Tuesday, September 1, 2015

பேரமைதிஏழு நாள் தொடர்கதை. वह कौन है?


2. அவன் கொஞ்சம் தயங்கி அந்தத் தெருவின் கடைசி வரை பார்வையை ஓட்டினான்.

 
'ஜில்லோ' என்றிருக்கும் இது போன்றதொரு தெருவை அவன் எதிர்பார்க்கவில்லையோ .என்னவோ..

 

இருபுறமும் அடர்த்தியாய் மரங்கள்.  இருபுறமும் சுற்றுச் சுவர்களுக்குள் அடங்கிய பெரிய பெரிய பங்களாக்கள்.  குப்பைகள் இல்லாத சாலை.  நடைபாதை ஒரே சீராக அமைக்கப் பட்டு அது அந்தத் தெருவுக்கு இருபுறமும் எல்லை வகுத்தது போலிருந்தது. 

            

                                                                                   
                                                               Image result for dogs inside bungalows images
 


ஆனால் ஒரு ஆள் கூட இல்லாத அந்தத் தெருவின் அமைதி அவனைத் தேக்கியிருக்கலாம்.  சாதாரணமாகக் கண்ணில் தென்படும் தெரு நாய் ஒன்று கூட கண்ணில் படவில்லை என்பதையும் கவனித்தான்.  அதே சமயம் ஒவ்வொரு வீட்டினுள்ளும் உயர் ரக நாய்கள் இருக்கலாம் என்பதற்கு சந்தேகம் ஏதும் இல்லாத வகையில் சில வீடுகளிலிருந்து அடர்குரலில் சில நாய்களில் குரல்கள் விட்டு விட்டு ஒலித்தன.

                                                                                                                                                        
           நாளை.....======================================================================


பேரமைதி


புலம்பிக் கொண்டிருக்கும் தருமனை திரௌபதி இலேசான வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
 

 
பாரதப்போர் முடிந்து விட்டிருந்தது.  கர்ணன் குந்தியின் மூத்த மகன் என்றும் தெரிந்து விட்டிருந்தது.  கர்ணனைக் கொன்று விட்டதற்கான பாவம் தன்னைச் சேர்ந்து விட்டதாகத்தான் தருமனின் இப்போதைய புலம்பல்!
 
புலம்புவதும், தயங்குவதும் தருமனுக்குப் புதிதல்ல.  அர்ஜுனனைக் கொல்ல என்றே போஷிக்கப் படுபவன் கர்ணன், அர்ஜுனனுக்கு நிகரான என்பதை விட சற்று மேலான என்றே சொல்லக் கூடிய அவனின் வில் வித்தையும், அவன் தவமிருந்து பெற்றிருந்த அஸ்திரங்களும் தருமனைக் கவலை கொள்ள வைத்து புலம்ப வைத்தது ஒரு நேரம்.
 
அதன் காரணமாக அர்ஜுனனை வற்புறுத்தி அஸ்திரங்கள் பெற  விரட்டி,அவற்றை அவனும் பெற்று வந்ததும் கொஞ்சம் நிம்மதி அடைந்தாலும் கவலையை மட்டும் விடவில்லை தருமன்.
 
 

 
நடுவில் போரைத் தவிர்க்க நினைத்தது தர்மத்துக்காகவா, தைரியமின்மையாலா..

 
வனவாசத்தின் பிற்பட்ட காலங்களில் போரிட வேண்டும், நாட்டைத் திரும்பப் பெற வேண்டும் என்ற ஆசைகள் அற்றுப்போய் இருந்த தருமனைக் கண்டு திரௌபதி கலங்கிப்  போன காலமும் உண்டு.  ராஜசபையில் அவள் பட்ட அவமானம் அவள் மனமெங்கும் உடலெங்கும் தீயாய்த் தகித்துக் கொண்டிருந்தது.  அவளை அந்நிலையிலிருந்து காத்திருக்க வேண்டிய கணவன்மார்கள் அப்போதும் அமைதியாகவே நின்றிருந்தார்கள்.  பின்னர் பீமனின் சபதமும், அர்ஜுனனின் வார்த்தைகளும் அவளை சற்றே ஆறுதல் படுத்தி இருந்தன. 

 
நாள்பட்ட நிலையில் வெஞ்சினம் நீர்த்துப் போய்விட்டதா?  அந்த நிலைமையை மாற்ற அவள் பீமனின் உதவியைத்தான் பெரிதும் நம்பி இருந்தாள்.  அர்ஜுனனும் தலைமறைவு வாழ்க்கையின் வெறுப்பில் இருந்ததும், தருமனை மாற்ற உதவின. 
 
யோசித்துப் பார்த்ததில் பாண்டவர்களுடனான வாழ்க்கையில் தான் எத்தனை நாட்கள் நிறைந்த சந்தோஷத்துடன் இருந்தோம் என்று விரல் விட்டு எண்ணி விடலாம் என்று தோன்றியது. 
 
சொல்லப் போனால் அர்ஜுனனையே எண்ணி வாழ்ந்து, நினைத்தது போல, அவனும் சுயம்வரத்துக்கு வந்து தன்னை ஜெயித்தபோது மகிழ்ந்துதான் போனாள்.  ஆனால் பின்னால் ஐந்து பேருடன் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்ளவேண்டும் என்ற நிலை வந்தபோது கலங்கி நின்றாலும், துணிந்து முடிவும் எடுத்தாள்.
 
நாரதரின் குரல் கேட்டு நனவுலகத்துக்கு வந்தாள் திரௌபதி.  தருமரின் மனக்கலக்கம் தெரிந்து, தெளிய வைப்பதற்காக வந்திருக்கிறார் என்று தெரிந்தது.  சொந்த அண்ணனைக் கொன்று விட்டோம் என்று புலம்பிய தருமரை க்ஷத்திரிய தர்மம் என்பது என்ன,  கர்ணன் தன் லட்சியங்களை எப்படி சுருக்கு வழியில் அடைய முயற்சித்து, எதிர்மாறான பலனை அடைந்தான் என்றெல்லாம் எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  
 
 
தருமனை சாமாதானப்படுத்தத்தான் முடியவில்லை.
 
மீண்டும் திரௌபதிக்கு அந்த மறக்க முடியாத நாள் நினைவுக்கு வந்தது.  
 
 
வீட்டுக்கு விலக்காகி ஒற்றையாடையுடன் அமர்ந்திருந்தவளை துச்சாதனன் இழுத்துச் சென்றதும், அவ்வளவு நாட்களாக மரியாதையுடனும் அன்புடனும் பழகிய அந்தப்புர மகளிர் யாரும் உதவிக்குக் கூட வராததும், பீஷ்மர், துரோணர், விதுரர் முன்னிலையில் அவள் தலை மயிரைப் பிடித்து இழுத்து அலைக்கழித்ததும் நினைவை விட்டு அகலவில்லை. 
 
அன்று பேசிய கர்ணனின் வார்த்தைகள் அதற்குப்பின் எத்தனை  எத்தனை முறை நினைவில் வந்து உடலையும், மனதையும் கொதி நிலையில் வைத்திருந்தது என்பதும் நினைவுக்கு வந்தது.
 
"தாஸி!  மாமன்னன் துரியோதனின் அடிமை!  உடைகளைக் களைந்து கொடுத்து விட்டு துரியோதனின் அந்தப்புரத்துக்குப் போ பாஞ்சாலி..  அங்கு இருக்கும் வேலைக்காரர்களில் யாரையாவது துணையாக்கிக் கொள்..  பாண்டவர்கள் எனும் இந்த ஐந்து அடிமைகளால் இனி உனக்குப் பயனில்லை"
 
"பிதாமகரே..  நானா தாஸி?  ஆசார்யரே நானா தாஸி?  தன்னைத் தோற்றபின் என்னைத் தோற்ற தரும மன்னனின் செயலில் நீதி இருக்கிறதா?  விதுரரே.. நீங்கள் சொல்லுங்கள்"
 
அவளின் கதறலுக்கு கற்றறிந்த சபையோரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.  எதிர் முகாமிலிருந்தே நியாயம் பேசிய விகர்ணனும் அடக்கப்பட்டான்.
 
"துச்சாதனா! என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?   அவளும் அவள் முன்னாள் பதிகளும் அடிமைள்.  அவர்களின் ஆடை, அணிகலன்களை அகற்று"   கர்ணன் எக்காளமிட்டுச் சிரித்தான்.
 
கைகளைக் கட்டி, தலைகுனிந்து அடிமைகளாய் நின்றிருந்த ஐந்து பாண்டவர்களும் எதுவும் எதிர்த்துப் பேசாமல் நின்றிருந்தார்கள். 

 
சூதாட்டத் தர்மத்தைக் காக்கிறார்களாம்! 

 
உயிருள்ளவரை மனைவியையும், அவளின் மானத்தையும் காப்பேன் என்று அவர்கள் அக்னி சாட்சியாக அளித்திட்டிருந்த உறுதிமொழியை மறந்து நின்றிருந்தார்கள்.  தங்கள் ஆடைகளைத் தாங்களே களைந்து துச்சாதனன் வசம் ஒப்படைத்தார்கள்.
 
அந்தக் காட்சியை திரௌபதியால் மறக்கவே முடியவில்லை.  மன்னிக்கவும் முடியவில்லை.  கட்டியவர்கள் கைகட்டி நின்றிருக்க, கற்றறிந்தவர்கள் உதவிக்கு வராத நிலையில் கண்ணனல்லவோ மானம் காத்தான்?
 

                                                                Image result for throwpathi with a deserted look images
 
வனவாசமும் அஞ்ஞாத வாசமும் இருந்த அந்த நாட்களில் பாஞ்சாலியின் நெஞ்சில் துச்சாதன ரத்தமும், கர்ண மரணமும்தான் கனவாய் இருந்தன.  ஐந்து கணவர்களுடனும் தாம்பத்யம் செய்யாமல், கலைந்த கூந்தலை முடியாமல் சபதம் முடிக்கக் காத்திருந்தாள் திரௌபதி.
 
சமாதானத்துக்குக் கிளம்பிய கண்ணனிடம் வேண்டாம்  என்று மன்றாடிய திரௌபதிக்கு அன்று கண்ணன் கொடுத்த உறுதிமொழி இன்று நிறைவேறி இருக்கிறது.
 
இதோ..   கௌரவர்கள் யாரும் உயிருடன் இல்லை.  கௌரவர்கள் மட்டுமா, தன்னுடைய தந்தை, சகோதரன் கூட உயிருடன் இல்லை.  பீஷ்மர் உயிரைத்  துறக்க தகுந்த காலத்துக்காகப் போர்க்களத்திலேயே அம்புப் படுக்கையில் இரவு பகலாகக் கிடக்கிறார்.  
 
 வனவாசம் புறப்பட்டபோது குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாமல் கணவர்களுடன் புறப்பட்டு விட்டாள் திரௌபதி.   குழந்தைகள் அவள் தந்தை அரண்மனையில் வளர்ந்தனரே தவிர, அவர்கள் நினைவும் என்றுமே வந்ததில்லை தன்னுடைய மனதில் என்பதும் நினைவுக்கு வந்தது. 

 
கர்ண, துச்சாதன, துரியோதனைப் பழி வாங்க வேண்டும்.  அது ஒன்றே நினைவு. 

 
பீமனைக் கொல்ல நினைத்து, முடியாமல் ஆணவமழிந்த திருதராஷ்டிரனும், கண்ணனைச் சபிக்கக் காத்திருந்த காந்தாரியும் கூட அமைதியடைந்து விட்டனர்.
 
 


 
இப்போது கர்ணன் மரணத்துக்குக் கதறும் கணவன்மார்கள்..  பாண்டவச் செல்வங்கள் யாரும் மிச்சமில்லை.
 
கௌரவ விதவைகளும், பாண்டவ விதவைகளும் இப்போது ஒற்றுமையாகவே நீத்தார் கடன் தீர்த்துக்  கொண்டிருந்தனர். எங்கும் சந்தோஷமில்லை.  சண்டையுமில்லை.
 
என்ன சாதித்தோம் இவ்வளவு பேரின் மரணத்தைக் கொண்டு..

நதிக்கரையில் வெற்றுப் பார்வையுடன் நிற்கிறாள் திரௌபதி.படங்கள் :  இணையத்திலிருந்து நன்றியுடன்...

15 comments:

பழனி. கந்தசாமி said...

மகாபாரதக் கதை கடைசியில் நமக்கு என்ன சொல்கிறது?

G.M Balasubramaniam said...

எங்கு பார்த்தாலும் மஹாபாரதக் கதைகள். மீண்டும் கண்ணன் திரௌபதிக்கும் ஒரு கீதை சொல்லவேண்டுமோ. ?

KILLERGEE Devakottai said...

எல்லோருடைய பதிவுகளும் இப்பொழுது சரித்திரமாகி கொண்டு இருக்கிறதே....

Bagawanjee KA said...

#என்ன சாதித்தோம் இவ்வளவு பேரின் மரணத்தைக் கொண்டு.. #
இதுவா வாழும் கலை :)

இளமதி said...

//என்ன சாதித்தோம் இவ்வளவு பேரின் மரணத்தைக் கொண்டு.. //

என் மனத்திலும் எழும் கேள்வி இதே!

வல்லிசிம்ஹன் said...

பாஞ்சாலி சபதம்.
கோபம் ,பாபம்,
இறக்க வைக்கும்..
வ்யாசர் சொல்ல வந்ததுதான் என்ன.

Geetha Sambasivam said...

சகோதரச் சண்டை, தாயாதிச் சண்டை கூடாது என்பதே மஹாபாரதம் சொல்லும் முக்கியமான நீதி! அதில் அழிந்து போன குரு வம்சத்தினரை எடுத்துக்காட்டாகக் கொண்டு இனியாவது உலக மக்கள் தாயாதிச் சண்டைகளோ, சகோதரச் சண்டைகளோ இல்லாமல் வாழ வேண்டும் என்றே இதை எழுதியும் வைத்தார் வேத வியாசர். மேலும் வீட்டு மருமகளைக் கேவலப்படுத்தக் கூடாது என்பதும் முக்கியக் கருத்து. வீட்டுக்கு வந்த மருமகளைக் கேவலப் படுத்தினால் அவள் கோபம் பரம்பரையையே நாசமாக்கிவிடும் என்பதையும் சொல்கின்றனர்.

ஆனாலும் இன்றளவும் இதெல்லாம் மாறவில்லை. முறை தப்பிய உறவுகள், தாய் பெண்ணைக் கொல்லுதல், பெண் தாயைக் கொல்லுதல், தந்தை மனைவி, மக்களைக் கொல்லுதல் என்று தான் இன்னமும் நடந்து வருகிறது. மஹாபாரதத்திலேயே இப்படி நடந்திருக்கையில் நாமெல்லாம் எம்மாத்திரம் என்று சொல்லிவிடுகின்றனர் இப்போது! ஆக நாம் நம் வசதிக்கேற்பவே அனைத்தையும் எடுத்துக் கொள்வோம் என்பதைத் தான் நிரூபிக்கிறோம். :(

Geetha Sambasivam said...

உண்மையிலேயே திரௌபதி இப்படித் தான் நினைத்திருப்பாள். படிக்கையிலேயே மனம் கனத்தது. கண்களில் கண்ணீரும் வந்தது. அந்தக் கால கட்டத்துக்கே போய்விட்ட உணர்வு! :( மனதைத் தொட்ட எழுத்து!

புலவர் இராமாநுசம் said...

பாண்டவக்கதை! சொல்லிய நடை அழகு நன்று!

வலிப்போக்கன் - said...

நதிக்கரையில் வெற்றுப் பார்வையுடன் நிற்கிறாள் திரௌபதி.----இது வாழும் கலை போல

வலிப்போக்கன் - said...

நதிக்கரையில் வெற்றுப் பார்வையுடன் நிற்கிறாள் திரௌபதி.----இது வாழும் கலை போல

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

அருமையான மஹாபாரத கதை. எத்தனை முறை படித்தாலும், கேட்டாலும் சலிக்காத கதை. பாஞ்சாலியின் மன நிலையை அழகான எழுத்து நடையுடன் விவரித்து எழுதியிருக்கிறீர்கள். படிக்க படிக்க கண்ணெதிரே பாரத போர் விரிந்தது. அருமை. எப்போதுமே கோபங்களின் முடிவில் மனது அமைதியுறும் போதுதான், அந்த கோபத்தின் அர்த்தங்களை தேட ஆரம்பிப்போம். இதன் முந்தைய பகுதியையும் படிக்கிறேன். நன்றி.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

Thulasidharan V Thillaiakathu said...

முதல் கதை தொடர்கின்றோம்....சஸ்பென்ஸ்....ஆக உள்ளது...

மஹாபாரதம்....அதில் சொல்லப்படும் நீதிகள் மட்டுமே. அதுவும் அந்த இறுதி வரி....என்ன சாதித்தோம் இவ்வளவு பேர் மரணத்தைக் கொண்டு//

ம்ம்ம் அதுதான்...எல்லோரும் கோபம், க்ரோதம் உச்சிக்குச் செல்லும் போது சபதம் எடுத்துவிடுகின்றனர்..தான் அடைவதை அடையும் வரை அது கனலாககக் கனன்று..அடைந்ததும் மனக் கொந்தளிப்பு அடங்கும் போதுதான் மனது தெளிவாகி நடந்ததை நினைத்து அதன் விளைவுகளை உற்று நோக்கி.....வருந்தும் போது...இட்ஸ் டூ லேட் ஆகிவிடுகிறது...ஆனால் மனம் தெளிவடைந்து மெச்சூராகிவிட்டால் கதைகள் பிறக்கும் சாத்தியம் இல்லை....

ராமலக்ஷ்மி said...
’என்ன சாதித்தோம்..’ எல்லாப் போர்களின் முடிவிலும் சூழும் பேரமைதியில், காலங்கடந்து வருகிற ஞானம். அவரவருக்கு அவரவர் நியாயம் என்பதே போர் தர்மமாகப் பார்க்கப்படுகிறது காலம் காலமாக:( . என்றைய சூழலுக்கும் பொருந்தும் வாழ்வியல் பாடங்களைக் கொண்ட மகாபாரதக் கதையை அருமையாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

Angelin said...

எழுத்துக்கள் அந்த கால கட்டத்துக்கு கொண்டு சென்றன ..உண்மையா திரௌபதியின் மன உணர்வுகள் எப்படி இருந்திருக்கும் :( .. நெருப்பு தகிக்கிறார் போன்ற உணர்வு எனக்கு
அவரவர் நியாயங்கள் அவரவர்க்கு :(

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!