புதன், 3 பிப்ரவரி, 2016

லேடி கேடி ....




Image result for bus travel images


மதுரையிலிருந்து மகளுடன் சென்னை திரும்பிக் கொண்டிருந்தேன்.  சனி இரவே கிளம்பி விட்டோம். அப்போதுதான் ஞாயிறு ஒருநாள் ஓய்வு எடுத்து விட்டு புத்துணர்ச்சியுடன் திங்கள் அலுவலகம் செல்ல முடியும்.


"உனக்கு வயசாச்சுங்கறதால என்னையும் படுத்தறியேம்மா..  நான் நாளை இரவு கிளம்பி வருவேனில்ல..."  என்றாள் மகள். 

நான் அரசு அலுவலகம் ஒன்றில் உதவியாளராக இருக்கிறேன்.  திங்கள் அன்று புதிய இணை இயக்குநர் வந்து பணியில் இணைவதாகச் சொல்லி,  விடுப்பைத் தொடராமல் திங்கள் பணிக்கு
வரும்படி மேலாளர் ராதாகிருஷ்ணன் சொல்லிருந்தார். 

"அந்தம்மா பயங்கர 'டெரர்'மா... தவறாம வந்துடு" . 

எங்களுக்கு சொந்த வீடொன்று மதுரையில் இருந்தாலும் இருவருக்கும் சென்னையில் வேலை.


சொல்லப் போனால் மகளுக்கு சென்னையில் வேலை கிடைத்து, அவள்தான்  சென்னையில் விடுதியில் தங்கி இருந்தாள்.  கணவர் மறைந்தபின் மதுரையிலிருந்து என் வேலையை சென்னைக்கு மாறுதல் கேட்டு வாங்கிக் கொண்டு,  இப்போது இருவரும் சென்னையில் ஒரு வீடு எடுத்துத் தங்கி இருந்தோம்.


பஸ்ஸில் உருப்படாத படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது.  ஓரிருவரைத் தவிர  வேறு யாருக்கும் அதில் சுவாரஸ்யம் இருப்பதாய்த் தெரியவில்லை.   ஒரு ஆறுதல்..  அதிக சத்தம் இல்லை! 




கொஞ்ச நேரம் கண்களை மூடிக்கொண்டும், அவ்வப்போது அந்த ஒடிசல் படத்தின்மீது தவிர்க்க முடியாமல் கண்களை ஓட விட்டுக் கொண்டும் இருந்தபோது எங்களுக்கு நேரே பக்கவாட்டில் இருந்த இருக்கையில் இருந்த பெண்மணி அடிக்கடி என்னைப் பார்ப்பது தெரிந்தது.

 நடுவில் சிறிது நேரம் பஸ் நின்று எல்லோரும் இறங்கி நிற்கையில் அந்தப் பெண்மணி என்னிடம் வந்தார்.  

"சென்னைக்கா?"

"ஆமாம்.." என்றேன்.  உள்ளுக்குள் அபாயமணி அடித்ததால் நகர முயன்றேன்.

"மன்னிச்சுக்குங்க..  தப்பா நினைச்சுக்காதீங்க...  எனக்கு ஒரு உதவி செய்வீங்களா?"

கேள்விக்குறியுடன் அவளைப் பார்த்தேன்.  காட்டன் புடைவை சற்று அதிகமாகவே கசங்கி இருந்தது.

"உங்க சந்தேகம் எனக்குப் புரியுது..  நானா இருந்தாலும் நழுவத்தான் பார்ப்பேன்.  ஆனா என் நிலைமையை நீங்க புரிஞ்சிப்பீங்கன்னு நினைக்கறேன்.  எனக்கு ஒரு இருநூறு ரூபாய் பணம் வேணும்.  கையில் கொண்டு வந்த காசைத் தொலைச்சுட்டேன்.  நான் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன்.  சென்னை வந்ததும் உங்கள் பணத்தை நான் சத்தியமாகத் திருப்பித் தந்து விடுவேன்.."

காஃபிக் 'கப்'புடன் என்னை அழைத்தபடி வந்த என் மகள்,  என்னை அங்கிருந்து நகர்த்திக் கொண்டு போனாள்.

"என்ன. காசு கேட்டாளா?  இது வழக்கம்தான்.  இது மாதிரி நான் அடிக்கடி பார்த்திருக்கிறேன்.  நீ வாம்மா.."

அந்தப் பெண்மணி தயக்கத்துடன் என் பின்னாலேயே வந்து காஃபி ஷாப் அருகில் நின்றாள்.

ஏனோ, என்னையும் அறியாமல் "காஃபி?" என்றேன்.  

தயக்கத்துடன் 'சரி' என்பதுபோலத் தலையசைத்தவள்,  "அதுக்குக் கூட என்னிடம் காசு இல்லை.  தொலைச்சுட்டேன்"  என்றாள்.  சற்றே சங்கடமான புன்னகை அவள் முகத்தில்.



"பரவாயில்லை"  என்றபடி அவளுக்கு ஒரு காஃபி வாங்கிக் கொடுத்தேன்.

பஸ்ஸில் ஏறியதும் அவள் என்னுடனேயே வந்தவள், என் அருகில், என் மகள் இருக்கையில், அமர்ந்து கொண்டவள், பின்னாலேயே வந்த என் மகளிடம், "ப்ளீஸ்... கொஞ்ச நேரம் என் இருக்கையில் அமர்ந்து வர முடியுமா?" என்று  ஆங்கிலத்தில் கேட்டுக் கொண்டாள்.

 அவள் ஆங்கிலத்தில் பேசியதும் என் தயக்கம் கொஞ்சம் குறைந்ததை நானே விநோதமாக உணர்ந்தேன்.
 

மகள் என்னை முறைத்தபடியே அந்த இருக்கைக்குப் போனாலும், அவளின் கண்கள் எங்கள் மீதே இருந்தன.

"இருநூறு ரூபாய் பெரிய விஷயமில்லை.  நீங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை.  என்ன,  பயணத்தில் வேறு ஒன்றும் சாப்பிட மாட்டேன்.  சென்னையில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு வீட்டுக்குப்போய் பணம் எடுத்துக் கொடுத்து விடுவேன்."

"ஏன்.. உங்களிடம் ATM card இல்லையா?"

"சென்னையில் இருக்கு"

"அதை கொண்டுவர மறந்துட்டீங்களா"

"இல்லை.  அது இருப்பதே என் மருமகளுக்குத் தெரியாது" என்றவள் கொஞ்சம் மௌனமானாள்.  பிறகு,

"அது பற்றிக் கொஞ்சம் உங்க கூட பேசலாம்னு தோன்றியது.  அதுதான் உங்கள் மகளை அங்கே உட்காரச் சொன்னேன்.  ஏனோ உங்களைப் பார்த்தால் எனக்கு மனதில் ஒரு நெருக்கம் வந்தது.  தெரிந்தவர்களிடம் உறவுகள் பற்றிய குறையைப் பகிர்வதை விட,  வெளியாள், அதுவும் நான் உதவி கேட்கும் உங்களிடம் சொன்னால் பிரச்னை வராது, எனக்கும் பாரம் குறையும் என்று பட்டது.."

 அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.  என்னை விட வயது அதிகமாகத்தான் தெரிந்தாள்.

மகனை வளைத்துக் கொண்ட மருமகள் பற்றிச் சொன்னாள்.  அவள் செய்யும் அதிகாரங்கள் பற்றிச் சொன்னாள்.  மகன் தன் மனைவியுடன் சேர்ந்து தலையாட்டுவதைப் பற்றிச் சொல்லிக் கண்கலங்கினாள்.  தான் ஒரு மதிப்பான வேலையில் இருந்தும் தன் கைப் பணங்கள் பறிக்கப்படுவதைச் சொன்னாள்.  விட்டு விலகவும் முடியாமல், சேரவும் முடியாமல் புழுங்குவது பற்றிச் சொன்னாள்.  கையில் சொற்ப பணத்துடன் ஒரு வேலையாக மதுரை வர நேர்ந்ததைச் சொன்னாள்.  அந்த ஒரு வேலை என்பதுவும் ஒரு சொத்து விற்பனை சம்பந்தமாக என்று சொன்னாள்.  இப்போது விற்க வேண்டாம் என்கிற தன் கருத்துக்கு மதிப்பே இல்லாமல், மருமகள் கட்டளையில் மகன் விரட்டி வேலை வாங்குவதைச் சொன்னாள்.

"நீங்கள் நல்ல வேலையில் இருக்கிறீர்கள்..  எதிர்த்து நிற்கலாமே..  அவர்களை விட்டு விலகி விட வேண்டியதுதானே?" என்றேன்.

"முடியலையே.." என்றாள்.

மௌனமானேன்.  இந்த அளவு கொடிய அனுபவம் இல்லை என்றாலும், எனக்கும் என் மகன் - மருமகள் மூலம் சில அனுபவங்கள் இருந்தன.

அடுத்த நிறுத்தத்தில் அவளுக்கான சிற்றுண்டிச் செலவை ஏற்றுக் கொண்டதோடு அவள் கையில் 500 ரூபாய்ப் பணமும் கொடுத்தேன்.  என் முகவரி வாங்கிக் கொண்டாள்.

என் மகள் என்னைத் திட்டிக் கொண்டே வந்தாள்.  "இதற்கு அவள் கேட்ட இருநூறு ரூபாய் மட்டுமே கொடுத்திருக்கலாம்.  நஷ்டம் கம்மியாய் இருந்திருக்கும்.  டிஃபனும் வாங்கிக் கொடுத்து, 500 ரூபாய் கூலியும் கொடுத்து..  ஏமாளிம்மா நீ.."

எனக்கும் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்று சங்கடம் இருந்தாலும் ஏனோ அவ்வளவாக உறுத்தவில்லை.  



சென்னையில் பிரிந்தோம்.


திங்கள் அலுவலகம் சென்றபோது எல்லாம் மறந்து விட்டிருந்தேன்.  

பதினோரு மணி வாக்கில் புதிதாக வந்திருக்கும் இணை இயக்குநர் எல்லோரையும் பார்க்க விரும்புவதாக மேலாளர் எங்களை அழைத்தார்.


கிளம்பினேன்.






நன்றி  :  படங்கள் இணையம்.
 

27 கருத்துகள்:

  1. அந்த இணை இயக்குநர்தான் பேருந்தில் பணமில்லாமல் வந்தவரோ?
    தொடர்கிறேன் நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார். அது உங்கள் முடிவுக்கு!

      நீக்கு
  2. நல்ல சுவாரஸ்யம் நண்பரே இது தொடரா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இல்லை நண்பர் கில்லர்ஜி. அவ்வளவுதான். முடிந்து விட்டது. நன்றி.

      நீக்கு
  3. அவ்வளவுதான் முடிந்து விட்டது என்ற பதில், அபாரம் ஐயா.

    பதிலளிநீக்கு
  4. எங்கள் யூகத்திற்கு விட்டு வீட்டீர்கள் போலும்! :)

    பதிலளிநீக்கு
  5. இணை இயக்குனருக்கு ஒரு ஆண் பெயரிட்டிருந்தீர்கள் என்றால் இன்னும் குழப்பியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  6. சரிதான் முடிவை நீங்களே தீர்மானியுங்கள் என்பது போலும் உள்ளது....இல்லை மறைமுகமாக அந்தப் புதிய இணை இயக்குநர் அவராகத்தான் இருக்கும் என்றும் தோன்றுகின்றது....

    பதிலளிநீக்கு
  7. இணை இயக்குனர் யாராயிருக்கும் ???
    சொல்லாமல் விட்டதும் நல்லதே அவரவர் கற்பனையில் குதிரைங்களை ஓட்டி வரலாம் ..

    ஆனா இப்படி திடீர்னு முன்பின் தெரியாதவங்க யாராவது பணம் கேட்டா எல்லாருக்குமே தர்மசங்கடம்தான் ..ஒருவர் நான் டவுனுக்கு போய் வரும் வழியில் நல்லா டீசண்டா ட்ரஸ் இருந்தார் பார்க்க ..என்கிட்டே வந்து 1 பவுண்ட் வேணும் கார் சாவி தொலைந்துவிட்டது காருக்குள்ளே பர்ஸ் atm கார்டெல்லாம் இருக்கு மகனுக்கு போன் பண்ண ஒரு பவுண்ட் கேட்டார் நான கொடுத்திட்டு வந்தேன்..எதுக்கு தெரியுமா ,,இங்கே சில டிவி ப்ரோக்ராம்சில் காண்டிட் காமரா வச்சி மக்களை டெஸ்ட் பண்ணுவாங்க .. தப்பி தவறி நானா கொடுக்காம விட்டு !!அது வேற இந்தியாவுக்கே அவமானம் வேறயான்னே கொடுத்தேன் :)

    பதிலளிநீக்கு
  8. //நல்லா டீசண்டா ட்ரஸ்அணிந்துஇருந்தார் பார்க்க //.என்று வாசிக்கவும்

    பதிலளிநீக்கு
  9. கதை சுவாரஸ்யமாக இருந்தது. தொடருமாக்கும் என நினைத்தேன். மேலும் இதனை இழுத்துப்போய் நல்லபடியாககூட முடித்திருக்கலாம். மொட்டையாக முடித்ததிலும் ஒரு சுவாரஸ்யம் இருக்கத்தான் உள்ளது. பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  10. நன்றாக போயிக்கிட்டு இருந்த கதை டக்குன்னு நின்று விட்டது....எங்களையே யோசிக்க விட்டுட்டீங்க..ம்...
    நேற்று கதை படித்தேன். ஆனால் கமண்ட் பாக்ஸ், என் நெட் சரியாக இல்லாததால் திறக்கவில்லை.

    இன்று திறந்து விட்டது

    தம.அ

    பதிலளிநீக்கு
  11. அவர்தான் ,இவராய் இருக்கக் கூடும் என்ற முடிவுக்கு எல்லாரையும் வா வைத்து விட்டீர்கள் ,வாழ்த்துக்கள் :)

    பதிலளிநீக்கு
  12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  13. ஏதோநிஜம்போல உணர்ந்து கடைசியில் கதையாகநினைத்தாலும் கஷ்டங்கள் மனதைக் குழப்பின. அன்புடன்

    பதிலளிநீக்கு

  14. மிகவும் அருமை...உண்மை சம்பவம் கூறுவது போல் இருந்தது...

    பதிலளிநீக்கு
  15. இப்படியும் கதையை முடிக்கலாம் என் சிறுகதை ”கேள்விகளே பதிலாய்” என்பதை நினைவு படுத்தியது

    பதிலளிநீக்கு
  16. கதை எப்படிப் போகிறது என்று தெரியாமல் கேடி என்று எப்படிச் சொல்வது.

    உண்மையான வேதனையாகவும் இருக்கலாம். இல்லை நான் தான் சரியாகப் படிக்கவில்லையா.
    எப்படியோ இதே போல பல சங்கடங்கள் பார்த்தாச்சு. சிலது நிஜம். பலது பொய்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!