7.9.15

"திங்க"க்கிழமை 150907 :: கொழுக்கட்டை + 1/7



                          
வரலக்ஷ்மி விரதம், விநாயகர் சதுர்த்தி போன்ற கொண்டாட்டங்களில் முக்கிய இடம்பெறுவது கொழுக்கட்டை.

சற்றே கவனமாகச் செய்யா விட்டால் கொழகொழக்கட்டை!
எனக்கு மிகவும் பிடித்த பண்டம்.  அதனாலேயே அதிகமாகக் கிடைக்காதது!  அல்லது அதிகமாகக் கிடைக்காததால் பிடித்துப் போகிறது!

இது செய்வது பழகிய கைகளுக்கு மிகச் சுலபம்.  பழகாத கைகளுக்கு பெரும் சவால்.

இதன் கஷ்டமான பகுதி பதம் பார்த்து கிளறிய மாவை இறக்கி வைப்பது.  மிகக் கஷ்டமான பகுதி கப் செய்வது!

படிப்படியாக வருகிறேன்.

கொழக்கட்டை இரண்டு வகைப்படும்.  காரக் கொழுக்கட்டை, தித்திப்புக் கொழுக்கட்டை.  மூன்றாவதும் ஒன்று உண்டு அது அம்மிணிக் கொழுக்கட்டை.  அதற்குத் தனி ரசிகர் மன்றமே உண்டு.

காரக் கொழுக்கட்டைதான் எனக்கு ரொம்பப் பிடிக்கும் என்றாலும் தித்திப்புக் கொழுக்கட்டை அதைவிட அதிகமாகப் பிடிக்கும்!  திருப்பித் திருப்பி இதையே சொல்லிக் கொண்டிராமல் செய்முறைக்குப் போகலாம்.

வழக்கமான டிஸ்கி :  இது யாருக்கும் தெரியாததல்ல...  ஒன்றிரண்டு தெரியாத பேர்களுக்காவது இது உதவுமானால்....  ஹிஹிஹி... அதேதாங்க!

பச்சரிசியை புடைத்து தூசி, கல் பொறுக்கி சுத்தம் செய்து எடுத்து, நீரில் அலசிக் கழுவி உலர வைத்துக் கொண்டு மெஷினில் கொடுத்து அரைத்துக் கொள்ளவும்.

இப்போதெல்லாம் கொ.க மாவு ரெடிமேடாகவே கிடைக்கிறது என்றாலும் அதை வாங்கி உபயோகித்ததில்லை!




ஒரு டம்ளர் அரிசி மாவுக்கு ஒரு டம்ளர் தண்ணீர்.  தண்ணீரை பாத்திரத்தில் கொட்டி அடுப்பில் வைத்து, அடுப்பைப் பற்ற வைத்து சிம்மில் வைத்துக் கொண்டு, தண்ணீர் கொதிக்கும்போது அரிசி மாவைச் சிறிது சிறிதாகத் தூவி, கட்டி கட்டாமல் கிளறவும்.  ரொம்ப நேரம் அடுப்பில் வைத்திருக்கக் கூடாது.  கையில் ஒட்டாமல், அதே சமயம் நீருடன் மாவு கலந்து பதமாக வந்த உடனேயே இறக்கி வைத்து விடவும். 


மாவை நன்றாக உருட்டி, இரண்டு பாகமாக வைத்துக் கொள்ளவும்.  ஒன்று காரக் கொழுக்கட்டைக்கு, ஒன்று தித்திப்புக் கொழுக்கட்டைக்கு!  
(ஒன்றாகவேயும் வைத்துக் கொள்ளலாம், தப்பில்லை!  நாங்கள் கொழுக்கட்டைச் செய்ய ஆளுக்கு ஒன்று செய்வோம்.  ஒரு மாவு உருண்டையில் காய்ந்த மிளகாய் சொருகி வைப்போம்.  காரக் கொழுக்கட்டைக்கான பகுதி என்று அடையாளம் காண!)


அதைத் தட்டு கொண்டு மூடக் கூடாது.  நீராவி பட்டு மாவின் பதம் மாறலாம்.  எனவே ஒரு ஈரத்துணியால் சுற்றி வைக்கலாம்.

தித்திப்புப் பூரணத்துக்கு :  தேங்காய்த் துருவலை வாணலியில் இட்டுப் புரட்டி, கொஞ்சமாக வெல்லச் சீவலை அதில் போட்டுக் கிளறவும்.  (நிறைய வெல்லம் சேர்த்தால் நீர் விட்டுக் கொண்டு படுத்தும்.  கொ.க சரியாக வராது!) ஓரளவு இரண்டும் கலந்து வந்த உடன் வெல்லம் உருகி பாகாகும் முன்பு.இறக்கி விடலாம்.  அதில் ஏலக்காய் (தோல் நீக்கி விடவும்.  அது இருந்தால் கப்பை( !! )ச் சிதைக்கும்!) , ப.கற்பூரம் போட்டுக் கலந்து ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

கார பூரணம் :  இதில் இரண்டு வகை உண்டு.  முதலில் எங்கள் வீடுகளில் செய்வதைச் சொல்கிறேன்.  ஒரு டம்ளர் உளுத்தம்பருப்பை அரைமணி நேரம் ஊற வைத்து எடுத்து மிக்ஸியில் கரகரப்பாக அரைத்துக் கொண்டு,  அதை குக்கரில் இட்லி போல் இட்டு அவித்து எடுத்துக் கொள்ளவும்.  பின்னர் அதை உதிர்த்து வாணலியில் இட்டு, காய்ந்த மிளகாய், (பச்சை மிளகாய்ப் போட்டால் உடனே, அன்றே செலவு செய்ய வேண்டி வரும்.  காய்ந்த மிளகாய்ப் போட்டால் இரண்டு நாட்கள் கழித்தும் உபயோகிக்கலாம்) பெருங்காயம், உப்பு (உப்பு முதலிலேயே அரைக்கும் போது போட்டால் நீர் விட்டுக் கொள்ளும்.  எனவே இங்கு சேர்க்கலாம்) போட்டுக் கொண்டு கடுகுடன் தாளித்து எடுத்து உதிர்த்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவது வகை :  உசிலிக்குச் செய்வது போல கடலைப் பருப்பையும் துவரம்பருப்பையும் சம அளவு எடுத்துக் கொண்டு, மிகச் சிறிதளவு உளுத்தம்பருப்புச் சேர்த்து ஊறவைத்து, அரைத்து, குக்கரில் இட்டு அவித்து எடுத்து, உதிர்த்து அதே போல காய்ந்த மிளகாய், பெருங்காயத்துடன் தேவைப்பட்டால் கொஞ்சம் தேங்காய்த் துருவலையும் சேர்த்துக் கொள்ளலாம்.  தேங்காய்த் துருவல் சேர்த்தால் உடனே செலவு செய்யவேண்டிய நிலை வரும்.  அவ்வளவுதான்.

 
அடுத்து வரும் வேலைதான் கஷ்டமான வேலை.

கிளறி வைத்திருக்கும் பச்சரிசி மாவை நெல்லிக்காய் அளவு எடுத்துக் கொள்ளவும்.  முன்னதாகக் கைகளில் நல்லெண்ணெய் தடவிக் கொள்வது உத்தமம்.  மாவு கைகளில் ஒட்டாது.  மாவை நன்றாக விரல்களுக்கிடையில் வைத்துப் பிசைந்து உருட்டி, இரண்டு உள்ளங்கைகளுக்குமிடையே வைத்துத் தட்டையாக்கிக் கொள்ளவும்.
மறுபடி விரல்களில் இலேசாக நல்லெண்ணெய் தொட்டுக் கொண்டு அந்த (சிலர் லேசாகத் தண்ணீர் தொட்டுக் கொள்வார்கள்) தட்டையின் விளிம்புகளை சன்னமாக்கிக் கொண்டே வரவும்.  அப்படிச் செய்து வருகையிலேயே மாவுப் பகுதி வளைந்து கோப்பை போல உருப்பெற ஆரம்பிக்கும் - வர வைக்க வேண்டும்.  கோப்பைக் கிழியாமல் செய்ய வேண்டும். 

                              Image result for கொழுக்கட்டை images  Image result for கொழுக்கட்டை images

அழகிய கப் உருவானவுடன், அதில் பூரணத்தைக் கொஞ்சமாக (கை போடாமல் ஒரு ஸ்பூன் உபயோகிக்கவும்) நிரப்பி, தித்திப்புக் கொழுக்கட்டையாயின் முனைகளை ஒன்று சேர்த்து மடக்கிச் சேர்த்து உருண்டை வடிவத்திலேயே முனை கூம்பிய வடிவத்தில் வைக்கவும்.

காரக் கொழுக்கட்டையாயின் கப்பைக் கப்பல் அல்லது படகு போல ( ! ) மடக்கி, விளிம்புகளை எதிரெதிர்த் திசையில் சின்னச் சின்னதாய் மடக்கி வைக்கவும் - பதர்ப்பேணிகள் போல, அல்லது சூர்யகலா-சந்திரகலா ஸ்வீட் இருக்குமே அது போல!

                            Image result for கொழுக்கட்டை images  Image result for கொழுக்கட்டை images

இவைகளை தண்ணீர் அளவாக வைத்த குக்கரில், விசில் போடாமல், இட்லித் தட்டுகளில் வைத்து நான்கு நிமிடங்கள் வைத்து இறக்கவும்.



சாப்பிடலாம்.

குக்கரில் அதிக நேரம் வைத்தால் இறக்கியவுடன் கொழுக்கட்டைகள் வாயைப் பிளந்து விடும்.  அது சரியாக வரவேண்டும்.

பூரணம் அதிகமாக வைத்தாலும் இதே கதி வரும்.  பூரணம் கம்மியாக வைத்தால் வெறும் மாவு மட்டும் வாயில் கிடைத்து வெறுப்பேற்றும்.  அளவு சரியாய் வைக்கப் பழக வேண்டும்.  தித்திப்புப் பூரணத்தின் தேங்காய்த் துருவலில் நார் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது.  கப்பை உடைக்கும் அல்லது கிழிக்கும்!

கப் கெட்டியாக நாலு செங்கல் வைத்துக் கட்டிய சுவர் போல இருக்கக் கூடாது.  ஸன்னமாக வேண்டும், அதே சமயம் உறுதியாகவும் இருக்க வேண்டும். 

பூரணங்கள் தீர்ந்து மாவு மட்டும் பாக்கியிருக்கும் பாருங்க... அங்கே ஆரம்பிக்கும் அம்மிணிக் கொழுக்கட்டைகளின் ராஜ்ஜியம்!

                                 Image result for கொழுக்கட்டை images       Image result for கொழுக்கட்டை images

மொத்த மாவிலும் உப்பு, கொத்து மல்லி, பெருங்காயம், பச்சை மிளகாய் அரைத்துச் சேர்த்து இஷ்டப்பட்ட வடிவில் உருட்டி குக்கரில் வைத்து எடுத்து....





சாப்பிடலாம்!     








படங்கள் :  நன்றியுடன் இணையத்திலிருந்து....
 




===================================================================

"கேட்டது கேட்டபடி" . ஏழுநாள் தொடர். 01.
   

"தங்கையிடமா? நான் சொல்கிறேன்.  ஆமாம்  அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்.   ...................  நோ நோ நான் இந்த ஊருல உன் பிரெண்டுன்னு இருக்கும்போது,  நீ வேற எங்கேயும் தங்க வேண்டாம்.   நீ திரும்பி ஊருக்குக் கிளம்பறதுக்குள்ள நான் வந்துவிடுவேன்.   சின்ன ட்ரிப்தான். ..............  ஆமாம்.   இங்கேயா?   ஜானகி, வீட்டு வேலைக்காரங்க, வாட்ச்மான் எல்லோரும் இருக்காங்க  . .................   சேச்சே அப்படி எல்லாம் எதுவும் இல்லை; இருக்காது.   ஜானகி அந்த டைப் இல்லை." . 

போனை வைத்த மாதவன், "ஜானகீ !" என்று உரத்த குரலில் கூப்பிட்டான். 

"என்ன அண்ணா? நான் இங்கேதான் இருக்கேன்! " 



(தொடரும்) 
               

6.9.15

ஞாயிறு 322:: எங்கேயோ வெல்லச்சீடை வாசனை வருதே!

                     
         
ஏழு நாள் தொடர்கதை. वह कौन है?        [இறுதிப் பகுதி]


7. அதைக் கொண்டு வந்து பாண்டியன் கையில் தந்த அவன் "भाई! आप कृपया मुझे बता सकते हैं जहां यह घर है? என்றான்.

அதை வாங்கிப் பார்த்த பாண்டியன் கொஞ்ச நேரம் அந்தக் காகிதத்தையே உற்றுப் பார்த்தான்.  பின்னர் சொன்னான்.

"இன்னா கர்மம் எளுதி இருக்குன்னு தெர்ல...எளுதப் படிக்கத் தெரிஞ்சாத்தானே... ஆனா அண்டர்லைன்லாம் பண்ணியிருக்கானுவோ..அதைப் பாத்தா..ரொம்ப ஸ்ட்ராங்காச் சொல்லியிருக்காங்கன்னு தெரியுது" என்று பேப்பரை அவனிடமே திருப்பிக் கொடுத்தான்.



                                                                                              அப்பாடா.... முடிந்தது!   



5.9.15

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  அஜ்ஜப்பா சிவலிங்கப்பாவைச் சந்தியுங்கள்!



2) கௌசல்யா ராமசாமி.   நன்றி மனோ சாமிநாதன் மேடம்.






 
4) கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவ பெண்கள் வாழ்வு உயரவும் பாடுபட்ட, பாம்பன் மீனவ பெண்ணுக்கு, அமெரிக்க தொண்டு நிறுவனம், 6.60 லட்சம் ரூபாய் பரிசுடன் கூடிய விருது வழங்க உள்ளது.  பாம்பன், சின்னபாலம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி.




5)  நடத்துனரைப் பாராட்டி, அவரை வெளிப்படுத்தி இருக்கும் ஷஷான்க்  பாராட்டுவோம்.  நடத்துனருக்கும், அவருக்கு உதவிய மற்றவர்களுக்கும் பாராட்டுகள்.  (நன்றி எல்கே)




6)  மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பாலம்.




7)  தெரிந்து கொள்ளணும் நீங்க தேஜிந்தர்சிங் பற்றி!





9)  பாஸிட்டிவ் மனநிலையின் மகத்துவம்.  சிசுப்பி அருணாச்சலம்.




10)  நடிகர் ராகவா லாரன்ஸ் பற்றி குறிப்பிட வேண்டும்.  கோடி கோடியாக ஊதியம் வாங்க வைக்கும் தமிழக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தால் மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஒரு கோடி ரூபாய் தர நினைத்து, "மனித பலவீனத்தால் தள்ளிப் போட்டேன்" என்று அதையும் ஒப்புக்கொண்டு, காஞ்சனா படத்துக்கு வாங்கிய அட்வான்ஸ் ஒரு கோடியை ஒரு விழாவாக வைத்து,  அனைவர் முன்னிலையிலும் நல்ல காரியங்களுக்கு வழங்கியதை 'ஆனந்த விகடனி'ல் சொல்கிறார்.  அவருடன் விஜய் டிவி திவ்யதர்ஷினி உட்பட பல நன்மனம் கொண்ட இளைஞர்கள் கை கோர்க்கிறார்கள்.  விகடன் இணைப்பு தர முடியவில்லை.  மன்னிக்கவும்.






======================================================================



ஏழு நாள் தொடர்கதை. वह कौन है?      [ஆறாவது நாள்]


6. அவன் கை கால்சராய்ப் பாக்கெட்டுக்குள்  பார்த்த பாண்டியன், அதிலிருந்து என்ன எடுக்கப் போகிறான் என்று ஒரு வினாடி திகிலடைந்தான்.   ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டான். 

"இன்னா வோணும் ஒனக்கு? இன்னாத்தப் பார்க்கறே நீயி?" என்றான் கரகரப்பாக.
 
அவன் பதில் சொல்லாமல் இன்னும் பாண்டியனை நெருங்கி அருகில் வந்தான்.  அவன் கை மெல்ல பாக்கெட்டுக்குள் எதையோ கவனமாகத் தேடுவது தெரிந்தது.

அவன் கை வெளியே வந்தபோது அவன் கையில் கசங்கலாக மடிக்கப்பட்ட ஒரு காகிதம் இருந்தது.


                                                                                                                                      [அப்பாடா....நாளை முடியும்!]

4.9.15

வெள்ளிக்கிழமை வீடியோ 150904 :: விபரீதச் சடங்கு



 பதற வைக்கும் பழக்கம்.  மகாராஷ்டிரா, கிரிஷ்னேஷ்வர் கோவிலில் 50 அடி உயரத்திலிருந்து ஒரு வயது, இரண்டு வயதுக் குழந்தைகளை கீழே எறிந்து பெட்ஷீட்டில் பிடிக்கிறார்கள்.  குழந்தைகள் ஆரோக்கியமாகவும், புத்திசாலிகளாகவும் வளர்வார்களாம்.









ஏழு நாள் தொடர்கதை.   वह कौन है?  [ஐந்தாம் நாள்]


5. அவளைக் கண்டு அவன் நடை சற்றே தயங்கியிருந்தாலும், நிற்கவில்லை.  ஆனால் அவன் நடையில் ஏன் இந்தத் தயக்கம் என்றுதான் பாண்டியனுக்குப் புரியவில்லை.

சில வீடுகளின் கதவு அரைவாசி திறந்திருக்க,  பெரும்பாலான வீடுகளின் கதவுகள் மூடி இருந்தன.

கொஞ்சம் அருகில் வந்து விட்ட அவன் பார்வையில் இப்போது பாண்டியன் நின்றிருந்தது தெரிந்தது.  அந்த வீட்டை ஓரப் பார்வை பார்த்த அவன் இவனைக் கண்டதும் சற்றே தயங்கினான்.  அவன் முகத்தில் ஒரு குழப்பம் தெரிந்தது.
பின்னர் தனக்குத் தானே தலையாட்டிக் கொண்டவனாய், கால்சராய்ப்  பைக்குள் கைவிட்டான்.


                                                                                                                                                                     நாளை..

3.9.15

ஏழு நாள் தொடர்கதை. वह कौन है? [நான்காம் நாள்]



4. வருபவன் எதிரில் யாராவது வருகிறார்களா என்று தேடுகிறானா, அல்லது வரக்கூடாது என்கிற வேண்டுதலில் வருகிறானா என்று பாண்டியனுக்கு யோசனையாக இருந்தது.

அவன் கையில் ஒரு சிறு பை இருந்தது. 
 
ஒவ்வொரு வீட்டையும் அவன் அளவெடுத்துக் கொண்டே வருவது போலத் தோன்றியது.

நான்கைந்து வீடுகள் தள்ளி வந்த நிலையில் ஒரு வீட்டிலிருந்து கதவை ஒரு கையால் திறந்தபடி, தனது இரு சக்கர வாகனத்தை வெளியில் எடுத்துக் கொண்டு வந்தாள் ஒரு பேரிளம்பெண்.  வண்டியை வெளியில் நிறுத்தி ஸ்டாண்ட் போட்டவள், கதவை மூடித் தாழிட்டாள். 






உள்ளே யாரிடமோ ஏதோ சொல்லியபடி சாலையில் இறங்கியவள், இவனைக் கண்டு ஒரு நொடி, ஒரு நொடி மட்டும்தான், தயங்கியவள், இவனைப் பார்க்காதது போல வண்டியை ஸ்டார்ட் செய்து ஏறிப் போனாள்.



                                                                                                                                                       நாளை...

2.9.15

ஏழு நாள் தொடர்கதை :: वह कौन है?



 3. யாரும் இல்லை என்று அவன் நினைத்திருந்தது தவறு என்பதை அவன் சீக்கிரமே உணருவான்.  மேலேயிருந்து கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்று நான் சொல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் உங்கள் கற்பனையை ஒரு அறுபது அல்லது எழுபது வருடங்களுக்குச் செப்பனிட வேண்டும்!

அவன் அந்தக் கோடியில் உதயமானது முதலே பாண்டியனின் பார்வையில் அவன் இருந்தான்.  அவனது நடையின் தயக்கம் பாண்டியனை உஷார் படுத்தியது.  அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  ஆனால் பாண்டியன் பார்த்துக் கொண்டிருந்தான் என்பது வந்தவனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  ஏனென்றால் நன்றாக அடர்ந்திருந்த மரங்களின் அடர்வில் இருந்த ஒரு கூண்டுக்குள் எப்போதும் அமர்ந்திருக்கும் பாண்டியன், அப்போதுதான் வெளியில் வந்து அங்கு இருந்த ஒரு மரத்தினடியில் நின்றிருந்தான்.  இருந்தபோதிலும் அந்த இடத்தின் அமைப்பினால் அந்தத் தெருவின் முழு அமைப்பையும் அங்கிருந்தே அவனால் பார்க்க முடிந்தது.  வருபவனால் பாண்டியனைப் பார்க்க முடியாமல் மரம் மறைத்தது.  



பாண்டியன் - ஒரு செக்யூரிட்டி.



                                                                                                                                                நாளை.....

1.9.15

பேரமைதி



ஏழு நாள் தொடர்கதை. वह कौन है?


2. அவன் கொஞ்சம் தயங்கி அந்தத் தெருவின் கடைசி வரை பார்வையை ஓட்டினான்.

 
'ஜில்லோ' என்றிருக்கும் இது போன்றதொரு தெருவை அவன் எதிர்பார்க்கவில்லையோ .என்னவோ..

 

இருபுறமும் அடர்த்தியாய் மரங்கள்.  இருபுறமும் சுற்றுச் சுவர்களுக்குள் அடங்கிய பெரிய பெரிய பங்களாக்கள்.  குப்பைகள் இல்லாத சாலை.  நடைபாதை ஒரே சீராக அமைக்கப் பட்டு அது அந்தத் தெருவுக்கு இருபுறமும் எல்லை வகுத்தது போலிருந்தது. 

            

                                                                                   
                                                               Image result for dogs inside bungalows images
 


ஆனால் ஒரு ஆள் கூட இல்லாத அந்தத் தெருவின் அமைதி அவனைத் தேக்கியிருக்கலாம்.  சாதாரணமாகக் கண்ணில் தென்படும் தெரு நாய் ஒன்று கூட கண்ணில் படவில்லை என்பதையும் கவனித்தான்.  அதே சமயம் ஒவ்வொரு வீட்டினுள்ளும் உயர் ரக நாய்கள் இருக்கலாம் என்பதற்கு சந்தேகம் ஏதும் இல்லாத வகையில் சில வீடுகளிலிருந்து அடர்குரலில் சில நாய்களில் குரல்கள் விட்டு விட்டு ஒலித்தன.

                                                                                                                                                        
           நாளை.....



======================================================================


பேரமைதி


புலம்பிக் கொண்டிருக்கும் தருமனை திரௌபதி இலேசான வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

 
பாரதப்போர் முடிந்து விட்டிருந்தது.  கர்ணன் குந்தியின் மூத்த மகன் என்றும் தெரிந்து விட்டிருந்தது.  கர்ணனைக் கொன்று விட்டதற்கான பாவம் தன்னைச் சேர்ந்து விட்டதாகத்தான் தருமனின் இப்போதைய புலம்பல்!
 
புலம்புவதும், தயங்குவதும் தருமனுக்குப் புதிதல்ல.  அர்ஜுனனைக் கொல்ல என்றே போஷிக்கப் படுபவன் கர்ணன், அர்ஜுனனுக்கு நிகரான என்பதை விட சற்று மேலான என்றே சொல்லக் கூடிய அவனின் வில் வித்தையும், அவன் தவமிருந்து பெற்றிருந்த அஸ்திரங்களும் தருமனைக் கவலை கொள்ள வைத்து புலம்ப வைத்தது ஒரு நேரம்.
 
அதன் காரணமாக அர்ஜுனனை வற்புறுத்தி அஸ்திரங்கள் பெற  விரட்டி,அவற்றை அவனும் பெற்று வந்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் கவலையை மட்டும் விடவில்லை தருமன்.
 
 

 
நடுவில் போரைத் தவிர்க்க நினைத்தது தர்மத்துக்காகவா, தைரியமின்மையாலா..

 
வனவாசத்தின் பிற்பட்ட காலங்களில் போரிட வேண்டும், நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஆசைகள் அற்றுப்போய் இருந்த தருமனைக் கண்டு திரௌபதி கலங்கிப்  போன காலமும் உண்டு.  ராஜசபையில் அவள் பட்ட அவமானம் அவள் மனமெங்கும் உடலெங்கும் தீயாய்த் தகித்துக் கொண்டிருந்தது.  அவளை அந்நிலையிலிருந்து காத்திருக்க வேண்டிய கணவன்மார்கள் அப்போதும் அமைதியாகவே நின்றிருந்தார்கள்.  பின்னர் பீமனின் சபதமும், அர்ஜுனனின் வார்த்தைகளும் அவளை சற்றே ஆறுதல் படுத்தி இருந்தன. 

 
நாள்பட்ட நிலையில் வெஞ்சினம் நீர்த்துப் போய்விட்டதா?  அந்த நிலைமையை மாற்ற அவள் பீமனின் உதவியைத்தான் பெரிதும் நம்பி இருந்தாள்.  அர்ஜுனனும் தலைமறைவு வாழ்க்கையின் வெறுப்பில் இருந்ததும், தருமனை மாற்ற உதவின. 
 
யோசித்துப் பார்த்ததில் பாண்டவர்களுடனான வாழ்க்கையில் தான் எத்தனை நாட்கள் நிறைந்த சந்தோஷத்துடன் இருந்தோம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம் என்று தோன்றியது. 
 
சொல்லப் போனால் அர்ஜுனனையே எண்ணி வாழ்ந்து, நினைத்தது போல, அவனும் சுயம்வரத்துக்கு வந்து தன்னை ஜெயித்தபோது மகிழ்ந்துதான் போனாள்.  ஆனால் பின்னால் ஐந்து பேருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நிலை வந்தபோது கலங்கி நின்றாலும், துணிந்து முடிவும் எடுத்தாள்.
 
நாரதரின் குரல் கேட்டு நனவுலகத்துக்கு வந்தாள் திரௌபதி.  தருமரின் மனக்கலக்கம் தெரிந்து, தெளிய வைப்பதற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்தது.  சொந்த அண்ணனைக் கொன்று விட்டோம் என்று புலம்பிய தருமரை க்ஷத்திரிய தர்மம் என்பது என்ன,  கர்ணன் தன் லட்சியங்களை எப்படி சுருக்கு வழியில் அடைய முயற்சித்து, எதிர்மாறான பலனை அடைந்தான் என்றெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  
 
 
தருமனை சாமாதானப்படுத்தத்தான் முடியவில்லை.
 
மீண்டும் திரௌபதிக்கு அந்த மறக்க முடியாத நாள் நினைவுக்கு வந்தது.  
 
 
வீட்டுக்கு விலக்காகி ஒற்றையாடையுடன் அமர்ந்திருந்தவளை துச்சாதனன் இழுத்துச் சென்றதும், அவ்வளவு நாட்களாக மரியாதையுடனும் அன்புடனும் பழகிய அந்தப்புர மகளிர் யாரும் உதவிக்குக் கூட வராததும், பீஷ்மர், துரோணர், விதுரர் முன்னிலையில் அவள் தலை மயிரைப் பிடித்து இழுத்து அலைக்கழித்ததும் நினைவை விட்டு அகலவில்லை. 
 
அன்று பேசிய கர்ணனின் வார்த்தைகள் அதற்குப்பின் எத்தனை  எத்தனை முறை நினைவில் வந்து உடலையும், மனதையும் கொதி நிலையில் வைத்திருந்தது என்பதும் நினைவுக்கு வந்தது.
 
"தாஸி!  மாமன்னன் துரியோதனின் அடிமை!  உடைகளைக் களைந்து கொடுத்து விட்டு துரியோதனின் அந்தப்புரத்துக்குப் போ பாஞ்சாலி..  அங்கு இருக்கும் வேலைக்காரர்களில் யாரையாவது துணையாக்கிக் கொள்..  பாண்டவர்கள் எனும் இந்த ஐந்து அடிமைகளால் இனி உனக்குப் பயனில்லை"
 
"பிதாமகரே..  நானா தாஸி?  ஆசார்யரே நானா தாஸி?  தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்ற தரும மன்னனின் செயலில் நீதி இருக்கிறதா?  விதுரரே.. நீங்கள் சொல்லுங்கள்"
 
அவளின் கதறலுக்கு கற்றறிந்த சபையோரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.  எதிர் முகாமிலிருந்தே நியாயம் பேசிய விகர்ணனும் அடக்கப்பட்டான்.
 
"துச்சாதனா! என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?   அவளும் அவள் முன்னாள் பதிகளும் அடிமைள்.  அவர்களின் ஆடை, அணிகலன்களை அகற்று"   கர்ணன் எக்காளமிட்டுச் சிரித்தான்.
 
கைகளைக் கட்டி, தலைகுனிந்து அடிமைகளாய் நின்றிருந்த ஐந்து பாண்டவர்களும் எதுவும் எதிர்த்துப் பேசாமல் நின்றிருந்தார்கள். 

 
சூதாட்டத் தர்மத்தைக் காக்கிறார்களாம்! 

 
உயிருள்ளவரை மனைவியையும், அவளின் மானத்தையும் காப்பேன் என்று அவர்கள் அக்னி சாட்சியாக அளித்திட்டிருந்த உறுதிமொழியை மறந்து நின்றிருந்தார்கள்.  தங்கள் ஆடைகளைத் தாங்களே களைந்து துச்சாதனன் வசம் ஒப்படைத்தார்கள்.
 
அந்தக் காட்சியை திரௌபதியால் மறக்கவே முடியவில்லை.  மன்னிக்கவும் முடியவில்லை.  கட்டியவர்கள் கைகட்டி நின்றிருக்க, கற்றறிந்தவர்கள் உதவிக்கு வராத நிலையில் கண்ணனல்லவோ மானம் காத்தான்?
 

                                                                Image result for throwpathi with a deserted look images
 
வனவாசமும் அஞ்ஞாத வாசமும் இருந்த அந்த நாட்களில் பாஞ்சாலியின் நெஞ்சில் துச்சாதன ரத்தமும், கர்ண மரணமும்தான் கனவாய் இருந்தன.  ஐந்து கணவர்களுடனும் தாம்பத்யம் செய்யாமல், கலைந்த கூந்தலை முடியாமல் சபதம் முடிக்கக் காத்திருந்தாள் திரௌபதி.
 
சமாதானத்துக்குக் கிளம்பிய கண்ணனிடம் வேண்டாம்  என்று மன்றாடிய திரௌபதிக்கு அன்று கண்ணன் கொடுத்த உறுதிமொழி இன்று நிறைவேறி இருக்கிறது.
 
இதோ..   கௌரவர்கள் யாரும் உயிருடன் இல்லை.  கௌரவர்கள் மட்டுமா, தன்னுடைய தந்தை, சகோதரன் கூட உயிருடன் இல்லை.  பீஷ்மர் உயிரைத்  துறக்க தகுந்த காலத்துக்காகப் போர்க்களத்திலேயே அம்புப் படுக்கையில் இரவு பகலாகக் கிடக்கிறார்.  
 
 



வனவாசம் புறப்பட்டபோது குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாமல் கணவர்களுடன் புறப்பட்டு விட்டாள் திரௌபதி.   குழந்தைகள் அவள் தந்தை அரண்மனையில் வளர்ந்தனரே தவிர, அவர்கள் நினைவும் என்றுமே வந்ததில்லை தன்னுடைய மனதில் என்பதும் நினைவுக்கு வந்தது. 

 
கர்ண, துச்சாதன, துரியோதனைப் பழி வாங்க வேண்டும்.  அது ஒன்றே நினைவு. 

 
பீமனைக் கொல்ல நினைத்து, முடியாமல் ஆணவமழிந்த திருதராஷ்டிரனும், கண்ணனைச் சபிக்கக் காத்திருந்த காந்தாரியும் கூட அமைதியடைந்து விட்டனர்.
 
 


 
இப்போது கர்ணன் மரணத்துக்குக் கதறும் கணவன்மார்கள்..  பாண்டவச் செல்வங்கள் யாரும் மிச்சமில்லை.
 
கௌரவ விதவைகளும், பாண்டவ விதவைகளும் இப்போது ஒற்றுமையாகவே நீத்தார் கடன் தீர்த்துக்  கொண்டிருந்தனர். எங்கும் சந்தோஷமில்லை.  சண்டையுமில்லை.
 
என்ன சாதித்தோம் இவ்வளவு பேரின் மரணத்தைக் கொண்டு..

நதிக்கரையில் வெற்றுப் பார்வையுடன் நிற்கிறாள் திரௌபதி.











படங்கள் :  இணையத்திலிருந்து நன்றியுடன்...