நம்ம வூடுதான்! உள்ள வாங்க! படிங்க! படிங்க!! படிச்சுகிட்டே...இருங்க! வலை உலகிலே "எங்கள்" புதிய பாணி!
9.12.11
6.12.11
எட்டெட்டு ப 6:: பிங்கியால் வந்த வினை.
ஆவி மாயா கூறிய கதை தொடர்கிறது.
பிங்கி என்னை விட, குறைந்தது பத்து வயதாவது சிறியவளாக இருப்பாள். அவள் எங்கள் வாழ்க்கையில் நுழைந்த நாள் எனக்கு இன்னும் பசுமையாக ஞாபகம் இருக்கின்றது. ஓ ஏ என்னைக் கல்யாணம் செய்துகொள்வதற்கு ஓரிரு வருடங்களுக்கு முன்பு 'மாயா மேம்சாப்' என்று ஒரு இந்திப் படம் ரிலீசாகி, வட மாநிலங்களில் பரவலாக பேசப்பட்டது.
அந்தப் படத்தில் வேலை செய்த குழுவினரில் சிலர், வேறொரு படம் எடுப்பதற்காக இந்தூர் வந்திருந்தனர். லொகேஷன் தேர்வு, கதை டிஸ்கஷன், இந்த ஹோட்டலில்தான் நடந்தது. ஓட்டலின் சொந்தக்காரர் என்ற வகையில், ஓ ஏ யும் அந்தக் கூட்ட கோலாகலங்களில் அவ்வப்போது கலந்து கொண்டார். அந்தக் குழுவினருடன் வந்திருந்த டீன் ஏஜ் பெண்ணாகிய பிங்கி எல்லோருடைய கவனத்தையும் கவர்ந்தாள். மிகவும் அழகு, மிகவும் சூட்டிகையான பெண். படத்தின் டைரக்டர், அவளை ஓர் அனாதை இல்லத்திலிருந்து, கண்டு பிடித்து, அடுத்த படத்தில் நடிக்க வைக்க அழைத்து வந்திருந்தார்.
பிங்கி ஓ ஏ மனதையும் கவர்ந்து விட்டாள். எங்கள் வீட்டிற்கும் ஓ ஏ அவளை அழைத்து வந்தார். என்னை 'மாயா மேம்சாப். என்று வேடிக்கையாக அறிமுகம் செய்து வைத்தார் ஓ ஏ. பிங்கி என்னை 'அக்கா' என்று அழைக்கத் தொடங்கினாள். அடிக்கடி வந்தாள். ஓ ஏ, அவளை தத்து எடுத்துக் கொள்ளலாமா என்று என்னிடம் கேட்டார். அக்கா என்று கூப்பிடுகின்ற பிங்கி அம்மா என்று என்னைக் கூப்பிட்டால், எனக்கும் சந்தோஷமே. ஆனால் ஓ ஏ யின் அப்பா, இந்தத் திட்டத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை. சினிமா சம்பந்தப்பட்ட பெண் யாரும் இந்தக் குடும்பத்தில் நுழையக் கூடாது என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.
பிறகு பிங்கி எங்கள் வீட்டுக்கு வருவது குறைந்து போய், அடியோடு நின்று போனது. ஓ ஏ யின் ஆலோசனையில் அவள் அந்தப் படக்குழுவிலிருந்து விலகி விட்டாள். அதற்கு முன்போ அல்லது பிறகோ அவள் எந்த சினிமாவிலும் நடிக்கவில்லை. ஓ ஏ அவளுடைய படிப்புக்கு நிறைய பண உதவிகள், என்னைக் கலந்தாலோசித்து, செய்தார். கல்லூரிப் படிப்பு, கம்பியூட்டர் படிப்பு என்று ஏதோதோ படித்த பிங்கி, இந்த ஹோட்டலிலேயே தங்கிக் கொண்டு, என் கணவரின் பி ஏ போல ஹோட்டல் பிசினெஸில் அவளால் முடிந்த உதவிகளை என் கணவருக்கு செய்து கொண்டு இருந்தாள்.
மாமனார் அவருடைய எண்பத்தைந்தாவது வயதில் ஒருநாள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அதுவரை ஹோட்டல் வேலை உண்டு, வீடு உண்டு என்று இருந்து கொண்டிருந்த ஓ ஏ, மும்பையில் ஹோட்டல் கட்டுகின்ற திட்டம் ஒன்றில் முழு மூச்சாக ஈடுபட்டார். மும்பைக்கும் இந்தூருக்கும் அடிக்கடி விமான பயணம் மேற்கொண்டார். அப்பொழுதெல்லாம் அவருடன், பிங்கிதான் சென்று வந்துகொண்டு இருந்தாள்.
ஊரில் இருந்தால், ஓ ஏ சாப்பிட, உறங்க, வீட்டுக்கு வருவார். மும்பை சென்றிருந்தால், இரண்டு மூன்று நாட்கள், வீட்டுப் பக்கமே வரமாட்டார். வீட்டில் நிறைய வேலைக்காரர்கள், அவ்வப்போது வந்து தங்கி ஊர் சுற்றிப் பார்க்க, வைத்தியம் பார்த்துக் கொள்ள என்று அவருடைய தூரத்துச் சொந்தக்காரர்கள் என்று வீட்டில் ஏழெட்டுப் பேர்கள் எப்பொழுதுமே இருப்பார்கள். மாமனார் உயிருடன் இருந்த சமயத்தில், எல்லோருமே அவர் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்டு நடந்து கொண்டனர். மாமனாரின் மறைவுக்குப் பின், ஓ ஏ யுக்கும், எனக்கும் அந்த மரியாதை கொடுத்தனர்.
ஓ ஏ - நான் இடுகின்ற வேலைகளை கவனிக்க காலு சிங்கை என்னுடைய சிறப்புப் பணியாளாக நியமித்திருந்தார். அதே போல அவர் ஊரில் இருந்தால் அவருக்கு வேண்டியவைகளை கவனித்துக் கொள்வதும் காலு சிங்கின் வேலை. எங்கள் வீட்டுக்கும் இந்த ஹோட்டலுக்கும் நான்கு கிலோ மீட்டர் தூரம். ஓ ஏ யுடனேயே காரில் அவன் வீட்டுக்கும் ஹோட்டலுக்கும் அலைவது வழக்கம். சில நாட்களில் காலு சிங் மட்டும் கூட காரில் வந்து, என் கணவருக்கு வேண்டியவைகளை எடுத்துச் செல்வான். காலு சிங் எங்கள் இருவர் மீதும் எக்கச் சக்கமான எஜமான விசுவாசம் வைத்திருந்தான். எங்கள் இருவர் முன்பும் உட்காரக் கூட மாட்டான்.
அவன் ஒரு நாள், தயங்கித் தயங்கிக் கூறிய செய்தி கேட்டவுடன், என் தலையில் இடி விழுந்த மாதிரி ஓர் உணர்வு ஏற்பட்டது.
(தொடரும்)
5.12.11
தேவ் ஆனந்த்
ஹிந்தித் திரையுலகின் காதல் மன்னன், என்றும் பதினாறு, மார்க்கண்டேயன் என்றெல்லாம் அழைக்கப் பட்ட தேவ் ஆனந்த் நேற்று தனது எண்பத்தெட்டாவது வயதில் லண்டனில் காலமானார். இந்த வருடம் கூட 'சார்ஜ்ஷீட்' என்ற பெயரில் ஒரு படம் வெளியிட்டு விட்டு அடுத்த படத்தை யோசிப்பதற்காக ஒரு சிறிய இடைவெளி ஏற்படுத்திக் கொண்டு லண்டன் சென்றாராம்.
தமிழ்நாட்டிலும் எங்களைப் போன்ற பல ரசிகர்கள் அவர் நடித்த படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறோம். அவர் படங்களில் இடம்பெற்ற சில பாடல்களைப் பதிவில் காட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.
இந்தப் பாடலைக் கேட்ட நினைவு உள்ளதா....? தமிழில் இந்த மெட்டை சூட்டோடு சூடாக காபி செய்து விட்டார்கள்!
இப்போது பார்த்த பாடல் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் வரும் பாடல். இதில் வரும் வேறு இரு பாடல்கள் எங்கள் ப்ளாக் பதிவில் ஏற்கெனவே வந்து விட்டதால் இந்தப் பாடலை இணைக்கிறோம்.
தேவ் ஆனந்த் மிசா காலத்தில் இந்திரா காந்தியை எதிர்த்து கிளர்ச்சிகள் செய்ததும் ஒரு கட்சி ஏற்படுத்திக் கலைத்ததையும் செய்திகள் சொல்கின்றன.
ரஃபியின் குரலில் ஒரு இனிய பாடல். இது கூட தமிழில் நகல் எடுக்கப் பட்டுள்ளது. அதுவும் சமீபத்தில் என்ன பாடல் தெரியுமோ....?
'கைட்' திரைப் படத்தில் வரும் பாடல். எவர் க்ரீன் ஹீரோ தேவ் ஆனந்த் போல எவர் க்ரீன் பாடல் இது. கிஷோரின் இனிய குரலும் எஸ் டி பரமனின் இசையும் மயக்கும் தன்மை கொண்டது.
இந்தப் பாடலைக் கூட தமிழில் திறமையாக காபி செய்திருக்கிறார்கள். சரணத்தில் காபி செய்த பாடல் நினைவுக்கு வரும். இந்தப் படத்தில் 'பன்னா கி தமன்னா' பாடலை பதிவில் இணைக்க நினைத்திருந்தும் இந்தத் தகவலுக்காக இந்தப் பாடலை இணைத்துள்ளோம்!
1946 முதல் நடித்து வந்தாலும் 110 படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது ஒரு ஆச்சர்யம்.
4.12.11
2.12.11
ஜேகே 23 - சிந்தனைப் புரட்சி
தர்க்க வழி மார்க்கத்தையோ, மதவழி மார்க்கத்தையோ அல்லது சாராம்சமில்லாத விவாதத்தையோ உங்களுக்குப் பிரச்னைகளிடமிருந்து தப்பித்துக் கொள்ளும் வழியாக நான் சொல்லியிருந்தால், அது பொறுப்பற்ற செயலாகும், இல்லையா? ஆனால் இந்த நாட்டில் மட்டுமின்றி, உலக சமய வல்லுனர்கள் நம்மைத் தளைப் படுத்துகிறார்கள். சமூக் நியதிகள் நம்மைத் தளைப் படுத்துகின்றன. சமூகத்தின் பகுதியாயிருக்கும் நடத்து குடும்பமும் நம்மைத் தளைப் படுத்துகின்றன. சமயம், சமூகம் மற்றும் குடும்பம் விதிக்கும் தளைகள் எல்லாம் கடந்த காலத்தின்பாற்பட்டவை. ஆக, தனி மனிதன் என்று எவரும் இல்லை என்ற உண்மை மிகவும் சுவாரஸ்யமான ஒன்றாய் இருக்கிறது. பொது நீர்த் தேக்கத்திலிருந்து அனைவரும் தண்ணீரைப் பெறுவது போல, தனி நபரின் மனம், சமய, சமூகக் கட்டுப்பாடுகளின் அடிப்படியில் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் விதமாகவே தன் செயலைத் தீர்மானிக்கிறது. ஆக, தனி நபருக்கும் சமூகத்திற்கும் இடையே உள்ள பிரிவு பொய்யானது. தளைபடுத்தப்படுதல் ஒன்று மட்டுமே உள்ளது.
நிகழ் காலத்திலும் கடந்த காலத்திலும் எதிர்காலத்திலும் நம்மைத் தளைப்படுத்தும் காரணியாக இருப்பது 'நான், எனது' என்ற எண்ணம்தான். அதே எண்ணம்தான் இப்போது தளைகளிலிருந்து நமக்கு விடுதலைப் பெற்றுத் தர முயற்சிக்கிறது. ஆக, நான், எனது என்ற எண்ணம்தான் அனைத்துத் தளைகளுக்கும் ஆணிவேராய் இருக்கிறது. 'நான், எனது' என்ற எண்ணம், கடந்த காலத்தின் சாரம், அதுவே காலம், அதுவே துக்கம் - அது, தன்னை, தன்னிலிருந்து விடுவிக்கப் பெருமுயற்சி செய்கிறது.
'நான், எனது' இல்லா விட்டால் நீங்கள் தளை படாதவர். தளைப் படாததால் நீங்கள் யாருமில்லை, ஒன்றுமில்லை.
குறிப்பிட்ட ஒன்றாக ஆக வேண்டுமென்ற முயற்சியானது தளைப் பட்டிருப்பதன் செயலாக, தாக்கமாக இருக்கிறது.
30.11.11
அண்ணே....ஒரு நிமிஷம்ண்ணே...
இந்த சினிமாப் பாட்டெல்லாம் இருக்கு பாருங்க.... அது எதனால நமக்குப் பிடிச்சிப் போச்சுன்னு காரணமே சொல்ல முடியாது. பாட்டு இலக்கியத் தரமா இருக்கணும், அப்பத்தான் பிடிக்கும், அதுதான் பிடிக்கும்னும் ஒண்ணும் வரையறை யாரும் வச்சிக்கவும் முடியாது இல்லீங்களா.... என்ன சொல்றீங்க...?
இப்பக் கூடப் பாருங்க... இந்தக் கொலைவெறிப் பாட்டு படுத்தற பாட்டை... என்னங்க இருக்கு அதுல... தூ... நானும் டெய்லி நாலஞ்சி தரம் கேட்டுப் பார்க்கறேன்... எத்தக் கண்டு அதை ரசிக்கிறாங்கன்னே தெரியல... இருங்க இன்னொரு தரம் அதக் கேட்டுடறேன்...
ஆனா ஒண்ணுங்க... எனக்கும் இந்த 'அண்ணன் என்னடா தம்பி என்னடா, உன்னைச் சொல்லிக் குத்தமில்லை, சட்டி சுட்டதடா' பாட்டெல்லாம் பிடிக்கும்ண்ணே...
நடுல பேசறதுக்கு சம்பந்தமில்லாம பாட்டெல்லாம் வந்தா கண்டுக்காதீங்கண்ணே... இந்த மீனாச்சி மேடம் கவனியுங்கன்னு சொல்லி ஞாபகப் படுத்தினாங்களாம் அதனால சில பாட்டுப் போடலாம்னு... எதாவது பாட்டப் போட்டு சும்மா வெட்டி அரட்டை அடிக்கலாம்னுட்டுதான்....
கர்நாடக சங்கீதம்தான் பிடிக்கும், அதுதான் ஒசத்தின்னு சொல்றவங்களுக்குக் கூட ஒண்ணு ரெண்டு கூத்தாடிப் பாட்டாவது பிடிச்சிருக்கும்..! (அவிங்க அப்படித்தான் சொல்வாங்கண்ணே ) சிமினா ச்சே.. ஸ்லிப் ஆஃப் தி டங்.... சினிமா பாட்டு ரசிக்கறவங்களுக்கும் ஒண்ணு ரெண்டு கர்நாடிக் மியூசிக்காவது பிடிச்சிருக்குமண்ணே கொறஞ்ச பட்சமா ஒரு 'குறை ஒன்றும் இல்லை'யாவது ரசிப்பாங்க...... அதுக்குக் கூட இந்த 'என்னன்னு தெரியாமப் பிடிச்சிப் போறது'தான் காரணம்ண்ணே... எல்லா பய புள்ளங்க மனசுக்குள்ளயும் குறை இருக்கும். அதாண்ணே.ஃபீலிங்கு..... குறை இல்லாத - அட மனக் குறையை சொல்றேண்ணே... - மனுசங்க யார் இருக்கா சொல்லுங்க பார்ப்போம்... அதை மறைச்சிகிட்டு தியாகம் பண்றாங்களாம்.... அதுக்கு இந்த மாரிப் பாட்டு உபயோகமா இருக்குமில்லே... பாசக்காரப் பயலுகளா வேசக்காரப் பயலுகளா... என்ன பார்க்கறீங்க... நான் அப்படித்தான்ண்ணே.. அப்பப்போ நம்ம வாய்ல இப்படி வந்துடும்ண்ணே...
இவரப் பாருங்க... மகாராஜபுரம் சந்தானம் பாடின பாட்டு சேர்த்துடுங்கன்னு சொன்னா அவர் பாடினது கிடைக்கலை, அதே பாட்டுதான்.. இதான் கெடச்சுது' ங்கறாரு ...
ஏதோ ரசிக்கிறோம் இல்லை.... விடுங்கண்ணே.. கதை எங்கியோப் போகுது பாருங்க... இதுதான் என் வீக்நெஸு..
பாட்டு பாலிடிக்ஸ் நமக்கு வேணாம்ண்ணே.. மனசுக்குப் பிடிச்சா எல்லாம் நல்ல சங்கீதம்தான்... என்னன்றீங்க... பாட்டு பிடிக்க அது நம் மனச ஏதோ ஒரு விதத்துல, ஏதோ ஒரு இடத்துல தொடணும் இல்லை? இல்லீங்க... சில சமயம் சில பாட்டு அது கூட அவசியமில்லாமப் பிடிச்சிப் போகுத்ண்ணே... என்ன சொல்றீங்க... இருங்க... நான் சொல்ல வந்த விஷயம் வேறண்ணே...
முதல்ல பிடிக்காத பாட்டு ஒண்ணு இருக்குன்னு வச்சிக்கோங்க... அது பிடிச்சிப் போக வேறு ஒரு காரணம் இருக்கும். சில சமயங்கள்ல சில பாட்டுகள்ண்ணே... எப்பவும் இல்ல... சண்டைக்கி வராதீக....
உதாரணத்துக்கு 'மேகம் கருக்குது மழை வரப் பார்க்குது'ன்னு ஒரு பாட்டு இருக்கு இல்லா... அது அதுல வர்ற வசனத்துக்காக முதல்ல பிடிக்காம இருந்ததுண்ணே... ஒரு பௌர்ணமி நாளில் குடியிருப்புல சினிமா போட்ட நாள்ல மணலக் குமிச்சி வச்சி சைக்கிளைப் படுக்க வச்சி படம் பார்ப்போம் பாருங்க... அது மாரி ஒரு நாளுங்க... கரண்டு போயிடிச்சி சனியன்... படத்தை நிறுத்திப் போட்டானுக... 'சட்'டுனு அந்த இடமே அமைதியா இருந்துது பாருங்க.. அப்போ ஒரு பயபுள இந்த டிரான்ஸ்சிஸ்டர் இருக்கு பாருங்க அதை ஆன் பண்ணிட்டான் போல... ஆன் பண்ணவும் அந்த பாட்டு வரவும் செரியா இருந்துச்சிப் பார்த்துக்குங்க... யோசிச்சிப் பாருங்க... நைட்டு பதினோரு மணி... பௌர்ணமி நேரம்... குமிச்சி வச்ச மணல்ல மல்லாந்து படுத்துருக்கீங்க... பக்கத்துல தெரிஞ்சவங்க யாருமில்ல...
நிறையப் பேர் இருக்காங்க.. ஆனா யாருமில்ல... இதெப்படிண்ணே... நான்தான் சொன்னேனே அப்பப்போ இப்படி எதாவது சொல்லிப் புடுவேன்ண்ணே ... நம்ம பெருமையை விடுங்க, அப் ப அந்தப் பாட்டு கேக்குது....
பிடிச்சிடுச்சிண்ணே...
ஃபிரெண்டு ஒருத்தர் சொன்னாரு... அவரு ஆபீசுல மேனஜர் பொண்ணு சும்மா டக்கரா இருக்குமாம்... அல்லாரும் பார்வையாலேயே ரசிப்பாங்களாம்.... அபபடி இருக்கச் சொல்ல ஒருநாள் முதுமலை ஃபாரெஸ்டுக்கு டூரு போயிருக்காங்க... அவிங்க இருந்தது ஊட்டிண்ணே... அங்கன தண்ணி அடிச்சி ஜாலியா இருந்துருக்காங்க... எந்த அளவுன்னா... கர்நாடகா மினிஸ்டர் ஒருத்தரு அங்கன வந்து தங்கியிருந்துருக்காரு... அதென் னங்க... என்னமோ சொல்வாங்களே... ஆ, கெஸ்ட் ஹவுசு... அவருக்கு சோறு போட்டுட்டுதான் உங்களுக்கு போடுவேன்னு சொல்லியிருக்காங்க... இவங்க தண்ணி போட்ட ஜோருல மரியாதை இல்லாம எல்லாம் பேசி எங்களுக்கு முதல்ல போடுங்கன்னு சொல்லியிருக்காங்க... பக்கத்துல ஈசிச் சேர்ல உக்காந்திருந்த ஒருத்தரு 'அவங்களுக்குப் போட்டுடுப்பா..' ன்னு சொல்ல, நம்ம ஈரோங்க 'நீ யார்ரா எங்களுக்கு சிபாரிசு செய்ய'ன்னு எகிறியிருக்காங்க...
ஆமாங்க.. அதேதாங்க... அவருதான் மினிஸ்டரு....
மன்னிப்பெல்லாம் கேட்டாங்க அப்புறம்னு வைங்க.. தண்ணி தீந்து போய் பக்கம் இருக்கற கடைல போய்க் கேட்டா டபுள் ரேட் சொன்னவனை எதிர்க்கப் போக 'எதிர்த்தாக்க என்னாகும் தெரியுமா'ன்னு திரையைத் திறந்து காமிச்சாங்களாம்... இந்த எம் ஜி ஆர் படத்துல வருவாரே ஜஸ்டின்.... ஜட்டி போட்டுக்கினு.... ஜாம்பவானா... என்ன சொல்வாங்கண்ணே.. அ ஆங்.. பயில்வான்... இந்த ... மதன்மி த்ரா விளம்பரத்துல வருவாங்களே... அது மாதிரி ஒருத்தர் நிக்க, எதுக்கு வம்புன்னு கேட்ட காசக் கொடுத்து வாங்கிட்டு வந்துட்டாங்களாம்... மறுபடி சைட் டிஷுக்கு ச்சே...மறுபடி ஸ்லிப் ஆஃப் தி டங்... சைட் டாபிக்குல டிராக் மாறிட்டேன்ல... !
வீக்நெசுங்க ...
ஆக, மறு படி தண்ணியடிச்சி மட்டையான நேரத்துல பக்கத்து ரூம்ல அந்த தேவதைங்க...! எப்படி இருக்கும் பாருங்க.. அது அவங்க அப்பாவோட ஃ பாரெஸ்ட் பாக்க வந்துருக்குது....! இவிங்க போட்டிருந்த டேப் ரெகார்டர்ல அந்த நேரம் 'நான் உன்னை நினைச்சேன்.. நீ என்னை நினைச்சேன்'ன்னு பாட்டுங்க... அட களுத அந்தப் பொண்ணு அந்தப் பக்கம் போயிடிச்சி... வேற ஒண்ணும் எஃபெக்டும் இல்ல, நடக்கவும் இல்ல... ஆனா பாருங்க.. நம்ம பய புள்ளங்களுக்கு அந்த நாள்லேருந்து இந்தப் பாட்டுன்னா ஒரு ஸ்பெஷலுங்க சிரிச்சிப்பாங்க... ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப்பாங்க...
இப்போ மேலே நீங்க கேட்ட பாட்டு நண்பர் அப்பாதுரைக்காகங்க....!
உங்களுக்குக் கூட அப்பிடி சில பாட்டு பிடிச்சிருக்கும்ண்ணே.. ஒத்துக்கோங்க...
இன்னொரு பாட்டுங்க.... இருங்க... இருங்க.. எங்க ஓடறீங்க...!
29.11.11
தேர்தலுக்குப் பின் வளர்ச்சி
வாக்களித்து நாளாகி விட்டதே...வளர்ச்சி எப்படி என்று பார்க்கலாம் என்று ஐடியா. எதிர்க் கட்சித் தலைவர் பதில் சொல்ல ஆறு மாதம் டைம் கேட்டார். ஆனால் நம்மால் உடனே சொல்லி விட முடிக்கிறது.
நிச்சயம் இத்தனை நாளில் வளர்ச்சி தெரிகிறது. பழயன முற்றிலும் போய் விட்ட நிலையில் குறிப்பாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த பிறகு உள்ள வளர்ச்சியை நிரூபணமாகவே காட்டலாம்.
அன்று இருந்த நிலைமைக்கு இன்றுள்ள நிலை கொஞ்சம் வளர்ச்சியைக் காண்பிக்கிறதுதான் என்றாலும் அன்றிருந்த நிலை இன்னும் கூட இருக்கிறது என்பதையும் நிரூபணத்தில் காட்டலாம்.
பழைய நிலை தொடர்வதையும் புதிய வளர்ச்சி இருப்பதையும் நீங்களே பாருங்களேன்.
|
|
|
|
|
வளர்ச்சி கோடிட்டுக் காண்பிக்கப் பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)




