திங்கள், 6 செப்டம்பர், 2010

ஆட்டமா? ஓட்டமா?


(T) EN SPORTS  என் ஸ்போர்ட்ஸ்
ESPN (Ennaa Sports Pulidaa Nee)
NEO SPORTS நீயா?  ஸ்போர்ட்?
Star(ve) Cricket

Didi Sports அல்லது டீடீஸ்போர்ட்ஸ்!!

ஸ்போர்ட்ஸ் சானல்களை நான் இப்படித்தான் பார்க்கிறேன்காரணம் ..... 

ஒரு ஃப்ளாஷ் பாக்.

*****

என்ன அர்ஜுனா?  அவார்டா?  என் எதிராளி முகத்தில் அவ்வளவு அவ நம்பிக்கை.

ஏன் அப்பிடிக் கத்துறே?  அர்ஜுன் என் தம்பியின் பேரன்.  தம்பி சிபாரிசு செய்தால் அவன் நிச்சயம் எனக்கு ஏதாவது ஒரு அவார்டு தர மாட்டானா என்ன?

தூஅப்படியா சேதிஎனக்குக் கூடத்தான்  ஸ்கேல் ரத்னா அவார்டு கிடைக்கும்.  ரத்னா என் மச்சினி.

ஸ்போர்ட்ஸுக்கும் எனக்கும் அவ்வளவு நெருக்கம்.  டிவியில் கிரிக்கெட்டென்னிஸ் (பனியன் மட்டும் அதுவும் கை வைக்காத லோ கட் பனியன் மட்டும் போட்டுக் கொண்டு ஆடுவது போல ஒரு பிரமையை ஏற்படுத்தும் நாரீமணிகள் டென்னிஸ்என்று விளையாட்டுகளை வெங்காய பக்கோடா போன்ற ஸ்போர்ட்ஸ் ஸ்பெஷல் நொறுக்குத் தீனி யுடன் சேர்த்து ரசிக்கும் போது மட்டும் தான் எனக்கும் விளையாட்டுக்கும் ஒரு 5 அடி அல்லது அடிக்குள்ளாக நெருக்கம் இருக்கும்.

முதல் முதலாக நான் விளையாட தைரியத்தை வரவழைத்துக் கொண்டு நின்றது என் சித்தப்பா மற்றும் அவரது (கேல் கில்லாடிமகன்களுடன் வாலிபால் விளையாடத்தான்.  

நான் பதுங்கிப் பதுங்கி ஒதுங்குவதைக் கண்டு சித்தப்பா, “ ஏன் இப்பிடி நடுங்கிச் சாகுறேபந்துக்குள் என்ன பெருச்சாளியா இருக்கு? “  என்று சந்தேகமாகக் கேட்டார்.  பந்துக்குள் சிறுத்தைக் குட்டி இருப்பது போன்ற கிலி எனக்கு இருந்தது என்னவோ உண்மைதான்.  அதை நிஜம்தான் என்று நிரூபிப்பது போல என் (ஆறே மாதம் இளையகஸின், செரினா வில்லியம்ஸ் ரேஞ்சுக்கு ஒரு சர்வீஸ் போட, பந்து ஒரு புலிக்குட்டி போல என் மூக்கில் தாக்கியது.  நான் மயக்கமடைந்து விழுந்தேன் என்று சொல்லியா தெரிய வேண்டும்?  அந்தக் காலத்தில் கோக்கோ கோலா எல்லாம் கிடையாது. கோலி சோடா உண்டு ஆனால் அதை வாங்கும் வசதி (விலை இன்றைய நாணயத்தில் சொல்வதானால் 3 பைசா) இல்லை.  எனவே சாவகாசமாக கிணற்றில் தண்ணீர் சேந்திக் கொண்டு வந்து என் மயக்கத்தைத் தெளிவித்தார்கள்.  அதன் பின் என்னை யாரும் பல்லாங்குழி, ஆடுபுலி போன்ற ஆட்டம் தவிர பெரிய விளையாட்டுகளுக்குக் கூப்பிடுவதில்லை.  பல்லாங்குழிக்கு கணக்குத் தேர்ச்சியும் ஆடுபுலி ஆட்டத்துக்கு சூழ்ச்சி நிறைந்த மூளையும் தேவை.  இரண்டும் எனக்கு கடவுள் தர வில்லை. 

வேறு யாரும் கூட விளையாட இல்லாத சமயத்தில் என் சம வயது சிறுமிகள் ( 6 முதல் 8 வரை) என்னை கல்லாங்காய் தாயம் போன்ற ஹார்ம்லெஸ் ஆட்டங்களுக்கு அரை மனசாகக் கூப்பிடுவார்கள்.  நானும் பயந்து கொண்டே சேர்ந்து கொள்வேன்.  வேறு ஒரு பாவாடை அல்லது கவுன் ஆட்டத்துக்கு வந்ததும் எனக்கு அன்பாக டாடா காட்டி,  அனுப்பி விடுவார்கள்.  ஒரு கல்லை மேலே வீசிவிட்டு அது விழுவதற்குள் ஒரு பிடி புளியங்கொட்டையை அள்ளிக்கொண்டு அந்தக் கல்லையும் பிடிக்க வேண்டும் என்று ஓர் ஆட்டம்.  அதில் வேண்டாத விருந்தாளியாக நான் கலந்து கொண்டு புளியங்கொட்டைகளை பலம் கொண்ட மட்டும் வீசி யதில் என் பக்கத்து வீட்டு நண்பி சரோஜாவுக்கும் எனக்கும் நிரந்தர சண்டை வந்து விட்டது.

ஸ்கூலில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது கம்பல்ஸரி விளையாட்டு பீரியடில் என் மூளையை முற்றிலும் (அப்போது என் மூளை சற்று முற்றியிருந்தது என்ற உண்மையை பெருமையுடன் சொல்லிக் கொள்கிறேன்!) உபயோகித்து ஆசிரியர்கள் வெளியிலிருந்து கண்காணிக்கும் போது நான் ஆடுவது போல பாச்சா காட்டிவிட்டு மற்ற நேரத்தில் கிரௌண்டில் ஆபத்து இல்லாத பிரதேசமாகத் தேர்ந்தெடுத்து ஓட ஆயத்தம் செய்வதுபோன்ற போஸில் நின்று கொள்வேன்.  அந்த ஒரே வருஷத்துடன் அந்தப் பள்ளிக்கு குட் பை சொல்லிவிட்டு வேறொரு ஜில்லாவுக்கு கட்சி மாறினோம்.

அங்கு டிரில் பீரியட் மாலை கடைசி வேளையில்தான் வரும், எனது ஃபிஃப்த் ஃபாரம் வகுப்புக்கு.  ரொம்ப சௌகரியம்.  “ சார் வெளியூர் சார்” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னால், என் சோனி ஆகிருதியைப் பார்த்துவிட்டு “ சரி போய்த் தொலை” என்று டிரில் மாஸ்டர் அனுமதி வழங்கி விடுவார்.  உண்மையிலேயே ஆறு மைல் / 9 கி.மீ தூரத்திலிருந்து வந்து படித்ததால் டிரில் கிளாஸ் இருக்கும் நாட்களில் முக்கால் மணி முன்னதாகவே ஊரை நோக்கி நடையைக் கட்டுவேன்.

இறுதி வகுப்பான எஸ் எஸ் எல் ஸி அல்லது பதினோராம் கிளாசில் பள்ளி பிஸியான நகர மத்தியிலும் பிளே கிரௌண்ட் சுமார் இரண்டு கி.மீ தூரத்திலும் இருந்ததால் கிரவுண்டுக்கு 22 நிமி எடுத்துக் கொண்டு போவேன்.  திரும்ப 22 நிமி.  ஆக ஒரு பீரியட் அம்பேல். (இந்த அம்பேல் என்ற வார்த்தைக்கு எடிமாலஜி என்ன என்று தெரியவில்லை:)). இங்கும் அமெரிக்காவில் இருந்து தூதரகம் மூலமாக ஒரு பேஸ் பால் செட் வந்தது.  அதை ஆடும் அதிர்ஷ்டசாலிகளில் ஒருவனாக (ஏனோ?) என்னை மாஸ்டர் தேர்வு செய்தார்.  முதல் முதலாக ஒரு தடியனான பையனை பாட் பிடித்துக் கொண்டு நிற்கச் சொல்லி, இன்னொரு தடியனை பந்து வீசச் சொன்னார். பந்து பறந்து வர, பாட்மேன் தன் பலம் கொண்ட மட்டும் அதை கண்ட மேனிக்கு அடிக்க அது பறந்து சென்று டிரில் மாஸ்டர் வயிற்றில் பலமாகத் தாக்கியது.  'அய்யோ' என்றலறி உட்கார்ந்தவர் நினைவு திரும்பியதும் சொன்ன ஆணை: “அந்த கிட்டை எடுத்து ரூமில் வைத்துப் பூட்டு.  இனிமே ஒரு பயலும் பேஸ் பால் ஆடறேன்னு வந்தால் தெரியும் சேதி. தவறிப்போய் மண்டையில் அடிச்சிருந்தா செத்துத் தொலைஞ்சிருப்பேனேடா பாவிகளா“ என்று எங்களிடம் பதறினார்.  நியாயம்தானே என்ற பாணியில் நான் மட்டும் முகத்தை வைத்து இருந்ததைப் பாராட்டி என் கன்னத்தில் செல்லமாகத் தட்டிவிட்டு, 'கிளாஸ் டிஸ் மிஸ்' என்று வரம் அருளினார்.
                
             

வேலைக்குப் போன இரண்டாவது வருடம் அவ்வளவாக ஆபத்து இல்லாத டேபிள் டென்னிஸில் சேர்ந்தேன்.  நான் பந்துகளை உடைத்துத் தள்ளிய வேகத்தைப் பார்த்து விட்டு என்னை நைஸாக ஓரம் கட்டிவிட்டார்கள்.  ஷட்டில் காக் பந்துகளுக்கு ஏற்பட்ட அற்ப ஆயுள் காரணமாக அங்கும் என்னை ஒதுக்கித் தள்ளினார்கள்.

அப்புறம்தான் சீட்டு, கேரம் போர்டு என்று கவனம் திரும்பியது.  கேரம் போர்டு போட்டிகளில் என் பார்ட்னர் கில்லாடி.  அவர் சாமர்த்தியத்தில் செமி ஃபைனல் வரை வந்தோம்.  எதிரிகள் எனக்குக் கன்னடம் தெரியாது என்று எண்ணி கமெண்ட் அடிக்க, எனக்குக் கன்னடம் தெரியும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அந்த அதிர்ச்சியில் ஜெயித்து ஒரு சின்ன இரும்புக் கப் வாங்கியது தான் என் முதல் சாதனை.

கடைசியாக மிஞ்சினது சீட்டுதான்.  அதில் ஒரு வெறியுடன் தேர்ச்சியைத் தேடி ஓரளவு வெற்றியும் பெற்றேன்.  அங்கும் பொன்னுசாமி மேசன் என்று ஒரு பிசாசு வந்து குருட்டு அதிர்ஷ்டத்தில் ஆடி என் வெற்றி வாய்ப்புகளுக்கு சிரார்த்தம் செய்து விட்டது!!

எனவேதான் நண்பர்களே நான் விளையாட்டுகளில் மெஜாரிட்டியுடன் சேர்ந்து கொண்டு ஆடியன்ஸ் அல்லது ஸ்பெக்டேட்டர் (இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?) அந்தஸ்தில் பார்க்கிறேன்.  
                            

8 கருத்துகள்:

  1. //ஆடியன்ஸ் அல்லது ஸ்பெக்டேட்டர் (இரண்டுக்கும் என்ன வித்தியாசம்?)//

    Strictly speaking spectators usually come to see something. They come to see an event, a spectacle. The people who go to see a sporting event like a football game, a boxing bout or a cricket match are called spectators. Usually in such events the focus is on what you see rather than what you hear. If you are walking along the road and you see two of your favorite stars shooting for a film, then you would be spectator. But when you go to the cinema hall and watch the film which you saw while it was being made, then you become part of the audience. The word audience is related to the word audio. You are at a specific event to listen to something. An audience is an assembly of hearers. People who are part of the audience listen to or watch a performance. When you go to a music concert, a play or a movie, you are part of an audience.

    For further details visit http://www.english-for-students.com/Difference-Between-Spectators-And-Audience.html

    பதிலளிநீக்கு
  2. அட்டஹாஸ்யமா எழுதியிருக்கீங்களே? எழுதியது ஒருவரா பலரா? என்னோட விளையாட்டுத் திறமைங்களை அப்படியே மனசிலருந்து ஈயடிச்சான் செஞ்சது போல இருக்குதே? (கடைசியா ஒரு நாள் இட்லி ரேஸ்ல ஜெயிச்சேங்க. பெரியம்மா பையனை மூணு செகன்ட் வித்தியாசத்தில் தோற்கடித்த வீரனுங்க நான்.. அவன் இன்னும் கடைசி இட்லியை கடிச்சிட்டிருக்கிறப்ப, நான் சாம்பாரையும் சேத்து குடிச்சு வெற்றி வாகை சூடினத நெனச்சா புல்லரிக்குது.. கண்ணுல நீர் நிக்குது..)

    பதிலளிநீக்கு
  3. சாப்பாட்டு போட்டியை மறந்துவிட்டோம்! நினைவு கூர்ந்தமைக்கு நன்றி.
    சாப்பாட்டை விட நொறுக்குத் தீனிதான் நம்ம பேவரிட் ஸ்போர்ட்ஸ். மேலும் சில போட்டிகளைப் பற்றி சொல்ல ஆசை வரவேற்பு எப்படி இருக்குமோ என்று ஐயம்.

    ஆசிரியன்.

    பதிலளிநீக்கு
  4. அதெல்லாம் தயங்காம சொல்லுங்க:))

    பதிலளிநீக்கு
  5. கலக்கல் பதிவு! காலங்கார்த்தால நல்லா சிரிக்க வெச்சுடீங்க.
    //ஒரு கல்லை மேலே வீசிவிட்டு அது விழுவதற்குள் ஒரு பிடி புளியங்கொட்டையை அள்ளிக்கொண்டு அந்தக் கல்லையும் பிடிக்க வேண்டும் என்று ஓர் ஆட்டம்.//
    அதையும் பக்கத்தில் இருக்கும் புளியங்கொட்டை சிறிது கூட அசங்காமல், அள்ளும் புளியங்கொட்டைகளில் ஒன்றை கூட தவற விடாமல் அள்ள வேண்டும். இதில் என் தோழியின் அண்ணாக்கள் சிலபேர், எங்களை விட மிகவும் நன்றாக ஆடுவார்கள். கை இதுக்கு முறம் மாதிரி இருக்கணும் இல்லையா!
    மேலும் சில போட்டிகள் பற்றி நீங்க எழுத விரும்புவதை எழுதுங்கள். மிகவும் சுவாரசியமாக இருக்கிறது பதிவு.

    பொ.செ.வி. நல்ல தகவல். நன்றி!

    பதிலளிநீக்கு
  6. Hilarious

    நாம அப்படி இல்லிங்கோ. எல்லா விளையாட்டும் அத்துப்படி - ஆனால் எதிலும் பெரிய ஆளாக வரவில்லை !! குரோம்பேட்டையில் பம்பரம் தல்லேறி முதல், அண்ணாநகரில் முதுகு பஞ்சர், காத்தாடி, தெரு கிரிக்கெட் என்று ஆரம்பித்து பள்ளியில் மிகவும் பிடித்த கால்பந்தில் காலை உடைத்து கொண்டது முதல் எடுத்துக்கொண்ட ஒரே விளையாட்டு கிரிக்கெட் மட்டும் தான்.

    சென்னை கிழக்கு அண்ணாநகரில் நாங்கள் இருந்த முதல் மெயின் ரோடுக்கு பின்னால் உள்ள ரோட்டில் - யாரும் வாராமல் இருக்க "தார் டின்களை" வைத்து தெருவை அடைத்து (தெரு வேலை என்று போர்டு வேறு !!) டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் என்று வேகமாக எரிந்து எரிந்து வலது கை உருட்டுக்கட்டை போல் ஆனதால் "கீரை சாப்பிட்ட Popeye கார்ட்டூன் கேரக்டர்" ஆனது தான் நான் கண்ட பலன். ஆனால் கிரிக்கெட்டை விட வில்லை. பள்ளிக்கோ / காலேஜ் என்று ஆடவிட்டாலும் ஏதோ கொஞ்சம் நல்ல வரும். அதனால் பெங்களூர் போனவுடன் நண்பர்களுடன் கிரிக்கெட் டீம் மற்றும் வேலை பார்த்த வருடங்கள் முழுவதும் பெங்களூர் கார்பரேட் கிரிக்கெட் டீம்களில் சொனடா சாப்ட்வேர் (Sonata Software) டீமுக்கு பலபல வருடங்கள் விளையாடி இருக்கின்றேன். ஒரு முறை மிக சிறந்த டீமான ஏ.பி.பி யுடன் விளையாடிய மேட்சில் பதினொரு ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட் எடுத்து இறுதிபோட்டியில் வெற்றிவாகை பெற்றது முதல் !! கடைசியாக ஆடியது லண்டனில் இருந்த இரண்டு வருடங்களிலும் அங்கே லோக்கல் லீக் மேட்ச் ஆடியது தான். Turf விக்கெட் மற்றும் பச்சைப்பசேலென்று மைதானத்தில் இரண்டு வருடம் லண்டன் கிரிக்கெட் சுகம். பெண்டாட்டி பலநாள் இந்த ஆளு எங்கே போனான் என்று திட்டி தீர்க்கும் அளவு பல நாள் தொலைந்து போய் இருக்கின்றேன்.

    இப்போது ஆறு வருடங்களாக டென்னிஸ் என்று விளையாடி இப்போது டென்னிஸ் எல்போவ் என்று கையை பிடித்துக்கொண்டு உட்கார்ந்துக்கொண்டு இருக்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  7. //வேலை பார்த்த வருடங்கள் முழுவதும் பெங்களூர் கார்பரேட் கிரிக்கெட் டீம்களில் சொனடா சாப்ட்வேர் (Sonata Software) டீமுக்கு பலபல வருடங்கள் //

    அனாவசியமா நம்ம பொறாமையைத் தூண்டுறீங்க. சோனிகள் நோஞ்சான்கள் ரசிப்பார்கள் என்று எதிர்பார்த்து எழுதப்பட்டதாக நான் நினைக்கும் பதிவுக்கு. வில் விஜயன், கிரிக்கெட் கில்லாடி நிகர்த்த ஒருவரின் சாதனைகள் தெரிய வருவதும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    அடுத்தபடியாக என் சைக்கிளைப் பிடிய்யாவிலிருந்து விலாவரியாக, கண் கொண்டு பார்ப்பவர் ச்பெக்டேடர் எனவும் காதையும் பயன்படுத்துபவர் ஆடியன்ஸ் என்றுமறிந்தோம். நன்றி. குருட்டு ஸ்பெக்டேட்டர் அல்லது செவிட்டு ஆடியன்ஸ் கிடையாது என்று இப்போது அறுதியிட்டுச் சொல்லலாமா?

    பதிலளிநீக்கு
  8. காதை இல்லிங்க, காலை... காலைப் பயன்படுத்துபவர் ஆடியன்ஸ். பத்மினி, வைஜயந்திமாலா மாதிரி. தாடியைப் பயன்படுத்துவர் தாடியன்ஸ் - டி.ராஜேந்தர் மாதிரி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!