புதன், 9 அக்டோபர், 2013

உறவு என்றொரு சொல்லிருந்தால்...



வாழ்க்கையில் கடினமான முடிவுகள் எடுப்பது என்பது சோதனைக் காலம். ஆனால் சில முடிவுகள் சட்டென்று எடுக்கப்பட்டும் விடுகின்றன.

சில பிரிவுகள் வேதனையைத் தொடர்ந்து கொடுப்பதும் உண்டு. சில பிரிவுகள் சந்தோஷத்தைத் தருவதும் உண்டு. ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவு திறக்கிறது என்பது பழமொழி.
 
பதினெட்டு வருடப் பழக்கம். சரியாக ஒரு ஜனவரியில் எங்களுடன் இணைந்த சொந்தம்.

பிரிவதென்பது எளிதானதா என்ன? அதுவும் நிரந்தரப் பிரிவு....

இணைந்த நாளில் எண்ணிப் பார்த்திருக்க முடியாது. 'மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்' என்பார்கள். ஆனால் இங்கு....
13 வருடங்கள், 9 மாதங்கள்...

விட்டுப் பிரிய முடியாமல் போன பந்தம். ஒருநாள் பார்க்காவிட்டாலும் பைத்தியமாகிவிடும் மனம். எல்லோருக்கும் அமையும் சொந்தம்தான். எல்லார் வீட்டிலும் அனுபவிக்கும் இன்பம்தான். எங்கள் வீட்டிலும் கிடைத்த சுகம்.

வெளியில் சென்று தேடிக் கொண்டிருந்த சுகங்களை முதன்முதலாக வீட்டுக்குள்ளேயே  அள்ளித்தந்த சொந்தம்.

அப்படிப்பட்ட சொந்தம் கடந்த ஞாயிறன்று எங்களை விட்டுப் பிரிந்தது.  பிரிந்தது என்று சொல்வதைவிட எங்களால் பிரிக்கப் பட்டது என்று கூடச் சொல்லலாம். 

இந்த நிலைக்கு உண்மையில் நாங்கள் காரணமல்ல. நாங்கள் சபல புத்தி கொண்டவர்களும் அல்ல. 

எந்த விஷயத்துக்கும் அதற்கேயுரிய பெருமைகள் உண்டு. 95 ஜனவரியில் இந்தச் சொந்தம்  எங்களுடன் இணைந்த போது நாங்கள் மகிழ்ச்சிக் கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை. சுற்றுப்புற நட்புகளின் இணைந்த வாழ்த்துகளுடன் எங்கள் உறவுப்பாலம் தொடங்கியது இனிமையாக. 

ஆரம்பத்தில் இருக்கும் சலனங்கள் இருக்கத்தான் செய்தன. நாட்பட நாட்பட சலனக் கோடுகள் மறைந்து தெளிவானது. அப்புறம் நாங்கள் பெற்ற சந்தோஷங்கள் அளவிட முடியாதவைதான். 

நாட்கள் ஓடியது தெரியவில்லை. கணக்கு பார்க்காமலேயே வருடங்கள் ஓடின.

இசைபட வாழ்ந்தோம்.

எந்த சந்தோஷங்களுக்கும் எல்லை இருக்கிறது என்பது தெரியாமல் போயிற்று. சமீப காலங்களில் இந்தச் சொந்தத்தின் குணங்கள் மாறின. நிறைய குரங்கு குணங்கள் வந்தன. சொல்பேச்சு கேளாமை பழக்கமானது. எவ்வளவோ திருத்த முயற்சித்தும் முடியாமல் போனது. எங்களின் வேண்டுதலின் பேரில் சரிபண்ண  நினைத்தவர்கள்  தோற்றுப் போனார்கள். சில விஷயங்கள் அவர்களின் கை மீறியதாக இருந்ததும் ஒரு காரணம்.

அதனாலோ என்னவோ எங்களின் முறையீடுகளும் அலட்சியபடுத்தப்பட,

அப்போதுதான் அந்தக் கடினமான முடிவை எடுத்தோம். பழகிய சொந்தத்தைத் துறந்து புதிய சொந்தம் தேட முடிவெடுத்து விட்டோம். மறுபடி சொல்கிறேன். எங்களை சபல புத்தி கொண்டவர்கள் என்று எண்ணி விடாதீர்கள். ஆயினும் எளிதில் நிகழவில்லை அது.  பொருத்தம் பார்த்து, ஒத்து வருமா என்று பார்த்து, கடந்த ஞாயிறு அன்று புதிய சொந்தம் முடிவு செய்ததோடு, பழைய இந்தச் சொந்தத்தை வெட்டியும் விட்டோம்.

புதிய சொந்தம் பழகுவதற்கு இளமையாய், இனிமையாய், புதிய சந்தோஷங்களை பற்பல வகைகளில் தருகிறது. பழகிய பிறகு தெரியலாம் இதன் குறைகள். 


வெட்டியதன் மிச்சங்கள் ஜன்னலிலும், மொட்டை மாடியிலும் பழைய இனிமை நினைவுகளின் எச்சங்களாய்..

95 ஜனவரியிலிருந்து நாங்கள் வைத்திருந்த அனலாக் கேபிளைக் 'கட்' செய்து விட்டு 'வீடியோகான் டிஷ்' டிவிக்கு மாறி விட்டோம்.  

[குழப்பம் தாங்காமல் கடைசி வரியை முதலிலேயே படித்தவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்]

24 கருத்துகள்:

  1. உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிப்பதால் முதலிலேயே 'வேறு ஏதோ'என்று ஊகித்தேன். சலனம் என்ற வார்த்தையில் கண்டு பிடித்துவிட்டேன்!

    பொறுமையாக முழுக்க படித்தேன் அதனால என்னை பசித்த புலி தின்னாது!

    பதிலளிநீக்கு
  2. பசித்த புலியிடம் மாட்டிக் கொண்டேன்:)!

    பதிலளிநீக்கு
  3. ஹாஹா, முதலிலேயே என்னமோ தோணிச்சு. அதான் பார்த்த உடனேயே +இல் சொன்னேன். ஹிஹிஹி, நாங்க இன்னும் கேபிள் தான். அதுவும் அரசாங்க கேபிள். அது அளிக்கும் சானல்கள். அதையே பார்க்க நேரமில்லை. இதெல்லாம் எதுக்கு? :))))))

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்கணும், தொலைக்காட்சிப் பெட்டினு தப்பாச் சொல்லி இருக்கேன். நீங்க சொல்றது கேபிளைக் கட் பண்ணிட்டு, டிஷுக்கு மாறினது. ஹிஹிஹிஹி. அ.வ.சி. ஆனால் தொலைக்காட்சி சம்பந்தம்னு தெரிஞ்சதாலே,பண்ணின தப்புக்கு ஒண்ணு ரெண்டு பொற்காசுகளைக் குறைச்சுண்டு பொற்கிழியைக் கொடுத்துடுங்க.

    பதிலளிநீக்கு
  5. விட்டது சனியன்னு போய்ட்டே இருங்க.. இருங்கருங்க.. மனுசங்களைப் பத்திச் சொன்னீங்கன்னு இல்லே நெனச்சேன்?

    பதிலளிநீக்கு
  6. என்ன அழகான தலைப்பு!
    அருமையான கதை சொல்லும் முறை
    நல்ல கதை எழுதலாமே நீங்கள்.

    இப்படி ஏதாவது மாற்றம் கடைசியில் இருக்கும் என்பதை ஊகித்து விட்டதால் பசித்த புலியிடம் மாட்டவில்லை.

    பதிலளிநீக்கு
  7. நானும் முதலிலேயே யூகித்துவிட்டேன்..புதிதாக கம்ப்யூட்டர் வாங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.

    பதிலளிநீக்கு
  8. அவ்வ்வ்வ் ::))நான் நாலு கால் வாலுள்ள சொந்தம்னு நினைச்சிட்டேன் ..:)) ..

    Angelin

    பதிலளிநீக்கு
  9. புது கார் வாங்கியிருப்பீங்கன்னு நினைச்சேன்! புது டீவி இல்ல வாங்கியிருக்கீங்க! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  10. ஏதோ பெரீசா காதுல சுத்தப்போறீங்கன்னு மட்டும் நினைச்சேன்..:)

    ஆனா முன்னுக்கு சொல்லிகொண்டு வந்தவிதம் கொஞ்சம் ஹையோ என்னவோ ஏதோன்னு இருததையும் சொல்லியே ஆகணும்...

    நல்லா கதை விடுற திறமை உங்களுக்கு!..:)

    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  11. பாதியளவு படிக்கையிலேயே தெரிந்ததை, அந்த 'இசைபட வாழ்ந்தோம்' உறுதி படுத்தியது. நினைத்தபடியே இருந்தது ஒருவிதத்தில் சந்தோஷமாகவும் இருந்தது.

    சொல்ல மறக்கக்கூடாது என்று நினைத்ததைச் சொல்கிறேன். விவரித்த நகாசு அற்புதம். இந்த மாதிரி அட்டகாசங்களைப் படிக்கும் பொழுது ரா.கி.ரா. என் நினைவுக்கு தப்பாமல் வந்து விடுவார். இப்பொழுதெல்லாம் எதைச் சாக்கிட்டு கொண்டாவது அடிக்கடி அவரை நினைத்துக் கொள்கிறேன்.

    பதிலளிநீக்கு
  12. பெயரில் போய் தவறு இருக்கலாமோ?உங்களுக்கு தெரியும் என்றாலும், ரா.கி.ரங்கராஜன் என்று தெளிவாகச் சொல்லிவிட வேண்டும்.

    தி.ஜ.ர.வைப் பற்றி உங்கள் பதிவில் படித்த போதே நினைத்தது இது.
    தி.ஜானகிராமனை சிலர் தி.ஜ.ர. என்றும் எழுதுகிறார்கள்.

    பதிலளிநீக்கு
  13. நான் முதலில் நினைத்தது ஒன்று. அப்புறம் இன்டர்நெட் சர்வீஸ் ப்ரோவைடர் மாற்றி விட்டீர்கள் என்று நினைத்தேன். பார்த்தால் டிஷ்.

    வீடியோகானுடன் இசைபட வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. நல்ல பிரிவு தான்!
    புதிய சொந்தத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள்.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. கடைசியில் இப்படி பல்பு கொடுத்து விட்டீர்களே ..இது ரா .கி.ரங்கராஜன் படைப்பாகத்தான் இருக்கும் ,சரியா ?

    பதிலளிநீக்கு
  16. சொல்லிப்போனவிதம் சுவாரஸ்யம்
    கூட்டிப்போனது
    இறுதி வரி மனம் கவர்ந்தது
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  17. அடடா. நல்ல முடிவுதான்.
    எங்கள் டாடா ஸ்கை படுத்தும் பாடு என்னை மாறச் சொல்கிறது. எஜமானரின் கேபிள் டிவி எத்த்தனையோ தேவலை. இது மழை வருவதை ரமணனுக்கு முன்னாடியே சொல்லிவிடும்.டோட்டல் கட்.
    விடியொகான் விவரம் மெயிலில் கேட்டுக் கொள்கிறேன்.சூப்பர் நரேஷன்:)

    பதிலளிநீக்கு
  18. \\சரியாக ஒரு ஜனவரியில் எங்களுடன் இணைந்த சொந்தம்.\\

    இங்கே சந்தேகம் எழுந்தது.

    \\வெளியில் சென்று தேடிக் கொண்டிருந்த சுகங்களை முதன்முதலாக வீட்டுக்குள்ளேயே அள்ளித்தந்த சொந்தம்.
    அப்படிப்பட்ட சொந்தம் கடந்த ஞாயிறன்று எங்களை விட்டுப் பிரிந்தது. \\

    இங்கே ஊர்ஜிதமானது.

    எங்கள் நாங்கள் என்று தன்மைப் பன்மைக்கு பதில் என் நான் என்று இருந்திருந்தால் உங்கள் எண்ணம் இறுதிவரைத் தடங்கலின்றி ஈடேறியிருந்திருக்கும்.

    சுவாரசியமான எழுத்தோட்டம். பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  19. நானும் புலியிடம் மாட்டவில்லை....

    கீதமஞ்சரி அவர்கள் சொல்வது போல் எங்கள், நாங்கள் என்று உபயோகித்திருந்ததால் ஏதோ ஒரு மாற்றம் உள்ளது என்பதை முன்பே புரிந்து கொள்ள முடிந்தது....

    சிறப்பான நடை. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  20. குழப்பம் தாங்காமல் கடைசி வரியை முதலிலேயே படித்தவர்களை சுஜாதாவின் பசித்த புலி தின்னட்டும்-
    ஹி! ஹி! எப்படி கண்டுபிடிச்சீங்க!

    பதிலளிநீக்கு
  21. ஹி... ஹி... நானும் நாய்னுதான் நினைச்சேன்... :-)))))))

    பதிலளிநீக்கு
  22. ரஞ்சனி நாராயணன்.
    ராமலக்ஷ்மி
    DD
    கீதா சாம்பசிவம்
    அப்பாதுரை
    கோமதி அரசு
    கலியபெருமாள் புதுச்சேரி
    ஏஞ்சலின்
    'தளிர்' சுரேஷ்
    middleclassmadhavi
    இளமதி
    ஜீவி
    ராஜலக்ஷ்மி பரமசிவம்
    அருணா செல்வம்
    பகவான்ஜி
    ரமணி
    வல்லிசிம்ஹன்
    கீதமஞ்சரி
    கோவை2தில்லி
    ஹேமா (HVL)
    ஹுஸைனம்மா

    அனைவருக்கும் நன்றி.

    ஜீவி ஸார்.. மிக்க நன்றி.

    கீதமஞ்சரி.. நீங்கள் சொல்வது சரி. 'நான்' 'என்' என்றோ அல்லது பொதுவாகவோ எழுதியிருக்கலாம் என்று எனக்கும் தோன்றியது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!