21.9.11

உள் பெட்டியிலிருந்து ... 9 2011

                       

தத்துப்பித்துவம்...


    
சிறுவயதில்

பென்சில் உபயோகித்த நாம்

இப்போது பேனா

உபயோகிக்கிறோம்...

சிறுவயதில்(ன்)

தவறுகளை

அழிப்பது எளிது...
----------------------------------------
                 
நம்பிக் கெட்டவர் எவரையா? 

ஒருவனை நம்பினால் விளைவு எதுவாயினும் கடைசி வரை நம்புங்கள். கடைசியில் ஒன்று, உங்களுக்கு ஒரு நல்ல நண்பன் கிடைப்பான் அல்லது ஒரு நல்ல பாடம் கிடைக்கும்!

---------------------------------------

அறிவுடைமை
     
ஒரு பிசினஸ்மேன் தன்னுடைய மனைவிக்கு ஒரு விலையுயர்ந்த வைர அட்டிகையைப் பரிசாக அளித்தான். அவன் மனைவி அப்புறம் ஆறு மாதத்துக்கு அவனுடன் பேசவில்லை.

ஏன்?

அதுதானே ஒப்பந்தமே...!

------------------------------------------

நட்பின் கோபம்: அன்பின் முகவரி

இனி உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கோபமாகச் சொல்லிச் சென்ற நண்பன், அவ்வப்போது வந்து சொல்லி விட்டுப் போகிறான்: 

"இன்னும் கோபமாகத்தான் இருக்கிறேன்"

--------------------------------------

என்ன வித்தியாசம்? 

"உனக்கு நீச்சல் தெரியுமா?"

"தெரியாது"

"உன்னை விட நாய் தேவலாம். நாய் கூட நீந்தும்"
   
"சரி, உனக்கு நீச்சல் தெரியுமா?

"தெரியும்"

"உனக்கும் நாய்க்கும் என்ன வித்தியாசம்?"

-----------------------------------------------

ஐயோ பத்திகிச்சு ...!

காதலில் விழுந்த பெண், காதலனை தந்தைக்கு அறிமுகப் படுத்த எண்ணி, மூன்று பேரை அழைத்துச் சென்று தந்தையைச் சந்திக்க வைத்தாள். அவர்கள் சென்றதும் இதில் யாரை அவள் விரும்புகிறாள் என்று அவருக்குத் தெரியுமா என்று கேட்டாள். 


தந்தை சொன்னார்: 

"அந்த ரெண்டாவதா இருந்தானே அவன்தானே..."

ஆச்சர்யத்திலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த பெண் கேட்டாள் "எப்படி கரெக்டாக் கண்டு பிடிச்சீங்க...?"

"சிம்பிள்... மூன்று பேர்ல அவனைப் பார்த்தாத்தான் எனக்கு அதிகமா பத்திகிட்டு வந்தது.."
    
-------------------------------------------

இதெல்லாம் சகஜமப்பா...

புதிதாய்த் திருமணம் ஆன பெண் தன் அம்மாவிடம் தொலைபேசியில்,

"அம்மா... இன்னிக்கி எனக்கும் அவருக்கும் பயங்கர சண்டை ஆயிடிச்சிம்மா..."

"கண்மணி... புதுசா கல்யாணம் ஆனவங்க நடுல சண்டை சகஜம்தான் கண்ணம்மா... கவலைப் படாதே..."

"அது சரி, புரியுதும்மா...  பாடியை என்ன செய்ய...?"
    
---------------------------------------------
                          

20.9.11

ஜே கே - 20. சமூக சேவையும் தன்னை அறிதலும்.

                    
உள்ளத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதனே உண்மையில் புரட்சியாளன். உயர்ந்த லட்சியங்களைக் கொண்ட மனிதனோ அல்லது தன்னுடைய உண்மையான நிலையிலிருந்து தப்பிக்க விரும்பும், இதயத்தில் துயரம் நிறைந்த மனிதனோ புரட்சியாளன் அல்ல. தமக்கென்று பல உடைமைகளைக் கொண்டவனை இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த மனிதன் என்று நான் கூறவில்லை. உள்ளத்திலும், இதயத்திலும் மகிழ்ச்சியும், களிப்பும் நிறைந்த மனிதனே உண்மையில் சமய உணர்வுள்ள மனிதன். இதயத்தில் மகிழ்ச்சி நிறைந்த இப்படிப்பட்ட சமய உணர்வுள்ள மனிதன் வாழும் முறையே சமூகத்திற்கு அவன் செய்யும் சேவையாகும். 

ஆனால் உலகில் உள்ள பல ஆயிரக்கணக்கான சமூக சேவகர்களைப் போல நீங்களும் மாறினால் உங்கள் இதயத்தில் களிப்பு இருக்காது. உங்களிடம் உள்ள பணத்தை ஏழை எளியோருக்கு தானமாக அளிக்கலாம், மற்றவர்களையும் அவர்களுடைய பணத்தையும் செல்வத்தையும் உங்களுடைய தூண்டுதலினால் ஏழை, எளியோருக்குத் தருமாறு வற்புறுத்தலாம். இந்த சமூகத்தில் பல பிரமிக்கத் தக்க, அற்புதமான சீர்திருத்தங்களை நீங்கள் கொண்டு வரலாம். ஆனால் உங்கள் இதயம் சாரமில்லாமல், வெறுமையாக இருக்கும் வரை, உங்கள் மனதில் கோட்பாடுகளும், அர்த்தமற்ற கருத்துகளும் நிறைந்திருக்கும்வரை, உங்கள் வாழ்வு மந்தமாகவும், தளர்ச்சியைடைந்தும், களிப்பில்லாமலும் இருக்கும். ஆகவே, நீங்கள் முதலில் உங்களை, அதாவது உங்கள் மனதைப் புரிந்து கொள்ளுங்கள். அந்தத் 'தன்னை அறிதல்' என்பதிலிருந்து சரியான செயல் உங்களிடமிருந்து எழும்.   




                            

19.9.11

சி மு வா? சி பி யா?



அதெல்லாம் சரி, நாங்க கேக்கறதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். 

இதில் உள்ள பெண்ணின் படம், பியூட்டி பார்லரில் நுழைவதற்கு முன் எடுக்கப்பட்டதா அல்லது வெளியே வரும்பொழுது எடுக்கப்பட்டதா? 

யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்கள். 




17.9.11

படிப்பது செய்தி... அடிப்பது அரட்டை...






நாகை மாவட்டம் சீர்காழியில் லுத்தரன் மிஷன் மேல்நிலைப் பள்ளியில் ப்ளஸ் ஒன் மற்றும் ப்ளஸ் டூவுக்கு தமிழ்ப்பாடம் எடுக்கும் முதுநிலைத் தமிழாசிரியர் ஒருவருக்கு சென்ற வருடம் திடீரென கண் பார்வை பறி போய் விட, மருத்துவச் சான்றிதழ் பெற்று அவரை வேலையை விட்டே தூக்கியதாம் பள்ளி நிர்வாகம். கோர்ட்டில் பாதிக்கப்பட்டவர் முறையிட, கோர்ட் தலையிட்டு பார்வை பறி போனதால் பயிற்றுவிக்கும் திறமை பறி போனதாக அர்த்தமில்லை, கடைசி வருடமும் அவர் திறமையில் தேர்ச்சி விகிதம் நன்றாகவே இருக்கிறது, மேலும் அரசு மாற்றுத் திறனாளிகளுக்குக் காட்டும் பரிவையும் மனதில் வைத்து வேலை நீக்கம் செல்லாது என்று தீர்ப்பளித்து இருக்கிறது. ஒரு உதவியாளர் உதவியுடன் அவர் நன்றாகவே பாடம் நடத்துகிறாராம். இது செய்தி.

எனக்குத் தெரிந்த நண்பரின் பையனுக்குப் பிறவியிலிருந்தே கண் பார்வை கிடையாது. அவர் பெற்றோர்கள் கவனிப்பிலும் பரிவிலும் படித்து முன்னேறியவர் தான் படித்த பள்ளியிலேயே சில காலம் ஆசிரியராக இருந்தவர் (குரோம்பேட்டை சுந்தரவல்லி) தற்சமயம் அரசுக் கல்லூரியில் விரிவுரையாளராக இருக்கிறார். இந்தச் செய்தி படித்ததும் அவர் நினைவு வந்தது. அவர் தனக்குப் பார்வை தெரியாததை ஒரு குறையாகவே உணர்ந்ததில்லை. பார்ப்பவர்களையும் உணர வைத்ததில்லை.

=========================================
Brain Pacemaker Holds Promise for Untreatable Depression
பாகிஸ்தான் நோயாளிக்கு மூளையில் பேஸ் மக்கர்....செய்தி.

பாகிஸ்தான் என்று இல்லை உலக மக்கள் அனைவரின் இதயத்திலுமே பீஸ் (peace) மேக்கர் என்று பொருத்தப் படும்..?

=========================================


வெளிச்சந்தையில் விற்கப்படும் பொருட்களின் தரத்தை விட இலவசப் பொருட்களின் தரம் மேம்பட்டு இருக்கிறதாம். செய்தி.மிக்சியில் 550 வாட்ஸ் மோட்டார், டேபிள் டாப் கிரைண்டரில் 150 வாட்ஸ் மோட்டாரும் பொருத்தப் பட்டுள்ளதாம். கிரைண்டரில் வெளிச்சந்தையில் 80 முதல் 120 வாட்ஸ் வரைதான் மோட்டார் பொருத்தப் பட்டிருக்குமாம். மேலும் வெளிச்சந்தை க்ரைண்டர்களில் 0.5% நிக்கல் இருக்க, இலவச க்ரைண்டர்களில் 4% நிக்கல் இருக்கிறதாம். செய்தி சொல்கிறது.


கூடவே மற்றொரு செய்தி பயனாளிகளுக்கு வழங்கப் பட்ட இலவச ஆடுகளில் நான்கு இறந்து விட்ட னவாம்.
==============================================


ரயில் விபத்து விசாரணை ஆரம்பம். டிரைவர் தவறா, சிக்னல் கோளாறா...?

பயணம் செய்தவர்களின் ஜாதகக் கோளாறு!
===============================================

star wars star, two suns, double planet
இரண்டு சூரியன்களைச் சுற்றும் கிரகம் ஒன்றை விஞ்ஞானிகள் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.அந்த கிரகம் இரண்டு சூரியனையும் சுற்ற 229 நாள் எடுக்கிறதாம். இரண்டு சூரியன்களும் தன்னைத் தானேயும் சுற்றுவதால் 20 நாட்களுக்கு ஒருமுறை கிரகணம் வருகிறதாம். இரண்டு சூரியனும் ஒரே திசையில் இருப்பதால் வழக்கம் போல பகலிரவாம். தூரத்தைக் கேட்டால் ஸ்பெக்ட்ரம் ஞாபகம் வருகிறது! . 200 ஒளி வருடங்கள். அதாவது ஏறத்தாழ ஒன்பதரை லட்சம் கோடி ஒளி வருடங்களாம்.

=================================================

பத்மநாபசுவாமி கோவில் ஆறாவது அறையை இப்போது திறக்க வேண்டாம் என்று நீதிமன்றம் சொல்லி விட்டது. தேவப்ப்ரச்னம் சொல்லிய இயற்கைக்கு மீறிய காரணங்களால் இல்லாமல், தேவையின்றி இப்போது திறக்க வேண்டாம் என்பதாலேயே இந்தத் தீர்ப்பு என்று சொல்லியுள்ளது நீதிமன்றம்.

=================================================

பைக் விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனின் பதினெட்டு வயது மகன் மரணமடைந்தது ஒரு சோகம்.
====================================================

இந்தியாவின் சுவர் என்று அழைக்கப் படும் ஸ்டைலிஷ் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் ஒரு நாள் போட்டியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார். அவரின் அழகிய ஆட்டம் என்றும் நினைவில் நிற்கக் கூடியது.

==================================================






பாதுகாப்பு விஷயத்தில் எந்தவித சமரத்துக்கும் இடமில்லை - பிரதமர்.

ஒவ்வொரு விபரீதமும் நடந்த பிறகு இந்த பதில் ஆட்டோ ஜெனேரெட் ஆகும் வண்ணம் செட் செய்து வைத்திருப்பார்கள் போலும்.

=============================================

பீகாரில் (என்று ஞாபகம்) போலீஸ் ஸ்டேஷன் எதிரே போராட்டம் நடத்திய பெண்களை போலீஸ்காரர்கள் துரத்தித் துரத்தி லத்தியால் அடித்துத் துவைத்ததை சில செய்திச் சேனல்களில் பார்க்க முடிந்தது. கொடுமை.

=============================
                       
படங்கள் உதவி : நன்றி கூகிள்.   
                    
                             

15.9.11

பாடல்கள் - பாடகர்கள் ஆராய்ச்சி - வெட்டி அரட்டை


                      
சந்திரபாபு அடிப்படையில் நடிகர். பாடல்களும் பாடுவார். ஒரு படத்தில் (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) ஒரு பாடலுக்கு சிவாஜி கணேசனுக்குக் குரல் கொடுத்திருப்பார்.

  
கமலஹாசன் நடிகர். பாடுவார். அவர் வேறு நடிகர்கள் இரண்டு பேருக்கு பாடல்கள் பாடியிருக்கிறார். (யார், யார் தெரியுமோ?)
    


இந்தக் காலத்தில் நிறைய பாடகர்கள் வந்து விட்டார்கள். பிரசன்னா,கார்த்திக், திப்பு, நரேஷ் ஐயர், ஆலாப் ராஜு (இந்தப் பெயர் கேள்விப் பட்டிருக்கிறீர்களா...இவர் பாடிய - எனக்குத் தெரிந்து - இரண்டு பாடல்களும் ஹிட்) இன்னும் என்னென்னவோ பெயர்களில்... எந்தப் பாடலை யார் பாடியது என்று கண்டு பிடிக்க முடிவதில்லை. ஹரிஹரன் விதிவிலக்கு. (அவரை 'இந்தக்கால' லிஸ்ட்டில் சேர்க்க முடியாது). பெண் பாடகிகள் கொஞ்சம் விதிவிலக்கு. ஸ்ரேயா கோஷல் குரலை எளிதாக அடையாளம் காண முடிகிறது. ஹரிணி கஷ்டம். பிரசாந்தினி, சங்கீதா  மோகன் என்றெல்லாம் பெயர் சொல்கிறார்கள். ஊ.... ஹூம்...!
  
முந்தைய கால கட்டங்களில் இந்தப் பாடல் mkt பாகவதர் பாடியது, இது பி யு சின்னப்பா பாடியது என்றோ டி எம் எஸ், எஸ் பி பி பாடியது என்றோ எளிதாகக் கண்டு பிடிக்கலாம். அப்போதும் கூட சில இரட்டைக் குரல்கள் உண்டு... டி எம் எஸ் க்கு போலியாக ஒரு கோவை சௌந்தரராஜன். மனோ பாடியதையும் எஸ் பி பி பாடியதையும் குழப்பிக் கொள்கிறவர்கள் உண்டு. எஸ் பி பிக்கும் மலேசியா வாசுதேவனுக்குமே வித்தியாசம் தெரியாமல் குழம்புபவர்கள் உண்டு. அடுத்த குழப்பம் கே ஜே யேசுதாஸ் - ஜெயச்சந்திரன் பாடிய பாடல்கள். (எனக்குக் குழப்பம் இருந்ததில்லை!). இந்த இரட்டைக் குழப்பம் பெண் குரலில் இருந்ததில்லை என்று நினைக்கிறேன்!

   
மதுரை சோமுவும் பித்துக்குளி முருகதாசும் ஒரே ஒரு திரைப் பாடல்தான் பாடியிருக்கிறார்கள், தெய்வம் படத்தில்.   
ஜி ராமநாதன், கே வி மஹாதேவன் காலத்துக்குப் பிறகு வந்த இசை அமைப்பாளர்கள் எல்லோரும் ஒரு பாடலாவது பாடியிருக்கிறார்கள். மிகச்சில விதிவிலக்குகள்.  

   
தமிழ் பாடகர்கள் முழுநீள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். டி எம் எஸ், எஸ் பி பி, சீர்காழி கோவிந்தராஜன், மனோ.
     
சில பாடல்கள் முதலில் வரும் வரிகள் ஓரிரண்டு மாற்றப் பட்டு பின்னர் வேறு வரிகளுடன் பாடப் படுவதைக் கேட்டிருக்கிறீர்களா... கொஞ்ச நாள் முன்பு இந்தப் பதிவில் பகிர்ந்த நாளை நமதே பாடல், 'என்னை விட்டால் யாருமில்லை'பாடலையே எடுத்துக் கொள்வோம். சரணத்தில் ஓரிடத்தில் "ஆனையின் தந்தம் கடைந்தெடுத்தாற்போல் அங்கமெலாம் ஓர் மினுமினுப்பு...அரச மரத்தின் இலைகளில் ஒன்று வந்து நின்றார்போல் ஒரு நினைப்பு" என்பது ஒரிஜினலாக பல வருடங்கள் இருந்த வரி. பின்னர் இந்த வரியில் மாற்றம் செய்யப் பட்டு அரசமரத்தின் இலை 'அழகர் மலையின் இலைகளில் ஒன்றா'க மாறியது!

'எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா...' இது ஒரிஜினல் பாடல். இன்னும் சில கேசட்களில் கூட ஒரிஜினல் வடிவம் இருக்கலாம். பருவம் என்பதில் என்ன தவறு கண்டார்களோ... சில வருடங்களுக்குப் பிறகே லேட்டாக பருவம் என்பதை பார்வையாக மாற்றி விட்டார்கள்...! 'எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா....ராதா...' 
  

ஆனால் இதே பருவம் என்ற வரிகளைக் கொண்ட வேறு பல பாடல்கள் இருக்கின்றன. அவைகள் எல்லாம் மாற்றப் படவில்லை. மலர்கின்ற பருவத்திலே, பருவத்தின் வாசலிலே, கன்னிப் பருவத்திலே என்றெல்லாம் படங்களே வந்தன. இங்கெல்லாம் பார்வையை சப்ஸ்டிடியூட் செய்தால் எப்படி இருக்கும். பருவ காலம் என்றொரு படம். பழைய படம். அப்போதே வந்ததுதான். அதையும் மாற்ற வேண்டாமா...! அந்தப் படத்தில் மாதுரி (என்று ஞாபகம்) பாடிய இனிய பாடல் ஒன்று உண்டு. "வெள்ளி ரதங்கள் அழகு மேகம்.. செல்லும் வீதி சிவந்த வானம்... பாவை நெஞ்சின் இளைய ராகம் பாட வந்தது பருவ காலம்.." ரசிக்கக் கூடிய பாடல்.

'நான் ஆணையிட்டால்...' இது 'எங்க வீட்டுப் பிள்ளை' எம் ஜி ஆர் படப்பாடல். அதில் ஒரு வரி. "எதிர்காலம் வரும் என் கடமை வரும்.. இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்.." என்பது ஒரிஜினல். மாற்றப்பட்ட வரி 'இந்த கூட்டத்தின் ஆட்டத்தை முடிப்பேன்'
  

ஏன்? என்ன சாதித்தார்கள் இந்த வரிகளை மாற்றி? அதை விட சில வருடம் கழித்து மாற்றினாலும் குரலின் தன்மை, ஸ்ருதி மாறாமல் பாடகர்களை மாற்றிப் பாட வைத்து இந்த வரிகளை மட்டும் எப்படி மாற்றி சேர்க்க முடிந்தது?  
                    
பாடல் வரிகள் அல்லது வார்த்தைகள் மாற்றுவது ஒரு புறம் இருக்கட்டும்; ஒரு படத்தின் ஒரு பாடல் - இசைத்தட்டில் சூப்பரான பின்னணி இசை. ஆனால் படத்தில் கேட்கும்பொழுது, பாடலின் பின்னணி இசை மாற்றப்பட்டு,கலரை எடுத்துவிட்டு கரி பூசினாற்போல செய்யப்பட்டது. எந்தப் படம், என்ன பாடல்? (ஏன்?) யாருக்காவது தெரியுமா? 
         

14.9.11

'கே'யைத் தேடி - புத்தகம்

                   
அப்படி இப்படி என்று ரொம்ப நாட்களாக ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த கதாசிரியர், கடைசி மூன்று அத்தியாயங்களை, புத்தகத்தில் சேர்த்து, (பக்கம் எண் 44, 45 & 46 to 49) கதை - அதை முடித்துவிட்டார். 

அதை நாங்களும் இங்கே வெளியிட்டுவிட்டோம். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும், வாசகர்கள் எழுதிய கருத்துரைகளையும், அந்தந்த அத்தியாயத்திற்கு இறுதியில் அப்படியே வெளியிட்டுள்ளோம். ஏற்கெனவே தொடர் வெளியானபொழுது விடாமல் படித்த விடாக் கண்டர்கள், நேராக பக்கம் எண் 44 சென்று, அத்தியாயம் பதினான்கு முதல் தொடர்ந்து படிக்கலாம். பயப்படாதீர்கள் - பக்கம் எண் நாற்பத்து நான்கு முதல் நாற்பத்தொன்பது வரையிலும்தான் புத்தகத்தில் உள்ளது. 

இந்த ஸ்க்ரிப்ட் (Scribd)  ஜன்னலில் ஒரு சவுகரியம் - அதிக இடம் பிடித்துக்கொள்ளாது; விருப்பப்பட்ட பக்கம் படிக்க, கீழே உள்ள ஜன்னலில், சரியான பக்க எண் கொடுத்து சொடுக்கினால், அந்த பக்கம் ஜன்னலில் வரும். இங்கே படிக்க நேரம் இல்லாதவர்கள், மொத்த புத்தகத்தையும் தரவிறக்கம் செய்து, பென்-டிரைவில் காபி செய்து எடுத்துக்கொண்டு, பிறகு உங்கள் கணினியில் நேரம் கிடைக்கும்பொழுது படித்துக் கொள்ளலாம். 

உங்கள் கருத்துகள் மிகவும் வேண்டி, விரும்பி வரவேற்கப்படுகின்றன. 
நன்றி.
வணக்கம். 


எப்படியாவது தப்பிக்கவேண்டும்