்கிரஸ். பிரச்னை இல்லாமல் இருக்க வேண்டுமானால் அவர்களுக்குக் கொடுக்க புதிய துறைகள் உருவாக்கலாம். அறிக்கைத்துறை, சமாளிப்புத்துறை, இப்படி...
                          
"மீடியாக்கள் ராஜ்ஜியம் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ் நாட்டில் நடக்கிறது... யாரை வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம்...தயாநிதி விதிவிலக்கல்ல" என்பது கலைஞரின் கருத்து. கலைஞர் டிவி, சன் டிவி மீடியாக்கள் இல்லையா... இவர்கள் செய்யாததா... இது ஒருபுறமிருக்க இதில் ஓரளவு நியாயம் இருக்கிறது.
                        
சமீபத்தில் அன்னா ஹசாரே பாபா ராம்தேவ் ஆகியோருக்கு மீடியாக்கள் தந்த முக்கியத்துவம் ஒரு யோக்கியமான காரணத்துக்காக (கங்கையைக் காப்பாற்றுங்கள்) இந்த வருடம் பிப்ரவரி முதல் உண்ணாவிரதம் இருந்து யாராலும் கவனிக்கப் படாமல் உயிர் நீத்த சுவாமி நிகமானந்தா பற்றி செய்தி எங்காவது வெளியில் வந்ததா... துக்ளக்கிலும் கல்கியில் ஞானியும் சொல்லியிருக்கிறார்கள். சம்பவம் நடந்த மாநிலத்தை ஆட்சி செய்யும் பா ஜ க வும் கண்டு கொள்ளவில்லை, காங்கிரஸ் கண்டு கொள்ளவில்லை, மீடியாக்களும் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் எல்லோரும் கண்டு கொண்ட ஆட்டம் ஒன்று உண்டு!   ராம்தேவின் நள்ளிரவு போராட்டக் கலைப்புக்கு கண்டனம் தெரிவித்த நிகழ்வில் பி ஜே பியின் சுஷ்மா ஸ்வராஜ் நடனமாடியது செய்தியாகியதாம். தேசபக்திப் பாடல்களுக்குத்தானே ஆடினேன் என்ன தவறு என்றாராம் அவர்! ஆனால் நடுத்தர மக்கள் உண்மையிலேயே ஆடிப் போய்விட்டார்கள் கேஸ் சிலிண்டர் அநியாய விலை ஏற்ற விவரம் கேட்டு. 
                        
கேஸ் சிலிண்டர்கள் புதிய செய்தி ஒன்று படித்தேன்..வருடத்திற்கு நான்கு சிலிண்டர்கள் இப்போது இருக்கும் விலையில் அதற்கு அப்புறம் வாங்கும் எல்லா சிலிண்டர்களும் சுமார் எழுநூறு ரூபாய் விலையில் வழங்கப் படலாம் என்கிறது செய்தி. பத்மநாப சுவாமிதான் இந்திய மக்களுக்கு அருள் செய்ய வேண்டும்!
                        
பத்மநாப சுவாமியின் நகைப் பொக்கிஷத்தை உலகுக்கு காட்டிக் கொடுத்த சுந்தரராஜன் காலமாகி விட்டாராம். 70+ வயது. இயற்கை மரணமாகத்தான் இருக்கும். இவர் இந்திராகாந்திக்கு ஆலோசகராக இருந்தவராம். கோவிலுக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இவர் வீடு நோக்கி தினமும் ஒரு எதிர்ப்பு ஊர்வலம் நடந்ததாம். தெருவில் எதிர்ப்படுவோர் எல்லாம் இவரைத் திட்டிக் கொண்டே இருந்தார்களாம். இனி அதற்கெல்லாம் தேவை இல்லை. அவரை எதிர்த்து குதித்துக் கொண்டு இருந்தவர்கள் அடங்கி விட்டாலும் .... 
              
பிடதி ஆஸ்ரமத்தில் குருபூர்ணிமா அன்று நடந்த நித்யானந்தரின் புவி ஈர்ப்பு விசையை எதிர்க்கும் நிகழ்ச்சி அல்லது நடனம் எல்லா சேனல்களிலும் ஒளி பரப்பப் பட்டது. உள்நாட்டு, வெளிநாட்டு பக்தர்கள் 'நம்பி' தலையை உயர்த்தி யோகாவின் அரைமண்டியிட்ட போஸில் அப்படியே எழும்பிக் குதிக்கத் தொடங்கியது கண் கொள்ளாக் காட்சி! ரஞ்சியும் இருந்தார். சும்மா இருந்தவர் நித்தியானந்தா சைகை காட்டியதும் அவரும் ஒரு முறை முயற்சித்தார். ஒரு நிருபர் எதிர்த்ததையும் பார்க்க முடிந்தது. உச்சகட்ட பரவச நிலைக்குப் போன ஒரு பெண்மணி அந்தக் கால பாம்பு டான்ஸ் போல ஆடத் தொடங்கி தரையில் விழுந்து நெளிய அருகில் சேரில் அமர்ந்திருந்த ஒரு வயதான பெண்மணி அதைப் பார்த்த பார்வையில் அவர் கேலியாகப் பார்க்கிறார் என்று நம்பத் தொடங்கிய கணத்தில் அவர் உடம்பிலும் அதிர்வுகள் தொடங்கி, பாம்பு டான்சுக்கு ரெடியானதைப் பார்க்க முடிந்தது. தெய்வீகப் பரவச நிலை என்று இதை ஏற்றுக் கொண்டால் கூட - மனிதம் என்பதே சற்றும் இல்லாத சில நிகழ்வுகளையும் வருத்தத்துடன் சொல்லவேண்டி உள்ளது. 
     
ஓரிரு வருடங்களுக்கு முன்னால் அமைச்சர்கள் தலைமைச் செயலர் எதிரிலேயே ஒரு போலீஸ் ஆபீசர் வெட்டிக் கொல்லப் பட்டதைப் பார்த்தோம். உதவி கேட்டு அவர் எழுந்து எழுந்து அலறியும் யாரும் பக்கத்திலேயே போகவில்லை அப்போது. அதே போல ஒரு காட்சி சென்ற வாரம் கோவையில் அரங்கேறியது. 'குடிமகன்கள்' இடையே நடந்த சண்டையில் பைக்கில் மோதி கீழே தளளி அடித்துத் துவைத்து, தலையில் கல்லைப் போட்டு கொல்லுவதைப் பார்த்துக் கொண்டிருக்கும் பெரிய கூட்டமான பொது ஜனம்...! cctv யில் ரெகார்ட் ஆனதை சேனல்களில் தமிழ்பட காட்சி போல காட்டிக் கொண்டிருந்தார்கள். பக்கத்திலேயே போலீஸ் ஸ்டேஷன் வேறு இருந்ததாம். ஏன் இந்தக் கொடுமையை பார்த்துக் கொண்டிருந்த பொது ஜனத்தில் ஒருவர் கூட தட்டிக் கேட்கவோ தடுக்கவோ முன் வரவில்லை? சிக்னல் விழுந்ததும் ஏதோ ரோடில் பிச்சை எடுப்பவர்களைத் தாண்டிச் செல்வது போல வாகனங்கள் தங்கள் வேலையைப் பார்க்க விரைந்தது ஏன்? கலிகாலம்.  
                      
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் ... 
                   

16.7.11

K J Y - M S V -M G R

நேற்று, 'நாளை நமதே' படம் ஏதோ ஒரு சேனலில் போட்டார்கள். ஹிந்தி யாதோங்கி பாராத்தைத் தழுவி எடுக்கப் பட்ட படம். யாதோங்கி பாராத் பார்த்து விட்டு இதைப் பார்த்ததும் சிரிப்பு வந்தது. குறிப்பாக எம் ஜி ஆர் சொல்லும் 'ஓ ஐ ஸீ..' காட்சிகளிலும், கடைசிக் காட்சியில் எம் ஜி ஆர் ஓடும் ஸ்டைல் மற்றும் நடந்து கொண்டே 'ஓடு...ஓடு...உலகத்தின் எந்த மூலைக்கு வேணும்னாலும் ஓடு...' வசன உச்சரிப்பிலும்...!



முதலில் பிராண நாதா பிரேமா ஈஸ்வரி வசன காலம். 'இனி ஒரு பெண்ணை நான் மனதாலும் நினையேன்...' டி ஆர் எம் குரல் கூட மனதில் கேட்கிறது! பிறகு 'ஓ ஐ அம ஸாரி...' போன்ற ஆங்கில வசனங்கள்...(இதற்கு கல்யாணப் பரிசு தங்கவேலு குரல் கேட்கிறது) அப்புறம் நாயகனோ நாயகியோ ஒரு கோபமான காட்சியில் 'கெட் அவுட்' என்று முதலில் மெதுவாகவும், அடுத்து எதிர் பார்ட்டி இன்னும் என்னவோ பேச முற்பட, குரலை உயர்த்தி கையை நீட்டி' ஐ ஸே யூ கெட் அவுட்..' என்று கத்துவதும் பல படங்களில் இடம் பெறும் வழக்க சீன்கள்! அப்புறம் கதாநாயகன்கள் திடீரென ஆங்கிலம் பேசி புல்லரிக்க வைக்கும் காட்சிகள். ஆனால் இதில் எம் ஜி ஆர் அவப்போது நடுவில் ஐ ஸீ சொல்வார். எங்கள் கேசெட் கடைக் காரர் வசனத்துடன் பாடலை பதிந்து தருகிறேன் என்று இந்த மூன்று பாடல்களையும் பதிந்து தந்த போது இடத்தை வேஸ்ட் செய்து விட்டாரே என்று கோபப் பட்டேன். 'அந்த இடத்தில் இன்னும் ஒரு பாடல் பதிந்திருக்கலாமே மாதவராவ்...'


படம் சிரிப்பை வரவழைத்தாலும் ஜேசு அண்ணாவும் எம் எஸ் வீயும்
ஏமாற்றவில்லை. அந்தப் படத்தில் இந்த மூன்று பாடல்களும் ரசிக்க வைத்தன.
ஜேசு அண்ணா அங்குதான் சிரிக்க வைக்கவில்லையே தவிர, இங்கு அபபடி அல்ல. பாடல் நல்ல பாடல்தான். ஆனால் பிள்ளைத் தமிழ் என்பதை 'பில்லைத் தமிழ்' என்று பாடி புன்னகையுடன் ரசிக்கவைத்தார். அது தப்பு என்று தெரிந்தாலும் நண்பர்கள் பாடும் போது பில்லைத் தமிழ் என்றே பாடினார்கள்! இன்னொரு பாடலில் திருக்கோவிலை தெருக்கோவிலாக பாடியிருப்பார். இங்கு வரும் பாடல் ஊருக்கு உழைப்பவன் படத்தில் வரும் பாடல். எம் ஜி ஆர் படம். அதே எம் எஸ் வி. இது கூட 'ஹம்சக்கல்' என்ற ஹிந்திப் படத்தின் தமிழ் வடிவம்.

அதே படத்தில் குழந்தையை தூங்க வைக்க இன்னொரு ஜேசு பாடல்.

14.7.11

என்ன பதில்? எவ்வளவு பாயிண்டுகள்?

ஏற்கெனவே விடை அளித்தவர்கள், உங்கள் விடைகளுக்கான மதிப்பீடு சரியாக உள்ளதா என்று பார்த்துக் கொள்ளவும்.

விடைகளைக் குறித்து வைத்துக் கொண்டு இன்னும் எங்களுக்கு அனுப்பாமல் இருப்பவர்கள், உங்களுக்கு வருகின்ற மொத்த மதிப்பெண் என்ன என்பதை (மட்டுமாவது) பின்னூட்டத்தில் பதியவும். 

உங்கள் விடைகளுக்கு நீங்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களை வைத்து,  மற்றவர்கள் பார்வையில் நீங்கள் என்னவாகத் தெரிகின்றீர்கள் என்பதை விரைவில் ஒரு பதிவாக போடுகிறோம். 
                       

12.7.11

நீங்கள் எப்படிப்பட்டவர்?


உன் நண்பர்களைக் காட்டு, நீ யார் என்று சொல்கிறேன் என்று ஓர் அறிஞர் கூறியதாகப் படித்திருக்கின்றோம். 

நீ படிக்கும் புத்தகங்கள் என்ன, அவற்றைக் கூறு, நான் உன்னைப் பற்றிக் கூறுகின்றேன் என்று கூட யாரோ கூறியிருக்கிறார்கள். 

நண்பர்கள் இல்லை, புத்தகங்கள் படிப்பதில்லை என்றெல்லாம் கூறி நீங்கள் எங்களிடமிருந்து தப்பிக்க முடியாது. 

அன்றாட வாழ்க்கையில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம், எப்படி உணர்கிறோம் ஆகியவற்றை வைத்துக் கொண்டே, நம்மைச் சுற்றி இருப்பவர்கள், நம்மை எந்த வகை மனிதராகப் பார்க்கிறார்கள் என்பதை துல்லியமாகச் சொல்லிவிடலாம். 

இங்கே, பத்துக் கேள்விகள் கேட்டு, அவற்றிற்கு தேர்ந்தெடுக்க, சில பதில்களையும் கொடுத்துள்ளோம். இவற்றுக்கு, இந்த இரண்டாயிரத்துப் பதினொன்றாம் ஆண்டில், இதுவரை உங்கள் அனுபவப்படி, உண்மையான பதில்களைத் தேர்ந்தெடுங்கள். நீங்கள் முன்காலத்தில் எப்படி இருந்தீர்கள் - அல்லது எதிர்காலத்தில் எப்படி இருக்க விரும்புகிறீர்கள் என்பதை எல்லாம் உங்கள் பதிலில் கூற முற்படவேண்டாம். இப்பொழுது என்னவாக இருக்கின்றீர்கள் என்பதை மட்டும் வைத்து பதில்களைத் தேர்ந்தெடுங்கள். இது பல தனியார் துறை கம்பெனிகளுக்கு ஆட்களை வேலைக்கு எடுக்கும்பொழுது வேலைக்கு சேருகின்ற ஆள் எப்படிப்பட்டவர் என்பதைத் தெரிந்துகொள்ள சமீபகாலமாக மிகவும் பயன்படுத்தப்படும் படிவம் / கேள்விகள். 

முக்கியமான விஷயம்: இதில் சரியான விடை / தவறான விடை என்று எதுவும் கிடையாது. எவ்வளவுக்கெவ்வளவு உண்மையான பதில்களை தேர்ந்தெடுக்கின்றீர்களோ, அவ்வளவுக்களவு உங்களைப் பற்றி நீங்கள் துல்லியமாக அறிந்து கொள்ள இயலும்.

நேரம்: எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்! ஆனால், எங்கள் கணக்குப் படி, பத்துக் கேள்விகளுக்கும் சேர்த்து, ஐந்து நிமிடங்கள் போதும்.  

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX
பரீட்சை ஹாலுக்குள் நுழையுமுன்....., 
ஒரு சிறிய வெள்ளைத் தாளை எடுத்துக்கொள்ளுங்கள்.

அதில் மேலிருந்து கீழாக, ஒன்று முதல் பத்து வரையிலும் எண்களை எழுதிக் கொள்ளுங்கள்.

இதோ கேள்விகளும் - பலதரப்பட்ட பதில்களும். உங்களின் தெரிவுகள் என்ன என்று, ஒவ்வொரு கேள்வி எண்ணுக்கும் எதிராக எழுதிக் கொள்ளுங்கள். 

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

1) நான், பெரும்பாலும், இந்த நேரத்தில், என்னுடைய எல்லா வேலைகளையும், சிறப்பாக, வேகமாக செய்து முடித்து விடுவேன்.

a) காலை நேரத்தில்.
b) மதிய நேரத்தில் / மாலை நேரத்தில்.
c) இரவு நேரத்தில் - ஊரோசை அடங்கியதும்.
-----------------------------

2) நான், நடந்து செல்லும்பொழுது ...

a) வேகமாக, கால்களை எட்டி வைத்து நடப்பேன்.
b) வேகமாக - ஆனால் கால்களை அருகருகே சுலப அடிகள் வைத்து, நடப்பேன்.
c) மெதுவாக, முகத்தை அண்ணார்ந்து பார்த்து, உலகை இரசித்தவாறு நடப்பேன்.
d) மெதுவாக, தலை குனிந்து நடப்பேன்.
e) நத்தை /ஆமை வேகத்தில் நடப்பேன்.
--------------------------------------
3) நான் மற்றவர்களுடன் பேசும் பொழுது ...

a) கைகளைக் கட்டிக் கொண்டு பேசுவேன்.
b) என்னுடைய கைகள் / விரல்கள் ஒன்றையொன்று இறுகப் பற்றியபடி இருக்கும்.
c) இரண்டு கைகளுமோ அல்லது ஏதேனும் ஒன்றோ - (என்) இடுப்பின் மீது அல்லது பைகளுக்குள் ...
d) யாரிடம் பேசிக்கொண்டு இருக்கின்றேனோ அவரைத் தொட்டு அல்லது கைகளால் தள்ளியவாறு ..
e) என் கைகள் என்னுடைய காதையோ அல்லது முகத்தின் மீது அல்லது தலை முடியைத் துழாவியபடி இருக்கும்.
-----------------------------------------------

4) ஓய்வாக உட்கார்ந்திருக்கும் பொழுது கால்களை ...

a)ஒழுங்காக ஒன்றாக பக்கத்திற்கு ஒன்றாக மடித்து வைத்து ஓய்வெடுப்பேன்.
b) கால்களை ஒன்றின் மீது ஒன்று போட்டுக் கொண்டு - அல்லது கால்களை X வடிவில் வைத்துக் கொண்டு ...
c) கால்களை நேராக எவ்வளவு தூரம் நீட்ட முடியுமோ அவ்வளவு தூரம் நீட்டி வைத்துக்கொண்டு.. 
d) ஒரு கால் மடக்கி - என்னுடைய இருக்கைக்குக் கீழ்... 
--------------------------------------------
5)  ஒரு ஜோக் படிக்கும் பொழுது அல்லது சினிமா / தொலைக்காட்சியில் மனதுக்குப் பிடித்த காமெடி வரும்பொழுது ..

a) பெரிதாக வாய்விட்டுச் சிரிப்பேன். 
b) சிரிப்பேன், ஆனால் சத்தமில்லாமல் 
c) கேலிப் புன்னகை மட்டும் 
d) நாணிய வெட்கச் சிரிப்பு 
---------------------------------------------------
6) ஒரு விருந்துக்கு / கொண்டாட்ட விழாவிற்குச் சென்றால் ... 

a) மண்டபத்தில் நுழையும் பொழுதே எல்லோர் பார்வையும் கவனமும் என் மீது படும்படி சத்தமாக - பகட்டாக - பந்தாவாக நுழைவேன் 
b) சத்தமில்லாமல் நுழைந்து, தெரிந்தவர்கள் யாருடனாவது பேசிக் கொண்டிருப்பேன். 
c) சத்தமில்லாமல் நுழைந்து அமைதியாக இருந்து, நான் வந்தது போனது யார்க்கும் தெரியாமல் திரும்பி விடுவேன். 
-------------------------------------------------
7) மும்முரமாக, முனைப்பாக ஒரு வேலையில் ஈடுபட்டிருக்கின்றீர்கள். அப்போ யாரோ ஒருவர் வேலையைத் தொடர தடங்கலாக அமைகிறார். 

a) சரி நல்லது - வேலையை சிறிது நேர ஓய்வுக்குப் பின் (தடங்கல் அகன்ற பின்) தொடரலாம் என்று செயல் படுவேன். 
b) கன்னா பின்னாவென்று கோபப் படுவேன்.
c) சில சந்தர்ப்பங்களில் கோபம - சில சந்தர்ப்பங்களில் சந்தோஷ ஓய்வு - இப்படித்தான் என்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. 
-------------------------------------------------------------
8) உங்களுக்கு மிகவும் பிடித்த நிறம் எது? 


a) சிவப்பு அல்லது ஆரஞ்சு
b) கருப்பு
c) மஞ்சள் அல்லது இளம் நீலம்
d) பச்சை
e) அடர் நீலம் அல்லது ஊதா
f) வெள்ளை
g) பழுப்பு அல்லது சாம்பல்
---------------------------------------------------------------

9) இரவில், உறங்குவதற்காகப் படுக்கிறீர்கள். உறக்கம் உங்களை ஆட்கொள்ளும் முன்பாக, 

a) மல்லாந்து நேராகப் படுத்திருப்பீர்கள். 
b) குப்புறப் படுத்து, வயிற்றின் மீது எல்லா பளுவும் இருக்கும்படி படுத்திருப்பீர்கள் 
c) பக்கவாட்டில் படுத்து, சற்றே உடலை வளைத்து ..
d) தலைக்குக் கீழே ஒரு கை மடிந்திருக்கும்படி ...
e) தலையை நன்றாகப் போர்த்தியபடி ...

------------------------------------------------------------

10) அடிக்கடி உங்களுக்கு வருகின்ற கனவு: 

a) திடீர் திடீர் என்று மரத்திலிருந்தோ அல்லது உயரத்திலிருந்தோ கீழே விழுகின்ற கனவு. 
b) சண்டை இடுதல் / மூச்சுத் திணறுதல் 
c) யாரையோ அல்லது ஏதாவதொன்றை தேடுதல் 
d) இலகுவாகப் பறப்பது அல்லது காற்றில் மிதத்தல் 
e) கனவுகள் எதுவும் காண்பதில்லை - எப்பவாவது வரும் - ஞாபகம் இல்லை. 
f)  நிறையக் கனவுகள் வரும். எல்லாமே பெரும்பாலும் இனிய இன்பமயமான கனவுகள்தான். 


a
b
c
d
e
f
g
1














2














3














4














5














6














7














8














9














10















            
(நீங்கள் தேர்ந்தெடுத்த பதில்களை, சரியான வரிசையில் - கருத்துப் பிரிவில் பதிவு செய்யுங்கள். உதாரணம் :  a c e d b a c f e f  ) 
(விடைத் தாளுக்கு எப்படி மார்க் போட்டுக் கொள்வது என்று அடுத்த பதிவில் சொல்கிறோம்.)