செவ்வாய், 23 பிப்ரவரி, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: என்ன செய்யப் போகிறாய்?


          இந்த வார கேட்டு வாங்கிப் போடும் கதை பகுதியில் இடம் பெறுவது மூங்கில் காற்று தளத்தின் சொந்தக் காரர் திரு T N முரளிதரன் அவர்களின் படைப்பு.  கல்வித்துறையில் அதிகாரியாகப் பணியாற்றும் திரு முரளிதரன் பல்துறை வித்தகர்.  காதல் கடிதப் போட்டியில் கலந்துகொண்டு பரிசு பெறுவார்.  கதைகள் எழுதுவார். கணிதம் சொல்லிக் கொடுப்பார்.  கணினியும் கற்றுக் கொடுப்பார்.  கவிதை எழுதுவார்.


          அவர் தள முகவரி : மூங்கில்காற்று.


          இந்தக் கதை பற்றி முரளிதரன் சொல்வது...

==========================================================


ஸ்ரீராம் அவர்களுக்கு,

'எங்கள் ப்ளாக்' கில் எனது கதையை வெளியிட  கேட்ட்டமைக்கு நன்றி. "என்ன செய்யப் போகிறாய்" என்ற கதையை இத்துடன் அனுப்பி இருக்கிறேன். இக்கதை 30.04.2014 தேதியிட்ட குமுதம் இதழில் வெளியானது. இந்தக்  கதை வெளியானதில் ஒரு சுவாரசியம் உண்டு. 

இதை நான் முதலில் என் வலைப் பக்கத்தில் வெளியிட்டிருந்தேன். அன்று மாலை திடீரென்று  இருந்து  போன் கால் . " முரளிதரன்தானே நீங்கள்?" என்று கேட்க   "ஆம்." என்றேன்,   "நான் பிரியா கல்யாணராமன் பேசுகிறேன்.என்னைத் தெரியுமா?"  என்று தொடர   "நன்றாகத் தெரியும் . குமுதம் ஆசிரியரை தெரியாமல் இருக்க முடியுமா?" என்றேன் இன்ப அதிர்ச்சியுடன். "உங்கள் கதையை படித்தேன். நன்றாக இருந்தது"  என்றார்.  

3 in 1 என்று சற்று  வித்தியாசமாக எழுதி இருந்தது  அவரைக் கவர்ந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எனது சொந்தப் படைப்புதானா என்பதை உறுதிப் படுத்தியபின் "குமுதத்தில் வெளியிட சம்மதம்தானா "  என்றார். லட்சக் கணக்கான வாசகர்கள் உள்ள குமுதத்தில் வெளியாவதற்கு கசக்குமா என்ன?.  சம்மதம் தெரிவித்தேன். குமுதத்தில்  வெளியாகும் வரை உங்கள் வலைப் பக்கத்தில் இருந்து அதனை எடுத்து விடுங்கள். மூன்று வாரங்களுக்குப் பின் உங்கள் கதை வெளிவரும்" என்றார் . நான் வலைப் பக்கத்தில் இருந்து தற்காலிகமாக நீக்கி விட்டு கதையை அனுப்பி வைத்தேன். 

புகைப்படம் அனுப்பும்படி கூற புகைப்படத்தை தனியாக அனுப்பினேன். 2 வாரங்களுக்குள்  கதை வெளியாகி விட்டது .  அவ்வளவு சீக்கிரம் வெளியாகும் என்று நான் நினைக்காததால் பார்க்காமல் விட்டுஎன்ற  விட்டேன். என்னை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்திய மூத்த பதிவர் சென்னை பித்தன் அவர்கள் கதை  எனது புகைப்படத்துடன் வெளியாகி உள்ளதை முதலில் கூறி வாழ்த்து தெரிவித்தார்.  அதன் பிறகு வாங்கிப் பார்த்தேன். 3 in 1 கதை என்ற முத்திரையுடன் வெளியாகி இருந்தது மகிழ்ச்சியாக இருந்தது . 

வலை உலகை பதிவுகளை பத்திரிகைகள் கவனித்துக் கொண்டிருக்கின்றன என்பதை 
இதன்மூலம் அறிய முடிந்தது. வடிவேலுவை கற்பனையாகக் கொண்டு கணிதப் புதிர்களை நகைச்சுவை கதைகளாக எழுதி இருந்ததையும் அவர்கள் ரசித்துள்ளனர் எனபதையும் தெரிந்து கொண்டேன். 

இதன் பிறகு இன்னொரு கதையும் குமுதத்தில் வெளியானது.  பிரியா கல்யாணராமன் அவர்களுக்கு எனது  நன்றிகள் . விகடன் அனுபவமும் உண்டு . 

வேறு ஏதேனும் தகவல் வேண்டுமெனில் தொடர்புக்கு  எனது மின்னஞ்சல் tnmdharanaeeo@gmail.com 

அலைபேசி 9445114895

==================================================================

          இனி அவர் படைப்பு...

======================================================================என்ன செய்யப் போகிறாய்?


டி.என். முரளிதரன்   வழக்கம் போல மின்சார ரயிலில் ஏகப்பட்ட கூட்டம். ரயிலின் ஒவ்வொரு பெட்டியின்  வாசல்களும் மனித தேன்கூடுகள் போல காட்சி அளித்தது. தேன்கூட்டை துளைத்து   உள்ளே நுழைந்தாயிற்று . அரைமணி நேரப் பயணம் என்றாலும் கசக்கிப் போட்டுவிடும். இந்த அரைமணி நேரம் இரண்டு மணிநேரம் ஆவதுபோல எரிச்சலை ஏற்படுத்தும். சாய்ந்து நெளிந்து கைப்பிடியை பிடித்துக் கொண்டேன். இந்த அவஸ்தையை எப்படி தாங்கப்போகிறோமோ என்று நினைத்துக் கொண்டிருக்கும்  வேளையில் அருகில் சீட்டில் உட்கார்ந்திருந்த ஒருவர் ஒரு புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். நான் இருந்த நிலையில் புத்தகத்தை படிக்க முடிந்தது. அது  அவதியிலும் கொஞ்சம் ஆறுதல் அளித்தது. அவருடன் சேர்ந்து நானும் படிக்க ஆரம்பித்தேன்

" .........வண்டி மூன்று  மணிநேரம் தாமதமாக ரயில் நிலையத்தை அடைந்தது. மதன்சேகர்  இருவரும் ரயிலை விட்டு கீழே இறங்கியபோது  நள்ளிரவைத் தாண்டிவிட்டது.அவர்கள் அங்கிருந்து கிட்டத்தட்ட 5கி.மீ தூரத்தில் உள்ள அவர்கள் இருப்பிடத்துக்கு செல்ல வேண்டும். நேரம் ஆகிவிட்டதால் பேருந்து இல்லை. ஆட்டோசைக்கிள் ரிக்.ஷாவில்தான் போகவேண்டும்.  ஆட்டோவில் போய் விடலாம் என்று முடிவு எடுத்தனர். ஆட்டோ நின்று கொண்டிருந்த இடத்தை அடைந்தனர்.அப்போது ரிக்.ஷாக்காரர் ஒருவர் ஓடிவந்து, "ஐயா எனது வண்டியில் ஏறுங்கள்" என்றார். ஆட்டோக்காரர்கள் அவரை  துரத்தினர். அவரைப் பார்த்தால் பரிதாபமாக இருந்தது. சவாரிக்கு எவ்வளவு என்று கேட்டனர். அவர் சொன்ன தொகை குறைவாக இருந்ததால் ரிக்.ஷாவில் செல்ல சம்மதித்தனர். அவர்கள் ஏறி உட்கார   ரிக்.ஷா நகர்ந்தது....

  அடுத்த ஸ்டேஷன் வந்தவிட்டது . இன்னும் ஒரு கூட்டம் ஏறி முட்டித்  தள்ளியது.  "எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.
   நல்ல வேளை புத்தகம் வைத்துக் கொண்டிருந்தவரோ புத்தகத்தை திறந்து வைத்தபடியே  தூங்கிக் கொண்டிருந்தார். நான் எனக்கு  முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில்  இருந்து படிக்க தொடங்கினேன் 

  .......அது குளிர்காலமாதலால்  கடுங்குளிர் வாட்டி எடுத்தது . சூடாக டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்து  ஏதாவது டீக்கடையில் நிறுத்த சொன்னார்கள்.  கடைகள் மூடி இருந்தனஓரிடத்தில் திறந்திருந்த டீக்கடை வாசலில் நிறுத்தினார் . மதனும் சேகரும் ரிக்.ஷாவில் இருந்து இறங்கி, "நீயும் வா டீ சாப்பிடலாம்" என்று  ரிக்.ஷாக்கரரையும் அழைத்துவிட்டு டீக்கடைக்குள் நுழைந்து மூன்று டீ போடும்படி சொன்னார் மதன். இருவரும் டீ குடிக்க ஆரம்பித்தனர் ஆனால் ரிக்.ஷாக்காரர் வரவில்லை .......

   நான் சுவாரசியமாக படித்துக் கொண்டிருந்தேன். அவர் இன்னும் தூங்கி விழுந்து கொண்டிருந்தார். அவ்வப்போது தலை மறைத்தாலும் நான் கஷ்டப்பட்டு அந்தப் பக்கத்தை படித்துவிட்டேன்.  தூக்கத்தில் இருந்ததால் அவர் அடுத்த பக்கத்தை புரட்டவில்லை.  இறங்கும் வரை எழுந்திருக்க மாட்டாரோ’ ஏமாற்றமடைந்தேன். அப்போது அவரது பாக்கெட்டிலிருந்து கர்ச்சீஃப் கீழே விழுந்தது. நான்அவரை எழுப்புவதற்கு அதை பயன்படுத்திக்கொண்டு  கர்ச்சீஃப் கீழேவிழுந்ததை சொன்னேன். தூக்கத்திலிருந்து விழித்த அவர் எனக்கு நன்றி சொல்லிவிட்டு நான் எதிர்பார்த்தது போலவே அடுத்த பக்கத்தை திருப்பினார்

.......ஒரு வேளை காதில் விழவில்லையோ என்று நினைத்து வெளியே வந்து மீண்டும் அழைத்தார். ரிக்ஷாக்காரரோ மவுனமாக தலை அசைத்து டீ வேண்டாமென மறுத்து விட்டார். "சரி விடுப்பா இவனுங்க எல்லாம் சாயந்திரம் ஆனா தண்ணிதான் போடுவானுங்க. டீ எல்லாம் சாப்பிட மாட்டானுங்க என்றார் மதன்  கிண்டலாக
டீ குடித்தபின் மீண்டும்  ரிக்.ஷாவில் பயணத்தை தொடர்ந்தனர் . சேகர்  கோபத்துடன் கேட்டார் "என்னப்பா! எங்களுடன் சேர்ந்து டீ அருந்த மாட்டாயா? ,எங்களை மேல் தட்டு வர்க்கம்  என்று நினைத்து விட்டாயா? அல்லது உன்னுடன் சேர்ந்து டீ சாப்பிட எங்களுக்கு தகுதி இல்லையா?"

மிதிப்பதை நிறுத்திவிட்டு திரும்பி இருவரையும் பார்த்தார் ரிக்.ஷாக்காரர்.....

   அதற்குள் ஏதோ ஒரு கால் வர மொபைலை எடுத்து பேச ஆரம்பித்தார் புத்தகம் வைத்திருந்தவர்.  அதே நேரத்தில் இன்னொரு கையால் அனிச்சையாக  படிக்கும் பக்கத்தில் ஒரு விரலை வைத்துகொண்டே புத்தகத்தை மூடினார். எப்போது பேசி முடித்து புத்தகத்தை திறப்பார். என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். படிக்கும் சுவாரசியத்தில் கொஞ்ச நேரமாக மறந்திருந்த அசௌகிரியங்கள் மீண்டும் தெரிய ஆரம்பித்தன. நல்ல வேளையாக பேச்சை சீக்கிரம் முடித்துவிட்டு புத்தகத்தை திறந்தார். நானும் விட்டுப் போன சுவாரசியத்துடன் தொடர்ந்தேன்

......அவர் கண்கள் கலங்கிகண்ணீர் வந்து கொண்டிருந்தது அந்த இருட்டிலும் தெரிந்தது .
"ஐயா. என்னை மன்னியுங்கள். தயவு செய்து தவறாக நினைக்காதீர்கள்.இன்று மதியம்  என் மகன் இறந்துவிட்டான். அவன் ஈமச் சடங்குகளுக்கு பணம் தேவை. போதுமான பணம் என்னிடத்தில் இல்லை. அந்த தொகையை சம்பாதிக்கும்வரை நான் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்துவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால்தான் உங்கள் அழைப்பை ஏற்க முடியவில்லை" என்று தயங்கித் தயங்கி சொன்னார்
வாயடைத்துப் போயினர் மதனும் சேகரும். அதிர்ச்சியும் வியப்பும் குற்ற உணர்வும் அவர்களை ஆட்கொண்டது .
இறங்கும் இடம் வந்ததும் ஒரு முழு நோட்டை எடுத்துக் கொடுத்தனர். அவர் கேட்ட தொகையை விட கூடுதலாக அதில் இருந்தது. "மிச்சம் வேண்டாம் அப்படியே வைத்துக் கொள்" என்றனர்.
ரிக்.ஷாக்காரரோ மீதித் தொகையை கட்டாயப் படுத்தி திருப்பிக் கொடுத்து விட்டு, மீண்டும் ரயில் நிலையத்தை நோக்கி  ரிக்.ஷாவை செலுத்தினார்....

   கதையில் வரும் ரிக்.ஷாக்காரர் மேல்  எனக்கும் பரிதாபமும் அவர் சூழலை நினைத்து வருத்தமும் அவரது நேர்மையைக் கண்டு ஆச்சர்யமும் என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்த  வேளையில் சட்டென்று வெளியே பார்க்க அப்போதுதான் தெரிந்தது. நான் இறங்க வேண்டிய நிலையம் கடந்து விட்டது என்பது.  வேறு வழியில்லை அடுத்த ஸ்டேஷனில் இறங்கித்தான் திரும்ப வேண்டும். கதை இன்னும் இருக்கிறதா என்று பார்க்க ஒரு பத்தி இருந்தது. இறங்குவதற்குள் அதையும் படித்துவிடலாம் என்று தொடர்ந்தேன்.


 ......இந்த சம்பவம் நடந்து பல வருடங்கள் இருக்கலாம். இதை பத்திரிகையாளனான என்னிடம் விவரித்தனர் மதனும் சேகரும்  ஆனால் இன்னும் இருவர் மனதிலும் அந்த சம்பவத்தின் தாக்கம் இருப்பதாக கூறினர். அந்த ரிக்.ஷாக்கரரின் முகம் அவ்வப்போது நினைவுக்கு வந்து தங்கள் மனதை உறுத்துவதாக வருந்தினர். "ஒரு வேலை உணவு கூட உண்ணமுடியாத நிலையிலும்உடுத்துவதற்கு ஒழுங்கான  உடையின்றி, இருக்க இடமின்றி வறுமையில் வாடும் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீ என்ன செய்திருக்கிறாய்" என்று அந்த முகம் கேட்பது போல் தோன்றுகிறது. அதே கேள்வி எனக்கும் தோன்ற முதலில் இதை பத்திரிகையில் வெளியிடுகிறேன். இவரைப் போன்றவர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்பதை இதைப் படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டும். நாமும் என்ன செய்யலாம் என்பதை யோசித்து முடிவெடுக்கலாம் என்றேன். 

    கதை என்னவோ முடிந்துவிட்டது. ஆனால் அதன் பாதிப்பு மனதில் தொடர்ந்தது. கீழே அந்த பத்திரிகையாளரின் பெயர் போட்டிருந்தது. அதை படிக்குமுன் அடுத்த ஸ்டேஷன் வந்து விட்டதால் படிக்க முடியவில்லை. யோசித்துக் கொண்டே இறங்கி எதிர்ப்புறம் வரும் ரயிலை பிடித்து நான் இறங்க வேண்டிய எழும்பூர் நிலையத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்தக் கதையை நினைத்துக் கொண்டே வெளியே வர ஆட்டோவில் மூட்டை முடிச்சுகளுடன் ஒரு குடும்பம் இறங்கியது.
 வயதானவர் ஒருவர் ஓடி வந்து நான் பிளாட்பார்முக்கு லக்கேஜுகளை எடுத்து செல்கிறேன் என்று சொல்ல அதற்குள் போர்ட்டர்கள் சிலர் ஒடிவந்து அவரை விரட்டி அனுப்பிவிட்டனர். அவர் முகம் வாடிநிற்க நான் அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன் 
  தலை லேசாக வலிக்க ஒரு டீ குடித்தால் தேவலை போல் இருந்தது.எதிரிலேயே டீக்கடை இருந்தது .
டீக்கடை வாசலில்  கிழிந்த சட்டையுடன்  சிறுமி ஒருத்தி நின்றிருந்தாள்.  பசியோடு இருப்பதை அவள் முகம் காட்டிக் கொடுத்தது 
'டீ குடிக்கிறயாஎன்று கேட்டுவிட்டு  அந்தப் பெண்ணுக்கு டீயும் பண்ணும் கொடுக்க சொன்னேன். 
"வேணாம். எங்க தாத்தா  திட்டுவாரு . இப்ப வந்து எனக்கு வாங்கி தருவாரு" என்று மறுத்து விட்டாள்  
"உங்க தாத்தா  எங்கே?" என்றேன்
"அதோ" 
சிறுமி கை காட்டிய திசையில் பார்த்தேன். அவள் சுட்டிக் காட்டியது சற்று முன்பு போர்ட்டர்களால் விரட்டப்பட்ட அந்தப் பெரியவரை.
************************************************************


குறிப்பு
1.      இதில்  மூன்று கதைகள் உள்ளன . மொத்தமாக ஒரு கதையாக ரசிக்க முடியும் .
2.     ஊதா நிறத்தில் எழுதப்பட்டவை மட்டும் படித்தால்கூட ஒரு தனி கதையாகக் கொள்ள முடியும். 
               3.     கருப்பு வண்ணத்தில் உள்ளவற்றை படித்தாலும் தனி     
           கதையாக இருக்கும்.

51 கருத்துகள்:

 1. கலர் கலராக கதை...

  போட்டி வைத்து விடுவோமா...? அதுவும் தொடராக...?

  பதிலளிநீக்கு
 2. 3இன் 1 வித்தியாசமாக இருந்தது ,,துயர நேரத்திலும் உழைத்து இறுதி காரியத்துக்கு பணம் சேர்த்த அந்த மனிதர் போற்றுதலுக்குரியவர் ..
  என்னதான் விலை கொடுத்து வாங்கினாலும் எட்டி பார்த்து படிப்பதில் ஒரு ஆர்வம் தான் :)
  சென்னையில் இன்னமும் சைக்கிள் ரிக்ஸா இருக்கின்றனவா !
  முன்பு சின்ன தெருக்களுக்கு செல்ல இவைதான் .ஆனா பாவமா இருக்கும் மெலிந்த தேகம் கொண்டோர் ஓட்டும்போது ஏற மனம் தயங்கும் ..
  எப்பவும் இப்படிப்பட்ட கடைநிலைமக்களுக்கு உதவி செய்யவென்றே!!! மனம் ஒப்பல்லைனாலும் அம்மா ஏறுவாங்க ..எனக்குதெரிந்த ஜெர்மன் நண்பர் ஒருவர் சென்னைக்கு வந்து ஓட்டுனரை உக்கார வச்சி இவர் ஓட்டினார் ரிக்ஸாவை :) படம்லாம் காட்டினார் .
  வாழ்த்துக்கள் முரளிதரன் அண்ணா ..எனக்கும் ப்ரியா கல்யாணராமன் பிடித்த எழுத்தாளர் ..இன்னமும் மறக்கவில்லை அவரின் ஜாக்கிரதை வயது 16 கதையை !
  பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக் .

  பதிலளிநீக்கு
 3. நல்ல உத்தி. எதை நோக்கி நகர்கிறோம் என்று ஊகிக்க முடியவில்லை. நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல உத்தி. எதை நோக்கி நகர்கிறோம் என்று ஊகிக்க முடியவில்லை. நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 5. அழகான உத்தி! 3 இன் 1....இதை அவரது தளத்தில் வாசித்திருக்கின்றோம் என்றாலும் மீண்டும் எங்கள் ப்ளாக் மூலம் வாசிக்கத் தந்தமைக்கு மிக்க நன்றி. அருமையான கதை! வாழ்த்துகள் முரளிதரன்! நன்றி எங்கள் ப்ளாக்!

  பதிலளிநீக்கு
 6. தம போட முடியவில்லையே! இன்டெர்னர் செர்வர் எரர் என்று வருகின்றது. பலருக்கும் இப்படித்தான் வருகின்றது திடீர் திடீரென்று! திடீரென்று சரியாகின்றது. மீண்டும் முயற்சி செய்கின்றோம்...

  பதிலளிநீக்கு
 7. அற்புதமான கதை
  வித்தியாசமான முயற்சி
  மீண்டும்படித்து இரசித்தேன்
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. அருமை நண்பரே கதை மனதை வதைத்து விட்டது வாழ்த்துகள் நண்பர் முரளிதரன் ஜி

  பதிலளிநீக்கு
 9. வித்தியாசமான முயற்சி. ரசிக்க முடிகிறது. பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 10. படித்த கதை என்றாலும் ,மீண்டும் படிப்பது சுகமே :)

  பதிலளிநீக்கு
 11. முன்னரே படித்து விட்டேன்!

  பதிலளிநீக்கு
 12. எங்கள் ப்ளாக் வாசகர்களுக்கும் எனது கதையை அறிமுகப் படுத்தியமைக்காக. நன்றி ஸ்ரீராம் சார்
  கதைக்கான படத்துக்கு பதிலாக வெறும் கட்டம் மட்டுமே தெரிகிறது. எனது கணினியில் மட்டுமா என்று தெரியவில்லை. மீண்டும் படத்தை அனுப்பி இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம்
  ஐயா
  படித்த கதை என்றாலும் மீண்டும் படிக்கும் போது மீண்டும் ஒரு விளக்கம். பகிர்வுக்குநன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 14. எங்கள் ப்லாகில் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. நன்றி தனபாலன். இதற்குத் தொடர்பதிவு அழைப்பா? விடுங்கள் தனபாலன்... இந்தப் பகுதிக்கு அது வேண்டாம் என்பதோடு, நான் தொடர்பதிவுக்கு அழைத்தால் யாரும் எழுத மாட்டேன் என்கிறார்கள்! :))))

  பதிலளிநீக்கு
 16. //"எவ்வளோ இடம் இருக்கு உள்ளே போங்க சார்" என்று என்னை தள்ளினர். நான் நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.
  நான் எனக்கு முன்னால் இருந்தவர்களை எப்படியோ பின்னே போக வழி விட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்றுகொண்டு விட்ட இடத்தில் இருந்து படிக்க தொடங்கினேன் //

  இந்த இடத்தில் தான் ஒரு சின்ன திருத்தம் வேண்டுமோ என்று மேலோட்டமாகப் பார்க்கும் பொழுது தோன்றுகிறது.

  "......உள்ளே போங்க சார்" என்று என்னைத் தள்ளினர். நான் (முன்னால்) நகர்த்தப்பட இப்போது படிக்க முடியவில்லை.

  நான் எனக்குப் பின்னால் இருந்தவர்களை எப்படியோ முன்னே போக வழிவிட்டு மீண்டும் அதே இடத்தில் வந்து நின்று கொண்டு விட்ட இடத்திலிருந்து படிக்கத் தொடங்கினேன்.

  குமுதத்தில் எப்படிப் பிரசுரம் பண்ணியிருந்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசை.

  பதிலளிநீக்கு
 17. விரிவான கருத்துக்கு நன்றி ஏஞ்சலின். ப்ரியா கல்யாணராமன் எழுதி ஒரு கதை கூட நான் படித்ததில்லை. கோவில் சுற்றுலா பற்றி எல்லாம் கூட எழுதினாரென்று நினைவு.நான் நீண்ட காலத்துக்கு முன்பே குமுதம் வாங்குவதை நிறுத்தி விட்டேன்!

  பதிலளிநீக்கு
 18. நன்றி ஜி எம் பி ஸார். எங்களுக்கு கதை அனுப்பி கௌரவித்த அவர்களுக்குத்தான் நாங்கள் நன்றி சொல்ல வேண்டும்.

  பதிலளிநீக்கு
 19. நன்றி ஜீவி ஸார்... (எங்கே இன்னும் காணோம்?!!)

  உங்கள் கமெண்ட் காணோமே இன்னும் என்று யோசித்தபடி முன்னாலேயே நாம் இப்படி ஒரு கமெண்ட் போடுவோம் என்று எழுதி வைத்த நொடி உங்கள் பின்னூட்டம் அங்கே பூத்து விட்டது! நீங்கள் சொல்லியிருந்த சில விஷயங்களை என்னால் பின்பற்ற முடியவில்லை. எழுத்தாளர் பெயர், மற்றும் கே வா போ க பகுதிக்கு எண்ணிக்கைக் குறிப்பது...

  பதிலளிநீக்கு
 20. கதையை நகர்த்திய விதம் புதுமையாகவும் புது மாதிரியாகவும் இருந்தது அருமை. வெவ்வேறு நிகழ்வுகளை ஒரே சங்கிலியில் பிணைத்து மூன்றை ஒன்றாக்கியது அசாத்திய வேலைப்பாடு. அதே நேரத்தில் கதையும் பொழுதுபோக்குக்காக என்றில்லாமல் ஒரு சமூகக் கடப்பாட்டு உணர்வுடன் (அதுவும் குமுதத்தில்) மிளிர்ந்தது ஒரு சாதனை தான்! பொறுப்புடன் கூடிய எழுத்துத் திறமைக்கு எடுத்துக் காட்டாய் இந்தக் கதை திகழ்வதற்கு பாராட்டுகள்.

  3 இன் 1 என்றில்லாமல், 2 இன் 1 என்று கூடச் சொல்லலாம். கதையிலும் மகனுக்காக பெரியவர் என்றால் மூன்றாவது நிகழ்வில் பேத்திக்காக பெரியவர். புத்தகக் கதையில் அப்பா பெரியவர் ரிக் ஷா வலிக்க, நிகழ்வில் சுமை தூக்கத் தயங்காத தாத்தா. ஒரே தோசையைத் திருப்பிப் போட்ட மாதிரியான சில ஒத்த காட்சிப்படுத்துதல்களைத் தவிர்த்திருக்கலாம். முன்றாவது நிகழ்வை வேறு மாதிரி யோசித்திருக்கலாம் என்று தோன்றியது.

  "தாத்தா எங்கே?" என்ற கேட்ட கேள்விக்கு முன்னால் அந்தச் சிறுமி சொன்னது மனசில் நின்று, எளிய தாத்தாவின் வளர்ப்பைச் சொன்னது.

  கங்கிராட்ஸ், முரளிதரன்!

  பதிலளிநீக்கு
 21. சிறுகதை மிக வித்தியாசமாக, அருமையாக இருக்கிறது!

  பதிலளிநீக்கு
 22. வித்தியாசமான கதை அருமையாக செல்கிறது. பகிர்ந்த தங்களுக்கும் எழுதிய நண்பர் டி.என்.முரளிதரன் அவர்களுக்கும் நன்றி !
  த ம 10

  பதிலளிநீக்கு
 23. மிக அருமையான கதை. எழுத்து உத்தியும் சூப்பர்ப்.
  மின் வண்டியில் பயணம் செய்வது போலவே இருந்தது.


  மனம் நிறைந்த பாராட்டுகள் எங்கள் ப்ளாக். திரு .முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 24. அருமையான கதை நண்பரே
  தனது பல்வேறு கல்விப் பணிகளுக்குஇடையிலும்
  அவருக்கு எப்படித்தான் நேரம் கிடைக்கிறதோ
  ஆச்சரியமாக இருக்கிறது
  தம +1

  பதிலளிநீக்கு
 25. உங்க விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி ஜீவி சார். நீங்கள் சொன்ன கருத்துக்களை மனதில் கொண்டேன். குமுதத்தில் ஒரு பகுதியை மாற்று எழுத்துருவில் போல்ட் எழுத்துகளிலும் இன்னொரு பகுதியை சாதாரண வடிவிலும் பிரசுரம் செய்திருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 26. ஜீவி சார், முதலில் இந்தக் கதையின் இரண்டு பகுதிகளையும் ஒன்றுக்கொன்று எதிர்மறையான நிகழ்வாக கொண்டு செல்லவேண்டும் என்றேதான் முடிவுசெய்திருந்தேன். கதை ஏற்படுத்தும் தாக்கம் குறைவாக இருப்பது போல் உணர்ந்தேன்.அதனால் கடைசி நேரத்தில் மாற்றம் செய்து விட்டேன். இப்போது படிக்கும்போது பல குறைகள் எனக்கும் தெரிகிறது.பிரசுரமாகி விட்டது என்பதால் எந்த மாற்றமும் செய்யவில்லை.
  தங்கள் நுணுக்கமான விமர்சனம் இன்னொரு கதையை எழுத தூண்டியுள்ளது.இன்னும் என்னை செம்மைப் படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன். மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 27. மின்சார ரயில் போலவே தடதடக்கும் கதை முரளிதரனுக்கு பாராட்டுகள் ..உங்களுக்கும் ...

  பதிலளிநீக்கு
 28. அருமையாக நகர்த்திச் செல்லப்பட்ட கதை. வித்தியாசமானதும். முரளிதரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 29. மீள் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி ஜீவி ஸார். ஊக்குவிப்பதையும் உற்சாகப்படுத்துவதையும் ஒரு கலையாகவே கற்று வைத்திருக்கிறீர்கள். மூத்த எழுத்தாளர்கள் இளைய எழுத்தாளர்களை இப்படி ஊக்குவிப்பது எங்களுக்கெல்லாம் ஒரு பயிற்சியாகவும் மகிழ்ச்சியாகவும் அமையும்.

  பதிலளிநீக்கு
 30. நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.

  பதிலளிநீக்கு
 31. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

  பதிலளிநீக்கு
 32. நன்றி நண்பர் மீரா செல்வக்குமார்.

  பதிலளிநீக்கு
 33. மீள் வருகைக்கும், விளக்கப் பகிர்வுகளுக்கும் நன்றி டி என் முரளிதரன்.

  பதிலளிநீக்கு
 34. //... இன்னொரு கதையை எழுத தூண்டியுள்ளது.. //

  வாழ்த்துக்கள். தங்கள் ஆர்வத்திற்கு, எதையும் எழுத்தாக்கத்திற்காகவே யோசிக்கும் எழுத்தாள மனோபாவத்திற்கு வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 35. அருமை முரளி.. பிரசுரித்த குமுதத்திற்கும், எங்களுக்கு அறிமுகப்படுத்திய எங்கள் பிளாக் கிற்கும் நன்றிகள்!

  பதிலளிநீக்கு
 36. அருமையான கதை...
  வாழ்த்துக்கள் முரளிதரன் ஐயா...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!