செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

கேட்டு வாங்கிப் போடும் கதை :: ஹரிணி


இந்தவாரக் 'கேட்டு வாங்கிப் போடும் கதை'  பகுதியில் இடம்பெறுவது 'மனசு' தள அதிபர் பரிவை சே. குமாரின் படைப்பு.  
 
ஆரம்ப நாள் முதலே என்னை 'அண்ணா... அண்ணா..' என்று அன்பாக  விளிப்பவர்.  சென்னையில் ஊடகத் துறையில் பணியாற்றி, தற்சமயம் அமீரகத்தில் வேலை பார்க்கிறார்.  அவர் பதிவுகள் யாவுமே உணர்வு பூர்வமானவை.  தளத்தின் பெயருக்கேற்ப மனசிலிருந்து பேசும் தினுசிலேயே இருக்கும்.

குமாரின் தளம் மனசு.

இந்தக் கதை பற்றிய முன்னுரையாகக் குமார் சொல்வது :

===================================================================


வணக்கம் அண்ணா.

எனது கதையையும் தங்கள் தளத்தில் பதியக் கேட்டமைக்கு நன்றி அண்ணா.

கல்லூரியில் படிக்கும் போது எனது பேராசிரியர்... நான் தந்தையாக மதிக்கும் முனைவர் திரு. மு. பழனி இராகுலதாசன் அவர்களின் உந்துதலில் எழுத ஆரம்பித்து முதல் கவிதை தாமரை இதழிலும் முதல் கதை தினபூமி கதைபூமியிலும் வெளியானது.

ஆரம்ப காலக் கதைகள் எல்லாம் சாதாரணமாய் எழுதிய கதைகள்தான்... அபுதாபி வந்தபின்னர் எழுதிய கதைகளே வாழ்க்கையைப் பேசும் கதைகளாய் அமைந்தன. 'உன் கதைகளில் சோகமே நிரம்பி இருக்கிறது' என நட்புக்கள் சண்டைக்கே வந்திருக்கிறார்கள் என்றாலும் 'உன் கதைகள் வாழ்க்கையை பேசுகின்றன' என சில நட்புக்கள் கொடுக்கும் ஊக்கமே இப்படியான கதைக்களங்களிலேயே பெரும்பாலும் பயணிக்க வைக்கிறது. அப்ப அப்ப ஜாலியான கதைகள் எழுதினாலும் பெரும்பாலும் சோகம் சொல்லும் கதைகளே எழுத விருப்பம்.

கதைகளின் களமாக எங்கள் பூமியையும் கதை மாந்தர்களாக எங்கள் மக்களையும் வைத்து சிவகங்கை பேச்சு வழக்கில் எழுதும் நோக்கிலேயே இப்போதைய கதைகளை எழுதுகிறேன். . இதற்குப் பின்னர் சில கதைகள் தினத்தந்தியிலும் இணைய இதழ்களிலும் வெளிவந்திருக்கின்றன. சென்ற ஆண்டு மட்டும் நாலைந்து சிறுகதைகள் இணைய இதழ்கள் நடத்திய போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கின்றன.

இந்தக் கதை குடும்பக் கதை. மங்கையர் சிகரம் இதழில் வந்தது.

இது குடும்பத்தில் படித்த மருமகள் வந்து மாமியாரும் அவருக்கு சாமரம் வீசும் போது மற்ற மருமகள்கள் மனதில் சின்ன விரிசல் விதை விழுந்து அது மனசுக்குள் வக்கிரமாய்ப் படியும். அதன் பின் அவர்கள் கூட்டணி இவளைத் தனிமைப்படுத்த விரும்பும். இதுபோன்ற சில நிகழ்வுகளை கண் கூடாக பார்த்ததை வைத்து அபுதாபி கொடுத்த தனிமையில் எழுதியதுதான் இந்த 'ஹரிணி'.

நன்றி அண்ணா.

=====================================================================

இனி அவர் படைப்புக்குச் செல்வோம்.  




ஹரிணி

பரிவை குமார்


"க்கா... கொஞ்ச நாளா நம்ம வூட்டுல நடக்கிற கூத்தைப் பாத்தியா..?" மெதுவாக ஆரம்பித்தாள் வனஜா.

"ஆமாண்டி... பார்த்துக்கிட்டுதான் இருக்கேன். சின்ன மருமகளை தாங்குறதை..." இது சரோஜா.

"ஆமாக்கா... நாம எல்லா வேலையும் பார்க்கிறோம்... ஆனா அவளை தலையில தூக்கி வச்சுக்கிட்டு ஆடுதுக.."

"அதுக்கு அவ வேலைக்குப் போறால்ல... அதுதான்..."

"பாழாப்போன படிப்பு நமக்கு வந்திருந்தா நாமளுந்தான் இன்னைக்கு ஆபிசரு..."

"அதுதான் பத்தாங்கிளாசை தாண்ட முடியலையே... அப்புறம் எப்படி ஆபீசராகுறது?"

"அதுக்காக அவளைவிட நாமதான் அதிகம் உழைக்கிறோம். எல்லாம் அவளைத்தானே தலையில வச்சிக்கிட்டு ஆடுதுங்க... நம்மதுக நம்மளை கண்டுக்காதுங்க... தம்பி பொண்டாட்டிய தாங்குதுங்க..."

"நமக்கு ஒரு காலம் வராமயா போயிடும்... அப்ப வச்சிக்கலாம்...

அவளும் வேலைக்குப் போறேன்னுட்டு ரொம்பத்தான் மினுக்கிறா"

"சரி விடுடி... இந்த வீட்ல நாம வேலை பார்த்தாத்தான் மதிப்பு... என்ன செய்ய நாம பொறந்த நேரம் அப்புடி"

"என்னங்கடி... பொறந்த நேரம்... அது... இதுன்னு பேசிக்கிட்டு இருக்கீங்க..." என்றபடி வந்தாள் அவர்களது மாமியார் மீனாட்சியம்மா.

"இல்லத்த... சும்மா பேசிக்கிட்டிருந்தோம்."

"உங்க முகம் சும்மா பேசினது மாதிரி தெரியலையே... ஒரு வாரமாவே ரெண்டு பேருக்கும் முகம் சரியில்லையே... என்ன பிரச்சினை... பயலுக எதுவும் சத்தம் போட்டாங்களா?"

"இல்லத்த... அதெல்லாம் ஒண்ணுமில்லை... நாங்க எப்பவும் போல இருக்கோம்."

"அப்ப ஹரிணிதான் உங்களுக்கு பிரச்சினையா?" மாமியார் நேரடியாகக் கேட்டாள்.

"ஐய்யோ... அப்படியெல்லாம் இல்லத்த" இருவரும் ஒன்றாக சொல்ல, "எனக்கு எல்லாந் தெரியும்... அவ வேலைக்குப் போறா... அவகிட்ட எல்லாரும் அன்பா பேசுறாங்க... அப்படின்னுதானே..?"

".........."

"அடியேய்... வனஜா நீ யாரு... என் தம்பி மக... உங்க அக்கா சரோஜா மாமாவோட அக்கா மக... நல்லா படிச்சிருந்தும் எம் பசங்களுக்கு உங்களை கட்டியாரக் காரணம் பொண்ணு கிடைக்காம இல்ல... நம்ம சொந்தம் விட்டுடக்கூடாதுன்னுதான்... அவ அந்நியத்துல இருந்து வந்த பொண்ணு... நீங்க நாங்க பார்த்து வளர்த்த பொண்ணுங்க... என் மார் மேலயும் உங்க மாமா முதுகுலயும் உங்களைச் சுமந்திருக்கோம். அவளுக்கு நாம எல்லாரும் புதுசு. பணக்கார வீட்டுல வளர்ந்த ஒரே பொண்ணு... அப்பா செல்லம் வேற... நாளைக்கு அவ கண்ணக் கசக்கிட்டு நின்னா யாருக்கு கேவலம்... நம்ம குடும்பத்துக்குதானே... எங்களுக்கு நீங்க மூணு பேரும் ஒண்ணுதான்.... அவ பழகிட்டான்னா அப்புறம் எல்லார்கிட்டயும் சகஜமாயிடுவா... போங்க போய் வேலையைப் பாருங்க..."

"ம்க்க்கும்... புது மருமகளுக்கு சப்போர்ட்... நீ வாடி நம்ம முடியாமக் கெடந்தாலும் ஏன்னு கேக்க நாதியில்லை..."

மாதங்கள் கடந்தன...

இருவர் கூட்டணி வலுவானது. ஹரிணியிடம் அதிகம் பேசுவதுமில்லை... அவளைக் கண்டு கொள்வதும் இல்லை.

தீபாவளிக்கு ஒரு வாரம் இருக்க அலுவலகத்தில் இருந்து வந்த ஹரிணியின் கையில் ஏகப்பட்ட பிளாஸ்டிக் பைகள்.

ஹாலில் வந்து அமர்ந்தவள் மாமா, அத்தை, கொழுந்தன்கள், குழந்தைகள் என எல்லாருக்கும் ஒவ்வொரு பை கொடுத்தாச்சு.

சமயலறையில் இருந்து இதை கவனித்த சரோஜாவும், வனஜாவும் குசுகுசுவென்று பேசிக்கொண்டார்கள்.

"அக்கா... பாத்தியா சம்பாதிக்கிற திமிரு எல்லாருக்கும் டிரஸ் வாங்கியாந்து கொடுத்து ஐஸ் வைக்கிறா..."

"ஆமா... திமிர் பிடிச்சவ... நமக்கு எதுவும் கொடுத்தா வாங்கக் கூடாது. அவ கொடுத்துதான் நாம புதுத்துணி போடணுமா...? நம்ம ஆத்தா அப்பன் என்ன ஒண்ணுமில்லாமயா இருக்காங்க... இல்ல நம்ம புருஷங்கதான் ஒண்ணுமில்லாதவங்களா...?"

"ஆமா... கொடுத்தா மூஞ்சியில அடிச்ச மாதிரி வேண்டாண்ணு சொல்லிரணும்... அப்பதான் அவளுக்கு உறைக்கும்."

"அக்காள்லாம் எங்க அத்தை..?" என ஹரிணி இவள்களைக் கேட்கவும் பேச்சை நிறுத்தி நடப்பதை கவனித்தனர்.

"அவளுக எங்க இருக்கப் போறாளுங்க... ராத்திரிக்கு சாப்பாடு தயார் பண்ணுவாளுங்க..."

"பாவம்... அவங்களுக்குத்தான் வேலை அதிகம்..."

"அக்கா... நம்ம மேல ரொம்ப கரிசனம் பாரு... அடுப்படிக்குள்ள வந்து நமக்கு உதவப் போறா... அக்கரையா கேக்கிறாளாம்...?"

"ஆமாம்மா... எந்திரிச்சதுல இருந்து படுக்கிற வரைக்கும் அவளுக்க்கு ஓய்வில்லை... கூப்பிட வாம்மா..."

"இல்லை அத்தை... சும்மாதான் கேட்டேன்... அதுபோல அவங்களுக்கு எதுவும் நான் வாங்கலை"

"அதானே பார்த்தேன்... வனஜா... பாத்தியா நாம வாங்க மாட்டோம்ன்னு தெரியும். அதான்..."

"எல்லாருக்கும் வாங்கியிருக்கே... அவளுகளை மட்டும் விட்டுட்டியே..?" மீனாட்சியம்மா வருத்தம் தோய்ந்த குரலில் கேட்டாள்.

"இல்லை அத்தை... எல்லாருக்கும் டிரஸ் வாங்குறதா அவருகிட்ட கேட்டேன். அவருக்கும் சந்தோஷம். நல்லா வாங்கு... அண்ணிகளுக்கு நல்லதா வாங்கு... அவங்க ரெண்டு பேரும் எங்க அம்மா மாதிரின்னு சொன்னாரு... எல்லாருக்கும் வாங்கிட்டேன்... ஆனா அவங்களுக்கு நான் வாங்கி கொடுத்து கட்டச் சொல்றதைவிட அவங்களையே கூட்டிக்கிட்டுப் போயி அவங்களுக்குப் பிடிச்சதா எடுத்துக்கிட்டா எல்லாருக்கும் சந்தோஷம்தானே... அதான் வாங்கலை... தப்பா அத்தே..."

"இல்லம்மா... நீ செஞ்சதுதான் சரி..."

"அக்கா...." வனஜா

"என்னடி இது... நல்லவளா தெரியுறா?"

"அப்புறம் அத்தை... நான் அக்கா தங்கச்சி கூட பொறக்கலை. அவங்களை என்னோட சொந்த அக்காக்களாத்தான் நினைக்கிறேன். முதல் வருஷத் தீபாவளிக்கு அப்பா ஊருக்கு வரணுமின்னு சொன்னார். மாமா, அத்தை, அத்தான்கள், அக்காக்கள், குட்டிஸ்ன்னு பெரிய குடும்பத்துல எல்லார் கூடவும் சந்தோஷமாக தீபாவளி கொண்டாடணும்பா... அதனால நீங்களும் அம்மாவும் இங்க வந்துடுங்கன்னு சொல்லி நான் மறுத்துட்டேன்..." ஹாலில் ஹரிணி பேசிக் கொண்டே போக,

"வனஜா... அவ நல்லவதாண்டி... நாமதான் தப்பா நினைச்சிட்டோம்... படிச்சிருந்தாத்தானே அறிவுக்கு எட்டும்... சே... அவ நம்ம மேல எவ்வளவு பாசமா இருக்கா..."

"ஆமா... அக்கா... " என்றாள் சரோஜா.

"அத்தே... ஹரிணியை முகம் அலம்பிட்டு வரச்சொல்லுங்க... சூடா காபி இருக்கு" என்று சொன்ன சரோஜா காபி கலக்க ரெடியானாள்.

52 கருத்துகள்:

  1. ம்ம்ம்ம்ம், நல்ல கதை தான். ஆனால் மாலை அலுவலகம் விட்டு வந்ததும் கடைசி மருமகளும் கொஞ்சம் கூடமாட வேலைகளில் பங்கு எடுத்துக்க வைச்சிருக்கலாமோ! காலை அலுவலகம் செல்லும் முன்னரும் கொஞ்சம் உதவிட்டுச் செல்ல வைச்சிருக்கலாமோ? இந்த எண்ணம் வருவதைத் தவிர்க்க முடியலை! ஏனெனில் இதில் சொந்த அனுபவமும் இருக்கிறது! :)

    பதிலளிநீக்கு
  2. 'கேட்டு வாங்கிப் போடும் கதை'-- ஹரிணி என்று படித்து உள்ளே வந்து பார்த்தால் 'ஹரிணி' க்தையின் பெயர்த் தலைப்பு என்று தெரிந்தது.

    ஹரணிக்கும் ஹரிணிக்கும் நுண்ணிய எழுத்து வித்தியாசம் உண்டென்றாலும், 'சட்'டென்று புலப்படவில்லை.

    கதையின் தலைப்பை எப்பொழுதும் தனியே போட்டு எழுதியவரின் பெயரை அதற்குக் கீழே போடலாம்.

    கேட்டு வாங்கிப் போடும் கதைக்கும் தனியே எண், 1,2,3, 4 என்று கொடுத்து கதைகளை வித்தியாசப்படூத்திக் கொள்ளலாம்.

    பதிலளிநீக்கு
  3. ஹரிணி அன்பானவள் :) வாழ்த்துக்கள் சகோ குமார் .
    இதுபோன்ற விஷயங்கள் நிறைய இங்கேயும் நடக்குது குறிப்பா பஞ்சாபியர் இன்னும் கூட்டுக்குடும்பம்தான் ..
    பகிர்வுக்கு நன்றிகள் சகோ

    பதிலளிநீக்கு
  4. கதை மிகவும் இயல்பாகவும், யதார்த்தமாகவும் நகர்ந்து, இறுதியில் சுபமாகவும் முடிந்துள்ளது, மிக்க மகிழ்ச்சியளிக்கிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  5. 2
    மாமியார் உள்பட ஒவ்வொரு பெண்ணின் மன நிலைகளும் நன்கு கச்சிதமாக எழுத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    >>>>>

    பதிலளிநீக்கு
  6. 3
    மிக அழகான கதையை நேர்த்தியாக எழுதியுள்ள கதாசிரியரும் 'மனசு' தள அதிபருமான பரிவை திரு. சே. குமார் அவர்களுக்கு என் மனம் நிறைந்த இனிய பாராட்டுகள் + நல்வாழ்த்துகள்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  7. 4
    ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும், ஒவ்வொரு சிறப்பான பதிவரைப் பற்றி அறிந்துகொள்ளவும், அவரின் சிறுகதை ஒன்றினை வாசிக்க வாய்ப்பு அளித்து உதவி வருவதற்கும் ‘எங்கள் ப்ளாக்’ வலைத்தளத்திற்கும், குறிப்பாக நம் இனிய நண்பர் ’ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்’ அவர்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  8. 5
    நம் உயர்திரு ஜீவி சார் அவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகம் எனக்கும் ஓர் நிமிடம் ஏற்பட்டது என்பதை என்னால் மறுப்பதற்கு இல்லை.

    ஹரணி என்ற பெயரிலேயே எனக்குத்தெரிந்தே ஓர் ஆண் பதிவரும், ஓர் பெண் பதிவரும் நம் பதிவுலகில் உள்ளனர்.

    இருவரும் முன்பெல்லாம் என் பதிவுகளுக்குப் பின்னூட்டங்கள் இட்டுள்ளனர் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் நினைவு படுத்திக்கொண்டு மகிழ்கிறேன்.

    அன்புடன் VGK

    ooooo

    பதிலளிநீக்கு
  9. ஆஹா இப்படி நிஜத்தில் இருந்தால் எவ்வளவு நல்லா இருக்கும்,,, ஒஒஒ இது கதையா?????

    அருமையான கதை ஸ்ரீ,,,,வாழ்த்துக்கள்,,

    பதிலளிநீக்கு
  10. கதை நடைமுறை யதார்த்தத்தை விவரித்தது அருமை கதை எழுதிய நண்பர் சே.குமாருக்கு வாழ்த்துகள் வெளியிட்ட நண்பருக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. சிலயதார்த்தங்களைச் சொல்லிப் போகும் கதை ஆசிரியருக்குப் பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  12. அருமையான கதை. இந்தப் புரிதல் எல்லாக் குடும்பத்துக்கும் வந்தால்
    நல்லதுதான். அந்தப் பெண்ணும் கூட மாட உதவி செய்தால் குடும்பம்
    வலுப்படும்.

    பதிலளிநீக்கு
  13. கதை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், எந்த வேலையும் பார்க்காமல் கடைசியில் அவர்கள் என் அக்கா மாதிரி என்று சொல்வது கொஞ்சம் செயற்கையாக தெரிகிறது. மற்றபடி கதை ஒ.கே.தான்.
    த ம 3

    பதிலளிநீக்கு
  14. இந்த அனுபவங்கள் எல்லார் வீட்டிலும் இருக்கும் என்று நினைக்கிறேன் கீதா மேடம். செய்யும் வேலைக்கு ஈடாக பணத்தால் பதில் சொல்வது என்பதை விட, அவளும் கொஞ்சமாவது வேலை செய்தாள் என்றிருந்தால் நன்றாக இருக்கும்! நம்மை அப்படி ஏங்க வைப்பதுதான் கதாசிரியரின் வெற்றியோ!

    பதிலளிநீக்கு
  15. வாங்க ஜீவி ஸார். அந்த எதிர்பார்ப்பில் இரண்டொரு வாசகர்கள் அதிகம் வரமாட்டார்களா! கே வா போ கக்கு எண்ணிக்கை தரும் யோசனை நல்லதாக படுகிறது. செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ஏஞ்சலின்.

    பதிலளிநீக்கு
  17. நன்றி வைகோ ஸார். நல்ல கதை என்று குமாரைப் பாராட்டியதற்கும், பகிர்வதற்காக எங்களையும், என்னையும் பாராட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றிகள்.

    பதிலளிநீக்கு
  18. கதையோடு ஒன்றிப்போனதற்கு நன்றிகள் பேராசிரியை மகேஸ்வரி பாலச்சந்திரன்.

    பதிலளிநீக்கு
  19. வாழ்வியல் சங்கடங்களையும், பிரச்னைகளையும் எழுதும் குமாரின் படைப்புகள் எப்போதுமே நன்றாக இருக்கும். இணைய சிறுகதைப் போட்டி ஒன்றில் கலந்து கொண்டு அவர் முதல் பரிசு பெற்ற கதை ஒன்று மிகச் சிறப்பாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  20. வருகைக்கும், பாராட்டுக்கும் நன்றி ஜி எம் பி ஸார்.

    பதிலளிநீக்கு
  21. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வல்லிமா. நீங்கள் சொல்வது போல எல்லோரும் சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு வேலைகள் செய்தால் நன்றாயிருக்கும்.

    பதிலளிநீக்கு
  22. வருகைக்கும், கருத்துக்கும், தமிழ்மண வாக்குக்கும் நன்றி நண்பர் எஸ் பி செந்தில் குமார்.

    பதிலளிநீக்கு
  23. குமார் அவர்களின் கதை அருமை..உலகியல் நடப்பினைச் சொல்லிச் சென்றமையும் இறுதியில் புரிதலில் முடித்தமையும் சிறப்பு. குமாரின் கதைகள் அனைத்துமே உணர்வு பூர்வமாகத்தான் இருக்கும். இதுவும் அப்படியே..வாழ்த்துகள் குமார். கதையை இங்குப் பகிர்ந்த எங்கள் ப்ளாகிற்கும் வாழ்த்துகள்..

    முதலில் ஹரணி அவர்களின் கதை என்று நினைத்துவிட்டோம். கூகுள் ப்ளஸ் செய்யும் போது குமாரின் படத்தைப் பார்த்ததும் தான் தெரிந்தது ஹரிணி தலைப்பு அவர் எழுதிய கதை என்று....

    பதிலளிநீக்கு
  24. நன்றி துளசிஜி / கீதா. நீங்கள் சொல்வது போல குமாரின் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்தான்.

    பதிலளிநீக்கு
  25. குமார் சகோவுக்கு வாழ்த்துகள். நல்ல கதை, இந்த புரிதல் அனைத்துக் குடும்பங்களிலும் இருந்தால் நலமே..
    ஹரிணி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பது சரியாகத் தோன்றவில்லை...பயணித்து அலுத்து வரும் பெண்..அலுவலகத்தில் சும்மா உட்கார்ந்தா வரப்போகிறாள்?!! வீட்டில் இருப்பவர் பகிர்ந்துகொள்வதில் தவறொன்றுமில்லை என்பதே என் கருத்து. மேலும் வேலை பார்க்கும் பெண்களுக்கெல்லாம் இப்படி அமைவதுமில்லை.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம்
    ஐயா
    கதை மிக அருமையாக உள்ளது தொடக்கிய விதமும் இறுதியில் முடித்த விதமும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  27. வணக்கம் அண்ணா...
    எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப் பகிரும் கதைகள் பகுதியில் வெளியிட்டமைக்கு நன்றி.
    ஹரிணி வீட்டு வேலை பார்த்தாளா... பார்க்கலையான்னு பட்டிமன்றமே நடக்கும் போல...:)

    இப்ப அது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை... மீண்டும் வருகிறேன்... அப்போது என் கருத்தைச் சொல்றேன்...

    ஆமா... அதென்ன மனசு தள அதிபர்.... ஆஹா... இது புதுசா இருக்கே....

    நினைவின் ஆணிவேர் பலரைக் கவர்ந்தது போல் தங்களையும் கவர்ந்திருக்கு என்பதை பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதற்கு நன்றி அண்ணா.... நானும் அடிக்கடி வாசிக்கும் கதை அது....

    தங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் அண்ணா...
    எனது கதையை தங்கள் கேட்டு வாங்கிப் பகிரும் கதைகள் பகுதியில் வெளியிட்டமைக்கு நன்றி.
    ஹரிணி வீட்டு வேலை பார்த்தாளா... பார்க்கலையான்னு பட்டிமன்றமே நடக்கும் போல...:)

    இப்ப அது குறித்து நான் எதுவும் சொல்லவில்லை... மீண்டும் வருகிறேன்... அப்போது என் கருத்தைச் சொல்றேன்...

    ஆமா... அதென்ன மனசு தள அதிபர்.... ஆஹா... இது புதுசா இருக்கே....

    நினைவின் ஆணிவேர் பலரைக் கவர்ந்தது போல் தங்களையும் கவர்ந்திருக்கு என்பதை பலமுறை சொல்லியிருக்கிறீர்கள்... அதற்கு நன்றி அண்ணா.... நானும் அடிக்கடி வாசிக்கும் கதை அது....

    தங்கள் அன்புக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  29. 'மூன்று மருமகள்களும் ஒரு மாமியாரும்' கதை. மாமியார் விவரம் தெரிந்தவராய் இருக்கிறார். அதனால் மூன்று மருமகள்களும் சேர்ந்து மாமியாரை டபாய்க்கும் வழக்கமான கே.எஸ்.ஜி. கால சினிமா பாணி கதைகளூக்கு மாற்றாக மருமகள்களுக்குள் சின்ன விகற்பகமும் அதற்கான சுபத்தீர்வும் என்று வித்தியாசமாக கதையை உருவாக்கியிருக்கிறார் அன்பர் சே.குமார். சந்திரன் மேகக்கூட்டத்துள் மறைந்து வெளிவருகிற மாதிரி பொறாமையை மன அலைக்கழிப்புக்குக் காரணமாக்கி அதையே பொசுங்கிப் போகவும் வைத்த கதாசிரியர் பாராட்டுக்குரியவர். பெண்கள் மனசைக் கவரும் இயல்பான குடும்பக்கதை.

    விமரிசன நோக்கில் பார்த்தால் உரையாடலில் குடும்பப்பாங்கான எதார்த்தை மிகச் சுலபமாகக் கொண்டு வந்திருக்கும் ஆசிரியர் தொடர்ச்சியான உரையாடல்களிலேயே கதையை நகர்த்தாமல், சில காட்சிப்படுத்தல்களுக்கு இடையே உரையாடல்களை இடையிட்டு இடையிட்டு நிகழ்த்தியிருக்கலாம் என்று தோன்றியது. நல்ல வேளை வேலைக்குப் போகும் பெண்கள், வீட்டில் அடுப்படியில் வேகும் பெண்கள் என்று ஒரு லாவணிக் கச்சேரிக்கு வழிவகுத்திருக்க வேண்டிய கதையை வெகு சுலபமாக திசை திருப்பி வாசிப்பவரின் மனசை கவரும் விதத்தில் எல்லோரும் நல்லவரே என்று நேர்மறைச் சிந்தனையில் கதையை அழகாக முடித்திருக்கிறார். அதற்காகவே சகோதரர் பரிவை சே. குமார் பாராட்ட வேண்டும். வாழ்த்துக்கள், குமார்!

    பதிலளிநீக்கு
  30. ஹரிணி வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் ,ஆணாதிக்கவாதிகள் :)

    பதிலளிநீக்கு
  31. புரிதலில் வலுப்படும் உறவு. அந்த உறவு நீடிக்க மேலும் தான் என்ன செய்ய வேண்டும் என்கிற புரிதல் நாளடைவில் ஹரிணிக்கு வருமென நம்புவோமாக. நல்ல கதை.

    பதிலளிநீக்கு
  32. நல்ல கதை...நடையும் அருமை....குமாருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  33. கேட்டு வாங்கி கதையினை பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!குமாரின் எழுத்தாற்றல் கதை சொல்லும் பாங்கு எனக்கும் நிரம்ப பிடிக்கும்,
    அதிலும் இக்கதை சொல்ல வரும் கருத்துக்கள் மிக அருமை,மூன்று மருமக்களில் இருவர் வேலைக்கு போகாமல் வீட்டைக்கவனிக்க ஒருத்தி வேலைக்கு செல்வதோடு சொந்தமில்லாமல் வெளியிலிருந்து வந்த மருமகள் எனும் போது கவனிப்பு சற்றுஅதிதமாய் இருக்கும் என்பதை நான் உணர்ந்திருக்கின்றேன். என்மாமியார் வீட்டில் என்னையும் இப்படித்தான் நடத்துவார்கள், இங்கே சொன்ன மூத்த மருமக்கள் போல் அங்கேயும் மற்ற மருமக்கள்முணு முணுத்தார்களோ எனக்கு தெரியாது, ஆனால் கவனிப்பும்,அன்பும் சற்று அதிகமாய் தான் இருந்தது,

    வேலைக்கு போகும் பெண் வீட்டில் உதவிக்கு யாருமில்லா விட்டால் உதவி செய்வதில் தப்பே இல்லை, ஆனால் வீட்டில் ஆட்கள் இருக்கும் போது வேலைக்கும் போய் வீட்டிலும் வேலை செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது மிகவும் தப்பு, வேலைக்கு போய் சும்மா உட்கார்ந்திருந்து விட்டு வருவதில்லையே! அங்கே இருக்கும் டென்சன், சூழல் அனுபவித்தால் தான் தெரியும்,காலை, மாலையில் உதவுவது கட்டாயம் இல்லை த்தான்.

    சிக்கி சுக்கு நூறாய் பிரச்சனை தரக்கூடிய கதையை அழகாக நகர்த்தி சுபமாய் முடித்தமைக்கு குமாருக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.
    இன்னும் எழுதுங்கள்,

    அதே போல் இன்னும் பகிருங்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
  34. கடைசி மருமகள்மட்டும் படித்து வேலைக்குப்போவது,மாமியாரே அதிக வேலையை இழுத்துப்போட்டு செய்வதும்,புதுமருமகளை கர்்வியாக நினைப்பதும்,அண்ணன் தம்பிக்குள்ளே இந்தப் பிடுங்கல்கள் தாங்காமல், தனியாகப் போய்விடுவதும் ஸகஜமான நிலையில், கொஞ்சகாலத்திற்குமுன் அம்மாவிற்கான மரியாதையில் நிகளழ்ந்து கொண்டிருந்த கதை இது. இப்போது அம்மா அப்பா கூட இருப்பார்களை என்று வரன் பார்க்கும்போதே கேட்டு விடுகிரார்கள் என்ற செய்திதான் பரவலாக வந்து கொண்டு இருக்கிறது. இனியமாமியாரும்,பக்குவமான படித்த பெண்ணும் மனதைக் கவருகிரார்கள். நல்ல கதை. இப்போது இது ஸாத்தியமாகப் படவில்லை. அன்புடன்

    பதிலளிநீக்கு
  35. நிறைய எழுத்துப் பிழை.மூத்த மருமகள்களின் வேலையைக் குறைக்க மாமியார் அதிக பொருப்பேற்பது என்பதெல்லாம் இருந்தது.

    பதிலளிநீக்கு
  36. எனக்கு இந்த கதையில் நடப்பது நிறைய இடங்களில் நடப்பதை படம் பிடித்து காட்டியது போலவே இருக்கு.மனசு ஏனோ வலிக்கிறது.

    பதிலளிநீக்கு
  37. நன்றி பரிவை சே குமார். ஜீவி உங்கள் கதையை அலசி ஆராய்ந்திருக்கிறார் பாருங்கள்!

    பதிலளிநீக்கு
  38. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மீரா செல்வக்குமார்.

    பதிலளிநீக்கு
  39. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஆசியா ஓமர்.

    பதிலளிநீக்கு
  40. வணக்கம்.

    எனது கதையை இங்கு பகிர்ந்த ஸ்ரீராம் அண்ணாவுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி. இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கப் பெற்றதால் பிரபலமான பதிவர்களின் கருத்துக்களை அறிய முடிந்தது. இங்கு மிகச் சிறப்பாக கதையை அலசி ஆராய்ந்து கருத்து சொல்லியிருக்கும்....

    சகோதரி. கீதா சாம்பசிவம்...
    திரு.ஜீவி ஐயா...
    சகோதரி. ஏஞ்சலின்...
    திரு. வலிப்போக்கன் ஐயா...
    திரு.வை. கோபாலகிருஷ்ணன் ஐயா...
    சகோதரி. மகேஸ்வரி பாலசந்திரன்...
    கில்லர்ஜி அண்ணா...
    திரு. ஜி.எம்.பி. ஐயா...
    திரு. வல்லிசிம்ஹன்...
    செந்தில் குமார் சார்...
    துளசி சார்...
    சகோதரி. கிரேஸ்...
    சகோதரர். ரூபன்...
    திரு. பகவான்ஜி...
    ராமலெட்சுமி அக்கா...
    சகோதரி. மீரா செல்வக்குமார்...
    நிஷா அக்கா...
    காமாட்சி அம்மா...
    ஆசியா அக்கா...

    அனைவருக்கும் எனது மனசு நிறைந்த நன்றி.

    ஹரிணி வேலை பார்த்திருக்க வேண்டும் என்றும் வேலை பார்க்க வேண்டும் என கட்டாயமா என்ன என்றும் இரு வேறு கருத்துக்கள்.... மேலும் இப்பல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இல்லை அதெல்லாம் மலையேறிப் போச்சு என்ற கருத்தும் இருந்தது.

    சில விளக்கங்கள் சொல்லலாம்ன்னு நினைக்கிறேன்...

    ஹரிணி 2008ன் இறுதியில் எழுதி 2009-ல் வெளிவந்த கதை... அதாவது ஏழு வருடங்களுக்கு முன்னர்.... அப்போது கூட்டுக்குடும்பம் இருந்திருக்கலாம். இப்போதும் கூட்டுக் குடும்ப வாழ்க்கை எனக்குத் தெரிந்து இருக்கத்தான் செய்கிறது. எங்கள் வீட்டில் கூட நால்வரும் தனித்தனியே இருந்தாலும் நல்லது கெட்டது என்றால் கிராமத்தில் எங்க அப்பா, அம்மா கூடத்தான் இதுவரை சேர்ந்து செய்து வருகிறோம். சில குடும்பங்களில் இன்னும் எல்லாரும் ஒன்றாகவே இருக்கிறார்கள். இது எங்கள் ஊரிலேயே இருக்கிறது. பல குடும்பங்களில் சொத்துக்கள் கூட பிரிபடாமாலே இருக்கிறது. ஸ்ரீராம் அண்ணா எனது பதிவில் வந்து சொன்னது போல் இன்றைய நிலையில் கூட்டுக் குடும்பங்கள் குறைந்தாலும் முற்றிலுமாக ஒழிந்துவிடவில்லை என்பது என் எண்ணம்.

    ஹரிணி வேலை பார்த்தாளா... இல்லையா என்பதை கதைக்குள் கொண்டு வர வேண்டும் என்றில்லை. இது மற்ற மருமக்களின் சின்ன பொறாமைத் தீயினைச் சொல்லும் கதைதானே... எனவே ஹரிணியின் வீட்டு வேலை பற்றி பேசவில்லை. அவளும் சின்னச் சின்ன வேலைகள் பார்த்திருப்பாள் என்றே வைத்துக் கொள்வோம்.

    ஜீவி அய்யா அவர்கள் உரையாடல்களாக இருப்பதைவிட இடையிடையே காட்சிப்படுத்தியிருக்கலாம் என்றும் சொல்லியிருந்தார்கள். உண்மைதான்... என்னோட கதைகளில் பெரும்பாலும் உரையாடல்களைவிட காட்சிப்படுத்துதலே அதிகம் இருக்கும்... சில கதைகள் விதிவிலக்காய் அமைவதுண்டு... அப்படிப்பட்ட கதைதான் இது... பாத்திரங்கள் பேசுவதாய் வைத்து எழுதுவதை அதிகம் விரும்புவதில்லை... தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி ஐயா... முடிந்தால் என்னோட தளத்தில் இருக்கும் கதைகளை வாசித்து இதற்குச் சொன்னது போல் நல்லதொரு விமர்சனத்தைக் கொடுங்கள் ஐயா...

    எழுத்துப்பிழை அதிகம் என காமாட்சி அம்மா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எழுத்துப்பிழை இல்லாமல் இருக்க வாய்ப்பில்லை... இப்போது எழுதுவதில் சிரத்தை எடுத்து பிழைகள் பார்ப்பேன்... ஆரம்ப எழுத்தில் அப்படிப் பார்ப்பதில்லைதான்... ஸ்ரீராம் அண்ணாவுக்கு அனுப்பும் போதாவது பார்த்திருக்க வேண்டும். அது என்னோட தவறுதான்... இருந்தாலும் என்னோட கதைகள் பெரும்பாலும் பேச்சு வழக்கிலேயயே அமையும் என்பதால் அம்மாவுக்கு நிறைய எழுத்துப்பிழைகள் போல் தெரிந்திருக்கலாம். எனது குறையைச் சுட்டிக்காட்டியமைக்கு நன்றி அம்மா...

    எனது முதல் பகிர்வில் இருந்து இன்று வரை என்னைத் தொடர்ந்து வாசித்து வரும் ஆசியா அக்கா, எனக்காக இங்கு வந்து கருத்துச் சொல்லி எங்கள் பிளாக்கின் முதல் வருகையாக... இனி தொடரும் வருகையாக ஆகியிருப்பதில் மிக்க மகிழ்ச்சி...

    வை.கோ அய்யா எப்போதும் நாலைந்து பின்னூட்டம் இட்டு கருத்துக்களால் நிரப்புவார்... இதற்கும் அப்படியே... ரொம்ப நன்றி ஐயா..

    எல்லாரையும் தனித்தனியாகச் சொல்ல ஆசைதான்... இதுவே ஒரு பதிவாகிவிடும் என்பதால் சொல்லவில்லை... மன்னிக்கவும்.

    மிக அருமையான கருத்துக்களைச் சொன்ன எனது உறவுகளுக்கும் அனைவரின் கருத்துக்களுக்கும் மிகச் சிறப்பான பதிலைத் தந்த ஸ்ரீராம் அண்ணாவுக்கும் எனது நன்றிகள் மீண்டும்...

    மீண்டும் ஒரு வாய்ப்புக் கிடைத்தால் குறைகள் களைந்து நிறைவான கதையுடன் சந்திப்போம்... :)

    அதுவரை உங்கள் அன்பான கருத்தை எனது மனசு (http://vayalaan.blogspot.com) தளத்தில் வந்து தாருங்கள்...

    நன்றி....

    என்றும் தங்கள் அன்பில்...
    சே.குமார்.
    பரியன் வயல், தேவகோட்டை.
    (இ) அபுதாபி.

    பதிலளிநீக்கு
  41. அடராமா. என்னுடையமறுமொழியில் எழுத்துப்பிழைகள் அதிகம் என்று எழுதியிருந்தேன். வயதானவள்நான். உங்களைப்பற்றிக் குறிப்பிடவில்லை. அரவம் அத்வானம் என்றமாதிரி என் பதில் அமைந்து விட்டதா? நல்ல கதை. பாராட்டுதல்கள். அன்புடன்

    பதிலளிநீக்கு
  42. கருத்திட்ட சகோதரி ஹேமா அவர்களுக்கும்...
    எழுத்துப் பிழை குறித்த கருத்துக்கு மீண்டும் கருத்திட்ட காமாட்சி அம்மா அவர்களுக்கும் நன்றி.
    எழுத்துப்பிழை என்னிலும் உண்டு அம்மா...
    நன்றி.

    பதிலளிநீக்கு
  43. விரைவில் உங்கள் பதிவுகளில் காணப்படுவேன். அழைப்புக்கு மனம் கனிந்த நன்றி குமார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!