திங்கள், 24 செப்டம்பர், 2012

இப்படியும் ஒரு வெற்றி பெற்ற காதல் கதை! சற்றே நீண்ட சிறுகதை 2

                                                                       [2]

 முன்கதைச் சு.....ட்டி!

அவர் கைகளை விடாமல் பற்றிக் கொண்டு அவர் கண்களைப் பார்த்தேன்.


"அப்பா.... உங்களைப் பார்த்ததும் பவானி எப்படி உங்களைத் தாத்தான்னு சொன்னா....?"

"ஆமாம்... எப்படிம்மா.... பழைய ஆல்பம் எதாவது கொண்டு வந்துட்டியா.... அப்படிக் கூட எதுவும் கொண்டு வந்த மாதிரித் தெரியவில்லையே...." 

திரும்பி பவானியைப் பார்த்தவர் அவளை இழுத்து அணைத்து அவள் நெற்றியிலும் தலையிலும் உதடுகளை ஒற்றினார்.

ஏதோ நினைவு வந்தவராக திடீரென நிமிர்ந்து என்னைப் பார்த்தவர் "அவர் எங்கேம்மா..."

"யாருப்பா...." ஒன்றும் தெரியாதவள் போலக் கேட்டேன்.

"இவங்கப்பா...."

"எவங்கப்பா...." 

அவ்வளவு உடனே மாப்பிள்ளை என்று சொல்வார் என்று நானும் எதிர்பார்க்கவில்லைதான். ஆனாலும் என் கேள்வியில் லேசான ஆர்வம் இருந்தது.

"உன் வீட்டுக்காரன்.... உன்னை இழுத்துகிட்டு வந்தானே.. அவனைத்தான்மா கேட்கிறேன்..."

தவிர்க்க நினைத்தும் என் முகம் லேசாக சிணுங்கியது.

  "அப்பா.... அப்படிச் சொல்லாதீங்கப்பா... அவர் மாதிரி ஒருத்தர் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும்பா  ...."

"ம்...ஹூம்!" என்றார் வெறுப்புடன். "எங்கே..?" என்றார் மறுபடி ஒற்றை வார்த்தையில்.

"வெளியூர் ஷூட்டிங் போயிருக்கார்பா...ஒரு வாரம் ஆகும்!"

ஒரு நிம்மதி தெரிந்தது அவர் முகத்தில்.

"சாப்பிடலாம்பா...." தயக்கத்துடன் அவர் முகம் பார்த்தேன்.

"வேண்டாம்மா.... இதோ கிளம்பிடுவேன்.."

"அப்பா... அவள் ஸ்கூல் கிளம்ப...." 

அவர் நிமிர்ந்து பார்க்க, "வேண்டாம்பா.... யு கே ஜிதான.... இன்னிக்கி அவ ஸ்கூல் போக வேண்டாம்.... நீங்க நிதானமா போலாம் இல்லையாப்பா.... இருப்பீங்கதான....?" கேள்வியிலேயே ஏக்கத்தையும் பாசத்தையும் வெளிப்படுத்தினேன்.

அவர் ஒன்றும் பேசவில்லை என்றாலும் டிரைவர் கொண்டுவந்து கொடுத்த பார்சலை எடுத்து பவானி கையில் கொடுத்தார்.

அங்கேயே அதைப் பிரித்த பவானி, "ஹை..... டெடிபேர்" என்று கத்தினாள். 




அவள் அதனுடன் விளையாடத் தொடங்க அவளையே பார்த்துக் கொண்டிருந்தவர்,

"கயல்.... டிரைவரைக் கூப்பிடு.." என்று தொடங்கியவர் தலையை ஆட்டி, தானே எழுந்தார்.

"இருங்கப்பா... நானே கூப்பிடறேன்.." என்று வாசலுக்கு வந்து டிரைவரைக் கூப்பிட்டேன்.

இவன் நான் அங்கு இருந்தபோது இருந்த டிரைவர் இல்லை. நான் வந்தபிறகு டிரைவர், வேலைக்காரர், சமையல்காரர் எல்லோரையும் மாற்றி விட்டார். தெரியும்!

என்னைக்கூப்பிட்டு வேலை ஏவி விட்டு, தானே கிளம்பியது உறுத்தலாக இருந்தாலும் என்னை பழைய மாதிரி 'கயல்' என்று அழைக்க வாய் வந்ததே சந்தோஷமாக இருந்தது.

பவானி அருகில் வந்து அவளிடம் என்ன வேண்டும் என்பது போல ஏதோ கேட்டார். டிரைவரிடம் ஏதோ சொல்லி பணம் கொடுத்து அனுப்பினார். அரை மணி நேரம் கழித்து டிரைவர் வந்து இன்னும் சில பார்சல்களைக் கொடுத்து வெளியில் சென்றான். அதில் சிலவற்றை எடுத்து பவானியிடம் கொடுத்தார். டிரைவர் வாங்கி வந்ததில் மிச்சம் இருந்த ஒன்றை எடுத்து என்னிடம் நீட்டினார். வாங்கிக் கொண்டேன். உள்ளே என்ன இருக்கும் என்று தெரியும்.

"நாம சேர்ந்து போய் வாங்கியிருக்கலாம்பா...." என்றேன். நிமிர்ந்து பார்த்தவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் உள்ளே ஏதோ வேலை இருப்பது போல "இதோ வந்துடறேன்பா...." என்று சொல்லி உள்ளே வந்தேன். 

வேலை ஒன்றும் ஓடவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று உள்ளிருந்தே வேவு பார்த்துக் கொண்டிருந்தேன்.

அந்த இடைவெளி எங்கள் இருவருக்குமே தேவை என்று தோன்றியது. இப்போது கொடுத்துள்ள இந்த இடைவெளி எங்களுக்குள் இருக்கும் தற்போதைய தயக்க இடைவெளியை சற்று குறைக்கும். எங்களுக்குள் என்று சொல்லக் கூடாது. அவருக்கு இருக்கும் தயக்கத்தைக் குறைக்கும். அவர்தான் எங்களை நீண்ட நாள் கழித்துப் பார்க்கிறார். நாங்கள் அல்ல! விஷயங்கள் தெரியும்போது அவர் எப்படி நடந்து கொள்ளுவாரோ.... எப்போது எப்படிப் பேச வேண்டும் என்றும் தெரியவில்லை. சீக்கிரம் பேச மனதில் ஆர்வம் இருக்கிறது.



அப்பா எழுந்து ஹாலைச் சுற்றி வந்தார். புத்தகங்களைப் புரட்டினார்.  டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்த தன்னுடைய, மற்றும் பாட்டியின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு பாராதது போலத் திரும்பி நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்! பவானியை விட்டு நீண்ட தூரம் போகாமல் அவளைக் கூடக் கூட அழைத்துக் கொண்டார்.நல்லவேளை, அவளைப் பள்ளி செல்ல விடவில்லை நான்! இப்போது எங்களுக்குள் இருக்கும் நல்லெண்ணத் தூதர் அவள்தான்! அவளை வைத்துதான் இந்த இடைவெளி குறைக்கப்பட வேண்டும்.

'சட்'டென இயல்பு நிலைக்குத் திரும்புவதுதான் எங்கள் இருவருக்குமே நல்லது என்று தோன்றியதால் ஏதோ மனதில் திடீரென அந்த தைரியம் தோன்ற ஒரு தட்டில் சூடாக ஆப்பங்கள் எடுத்துப் போட்டு, ஒரு பீங்கான் கிண்ணத்தில் பாயாவைப் போட்டு எடுத்துக் கொண்டு இயல்பாக அப்பாவிடம் நடந்தேன். 



"ஏய் வாலு.... தள்ளுடி... தாத்தா சாப்பிடணும்.... அப்பா.... இந்தாங்கப்பா... இதைப் பிடிங்க...." அவர் மறுக்குமுன் அவர் கையை இழுத்து ஒரு 'மக்'கில் நீட்டி டம்ப்ளரில் இருந்த தண்ணீரை ஊற்றி கை கழுவ வைத்தேன். டீபாய் மேல் ஆப்பத் தட்டை வைத்து சேரை எடுத்து எதிரே போட்டேன்.

அந்த தைரியம் எப்படி வந்தது என்று எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. காரணம் வீட்டை விட்டு வந்த அந்த நிகழ்வும், அதன்பின் அவரின் கோபமும்! யோசித்துப் பார்க்கும்போது வீட்டில் இருந்த நாட்களில் கூட இந்த வேலை நான் செய்தது இல்லை. பாட்டிதான் செய்வாள். குழந்தையாய், மகளாய் நான் எதிரே இருப்பேன். அவ்வளவுதான்!  

என்னதான் கோபமிருந்தாலும் அப்பாதானே என்ற சொந்தம் தந்த உணர்வு மட்டுமில்லை, அவரின் கோபம் நிறையவே கரைந்து போயிருந்தது என்பதும் தெரிந்துதானே அவர் கையில் இந்த முகவரி கிடைக்கச் செய்தார் அவர்!

எதுவும் சொல்லாமல் அவர் வந்து உட்கார்ந்தபோது மனம் நிம்மதியடைந்தது. கண்கள் கலங்க முயற்சிப்பதைக் கட்டுப் படுத்தினேன்.

"நானும்.... நானும்..... நானும் சாப்பிடணும்.....எனக்கு..." என்று பவானி அந்தத் தட்டிடம் ஓட, எனக்கு பதற்றம் கலந்த கோபம் வந்தது. 

'கெடுத்துடுவா போலேருக்கே... இவ கிட்டக் கொடுத்துட்டு ஒதுங்கிடப் போறார்....'  
                                                                                                                          
                                                                                                                                 (தொடரும்)  


படங்கள் உதவி : நன்றி இணையம்.
                    

19 கருத்துகள்:

  1. அடுத்த பகுதி நாளைக்கே போடக் கூடாதா ?

    பதிலளிநீக்கு
  2. இயல்பா அருமையா எதார்த்தமா சூப்பரா இருக்கு சார்... பார்த்து பார்த்து செதுக்கி இருக்கீங்க போல.. சீக்கிரமா அடுத்த பகுதிய வெளியிடுங்க... இப்படியும் வெற்றி பெற்ற காதல் கதையை படிக்க அவ்வளவு ஆர்வமா இருக்கோம்

    பதிலளிநீக்கு
  3. இயல்பான நடை! பிளாஷ் பேக் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாய் இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. அருமை. பொருத்தமாய் எப்படி படங்கள் இணையத்தில் பிடித்தீர்கள்??

    பதிலளிநீக்கு
  5. அடுத்த பகுதி சீக்கிரமே போடுங்க சார்.

    பதிலளிநீக்கு
  6. நேரில் சந்தித்தப் பின்னும் தொடருகிற இடைவெளியை மிக அழகாகக் காட்டியிருக்கிறீர்கள்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல கதை... தொடர்ந்து படிக்க போறேன்.. .சீக்கரம் அடுத்த போஸ்ட் போடுங்க

    பதிலளிநீக்கு
  8. கதையோட்டம் மிக இயல்பாக செல்கிறது. அடுத்த பகுதியை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  9. அடுத்த பகுதிக்கு வெயிட்டிங்.. (இப்பத் தான் இதன் அருமை தெரிஞ்சது; இப்படி ஒற்றை வரியில் கமெண்ட் போடுவது ரொம்ப சுலபமா தான் இருக்கு!) :))

    பதிலளிநீக்கு
  10. அடுத்த அத்தியாயத்துக்காக ஆவல் !

    பதிலளிநீக்கு
  11. அதென்னா நீண்ட சிறுகதை? தொடர்கதைன்னே போட்டிருக்கலாம். அல்லது, “நீஈஈஈஈஈஈண்ட சிறுகதை”ன்னும் சொல்லலாம். :-))))

    சிவாஜி-பேபி ஷாலினி நடிச்ச ஒரு படம் (பேர் நினைவில்லை) நினைவுக்கு வருது.

    பதிலளிநீக்கு
  12. நன்றி எல்கே.... தொடர் ஆதரவிற்கு நன்றி சீனு... நன்றி மீனாக்ஷி... நன்றி மோகன் குமார்...படங்கள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கின்றனவே!... நன்றி ஸாதிகா... நுண்ணிய அவதானிப்புக்கு நன்றி ராமலக்ஷ்மி.. நன்றி அப்பாவி தங்கமணி... நன்றி ஹேமா (HVL).... நன்றி ஜீவி சார்... நீங்கள் சுருக்கமாக ஒற்றை வரி பின்னூட்டமிட்டால் பொருந்தவில்லைதான்!...நன்றி கீதா மேடம்... நன்றி ஹேமா... நன்றி ஹுஸைனம்மா... நீங்கள் சொல்லும் படம் 'பந்தம்'. அப்படியா இருக்கிறது?

    அடுத்த பகுதி கேட்கும் அனைவருக்கும்... சீக்கிரம் முடிந்து விடும்... கவலை வேண்டாம்! கடைசி பகுதிக்குப் பின்னும் உங்கள் ஆதரவு தொடரட்டும்!! :))))

    பதிலளிநீக்கு
  13. இப்படி பாதியிலேயே நிறுத்திட்டீங்களே.. அடுத்த பகுதி சீக்கிரம் போடுங்க.

    பதிலளிநீக்கு
  14. இயல்பாகச் சொல்லப்பட்ட இனிய கதை. மேலும் படிக்க ஆவலைத் தரும் நடை.  வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. //வேலை ஒன்றும் ஓடவில்லை. அவர் என்ன செய்கிறார் என்று உள்ளிருந்தே வேவு பார்த்துக் கொண்டிருந்தேன்.

    அந்த இடைவெளி எங்கள் இருவருக்குமே தேவை என்று தோன்றியது. இப்போது கொடுத்துள்ள இந்த இடைவெளி எங்களுக்குள் இருக்கும் தற்போதைய தயக்க இடைவெளியை சற்று குறைக்கும்.//


    //அப்பா எழுந்து ஹாலைச் சுற்றி வந்தார். புத்தகங்களைப் புரட்டினார். டிரஸ்ஸிங் டேபிள் மேலே இருந்த தன்னுடைய, மற்றும் பாட்டியின் புகைப் படத்தைப் பார்த்து விட்டு பாராதது போலத் திரும்பி நான் பார்க்கிறேனா என்று பார்த்துக் கொண்டார்!//

    அனுபவித்து எழுதும் அழகு.

    //அவர் கையில் இந்த முகவரி கிடைக்கச் செய்தார் அவர்!//

    இரண்டு 'அவர்'களில்,

    //எதுவும் சொல்லாமல் அவர் வந்து உட்கார்ந்தபோது... //

    இந்த 'அவரை'யாவது அப்பா என்று சுட்டி திடீர் குழப்பத்தைத் தவிர்த்திரு க்கலாமோ?..

    பதிலளிநீக்கு
  16. அமைதிசாரல், திண்டுக்கல் தனபாலன், கீதா சந்தானம், வருகைக்கும் கருத்துகளுக்கும் நன்றி.

    ஜீவி சார்... மீள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி. உண்மைதான். இப்போது படிக்கும்போது ஒரு அவரை அப்பாவாக்கியிருக்கலாம் என்று தோன்றுகிறதுதான். நன்றி. கதைக்கான விதை பந்தத்திலிருந்து இல்லை! அது கேள்விக்கான விடை மட்டுமே!

    பதிலளிநீக்கு
  17. கதைக்கான விதை?..

    நானும் 'பந்த'த்தைச் சொல்ல வில்லை;
    சொல்லப் போனால் அதைப் பற்றி நினைக்கவே இல்லை. வேறொன்று.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!