வியாழன், 4 ஆகஸ்ட், 2011

அதிகாலை நேரமே... நடக்கும் நினைவுகள்...

                                               
காலை நாலரை மணிக்கு நடக்கும்போது காலையின் 'சில்' சுகத்தை அனுபவிக்க முடியும். சில 'த்ரில்'களும் உண்டு. பெரும்பாலும் எல்லோரும் இந்த நேரத்தில் நடக்க பயப்படுவது நாலுகால் நன்றியுள்ள நண்பர்களால்தான்! இது வரை இந்தத் தொல்லை எனக்கு இல்லை. நமக்கு நாயைப் பிடிக்கும் என்பது நாய்க்குத் தெரியுமா என்ன என்று ஆரம்ப கால அச்சங்களை அந்த நாலுகால் நண்பர்கள் நன்றாகவே உடைத்து விட்டன. அதைக் கண்டு கோபப் படும் அல்லது பயப்படும் உணர்வுகள் ரத்தத்தில் கலந்து வியர்வையில் வெளிப்படும், அந்த வியர்வை வாசனை நாய்கள் கண்டுபிடித்து பாய்ந்து விடும் என்று எல்லோரும் சொன்னார்கள்.             
பொறாமை! தொடர்ந்து நடைப் பயிற்சி மேற்கொள்ளும் முயற்சியை நிறுத்தச் செய்த சதியை முறியடிக்கும் முகத்தான் அதே காலை நேரமே நடைப் பயிற்சி தொடரும் வீர சாகசம். எங்கேயோ யாரையோ அல்லது எதற்கோ ஒரு நாய் குலைக்கும். 


நான் நெருங்கும் தூரத்தில் இருக்கும் நாய் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து சற்றே தலையை உயர்த்தி 'என்ன ஆபத்து' என்று நிலைமையை ஆராயும். அருகில் நான்தான் வேக வேகமாக வந்து கொண்டிருப்பேன். பாதி எலும்புத் துண்டைக் கவ்வும் கனவின் பாதியில் எழுப்பப்பட்ட கோபமும், காவல் கடமையை ஆற்ற வேண்டிய கடமை உணர்ச்சியும் அதன் கண்களில் தெரிவது போல இருக்கும். என் நடை தயங்குவது போலத் தோன்றி விடக் கூடாது என்று மனதை அடக்கி வேகம் குறையாமல், அதே சமயம் நாயாரை கவனிக்காதது போல, அதன் கண்களைச் சந்திக்காமல், தாண்டுவேன். 
                                    
இடுக்கிலிருந்து ஓடி வரும் இன்னொரு கறுப்பர் வேறு யாரும் கண்ணில் படாததால் தூரத்து நாய் குலைப்பது இவனுக்காகத்தானோ என்றெண்ணி தன் குரல் வளத்தைக் காட்ட ஆரம்பித்தபடி என்னை நெருங்கினாலும் அதையும் கவனிக்காது - கவனிக்காதது போல - நடக்கும் என்னைக் கண்டு சற்றே தயங்கி, லேசாக நெருங்கி முகத்தை பூமி நோக்கி தாழ்த்தி ஆராயும்! திரும்பி ஏற்கெனவே அங்கு பாதித் தூக்கத்திலிருக்கும் நண்பன் தனக்கு கம்பெனி கொடுக்காமல் கனவைத் தொடர்வது கண்டு அசுவாரசியமாய் திரும்பி விடும். பகல் நேரத்தில் அருகில் ஓடி வரும் அந்நிய நாய்களிடம் உண்மையாகவே பயம் இல்லாமல் கண்களைப் பார்த்து 'என்னடா' என்பது போல் எதாவது பேசினால் அவை குழைந்து, வாலைக் குழைத்து நின்று விட்டு தன் வேலையைத் தொடர்வதைப் பார்க்கும்போது நிச்சயம் தெரிந்து விட்டது, நான் போன பிறவியில் நாய்தான்!

ஆள் நடமாட்டமில்லாத தனிச் சாலையில் நடப்பது இல்லை. டிராபிக் உள்ள சாலைதான். அந்த நேரத்திற்கு நடமாட்டம் ரொம்பக் கம்மி. ஏ டி எம் காவலாளிகள் எழுந்து டீ சாப்பிட நடப்பார்கள். டீக் கடைக் காரர் வந்து கடை வாசல் பெருக்குவார். எனக்குத் தெரிந்தே சுமார் இருபது வருடங்களாக அந்த இடத்தில் கடை வைத்திருக்கிறார். காலை நாலரை மணிக்குக் கடை திறக்கும் அவர், இரவு எட்டரை மணிக்கு அடைப்பார். ஞாயிறு மட்டும் மதியம் அரை நாள் கடை கிடையாது என்பதைத் தவிர, எல்லா நாளும் கடை உண்டு. ஐந்து வயதுப் பெண்ணாகப் பார்த்த அவர் பெண்ணுக்குத் திருமணம் செய்து ஒரு பேத்தியும் பார்த்து விட்டார். வருடத்திற்கு ஒருமுறை, பொங்கல் சமயத்தில் இரண்டு நாள் கடைக்கு லீவ். மற்ற படி இங்குதான் வாழ்க்கை. என்ன சுகம் கண்டிருப்பார், சினிமா, டிராமா உண்டா? உறவினர்களைப் பார்ப்பது, வெளியிடங்களுக்குச் செல்வது ஏதும் இல்லாமல் இயந்திரமயமாய் ஓடும் அவர் பிழைப்பை பலமுறை அவரிடமே நான் வியப்பதை அவர் ஒரு சலனமுமில்லாமல் கேட்டுப் புன்னகைப்பார். 'காபி வேணுமா' என்பார். வேண்டாம் என்று சொல்லி விட்டு நடப்பேன். இன்ஸ்டன்ட் காபி எனக்குப் பிடிக்காது என்பது அவருக்கும் தெரியும். சமீபத்தில் ஒருமுறை அவரிடம் கறந்த பால் வாங்கி காபி கலந்து சாப்பிடும் ஆசையைச் சொன்னபோது, "நான் கவர் பால் வாங்கற இடத்தில்தான் அவர்களும் பத்துப் பதினைந்து கவர் மொத்தமா வாங்கிப் போறாங்க...அதையும் கலந்துதான் கறந்த பால்னு தர்றாங்க..." என்று அதிர்ச்சியளித்தார்.       
          
சாதாரண நேரங்களில் பரபரப்பாகக் காட்சியளிக்கும் சாலைகளை இந்த மாதிரிக் காலை நேரங்களில் ஃப்ரீயாகப் பார்க்கும் சுகத்தை இப்போதல்ல, அவ்வப்போது செல்லும் ஊர்ப் பயணங்களின்போது அதிகாலை அந்தந்த ஊரில் இறங்கும்போதெல்லாம் அனுபவிப்பதுண்டு. முக்கிய மூலைகளில் பேப்பர்க் காரர்கள் பேப்பர்க் கட்டுகளைப் பிரித்து அடுக்கிக் கொண்டிருப்பார்கள். 
     
சாலை ஓரங்களில் கால் டாக்சி, ட்ராவல்ஸ் வண்டிக் காரர்கள் நிறுத்தி ஜன்னல் திறந்து கால் நீட்டி எஃப் எம் கேட்டுக் கொண்டிருப்பார்கள். காபி, டீக்கடைகள் சோம்பலான சுறுசுறுப்புடன் வியாபாரத்தைத் தொடங்கும் நேரம். நடைபாதைத் தூங்கிகள் சிலர் இன்னும் தூக்கத்திலும், சிலர் விழித்து அமர்ந்து நடப்போரைக் கவனித்துக் கொண்டுமிருப்பார்கள். எதிர்த் திசையிலிருந்து சக நடைப்பயிற்சிக் காரர்கள் முகம் பார்க்காமல் கடப்பார்கள். அந்த நேரத்திலும் பஸ் ஸ்டாப்பில் நாலைந்து பேர்கள் செல்லை நோண்டியபடி பஸ்சுக்காகக் காத்திருப்பார்கள். சாலையோரம் இன்னும் அதிசயமாக இருக்கும் ஒரு சாலையோர ஜகடையில்லாத கிணறொன்றில் தண்ணீர் இறைக்க கயிறு ஜகடையுடன் சட்டை இல்லாத சைக்கிள்காரர் குடங்களுடன் வந்து இறங்குவார், அல்லது சகடை இணைத்து 'கரக் கரக்' என்று தண்ணீர் சேந்திக் கொண்டிருப்பார்.
                   
கமிஷனர் ஆபீஸ் அருகில் தெருவில் திரும்பி நடக்கும் போது மரங்களுடன் தனியான சாலை. சற்று திகிலாக இருக்கும். திகில் மற்றவர்களைப் பற்றி அல்ல, இவ்வளவு காலையில் யாராவது வாக்கிங் வருவார்களா என்று நம்மேல் யாராவது சந்தேகப் பட்டு விடுவார்களோ என்று..! அந்த அதிகாலையில் அந்தத் தெருவின் ஒரு வீட்டிலிருந்து சரியாக அந்த நேரத்துக்கு வாசல் தெளிக்க வெளி வரும் நைட்டி பெண் என்னைத் திருடனாக பாவித்து அலறுவாளோ என்ற லேசான 'கெதக்' இருக்கும்! (கெதக் = திக்திக்) ஒரு நாள் கோவிலுக்கு எதிரிலிருந்து கொஞ்ச நேரம் ஒருவர், அவர் ஓரிடத்தில் நின்று விட, நின்ற இடத்தின் பக்கத்து சந்திலிருந்து ஒருவர் என்று தற்செயலாக பின்னால் தொடர்ந்த அனுபவம் ஏதோ இன்னும் சற்று நேரத்தில் நம்மை கர்ச்சீப்பை வாயில் அடைத்து கத்தித் துப்பாக்கிக் கட்டி காரில் ஏற்றிக் கடத்தப் போகிறார்கள் என்று லேசான உதைப்பு ஒருநாள்! ஒன்றுக்கும் உதவாத ஆள் என்றதும் இன்னும் உதைப்பார்களோ என்றும் தோன்றும்! நம்மை ஏன் கடத்த வேண்டும் என்று யோசிப்பதில்லை. எதாவது கற்பனை செய்ய வேண்டுமே...
                               
ஒருநாள் ஒரு தெருவிலிருக்கும் வீட்டின் கிரில் கேட்டை சிக்கனமாகத் திறந்து ஒரு 'குட்டி யானையில்' (ஏஸ் வண்டி!) டேபிள், பீரோ என்று ஏற்றிக் கொண்டிருக்க, லொடுக்குப் பாண்டி நினைவில் எதற்கும் இருக்கட்டும் என்று அந்த வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை மனனம் செய்து வைத்திருந்தேன். மறந்து விடாமலிருக்க புதிய வழிகளில் மனதில் நோட்ஸ் போட்டு ஞாபகம் வைத்துக் கொள்ள முயற்சித்தேன். ("உங்களுக்கு எதற்கு வண்டி எண்ணை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது?"-போலீஸ். "எப்பவுமே வண்டி எண்களை வைத்து கூட்டுத் தொகைப் பார்த்து நியூமராலஜி பார்ப்பது என் பொழுதுபோக்கு சார்" "எப்படியோ, நல்ல வேளை பார்த்தீங்க..உங்க உதவியால அவங்க தாம்பரம் தாண்டறத்துக்குள்ள கண்டு பிடிச்சிட்டோம்..." வீட்டு சொந்தக்காரரைப் பார்த்து, "நீங்க இவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்..." "தேங்க்ஸ் சார்") இப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை. திரும்பி வரும்போது கூட்டமாக அங்கிருந்த காபிக் கடையில் எல்லோரும் சத்தமாக பேசிச் சிரித்தபடி காபி குடித்துக் கொண்டிருந்தார்கள். ம்..ஹூம், சேவை செய்யும் அதிருஷ்டம் எனக்கில்லை!  

ஒருநாள் காம்பவுண்ட் விட்டு வெளியில் வரும்போது ஏ டி எம் காவலாளி நெருங்கினார். "நீங்க இந்த பில்டிங்ல வேலை பார்க்கறீங்களா... பதினோரு மணி, பன்னிரண்டு மணிக்கெல்லாம் ஒரு முறை வெளியில் வந்து பாருங்க... கேட்டில் ஏறி உள்ளே குதிக்க ரெண்டு மூணு பேர் வந்தார்கள்... நான் ஒரு சத்தம் கொடுத்த உடன் ஓடி விட்டார்கள்..     
" இல்லை..நான்..." பேச விடவில்லை அவர்.
" வாங்க...டீ சாப்பிடலாமா.."
காலை நான் டீ சாப்பிடறதில்லை என்றதும் என் வேறு விளக்கத்தைக் கேட்காமலேயே நகர்ந்து விட்டார்.
                   
இந்த வெறுப்பில் நான் நடையைத் தொடர்ந்த போது தனியான சாலையில் எதிரில் ஒரு நபர் தூக்கிக் கட்டிய கைலியுடனும் பனியனுடனும் என்னையே பார்த்த படி என்னை நெருங்கினார். நான் விலகி நடக்க முயற்சிக்கையில் அவரும் விலகி என் பாதைக்குக் குறுக்கே வந்து எனனை நெருங்கினார்.     
                   
 (தொடரும்!)   
                                                

25 கருத்துகள்:

  1. நடக்கும் நினைவுகள் அருமை.

    //நிச்சயம் தெரிந்து விட்டது, நான் போன பிறவியில் நாய்தான்!????????//

    உண்மையாகவா?? பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர் ஞாபகம் வைத்திருக்கிறீர்கள் பாருங்கள் - அங்கேதான் நீங்கள் நிற்கிறீர்கள் -- இல்லை..இல்லை... நடக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. நாய்க்கு பயப்படாம்ம இருப்பது ஒரு ரகம். நாய்க்கு பயப்படாத மாதிரி காட்டிக்கிறது இன்னொரு ரகம். நான் இரண்டாவது.

    பதிலளிநீக்கு
  4. நாலரை மணிக்கு நடைப்பயிற்சியா.. !!!!!

    நாலுகால் நண்பர்களைப்பத்தி சொன்னது அருமை :-)))

    பதிலளிநீக்கு
  5. தொப்பை குறைக்க நடக்கச்சொன்னா என்னல்லாம் காலேல நடக்குதுன்னு சொல்லப்போறீங்களாக்கும் !

    பதிலளிநீக்கு
  6. சுவாரசியமான பதிவு. நாங்க இருந்த இடத்துல நாய்கள் ரொம்ப அதிகம். அதுகள் பாவம் சாதுவா ஒரு ஓரத்துல உக்காந்து இருந்தாலும், எனக்கு என்னமோ உள்ளூர ஒரு உதறல் இருக்கும். அதனால அதை தாண்டி போறவரைக்கும் முருகா, முருகா, முருகான்னு ஒரே முருக ஜபம்தான். தினம் கோவில் போற வழக்கம் இருந்ததால, இதுக்காகவே காள பைரவர் சன்னதில ஒரு நிமிஷம் நின்னு அவருக்கு ஒரு பெரிய கும்புடு போட்டுட்டுதான் கிளம்புவேன். எந்த அவசரத்துல கோவில் சுத்தினாலும் இவருக்கு ஒரு கும்புடு போட மறந்ததே இல்லை. அப்படி ஒரு தனி பிரியம் காள பைரவர் மேல! :)

    //வாசல் தெளிக்க வெளி வரும் நைட்டி பெண் என்னைத் திருடனாக பாவித்து அலறுவாளோ என்ற லேசான 'கெதக்' இருக்கும்!//
    சரியா சொன்னீங்க. நிஜமாவே இந்த பயத்துனாலேயே எங்க அப்பா, நான் மார்கழி மாசம் வாசல்ல கோலம் போட்டு முடிக்கற வரைக்கும் எனக்கு துணையா உக்காந்து இருந்தார். மத்த மாசமெல்லாம் நான் கும்பகர்ணியா இருந்ததால பாவம் அப்பா தப்பிச்சார். :)

    பதிலளிநீக்கு
  7. நாய்களை நல்லா கவனிச்சியிருக்கீங்க!

    //
    ("உங்களுக்கு எதற்கு வண்டி எண்ணை நினைவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது?"-போலீஸ். "எப்பவுமே வண்டி எண்களை வைத்து கூட்டுத் தொகைப் பார்த்து நியூமராலஜி பார்ப்பது என் பொழுதுபோக்கு சார்" "எப்படியோ, நல்ல வேளை பார்த்தீங்க..உங்க உதவியால அவங்க தாம்பரம் தாண்டறத்துக்குள்ள கண்டு பிடிச்சிட்டோம்..." வீட்டு சொந்தக்காரரைப் பார்த்து, "நீங்க இவருக்குத்தான் தேங்க்ஸ் சொல்லணும்..." "தேங்க்ஸ் சார்") இப்படி எல்லாம் எதுவுமே நடக்கவில்லை. //

    :):):)

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டைக் குறும்பன்5 ஆகஸ்ட், 2011 அன்று 7:11 AM

    நாய் குறைப்பு ஆடியோ கேட்டேன். எனக்கு நாய் பாஷை தெரியும். அது சொன்னதின் மொழி பெயர்ப்பு இதோ:
    " விடு ... விடு .... ஒருத்தன்தான் இருக்கான். அஞ்சு ஆசிரியர்களும் சேர்ந்து வரும்பொழுது நாம எல்லோருமா சேர்ந்து துரத்தி, உண்டு இல்லைன்னு ஆக்கிடுவோம்!"

    பதிலளிநீக்கு
  9. //அதையும் கலந்துதான் கறந்த பால்னு தர்றாங்க...//

    இது தெரியாத வெள்ளை மனசோடு இருந்திருக்கிறீர்கள்:)!

    சேவை செய்யும் வாய்ப்பும் போச்சு.

    நடையோடு நல்ல அவதானிப்பு. சஸ்பென்ஸோடு நிறுத்தியுள்ளீர்கள்.

    காத்திருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  10. காலை நாலரைக்கு நடையா? நானெல்லாம் அந்த நேரத்தில் தூக்கத்தில் நடந்தால்தான் உண்டு.
    நாய்கள் பற்றிய உங்கள் யோசனைகளைப் படித்தவுடன் என் மகளை நினைத்துக் கொண்டேன்.
    நன்றாய் போகிறது உங்கள் நடை பயணம்.

    பதிலளிநீக்கு
  11. அதிகாலை நடக்கையில் நீங்க பார்பவைகளை வித்யாசமாக எழுதி இருக்கீங்க.ஆனால் கடைசியில் திகிலாக தொடரும் போட்டு விட்டீங்களே!

    பதிலளிநீக்கு
  12. //காலை நாலரை மணிக்கு நடக்கும்போது..//

    இங்கு ஆரம்பித்து,

    //பாதி எலும்புத் துண்டைக் கவ்வும் கனவின் பாதியில் எழுப்பப்பட்ட கோபமும்..//

    இங்கு முறுவலித்து,

    //பகல் நேரத்தில் அருகில் ஓடி வரும் அந்நிய நாய்களிடம் உண்மையாகவே பயம் இல்லாமல் கண்களைப் பார்த்து 'என்னடா' என்பது போல் எதாவது பேசினால்..//

    இங்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்கி,

    // நிச்சயம் தெரிந்து விட்டது, நான் போன பிறவியில்..//

    ஹஹ்ஹஹ்ஹா...

    //வருடத்திற்கு ஒருமுறை, பொங்கல் சமயத்தில் இரண்டு நாள் கடைக்கு லீவ். மற்றபடி இங்குதான் வாழ்க்கை என்ன சுகம் கண்டிருப்பார், சினிமா, டிராமா உண்டா? உறவினர்..//

    மீண்டும் முறுவலிக்கத் தொடங்கி,

    //சமீபத்தில் ஒருமுறை அவரிடம் கறந்த பால் வாங்கி காபி கலந்து சாப்பிடும் ஆசையைச் சொன்னபோது,..அதையும் கலந்துதான் கறந்த பால்னு தர்றாங்க..." என்று அதிர்ச்சியளித்தார்//

    ஹய்யோ.. அடக்க முடியாமல் அடக்கிய சிரிப்பு அதிர்வுடன் வெளிவர..

    //சாலையோரம் இன்னும் அதிசயமாக இருக்கும் ஒரு சாலையோர ஜகடையில்லாத கிணறொன்றில் தண்ணீர் இறைக்க கயிறு ஜகடையுடன் சட்டை இல்லாத சைக்கிள்காரர் குடங்களுடன் வந்து இறங்குவார், அல்லது சகடை இணைத்து 'கரக் கரக்' என்று தண்ணீர் சேந்திக் கொண்டிருப்பார்..//

    எதற்கு இந்தச் சிரிப்பு என்று அருகிலிருப்போர் ஒருமாதிரி என்னைப் பார்க்க,

    //எதற்கும் இருக்கட்டும் என்று அந்த வண்டியின் ரெஜிஸ்ட்ரேஷன் எண்ணை மனனம் செய்து வைத்திருந்தேன். மறந்து விடாமலிருக்க புதிய வழிகளில் மனதில் நோட்ஸ் போட்டு..//

    மீண்டும் சிரிக்க இதழ்க்கடை விரிக்க, பொறுக்க முடியாமல் பக்கத்தில் இருந்தவர், என் மடிக்கணினி ஆடி நோக்கி தலை நுழைக்க..

    //"எப்பவுமே வண்டி எண்களை வைத்து கூட்டுத் தொகைப் பார்த்து நியூமராலஜி பார்ப்பது என் பொழுதுபோக்கு சார்" "எப்படியோ, நல்ல வேளை பார்த்தீங்க..உங்க உதவியால..//

    எதைப் பார்த்து இந்த சிரிப்பு என்று எழுத்து பார்த்து அவர் திகைக்க, நான் கெக்கேபிக்கேக்க..

    // (தொடரும்!)//

    ம்?.. தொடருமா?.. யம்மா.. போதும்டா சாமி!

    பதிலளிநீக்கு
  13. மனம் மகிழ ரசித்தேன்
    அருமையான பதிவு

    பதிலளிநீக்கு
  14. விடியற்காலை நிகழ்வுகளைப்படிக்கப் படிக்க நானும் உங்களுடனேயே நடப்பது போல உணர்ந்தேன்!

    பதிலளிநீக்கு
  15. நடந்த கதை.. நடக்கும் கதையாக சுவாரசிய தொடர்... கூடவே வர்றோம்..

    பதிலளிநீக்கு
  16. ஆர்வம் தூண்டும் பதிவு.
    வேதா. இலங்காதிலகம்.
    http://www.kovaikkavi.wordpress.com

    பதிலளிநீக்கு
  17. //உங்க உதவியால அவங்க தாம்பரம் தாண்டறத்துக்குள்ள கண்டு பிடிச்சிட்டோம்..."//

    ஹி.. ஹி.. ஸேம் பிளட்!! நானும் இப்படித்தாம் பார்க்கும் இடங்கள்/மனிதர்கள்/நிகழ்வுகளையெல்லாம் வைத்து,கற்பனை செய்வேன். எதுவும் இன்னும் நிஜமாகவில்லை. நல்லவேளை!! ;-)))))))

    பதிலளிநீக்கு
  18. அதிகாலையில் உங்களுடன் கூடவே நடந்து வந்த உணர்வு...
    சிரித்துக்கொண்டே!

    பதிலளிநீக்கு
  19. நாலரை மணிக்கு காபி டீக்கடை தொறந்து வச்சிருக்காங்களா சென்னைல? குரோம்பேட்டைல ஒண்ணையும் காணோம். இருட்டுல ஒருதடவை நாய் கிடக்கிறது தெரியாம மிதிச்சுட்டு..

    பதிலளிநீக்கு
  20. அதிகாலை நடக்கும் நினைவலைகள் மிக அருமை

    பதிலளிநீக்கு
  21. ஹா ஹாங் ஹாஹாஹா :) விழுந்து புரண்டு சிரிச்சது அந்த வண்டி நம்பர் விஷயம்தான் :)

    இல்லை நாலு கால்சுக்கு அவங்க மேலே அன்பு கொண்டொர்னு நல்லாத்தெரியும் அதனால் தொல்லை தரமாட்டாங்க ..

    பதிலளிநீக்கு
  22. செம லொடுக்குப் பாண்டி!!! ஹஹஹ செம போங்க அது போல நானும் வாக்கிங்க் போகும் போது ஏதோ வீர சாகசம் எல்லாம் செய்வது போல நினைத்துக் கொண்டு நடப்பதுண்டு. அப்படி நடந்து என்ன யூஸ் ஹும்.. என் ஃபோனை அன்று ஒருத்தன் லட்டு மாதிரி லபக் பண்ணும் போது....நான் என்ன பண்ண முடிஞ்சுது..சே அப்புறம் என்னெல்லாமோ நான் டெக்னிக்ஸ் யூஸ் பண்ணி அவனை வீழ்த்துவது போல வந்து என்ன யூஸ்!!ம்ம் அதை பதிவா கூட எழுதி பாதில வைச்சுருக்கேன்...

    //பகல் நேரத்தில் அருகில் ஓடி வரும் அந்நிய நாய்களிடம் உண்மையாகவே பயம் இல்லாமல் கண்களைப் பார்த்து 'என்னடா' என்பது போல் எதாவது பேசினால் அவை குழைந்து, வாலைக் குழைத்து நின்று விட்டு தன் வேலையைத் தொடர்வதைப் பார்க்கும்போது நிச்சயம் தெரிந்து விட்டது, நான் போன பிறவியில் நாய்தான்!// ஹஹஹஹஹ சத்தியமா...சரி சரி விட்டுருங்க...ஏனா நானும் அப்படித்தான்!!ஹிஹிஹிஹி. ஆனா அவங்க பாவம் தான் நாம ரெகுலர் நா ஒன்னும் பண்ணறது இல்லை. கைல பிஸ்கட் வைச்சுக்கிட்டா போதும். வின்னர் படம் போல...எல்லாம் நம்ம அல்லக்கைகள் ஆகிடும் பாவம்...

    இதோ அடுத்த பாகம் போறேன்...
    கீதா

    பதிலளிநீக்கு
  23. ஹா ஹா ஹா அஞ்சூஊஊஊஊஊ நானும் சிரிச்சிட்டுப் போறேனாம் எனச் சொல்லி வையுங்கோ:)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!