செவ்வாய், 29 அக்டோபர், 2019

கேட்டு வாங்கிப் போடும் கதை : கருப்பர் - பரிவை சே. குமார்



கருப்பர் கோவில் முன்னே ஊர் கூடியிருந்தது.

குளித்து ஈரத்துணியுடன் வந்து நின்ற சாமியாடி ராமசாமி மாமா கருப்பரையே பார்த்துக் கொண்டிருந்தார்.

கோவிலுக்குச் சின்னச்சாமி ஐயா வாங்கிக் கொடுத்த குழாய் ரேடியோவில் அதிக சத்தமில்லாமல் 'அங்கே இடி முழங்குது' எனப் பாடிக் கொண்டிருந்தது.
கருப்பரையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த ராமசாமி மாமா 'ஆய்ய்ய்...' என ஒரு சத்தம் போட்டு தலையை ஆட்ட ஆரம்பித்தார். கூடவே வாய் மலர்ந்த சிரிப்பும்.

அவரின் கால்கள் சன்னமாய் குதித்துக் குதித்து ஆட ஆரம்பித்தன.

அவரது உருவத்துக்கும் அவர் கால் போட்டு ஆட ஆரம்பித்ததுக்கும் கருப்பனே நேரில் வந்தது போல் இருந்தது.  தலையைத் தலையை ஆட்டினார். இரண்டு இளவரசுகள் அவரின் வலமும் இடமும் நின்று தாங்கிப் பிடித்தார்கள்.
'ஏப்பா... அவனை ஆட விடுங்கப்பா... பிடிக்க வேண்டாம்... அடேய் ராமசாமிக்கு உடுப்பைப் போடுங்கப்பா... ஏத்தா பொம்பளைங்க கொலவ போட்டாத்தான் என்ன... ஒவ்வொரு தடவையும் சொல்லணுமாக்கும்...' என்றார் சின்னச்சாமி.

சிலர் ராமசாமி மாமாவுக்கு கருப்பு அங்கியை மாட்ட ஆரம்பித்தார்கள்... 

அங்கொன்றும் இங்கொன்றுமாகச் சில பெண்கள் குலவை இட்டார்கள்.

ராமசாமி மாமா கருப்பனசாமி ஆட ஆரம்பித்து கிட்டத்தட்ட 40 வருசத்துக்கிட்ட இருக்கும்...  இன்னைக்கு ஆடுறதுதான் உடுப்பு அணிந்து அவர் ஆடும் இறுதி ஆட்டம்.

ஆமா... வயசாயிருச்சு... முன்ன மாதிரி உடம்பு தாங்குதில்லை என்பதால் தன்னிடம் இருக்கும் கருப்பனை வேறு ஒருவரிடம் கொடுக்க முன் வந்தார். அதற்கான பூஜைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.

இந்த பூஜை என்பது பொங்கல் வைத்து கருப்பனை அழைத்து சாமி கும்பிட்டு இரவில் புதிதாய் சாமி ஆட விருப்பமுள்ளவர்களும் தற்போதைய சாமியாடியும் கோவிலிலேயே படுத்திருக்க வேண்டும். நள்ளிரவில் சாமியாடியிடம் இருந்து வரும் 'கருப்பா..'  என்ற குரலைத் தொடர்ந்து
அருகே படுத்திருப்பவர்களில் ஒருவரிடமிருந்து 'நான் இங்கே இருக்கேன்டா' என்ற எதிர்க்குரலைக் கண்டு பிடித்து மறுநாள் அவருக்குச் சாமியாடியின் உடுப்பைப் போட்டு கருப்பனை அழைத்துக் கும்பிடுவதில் முடியும். அதன் பின் புதிய சாமியாடியின் உடம்புக்குத் தக்கவாறு அந்த உடுப்பில் மாற்றம் செய்யப்படும். அல்லது புதியது தைக்கப்படும்.

இப்படியான ஒரு தினத்தில்தான் இளைஞனாக இருந்த ராமசாமி மாமா, மேல வீட்டுக் கருப்பையாவிடம் இருந்து குருவும் குலையும் வாங்கினார் என்று அப்பா சொல்லக் கேள்வி.

குள்ள உருவமான கருப்பையாவை விட உயரமும் திடகாத்திரமுமான ராமசாமி மாமா கருப்பனைக் கண் முன் நிறுத்தினார் என்றும் அப்பா சொல்வார். உண்மைதான்... கருப்பன்னா அது ராமசாமி மாமாதான்னு நாங்கள்லாம் மனசுக்குள்ள வரைஞ்சி வச்சிருந்தோம்.

வரும் தை பௌர்ணமிக்கு காட்டுத்தலை கருப்பனுக்கு காவடி கட்டணும். எங்க ஊர்க் காவடியே முதல் காவடியாய் இறக்கப்படும்... எங்க கருப்பனுக்கு என்று தனியே பூக்குழி வளர்க்கப்படும்.  சில நாட்களுக்கு முன்னர் காட்டுத்தலை நாட்டார் வந்து சம்பிரதாய அழைப்பு விடுத்துச் சென்றார்கள்.

இந்த முறை என்னால் அவ்வளவு தூரமெல்லாம் காவடி தூக்கி நடக்க முடியாதுப்பா... போதும் இத்தனை வருசம் கருப்பனுக்காக வாழ்ந்தது... இனியும் முடியாது... யாராச்சும் இளவரசு குருவும் கொலையும் வாங்கிக்கிட்டு காவடி கட்டுங்க என்று சொல்லிவிட,  பங்காளிகளுக்குள் கூடி அவசர ஆலோசனை செய்து உடனே கருப்பனைத் தேர்வு செய்வதென முடிவு செய்தார்கள்.

கருப்பன் யாருக்கு வரப்போறானோ என்பதுதான் ஊருக்குள் பேச்சாக இருந்தது. ராமசாமி மாமா மாதிரி வாட்ட சாட்டமான ஆளுக்கு வந்தா நல்லாயிருக்கும் என்பதே எல்லாருடைய எண்ணமுமாய் இருந்தது.

பல வருடங்களுக்கு முன்னர் இந்தா... இதோ ஊர் கூடியிருக்கே கருப்பர் கோவில் இங்கே வருடா வருடம் கெடா வெட்டு நடக்குமாம். ஒரு பத்து ஊருக்காரங்க... அதாவது காட்டுத்தலைக் கருப்பனை குலசாமியாக் கும்பிடுறவங்க சேர்ந்து இங்க பூஜை போடுவாங்களாம்.

அப்ப கருப்பனசாமி ஆடுறவங்க நல்லா தீட்டப்பட்ட அருவா மேல ஏறி நிப்பாங்களாம். அப்புறம் அந்த அருவாளால ஆட்டுக்கிடாயை வெட்டுவாங்களாம் தலை வேறு முண்டம் வேறாப் போகுமாம்... தொங்கு கிடாயாய்ப் போனால் அந்த வருடம் அந்த ஊருக எல்லாம் பெரும்
பிரச்சினையை சந்திக்கும் என்பது நம்பிக்கையாம்... ஆடுகளைப் பொறுத்து அருவாவைத் தீட்டிக் கொடுத்துக்கிட்டே இருப்பாங்களாம். தொங்குகிடாயே விழுந்ததில்லையாம்.. ராமசாமி மாமா கூட அந்த மாதிரி ஆடி வெட்டியிருக்காருன்னு அப்பா சொல்வாரு.

அப்புறம் 'எனக்கு மரியாதை கொடுக்கலை...' அப்படியிப்படின்னு சின்னச் சின்ன சண்டையில ஒவ்வொரு ஊரா விலகிப் போக, இப்ப எந்த ஊருமே வர்றதில்லை... அவனவன் கருப்பனுக்கு தனித்தனியா கோவில் கட்ட, கெடா பூஜை சுத்தமாக நிறுத்தப்பட்டு விட்டது.

ஒவ்வொரு வருடமும் அம்மன் கோவில் திருவிழாவின் போது ராமசாமி மாமாவுக்குச் சாமி வந்து எனக்குக் கொடுக்க வேண்டியதை கொடுக்காம வச்சிருக்கியளேப்பா என்று கேட்கும்.

செய்கிறோம் என்பார்கள்...  எல்லா ஊரையும் எப்படி இழுப்பது என்பதிலே அந்த வருடம் முடிந்து விடும். செய்கிறோம் என்ற வார்த்தை அடுத்த வருச திருவிழாவில் புதுப்பிக்கப்படும்.

இந்த முதல் மரியாதைங்கிறது கிராமத்து சிறு தெய்வ வழிபாடுகளில் முக்கியமானது. எதோ ஒரு குடும்பம் வழி வழியா கோவில் விசேசத்தில் விபூதி, காளாஞ்சி என முதலில் வாங்கிக் கொள்ளும்.  

அதென்ன அவுகளுக்கு மட்டும் முதல் மரியாதை என சண்டையிட்டு அதை நிறுத்தி, அதனால் திருவிழாக்களே நின்ன கிராமத்துக் கோவில்கள் ஏராளம். எங்க ஊரில் எல்லாம் மாமன் மச்சான்னு உறவுங்கிறதால அவனுக்கென்ன முதல்லங்கிற பிரச்சினை இதுவரை எழவில்லை.

இப்பவும் முதல் மரியாதை, அப்புறம் வெளியூர் ஆட்களுக்கு மரியாதை என சில சம்பிரதாயங்கள் இருக்கத்தான் செய்யுது. அதெல்லாம் வழிவழியாய் கடை பிடிக்கப்பட்டுத்தான் வருகிறது.

கருப்பர் கோவிலைப் பொறுத்தவரை சின்னச்சாமி ஐயா குடும்பத்துக்குத்தான் முதல் மரியாதை.

அம்மன் கோவிலில் ராசப்பன் மாமா வகையறாவுக்கு. முனியய்யா கோவிலில் சீனிச்சாமி சித்தப்பா குடும்பத்துக்கு என்பது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கு.

கருப்பு அங்கி, கால் சலங்கை, தலைப்பாகை, இடது கையில் கைத்தடி, வலது கையில் அருவா, நெற்றி நிறைய சந்தனம், குங்குமம் என ராமசாமி மாமா கோவிலில் நாம் சிலையாகக் காணும் மீசை முறுக்கிய கருப்பனை கண் முன்னே கொண்டு வந்தார் ஆக்ரோஷமாக.

ஆளாளுக்கு அவரிடம் கேள்விகள் கேட்க ஆரம்பித்தார்கள்...  எல்லாருக்கும் பதிலும் அதன் முடிவில் தலையில் அள்ளி வீசி, நெற்றியில் இட்ட விபூதியும்
கிடைக்க, கருப்பனை வழிபட்டார்கள்.

'இந்த வருசமாச்சும் கெடா பூசைய நடத்தித் தருவியா..?' ராசப்பன் கேள்வியை முன் வைக்க, என்ன பதில் வரும் என்பதற்காக ஊரே அமைதி காத்தது.

'என்னப்பா... ஸ்ஸ்ஸ்... நானாப்பா நடத்த விடாம வச்சிருக்கேன்... ஸ்ஸ்ஸ்... நீங்கதானேப்பா... ஸ்ஸ்ஸ்.... நீ பெரியவனா.... நான் பெரியவனான்னு... ஸ்ஸ்ஸ்... மோதிக்கிட்டு எனக்கு ரத்தப்பில்லி கொடுக்காம... ஸ்ஸ்ஸ்... பசியாப் போட்டு வச்சிருக்கீங்க...'

'என்ன பண்றதுன்னு நீதான் சொல்லணும்... இனி எல்லா ஊரையும் கட்டி இழுக்கிறதெல்லாம் முடியாத காரியம்... நாங்க மட்டும் பண்ணலாமா...?  சொல்லு... உன்னோட ஆலயத்துக்கு வந்து பூசை போட்டுட்டு வந்து நம்ம ஊருல இந்த வருசம் சிறப்பாச் செஞ்சிடுறோம்...'

'என்னப்பா... ஸ்ஸ்ஸ்... தனியாக் கேக்குறே... ஸ்ஸ்ஸ்... என்னோட பிள்ளைங்க எல்லாருமா நின்னு... ஸ்ஸ்ஸ்... செஞ்சாத்தானேப்பா எனக்கு மகிழ்ச்சி... ஸ்ஸ்ஸ்... தாயாப்புள்ளயா இருந்தவுக... ஸ்ஸ்ஸ்... தனியா நிக்கிறீங்களேப்பா... ஸ்ஸ்ஸ்... என்னையக் கூறு போட்டுக்கிட்டு...'

'ஒத்து வரலையே என்ன பண்ணச் சொல்லுறே...'
;
'ஒத்து வரும்ப்பா... ஸ்ஸ்ஸ்... ம்ம்ம்... ஆஆஆ... ஸ்ஸ்ஸ்... நீ ஏற்பாட்டைப் பண்ணு... எல்லாரையும் நாஞ் சேத்துவிடுறேன்... ஸ்ஸ்ஸ்...'

'அப்புறம் என்னப்பா அதான் கருப்பனே சொல்லிட்டானுல்ல... அடுத்த வாரத்துல எல்லா ஊருக்கும் ஆளனுப்புவோம்... கூட்டத்தைக் கூட்டுவோம்... இந்த வருசம் கெடா பூஜை போட்டுடணுமப்பா'  என்றார் சின்னச்சாமி.

சாமி கும்பிட்டு முடிந்ததும் ராமசாமி மாமாவுக்கு சாமி மலையேற, மயக்கமான அவரை ஒரு ஓரமாக அமர்த்தி வீசிவிட்டார்கள். முகமெல்லாம் தண்ணீர் வைத்துத் துடைத்து குடிக்கத் தண்ணீர் கொடுத்தார்கள்.

எல்லாருக்கும் சுண்டல், பொங்கல் வழங்கப்பட்டது.

'ஏப்பா... அடுத்த கருப்பனசாமியாக விருப்பமுள்ளவுக குளிச்சிட்டு சாப்பிட்டு வீட்டுல சாமி கும்பிட்டு வந்து கோயில்ல படுக்கணும்ப்பா... ராமசாமி இனி வீட்டுக்கு காலையிலதான் போவாரு... காலையில கருப்பன் யாரு உருவத்துல வரப்போறான்னு காட்டிருவானப்பா' என்றார் சின்னச்சாமி ஐயா.

ஊரே கிடாப்பூஜையைப் பற்றித்தான் பேசியது. இளவட்டங்கள் யாரும் அதைப் பார்த்ததில்லை என்பதால் இந்த வருடம் எப்படியும் எல்லா ஊரையும் ஒண்ணு சேர்த்து கிடாப் பூஜையை நடத்தியே ஆகணும் என இளைஞர்கள் கங்கணம் கட்டினர். அதற்குள் மற்ற ஊர்ப் பெண் பிள்ளைகளையும் பார்க்கலாமே என்ற நப்பாசையும் இருந்தது.

கூட்டம் கலைந்தது.

அடுத்த கருப்பணசாமி யார் என்பதே எல்லோருடைய பேச்சிலும் இருந்தது.
சில வீட்டில் மகிழ்வுடன் அனுப்பி வைத்தார்கள்....

சிலரோ சாமி ஆடுறவன் குடும்பம் நல்லாயிருக்காது.... அதெல்லாம் ஒண்ணும் வேண்டாமென மறுத்து விட்டார்கள்.

சிலரோ எங்கே நம் பையனுக்கு சாமி வந்துருமோ என கருவாட்டுக் குழம்பு வைத்துச் சாப்பிடச் சொன்னார்கள்.

ராமசாமி வீட்டில் கூட கருப்பனுக்கு ஆடுனது போதும்... இனி நம்ம வீட்டுல யாருக்கும் கருப்பன் வர வேண்டாம் என்றே முடிவு செய்திருந்தார்கள். அவர்கள் பட்ட கஷ்டம் இந்த முடிவுக்கு வரவைத்திருந்தது.

கோவிலில் சொற்ப இளைஞர்கள் ராமசாமியுடன் படுத்திருந்தார்கள்.
பல வருடங்களுக்குப் பிறகு கருப்பனைத் தேர்ந்தெடுக்கும் முயற்சி என்பதால் ஊரில் பலருக்குத் தூக்கம் வரவில்லை. கருப்பன் காட்டுவானா... மாட்டானா என்பதே எல்லாரின் கவலையுமாய்.

நள்ளிரவில் 'ஏய்ய்... கருப்பா...' என இருட்டையும் நிசப்தத்தையும் கிழித்துக் கொண்டு கத்தினார் ராமசாமி.

அவருக்கு அருகில் இருந்து ஏதேனும் குரல் வருதான்னு விழித்திருந்தவர்கள் காதைத் தீட்டிக் கொண்டு காத்திருக்க...  எங்கும் நிசப்தம்...

'கருப்பன் மனமிறங்கவில்லையோ..?'

'கருப்பனுக்கு யாரையும் புடிக்கலையோ...?'

'கருப்பா என்ன கோபம்...?'

'இந்த வருசம் உனக்குக் கெடாப்பூசை போட்டுடுறோம்... ஆளைக் காட்டுப்பா...'  என ஆளாளுக்கு மனசுக்குள் வேண்டிக் கொண்டிருந்தனர்.

'ஏப்பா... என்னாச்சு... இன்னமும் நாந்தான் உனக்கு வேணுமா..?' வயதின் ஆற்றாமையோடு மனசுக்குள் கலங்கினார் ராமசாமி.

அப்போது -

'டேய்.... நான் இங்கே இருக்கேன்டா....' என்ற குரல் ராமசாமி வீட்டு வாசலில் மீன் குழம்பு சாப்பிட்டு விட்டுப் படுத்திருந்த அவரின் பேரன் கருப்புச்சாமியிடம் இருந்து வந்தது.



- 'பரிவை'  சே.குமார் -

42 கருத்துகள்:

  1. அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கறுப்பன் கறுப்பன் தான். கடைசியிலே யாரைத் தப்பிக்க வைக்கலாம்னு நினைச்சாங்களோ அவனே மாட்டிக்கொண்டான். கிராமத்தின் திருவிழாவைக் கண்ணெதிரே கொண்டு வந்த பரிவை.சே.குமாருக்கு வாழ்த்துகள். கிராமாந்திரப் பின்னணியை அவரும் துரையும் தான் முழுசாக் கண்ணெதிரே கொண்டு வருகின்றனர்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் வணக்கங்களுடன் இந்நாள் இனிமை நிறைந்ததாக இருக்கவும் ஆண்டவனை பரிபூரணமாக பிரார்த்திக்கிறேன்.

    இன்று சகோதரர் பரிவை குமார் அவர்கள் எழுதிய கதை மிகவும் நன்றாக இருக்கும். படித்து விட்டு வருகிறேன்.

    திங்களுக்குள் நேற்றிலிருந்து புதன் பிரவேசித்து விட்டதால், செவ்வாயை நான் தேடிக் கொண்டிருந்தேன். வலையில் காட்டியதில் பார்த்து வரத் தாமதம் ஆகி விட்டது. நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாம், எனக்கும் புதன் வந்தது. பின்னர் தான் தெரிந்தது அது தப்புனு! அதைச் சொல்ல மறந்துட்டேன். ஏற்கெனவே கிழமைக்குழப்பம்! :))))))

      நீக்கு
    2. வாங்க கமலா அக்கா.... காலைவணக்கம்.  நன்றி.

      //திங்களுக்குள் நேற்றிலிருந்து புதன் பிரவேசித்து விட்டதால், செவ்வாயை நான் தேடிக் கொண்டிருந்தேன்.//

      ஹா....  ஹா...  ஹா.....

      நீக்கு
    3. //திங்களுக்குள் நேற்றிலிருந்து புதன் பிரவேசித்து விட்டதால், செவ்வாயை நான் தேடிக் கொண்டிருந்தேன். //

      இதை, திங்களின் நெற்றியிலிருந்து புதன் பிரவேசித்து விட்டதால் செவ்வாயை நான் தேடிக்கொண்டிருந்தேன் என முதலில் படித்தேன். இப்படி கவிதையா எழுதியிருக்காங்களே சிவனைப் பற்றினு மனசில் தோன்றியது.

      திங்களை அணிந்ததால் அவனை திங்கள் என்றே சொல்லலாம். அவன் நெற்றியிலிருந்து பீறிட்ட அறிவுச் சுடர் புதன். அவனுடைய சிவந்த வாயைத் தேடினேன் என்பதுபோல் அர்த்தம். ஹா ஹா.

      நீக்கு
    4. /திங்களை அணிந்ததால் அவனை திங்கள் என்றே சொல்லலாம். அவன் நெற்றியிலிருந்து பீறிட்ட அறிவுச் சுடர் புதன். அவனுடைய சிவந்த வாயைத் தேடினேன் என்பதுபோல் அர்த்தம்./

      ஆகா.. அருமையான உவமானம். அந்தப் பிறை சூடியவனின் பிரகாசமான அறிவுச்சுடர் நிறைந்திருக்கும் வதனத்தில், அவனின் மலர்ந்த செவ்வாயின் புன்னகையோடு கூடிய அழகான தரிசனம் கிடைப்பது போல...! என இம்மூன்று தினங்களோடு ஒப்பிட்டு நான் கூறியதை புது மாதிரியாக சிந்தித்து இறையருளாக கூறியமைக்கு நன்றி சகோதரரே... விளக்கமான உவமானம். மிகவும் ரசித்தேன்.

      நீக்கு
    5. படிக்கும் முன்னரே நம்பிக்கை...
      நம்பிக்கை பூர்த்தியானதா தெரியாது... தெரிந்ததை எழுதுகிறேன்...
      நன்றி அக்கா.

      நீக்கு
  3. நள்ளிரவில் நடுக்காட்டுக்குள் படுத்துக் கிடந்து பார்த்த மாதிரி இருக்கிறது...

    கருப்பசாமியின் கை வண்ணம் கால் வண்ணம் கருணை வண்ணம் காட்டிய அன்பின் திரு.குமார் அவர்களுக்கு பாராட்டுகள்..

    மகிழ்ச்சி... நன்றி...

    பதிலளிநீக்கு
  4. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  5. //'ஏய்ய்... கருப்பா...' என இருட்டையும் நிசப்தத்தையும் கிழித்துக் கொண்டு கத்தினார் ராமசாமி.//

    யார் என்ற ஆவலில் படித்தால்

    //'டேய்.... நான் இங்கே இருக்கேன்டா....' என்ற குரல் ராமசாமி வீட்டு வாசலில் மீன் குழம்பு சாப்பிட்டு விட்டுப் படுத்திருந்த அவரின் பேரன் கருப்புச்சாமியிடம் இருந்து வந்தது.//

    படித்ததும் உடம்பு சிலிர்த்து கண்ணீர் துளிர்த்து விட்டது.

    குமார், கண் முன்னே கொண்டு வந்து விட்டீர்கள்.
    வாழ்த்துக்கள். அடிக்கடி கிராமிய கதைகள் எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எழுதுறதெல்லாம் அதுதானேம்மா...
      மற்ற கதைகள் எல்லாம் வரமாட்டேங்குது.. இதுவே தரிகிணத்தம்தான்...
      கருத்துக்கு நன்றிம்மா.

      நீக்கு
  6. கிராமிய பாணியிலான கதை என்றாலே சிறப்பு. அதுவும் குமார் அவர்களின் கதை மேலும் சிறப்பு. கதாசிரியருக்கு பாராட்டுகள். பகிர்ந்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. கிராமிய நடையில் ஒரு அழகான கிராம கதையை அழகாக சொல்லியிருக்கிறார். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. கருத்து சொன்ன அனைவருக்கும்...
    கதையை பகிர்ந்த எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவுக்கும்...
    எங்களிடம் கதை கேட்டு விரட்டி வாங்கிப் போடும் ஸ்ரீராம் அண்ணனுக்கும்...
    நன்றி..! நன்றி..!! நன்றி..!!!

    பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  9. கிராமிய பாணியில் அசத்துகிறார் குமார்.

    காட்சிகளைக் கண் முன்னே நிறுத்தி விட்டார். பாராட்டுகளும் வாழ்த்துகளும் குமார்.

    பதிலளிநீக்கு
  10. முடித்த விதமும் அசத்தல்... வாழ்த்துகள் குமார்...

    பதிலளிநீக்கு
  11. சிறு கவனக் குறைவாக, நாளைய பதிவை இன்றைக்கே வெளியிட்டாலும், அது முழுமையாக யாராலும் வாசிக்க முடியாது... உடனே நாளைய பதிவை revert to draft செய்து விட்டு, இன்றைய பதிவு வெளியிடப்பட்டது...

    அனைத்து வலைத்தளங்களையும் தொகுத்து கொடுக்கும் எனது திரட்டியில் (feedly.com ரீடர்) நாளைக்கான பதிவின் தலைப்பும், படமும், ஒரு ஒரே வரியும் தென்பட்டது...

    அனைத்து வலைப்பதிவர்களும் அறிந்து கொள்ள வேண்டியது : பதிவில் Until Jump Break பயன்படுத்துவதால் இதன் நன்மை... நன்றி...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னோட டாஷ்போர்டில் இன்னமும் அது தெரிந்து கொண்டு இருக்கிறது.

      நீக்கு
  12. வணக்கம் சகோதரரே

    கதை அருமை. கிராமபுறத்து கதை என்பதால் விறுவிறுப்புக்கு சற்றும் குறைவில்லாமல் இருந்தது. கோவில் முறைகளையும் நன்றாக உணர்த்தி,கிராம மக்களின் குலப் பெருமைகளையும் எடுத்துக்காட்டி கிராம மண் வாசனை மாறத அருமையான கதையை தந்து விட்டீர்கள் சகோதரரே.. படிக்க நன்றாக இருந்தது. வாழ்த்துகளுடன் பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  13. கிராமத்து கிடாவெட்டு வைபவங்களை மிக அழகாகவும், நேர்த்தியாகவும் விவரித்திருக்கிறார் பரிவை சே.குமார். இது அவருடைய ஏரியா. கிராமத்து திருவிழாக்களை நேரில் பார்த்தவர்களால்தான் இத்தனை தத்ரூபமாக எழுத முடியும். முடிவு அபாரம். பாராட்டுகள்.  

    பதிலளிநீக்கு
  14. நிகழ்வை நேரில் கண்ட உணர்வு அருமை நண்பரே...

    பதிலளிநீக்கு
  15. பல வழக்கக்கள் /செய்திகள் தெரியாதவை ஏனோ தெரிய வில்லை பழைய மலையாளப்படம் நிர்மால்யம் மசமசஎன நினைவில் வந்தது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரொம்ப நன்றி அயா...
      //மலையாளப்படம் நிர்மால்யம் மசமச//
      நான் பார்த்ததில்லை... அப்ப கதை நல்லாயில்லையோ?

      நீக்கு
  16. அதானே! மீன்கொளம்பு சாப்ட்டு படுத்திட்டா, விட்டிடுமா கருப்பு..!

    பதிலளிநீக்கு
  17. காட்சிப்படுத்துதல் உங்களுக்கு கைவந்த கலை பரிவை. அதனால் தான் தெரியாத தகவல்களையும் வாசிக்கும் பொழுது 'ஓகோ! இப்படித் தான் இருக்குமா' என்று வாசகரை உணர வைக்கிறது.

    காட்சிப் படுத்துதல் கதைக்களம் உருவாவதை நிச்சயப்படுத்துகிறது.
    களம் ரெடி. அதற்கான கதை?..

    //முன்ன மாதிரி உடம்பு தாங்குதில்லை என்பதால் தன்னிடம் இருக்கும் கருப்பனை வேறு ஒருவரிடம் கொடுக்க முன் வந்தார். அதற்கான பூஜைதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.//

    -- இந்த இடத்தில் கதைக்கான முடிச்சையும் போட்டு விட்டீர்கள்.

    இவ்வளவுக்கு பட்ட சிரமம் கதை ரூபமான பின்னலுக்கு இன்னும் கொஞ்சம் முயற்சித்திருக்கலாமோ என்ற உணர்வைத் தோற்றுவிக்கிறது. அவ்வளவு தான். மற்றபடி ஓ.கே.

    வாழ்த்துக்கள், பரிவை.



    .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்துக்கு நன்றி ஐயா...
      கதையோட போக்கிலேயே பயணிப்பது கூட இப்படி களம் மாறக் காரணமாக இருக்குமோ?

      இன்னும் சிறப்பாக எழுத முயற்சிக்கிறேன் ஐயா...
      விரிவான கருத்துக்கு மீண்டும் நன்றி.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!