Wednesday, October 16, 2013

சேனைக்கிழங்கு கிரேவி!

இன்றைய தினம் என் கைப்பக்குவத்தில் திளைக்க வேண்டிய கட்டாயம் வீட்டு மக்களுக்கு.

பாஸ் உறவினர் வீடு விசிட்.


முருங்கைக்காய், கத்தரிக்காய் போட்டு  வெந்தயக்குழம்பு, தக்காளி ரசம், கத்தரிக்காய் வதக்கல் என்று திட்டமிட்டு, அதன்படியே அனைத்தும் தயாரும் ஆனது. அப்புறம் பையன்களுக்குப் பிடித்த சேனைக் கிழங்கு செய்ய திட்டமிட்டபோதுதான் விதி கிச்சன் ஓரத்தில் நின்று சிரித்தது. வழக்கம்போல அல்லது எல்லோரையும்போல நான் அதைக் கவனிக்கவில்லை.

                                                                    
                              
அரைக்கிலோ சேனைக் கிழங்கு ரெடியாக இருந்தது. சாதாரணமாக எங்கள் வீடுகளில் சேனையை எப்போதாவது எரிசேரியும், எப்போதும் கொஞ்சம் பொடியாக நறுக்கி ரோஸ்ட்டாகவோ கொஞ்சம் மெதுவாகவோ வதக்குவதும் வழக்கம்.

நான் கொஞ்சம் பெரிய பெரிய துண்டங்களாக நறுக்கி அப்படியே ரோஸ்ட் செய்வேன். சமயங்களில் அதை மோரில் அல்லது புளிநீரில் காரப்பொடி, உப்பு, பெருங்காயப்பொடி சேர்த்து குழைத்துக்கொண்டு சேனையை அவற்றில் ஊறவைத்து, 'அவனி'ல் அரை வதக்கல் செய்து எடுத்துக் கொள்வேன்.  அப்புறம் வாணலியில் இட்டு ரோஸ்ட் செய்வேன்.

இன்று வித்தியாசமாக (எங்களைப் பொறுத்தவரை) செய்யத் திட்டமிட்டேன். தக்காளி வெங்காயம் கிரேவி செய்து கொண்டு, பெரிய பெரிய அளவில் நறுக்கப்பட்டு ரோஸ்ட் ஆகியிருக்கும் சேனையை பாதி கிரேவியிலும் (சாப்பிடுவதற்கு கொஞ்ச நேரம் முன் போடுவதாக திட்டம்) பாதி அப்படியேயும் சாப்பிடக் கொடுப்பது என்பது பிளான்!

தக்காளி, அதைவிடக் கூடுதலாக பெரிய வெங்காயம் எடுத்து நறுக்கிக் கொண்டு, வாணலியில் வதக்கி, இரண்டு பச்சை மிளகாய் அப்படியே நீள வாக்கில் கீறிப் போட்டு, கொஞ்சம் இஞ்சி துருவிப் போட்டு, ஒரே பல்லு பூண்டு நசுக்கிப் போட்டு, தேவையான அளவு உப்பு, காரப்பொடி சேர்த்து, தண்ணீர் கொஞ்சமாய் விட்டு கொதிக்க விட்டேன்.  சுமார் 15 நிமிடங்கள் கொதித்தபின் கிரேவி ரெடி!

ஏற்கெனவே நறுக்கி வைத்த சேனைக் கிழங்கை கரண்ட் கட் ஆன காரணத்தால் குக்கரில் ஒரு விசில் வைத்து இறக்கலாம் என்று வைத்தேன். ஏதோ வேலையில் மறந்து இரண்டு விசிலில் இறக்கினேன்!
                                                     


வாணலியில் எண்ணெய் விட்டு சேனையை எடுத்து போட்டேன். ஒரு திருப்பு திருப்பியதுதான் தாமதம், சேனைக்கிழங்கு கஞ்சி மாவு, தோசை மாவு போல கொழ கொழ என்று வடிவிழந்து வெறும் மாவாகிப் போனது. 

என்ன செய்ய, எலுமிச்சை பிழிந்து கடுகு தாளித்து மசியலாக்கலாமா என்றால்,  மனம் ஒப்பவில்லை. அப்படியே எடுத்து எண்ணெயில் ரோஸ்ட் செய்யலாமா என்று பார்த்தால் சரி வரும் என்று தோன்றவில்லை.  வீட்டிலோ சோளமாவு இல்லை. மனதில் இருந்ததைச் செயல்படுத்துமுன் கேஜிக்கு ஒரு ஃபோன் போட்டு என் திட்டம் ஒத்துவருமா என்று கலந்துரையாடி விட்டு...
                                        


ரவா கொஞ்சம், கொஞ்....சம் மைதா மாவு, அப்புறம் அரிசி மாவு கலந்து கூழான சேனையை எடுத்து இதிலிட்டு உருட்டி, சிறு உருண்டைகளாக்கிக் கொண்டு, லேசாக அதே மாவில் புரட்டி,  எண்ணெயில் பொரித்து எடுத்து வைத்தேன். பாதி உருண்டைகளை கிரேவியிலும், பாதியை அப்படியேயும் சாப்பிட்டோம்.
                                             


உன்னைப் பிடி, என்னைப்பிடி என்று ஓடிவிட்டது. எனக்கு இரண்டுதானா, எனக்கு ஒன்றுதானா என்று போட்டியாகி விட்டது.

25 comments:

இராஜராஜேஸ்வரி said...

அட்டகாச சமையல்...

வல்லிசிம்ஹன் said...

என்ன ஒரு அற்புத யோசனை. பச்சை க்ரேவியில் அடங்கிய சேனை.

எனக்கும் இப்படி ஒரு மாமா குறிப்பு
கொடுத்தால் எத்தனை நன்றாக இருக்கும்:)
மெந்தியக் குழம்பு சாப்பிட்டு எத்தனை நாளாச்சு.

சீனு said...

இங்கேயும் கேஜி தானா...! அவர் தான் எங்களின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ஆயிற்றே...

திண்டுக்கல் தனபாலன் said...

அடடா...! சோளமாவு இல்லாததால் புதிய ஐட்டம் கிடைத்து விட்டதே... வாழ்த்துக்கள்...

middleclassmadhavi said...

Super idea!! Looks yummy.

ADHI VENKAT said...

அடடா! அருமையான சேனை கோப்தா க்ரேவி.... பார்க்கவே பிரமாதமா இருக்கே...

கோமதி அரசு said...

சமையலும் அருமையாக செய்வீர்கள் போல!

அருமையான சமையல் குறிப்பு.


//உன்னைப் பிடி, என்னைப்பிடி என்று ஓடிவிட்டது. எனக்கு இரண்டுதானா, எனக்கு ஒன்றுதானா என்று போட்டியாகி விட்டது.//
இது மிகவும் மகிழ்ச்சியான விஷயம் ஆச்சே.
உங்கள் மனைவிக்கும் ஒரு முறை செய்து கொடுங்கள்.

ராமலக்ஷ்மி said...

பிரமாதம்:)! அடிக்கடி களம் இறங்கி அசத்துங்கள்.

Ramani S said...

இதுவரை அறியாத கிரேவி
இந்த வாரம் செய்து பார்த்து விடுகிறோம்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

ஜீவி said...

முதல் படம் ஏதோ கனிமப் பொருள் மாதிரி இருக்கிறதே என்று பார்த்தால்,
சும்மா சொல்லக் கூடாது, விளையாடியிருக்கிறீர்கள். இதில் பாதி, அதில் பாதி என்றதினால் தான் வந்தது வினை.

பொடியாக நறுக்கி ரோஸ்ட். இதான் பெஸ்ட் சாய்ஸ். இதில் நறுக்குவதில் தான் இருக்கிறது விஷயமே. குட்டி குட்டி நீண்ட செவ்வக வடிவமாக நறுக்கினால், சைடு சமாச்சாரங்கள் நன்றாக பூசினமாதிரி ஒட்டிக் கொள்ளும். காந்தலாக வறுக்காமல் பொன்நிற வருவல் பெஸ்ட்.

அதுசரி, கத்திரிக்காய்+ முருங்கைக்காய், அது என்ன காம்பினேஷன்?

Ranjani Narayanan said...

எப்படியோ சமாளித்துவிட்டீர்கள், அதுவும் நன்றாகவே! நீங்கள் 'அட்ஜஸ்ட்' பண்ணியதை நாங்கள் நிஜமாக பண்ணிப் பார்த்துவிடுகிறோம்.
ஸ்ரீராம் என்ன - ஆல் இன் ஆல் அழகு ராஜாவா?

rajalakshmi paramasivam said...

நள பாகம் அசத்தி விட்டீர்கள் போலிருக்கிறதே! எதையோ செய்ய ஆரம்பித்து எங்கேயோ போய் முடித்து ,
அதுவும் அட்டகாசமான சுவையில் முடித்து இருக்கிறீர்கள். இந்த புத்து ரெசிபி noted.

சே. குமார் said...

அருமையான சமையல் அண்ணா...

ஸ்ரீராம். said...


நன்றி RR மேடம்.

நன்றி வல்லிம்மா. வெந்தயக் குழம்பு ஏன் நீண்ட நாட்களாய் சாப்பிடவில்லை வல்லிம்மா? ரெகுலர் சமையலில் உள்ளதுதானே?

நன்றி சீனு.

நன்றி DD.

நன்றி middleclassmadhavi.

நன்றி ஆதி வெங்கட். //சேனை கோப்தா க்ரேவி//
அதற்கு அதுதான் பெயரா?!! :)))

நன்றி கோமதி அரசு மேடம். என் சமையலுக்கு என் மனைவியும் ரசிகை! (எப்படியோ ஒரு நாள் ஓய்வு கிடைத்தால் சரி என்று நினைப்பாரோ என்னவோ!) நேற்று மனைவியும் மாலை வந்து ருசி பார்த்தார்!

நன்றி ராமலக்ஷ்மி. அடிக்கடி களம் இறங்கும் வழக்கம் உண்டு! :))

நன்றி ரமணி ஸார்!

நன்றி ஜீவி ஸார்! குட்டி குட்டிச் செவ்வகமாக நறுக்கிச் செய்யும் முறைதான் எப்பவுமே. ஒரே மாதிரி சாப்பிட்டால் போரடித்து விடுகிறது. இப்படிப் பெரிய சைஸ்களில் நறுக்குவதும் எளிது. வித்தியாசமாகவும் இருக்கும்!

கத்தரிக்காயும் முருங்கைக்காயும் சேர்த்து சாம்பார் செய்தால் நல்ல வாசனையாக இருக்கும். என் முதல் பையன் ஆண்டு நிறைவுக்கு சமையல் செய்ய வந்த திருநெல்வேலி சகோதரிகளிடமிருந்து நான் பெற்ற டிப்ஸ், இதுவும், அரைத்து விட்டுச் செய்யும் சாம்பாரில் வித்தியாசமான காம்பினேஷன்களில் வறுத்தும், வறுக்காமலும் செய்யும் முறைகளும், கத்தரிக்காய் பொடி தூவிக்கறியும்...!
நன்றி ரஞ்சனி மேடம்... 'இனி இப்படியே செய்துடலாம்ப்பா' என்பது பசங்களின் ஆசை!

நன்றி raajalakshmi paramasivam.

நன்றி சே. குமார்.

ஹுஸைனம்மா said...

ஹி.. ஹி.. நீங்களும் என்னை மாதிரிதானா... சமையலில்!! எப்பவுமே ‘பிள்ளையார் பிடிக்கப் போய் குரங்கான’ கதைதான்.. ஆனாலும், புதுப்புது ரெஸிப்பி உருவாக்கி சமாளிச்சிடுவோம்ல... :-)

//கத்தரிக்காயும் முருங்கைக்காயும் சேர்த்து சாம்பார் செய்தால் //

எங்க வீட்டில் சாம்பார்னாலே இப்படித்தான்.. சின்ன வெங்காயமும் சேர்ப்பதுண்டு. இது புதுசுன்னா, அப்ப நீங்கல்லாம் எப்படிச் செய்வீங்க?

ராஜி said...

புது ரெசிபி சொல்லி இருக்கீங்க செஞ்சு பார்க்குறேன்

ராஜி said...

புது ரெசிபி சொல்லி இருக்கீங்க செஞ்சு பார்க்குறேன்

இளமதி said...

அட.. சமையலிலுமா சகோ..:) அசத்துறீங்க... அருமை!

செய்து பார்த்திடுவோம்!. வாழ்த்துக்கள்!

அப்பாதுரை said...

சுவாரசியம்.
அடுத்த தடவை உங்களைச் சந்திக்குறப்ப செய்து காட்டுங்க.

Kamatchi said...

இது வட இந்தியர்களின் கோப்தா.
எதையுமே துருவி மாவைச் சேர்த்து, பகோடாமாதிரி பொரித்தெடுத்து, அதை ஒரு மஸாலா கிரேவியில் போட்டெடுத்தால் ஆச்சு காரியம்.நன்றாக இருக்கு. நானும் செய்கிறேன் சேனையின் கோப்தா. ருசியாக இருக்கு. அன்புடன்

ஸ்ரீராம். said...

நன்றி ஹுஸைனம்மா. நாங்கள் வெங்காயம் போடாமலேயே சாம்பார் செய்வோம்! வெங்காயம் போட்டும் செய்வோம். வெங்காயம் மட்டும் தனித்துப் போட்டும் சாம்பார் செய்வோம்!

நன்றி ராஜி.

நன்றி இளமதி.

நன்றி அப்பாதுரை. செஞ்சாப் போச்சு!


ஸ்ரீராம். said...

ஆஹா... தன்யனானேன் காமாட்சி அம்மா. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி.

Kamatchi said...

;f;உங்கள் ப்ளாகிற்கு ஸரிவர இப்போதுதான் வரத் தெரிந்தது. சிலஸமயம் கருத்து எழுதினாலும் போகாது. கற்றுக் கொள்ள நிறைய விஶயங்கள் இருக்கிரது. வேறொன்றுமில்லை. அன்புடன்

Geetha Sambasivam said...

அட, இதுவா?? :)))) சேனைக்கிழங்கு கோஃப்தா செய்து அசத்திட்டீங்களா? அப்போ உங்க பாஸ் இனிமே அடிக்கடி வெளியே போவாங்கனு நினைக்கிறேன். சரியா?:))))

Geetha Sambasivam said...

ஜீவி சார், கத்தரிக்காயும், முருங்கைக்காயும் போட்டுக் கூடவே சின்ன வெங்காயம், தக்காளி போட்டுக் குழம்பு வைத்தால் ஆஹா, ஆஹா, ஓஹோ, ஓஹோ தான்! சாப்பிடலாம் வாங்க வில் பதிவே போட்டிருக்கேன் பாருங்க. :))))

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!