திங்கள், 31 அக்டோபர், 2011

சாயங்காலங்கள்

                       
சுவரில் பல்லிகள் ரெண்டு ஒன்றையொன்று துரத்தி கொண்டிருந்தன. பூச்சிகளைத் துரத்துவதை விட்டு விட்டு ஒன்றையொன்று துரத்துவதை அசுவாரஸ்யமாய்ப் பார்த்துக் கொண்டிருந்த ஜனார்த்தனன் அடி வயிறு சங்கடம் செய்ய, சாய்வு நாற்காலியிலிருந்து கஷ்டப்பட்டு எழுந்தார். நழுவிய வேஷ்டியை இழுத்து இறுக்கிக் கொண்டார்.
   
சற்றே தடுமாறியவர், அலமாரியைப் பிடித்துக் கொண்டார்.
    
எதிரில் அமர்ந்து கணினியில் ஏதோ செய்துக் கொண்டிருந்த பேரன் நிமிர்ந்து கூடப் பார்க்காமல் கணினித் திரையை முறைத்துக் கொண்டிருந்தான்.
     
மெல்ல நடந்து உள்ளே சென்றார். பெரிய மருமகள் தொலைக்காட்சி சீரியலில் ஆழ்ந்திருக்க, சின்ன மருமகள் அலைபேசியில் அரைக் கண் மூடியபடி பேசிக் கொண்டிருந்தாள்.
   
இந்தக் காட்சி அவருக்குப் பழகி விட்டிருந்தது. ஆள் மாறுமே தவிர, காட்சி மாறாது.
       
அபபடி மணிக் கணக்கில் மாறி மாறி அலைபேசியில் என்னதான் பேசுவார்களோ...? எப்படித்தான் முடிகிறதோ...! 
    
இதில் தனக்கென்ன வந்தது என்று நினைத்துக் கொண்டார். தன்னிடம் யாரும் இப்படி பேசுவதில்லை என்பதால்தான் இப்படித் தோன்றுகிறதோ? அப்படிப் பேசினாலும், நாம்தான் இவ்வளவு நேரம் செல்லில் பேசுவோமா என்று நினைத்துக் கொண்டார்.

செல்லில் பேசுவதா... நேரில் பேசினால் போதாதா... சுவரையே வெறித்துக் கொண்டிருக்க வேண்டாமே...

மணியைப் பார்த்தார். பனிரெண்டு முப்பது. ஒரு மணிக்கு ஒரு பேசும் வாய்ப்பு வரும். செய்தி நேரத்தில் சாப்பிட அழைப்பு வரும். அப்போது ஓரிரு வார்த்தைகள் பரிமாறப் படும்.

கழிவறையிலிருந்து வெளி வந்தவர் அலைபேசிப் பேச்சு ஓரிரு வினாடிகள் தடைப் பட்டதை உணர்ந்தார். தாழ்வாரக் கதவைத் திறந்து வெளியில் வந்தவர் காலை வெளியிலிருந்த குழாயில் காட்டி சுத்தம் செய்து கொண்டார். பேச்சு தொடர்ந்தது. தெரியும். சின்ன மருமகள், 'இவர், இதை செய்கிறாரா' என்று கவனிப்பதற்குத்தான் அந்த இடைவெளி.

மீண்டும் வந்து சாய்வு நாற்காலியில் அமர்ந்தார். சுவரை வெறிக்க ஆரம்பித்தார். பல்லிகள் இரண்டும்  இப்போது அப்படியே அசைவற்று சிலை போல இருந்தன. பல்லிகளுக்கு ஞாபக மறதி அதிகம் என்று அவர் எங்கோ படித்திருக்கிறார். ஓடி வந்து அப்படியே நின்று, 'தான் யார்? எங்கிருக்கிறோம்? ஏன் இங்கு வந்தோம்? என்று எல்லாம் யோசனை செய்யுமோ? அல்லது அந்த யோசனை கூட இல்லாமல் பரப்ரம்மமாய் நிற்குமோ?' தன்னாலும் எந்த யோசனையும் இல்லாமல் வெறுமே இருக்க இயலுமா? அப்படி இருக்க முடிந்தால் நன்றாக இருக்குமே! 
   
காலை மாலை வித்தியாசம் ஏதும் கிடையாது. படிக்க புத்தகம் ஏதும் பாக்கி இல்லை. மகன்கள் அலுவலகத்திலிருந்து வந்தாலும் பேச்சு ஒன்றும் இருக்காது. அவர்கள் தத்தம் மனைவியோடு பேசுகிறார்களா என்பது கூட சந்தேகம்தான்.

இவர்கள் வயதில் தான் என்ன செய்தோம் என்று யோசனை ஓடியது. உடனே தன்னைத் தனியே விட்டுச் சென்ற மனைவியின் நினைவும் வந்தது. தன்னைத் தேடி வரும் நண்பர்களுடன் மாலை நேரங்களில் உரையாடியது, மனைவி அவர்களுக்குச் சிற்றுண்டி, காபி தந்து உபசரிப்பதோடு, அவ்வப்போது அவளும் உரையாடலில் கலந்து கொள்வது என்று கிண்டலும் கேலியுமாக ஓடிய நாட்கள் அவை.

தன்னை அறியாமல் ஒரு பெருமூச்சு எழுந்தது.

இரு மகன்களும் போட்டி போட்டுக் கொண்டு இரு பக்கமும் படுத்து, தன் மேல் கால் போட்டுக் கொண்டுதான் தூங்குவார்கள். ஜனார்த்தனனைப் பார்க்க வரும் நண்பர்கள் ஜனார்த்தனன் பற்றி எதாவது விளையாட்டாகச் சொல்லி இவர்களை  வம்பிழுத்தால்,அவர்களிடம் இவரை ஆதரித்து சண்டைக்குப் போவார்கள் மகன்கள்.

இப்போது அவர்களுக்குத் தன் மேல் பிரியமில்லை என்றெல்லாம் இல்லை. பேச என்ன இருக்கிறது என்ற ஒரு வெறுமை. அவர்கள் தளம் வேறு. அவர்கள் சொல்லும் கம்பியூட்டர், ஷேர், ப்ராஜெக்ட் என்ற வார்த்தையெல்லாம் பிடிபடுவதில்லை. ஒரு சாதாரண குமாஸ்தாவாக இருந்து ஓய்வு பெற்றவர் அவர். இலக்கியத்தில் மகன்களுக்கு ஈடுபாடு இல்லை. அரசியலில் இவருக்கு ஈடுபாடு இல்லை. இவரிடம் தினமும் பேச அவர்களுக்கு சப்ஜெக்ட் இல்லை.

தனக்குள்ளேயே மனதுக்குள் இரு பாவனைகளில் பேசிக் கொள்வார். இவரிடம் கேட்டுக் கேட்டுத்தான் எல்லோரும் எல்லாம் செய்வது போல பாவனையில் அவர்களின் தினசரி வேலைகளில் இவர் யோசனைகளைச் சொல்வார்.... தனக்குள்ளேயேதான்!

'உன்னைத்தான் யாரோ கேட்டாங்க.. நீ சொல்றதை யார் கேட்கறாங்க... சத்தமா சொல்லிப் பார்த்தால் என்ன நடக்கும்...? என்ன நடக்கும், யாரும் காதிலேயே வாங்கிக் கொள்ள மாட்டாங்க...' .

"என்ன நீயே சிரிச்சுக்கறே தாத்தா"

சுருங்கிய நெற்றியில் இரு கைக் கட்டை விரல்களையும் வைத்துக் கண் மூடி யோசனையில் இருந்தவர் தன்னை மீறி வெளியிலே சிரித்து விட்டதை உணர்ந்து கண் திறந்தார்.

"ஒரு யோசனைடா பையா..."

"என்ன..?"

"நான் எனக்குள்ளேயே..." என்று தொடங்கியவர் 'என்ன' என்று கேள்வி கேட்டவன் பதிலை எதிர்பாராமல் வெளியில் சென்று கொண்டிருப்பதைப் பார்த்து, நிறுத்திக் கொண்டார். மறுபடிக் கண்களை மூடிக் கொண்டார்.

"மாமா...சாப்பிடலாமா..?"

அப்படியே தூங்கிப் போனவரை மருமகளின் குரல் எழுப்பியது. கால்கள் தானாக இயங்க, கைகள் தன்போக்கில் தட்டை எடுத்து வைத்து, சிறிது தண்ணீர் ஊற்றிக் கழுவி, உணவுக்குத் தயாரானார்.

முன்பெல்லாம் என்ன சமையல் என்பதில் ஆர்வம் இருக்கும். இப்போது அது ஒரு கடமையாகவே ஆகி விட்டது. சாப்பிடும்போதும் பேச்சு எதுவும் இருக்காது. 'அப்பா... இன்னும் கொஞ்சம்...", 'போதுமா?' என்று சம்பிரதாயப் பரிவர்த்தனைகள்...

சாப்பிட்டு வந்து மறுபடியும் சாய்வு நாற்காலியில் சாய்ந்தவர் கண்களை மூடினார்.

இந்த டிவிச் சத்தம் காதில் விழாமல் இருந்தால் தேவலாம்!. ஹூம்! கொஞ்சம் தூங்கினால் மாலை வந்து விடும். மாலை வேளைகளில் கொஞ்சம் நடந்து கொண்டிருந்தார். இப்போதெல்லாம் நடந்தால் மூச்சிரைக்கிறது. நின்று நின்று நடந்து வீடு திரும்புவதற்குள் தளர்ந்து போய் விடுகிறது. அப்புறம் இவரை ரொம்ப நேரம் காணோம் என்றால் கவலைப் பட்ட மருமகள்கள் 'நடைப் பயிற்சி வேண்டாம்' என்று சொல்லி விட்டார்கள். மங்கும் மாலை நேரங்களைப் பார்க்கும் போது தன் வயதும் இருப்பும், இருக்கப் போகும் நாட்களும் நினைவை ஆட்டும். நடைப் பயிற்சியை நிறுத்தியது, அந்த நினைவையும் நிறுத்தியது என்பது ஒரு வகையில் ஆறுதல்தான்.

எப்போதாவது இவருக்குப் பிடிக்கும் என்று தோன்றும் நிகழ்சிகளைக் கூட வேறு யாரும் வீட்டில் விரும்புவதில்லை. வைக்க மாட்டார்கள். இவரும் வற்புறுத்துவதில்லை. அபபடி வற்புறுத்திப் பார்க்கும் அளவு இவருக்கும் அதில் ஆர்வமில்லை. வற்புறுத்தினால்தான் வைத்து விடப் போகிறார்களா என்ன...

பிடிக்காத டிவியைக் கொஞ்சம் பார்த்து, நேரம் கடத்தினால் இரவு.... அப்படியே உணவு நேரம் வந்து விடும். அப்புறம் தூக்கம்.... படுத்த உடனே தூங்கி விட முடிகிறதா என்ன?

காலை எழுந்தால் பேப்பர், எதாவது புத்தகம் வந்தால் அது என்று பதினோரு மணி வரை ஓட்டி விடலாம். அப்புறம்?

புதுமைப் பித்தனின் 'ஒரு நாள் கழிந்தது' தலைப்பு நினைவுக்கு வரும். எத்தனை ஒரு நாட்களை இன்னும் கழிக்க வேண்டுமோ? முன்பெல்லாம் மரணம் என்பது பயமாக இருந்தது. இப்போது பயம் குறைந்து விட்டது என்றாலும் ஒரு தயக்கம் இருந்தது. அந்த நேரம் எப்படி இருக்கும்? முற்றாகத் தன் நினைவுகள், ஆசைகள் எல்லாம் முடிவுக்கு வரும் போது எப்படி இருக்கும்? ஆசைகளா? என்ன ஆசைகள்? எண்ணங்கள்...! 

வீட்டில் தன்னையும் சேர்த்து எத்தனை பேர்கள் என்று எண்ணிப் பார்த்தார். இரு மகன்கள், இரு மருமகள்கள், மூன்று பேரன்கள்... இவ்வளவு பேர் இருந்தும் சேர்ந்து இருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாத நிலையை எண்ணி மறுபடி ஒரு பெருமூச்சு வந்தது. மரியாதைக்கு ஒன்றும் குறைவில்லைதான். பாசம், ப்ரியம் என்பதன் அர்த்தங்கள் எல்லாம் கழன்று, அந்த வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக மட்டுமே பார்க்கும் மன நிலையை அடைந்திருந்தார்.

மறுபடியும் ஐம்பது வருடங்கள் முன்பு மனைவி இரு மகன்களுடன் தான் ஒரு ஆளுமை மிக்கவனாய் இருந்த நாட்கள் நினைவுக்கு வந்து அடுத்த பெருமூச்சையும் வெளியேற்றியது. 
                 
அவர் கணக்கில் இன்னும் எவ்வளவு பெருமூச்சுகள் பாக்கி இருக்கின்றனவோ? 
            

13 கருத்துகள்:

  1. கதை பூர்த்தி ஆகாமல் பாதியில் இருப்பது போல் தோன்றுகிறதே.

    பதிலளிநீக்கு
  2. பாவம் தாத்தா! எதிர்பார்ப்புகள் இல்லாமல் வாழ பழகி கொள்ளவேண்டும். கொஞ்சம் கடினம்தான். இருந்தாலும் பழகி கொண்டால் நிறைய மனவருத்தங்களை தவிர்க்கலாம்.

    பதிலளிநீக்கு
  3. பிரமாதம். கதையும் சரி, தலைப்பும் சரி.

    பதிலளிநீக்கு
  4. "சாயுங்காலங்கள்" என்ற தலைப்பு இன்னும் பொருத்தமாயிருந்திருக்கும்

    பதிலளிநீக்கு
  5. கதையில் பரவி இருக்கிற சோகம் நம்மையும் படருகிறது. கதையை தாமதகமாக வாசித்ததில் வருத்தமே.

    பதிலளிநீக்கு
  6. அற்புதமான கதை. சொன்ன விதம் அழகோ, அழகு!

    அந்த 'ஒரு வரி' சத்தியத்தை எவ்வளவு அழகாக ஊதி ஊதி பிர்மாண்டபடுத்தி அந்த சோகத்தை படிப்பவர் உணரும்படி வார்த்தெடுத்து தந்திருக்கிறார்!

    பலூன் கூட அப்படித்தான். ஊதி பெருக்க வைத்தால் தான் அழகு. கதைகளும் அப்படித்தான்! எழுத எழுத எழுதும் மொழிக்கே அழகு சேர்த்து எழுதுபவரையும் மகிழ வைத்து வாசிப்போரையும் சொக்க வைக்கிறது!

    அன்பான வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. மிக அருமையான கதை. பெரியவரின் சோகத்தை, சலிப்பை அப்படியே எங்களை உணர வைத்தீர்கள். சந்தோஷமான இளமைக் காலத்தைவிட அமைதியான நிறைவான முதுமைக் காலம் அமைவதுதான் வரம்.

    பதிலளிநீக்கு
  8. கொடிது கொடிது இளமையில் வறுமை. அதனினும் கொடிது முதுமையில் தனிமை என்றொரு தமிழ் மூதுரை நினைவுக்கு வருகிறது

    பதிலளிநீக்கு
  9. கதையைப் படிக்க மனது கனத்துப் போனது. எனக்கு என்ன தோன்றுகிறது என்றால் நமக்கு என்று ஒரு பொழுது போக்கு வைத்துக் கொண்டு விட வேண்டும். புத்தகம் படிப்பது, இல்லை ஸ்லோகங்கள் சொல்வது என்று. இன்னும் முக்கியமானது நம் மன, உடல் ஆரோக்கியத்தை நல்ல நிலையில் வைத்துக் கொள்வது.
    இதனால் சாயங்கால வேளைகள் ரொம்பவும் இம்சையாக இருக்காது.

    பதிலளிநீக்கு
  10. என் வாழ்க்கையைப் பார்த்து எழுதின மாதிரி இருக்குது.

    பதிலளிநீக்கு
  11. வாழ்க்கையில் வெறுமை. அது நீங்க கட்டிய மனைவி இருந்திருந்தால் இந்த எதிர்மறை நினைவுகள் வாராமலிருக்கலாம் மனம் என்பதுஒரு சண்டிக்குதிரை அதைக் கட்டுப்படுத்துவது மிகவும் சிரமம் ஆனால் எண்ணங்களை திசை திருப்பலாம் நமக்கு நாமே என்பதழி விட நாமும் பிறருக்கு என்று நினைக்கலாம் தலைப்பைப் படித்ட்க்ஹதும் ஒரு நிகழ்ச்சி மனதில் வந்து போயிற்று. என் தந்தையுடன் ஒரு நாள் நடந்து கொண்டிருந்தேன் அப்போது என் தந்தையின் சித்தப்பா எதிரில் வந்தார் எப்படி இருக்கிறீர்கள் சித்தப்பா என்று என் தந்தை கேட்க என்னத்தைச் சொல்ல ஐஆம் இன் த ஈவினிங்ஸ்ஆஃப் மை லைஃப் என்று பதில் கூறினார் இதில் என்ன irony என்றால் என் தந்தை இறந்து பின்னும் பல வருடங்கள் வாழ்ந்தார் அந்த சித்தப்பா.....!

    பதிலளிநீக்கு
  12. தனிமை கொடுமை தான். ஏதேனும் பொழுதுபோக்கை வைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது அக்கம்பக்கம் யாரேனும் இருந்தால் பேசிப் பழகலாம். (வீட்டில் எதிர்ப்பு வருமோ?) என்றாலும் இந்தக்காலங்களில் குழந்தைகள் அவ்வளவாகத் தாத்தா பாட்டியோடு பழகுவது குறைவுதான்! :(

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!