செவ்வாய், 21 ஆகஸ்ட், 2018

கேட்டு வாங்கிப் போடும் கதை - நீர்க்குடம் - மாலா மாதவன்



நீர்க்குடம் ( சிறுகதை)
மாலா மாதவன் 
________________________

பவானியின் படித்துறை.  ஒய்யமுத்தா என்பது அந்த படித்துறையின் பெயர்.  சுற்றிலும் மாமரங்கள் காய்த்திருக்க, வெயிலின் தாக்கம் தெரியாதவாறு சில்லென்ற காற்றும், காற்றின் ஈரப்பதமும்.. பவானியில் வசிப்பவர்கள் பேறு பெற்றவர்கள். குளிக்க, துணி அலச என ஒய்யமுத்தா படித்துறையும், நல்ல தண்ணீருக்கென்று அல்லிக்கேணி படித்துறையும் கொண்டது. இதைத் தவிர கோவிலுக்கென்று தனிக் குளங்களும் உண்டு. தண்ணீர் இருந்தாலே அவ்வூர் செழிப்பானது அல்லவா?

எழுபது வயதாகும் சங்கரன் அந்த படித்துறையில் அமர்ந்து கை கூப்பிக் கொண்டிருந்தார். கண்களும் மூடியபடி இருந்தன. 

துணி தோய்த்துக் கொண்டு செல்பவர்கள், குளிக்க வந்தவர்கள் என ஜனங்கள் வந்த படி இருக்க இவர் எதையும் கவனிக்கும் மன நிலையில் இல்லை.  படித்துறையில் இறங்கி ஒரு முங்கு போட்டபின் இந்த ஜபம் தொடர்கிறது. எதைப் பற்றி தெரியவில்லை. 



"கடவுளுக்கு நன்றி சொல்கிறாரா?" 

மெல்லக் கேட்டாள் ராதா.. குளிக்க வந்த கிழக்குமேட்டு மருமகள் சுந்தரவல்லியிடம்.

"ம்க்கும்! அதெல்லாம் இல்லை புள்ள! தினமும் இப்படித் தான் முதல் முங்கு போட்டவுடனே இப்படி உட்கார்ந்துக்கறாரு. "

" குளிப்பது ஆயாசமா இருக்கோ? அதான் முடியாம உட்கார்ந்துக்கறாரோ? "

" அப்படியும் தெரியல. பாரு ! அவர் கண்ணுல இருந்து தண்ணி வழியுது. அழறார்டி. வா! இன்னிக்கு போய் பேசிப் பார்ப்போம்!" என்றபடி அவள் கையைப் பிடித்து இழுத்துச் சென்றாள் சுந்தரவல்லி.

"அழறீங்களா ஐயா? கேட்டபடி நெருங்கிய வல்லியை நிமிர்ந்து பார்த்தவர்..

இல்லையென்று தலையசைத்தார். 

" பேச மாட்டீங்களா?"

பதில் இல்லை.

"தினமும் குளிக்க வர்றீங்க. ஒரு முங்கு முங்கிட்டு அப்படியே உட்கார்ந்திருக்கிறீங்க. உச்சிப் பொழுதும் கடந்து சில சமயம் நீங்க இருப்பதையும் பார்க்கிறோம். ஏன்னு கொஞ்சம் சொல்லுங்களேன்"

பதில் இல்லை.

" வல்லி! இவருக்கு பேச வராது போல. விடுடி. பாவம். " ராதா அவளைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடக்க..

" இருடி! உட்கார்ந்துப்போம். அவரா சொல்வாரு"  என கைபிடித்து திரும்ப இழுத்தாள் வல்லி.

பார்த்த அவர் கண்களில் இருந்த வாழ்க்கைப் படம் அவர்களுக்கு  புரியாவிட்டாலும் , அவர் மன ஓட்டத்தைத் தட்டி எழுப்பி விட நினைவோ கல்யாணக் கட்டத்தில் சிக்கிக் கிடந்தது.

சங்கரா! எங்கடா போன? இன்னிக்கு உனக்கு கல்யாணம்டா? திரும்ப கூட்டு சேர்ந்துண்டு விளையாடப் போகாத. "

" போம்மா! அந்த குஞ்சு குள்ளச்சியை யார் கல்யாணம் பண்ணிக்கறது? நான் எவ்வளவு பெரிசா வளர்ந்துட்டேன். அவள பாரு பிறந்ததில் இருந்து அப்படியே குள்ளச்சியா..."

" பதினைஞ்சு வயசுக்கு உன் உயரம் அசாத்தியம் தானடா. அதுக்குன்னு உன் மாமா மகள் குஞ்சம்மாவ வேண்டாம்ன்னு சொல்லுவியா நீ"

நீ என்ன சொன்னா என்ன? என் பிள்ளை உனக்கு இல்லாத உரிமையா? குஞ்சம்மா வந்தா தஞ்சம்மான்னு கிடக்கப் போற " பரிகசித்த அம்மாவைப் பார்த்துக் கீழே சமையலுக்கு குவித்து வைத்திருந்த கத்திரிக்காயை எடுத்து உருட்டிப் பாடினான் சங்கரன். 

" குள்ளக் கத்திரிக்காயே! 
    குள்ளக் கத்திரிக்காயே!
       எங்க போறே?
    குஞ்சம்மா உருவில் உருண்டு போற.."

பதினைந்து வயது சங்கரனும் பத்து வயது குஞ்சம்மாவும் குடித்தனம் நடத்த ஆரம்பிச்சு இருபது வருஷம் ஓடிப் போச்சு.  சங்கரனின் அம்மா ஆசைப்பட்ட பேரனோ , பேத்தியோ மட்டும் இதுவரை கிடைக்க வில்லை. முப்பது வயது குஞ்சம்மாளுக்கு அன்று அசதி கொஞ்ச நஞ்சமில்லை. 

" இந்த தடவை புள்ள தான்னா!" சொன்ன மனைவியைப் பார்த்த சங்கரன்..

"இருபது வருஷத்து கதவு இறுக்க மூடி இருக்கேன்னு நாம கடவுளைத் தட்டற தட்டுல சொர்க்க லோகமே தெரியப் போறதோ என்னவோடி!"

நெளிந்து குழைந்த மனைவியைத் தாங்கிக் கொண்டான் சங்கரன்.

இருபக்கப் பெற்றோரும் சீரென்ன நகையென்ன... வாங்கிக் குவித்தனர் ஆசைதீர.  பேர் கூட ஸ்வாமிமலை நாதனின் பேர் என முடிவும் பண்ணியாச்சு. 

இன்னும் ஒருமாதம் இருக்க சீமந்த நாளும் வந்தது. "பிரசவம் நல்ல மழைக் காலத்தில் வருது சங்கரா. முன்னேற்பாடா எல்லாம் எடுத்து வைச்சுக்கணும்.தலைப் பிரசவம் வேற. நம்ம காமாட்சி தாதி கிட்ட முன்னாடியே சொல்லி தயாரா இருக்கச் சொல்லணும்."

" அதெல்லாம் தினம் சொல்லிண்டே தான் இருக்கேன் அம்மா!" 

"நேத்து கூட வந்தவள் இன்னும் ஒரு மாதம் இருக்கு. சீமந்தம் பண்ணுங்க ஐயா ! அப்படின்னாளே. "

சீமந்தம் கோலாகலமாக நடந்தது. சின்ன மூக்கில் சாறு பிழிந்து விட குட்டி குஞ்சம்மா வைர பேசரியுடன் மூக்கைச் சுழித்த அழகு அதி ரூபமாய் இருந்தது சங்கரனுக்கு. 

அதன் பின் வந்த ஒவ்வொரு நாளும் பார்த்து பார்த்து கவனித்தான் அவன். பிள்ளையோ, பெண்ணோ என அவள் வயிற்றையே பார்த்து காத்துக் கிடந்தான். 

" உள்ள நீர் குடம் இருக்குடா சங்கரா! குளு குளுன்னு இருப்பான் உன் பிள்ளை. வெளியே வந்ததும் நிரம்பி வழிகின்ற அன்புக் குடத்தை நீ அபிஷேகம் பண்ணு!" 

"அம்மா! அவ வயித்தில இருக்கற நீர் குடம் என் கண்ணிலும் இருக்கம்மா. பத்திரமா அவ பெத்து எடுத்தா ஸ்வாமிமலை போய் முடி இறக்கணும்."

சொன்ன சங்கரன் வானத்தில் இடிச் சத்தம் கேட்டு நிமிர்ந்தான். 

"மழை வரப் போறது போல! துணியெல்லாம் எடுத்தாச்சா? வாசல்ல வெயிலா இருக்கேன்னு இலைவடாம்.போட்டு காய வைச்சிருந்தேன் . யாரும் எடுத்து உள்ள வைச்சாளான்னு தெரியல. ஏண்டா சங்கரா ! எழுந்து சித்த வா. மடமடன்னு எடுத்து வைப்போம்" என கிடந்த இலைவடாங்களை எடுத்து நிமிர ...

" டொம்" என்று காதைக் கிழிக்கும் படி ஒரு இடி. யாராத்துலயோ விழுந்துடுத்துடா என காதைப் பொத்திய படி கூக்குரலிட்ட அம்மாவை அடக்கிய படி  பக்கத்து வீடு , அதற்கும் பக்கத்து வீடு எனப் பார்க்க சங்கரன் ஓட எத்தனிக்க..

" சங்கரா! கொல்லைப் பக்கம் நாறுதுடா. அங்க தான் விழுந்துடுத்தோ. வாழை மரத்துல விழுந்தா தங்கம் கிடைக்குமாமே அப்படியா?" 

அப்போது தான் குஞ்சம்மா ஞாபகமே வந்தது அவர்களுக்கு. இடின்னா பயப்படுவாளே. அவளை விட்டுட்டு இப்படி வடாத்தை பொறுக்கிண்டு இருக்கேனே என நினைத்து சங்கரன் ரேழி, உள்ளறை, மித்தம், அடுப்படி ஏன் மச்சுப்படி கூட பார்த்து விட்டான். அவள் இல்லை. 

" கொல்லைக்குப் போயிருப்பாளோடா?" 

அம்மாவின் சந்தேகத்தில் சர்வ அங்கமும் பதற.. போய்ப் பார்த்தால்..

குள்ளக் கத்திரிக்காய் என கேலி செய்யப்பட்ட அவன் குஞ்சம்மா கரிக்கட்டையாய்  உட்கார்ந்திருந்தாள்.. வயிற்றில் உள்ள குழந்தையும் கரிபூசி..

கோரம்.. மகா கோரம். ! இயற்கை கடனை கழிக்கப் போனவள் எழுமுன் இறங்கிய இடி அவள் மேலே விழ..
.. 
"வயிற்றுப் பிள்ளையோடு வாழ்விழந்து போனாள். ஓடி வந்த எல்லோரும் பேச்சடைத்துப் போய் நின்றனர். காமாட்சித் தாதி மெல்லச் சொன்னாள்.. 

" வம்ச விளக்கும்மா! எரியாமயே கருகி இப்படி வயித்தோட போச்சுதே!"

பின் வாழ்வில் என்ன நடந்ததென்று சங்கரனுக்கு தெரியாது. இருந்தான் . வாழ்ந்தான். இருக்கும் வரை அம்மா சுமந்தாள். அவளும் போன பின் இவன் சன்னியாசி போலானான். 

எங்கெல்லாம் நீர் நிலை இருக்கோ அங்கே இவன் இருப்பான். ஊர் ஊராய் நடப்பான். யாரிடமும் எந்தப் பேச்சும் வைத்துக் கொள்ள மாட்டான். சிலர் பித்தன் என்பார்கள். சிலர் சித்தன் என்பார்கள். . 

இதோ இந்த வல்லியும் ராதாவும் பேச்சுக் கொடுத்துத் தான் பார்க்கிறார்கள். வாயத் திறக்க மாட்டேங்கறாரே!. 

அவர் பார்வை என்னவோ தண்ணீர் மேலேயே இருக்கிறது. சமயத்தில் கண்ணை மூடி கை கூப்பிக் கொள்கிறார். 

“ ஹே! வாடி! இவர் வாயையே திறக்க மாட்டேங்கறார். கேக்கற நாம தான் இங்க லூசு "  இழுக்கிறாள் வல்லி. 

“ஐயா! சொல்லுங்க நீங்க யாரு? “ போகும் முன் ஒருமுறை ராதா அவரிடம் கேட்க ....

“ நீர்க் குடம் “ என மட்டும் வாய் அசைக்கிறார்.

ம்ச்ச்ச்! லூஸே தான்டி ! குதித்தபடி அவர்கள் செல்ல..

ஒரு நீர்க்குடத்தில் உறைந்த பிள்ளையை குடம் குடமாய் கொண்டு.இழுக்கும் பரந்த நீர்க் குட(ள) த்தில் அவர் தேடுகிறார் என்பது அவர் சொன்னால் தான் தெரியும்.


46 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. காலை வணக்கம் கீதா அக்கா... அப்படிச் சொல்லிவிட்டு முதலில் கமெண்ட்டி விட்டீர்களே!

      நீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

    பதிலளிநீக்கு
  3. கதையைப் பற்றி என்ன சொல்வது?..

    கனக்கிறது மனம்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இவர் ஏற்கெனவே சிறந்த இரு கதைகளை நம் தளத்தில் எழுதி இருக்கிறார். வெண்பாக்கள் எல்லாம் புனையும் திறமையாளர்.

      நீக்கு
    2. அவர்களைப் பற்றிய அறிமுகம் நன்று..

      நீக்கு
  4. இன்று இங்கே -
    அரபு நாடுகளில் - ஈத் ...
    ஈகைத் திருநாள் ...

    பிறகு வருகிறேன்....

    பதிலளிநீக்கு
  5. மாலா மா. மனதைப் பிசியும்படி ஒரு கதை.
    எங்கிருந்து வந்தது இந்தக் கரு. கறுத்துவிட்டதே. கண்ணன் காக்காமல்
    விட்டானே/. தெளிவான எண்ண ஓட்டம்.
    வாழ்த்துக்கள் மா.

    பதிலளிநீக்கு
  6. காலை வணக்கம்.

    என்ன சொல்ல. எழுத வார்த்தைகள் வரவில்லை. மனதில் அப்படியே பெரிய கனம். பொதுவாக கதைகள் என்னை பாதிப்பதில்லை. ஆனால் இந்தக் கதை அப்படிச் சொல்ல முடியவில்லை. மனதை என்னென்னமோ செய்கிறது. பிறகு வருகிறேன்.

    மாலா மாதவன் அவர்களுக்குப் பாராட்டுகள். என்ன ஒரு எழுத்து.

    பதிலளிநீக்கு
  7. படித்தபின் மனம் கனத்துவிட்டது. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. கதை நன்றாக இருக்கு. காரணகாரியம் யாரே அறிவர்.

    50கள்ல 15-10 என்பது வெகு அபூர்வம், வயசு வித்தியாசம் இன்னும் இருந்திருக்கணமோ?

    பதிலளிநீக்கு
  9. அருமையான கதை மாலா... கண்களிலும் நீர்க்குடம். வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  10. சிறப்பான கதை. கொஞ்சம் கூட யூகிக்க முடியாத முடிவு. மனம் கனத்து விட்டது. கதாசிரியைக்கும், வெளியிட்ட எங்கள் ப்ளாகிற்கும் பாராட்டுகளும், நன்றியும்.

    பதிலளிநீக்கு
  11. எனக்கும்....

    கனக்கிறது மனம்...

    ''அவன் குஞ்சம்மா கரிக்கட்டையாய் உட்கார்ந்திருந்தாள்.. வயிற்றில் உள்ள குழந்தையும் கரிபூசி..''

    அதிலும் இந்த வரிகளை வாசிக்கும் போது மிக அதிகமாக

    பதிலளிநீக்கு
  12. மனதை உருக்கிடுத்து, இடி இடியாக இறங்கிவிட்டது வாழ்வில். சோகம்தான் மிஞ்சியது. பாவம். அன்புடன்

    பதிலளிநீக்கு
  13. கருத்து இட்ட அனைவருக்கும் நன்றி. Thank you engal blog.

    பதிலளிநீக்கு
  14. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  15. காலம் அவருக்கு மருந்திட்டிருக்குமே படத்துக்காக கதை என்று தோன்றுகிறது

    பதிலளிநீக்கு
  16. கதையை படித்து மனம் கனத்து போனது.
    கிராமங்களில் இடி விழுந்து இறந்து போவதை கேள்வி பட்டு இருக்கிறேன்.
    என் மாமா பெண் சிறு வயதில் வயல்காட்டுப் பக்கம் விளையாட போனவள் இடி விழுந்து போனதாய் என் அம்மா சொல்லி இருக்கிறார்கள்.
    இந்த கதையில் பல வருடம் எதிர்பார்த்த குழந்தையும், ஆசை மனைவியும் கருகிபோனதை படித்து மனம் மிகவும் கஷ்டபட்டது.

    பதிலளிநீக்கு
  17. மனம் கனக்க வைத்த கதை! அருமை! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  18. கதை செதுக்கல் மனதை கனக்க வைத்தது

    எழுத்தின் நடையழகில் தேவகோட்டை மண்ணின் மணம் நுகர்ந்தேன்...

    பதிலளிநீக்கு
  19. வழக்கமாக ஆரம்பித்த கதையில் அசாதாரணத் திருப்பம். ஒரு இறுக்கம். தாக்கம்.

    பதிலளிநீக்கு
  20. கதை படிக்கையில் மனதுடன் கண்களும் கனத்து விட்டது.

    கதைக் கரு உயிர் பெற்றது.

    ஆனால் கதையில் கரு கருகிவிட்டது...

    ஆசிரியர் மாலா மாதவனுக்கு நன்றி. ஶ்ரீராமுக்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  21. நெகிழ்வான கதை பாராட்டுக்குரியது

    பதிலளிநீக்கு
  22. மனம் கனக்க வைத்த கதை...
    இப்படியும் நடக்குமா... நடக்கணுமா... என வருந்த வைத்தது.
    இடி விழுந்து இறந்தவர்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்... பட் தாயும் சேயும்... வருத்தமே மிஞ்சியது.
    கதை ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!