திங்கள், 28 அக்டோபர், 2013

"ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து..." - படித்ததன் பகிர்வு


"மனிதர்களில் 'இவர் நல்லவர் இவர் கெட்டவர்' என்று கோடு கிழித்து விடமுடியுமா,  என்றால் 'முடியாது' என்கிறார் வியாசர். பாரதம் முழுக்க முக்கியமான பாத்திரங்கள் 50 பேர்களை எடுத்துப் பட்டியல் போட்டேன். பாத்திரங்களில் உயர்வு, தாழ்வு என்று மேலே எழுதிக் கீழே ஒன்று, இரண்டு என்று எழுதிக் கொண்டே வந்தேன்.  உதாரணமாக, கர்ணன் கீழே, 'சொன்ன சொல்லை உயிரைப் பணயம் வைத்துக் காப்பாற்றுகிற மகா மனிதன்' என்று இடப்புறம் எழுதினால், வலப்புறம் 'பாஞ்சாலியின் ஆடையைக் களையச் சொன்ன மகா இழிஞன்' என்றும் எழுத வேண்டியிருந்தது.  


இதுதான் வியாசஞானி.  கூட்டிக் கழித்துப் பார்த்தால் மனிதன் உன்னதமானவனும் இல்லை, இழிவானவனும் இல்லை.  பாவம், அவன் மனிதன்' என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.  இதுதான் வியாசஞானி பாரதம் முழுதும் நமக்கு ஓதும் நீதி....

இது பிரபஞ்சன் கல்கியில் எழுதி வரும் 'மகாபாரத மாந்தர்கள்' தொடரில் சொல்வது. இதுதான் பாரதத்தைப் படிக்கும் எல்லோருக்குமே தோன்றுவதும் கூட. நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் நீங்கள் கொள்வதுதான். அவர் எதையும் மாற்றிப் பேசாமல் அவரவர் குறைகளுடன் சொல்லி விட்டார்.

உலக அளவில் வியாசர் போல பெரிய கதைசொல்லி இனிதான் பிறக்கவேண்டும் என்கிறார் பிரபஞ்சன்.

பிரபஞ்சனின் இந்தத் தொடர் சுவாரஸ்யமாய் இருப்பதை ஏற்கெனவே வெட்டி அரட்டையில் சொல்லி இருந்தேன். புத்தகமாக வரக் காத்திருக்கிறேன்!


துரியோதனனை ஆதரிக்கும் இந்தப் புத்தகத்தில் அதற்கான காரணங்களைப் பட்டியலிடுகிறார் எஸ். விஜயராஜ். 

                                                  

பலமுறை, மீண்டும் மீண்டும் பல்வேறுபட்ட மகாபாரதத்தின் படைப்புகளைப் படித்தும், டிவிடியில் மிக அடிக்கடி மகாபாரதம் பார்த்தும் எழுந்த எண்ணங்களைப் பட்டியலிடுகிறார். 


மூன்று வகை நீதிகள். தேவ நீதி. ராஜ நீதி. மனித நீதி. இதில் ராஜ நீதியைப் பற்றிச் சொல்லித் தொடங்குகிறார்.
 

ராஜநீதி என்பதன் அடிப்படையில் துரியோதனன் செய்தது எல்லாம் நியாயமே என்கிறார். ஒரு அரசன் வெற்றி கொள்ள எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம், பத்து வழிகள் உண்டென்றால் அதில் ஒன்பது தந்திர வழிகளையே சாஸ்திரங்கள் பரிந்துரைக்கின்றன என்கிறார்.  பெரும்பாலும் நமக்கும் தெரிந்தவைதான்.

போர் என்று தொடங்கியவுடன் துரியோதனன் முடிந்த அளவு அல்லது முழு அளவு போர்க்கால விதிமுறைகளைப் பின்பற்றி நேர்மையாகவே சண்டையிட்டான் என்கிறார்.   அதேநேரம் கண்ணன் வழிகாட்டலில் பாண்டவர்கள் செய்தது எல்லாம் வஞ்சகமே என்கிறார்.

வெற்றி கொள்ளவே முடியாத- மரணம் தனக்கு எப்போது வரவேண்டும் என்று தானே முடிவு செய்யக் கூடிய - பீஷ்மர், ஆயுதங்கள் கையில் இருக்கும் வரை வெற்றி கொள்ள முடியாத துரோணர், கிருபர், கர்ணன், சல்லியன் என்று மிகச் சிறந்த படைத்தலைவர்களும் வீரர்களும் அவன் பக்கம் இருந்தும் அவர்களுக்கு -கர்ணன் நீங்கலாக - உடல் கௌரவர்கள் பக்கமும், மனம் பாண்டவர்கள் பக்கமும் இருந்ததை அந்தச் சம்பவங்களை எடுத்துச் சொல்லி, சொல்கிறார். 

மூத்த மகனுக்குத்தான் ஆட்சி உரிமை. அப்படிப் பார்க்கையில் திருதராஷ்டிரனுக்கு வரவேண்டிய அந்த உரிமை, அவன் அங்கஹீனன் என்பதால் பாண்டுவுக்குப் போகிறது, சரி. திருதராஷ்டிரனுக்கு, உரிமையுள்ள அந்த மூத்த புதல்வனுக்கு, பிறக்கும் மூத்த புதல்வன் துரியோதனன்தானே? அவனுக்குத்தானே முதல் உரிமை வரவேண்டும்? பாண்டவர்கள் முதலில் பாண்டுவின் புத்திரர்களே இல்லையே.. இப்படிப் போகிறது விவாதம்.  
                                                  

தன்னை எப்படித் தோற்கடிக்க வேண்டும் என்று தர்மருக்குச் சொல்லிக் கொடுத்த பீஷ்மர், துரோணர் செய்தது, தன்னையே நம்பி பாண்டவர்களை எதிர்க்கும் துரியோதனனைக் கேட்காமல் கர்ணன் கவச குண்டலங்களை தானம் செய்தது மற்றும் குந்திக்கு வரமளித்தது, தன் பக்கம் இருந்தும் சல்லியன் எதிரணிக்காகவே பேசியது, என்று துரோகங்களைப் பட்டியலிடுகிறார்.

துரியோதனன் சபையில் துகிலுரிப்பு என்ற சம்பவம் நடந்திருக்கவே வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்புறம் வனவாசத்தின்போது அங்கு வரும் கண்ணனிடம் பேசும்போது, கண்ணன்,  தான் அந்த சமயத்தில் வேறு இடத்தில் மாட்டிக் கொண்டதாகக் குறிப்பிடுவதைச் சொல்கிறார். 


துகில் என்பதற்கு ஆடை என்பதைவிட மேலாடை என்பதே பொருத்தமாக இருக்கும் என்கிறார். அந்தக் காலத்தில் அடிமைகள் மேலாடை அணியக் கூடாது என்பது எழுதப் படாத் விதியாக இருந்ததையும் அந்த வழக்கம் 1940, 50 களில் கூட இருந்ததையும் சொல்கிறார். பின்னர் அங்கு என்ன நடந்திருக்கும் என்ற கேள்வியை எழுப்பி அவரே அதற்கு ஒரு பதிலையும் சொல்கிறார்.  

புத்தகத்தில் ஒரு குறை. வரிக்கு வரி புள்ளிகள் தெளித்து பிரசுரம் பண்ணியிருப்பதால் மூச்சு இரைக்க இரைக்க படிக்க வேண்டியிருக்கிறது. 


உதாரணத்துக்கு,

"ஒரு நாள்கூட....முழுசாக....அந்தக் குழந்தைகளை சீராட்டி....பாராட்டி....சோறூட்டி...அவள் அழகு பார்த்ததே கிடையாது."

இப்படியே கடைசி வரை இருப்பது படிக்கச் சிரமமாக இருக்கிறது. ஆனாலும் சுவாரஸ்யமாக ஒரு மூச்சில் படித்து முடிக்க முடிகிறது.

வழக்கு என்பதால் ஒருமுறை சொல்லியதே மீண்டும் மீண்டும் வருகிறது. கடைசியில் மறுபடியும் எல்லாவற்றையும் ஒருமுறை தொகுத்து வழங்குகிறார்.
                                                 

                             
ஆசிரியர் எஸ் விஜயராஜ் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். தினத்தந்தி நாளிதழில் நிருபராகவும் பின்னர் உதவி ஆசிரியராகவும் பணியாற்றியவர். வானொலிக்கு பல நாடகங்கள், 2 திரைப்படங்களுக்கு கதைவசனம் பாடல்கள் எழுதியவர். இதைத் தவிர, 'இது கவிதை அல்ல விதை' 'இது வேரில் பழுத்த பலா', இது சுடுமணல் சுரந்த நீர்' போன்ற புத்தகங்களை எழுதியவர் என்கிறது ஆசிரியர் பற்றிய குறிப்பு.

"ஒரு வழக்கு... துரியோதனனை ஆதரித்து..."
ஆசிரியர் : எஸ். விஜயராஜ்.
பூம்புகார் பிரசுரம்.
272 பக்கங்கள். 220 ரூபாய்.

16 கருத்துகள்:

 1. ஆனாலும் சுவாரஸ்யமாக ஒரு மூச்சில் படித்து முடிக்க முடிகிறது...

  ஆவல் அதிகரிக்கிறது... நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றி...

  பதிலளிநீக்கு
 2. அறிந்த தவறுகள் தான். இரு பக்கமும் தவறுகள் நடந்தால் தானே போர் முடிவுக்கு வரும்!!!
  மேலும் பாண்டு தான் வனவாசம் போய்விடுகிறாரே. திரும்பி வரவேண்டிய நிலைக்குப் பாண்டவர்கள் தள்ளப் படுகிறார்கள். ஆனால் விவாதம் என்று வரும்போது நீளத்தான் செய்யும்.சுவாரஸ்யமான புத்தகமாக இருக்கும் போலிருக்கிறது. வாசித்து புத்தகத்தைப் பற்றி அறியக் கொடுத்ததற்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 3. புத்தக அறிமுக பகிர்வு அருமை.

  //சுவாரஸ்யமாக ஒரு மூச்சில் படித்து முடிக்க முடிகிறது.//

  அது தானே வேண்டும் எழுதுபவர்களுக்கு.
  வாசகர்களை இப்படி ஒரே மூச்சில் படிக்க வைப்பது போல் எழுதுவது பெரிய விஷயம் அல்லவா!


  பதிலளிநீக்கு
 4. சக்ரவியூகம் பத்தி என்ன சொல்றார் ஆசிரியர்?? துரியோதனன் வீரன் என்பதை வியாசரும் மறுக்கவோ, மறைக்கவோ இல்லை. அரக்குமாளிகை சம்பவம் குறித்து என்ன சொல்றார்? உணவில் விஷம் கலந்ததுக்கு? மற்றபடி பாண்டுவின் புத்திரர்களா இல்லையா என்பது குறித்த விவாதத்துக்கு இப்போ வரலை. வந்தால் நேரம் ஆகும். :)))

  ஆனால் எதுக்கும் இரண்டு பக்கம் இருக்கு, இல்லையா? ஆசிரியர் ஒரே பக்கத்தை மட்டுமே பார்க்கிறார் போலிருக்கே! :)))))))

  பதிலளிநீக்கு
 5. ஹிஹிஹி, நீங்க பதிலெல்லாம் சொல்ல வேண்டாம். பயப்படாதீங்க! :)))))) சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா வம்பு பண்ணிட்டு இருக்கேன். :)))))

  ஆனால் கேள்விகள் எல்லாம் என்னமோ நிஜம் தான்! ஆசிரியரைக் கேட்க வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 6. படிக்க ஆவலைத்தூண்டுகிறது! விலைதான் கொஞ்சம் அதிகமோ என்று தோன்றுகிறது! நன்றி!

  பதிலளிநீக்கு
 7. அரச உரிமை என்பது மூத்த புதல்வரின் மூத்த புதல்வனான, ஹீனம் இல்லாத தனக்குத்தான் என்று துரியோதனன் தீவிரமாக நம்புவதாலும், பீஷ்மர், துரோணர், விதுரர் என்று எல்லோரும் பாண்டவர்களுக்கே ஆதரவு கொடுப்பதாலும், 'ராஜநீதி'யின்படி வெற்றியடைய நினைப்பதாக ஆசிரியர் கூறுகிறார். பத்மவியூகக் கொலை பற்றி சொல்லவில்லை!

  ஜராசந்தனை மாலைக்குள் கொள்வேன் என்று அர்ஜுனன் சபதம் போட்டபின் வியூகத்துக்குள் நுழைய துரோணரிடம் கெஞ்சி சிறிய இடத்தைப் பெறுகிறான் அர்ஜுனன் என்கிறார் ஆசிரியர்.

  பதிலளிநீக்கு
 8. அருமையான புத்தக விமர்சனப் பகிர்வுக்கு நன்றி அண்ணா...

  பதிலளிநீக்கு
 9. புத்தக விமரிசனம் பார்த்ததும் வாங்கிப் படிக்கத் தோன்றுகிறது. எல்லா கேள்விகள் மனதிலுதித்தாலும் இதுவரை
  யாரும் எதையும் நியாயப் படுத்தியதாகத்
  தெரியவில்லை. இப்போதும் தர்க்கமா செய்யப்போகிரோம். படிக்க ஆவலைத் தூண்டும் விமரிசனம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 10. படிக்கும் ஆவலைத் தூண்டிய விமர்சனம்....

  பகிர்வுக்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 11. சுவாரஸ்யமான புத்தக விமர்சனப் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
 12. சுவாரஸ்யமான வாதங்கள். வாசிப்பனுபவத்தை அருமையாகப் பகிர்ந்துள்ளீர்கள்.

  பதிலளிநீக்கு
 13. நூல் விமர்சனம் நன்று. சுவாரசியமாக இருக்கிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். மகாபாரதத்தில் தவறேசெய்யாத முக்கிய பாத்திரம் இல்லை. இந்த வார விஜய் டி.வி மகாபாரத தொடரில் துரியோதனன் வருத்தமும் கோபமும் அடையும் காட்சிகளே .

  பதிலளிநீக்கு
 14. //ஜராசந்தனை மாலைக்குள் கொள்வேன் என்று அர்ஜுனன் சபதம் போட்டபின் வியூகத்துக்குள் நுழைய துரோணரிடம் கெஞ்சி சிறிய இடத்தைப் பெறுகிறான் அர்ஜுனன் என்கிறார் ஆசிரியர்.//

  இது கொஞ்சம் உறுத்தலா இருக்கு. எதுக்கும் வியாசரையும் ரெஃபர் செய்துட்டு, ஹரிகியையும் கேட்டுக்கறேன். :))))) நிறைய எழுதலாம். ஆனால் ரொம்பப் பெரிசாயிடும். :))))அதோட நிறைய பென்டிங் வேலைகள்! :))))

  பதிலளிநீக்கு
 15. நன்றி DD.

  நன்றி வல்லிம்மா.

  நன்றி கோமதி அரசு மேடம்.

  நன்றி கீதா சாம்பசிவம் மேடம்.

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி சே. குமார்.

  நன்றி காமாட்சி அம்மா.

  நன்றி வெங்கட்.

  நன்றி RR மேடம்.

  நன்றி TNM.

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!