5.12.12

அலேக் அனுபவங்கள் 15:: அஞ்சு பீரியட்!

                 
பள்ளிக்கூட நாட்களில், சில உள்ளூர் விசேஷங்களுக்கும், கார்த்திகை தீபம் போன்ற மாலை நேர விழாக்களுக்கும், அஞ்சு பீரியட் பள்ளிக்கூட வகுப்புகள் நடக்கும். பிறகு எல்லோரும் 'வீட்டுக்கு பெல்' அடித்தவுடன், வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகளாக வீட்டை நோக்கி சந்தோஷமாக ஓடுவோம்.
                    
அசோக் லேலண்டில் வருடம் இரண்டு நாட்கள், நாங்க அஞ்சு பீரியட் என்று அழைக்கின்ற நாட்கள் வரும்.
              
ஒன்று கார்த்திகை தீபம். இரண்டாவது, கிறிஸ்துமசுக்கு முதல் நாள். இவைகள் வாராந்திர விடுமுறை நாட்களில் இல்லாமல் இருந்தால், அஞ்சு பீரியட் வேலை, அப்புறம் வீட்டுக்கு! இது தவிர, சட்டசபை தேர்தல்  நடக்கின்ற நாட்களில் கூட இந்த வகையில் அஞ்சு பீரியட் கணக்கு உண்டு. ஆனால் என்ன,  பெரும்பாலும் நாம் ஓட்டுப் போட சென்று பார்க்கையில், நம்முடைய வோட்டை யாராவது போட்டிருப்பார்கள் (என்று எண்ணி, வோட்டுப் போட  செல்லாமலும் இருந்துவிடுவோம்!)
                    
காலை ஏழரை மணி முதல், மதியம் ஒன்றரை மணி வரை வேலை. கம்பெனி பேருந்துகள், மதியம் ஒன்று ஐம்பதுக்கு கிளம்பி, பேருந்து பயண வசதி பெற்றவர்களை, ஏற்றிச் செல்லும்.
                
இந்த அஞ்சு பீரியட் நாட்களில், காண்டீனில் மதிய உணவாக சர்க்கரைப் பொங்கல் செய்வார்கள். தனியாக மதிய உணவு நேரம் என்று அந்த நாட்களில் கிடையாது. தாமரை இலையில் கட்டப்பட்ட சர்க்கரைப் பொங்கல், சுடச்சுட பதினொன்றரை மணிக்கு, தொழிற்சாலையின் எல்லா பகுதிகளுக்கும் வந்துவிடும். ஆரம்பத்தில், சில நாட்கள் ஒரு பாக்கெட் பதினாறு பைசா கூப்பன் கொடுத்து வாங்கினோம். போகப் போக, அது இலவசமாகவே கொடுக்கப்பட்டது. ஒருவருக்கு ஒரு பாக்கெட். என்ற வகையில் கியூவில் நின்று வாங்கிக் கொள்வோம். முந்திரியும், திராட்சையும் போட்ட, சர்க்கரைப் பொங்கல். எல்லோருமே விரும்பி சாப்பிடுவோம். 

                    
எண்பதுகளில் ஒரு கார்த்திகை தீப தினத்தன்று, வீட்டுக்கு மாலை வந்துவிடுவேன், பிறகு அகல் விளக்குகள் ஏற்றலாம் என்று கூறி, அலுவலகம் சென்றேன். நான் பணியாற்றிய பகுதியில், என் குழுவிற்கு அப்பொழுது தலைவராக இருந்த ஒருவர், அந்த நாளை, என்னுடைய பொறுமையை சோதித்துப் பார்க்கின்ற நாளாக தேர்ந்தெடுத்துவிட்டார். 
                
தனியார் நிறுவனங்களில், சாதாரணமாக நிகழ்கின்ற ஒரு விஷயம்தான், இது. ஆண்டு முழுவதும் நாம் செய்யும் பணிகளை அதிகம் கவனியாமல், நம்முடைய ஆண்டு சம்பள உயர்விற்காக படிவங்கள் பெர்சனல் டிப்பார்ட்மெண்ட் அனுப்பும் பொழுது மட்டும் விழித்துக் கொள்வார்கள். இவர், என்னுடைய பேப்பர்கள் வந்த ஆறு மாதங்கள், அதை அனுப்பாமல் வைத்திருந்து, பிறகு, என் பொறுமை குணம் எவ்வளவு என்று தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பமாக இந்த நாளை தேர்ந்தெடுத்தது, என்னுடைய துரதிருஷ்டம் என்றுதான் நினைக்கின்றேன். 
                 
லாரியின் முன் பகுதியில் இருக்கின்ற காபின் பகுதியில், புதிய கியர் பாக்ஸ் பொருத்தினால், அதை இயக்குகின்ற லீவர் பானட்டு கவர் மீது அமைக்க ஒரு பெட்டி. அதை பானட்டு கவர் மீது அமைப்பதற்கு, என்னென்ன மாற்றங்கள் செய்ய வேண்டும், என்கிற விவரங்களை ஒரு படமாக வரைய சொன்னார். அப்பொழுது மணி மதியம் ஒன்று பதினைந்து. பதினைந்து நிமிடங்களில் வரைந்து கொண்டு போய் கொடுத்தேன். அவர் ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். நான் அவருடைய அறையில் நின்று கொண்டிருந்தேன். நின்று கொண்டே இருந்தேன். கம்பெனி பேருந்துகள் எல்லாம் கம்பெனியிலிருந்து அலுவலர்களை ஏற்றிச் சென்றன - அவருடைய அறையிலிருந்து எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது. அவரும் அதை உணர்ந்தவராக, கடைசி பேருந்தும் சென்ற பிறகு, போன் பேச்சை முடித்து, நான் வரைந்த படத்தை பார்த்தார். இரண்டு மூன்று மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி இரண்டரை. 
                
மீண்டும் பார்த்து, சில மாற்றங்கள் சொன்னார். செய்தேன். மணி நான்கு. இவ்வாறு மாற்றங்கள் சொல்லி, செய்து, சொல்லி செய்து, ஆறு மணி வரையிலும் இழுத்தடித்தார். 
                        
அதற்குப் பின் நான் வரைந்த படத்திற்கு நகல்கள் தயார் செய்யச் சொன்னார். பிறகு அவருடைய உதவியாளரை அழைத்து, ஒரு கடிதம் டிக்டேட் செய்து, அதிலும் மாற்றங்கள் பல சொல்லி, செய்து, கடிதத்தையும், படத்தையும் கொண்டுபோய் பர்ச்சேஸ் டிப்பார்ட்மெண்டில் கொடுத்துவிட்டு வரச் சொன்னார். 
                 
எல்லா வேலைகளையும் முடித்து விட்டு கிளம்பும் சமயத்தில், அந்த அதிகாரி, 'என்னுடன் வருகிறாயா? பீச் ஸ்டேஷனில் டிராப் செய்கிறேன்?' என்று கேட்டார். எனக்கு இருந்த வெறுப்பில், நான் சிறிய புன்னகை ஒன்றை உதிர்த்து விட்டு, 'இல்லை சார். நான் டிரெயினில் போய்க் கொள்கிறேன்' என்று கூறி விட்டுக் கிளம்பினேன். கத்திவாக்கம் ஸ்டேஷனில் ரயில் ஏறி, சென்டிரல் வரை பிரச்னை இல்லாமல் போய் சேர்ந்தேன். 
               
ஆனால், அன்றைக்கு சோதனையாக, பார்க் ஸ்டேஷனிலிருந்து கிளம்பிய மின் தொடர், வழியில் ஏதோ பிரச்னையில் நின்று போய், குரோம்பேட்டை சென்றடைய இரவு பதினொரு மணி ஆகிவிட்டது. வீட்டில், மனைவியும், அப்பாவும் மிகவும் கவலையுடன் காத்திருந்தனர். அப்பொழுது வீட்டில் தொலை பேசி, அலை பேசி என்று எந்த தகவல் சாதனமும் கிடையாது. அன்றைக்குப் பார்த்து சென்னை தொலைக்காட்சியில் ஏதோ சோக படம் வேறு போட்டிருந்தார்கள் போலிருக்கு. (தூரத்து இடி முழக்கம்?). மனைவி மிகவும் சோகமாக இருந்தார். என்னைப் பார்த்த பின்தான் அவர்களுக்கு மகிழ்ச்சி திரும்பியது.
     
அவ்வளவு கஷ்டப்பட்டு, நான் வரைந்த படத்தை, ஒரு வாரம் கழித்துதான், சப்ளையரிடம் பர்ச்சேஸ் டிபார்ட்மெண்டிலிருந்து கொடுத்தார்கள் என்று பிறகு ஒரு நண்பரிடமிருந்து தெரிந்து கொண்டேன். 
                  

3.12.12

ஹலோ யார் பேசறது?

"குறையொன்றுமில்லை.... மறைமூர்த்தி கண்ணா..." மேஜை மேலிருந்த செல்ஃபோன் பாடி அழைத்தது. அழைப்பு வந்திருப்பதைச் சொன்னது!
                                                          

ராகவன் சற்று நேரம் அதை எடுப்பதா வேண்டாமா என்று பார்த்துக் கொண்டிருந்து விட்டு, 'ராம கிருஷ்ணன் அழைக்கிறார்' என்னும் திரையைப் பார்த்து விட்டு பட்டனை அமுக்கி,"ஹல்லோ..." என்றான்.

மறு முனைக் குரல் "யார் பேசறது ?" என்று அதட்டியது!

ராகவன் அலைபேசியை முகத்தை விட்டு விலக்கி திரையை ஒருமுறை பார்த்தவன், மறுபடி காதில் வைத்து பொறுமையாக  "நீங்கள் யார் ?" என வினவ, 

                                                

மறு முனை "உங்களுக்கு இந்த அழைப்பு யாரிடமிருந்து வருகிறது என்பது தெரியாதா?" என்றது!
   
ராகவன் அமைதியாக "இந்த ஃபோனில் விடியோ வசதி ஒன்றும் இருப்பதாகத் தெரியவில்லையே" என்றான்.

மறு முனை " அதில்லை சார், என் கஸ்டமர் ஒருவர் அவர் ஃபோனை இங்கே வைத்து விட்டுப் போய் விட்டார் எனத் தோன்றுகிறது.  அதை பையன் எடுத்துக் கொடுத்தான். உரியவர்களிடம் சேர்க்க நினைத்தேன். அதனால் தான் அதிலிருந்து நண்பர் என்று மார்க் செய்திருக்கும் பெயரில் இந்த நம்பர் இருந்ததால் நான் உங்கள் நம்பரை அழைத்தேன்" என்றார் 

ராகவன் " அட நண்பர்கள் என்றால் இப்படி அல்லவோ இருக்க வேண்டும் !  என்ன ஆச்சரியம் பாருங்கள்! இதுவும் என் கடையில் யாரோ விட்டு விட்டுப் போன ஃபோன் தான். அதனால்தான் நானும் இப்படி எச்சரிக்கையாகப் பேச வேண்டியதாயிற்று!" என்றான்.

     

2.12.12

ஞாயிறு 178:: ஆனை 65

     
     

யானையின் தமிழ்ப்பெயர்கள்: 
1  யானை/ஏனை (கரியது)
2  வேழம் (வெள்ளை யானை)
3  களிறு
4  களபம்
5  மாதங்கம்
6  கைம்மா (துதிக்கையுடைய விலங்கு)
7  உம்பர்
8  உம்பல் (உயர்ந்தது)
9  அஞ்சனாவதி
10 அரசுவா
11 அல்லியன்
12 அறுபடை
13 ஆம்பல்
14 ஆனை
15  இபம்
16 இரதி
17 குஞ்சரம்
18 இருள்
19 தும்பு
20 வல்விலங்கு
21 தூங்கல்
22 தோல்
23 கறையடி (உரல் போன்ற பாதத்தை உடையது)
24 எறும்பி
25 பெருமா (பெரிய விலங்கு)
26 வாரணம் (சங்கு போன்ற தலையை உடையது அல்லது புல்லை 
வாரிப்போடுவது)
27 புழைக்கை/பூட்கை (துளையுள்ள கையை உடையது)
28 ஒருத்தல்
29 ஓங்கல் (மலைபோன்றது)
30 நாக
31 பொங்கடி (பெரிய பாதத்தை உடையது)
32 கும்பி
33 தும்பி (துளையுள்ள கையை உடையது)
34 நால்வாய் (தொங்குகின்ற வாயை உடையது)
35 குஞ்சரம் (திரண்டது)
36 கரேணு
37 உவா (திரண்டது)
38 கரி (கரியது)
39 கள்வன் (கரியது)
40 கயம்
41 சிந்துரம்
42 வயமா
43 புகர்முகம் (முகத்தில் புள்ளியுள்ளது)
44 தந்தி
45 மதாவளம்
46 தந்தாவளம்
47 கைம்மலை (கையை உடைய மலை போன்றது)
48 வழுவை (உருண்டு திரண்டது)
49 மந்தமா
50 மருண்மா
51 மதகயம்
52 போதகம்
53 யூதநாதன் (யானைக்கூட்டத்துத் தலையானையின் பெயர்)
54 மதோற்கடம்(மதகயத்தின் பெயர்)
55 கடகம் (யானைத்திரளின்/கூட்டத்தின் பெயர்)
           
பெண் யானையின் பெயர்கள்: 
01 பிடி (அடக்கடவுளே! 'பிடி இடை' என்றால் யானை இடையா?)  
02 அதவை
03 வடவை
04 கரிணி
05 அத்தினி
   
யானைக்கன்றின் பெயர்கள்(இளமைப் பெயர்கள்): 
01 கயந்தலை
02 போதகம்
03 துடியடி
04 களபம்
05 கயமுனி
    
           (தகவலுக்கு நன்றி: விக்கிப்பீடியா) 
               

1.12.12

பாசிட்டிவ் செய்திகள் இந்த வாரம் 25/11/12 To 1/12/12


எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++    
1) கடலூர் மாவட்டம், நெய்வேலியை அடுத்த சேப்ளாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த தேவதாஸ்-ராஜேஸ்வரி தம்பதியரின் மகள் தேன்மொழி தஞ்சை தனியார் பல்கலைக் கழகத்தில் மின்னியல் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் பிரமோஸ் ஏவுகணைத் திட்ட விஞ்ஞானியாக கேம்பஸ் இன்டர்வியூவில் தெரிவு செய்யப் பட்டிருப்பதை அவர் கிராம மக்கள் சந்தோஷமாகக் கொண்டாடி உள்ளனர்.

2) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியைச் சேர்ந்த சிவில் எஞ்சினீர் டிப்ளமா முடித்த ரவிச்சந்திரன் புதிய தொழில் நுட்பத்தில் 25 நாட்களில் வீடு கட்டித் தருகிறார். மழைக்காலம் ஆரம்பித்தால் வெல்லச் சேதம் அதிகமாகி குடிசைகள் நாசமாகி ஏழைகள் கஷ்டப் படுவதைத் தவிர்க்க, குறைந்த நாட்களில், குறைந்த செலவில் அஸ்திவாரத்தில் கம்பி இல்லாமல் புதிய தொழில் நுட்பத்தில் வீடுகளைக் கட்டி வருகிறாராம். 'லோகாஸ்ட் பில்டிங் டெக்னாலஜி'க்காக தமிழ்நாடு அறிவுசார்ந்த பொருட்கள் கழகத்திடம் காப்புரிமையுய்ம் பெற்றுள்ளாராம். 220 சதுர அடியில் 11 அடி உயரத்தில் 1.20 லட்ச ரூபாய் செலவில், வீட்டின் அடிப்பகுதிக்கு 'பிளிந்த் பீம்' காலம் என ஒரு 'மோல்டும்', வீட்டின் மேற்கூரைக்கு ரூப் ஸ்லாப், காலம் லிண்டேளுக்கு ஒரு மோல்டும் பயன்படுத்தி, 25 நாட்களில் கட்டி முடிக்கப் படும் இவ்வீடுகள் தரமானதாகவும், 75 வருடங்களுக்கு உறுதியாகவும் இருக்கும் என்று கூறுகிறார். இவர் கட்டும் வீடுகளில் ஒரு ஹால், கிச்சன், டாய்லெட், செப்டிக் டேங்க், மழைநீர் சேகரிப்புத் தொட்டி என்று எல்லாம் இருக்குமாம்.

3) பாகிஸ்தானில் உள்ள கராச்சி பல்கலைக் கழகத்தில் செய்த ஆராய்ச்சிகளின்படி தண்ணீர்விட்டான் கிழங்கு நீரிழிவு நோயைக் கட்டுப் படுத்துவதைக் கண்டு பிடித்திருக்கிறார்களாம். எலிகளின் உடலில் குளுகோஸ் அளவு அதிகப் படுத்தும் மருந்து செலுத்தப்பட்டு, அப்புறம் தண்ணீர் விட்டான் கிழங்கு சாறும் செலுத்தப்பட்டு 28 நாட்கள் சோதனை நடத்தப்பட்டதாம். எலிகளின் உடலில் இன்சுலின் அதிகமாகச் சுரந்து சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப்பட்டதைக் கண்டறிந்துள்ளார்களாம்.

4) மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இயக்குனர் பிரவீணா கார்மல்: வகுப்பறையில், 10 நிமிடம் கூட அமர முடியாதவர்கள், உடல், மன வளர்ச்சி தேங்கியவர்கள் ஆகியோருக்கு, சிறப்புப் பள்ளி தான் சிறந்தது. இங்கு தான், ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்குமான, தனிப் பாடத் திட்டம், கவனிப்பு எல்லாம் கிடைக்கும். சிறப்புக் கல்வி மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கான தெரபி, மூளை நரம்புகளையும், உடலியக்க நரம்புகளையும் ஒருங்கிணைக்கும் தெரபி, நடத்தை சரியாக்கல் பயிற்சி, விளையாட்டு, உணவு, இசை, நடனம், கலை என, ஒவ்வொன்றின் மூலமும், மாணவனின் வளர்ச்சியை, வயதிற்கேற்றவாறு மீட்க, சிறப்புப் பள்ளிகளால் மட்டுமே இயலும். இந்தப் பள்ளியில் சேர்ந்தால், காலத்திற்கும் அங்கேயே இருக்க வேண்டி வருமோ என்ற பயம், சில பெற்றோருக்கு உண்டு. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியைப் பொறுத்து, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளில் குழந்தைகளை, "நார்மல்' பள்ளிக்கே அனுப்பி விடலாம். தற்போதைய கல்வித் திட்டத்தின் படி, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, "அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ், சிறப்பு ஆசிரியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர், வழக்கமான ஆசிரியர்களைத் தவிர்த்து, பிரத்யேகமாக ஒவ்வொரு குழந்தைகளுக்குமான, மன, உடல் வளர்ச்சியை பதிவேடாக பராமரித்து, கவனித்துக் கொள்வார். 

                  "சிறப்புப் பள்ளியா...பயம் வேண்டாம்!'

மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான சிறப்புப் பள்ளி இயக்குனர் பிரவீணா கார்மல்: வகுப்பறையில், 10 நிமிடம் கூட அமர முடியாதவர்கள், உடல், மன வளர்ச்சி தேங்கியவர்கள் ஆகியோருக்கு, சிறப்புப் பள்ளி தான் சிறந்தது. இங்கு தான், ஒவ்வொரு சிறப்புக் குழந்தைக்குமான, தனிப் பாடத் திட்டம், கவனிப்பு எல்லாம் கிடைக்கும்.

சிறப்புக் கல்வி மட்டுமல்ல, மொழி வளர்ச்சிக்கான தெரபி, மூளை நரம்புகளையும், உடலியக்க நரம்புகளையும் ஒருங்கிணைக்கும் தெரபி, நடத்தை சரியாக்கல் பயிற்சி, விளையாட்டு, உணவு, இசை, நடனம், கலை என, ஒவ்வொன்றின் மூலமும், மாணவனின் வளர்ச்சியை, வயதிற்கேற்றவாறு மீட்க, சிறப்புப் பள்ளிகளால் மட்டுமே இயலும்.
இந்தப் பள்ளியில் சேர்ந்தால், காலத்திற்கும் அங்கேயே இருக்க வேண்டி வருமோ என்ற பயம், சில பெற்றோருக்கு உண்டு. ஆனால், குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியைப் பொறுத்து, ஆறு மாதம் முதல் மூன்று ஆண்டுகளில் குழந்தைகளை, "நார்மல்' பள்ளிக்கே அனுப்பி விடலாம்.

தற்போதைய கல்வித் திட்டத்தின் படி, ஒரே இடத்தில் அமைந்திருக்கும் அரசு பள்ளிகளை ஒருங்கிணைத்து, "அனைவருக்கும் கல்வி திட்டத்தின்' கீழ், சிறப்பு ஆசிரியர் ஒருவர் பணி அமர்த்தப்பட்டுள்ளார். இவர், வழக்கமான ஆசிரியர்களைத் தவிர்த்து, பிரத்யேகமாக ஒவ்வொரு குழந்தைகளுக்குமான, மன, உடல் வளர்ச்சியை பதிவேடாக பராமரித்து, கவனித்துக் கொள்வார்.

அரசு தரப்பில் தேவையான உதவிகளையும் பெற்றுத் தருவார். இந்த சிறப்பு ஆசிரியர் நியமனம், அரசுப் பள்ளிகளில் மட்டுமே. தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக இருந்தால், அங்கு சிறப்பு ஆசிரியர் இருக்கிறாரா என்பதை, உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
அரசோ, தனியாரோ பொதுவாக நார்மல் பள்ளிகளில் சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது, ஒரு சிறப்பு மாணவனை, அவனை தேங்கிய நிலையிலிருந்து மீட்க, பெருமளவு உதவுகிறது. பலரோடு ஒன்றாக வளர்வதால், ஒளிந்திருக்கும் தனித் திறமைகள் வெளிப்படும். பெற்றோருக்கும், தங்கள் மகன் நார்மல் பள்ளியில் படிப்பதில் ஒரு நிம்மதி.                                    அரசு தரப்பில் தேவையான உதவிகளையும் பெற்றுத் தருவார். இந்த சிறப்பு ஆசிரியர் நியமனம், அரசுப் பள்ளிகளில் மட்டுமே. தனியார் பள்ளிகளில் சேர்ப்பதாக இருந்தால், அங்கு சிறப்பு ஆசிரியர் இருக்கிறாரா என்பதை, உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும்.
 அரசோ, தனியாரோ பொதுவாக நார்மல் பள்ளிகளில் சக மாணவர்களுடன் சேர்ந்து படிப்பது, ஒரு சிறப்பு மாணவனை, அவனை தேங்கிய நிலையிலிருந்து மீட்க, பெருமளவு உதவுகிறது. பலரோடு ஒன்றாக வளர்வதால், ஒளிந்திருக்கும் தனித் திறமைகள் வெளிப்படும். பெற்றோருக்கும், தங்கள் மகன் நார்மல் பள்ளியில் படிப்பதில் ஒரு நிம்மதி. 

5) லண்டன்: நான்கு ஆண்டுகளில் விமானத்தில் பறக்காமல் கடல் மற்றும் தரைவழி என பஸ், ரயில் ஆகியவற்றின் மூலம் 201 நாடுகளுக்கு பயணித்து 

பிரிட்டனைச்சேர்ந்த வாலிபர் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோ மீட்டர் பயணம் செய்து உலகை சுற்றி வந்த முதல் வாலிபர் என்ற பெருமையினை பெற்றுள்ளார் பிரி்ட்டனைச் சேர்ந்தவர் கிராஹம் ஹக்கிஸ் (33). இவர் பிரிட்டனின் லிவர்பூல் மாகாணத்தைச் சேர்ந்தவர். கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ம் தேதியன்று தனது பயணத்தை துவக்கினார். மொத்தம் 201 நாடுகளுக்கு இவர் சுற்றுப்பயணம் செய்தார். 
   
                                    
எந்த சூழ்நிலையிலும் வேறு நாட்டிற்கு செல்ல இவர் விமானத்தை 
பயன்படுத்தவே இல்லை. கடந்த 2009-ம் ஆண்டு புத்தாண்டு அன்று (ஜனவரி 1-ம் தேதி) தனது பயணத்தை துவக்கி மொத்தம் 1,426 நாட்களில் 1லட்சத்து 60 ஆயிரம் மைல்கள் ( 2 லட்சத்து 46 ஆயிரம் கிலோ மீட்டர்கள்) பயணித்துள்ளர். இவற்றில் சில நாடுகளுக்கு கடலில் படகு மூலமாகவும், பக்கத்து நாடுகளுக்கு ரயில், பஸ், டாக்ஸி போன்ற வாகனங்கள் வாயிலாகவும் மொத்தம் 201 நாடுகளுக்கு சென்றார். இறுதியில் ஆப்ரிக்க நாடான தெற்கு சூடானை நேற்று சென்றடைந்தார். தற்போது அந்நாட்டின் தலைவர் ஜூபாவில் தங்கியுள்ளார்.வரும் ஜனவரி மாதம் அதே புத்தாண்டு அன்று தாய்நாடு திரும்ப உள்ளார். இதன் மூலம் பல லட்சம் கிலோமீட்டர் பயணித்து உலகம் சுற்றிய முதல் வாலிபன் என்ற சாதனையையும், விரைவில் கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பெற உள்ளதாக டெய்லிமெயில் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் தனது செலவிற்காக வாரத்திற்கு 100 டாலர் செலவிட்டுள்ளார். தவிர பயணத்தின் போது ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டிற்கு சென்ற போது அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்து அநாட்டின் கேப்‌வெர்தே நகர் சிறையில் ஒரு வாரம் வைக்கப்பட்டதாகவும், பின்னர் ரஷ்யாவிற்குள் நுழைந்த போது இவரை உளவாளி என நினைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டதாகவும் தனது பயண அனுபவங்களை தெரிவித்துள்ளார்.தாம் மேற்கொண்ட இந்த மெகா பயணத்தை ஆவணப்படமாக தயாரித்துள்ளார். இவற்றை வெளியிட்டு அதன் வாயிலாக அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்ட உள்ளார்.

6) புத்தகத் தாத்தா என்று அன்புடன் அழைக்கப்படும் முருகேசன் திண்டுக்கல்லைச் சேர்ந்தவர். 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், மளிகைக் கடையில் வேலை செய்து, பிறகு அவர் மகன் இறைமணி (இவர் மக்களின் பெயர் இரமணி, இறைதாசன், இறைமலர்) பெயரில் ஒரு கடை போட்டு, அப்போது அங்கு எடைக்கு வரும் துண்டு பேப்பர்கள் முதல் பழைய புத்தகங்கள் வரை சேகரிக்கத் தொடங்கியவர் அவற்றை என்ன செய்வது என்று தெரியாமலேயே வைத்திருக்கும்போது அறிமுகமான திண்டுக்கல்லைச் சேர்ந்த ஃபாதர் ஞானப்ப்ரகாசம் நிறைய கல்லூரிகளுக்கு மாணவர்களுக்கு புத்தகங்களைக் கொடுத்து விடச் சொல்வாராம்.
அப்படித் தொடங்கிய சேவை இதுவரை மதுரைக் கல்லூரிகள் முதல் சென்னைக் கல்லூரிகள் வரை பல மாணவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் இவரது புத்தகங்கள் உதவி  பி ஹெச் டி வாங்கியுள்ளனராம். அவர்களாக ஏதாவது தொகை கொடுத்தால் வாங்கிக் கொள்வாரே தவிர, பேருந்துக் கட்டணம் தவிர வேறு எந்தத் தொகையும் கேட்பதில்லையாம். கொடுத்த புத்தகங்களை அவர்களது வேலை முடிந்தவுடன் அந்தப் புத்தகங்களை எப்படியும் வாங்கி விடுவாராம், அடுத்தவர்களுக்கு உதவ. இவரது பெயரை, தனது ஆராய்ச்சிக் கட்டுரையில் நன்றியுடன் குறிப்பிட்டுள்ளவர்களை நினைவு கூருகிறார். இவரை நமக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியிருப்பது ஆனந்த விகடனில் பாரதி தம்பி எழுதியுள்ள தெருவிளக்குப் பகுதி.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++   
                     

29.11.12

உள் பெட்டியிலிருந்து 11 2012


இப்போ என்ன சொல்ல வரீங்க....?

மூளையிருப்பவர்களுக்கு நினைவில் வைத்துக் கொள்வது எளிதாயிருக்கிறது.
இதயமிருப்பவர்களுக்கு மறத்தல் கடினமாயிருக்கிறது!

*********************************

பிரிந்து போன உறவுகளின், நட்புகளின் விதியை ஏற்றுக் கொண்டாலும் அவர்கள் திரும்ப நம் வாழ்வில் எப்போது பிரவேசிப்பார்கள் என்ற ஏக்கம் மனதில் எப்போதும்!
 
**********************************

தமிழ்ல சரியா வரலைதான்....


கடினமானவர்கள் இல்லை, வித்தியாசமாகத்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டால் நிறைய நட்புகளை இழக்க மாட்டோம்! (Difficult - Different)
 
**********************************

நமது பிரிவு ஒருவர் வாழ்வில் எந்த இழப்பையும் / மாற்றத்தையும் ஏற்படுத்தாத பொழுதில் நமது இருப்பு அவர்கள் வாழ்வில் எந்த அர்த்தத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை!

**********************************
 
காலையில் ஆரம்பித்து மாலையில் முடிவதல்ல காதல். வேண்டாதபோது வரும். வேண்டும்போது விலகி விடும்!

**********************************


ரிப்பீட்டோ....

பெரிய விஷயங்களைப் பேசத் தொடங்குவதை விட சிறிய விஷயங்களைப் புரிந்து கொள்ளத் தொடங்குவது நல்லது!

***********************************
 
கவலையற்றவர்களாகவும் ஜோக்கடிப்பவர்களாகவும் நாம் இருப்பதன் மிகப் பெரிய மைனஸ் நாம் நிஜமாக ஒரு துன்பத்தில் இருக்கும்போது கூட யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை, கவலைப் படுவதில்லை!
 
************************************

குறைந்தபட்சத் தேவைகள்; அதிகபட்ச விட்டுக் கொடுத்தல்கள். சந்தோஷ வாழ்வின் 2 படிகள்.
 
************************************

ஒருவன் லட்சம் லட்சியங்களை விரும்புவதை விட, ஒரு லட்சியத்தை லட்சம் வழிகளில் முயற்சிப்பது சிறந்ததாம்.

*************************************

தத்துபித்துவம்


டேஸ்ட் பண்ணினாலும் கரையும், வேஸ்ட் பண்ணினாலும் கரையும் ஐஸ்க்ரீம் மாதிரிதாங்க வாழ்க்கையும்! 


**************************************

ஜோக் 1

மிஸ்டர் X : மும்பை டு லண்டன்
,  விமானத்தில் பயண நேரம் எவ்வளவு மேடம்?

ரிசப்ஷன் : ஒன செகண்ட் சார்....


மிஸ்டர் X  : ஐயோடா.... டெக்னாலஜி எவ்வளவு முன்னேறி விட்டது? தேங்க்ஸ் மேடம்!



****************************************

நம் வாழ்வில் சில உறவுகள் ஆசீர்வாதங்கள். சில பாடங்கள்!


*****************************************

சரிதானா?


ஒருவருக்கு அளவுக்கதிகமான மதிப்பை என் வாழ்வில் நான் தரும்போது அவர்கள் வாழ்வில் எனக்கான முக்கியத்துவத்தை இழக்கிறேன்.

 
*******************************************

மாற்றியும் சொல்லலாம்!


அன்பின் விசாலம் அறிவின் விலாசம்!


*******************************************

ஜோக் 2

சி பி ஐ இன்டர்வியூவுக்குச் சென்றார் மிஸ்டர் X .


இண்டர்வியூ நடத்துபவர் : காந்தியைக் கொன்றது யார்?


மிஸ்டர் X : வேலை கொடுத்துள்ளதற்கு நன்றி. நான் என் வேலையைத் தொடங்குகிறேன்!

 

*********************************************

என்னா தத்துவம்...?!


தன்னைத் துளையிடும் மரங்கொத்திக்கும் இடமும் நிழலும் தரும் மரம் போல மனிதனும் தனக்குத் தொல்லை தருபவர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும். (ஸ்... அப்பாடா...)


***********************************************
வயதான விறகுதான் எரிக்க எளிது.

பழைய புத்தகங்கள்தான் படிக்க சுவாரஸ்யம்.
பழைய அரிசிதான் சாப்பிடச் சுவை. எனவே வயதாவதைக் குறித்துக் கவலைப் படத் தேவையில்லையாம்!


************************************************  
ஜோக் 3


ஹோட்டலில் மிஸ்டர் X : நோ... நான் இந்த ரூம்ல தங்க மாட்டேன். என் பணத்தைத் திருப்பிக் குடுங்க... எவ்வளவு சின்ன ரூம்? நாய் ரூம் மாதிரி இருக்கு.....!

வெயிட்டர் : யோவ்.......ரூமுக்குப் போய்யா! இது லிஃப்ட்!



*************************************************
                      

28.11.12

'நல்ல' பாம்பு!

               
உங்கள் வீட்டுக்கு பாம்பு வந்திருக்கோ.... எங்கள் வீட்டுக்கு இன்று நாகராஜன் திக்(திக்) விஜயம். வெளியில் வேலையாய் இருந்த எனக்கு வீட்டிலிருந்து பதற்ற அழைப்பு வந்து ஓடினேன்.
   
எங்கள் ஏரியாவில் பாம்பு சகஜம். தெருவில். வீட்டுக்குள் அல்ல!

                                              
நண்பர் நாகராஜன் மோட்டார் ரூமுக்குள் தஞ்சம் அல்லது குடி புகுந்திருந்தார். (ஆசை, தோசை, வீட்டுக்குளேயே வந்திருக்கும் என்று பார்த்தீர்களா!)
                   
பாம்பை வீதில பார்த்திருக்கேன், புதர்ல பார்த்திருக்கேன், ஏன்,புத்துல கூடப் பார்த்திருக்கேன்... ஆனா வீட்டுக்குள்ளயே வந்து (இதுவரை சிங்கம் சூர்யா ஸ்டைலில் படிக்கவும்) இப்போதான் பார்க்கறேன்!


2, 3 பேர் கூடி நின்று கையை உதறிக் கொண்டிருந்தால் போதாதா? மெல்ல மெல்ல ஆர்வக் கூட்டம் அதிகமானது. அது வெளியில் வர இருக்கும் ஒரே வழியையும் மக்கள் கூட்டம் அடைத்து நிற்பது ஆபத்து என்பது புரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. வழக்கம் போல மோட்டார் ரூமுக்குள் ஏகப்பட்ட அடைசல்கள்.


ஆளாளுக்கு ஒரு ஐடியா எடுத்து விட்டுக் கொண்டிருந்தார்கள். இளங்கன்றுகள் தடிகளையும் குச்சிகளையும், ஸ்டம்புகளையும் உள்ள விட்டு ஆட்டியபடி செல்போனிலும் படமெடுக்க வசதியாக ஒரு கையில் ஃபோனை ஒரு கையிலும் வைத்துக் கொண்டு சத்தப் படுத்திக் கொண்டிருந்தார்கள்.
                                                       
ஒருவர் முனால் இருந்த பழைய சிமென்ட் மூட்டை, வெயிட்டான இரும்புத் தட்டு (எதற்கு இருந்தது என்றே தெரியாமல் இருந்ததை) எல்லாவற்றையும் வேகமாக எடுத்து வெளியில் எறிந்தார். "ஏய்...பார்த்து.. எங்கள் மேல் எறியறியே" என்ற கூச்சலும் இன்னும் என்னென்னமோ கமெண்ட்களுமாக அந்த இடமே சந்தை போல இருந்தது. இன்னொருவர் தைரியமாக அந்தக் குறுகலான இடத்துக்குள் நுழைந்து பார்த்து விட்டு "உள்ளே இல்லை சார்" என்று வெளியில் வந்தார்.

"அட, உள்ள நான் பார்த்தேன்... என்ன இல்லைங்கறீங்க?" என்று என் மனைவி சண்டைக்குப் போக, "hit ஸ்ப்ரே இருக்கிறதா" என்று கேட்டேன்.


இல்லை. பக்கத்துக்கடையில் ஓடிப் போய்க் கேட்டால் அங்கும் இல்லை.


சொல்ல மறந்து விட்டேனே... பாம்பார் யு டர்ன் அடித்து வீட்டுக்குள் வராமலிருக்க கடையிலிருந்து ஒரு கிலோ கல் உப்பு, மஞ்சள் பொடி வாங்கி வந்து வீட்டுக்குள் வரும் படி முழுதும் தூவி வைத்தோம்.


செக்யூரிட்டி மெல்ல, எப்போது ஜகா வாங்கினார் என்பது தெரியாமல் காணாமல் போயிருந்தார்! மற்றவர்களை அமைதிப் படுத்தி சற்றுத் தள்ளி இருக்கச் செய்தேன். சாம்பிராணி கப்  3 எடுத்து மூன்றையும் கொளுத்தி மோட்டார் ரூமுக்குள் வொயர் இல்லாத இடமாகப் பார்த்து வெவ்வேறு இடங்களில் போட்டேன். கொஞ்சம் கொஞ்சமாகப் புகை பரவ, இரண்டு மூன்று முறை தலையை மட்டும் வெளியே நீட்டிய பாம்பார், ஆட்களைக் கண்டு மிரண்டு மறுபடி உள்ளே ஓடுவதாக இருக்க, எல்லோரையும் கொஞ்சம் தொலைவுக்குப் போகச் செய்து அமைதியான (கையில் வீடியோ எடுக்க வசதியாக செல்ஃபோனுடன் மாடிப் படி மறைவில்) இன்னுமொரு 15 நிமிடக் காத்திருப்புக்குப் பின் வெளியில் வந்து சுவரோரமாகவே விரைந்து ஓடி மறைந்தார்!
 

'உள்ளே பாம்பே இல்லை' என்றவரை அழைத்து எடுத்த வீடியோவைக் காட்டியபோது பூட்சைக் கழற்றி விட்டு பார்க்க வந்தது சிரிப்பு.
               
'சாரைப்பாம்பைக் கண்டால் வளைந்து வளைந்து ஓடு, நல்ல பாம்பைக் கண்டால் நேராக ஓடு என்பார்கள். சாரைப்பாம்பு ரொம்ப நெளியாமல் ஓரளவு  நேராகவே விரைந்து செல்லும், நல்ல பாம்பு நெளிந்து நெளிந்துதான் செல்லும் சாம்பிராணி வாசனை அடித்தால் ஒரு நாகம், புழுங்கல் வாசனை அடித்தால் ஒரு நாகம் என்றெல்லாம் கண்டுபிடிக்க முடியும்' என்றெல்லாம் தகவல் தந்தார் அவர்.

             
இடையிலேயே நெட் திறந்து பாம்பைப் பிடிக்க யாரைத் தொடர்பு கொள்ளவேண்டும் என்றெல்லாம் ஆராய்ந்தோம். பாம்பு இப்போது வெளியில் போனாலும் அது இந்த இடத்தைப் பார்த்து விட்டால் அப்புறம் அதே இடத்துக்கு வந்து கொண்டேயிருக்கும் என்று ஒருவர் அள்ளி விட்டார்!

             
ஆக, திக்விஜய நாகராஜா நல்ல பாம்பாகத்தான் இருக்க வேண்டும். இதுவரை யாரையும் கடிக்கவில்லையே! அப்புறம் ரொம்ப நேரம் இந்தச் சம்பவம் பற்றிப் பரபரப்பாகப் பேசிக் கொண்டே இருந்தார்கள். சொல்வதற்கு எல்லோரிடமும் ஒரு பாம்புக் கதை இருந்தது!


               

27.11.12

B. ஜெயச்சந்திரன்



ஜெயச்சந்திரன்... இனிமையான குரல்வளம் கொண்டவர். இனிமையான, மென்மையான பல பாடல்கள் பாடியிருக்கிறார். சிலருக்கு இவரது குரலுக்கும் கே ஜே யேசுதாஸ் குரலுக்கும் வித்தியாசம் தெரியாது! அவரது குரலில் அமைந்த, எனக்குப்  பிடித்த சில பாடல்களிலிருந்து நீங்களும் ரசிக்க ஒரு பகிர்வு.
   
1) "தென்றல் ஒரு தாளம் சொன்னது..."

"ஏரிக்காற்றே.... ஏரிக்காற்றே நில்லடி...மங்கை எண்ணம் எங்கே சொல்லடி...."



2) "காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி..."

வைதேகிக் காத்திருந்தாள் படத்தில் இவருக்கு 3 பாடல்கள். மூன்றுமே முத்துக்கள். மதுரை சினிப்பிரியா தியேட்டரில் படம் பார்க்கும்போது 'ராஜாத்தி உன்னை' பாடலுக்கு தினம் ஒவ்வொரு ஷோவுக்கும் ஒன்ஸ்மோர் கேட்பார்கள். பெரும்பாலும் மறுபடியும் போடவும் போடுவார்கள்.

"ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிறே என் மனசை... யாரை விட்டு தூது சொல்லி நானறிவேன் உன் மனசை..."



3) "வெள்ளி நிலாவினிலே..."

"அடிக்கும்போது மிருகமடா... அணைக்கும்போது மனிதனடா... தெய்வம் நீயடா.. மனத் தேரிலேறி வா ராஜா...."



4) "காதல் மயக்கம்..."

வைரமுத்து வரிகளுக்காகவே பாடலை ரசிக்கலாம். 'நான் தூங்கும் வேளை கனவுகள் தொல்லை' 'நான் தூங்கவில்லை கனவுகள் இல்லை...'

"பாதத்தில் வீழ்ந்த பௌர்ணமியே மார்பினில் தீண்டும் மார்கழியே"



5) "பொன்னென்ன பூவென்ன கண்ணே.."



6) "பாடி வா தென்றலே..."



7) "மாஞ்சோலைக் கிளிதானோ..."




8) "தேவன் தந்த வீணை...."

"மேகம் பாடும் பாடல் கேட்டேன்...  நானும் பாடிப் பார்க்கிறேன்"



9) "ராஜா மகள்..."

"பன்னீரையும் வெந்நீரையும் உன்னோடுதான் பார்க்கிறேன்..."