புதன், 13 ஆகஸ்ட், 2014

அலுவலக அனுபவங்கள் - விசுவின் யோசனை



இந்தச் சம்பவம் நடந்தது எழுபதுகளின் இறுதியில்.

அலுவலகத்தில் அன்றைய காலைநேரம் வழக்கம் போலவே களைகட்டியிருந்தது. கேலியும் கிண்டலுமாக வேலை பார்த்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தார்கள். 

சாதாரணமாக அரசு அலுவலகங்கள் குறித்து ஒரு கருத்து உண்டு. அலுவலகத்துக்கு எப்போதும் தாமதமாக வருவார்கள். வந்ததும் தேநீர் அருந்தச் சென்று விடுவார்கள். அப்புறம் இருக்கைக்குத் திரும்பி, பேருக்குக் கொஞ்ச நேரம் வேலை. அப்புறம் மதிய உணவு,  அரட்டை என்று.....!

ஆனால் எங்கள் அலுவலகத்தைப் பார்த்தவர்கள் யாரும் அப்படிச் சொல்ல மாட்டார்கள்.
  தாமதமாக வருபவர்கள்  99 சதவிகிதம் இருக்காது.  பேசிக் கொண்டே வேலை செய்வார்களே தவிர வேலை தடைபடாமல் நடந்து கொண்டே இருக்கும்.  80 சதவிகித மேசைகளில் கோப்புகள் தேங்கி நின்றிருக்காது. 

ஒவ்வொரு அலுவலகத்தில்  இருப்பதுபோல,  சிரிக்காமல், அடுத்தவரை விரோதமாகவே பார்க்கும் சுபாவமும் இங்கு கிடையாது.

இந்த நிலையில் இரண்டு நாட்களாக ரஹீமின் சோர்ந்த முகம் எங்கள் கவனத்தைக் கவர்ந்ததில் வியப்பில்லை. கலகலப்பான ரஹீம் சிரிப்பை மறந்த முகத்துடன் அவ்வப்போது மற்றவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு மௌனமாகவே இருந்தான்.

எங்களுக்கும் காரணம் தெரியும்தான். 
 

                                               
 
அவன் ஊருக்கு சற்றே ஒதுக்குப்புறமான இடத்தில் இடம் வாங்கி இருந்தான். அவ்வப்போது சென்று பார்த்து வருவான். வீடு கட்ட கையில் ஏதும் காசில்லை என்பதால் அதை ஒத்திப் போட்டுக் கொண்டிருந்தான். 

அவன் மனைவி அதைப் பற்றி அவனை அடிக்கடி நச்சரிக்கிறாள் என்றும் சொல்லியிருக்கிறான். 
 
கொஞ்ச நாட்களுக்குமுன் சென்று பார்த்தபோது இவன் மனைக்குப் பின்புறம் அந்த மனைக்குச் சொந்தக்காரன் வீடு கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறான். இன்னும் கொஞ்சநாள் கழித்துப் பார்த்தபோது இவன் மனைக்குள்ளும் அவன் அத்து மீறியிருக்கிறான் - அதுவும் நிறையவே - என்று தெரிந்திருக்கிறது.


                                                          

"போலீஸ்ல சொல்ல வேண்டியதுதானே?"

"கட்டறவனே நம்ம ஸ்டேஷன் எஸ் ஐ தான் ஸார்!"  (சின்ன ஊர் அது)


                                                   
 
"அடக் கஷ்ட காலமே... தெரியாமச் செய்யறானோ?"

"எனக்கும் கூட அப்படி ஒரு ஆசை இருந்தது ஸார்.. போய்ப் பேசிப் பார்த்தேன். திமிராப் பேசறான்"

இதுதான் ரஹீமின் முகவாட்டத்துக்குக் காரணம்.

ஆளாளுக்கு அறிவுரைகளை அள்ளி வழங்கிக் கொண்டிருக்க, அவன் மௌனமாக எல்லோரையும் வெறித்துக் கொண்டிருந்தான்.
 
ஒருவார லீவில் சென்னை சென்று திரும்பிய விஸ்வநாதன் அன்றுதான் அலுவலகம் வந்தார். அவர் அலுவலகத்தில் இருந்தால் கலகலப்புக்குப் பஞ்சம் இருக்காது. 

ரஹீமின் கவலை முகம் பார்த்தார்.  காரணம் கேட்டார்.  அலுவலகமே பதில் சொன்னது!

இரண்டு நிமிடம் யோசனையில் இருந்தவர், "அவ்வளவுதானே... கிரகப்ப்ரவேசம் பண்ணிடு" என்றார்.

"ஸார்.. விளையாடறீங்களா?"

"இல்லை.. சீரியஸாத்தான் சொல்றேன். உன் மனைக்குள்ளே வீடு வந்திருக்கு இல்லே... அப்போ அது உன் வீடுதான். அந்த இடத்துக்கு நீ கிரகப்ப்ரவேசத்துக்கு ஏற்பாடு செய்"

ரஹீம் சோர்வாய் தன் இருக்கைக்குத் திரும்ப முயன்றான்.

"ரஹீம்.. நான் ஜோக் அடிக்கலை. நீ நிஜமா கிரகப் பிரவேசம் செய்ய வேண்டாம். பத்திரிக்கை மட்டும் அடி. எல்லோருக்கும் தெரியறா மாதிரி பத்திரிக்கை கொடு. அது போதும்"

"இதனால என்ன ஸார் பிரயோஜனம்?   நான் உதை வாங்கணுமா?"

"உனக்கு வேற வழி ஏதாவது வச்சிருக்கியா"
 
 
மறுபடியும் கொஞ்சநேரம் வெவ்வேறு யோசனைகளை அலசினார்கள்.

"ம்ம்ம்.... இல்லையே... நிறைய யோசனைகளை சொன்னார்கள். எதுவும் சரிவரலை"

"அப்ப செலவைப் பார்க்காம பத்திரிக்கை அடி. பார்ப்போம்.. நல்லா ஒரு மாதம் டைம் கொடுத்து தேதி வை.  நிஜமாகவே நல்ல நாள் பார்த்துக் குறி.  அது உன் இடம்.  சட்டப்படி என்ன செய்ய முடியும்னு யோசிக்கறப்பவே அவனுக்கு பயம் வந்துடும்"

யாருக்குமே இது பெரிய உபயோகமான யோசனையாகப் படவில்லை. சரிவராது என்று பாதிபேர்கள் வாதாடினார்கள். எல்லோருமே மாற்றி மாற்றிப் பேசினாலும் கடைசியாக வேறு எந்த வழியும் இல்லாததால் இதையே அமுல் படுத்திப் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள். 

ஒற்றை ஆளாக பத்திரிக்கை தராமல் எப்போதும் நண்பர்கள் நான்கைந்து பேர்களுடனே சென்று பத்திரிக்கை விநியோகிக்கச் சொன்னார் விசு.
 
 
                                               
 
கொஞ்சம் தயக்கமாகவும், இலேசான பயத்துடனும் வேலைகள் நடந்தன.  பத்திரிக்கை அடித்து பயத்துடன் விநியோகித்தார்கள்.
 











 
 
 
 
 
 
 
 
 
 
நான்காவது நாள் இவன் மனை காலியாக இருந்தது.

22 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.
    செய்ய வேண்டிய விதத்தில் செய்தால் எல்லாம் சரியாகும்.. கதைமூலம் சிறப்பாக சொன்னீர்கள் பகிர்வுக்கு நன்றி.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  2. வணக்கம்
    த.ம 1வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  3. ////நான்காவது நாள் இவன் மனை காலியாக இருந்தது////

    அப்படியே அந்த எஸ்ஐ பணிபுரியும் காவல் நிலையத்திலேயே "ஐயா என் வீட்ட காணோம்னு" ஒரு புகார் மனுவும் கொடுத்திருந்தா இன்னும் சுவாரசியமா இருந்திருக்கும், இல்லையா.......?

    பதிலளிநீக்கு
  4. அடப்பாவிகளா..
    (டைரக்டர்) விசு நெசமா சொன்ன தகவல் போலன்னு படிச்சு பாத்தா.. கதை விட்டு இருக்காங்க..

    பதிலளிநீக்கு
  5. முள்ளை முள்ளால் எடுப்பது இதுதானோ..!

    பதிலளிநீக்கு
  6. எங்கேயோ இடிக்கிறதே ஸ்ரீ. எஸ்.ஐ. வீடு கட்டி இருந்தால் மனை எப்படிக் காலியாயிருக்கும்?

    பதிலளிநீக்கு
  7. போலீசுக்குத் தேள் கொட்டினாப்பலன்னு புதுமொழிதான் எழுதணும் போல...

    பதிலளிநீக்கு
  8. எஸ்ஸை இடமே ஒரு விலைப் பேசி வீட்டை கட்டி முடித்து இருக்கலாமே ?

    பதிலளிநீக்கு
  9. இது நல்ல யோசனை.
    தைரியமாய் அடுத்தவர் மனையை ஆக்கிரமிப்பு செய்தவர் பயந்து காலி செய்தது ஆச்சரியம் தான்.

    பதிலளிநீக்கு
  10. //இதையே அமுல் படுத்திப் பார்ப்பது என்று முடிவு செய்தார்கள்.... //

    இதோடு நிறுத்தியிருக்கலாம்; பின்னூட்டமிடுகிறவர்களை பின் என்ன நடந்தது என்று யூகித்துச் சொல்லக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  11. வீட்டின் ஒரு பகுதியை இடிக்கவா செஞ்சாங்க?

    பதிலளிநீக்கு
  12. நான் சொல்ல வந்ததை அப்படியே சொல்லியிருக்கிறார் வெங்கட் :).

    பதிலளிநீக்கு
  13. ஹாஹாஹா....சூப்பர்! மயிலே மயிலே இறகு போடுன்னா போடாதுனு சொல்லுவாங்களே அது போல.....

    பதிலளிநீக்கு
  14. நல்ல ஐடியாதான். முள்ளை முள்ளால் எடுப்பது போல.

    இருந்தாலும், இந்தக் கால தாதா, எஸ்.ஐ.ன்னா இது சரிவருமான்னும் ஒரு டவுட்... (என்னச் செய்ய, பய்ந்தே பழகிட்டோம்..)

    பதிலளிநீக்கு
  15. கட்டின வீட்டை எஸ்.ஐ இடித்துவிட்டாரா? பரவாயில்லையே! :)

    பதிலளிநீக்கு
  16. கட்டின வீட்டை எஸ்.ஐ இடித்துவிட்டாரா? பரவாயில்லையே! :)

    பதிலளிநீக்கு
  17. சிறந்த கருத்துப் பகிர்வு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!