செவ்வாய், 30 அக்டோபர், 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள் 10

           
பத்திரிகைகளுக்கு நாம் கேள்விகள் அனுப்பினால், அது பிரசுரமானால், அந்தக் கேள்விகளுக்கு அவர்கள் பதில் சொல்வார்கள். 
   

இங்கு ஒரு மாறுதல்.

எங்கள் கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லுங்களேன்...  

 ======
           

1) வீடுதோறும் சூரியசக்தி மின்சாரம் உபயோகப்படுத்தும்படி அரசாங்கம் சொல்கிறதே... அல்லது காற்றாலை மின்சாரம் தயாரிக்கவும் அறிவுறுத்தபடுகிறதே... இதனால் தேவை பூர்த்தியாகும் என்று நினைக்கிறீர்களா? எவ்வளவு செலவு இதற்கு பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? மின்சாரம் தயாரிக்கக் காற்றாலைக்கு காற்றின் வேகம் குறைந்தபட்சம் எவ்வளவு இருக்கவேண்டும்?
               
2) விடுமுறை இல்லாத விடுமுறை - இவர் பிறந்த நாளில் மாணவர்கள் எல்லோரும் பக்கெட்டும் கையுமாகச் சென்று பொது இடங்களை சுத்தம் செய்வார்கள். யாருடைய பிறந்த நாள் இது? 
           
3) அனுபவமின்மை காரணமாக இளைஞர்களும், விரைந்து  செயல்படமுடியாத முதியவர்களும் அரசியலை விட்டு விலகுவது நன்று என்று நினைப்பது பற்றி உங்கள் கருத்து....
                

திங்கள், 29 அக்டோபர், 2012

உள் பெட்டியிலிருந்து - 10 2012


வலைச்சரத்தில் எங்கள் முதல் பதிவு "இங்கே சொடுக்குக!"


காதல் உளறல்


என் தவிப்பு
அவளுக்கு 
சிரிப்பாக இருக்கலாம்
ஆனால்
அவளுக்குத் தெரியாது,
நான் தவிப்பதே
அவளின் சிரிப்புக்காகத்தான் என்று...!

********

பிரிவு என்பது
உறவின் முடிவு அல்ல...
நினைவின் ஆரம்பம்.
=========================

என்ன அர்த்தம்?


உங்கள் அனுபவங்களை நீங்கள் விரும்பும் எல்லோருடனும் பகிருங்கள்.

உங்கள் உணர்வுகளை உங்களை விரும்பும் ஒருவருடன் பகிருங்கள்!!
===============================

பதில் சொல்ல முடியா காரணம்!


உங்கள் நண்பரிடமிருந்து உங்கள் கேள்விக்கு நேரிடையான பதில் வரவில்லை என்றால் ஒன்று அது உங்களுக்கு அதிக துன்பத்தைத் தரலாம் அல்லது அவர்கள் ஒத்துக் கொள்ள முடியாததாய் இருக்கலாம்.
==============================  
   
கெட்ட நேரமாத்தான் இருக்கணும்!


சூரியனைப் பார்த்தும் நேரம் சொல்லலாம்...கரண்ட் போறதை வைத்தும் நேரம் சொல்லலாம்..  
---------------------------------------

அப்படிப் போடு...


எல்லாரையும் இழந்து தனியாக நிற்கும்போதும் 'அப்பாடி, இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை' என்ற எண்ணமே பாசிட்டிவ் திங்கிங்!    
===========================

ஜோக்'கடி' 1


டீச்சர் : "ஏன் லேட்?"

மாணவன் : "அப்பாவும் அம்மாவும் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள்.."

டீச்சர் : "அவர்கள் சண்டையிட்டால் உனக்கு ஏன் லேட்?"

மாணவன் : "என்னுடைய ஒரு ஷூ அப்பா கையிலும் இன்னொரு ஷூ அம்மாவின் கையிலும் இருந்தது"   
=================================

ஜோக்'கடி' 2


பெண் : "ஹலோ....இது 'கஸ்டமர் கேர்'தானுங்களே..."

கஸ்டமர் கேர் : "ஆமாம் மேடம்...சொல்லுங்கள் என்ன பிரச்னை?"

பெண் : "என் அஞ்சு வயசுப் பையன் சிம் கார்டை முழுங்கிட்டான்...அதுல எழுபத்தைந்து ரூபாய் மிச்சம் இருந்தது...."

கஸ்.கேர் : "சொல்லுங்க மேடம்..."

பெண் : இப்போ அவன் பேசும்போது காசு போகுமா.."    
=================================================

ஆமாம்...தெரிஞ்சுக்குங்க..!


பிரார்த்தனை என்பது கடவுளின் சித்தத்தை மாற்ற அல்ல... நம் மனதைத் தயார் செய்ய...   
==========================================

அற்புத கணங்கள்...


தனிமையின் கணங்கள்தான் உலகின் மிகச் சிறந்த கணங்கள். ஏனெனில் அப்போதுதான் அப்போதுதான் நம்முடைய ஆழமான ரகசியங்களை உலகிலேயே நாம் நம்பும் ஒருவரிடம் நாம் பகிர்ந்து கொள்கிறோம். நம் உள்மனதுதான் அது!     
================================

முதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்


நீ இருக்க
ஒரு
கருவறை இருந்தது
என்
வயிற்றில்...

ஆனால்
நான் இருக்க 
ஒரு
இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்....    
========================

ஆமாம் இல்லை?!


குழந்தைகளின் மனம் ஈர சிமென்ட் போல.... எது விழுந்தாலும் பதிந்து விடுகிறது!  
======================================

வாழ்க்கை ஒரு வட்டம்டா...!

     

கரப்பு எலிக்கு பயப்படுகிறது
எலி பூனைக்கு
பூனை நாய்க்கு
நாய் மனிதனுக்கு
மனிதன் தன் மனைவிக்கு
மனைவி கரப்புக்கு...   
====================================

ஜோக்'கடி' 3


கணவன் :"ஹிப்னாடிசம் என்றால் என்ன...?"

மனைவி ;"அடுத்தவர் மனத்தைக் கட்டுப் படுத்தி நம் இஷடத்துக்கு ஆட்டுவிப்பது..."

கணவன் :"என்னை முட்டாளாக்காதே...அதற்குப் பெயர் திருமணம்..."    
=============================

சிந்தனை முத்து...


கௌரவமான, உண்மையான இதயங்களை வெளியில் தேடுவதை விட ஏன் நாமே அபபடி இருந்து விடக் கூடாது?    
===============================

இது பதில்...!


கடல் ஆற்றைக் கேட்டது. "இன்னும் எத்தனை நாள் என் உப்பு இதயத்துக்குள் ஊடுருவிக் கொண்டே இருக்கப் போகிறாய்..."

ஆறு சொன்னது " நீ இனிப்பாகும் (இனிமையாகும்) வரை"    
================================  
                               

ஞாயிறு, 28 அக்டோபர், 2012

ஞாயிறு 173 :: புதிர்க் கோலங்கள்!


இவை என்ன? 
     நன்றாகப் பாருங்கள். 



கண்டு பிடிப்பவர்களுக்கு, கருத்துரைப்பவர்களுக்கு, பாயிண்டுகள் கொடுத்து, பிறகு அதிக பாயிண்டுகள் பெற்றவருக்கு "து நி 2012" பட்டம் கொடுத்து, அதற்குப் பிறகு .... ?? 
          
க்ளூ? கப்பல், ஒட்டுவதற்கு பசை.
                

சனி, 27 அக்டோபர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 21/10/12 டு 28/10/12


எங்கள் B+ செய்திகள்.

விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

============================

தஞ்சையிலிருந்தபோது கணவரின் மளிகைக் கடையில் நஷ்டம் ஏற்பட, மகன்களின் படிப்புச் செலவும் படுத்த, சென்னை வந்த இன்பவள்ளியின் குடும்பம், திருச்சி வந்து அங்கு மகளிர் சுய உதவிக் குழு மூலம் ஒரு தேவையின் போது இன்பவள்ளி செய்து கொடுத்த ஊறுகாய் நன்றாக விற்பனை ஆக, அப்போது தொடங்கி ஊறுகாயும் தேன்குழல் உள்ளிட்ட பலகாரங்களும் செய்து விற்பனை செய்யத் தொடங்கினர். மகளிர் தொழில் முனைவோர் சங்கம் மூலம் 25,000 ரூபாய் கடனுதவி பெற்று மெஷின்கள் வாங்கி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் உதவியுடன் மாணவர்களிடையே வியாபாரமாகத் தொடங்கிய பிசினஸ் இன்று எல்லா கடைக்காரர்களும் இவர்களது தயாரிப்பு நன்றாக விற்பனை ஆவதாகக் கூறி ஆர்டர் தரத் தொடங்கியதில் மாதம் நான்கு லட்சம் வரை இலாபம் வருகிறதாம். சொல்வது தினமலர்.  
=============================

இதேபோலவே இன்னொரு வெற்றிக் கதையும் சொல்லியிருக்கிறது தினமலர். திண்டுக்கல்லில் (தனபாலன்! உங்கள் ஊர்ச் செய்தி வாராவாரம் வந்து விடுகிறது!) இதேபோல மளிகைக் கடை வைத்து நஷ்டமடைந்த வள்ளிமயில் என்பவரின் வெற்றிக் கதை. அவர் கணவர் காந்தியவாதி என்பதால் பொருட்களைக் குறைந்த விலைக்கே விற்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாராம். இப்போது போல விதம் விதமான மிட்டாய்கள் இல்லாத அந்தக் காலத்தில் ஒருமுறை இவர்கள் கடைக்கு கடலை மிட்டாய் போடுபவர்கள் வராது போன நிலையில் கணவர் சொற்படி, இவரே அதைத் தயார் செய்து விற்பனையில் வைக்க, அதன் வெற்றியில் உற்சாகமாகி, வீட்டிலிருந்த நாத்தனார்கள் முதலியானோர் உதவியுடன் கொஞ்சம் பெரிய அளவில் தயார் செய்ய, அதைக் கணவர் ரயிலில் எடுத்துக் கொண்டு வெளியூர்கள் சென்று கடைகளில் போட்டு வருவது வாடிக்கையான நாளில், இவர்களது தயாரிப்பின் சுவையால் கவரப் பட்ட வாடிக்கைக் கடைக்காரர் ஒருவர் எள்  மிட்டாய் செய்யும் ஐடியா கொடுக்க, அதுவும் வெற்றியடைந்ததாம். அப்புறமும் சிறிய தொழிலாக இதைச் செய்ய வேண்டாம் என்று திண்டுக்கல்லில் இருந்த வீடு நிலத்தை விற்று பெரிய கம்பெனி கட்டி 50 பெண்களை வேலைக்கு வைத்து செய்யும் இவர்களது தயாரிப்பு இன்று இந்தியா முழுவதும் பிரபலமாக இருக்கிறது என்று சொல்வதாகச் சொல்லும் தினமலர், இவர்கள் தயாரிப்பின் பெயரைச் சொல்லவில்லை!
================================

வயதான பெரியவர்கள் தெருவோரங்களில் கையேந்தி நிற்பதைக் கண்டால் பரிதாபமாக இருக்கிறதா? பிள்ளைகள் பராமரிக்காத, வசிக்க வீடு இல்லாத, சாப்பாட்டுக்கு வழி இல்லாத என்று எந்த ஒரு முதியவர்களின் பிரச்னைக்கும் தீர்வு காண 1253 என்ற எண்ணுக்கு சொன்னால் அந்தந்த ஊரின் முதியோர் இல்லங்களில் சம்பந்தப் பட்டவர்களைச் சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்ற தகவலைச் சொல்கிறது 17/10 விகடன் 'ஒன நம்பர் ரிசீவ்ட்' பகுதி.
           

(இது விகடனில் படித்த செய்தி. எங்கள் நண்பர் ஒருவர், மூதாட்டி ஒருவர் மழையில் நனைந்து கொண்டு தெருவில் கஷ்டப்படுவதாகச் சொன்னவுடன் இந்த எண்ணைக் கொடுத்தோம். பலமுறை பலவிதங்களில் முயற்சித்தும் இந்த எண்ணுக்கு தொலைபேச முடியவில்லை என்பதும் இங்கு பதிவு செய்யப் படுகிறது)  
==============


அனந்தபுரி விரைவு வண்டியில் கடைசி ஞாயிறு அன்று சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பையை பெட்டியிலேயே விட்டு விட்டு, கொடை ரோடில் இறங்கிச் சென்று, பாதி வழியில் நினைவு வந்து ரெயில்வே போலீசுக்கு ஃபோன்  செய்ய, அதற்குள் கிளம்பி விட்ட அந்த ரெயிலை, திருநெல்வேலியில் நின்றவுடன் ஏறி, அதே பெட்டியில் வைத்த இடத்தில் பத்திரமாக இருந்த அந்தப் பையை எடுத்து, தவற விட்டவர்களின் உறவினரிடம் பத்திரமாக ஒப்படைத்தது காவல் துறை.    
=====================
  
இதே போல இன்னொரு செய்தியைத் தருகிறது தினத் தந்தி. சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது பிரான்சிஸ் நிலம் விற்ற 1 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய்ப் பணத்துடன் சென்னையிலிருந்து சேலம் செல்வதற்காக ரெயிலில் பொதுப் பெட்டியில் ஏறியவர் தன் பையை ரயிலில் மறதியில் தவறவிட, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது மணிகண்டன் என்ற எலெக்ட்ரானிக்ஸ் எஞ்சினியர் தன் அருகே இருந்த அந்தப் பையை எடுத்து ரயில்வே போலீசில் கொடுக்க, அந்தப் பையில் இருந்த பான் கார்டு ரேஷன் கார்டு மூலம் பிரான்சிஸ் முகவரி அறிந்த போலீசார், அந்தப் பணத்தை பத்திரமாக பிரான்சிஸ் வசம் ஒப்படைத்தனர்.   
========================  
    
சேலம் பற்றி இன்னொரு செய்தி. கொஞ்சம் பழசு! சேலம் ரெயில் நிலையத்தில் சிற்றுண்டிச் சாலையில் உணவுப் பொட்டலம் வாங்கிக் கொண்டிருந்த வர்த்தகரும், சமூக ஊழியருமான ஜி. கண்ணன் என்பவரிடம் ஒரு பாட்டியும் பேத்தியும் வந்து பிச்சை கேட்டார்களாம். பாட்டிக்கு அங்கேயே உணவுப் பொட்டலம் வாங்கித் தந்த கண்ணனிடம் அந்தப் பேத்தி சிறிய குரலில் "எனக்கு சாப்பாடு வேண்டாம், படிப்பு கொடுங்க" என்று கேட்க, அதிர்ந்து போன கண்ணன் சேலம் சூரமங்கலம் துணை போலீஸ் கமிஷனர் டி. சந்திரசேகரனிடம் தகவல் தெரிவிக்க, பாட்டியின் அரவணைப்பில் வளரும் அந்த 5 வயது ஐஸ்வர்யாவின் ஆசையான, 'டாக்டராக வேண்டும்' ஆசை வெளிப்பட, நகரின் அன்பில்லம் ஒன்றில் படிக்க வைக்க வைத்திருக்கிறார்கள் என்பதைச் சொல்லி நெகிழ வைக்கிறது ஹிந்து.    
===================    
       

வியாழன், 25 அக்டோபர், 2012

கான கலாதரர் மதுர மணி

           
இன்று அவருக்கு நூற்று ஒன்றாவது பிறந்தநாள். ஆமாம். அவர் பிறந்தது, அக்டோபர் இருபத்தைந்து, ஆயிரத்துத் தொள்ளாயிரத்து பன்னிரெண்டாம் ஆண்டு. யாரும் எங்கும் நூற்றாண்டு விழா எதுவும் கொண்டாடியதாக எங்களுக்குத் தெரியவில்லை. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டிலிருந்து ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபத்தெட்டாம் ஆண்டு வரை, சங்கீத உலகில் கொடி கட்டிப் பறந்த பெயர் மதுரை மணி. 
  
இயற்பெயர்: சுப்ரமணியன். 

தந்தை பெயர் எம் எஸ் ராமஸ்வாமி. 

தாய் பெயர் சுப்புலட்சுமி. 

இவரின் தந்தையாராகிய திரு ராமஸ்வாமி அவர்களின் சகோதரர், மதுரை புஷ்பவனம். இவரும் சங்கீத உலகின் முடி சூடா மன்னர்களில் ஒருவர். 

மதுரை மணி சங்கீதம் கற்றுக் கொள்ள ஆரம்பித்தது தன்னுடைய ஒன்பதாவது வயதில். ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தேழாம் ஆண்டில், ஆவடி காங்கிரஸ் மாநாட்டில், கர்நாடக சங்கீதம் பற்றிய விரிவுரை (எம் எஸ் ராமஸ்வாமி) செயல் விளக்கம் (மதுரை மணி) நிகழ்ச்சியில், இவருடைய தந்தையும் இவரும் பாராட்டுகளையும், பரிசுகளையும் பெற்றனர்.  

மதுரை மணி அவர்கள் தன்னுடைய உடல் நோய் காரணமாக, திருமணம் செய்துகொள்ளவில்லை. மேடைக் கச்சேரிகளில் தன்னுடைய சகோதரியின் கணவர் திரு T S வேம்பு ஐயர் (கர்நாடக இசைக் கலைஞர் திரு T V சங்கரநாராயணன் அவர்களின் தந்தை) அவர்களுடன் சேர்ந்து பல கச்சேரிகள் செய்துள்ளார். 
  
மேடையில் மதுரை மணி அவர்கள் பாடும் பொழுது, ரசிகர்கள் அனைவரும் கண்களை மூடி, தலையை ஆட்டியபடி அமர்ந்து கேட்பார்கள் என்று எங்கள் அம்மா அடிக்கடி சொல்லுவார்கள். 

ராக ஆலாபனை, நிரவல்கள், கற்பனை ஸ்வரங்கள் இவருடைய தனிச் சிறப்பு. 

அந்தக் காலத்தில், மேடையில் தமிழ்ப் பாடல்கள் பாடப்பட வேண்டும் என்று கல்கி போன்ற பல தமிழ் அறிஞர்கள் வேண்டுகோள் விடுத்ததையடுத்து, பல பாடகர்கள் மேடைக் கச்சேரிகளில் தமிழ்ப் பாடல்களையும் பாட ஆரம்பித்தனர். மதுரை மணி அவர்கள், பாரதியார் பாடல்கள், பாபநாசம் சிவன் பாடல்கள், அருணாச்சலக் கவிராயர் பாடல்கள் என்று பல தமிழ்ப் பாடல்களை மேடைக் கச்சேரிகளில் பாடியவர். 
   
மதுரை மணி அவர்களுக்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை உண்டு. அவர் சார்லி சாப்ளின் நகைச்சுவை நடிப்பை மிகவும் ரசிப்பாராம். 

பெற்ற பட்டங்கள்: 

1944: கான கலாதரர் 

1959: சங்கீத கலாநிதி 

1960: ஜனாதிபதி விருது. 

1962: இசைப் பேரறிஞர்.

மயிலையில் முசிறி சுப்ரமணியம் சாலை உள்ளது போல, இவர் வாழ்ந்த வீடு இருக்கின்ற சாலைக்கு 'கான கலாதரர் மணி சாலை' என்று பெயரிட்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனை. அரசு கவனிக்குமா? 

இன்றைக்குப் பொருத்தமான பாடலை, ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பாக அவர் பாடியதை, இங்கே கேளுங்கள்:  
    

செவ்வாய், 23 அக்டோபர், 2012

அலேக் அனுபவங்கள் 13:: அ லே க் ஆயுத பூஜை!

              
வாசக நண்பர்கள், நான் இங்கு பதிவது, நாற்பது வருடங்களுக்கு முந்தைய அனுபவங்களை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். காலப் போக்கில்  எவ்வளவோ மாற்றங்கள்.  இக்காலத்தில், அசோக் லேலண்டில் எவ்வளவோ மாற்றங்கள். நான் அன்றைய சம்பவங்களைப் பகிர்ந்து கொள்வதைப் படிப்பவர்கள், இன்றும் அதே நிலைமை அங்கு இருக்கின்றது என்று தப்புக் கணக்குப் போடவேண்டாம் என்று அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். 
*** ***

அசோக் லேலண்டில் ஆயுத பூஜை என்பது மிகவும் கோலாகலமாக இருக்கும். தொழிற்சாலையின் ஒவ்வொரு பகுதியினரும், தத்தம் பகுதியை சார்ந்த இயந்திரங்களை கழுவி, சுத்தம் செய்து, அலங்கார வண்ணத்தாள்களால் அலங்கரித்து, வைத்திருப்பார்கள். அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்களும், அதிகாரிகளும் ஆயுத பூஜைக்காக பணம் அவரவர்கள் பங்காக செலுத்துவார்கள். இயந்திரப் பகுதி பெரிய பகுதி. இயந்திரப் பகுதி ஒன்று, இ ப இரண்டு என்று அந்த நாட்களிலேயே நான்கு பகுதிகள் உண்டு. ஒவ்வொரு இயந்திரப் பகுதியிலும் பல லைன்கள் (Bay 1,2,3 ...) உண்டு. ஒவ்வொரு வரிசைக்கும் ஒரு பூஜை இடம் உண்டு! ஆக, இயந்திரப்பகுதி மட்டும் குறைந்தது நாற்பது பூஜைகள். 

இது தவிர, அசெம்பிளி  பகுதி, ஸ்டோர்ஸ் பகுதி, இன்ஸ்பெக்ஷன், இஞ்சினீரிங், ஸ்பேர் பார்ட்ஸ், அக்கவுண்ட்ஸ், சேல்ஸ், டிரான்ஸ்போர்ட், மெயிண்டனன்ஸ், டூல் ரூம், பயிற்சி நிலையம், மருத்துவ நிலையம், தீயணைப்பு நிலையம், செக்யூரிட்டி, சிஸ்டம்ஸ், பிளானிங், பர்ச்சேஸ் என்று நூற்றுக்கும் மேற்பட்ட பகுதிகள். மொத்தத்தில், எண்ணூரில் மட்டும் இருநூறுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்படும். 
  
ஒவ்வொரு பூஜை பாயிண்டிலும், விநாயகர், லக்ஷ்மி, சரஸ்வதி திருவுருவப் படங்கள், ஏசு கிறிஸ்து படம், மேரிமாதா படம் எல்லாம் இருக்கும். வெள்ளிக் கிழமைகளிலும், ஆயுத பூஜை  சமயத்திலும், இந்த எல்லாப் படங்களுக்கும் பூ சூட்டப்பட்டு, மாலைகள், ஊதுபத்தி சகிதம் தெய்வீகமாக இருக்கும். 

ஆயுத பூஜை சமயத்தில், நிர்வாகம் எல்லோருக்கும் ஒரு ஸ்வீட் கூப்பன் வழங்கும். அந்த ஸ்வீட் கூப்பனை, ஆயுத பூஜையன்று பயிற்சி நிலைய வளாகத்தில் கொடுத்து, ஒரு பெரிய மில்க் ஸ்வீட் பெட்டியை பெற்று வருவோம். நான் சேர்ந்த காலத்தில் வழங்கப்பட்ட இனிப்புப் பெட்டி ஒரு கிலோ ஆரிய பவன் ஸ்வீட் பெட்டி என்று ஞாபகம். அதில் இருக்கின்ற பால் இனிப்புகள் எல்லாமே மிகவும் சுவையானதாக இருக்கும். வீட்டில் அதை ஒருவார காலம் வைத்து சாப்பிட்டு மகிழ்ந்தது உண்டு. 
   
ஆயுத பூஜை (நவராத்திரியின் ஒன்பதாம் நாள்) ஒரு வருடத்தில் எங்களுக்கு அளிக்கப்படுகின்ற பன்னிரண்டு பண்டிகை விடுமுறைகளில் ஒன்று. அதனால், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை எட்டாவது நாளே கொண்டாடப்படும். ஆயுத பூஜை வருவது இன்று போல ஒரு செவ்வாய்க்கிழமையில் என்றால், திங்கட்கிழமை எண்ணூர் தொழிற்சாலை வாராந்திர விடுமுறை நாள் என்பதால், ஞாயிற்றுக் கிழமையே கொண்டாடிவிடுவோம்! 

வேலை நேரம் காலை ஏழரை மணி முதல், மாலை நான்கு மணி வரை. ஆயுத பூஜையன்று, உற்பத்தி, மாலை இரண்டு மணியுடன் நிறுத்தப்படும். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு பூஜா கமிட்டி இருக்கும். அந்த பூஜா கமிட்டி (ஒருவர் அல்லது இருவர் - அந்தப் பகுதி தொழிலாளர்) ஆயுத பூஜையன்று காலையோ அல்லது மதியமோ பெர்மிசன் வாங்கிக்கொண்டு, பாரிஸ் (ஹி ஹி - நம்ம பாரிமுனைதானுங்க!) போய்விடுவார்கள். பூஜைக்கு வேண்டிய வாழைக் கன்று, அவல், பொரிகடலை, பொரி, ஆப்பிள், ஸ்வீட் பாக்ஸ்(பூஜையில் வைக்க ஒன்று, பணம் கொடுத்த அங்கத்தினர்களுக்கு ஆளுக்கு ஒன்று), இன்னும் சர்ப்ரைஸ் கிப்ட், அலங்காரத் தாள்கள், ஊதுபத்தி, சந்தனம், குங்குமம், பூசணிக்காய், எலுமிச்சம்பழம் இத்யாதி இத்யாதிகள் வாங்கிக் கொண்டு, இரண்டு மணி சுமாருக்கு ஆட்டோவில் வந்து சேர்வார்கள். அதுமட்டும் அல்ல, ஆயுத பூஜை வரவு செலவு கணக்கும் - மொத்த கலெக்ஷன் எவ்வளவு, என்னென்ன செலவுகள் (ஆட்டோ வாடகை உட்பட) என்ற வரவு செலவு கணக்கும் அறிவிப்புப் பலகையில், பூஜை கமிட்டி ஆட்கள், கையொப்பமிட்டு, ஒட்டிவிடுவார்கள். 
 
   
 

இரண்டு மணியிலிருந்து மூன்று மணிவரையிலும், குப்பையகற்றல், சுத்தம் செய்தல், குங்குமம் வைத்தல், அலங்கார தாள்கள் ஒட்டுதல் என்று முன்னேற்பாடுகள் நடக்கும். மூன்று மணியிலிருந்து, பத்து நிமிடங்கள் பூஜை. பிறகு பிரசாதம் விநியோகம். பிறகு பாடத் தெரிந்தவர்கள் சில பாடல்கள் பாடுவார்கள். நான் பணியாற்றிய எஞ்சினீரிங் பகுதியில் அதிக வருடங்கள் பூஜையும் செய்து, பாட்டும் பாடி அசத்தியவர், திரு டி  எஸ் ஸ்ரீராம் என்பவர். (இசைமழலை ராம்ஜியின் அண்ணனின் சம்பந்தி). நானும் ஒரே ஒரு பூஜை தினத்தன்று பாடினேன். அதற்குப் பிறகு என்னை யாரும் பாடச் சொல்லவில்லை! 

அந்தக் காலத்தில், டூல் ரூம் பகுதி ஆயுத பூஜை மிகவும் பிரசித்தம். ஒவ்வொரு ஆண்டும் சிறப்புப் பரிசுப் பொருளாக, பூஜையில் வைப்பதற்காக அவர்கள், பித்தளைக் குடம், எவர்சில்வர் குடம், அண்டா - குண்டா என்று பிரம்மாண்டமான பொருட்களை வாங்கி வந்து அசத்துவார்கள். பூஜை செய்வதற்கு ஸ்பெஷல் கேட்பாஸ் போட்டு, ஒரு முறை ஒரு புரோகிதரை அழைத்து வந்தார்கள்! 

ஒரு சமயம், எங்கள் எஞ்சினீரிங் பகுதி தொழிலாளர்கள் நடத்திய ஆயுத பூஜை நிதி சிறப்புப் பரிசு, நாங்கள் ஒவ்வொருவரும் கொடுத்த இருநூறு ரூபாயில், ஒவ்வொருவருக்கும் ஐந்து கிராம் தங்கக் காசு.
   
தொழிற்சாலையின் நிர்வாக அதிகாரி பங்கெடுத்துக் கொள்ளும் பூஜை, மெடிக்கல் செண்டருக்கு முன்பாக ஒரு வண்டியை நிறுத்தி, அதை அலங்கரித்து, அதற்குச் செய்யப்படும் பூஜை. பிறகு அவர் பயிற்சி மையம் நடத்தும் பூஜையிலும், எங்கள் எஞ்சினீரிங் பகுதி ப்ரோடோடைப் வொர்க் ஷாப் பூஜையிலும் கலந்துகொள்வார். எங்கள் ப்ரோடோடைப் வொர்க் ஷாப்பில் ஒவ்வொரு வருடமும், அந்தந்த வருடத்தில் நாங்கள் செய்த புதிய வண்டி ஒன்று (அல்லது பல) நிச்சயம் இடம் பெறும். பூஜை முடிந்த பிறகு, அந்த வண்டியின் சக்கரங்களுக்குக் கீழே எலுமிச்சம் பழங்களை வைத்து, வண்டியை அவைகளின் மீது ஏற்றி, ஒரு ரவுண்ட் ஓட்டி வந்து திரும்ப நிறுத்துவார்கள். இந்த முதல் ஓட்டத்தின் போது, அந்த வண்டியை உருவாக்கியதில் அதிக அளவு பங்கேற்றுக் கொண்ட தொழிலாளரை அந்த வண்டியை ஓட்ட செய்ததும் உண்டு. 
                
மொத்தத்தில், அசோக் லேலண்டில், ஆயுத பூஜை என்பது அந்த நாட்களில் மிகவும் சுவாரஸ்யமான ஒன்று. அந்தந்த வருடத்து பூஜைக் கொண்டாட்டங்கள், அதற்கு அடுத்த வருட பூஜை தினம் வரையில் நினைவில் நிற்கும். 
                   

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

சனி, 20 அக்டோபர், 2012

பாசிட்டிவ் செய்திகள் 13/10/12 To 20/10/12


எங்கள் B+ செய்திகள்.

விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....

=======================

- ரயில் பெட்டிகளில் பல்கிப் பெருகி வரும் எலி, கரப்பான்களை ஒழிக்க ஒரு சாதனம் கண்டு பிடித்திருக்கிறார்களாம்.

==================

- ஃபார்முலா 4 கார் பந்தயத்தில் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம் வென்றுள்ளார் திண்டுக்கல்லைச் (திண்டுக்கல் தனபாலன் கவனிக்க!) சேர்ந்த 14 வயதான சூர்யா.ஆறு வயதிலிருந்தே அப்பாவிடம் கார் ஓட்டக் கற்றுக்கொண்ட சூர்யா, ஏழுவயதில் கோவையில் நடந்த கார் ரேசில் முதல் முதலாகக் கலந்துகொண்டு தோற்றது ஒரு சவாலை மனதில் ஏற்படுத்தியதாகச் சொல்லியிருக்கிறார். தினமலரில் படித்தது.

===================

-- தினமும் கூலிவேலை செய்து சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக்கொண்டே இருந்த திருப்பூருக்கு அருகே உள்ள வெள்ளியம்பாளையம்  முத்துமாரியம்மன் மகளிர்க்குழுவைச் சேர்ந்த ஜான்சி, குவாரியில் கற்களை வாங்கி கிரைண்டர்களுக்கான கல்லாக மாற்றித் தரும் தொழிலில் ஈடுபட்டு ஒரு நாளைக்கு 200 ரூபாய் வரை லாபம் பார்த்து, வெற்றிகரமாக வாழ்க்கை நடத்துகிறார். பெண்ணாக இருந்தாலும் இந்தத் தொழிலில் வெற்றிகரமாகச் செயல்படுவதை விவரிக்கிறது தினமலர்.

===================

- வீடுகளுக்கு விநியோகம் செய்யப் படும் எரிவாயு சிலிண்டர்களின் எடையை ஒவ்வொருமுறையும் நுகர்வோருக்கு முன் எடை போட்டுக் கொடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு. ஏற்கெனவே இந்த சட்டம் நடைமுறையில் இருந்தாலும் இப்போது விலைகள் கூட்டப் பட்டு இருக்கும் நிலையில், மற்றும் மானிய விலையில் வருடத்துக்கு 6 சிலிண்டர்கள்தான் என்று கட்டுப்பாடு வந்திருக்கும் நிலையில், கடைகளுக்கு திருட்டுத்தனமாக வழங்கப்பட்டு. ஓரிரு நாட்கள் கழித்து தமக்கு வழங்கப் படுகிறதோ என்ற சந்தேகம் எல்லா நுகர்வோருக்குமே ஏற்கெனவே உண்டு என்பதால் இனி கட்டாயம் நடைமுறைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

====================


- ஐ சி சி தலைவராக இந்தியர் கும்ப்ளே தேர்ந்தெடுக்கப் பட்டிருப்பதும், சச்சினுக்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது - மெம்பர்ஷிப் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா - வழங்கப் பட்டிருப்பது/வழங்கப்படவிருப்பது [மற்றபடி இதனால் ஒரு சாதாரண மனிதருக்கு பெரிய உபயோகம் இல்லையென்றாலும்] இந்தியர்களுக்குப் பெருமை என்ற அளவில் பாசிட்டிவ் செய்தியாகப் பார்க்கலாம்!  சச்சினுக்கு விருது வழங்கப் படுவதற்கு மாத்தியூ ஹேடன் உட்பட இருவர் அதற்குள் எதிர்ப்பு தெரிவித்திருப்பதும் செய்தி. சச்சின் விருதை ஏற்பாரா... பார்க்க வேண்டும்!  

=====================

அரசு பள்ளி மாணவர்களுக்கு 30 தகவலுடன் "ஸ்மார்ட் கார்டு'

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு முகவரி உட்பட 30 தகவல்கள் அடங்கிய "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கான பணி நடக்கிறது.

ஒன்று முதல் 12ம் வகுப்பு வரை ஒவ்வொரு மாணவருக்கும் அடையாள அட்டையை போன்று போட்டோவுடன் கூடிய "ஸ்மார்ட் கார்டு' வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவ, மாணவர்களின் பெயர், முகவரி, வகுப்பு, ஜாதி, குடும்ப வருமானம், உடன் பிறந்தவர்களின் விவரம் உட்பட 30 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன. இதற்குரிய படிவம் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினியோகிக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்கள் மாணவர்களின் தகவல்களை கம்ப்யூட்டரில் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.அக்.,30க்குள் இப்பணியை முடிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. இதன்பின், முதன்மை, மாவட்ட கல்வி அலுவலகங்கள் மூலம் மாணவ, மாணவிகளுக்கு "ஸ்மார்ட் கார்டு' வினியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறுகையில், ""அடையாள அட்டைக்கு பதிலாக "ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கார்டுக்கும் ஒரு ரகசிய எண் வழங்கப்படுகிறது. இந்த எண்ணை கம்ப்யூட்டரில் பதிவு செய்தால் அனைத்து விவரங்களும் தெரியவரும். இது மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இக்கார்டுகளை தவறான நோக்கில் பயன்படுத்த முயற்சிக்கக்கூடாது,'' என்றார். [தினமலர், முகப் புத்தகத்திலிருந்து]


===================

மீனவர்களுக்காக உருவாக்கப்பட்ட பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீனவர்களுக்கு அமைச்சர் ஜெயபால் வழங்கினார்.
மீனவர்களின் பாதுகாப்புக்காக, பயோ மெட்ரிக் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் வாழும் 1 லட்சத்து 33 ஆயிரம் மீனவர்கள் கணக்கிடப்பட்டு பயோ மெட்ரிக் அடையாள அட்டை தயாரிக்கப்பட்டு வருகிறது.
அதில் முதற்கட்டமாக நாகை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 60 பேருக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைகளை மீன்வளத் துறை அமைச்சர் ஜெயபால் இன்று வழங்கினார். [தினமணி]
=====================

மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இளைஞர் நலப்படிப்பியல் துறை சார்பில் 2013-ம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். முதல்நிலை தேர்வு சிறப்பு இலவசப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாகப் பல்கலைக்கழகப் பதிவாளர் கே.பிச்சுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
இப்பயிற்சிக்கு அனைத்து வகுப்புகளையும் சார்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு நுழைவுத் தேர்வு மூலம் மாணவ, மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இதில் சேரவிரும்பும் மாணவ, மாணவியர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இணையதளம் www.mkuniversity.org மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம்.
பெயர், கல்வித்தகுதி, வயது, பிறந்த தேதி, சாதிச்சான்றிதழ் மற்றும் வருமான வரிச் சான்றிதழ் ஆகிய விவரங்களைப் பூர்த்தி செய்து, அவ்விண்ணப்பத்துடன் மதிப்பெண் பட்டியல் மற்றும் பட்டச்சான்றிதழ் ஆகியவற்றின் நகல்களையும், சுயவிலாசமிட்ட ரூ.10 அஞ்சல்தலை ஒட்டிய 2 அஞ்சல் உறைகளையும் இணைத்து, முனைவர் பொ.பா.செல்லத்துரை, பேராசிரியர் மற்றும் தலைவர், ஐஏஎஸ்/ஐபிஎஸ் தேர்வு சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர், இளைஞர் நலப்படிப்பியல் துறை, மதுரை காமராசர் பல்கலைக்கழகம், பல்கலை நகர், மதுரை-21 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 22.10.12. அக்டோபர் 31-ம் தேதி முனைவர் முவ அரங்கில் நுழைவுத் தேர்வு நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.
====================================



- சென்னை 1000 விளக்குப்பகுதியில் உள்ள சர்ச் பார்க் பள்ளியின் 11ம் வகுப்பு மாணவியான அக்ஷயா சோனாஸ்ரீ சமீபகாலமாக 100 மீட்டர் தடை தாண்டுதல் நீளம் தாண்டுதல் ஆகியவற்றில் தொடர்ந்து பதக்கங்களைக் குவித்து வருவதையும், ஒலிம்பிக்கில் கலந்து கொண்டு இந்தியாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்ற இவரது இலட்சியத்தையும் எடுத்துச் சொல்கிறது தினமணி. 
=====================================


- கடந்த 18 ஆண்டுகளாக சென்னை கொளத்தூருக்கு அருகில் உள்ள விநாயகபுரத்தில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'சமர்ப்பணா' தன்னார்வத் தொண்டு நிறுவனம் நடத்தி வரும் ஸ்ரீதர்-பவானி தம்பதியர் பற்றிய செய்தி ஞாயிறு தினமணியில் அவர்களுடைய வீடும் அந்த மனவளர்ச்சி குன்றியோரின் இல்லத்தில்தானாம். இங்கேயே பிறந்து வளர்ந்துதான் இவர்கள் மகன் நரேந்திரன் கல்லூரியில் படிக்கிறாராம். 1989 ஆம் ஆண்டில் இருந்து 4 ஆண்டுகள் சென்னை தரமணியில் உள்ள மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான 'ஸ்பாஸ்டிக் சொசைட்டி ஆஃப் தமிழ்நாடு' நிறுவனத்தில் சிறப்பு ஆசிரியையாக பவானியும், சிறப்புப் பயிற்சியாளராக ஸ்ரீதரும் பணிபுரிந்திருக்கிறார்கள் அந்தக் குழந்தைகள் பெரியவர்களாகி விட்டால் பெற்றோரும் இல்லாமல் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்  என்றெல்லாம் யோசித்து, மனம் உருகி, 1995ல் கொளத்தூர் டீச்சர்ஸ் காலனியில் வாடகைக் கட்டடத்தில் எந்தவிதப் பொருளாதாரப் பின்னணியும் இல்லாமல் இவர்களால் தொடங்கப் பட்ட இந்த நிறுவனம் பற்றி 1998 மார்ச் 30ம்  தேதி தினமணி நாளிதழின் தலைப்புச் செய்தியாக வெளியாக நன்கொடைகள் குவிந்தனவாம். மனவளர்ச்சி குன்றியவர்களுடன் பிற குழந்தைகளும் சேர்ந்து வாழ வேண்டும் என்ற நோக்கில் ஆதரவற்ற குழந்தைகளையும் சேர்த்துக் கொள்கிறார்களாம். இதைத் தொடர்ந்து நடத்த வேண்டும் என்று ஆசைப் படும் இவர்கள் தங்களுக்கு வயதாகி வருவதால் இவர்களுக்கு உதவி செய்ய, சேவை மனப்பான்மை உள்ளவர்கள் யாராவது வரமாட்டார்களா என்று எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். இதைத் தவிர சிறுவாபுரியில் மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான முதியோர் இல்லம் ஒன்று தொடங்கவும் திட்டமிட்டிருக்கிறார்களாம்.

============================

வியாழன், 18 அக்டோபர், 2012

படித்ததிலிருந்து.....


=================================



.....வேண்டுமானால் ஒரு விளையாட்டாக நீங்கள் இதைச் செய்து பார்க்கலாம். ஒரு நண்பரை எதிரில் வைத்துக் கொண்டு அவருக்குத் தெரியாமல் அவருடைய மூச்சோட்டத்தைக் காப்பியடியுங்கள். அதுதான் கைவந்த கலையாயிற்றே! ஆனால் இந்தக் காப்பி பற்றி யாரிடமும் 'மூச்சு' விடக் கூடாது. பின்பு நீங்கள் ஒரு எண்ணை நினைத்துக் கொண்டு அதை அவர் மனத்தில் நினைக்க வேண்டும் என்று நினையுங்கள் உதாரணமாக, பத்து என்ற எண்ணை அவர் நினைக்க வேண்டும் என்று அவருடைய மனத்துக்கு உத்தரவு கொடுங்கள். ரொம்ப 'ஸ்ட்ராங்'காக. ஆனால் இப்படி உத்தரவு கொடுக்குமுன் அவருடைய மூச்சோட்டத்துக்கு நீங்கள் வந்து விட வேண்டும். பின் அவரை பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளச் சொல்லுங்கள் பின் மறுபடியும் பத்துதான் அவர் நினைக்க வேண்டும் என்று உத்தரவு கொடுங்கள். பின்பு, 'நீ நினைத்தது பத்து' என்று சொல்லிப் பாருங்கள். "ஆமாம் பத்துதான் நினைத்தேன். எப்படிக் கண்டுபிடித்தாய்" என்பார்.....

                                                                                             ='ஆல்ஃபா தியானம்' - நாகூர் ரூமி.

=======================================



அமுதசுரபியைத்தான் நீ தந்து சென்றாய் 

இப்போது....

எங்கள் கையில் இருப்பதோ பிச்சைப்பாத்திரம் 

அணைக்கட்டுகளில் திறக்கப்படும் தண்ணீர் 

பள்ளங்களை ஏமாற்றிவிட்டு 

மேட்டை நோக்கியே பாய்கிறது 

சேரிகளில் மட்டுமே யாத்திரை செய்வாய் என்பதைத் 

தெரிந்துகொண்டதால் உன்னை நேசித்தவர்கள் 

தேசத்தையே சேரியாக மாற்றி விட்டார்கள்!

                                                                                                                                        -மு.மேத்தா.

========================================



.....சிவாஜி கணேசனைப் போன்ற நடிப்பும், எம் ஜி ராமச்சந்திரனைப் போன்ற சண்டைப் பயிற்சியும், இந்த இருவரிடமும் இல்லாத பாட்டுத் திறமையும் கொண்ட ஒரே கலைஞர் பி யு. சின்னப்பாதான். ஆனால் இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வருத்தத்திற்கு உரியதுதான்.

பாகவதரிடம் பாட்டுத் திறமை மட்டுமே இருந்தது. தோற்றப் பொலிவு அவருக்குப் புகழ் தேடிக் கொடுத்தது. பொது ஜனங்களுக்கு ஏற்ற புகழ்மிக்க சூப்பர் ஸ்டாராகக் கொண்டாடப்பட்டார். அவர் பெயரில் சில நூல்கள். அவருக்கான சில அங்கீகாரங்கள்.

ஆனால் சின்னப்பாவோ பாட்டுத் திறமையுடன் நடிப்பும், சண்டைப் பயிற்சியும், மானமிக்க மறவாழ்வும் கொண்டிருந்தார். எனினும் இவரைப் பற்றி ஒரு நூல் கூட வெளிவரவில்லை. இதுவே இவரைப் பற்றிய முதல் நூல்........

....உத்தமபுத்திரனில் இரட்டை வேடம்.



மங்கயர்க்கரசியில் மூன்று வேடம்.

ஜகதலப்ரதாபனில் ஐந்து வேடம்.

காத்தவராயனில் பத்து வேடம்......

                  -'தவ நடிக பூபதி சகலகலா வல்லவன் ஜகதலப்ரதாபன் பி யு சின்னப்பா- காவ்யா சண்முகசுந்தரம்.'

========================================



.......இன்னொரு சந்தர்ப்பத்தில் சென்னைக்கு வந்த அப்போதைய இந்தியாவின் ஜனாதிபதி முதல்வர் எம் ஜி ஆரை மதிய உணவுக்கு ராஜ் பவனுக்கு அழைத்தார். எம் ஜி ஆர் தலைமைச் செயலகத்தில் காலை 11.30 மணியிலிருந்தே இருந்தார். நானும் உடன் இருந்தேன். மிகத் தீவிரமாக தலைமைச் செயலக அதிகாரிகளுடனும், அமைச்சர்களுடனும் மாநிலம் பற்றிய விவாதங்களில் ஆழ்ந்திருந்தார். மதியம் 12.15 மணிமுதலே ஜனாதிபதி அலுவலகத்திலிருந்து எம் ஜி ஆரின் தனிச் செயலருக்கு பதட்டமான தொலைபேசிகள் வந்தவண்ணம்  இருந்தன. தொந்தரவு தாங்காத தனிச் செயலர் எம் ஜி ஆரிடம் சென்று விவரத்தை எடுத்துரைத்தார். கண்களைக் கூட இமைக்காமல் எம் ஜி ஆர் அவரிடம், "தயவுசெய்து ஜனாதிபதியிடம் நான் மிகவும் முக்கிய வேலைகளில் இருக்கிறேன் என்பதைத் தெரிவித்து, மதிய உணவிற்கு வர முப்பது நாற்பது நிமிடங்கள் தாமதமாகும் என்பதைத் தெரிவித்து விடுங்கள் எனது வருத்தங்களையும் தெரிவித்து விடுங்கள்" என்றார்! 

அதுதான் எம் ஜி ஆர்!

                                                                                  -MGR : Tha Man and The Myth - K. Mohandas.

===============================================



.... அந்த நாட்களில் நான் மற்ற பையன்களால் லேசாக நிராகரிக்கப்பட்டதும் என் எழுத்துக்கு ஒருவாறான ஆதாரம் என்று சொல்லலாம். எந்த ஆட்டத்திலும் எனக்கு என் அண்ணன் போலத் திறமை இல்லை. அவன் கிரிக்கெட் நன்கு ஆடுவான். பம்பரம் நன்றாக ஆடுவான். தீபாவளியில் தெள்ளு குண்டு ஆட்டத்தில் விற்பன்னன். எனக்குக் கிரிக்கெட்டின் 11வதாக அனுப்புவார்கள். ஃபீல்டில் விக்கெட் கீப்பருக்குப் பின்னால் லாங் ஸ்டாப் என்றொரு இடம். பம்பரத்தில் தலையாரி விளையாட்டில் என் பம்பரத்தை சொறிநாய் மாதிரிக் குத்தி விடுவார்கள் 'குச்சி ப்ளே' என்று ஒரு ஆட்டம். யாரோ ஒரு Masochist கண்டுபிடித்தது. தெற்குவாசல் வரை என் குச்சியைத் தள்ளிக் கொண்டு பொய், அங்கிருந்து நொண்டச் சொல்வார்கள் இளவயது விளையாட்டுகளில் மெளனமாக நிறைய அழுதிருக்கிறேன். இழந்து போன பந்துகளைத் தேடி வரவும், இழந்து போன பட்டங்களைத் துரத்தவும் பயன்படுத்தப்பட்டேன். இந்த நிராகரிப்பும் ஓர் எழுத்தாளனுக்குத் தேவை எனப் படுகிறது.....

...வல்லபபாய் பட்டேல் பற்றி அறுசீர் விருத்தம் எழுதி, அது தென்றலில் பிரசுரமாக, கீழச் சித்திரை வீதியில் பரபரப்பை ஏற்படுத்தியது என்று சொல்ல முடியாவிட்டாலும், அதை எழுதியவர் மனதில் மறக்க முடியாத நினைவாக இருக்கிறது. வாசகங்கள் ஞாபகமில்லை.

                      -'அக்னி' அமைப்பு அளித்த விருதை ஏற்றுக் கொண்டபோது சுஜாதா உரை.

==================================================


படங்கள் உதவி : நன்றி இணையம்.

புதன், 17 அக்டோபர், 2012

சில்லறைக் கதை




எப்போதும் போல பஸ் கூட்டமாகத்தான் வந்தது.  

'பின்ன, நமக்காக தனியாவா பஸ் விடுவாங்க?' என்று சமாதானம் செய்துகொண்டபடி உள்ளே கஷ்டப்பட்டு ஏறியவர்களில் ரவியும் ஒருவன். ஏறவே முடியாமல் இரண்டாவது படியிலேயே நிற்க வேண்டி இருந்தது. பின்னாலிலிருந்து கூட்டம் இன்னும் இன்னும் நெருக்கியபடி இருந்தது.


"சார்... கொஞ்சம் மேல போங்க சார்...உள்ள தள்ளிப் போங்க சார்..." 

"சார்... லேடீஸ் படிக்கட்டுல நிக்கறாங்க... உள்ள தள்ளுங்க"

எங்கே தள்ள, யாரைத் தள்ள? பின்னால் நிற்பவர்களைத்தான் கீழே தள்ளணும்! யாரும் நகர்வதாய் இல்லை. 

நடத்துனரிடம் ஐம்பது ரூபாய் நோட்டை நீட்டி, போக வேண்டிய இடத்தைச் சொன்னதும் 'தமிழன்' எம் ஜே பாஸ்கர் மாதிரி எரிந்து விழுந்தார். 

"சில்லறையாக் குடுங்க சார்..."

பாக்கெட்டைத் தடவி இல்லையென்று சைகை செய்தான் ரவி. திட்டிக் கொண்டே டிக்கெட்டைத் தந்தவர் மீதி சில்லறையைத் தேடித் தேடி எடுத்துக் கொடுத்தார்.

"கண்டக்டர் சார்... குறையுது.."


"ஆமாம்யா... எல்லோரும் ஐம்பதையும் நூறையும் நீட்டினா நான் எங்க போறது? தர்றேன். எங்கே ஓடிப் போயிடப் போறேன்..."

எல்லோரும் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்க, சில்லறை அவர் கைக்கு வரும்போதெல்லாம் பிஸ்கட்டைப் பார்க்கும் நாய்க்குட்டி போல அவர் முகத்தையும் கைகளையுமே பார்த்துக் கொண்டிருந்தான். அவரா, மருமகளிடம் கோபித்துக் கொண்ட மாமியார் போல இவன் பக்கமே திரும்பாமல், ஆனால் மறக்காமல் அவ்வப்போது இவனிடம் சொன்ன மாதிரியே வசனம் வேறு சிலரிடமும் சொல்லிக் கொண்டே இருந்தார்.

மீனம்பாக்கம் தாண்டியதுமே கூட்டம் குறைந்து போனது. கண்டக்டர் உட்கார்ந்து எச்சில் தொட்டுத் தொட்டு ஒரு பேப்பரில் குறித்துக் கொண்டிருக்க, 


"சார் நீங்க எனக்கு சில்லறை பாக்கி தரணும்" 

நிமிர்ந்து பார்த்தவர் மையமாக மண்டை ஆட்டி விட்டு விரலை நாக்கில் வைத்து எடுப்பதில் கவனமானார். 

"சார்...."

"அதான் கேக்குதே... சில்லறை என்கிட்டே இல்லை...இருங்க பார்ப்போம்..."

"இன்னும் ரெண்டு ஸ்டாப்புல நான் இறங்கணும்"

"என்னை என்ன செய்யச் சொல்றீங்க.."

இவனைப் போலவே பாக்கி சில்லறைக்காகக் கேட்டு விட்டு நின்று கொண்டிருந்த இருவரையும் பார்த்தான்.   


நின்றிருந்த இருவரில் கல்லூரி மாணவன் போல இருந்த ஒருவன் உள்ளே குழந்தையுடன் ஏறி வந்த பெண்ணிடம் 'எங்கேம்மா போறீங்க... காசைக் கொடுங்க நான் வாங்கித் தர்றேன்' என்ற படி காசை வாங்கியவன் அதைத் தன பையில் போட்டுக் கொண்டபடி "சார்... சானடோரியம் ஒண்ணு  குடுங்க.." என்ற படி காசைக் காட்டினான். தரவில்லை. அவர் டிக்கெட்டைக் கிழித்ததும் "எனக்குத் தரவேண்டிய காசு நான் எடுத்துகிட்டேன்... தேங்க்ஸ்" என்றபடி உள்ளே போனான்! 

டெக்னிக்கைப் புரிந்துகொண்ட அடுத்தவனும் அதே போல இன்னொரு ஜோடியிடம் காசு வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி அவர்கள் கையில் கொடுத்து விட்டு அகன்றான். 

'ஆஹா....'  

ரவி சுற்றுமுற்றும் பார்த்தான். வேறு யாரும் டிக்கெட் வாங்க நிற்கவில்லை. இவன் பார்வையின் காரணத்தையும், அங்கு ஆளில்லாதததையும் கண்டக்டரும் பார்த்து விட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டார். 

குரோம்பேட்டையில் இறங்க வேண்டும். இவனா சில்லறை கொடுப்பதாகத் தெரியவில்லை. 'நான் என்ன விஜயா என்ன, எல்லோர் கிட்டயும் பேப்பர் வாங்கி கையெழுத்து வாங்கி கன்ஸ்யூமர் கோர்ட்ல கேஸ் போட' என்று எண்ணிக் கொண்டவன், கண்டக்டரின் முகத்தில் கேலிப் புன்னகை வழிவதாகக் கற்பனை செய்து கொண்டான்.

"நான் இறங்கப் போகும் இடமே வருதே... சில்லறை?" என்றான்.

"டிக்கெட்டுல எழுதிக் கொடுக்கறேன். டெப்போவுக்கு வந்து வாங்கிக்குங்க..."

'ஆவுற காரியமா இது?'

ஒரு முடிவுக்கு வந்தவன்,

"மூணு தாம்பரம் கொடுங்க..."

கேள்விக்குறியுடன் நிமிர்ந்து பார்த்தார் கண்டக்டர். அருகில் வேறு யாரும் இல்லை.

"மூணா? எதுக்கு? யாருக்கு?"

"அது உங்களுக்குத் தேவை இல்லாத விஷயம்... நீங்க எனக்கு மிச்சம் தரணும் இல்லே? கொடுங்க"


கொடுத்தார். 

"இன்னமும் கூட நீங்கதான் எனக்கு ஒரு ரூபாய் தரணும்" என்ற ரவி, குரோம்பேட்டை பஸ் ஸ்டாப்பில் பஸ் நிற்பதற்காக ஸ்லோ ஆக, இறங்குவதற்காகப் படிக்கட்டுப் பக்கம் வந்தவன் அந்த மூன்று டிக்கெட்டுகளையும் எடுத்து கண்டக்டரின் கண் முன்னாலேயே சுக்கல் சுக்கலாகக் கிழித்து ஓரமாகப் போட்டான். 

இறங்கிச் சென்றான்.    


படங்கள் : நன்றி இணையம்.