புதன், 6 மே, 2020

புதன் 200506 :: தனிமனித உரிமை என்றால் என்ன?


நெல்லைத்தமிழன்: 

1. திருமணம் ஆன காலத்தில் ஆணுக்கு இருக்கும் ஈகோ, வயது ஆக ஆக மறைந்து அட்ஜஸ்டபிளாக மாறிவிடுகிறதா?# ஆணானாலும் பெண்ணானாலும், திருமணம் காரணமாக அல்ல வயது முதிர்ச்சி தரும் விவேகம் அகங்காரத்தை மழுங்கச் செய்யும்.

& நீங்கள் சொவது சரி என்றுதான் தோன்றுகிறது. தி மு : ஓர் ஆண், ஒரு பெண். தி பி : கணவன், மனைவி. 


2. கங்கை அமரன் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டது போல, கணவனின் புகழ், அச்சீவ்மென்ட்ஸ், மனைவிக்கு பிரமிப்பை ஏற்படுத்தாமல், தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகிறதோ?

# நெருக்கமானவர்களின் வெற்றி அசாதாரணமாக இருப்பினும் பிரமிப்பூட்டாதுதான். வீட்டுப் பச்சிலைக்கு வீரியம் கம்மி. 

& மற்றவர்கள் பார்ப்பது, ஒரு சாதனையாளரின் சாதனையை மட்டுமே. மனைவிக்கு அந்த சாதனையாளரின் ப்ளஸ் , மைனஸ், ஸ்ட்ரெங்த், வீக்னஸ் எல்லாமே தெரியும். அப்புறம் பிரமிப்பு எங்கேயிருந்து வரும்? 

3. இந்தக் காய் பிடிக்கும் இது பிடிக்காது, இந்தப் பழம் பிடிக்கும் என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? Geneலிருந்தா?

# பிடித்த / பிடிக்காத உணவு இளமையிலிருந்து படிந்து வருவது.  ஜீன் அல்ல கண்டிஷனிங்.

& பிடிக்கும் / பிடிக்காது என்பது வேறு; உடம்புக்கு ஒத்துக்கொள்ளும் / ஒத்துக்காது என்பது வேறு. பிடிக்கும், பிடிக்காது என்பது அன்னை வளர்ப்பிலும், சூழ்நிலை மற்றும் சில அனுபவங்களின் அடிப்படையில் வருவது. 

நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஒரே ஒருமுறை பிராட்வே அருகே, நண்பன் ஒருவனுடன் நடைபாதைக் கடை ஒன்றில் கரும்புச்சாறு குடித்தேன். அதற்குப் பிறகு இரண்டு நாட்கள் அலுவலகம் செல்ல இயலாமல் வயிற்றுப்போக்கால் அவதிப்பட்டேன். அன்றிலிருந்து இன்று வரை, கரும்புச்சாறு எங்கே பார்த்தாலும் அந்த வழிக்கே போகமாட்டேன். 
எனக்கு எதற்கு வேண்டாத ரிஸ்க் என்று ஒதுங்கிவிடுவேன். 

 4. இன்று தொலைக்காட்சியில், போலீஸ் காவல் நிலையத்தில் வைத்து, க.சா காய்ச்சிய குற்றவாளியின் இரு கைகளை நீட்டச் சொல்லி ரப்பர் பைப்பால் அடிப்பதைக் காண்பித்தார்கள். அவனை, இனிச் செய்யாதே என்று சொல்லி விட்டிருக்கலாமே எனத் தோன்றியது. குற்றவாளிக்கும் தண்டனை தருவதை ஒருவர் மனது ஏன் காண விரும்புவதில்லை, கண்டால் இரக்கம் காண்பிக்க எண்ணுகிறது?

# இராணுவம் போலீஸ் துறைகளில் மனிதாபிமானம், காருண்யம் இவற்றை எதிர்பார்க்கலாகாது.  அவற்றின் வீரியம் குறைபட்டுப் போகும்.

"அடி உதவுவது போல் அண்ணன் தம்பி உதவ மாட்டான் " என்பதில் சாரம் உண்டு.  காய்த்துப் போன குற்றவியல்பினர் லேசில் திருந்த மாட்டார்கள்.  பிறர் நோவைக்காணச் சகிக்காதது மனித இயல்பு. அதனால் மட்டுமே அடி வாங்குவதற்கான நியாயம் மறைந்து விடாது.

& அரசாங்கமே டாஸ்மாக் போன்ற கடைகளைத் திறந்து விற்பனை செய்கின்ற சூழ்நிலையில், கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்களை அடிப்பது கொஞ்சம் சரியில்லைதான். அப்படிக் காய்ச்சுபவர்களை, குறைந்த சம்பளத்தில்  டாஸ்மாக் விற்பனையாளர்களாக நியமித்து, அவர்கள் பிழைத்துப்போகட்டும் என்று விடலாமா? 

5. நீதிபதிகளால் நீதியை வழங்க முடியுமா? எத்தனை நல்லவர்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள் இல்லைனா குற்றவாளிகள் தப்பித்திருப்பார்கள்?

# நீதி "வழங்குவது" என்று வந்த பின், நீதிபதிகளை விட்டால் வேறு கதி இல்லை.  சில அசம்பாவிதங்கள் தவிர, பெரும்பாலும் நீதி வழங்கப் படுவதில் குறை காண முடியாது. 

& நல்லவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ இல்லையோ குற்றவாளிகள் அரசியல் வியாதிகளுக்கு நிதி வழங்கி, நீதி பெற்றுக்கொண்டு உள்ளார்கள். 


6. மனசாட்சி என்பது என்ன?

# நாம் தவறிழைக்கும்போது "இது தப்பு.. செய்யாதே " என்று நம்முள் ஒலிக்கின்ற,  நாம் உதாசீனப் படுத்தும் -  மிக மெல்லிய குரல்தான் மன சாட்சி.

கீதா சாம்பசிவம் :

1) சிலர் வரிந்து கட்டிக்கொண்டு ஒருவர் நற்பெயரைக் கெடுத்துக்கொண்டே இருப்பதற்கு என்ன காரணங்கள்? (அரசியல் கேள்வி இல்லை.)

# ஒருவரது நற்பெயரைக் கெடுப்பது அவ்வளவு எளிதல்ல. 
அப்படி யாரேனும் விடாது முயன்றால் பொறாமை அல்லது பழி தீர்த்துக் கொள்ளும் வெறி காரணமாக இருக்கலாம்.

& நாம் நல்லவரா அல்லது கெட்டவரா என்பது நமக்குத் தெரியும். நமது நற்பெயரை மற்றவர்கள் கெடுக்க முடியாது. அவர் சொல்வதைக் கேட்டு நமக்கு நற்பெயர் அளிக்காமல் எடுத்துக்கொண்டு ஓடுபவர்களால் நமக்கு பாதிப்பும் ஒன்றும் கிடையாது. 


2) ஆண் பணி ஓய்வு பெறுவதற்கும் பெண் பணி ஓய்வு பெறுவதற்கும் என்ன வித்தியாசம்?

 # ஆண்கள் ஓய்வு பெற்றபின் மனம் விரும்பும் பலவும் செய்ய வாய்ப்புகள் உண்டு. வீட்டுப் பொறுப்புகள் காரணமாக பெண்களுக்கு அந்த அதிர்ஷ்டம் குறைவு. இதை ஆண்கள் அறியாமல் இருப்பார்களேயானால் அவர்களுக்கு கவனம் / (அறிவாற்றல்) குறைவு.

3) பணி ஓய்வு பெற்ற ஆண்கள் பெரும்பாலும் அப்பாடானு தங்களுக்குப் பிடித்ததைச் செய்து கொண்டு வீட்டில் ஓய்வு எடுத்துக்கொண்டு நிம்மதியாக இருப்பார்கள். ஆனால் பெண்களுக்கு அப்போதும் வீட்டுப் பணி தொடருமே! அதை ஆண்கள் உணர்ந்திருக்கிறார்களா?

# முன் கேள்விக்கான பதிலைப் பார்க்கவும்.

4)  மே மாதம் 3 ஆம் தேதியோடு ஊரடங்கு முடியுமா? நீட்டிக்கப்படுமா?

# ?

& ஊரடங்கு, விதிமுறைகள் எல்லாமே அரசு சொல்வதால்தான் செய்கிறோம் என்றால், அதனால் பயன் இல்லை. வீட்டுல தனித்து இருந்தால், சுத்தமாக இருந்தால் நல்லது என்று அரசு சொல்லிவிட்டது. தொடர்ந்து ஒருவாரம், நாட்டில் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை. அந்த ஒருவாரத்தில், யாரும் நோய்த் தொற்றால் மரணம் அடையவில்லை என்றால், தளர்வுகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப்படலாம். இப்போதைய கேள்வி மே மாதம் 17 ஆம் தேதியோடு ஊ மு ? நீ? 

5) கொரோனா அடங்கி இருப்பதாக நினைக்கிறீர்களா?

# சற்றே வீரியம் குறைவாக இருப்பதாக ஒரு ஊகம்.

& இன்றைய நிலையில் உலகளவில் (மெக்சிகோ, பிரேசில் தவிர மற்ற நாடுகளில்)  கொஞ்சம் குறைந்திருப்பதாகத்தான் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 

ஆனால், இந்தியாவில் மே நான்காம் தேதிதான் ஒரே நாளில் புதிய தொற்று 3932, ஒரே நாளில் அதிக மரணம் 175 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நிலைமை அடுத்த இரண்டு வாரங்களில் எப்படி ஆகின்றது என்பதைப் பொறுத்தே அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நினைக்கின்றேன். 

6)  அரசும், காவல்துறையும் இவ்வளவு கெடுபிடியுடன் இருந்தாலும் மக்கள் அதை அலட்சியம் செய்வது ஏன்?

 # அசட்டு தைரியம்,  முட்டாள்தனம். 

7)  இந்த ஊரடங்கால் தனிப்பட்ட உங்கள் வாழ்க்கையில் மாமூலான வாழ்க்கை முறை மாறி இருக்கிறதா? (எங்களுக்கு அப்படி இல்லை. தினம் அதே போல் காலை எழுந்திருந்து வீடு, வாசல் சுத்தம் செய்துவிட்டுக் காஃபி, குளியல், பின்னர் கஞ்சி, சமையல், சாப்பாடுனு அதே மாதிரித்தான். காய்கள் எல்லாம் சந்தைக்குப் போய் வாங்கி வருவார். இப்போ இங்கே அருகிலுள்ள கடை! அதான் வித்தியாசம். )

# முன்பு பாத்திரங்கள் துலக்குவதில்லை. 

& என் வாழ்க்கை முறையிலும் மாற்றம் எதுவும் இல்லை. 

8) ஊரடங்கினால் உங்களுக்கு நன்மையா, தீமையா? இல்லை எப்போதும் போலவா?

# நன்மை ஏதுமில்லை. தீமை இல்லை அசௌகரியம் கொஞ்சம் உண்டு. 


9) இணையம் மூலம் பால், காய்கள் வாங்குவதில் ஊரடங்கினால் மாற்றம் வந்திருக்கிறதா? இல்லை அப்படியே தானா?

 # பெங்களூரில் ஆன்லைன்தான் வழக்கம். 

& ஏப்ரல் மாதத்தில் முதல் இரண்டு வாரங்களுக்கு மட்டும் ஆன்லைன் ஆர்டர் செய்தது கிடைக்காமல் இருந்தது. ஹோம் டெலிவெரி இல்லை. இப்போ எல்லாம் கிடைக்கின்றன. 


10) வீட்டில் எல்லோரும் கூடி ஒன்றாகச் சாப்பிட்டுக் களித்து இருப்பதில் சந்தோஷம்தானே வரவேண்டும்? ஏன் ஆங்காங்கே சண்டைகள் வருகின்றன? லூடோ விளையாட்டில் மனைவி ஜெயித்துவிட்டதால் கணவர் அவர் முதுகை உடைத்துவிட்டாராம்! :(

# உறவுகளை நேசிப்பதற்கும் சகித்துக்கொள்வதற்கும் வேறுபாடு இருக்கத்தான் செய்யும். லூடோ சம்பவம் அரக்கத்தனத்தின் வெளிப்பாடு.

& ஒன்றாக சாப்பிட்டுக் களித்து இருந்தால் சந்தோஷம்தான். ஆனால் லூடோ / ஜூடோ எல்லாம் கூடாது. 


11) தனிமனித உரிமை என்பதை இங்கே சாப்பாட்டிலும், திரைப்படம் பார்ப்பதிலும் என நினைத்துக் கொள்கின்றனர். உண்மையில் தனி மனித உரிமை என்பது என்ன என்பதை எப்படிச் சொல்வது?

# தனிமனித உரிமைகள் அரசியல் சாசனத்தில் வரையறுக்கப் பட்டுள்ளன. இதில் கருத்துச் சுதந்திரம் சற்று விரிவாக விவரிக்கப் பட்டிருந்தால் நன்றாக இருக்கும்.

& தனிமனிதன் சொல்லும் சொல்(பேச்சு), எழுதும் எழுத்து, செய்கின்ற செயல், உண்ணும் உணவு, உடுத்தும் உடை - எல்லாமே தனிமனித உரிமைகள்தான். ஆ னா  ல் ... அதனால் மற்றொரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது.  

========================================


122 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்.

  பதிலளிநீக்கு
 2. மரவற்க மாசற்றார் கேண்மை துறவற்க துன்பத்துள் துப்பாயார் நட்பு..

  நலமே வாழ்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆஹா... எப்போதும் பெரும்பாலானவர்கள் மனது மட்டும் மாசற்றாரின் உறவை மறந்துவிடுகிறதே.

   துன்பத்துள் துப்பாயவர்களுடைய நட்பைத் துறந்தவர்களுக்குத்தான் வள்ளுவர் மண்டையில் அடித்த மாதிரி,

   எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
   செய்நன்றி கொன்ற மகர்க்கு

   என்று சொல்லிவிட்டாரே

   நீக்கு
 3. இன்றைக்கு கேள்வி கேட்டவர்களும் இருவர். பதில் சொன்னவர்களும் இருவர். இது யதேச்சையாக நிகழ்ந்ததா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா.்்்். ஹா....

   இருக்கலாம்.

   நீக்கு
  2. நாம் இருவர் என்று கேள்வி கேட்டனர்; அதற்கு (ந)மக்கு இருவர் பதில் சொல்லிவிட்டார்கள் போலிருக்கு!

   நீக்கு
 4. தனிமனித உரிமை - & சொல்கிறார், அதனால் சமூகத்துக்கு கேடு விளையக்கூடாது என்று. அப்போ பெரும்பாலான திரைக்கதை ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தொடர் சம்பந்தப்பட்டவர்கள் தனி மனித உரிமையை மீறுகிறார்கள் என்று சொல்கிறாரா?

  அடுத்தவர் உரிமையில் தலையிடாத அல்லது பாதிக்காத வரையில் நாம் என்ன வேண்டுமானாலும் செய்வது தனிமனித உரிமைதானே

  அனுஷ்கா கவர்ச்சிப் படத்தை வெளியிட்டு அடுத்தவர் மனது கெட்டார் அது தனிமனித உரிமை மீறலாகாதா? ஹா ஹா ஹா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனுஷ்கா கவர்ச்சிப்படம் - தப்பு!

   அனுஷ்கா அழகுப் படம் - சரி!!!

   நீக்கு
  2. // மற்றொரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்த பாதிப்பும் வரக்கூடாது. // இதுதான் & சொன்னது. // திரைக்கதை ஆசிரியர்கள், தொலைக்காட்சித் தொடர் சம்பந்தப்பட்டவர்கள் தனி மனித உரிமையை மீறுகிறார்கள் என்று சொல்கிறாரா?// இல்லை. அவர்கள் வாங்குகின்ற காசுக்கு எதையோ சொல்கிறார்கள். அதை சினிமாவாகவோ, அல்லது ஏதோ ஒரு தொடராகவோ பார்த்து ரசிக்கவோ அல்லது சபிக்கவோ செய்யலாம். ஆனால், சினிமா / தொலைகாட்சி வேறு, நம் வாழ்க்கை வேறு என்று பகுத்தறிந்து நடந்துகொள்வதே அறிவுடைமை.

   நீக்கு
 5. நல்ல சுவாரஸ்யமாக இருந்தது கேள்வி பதில்கள்.

  பதிலளிநீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  நன்றாக யோசித்துக் கேட்கப்பட்ட கேள்விகள்.

  அதே போல நிதானமாக அளிக்கப் பட்ட பதில்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லைத்தமிழனின் திருமணம் சம்பந்தப்பட்ட
   கேள்விக்கு நல்ல பதில் அவருக்கே அதே அனுபவம் இருக்கும்.
   பெண்ணும், ஆணும் மாறத்தான் செய்கிறார்கள்.
   அன்பு மட்டும் அடி நாதமாக இருந்தால்
   ஈகோ மெல்ல மெல்ல மறையும்.
   மறையாவிட்டால் முரண் எழத்தான் செய்யும்.

   நீக்கு
  2. ஊரடங்கினால் இங்கே உள்ளவர்களின் வாழ்க்கை நிறைய மாறி இருக்கிறது.
   சில பேர் ஒழுங்காக நடந்து கொள்ளாததால்
   தொற்று அதிகரித்திருக்கிறது.
   அதற்காகவே நாம் நிறைய கட்டுப்பாடுடன் இருக்க வேண்டி வருகிறது.

   நீக்கு
  3. // நன்றாக யோசித்துக் கேட்கப்பட்ட கேள்விகள்.

   அதே போல நிதானமாக அளிக்கப் பட்ட பதில்கள்.// இரசித்துக் கூறிய கருத்துரைக்கு நன்றி.

   நீக்கு
 7. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மனதில் கவலை அதிகம் ஆகிக் கொண்டிருக்கிறது. நம் மக்கள் ஏன் சொன்னபடி கேட்பதில்லை, இதில் என்ன கஷ்டம் அவர்களுக்கு என்பதே புரியவில்லை. விரைவில் அனைத்தும் சரியாகப் பிரார்த்திக்கிறோம். தமிழ்நாடு கொரோனா பாதிப்பு விஷயத்தில் நான்காம் இடத்தில் இருக்கிறது. விரைவில் அனைவருக்கும் பிரச்னைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 9. இந்தக் காய் பிடிக்கும், இந்தக் காய் பிடிக்காது என்பது மரபணு சம்பந்தப்பட்டது என்றே நினைக்கிறேன். என்னுடைய கசின்கள் அனைவருக்கும் (எங்களுக்கு அடுத்த தலைமுறை) எங்களுக்குப் பிடித்திருக்கும் அதே சமையல் வகைகள் பிடிக்கின்றன. கத்திரிக்காய்க் கூட்டு+மோர்க்குழம்பு அநேகமாக எங்க குடும்பத்தில் யுனிவர்சல்!:)))) அதே போல் என் பெண்ணுக்கும் எனக்கும் குறிப்பிட்ட சில உணவு வகைகள் பிடிக்கும். ஆனால் அநேகமாக அவள் விருப்பம் என் கணவரின் விருப்பத்தோடு ஒத்துப் போகும். அதே சமயம் பிள்ளைக்கு நான் சாப்பிடும் முறைகள், என்னுடைய விருப்ப உணவுகள் பிடித்தமானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வளர்ப்பு முறையால் வந்த பழக்கங்கள். என் அம்மா நான் பள்ளிக்கூட பருவத்தில் இருந்தபோது, உனக்கு நீரூற்றிய பழையது ஒத்துக்கொள்ளாது ஜலதோஷம் பிடித்துக்கொள்ளும் - அதனால் உனக்கு சுடுசாதம் போடுகிறேன் என்று சொல்லி அவ்வாறே வளர்த்தார்கள். பின் நாட்களில் பையன் படிப்பு செலவுக்காக சிக்கன நடவடிக்கைகளை நானும் என் மனைவியும் மேற்கொண்டபோது, சற்றேறக்குறைய நான்கு ஆண்டுகள் காலை டிபன் என்பதே நீரூற்றிய பழைய சாதத்தில் உப்பு, மோர் கலந்து சாப்பிட்டு அலுவலகம் சென்றது உண்டு. அந்தக் கால கட்டத்தில் நீரூற்றிய பழையது எனக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதைத் தெரிந்துகொண்டேன்.

   நீக்கு
  2. இது வேறு. நெல்லை கேட்டிருப்பது வேறு என்றே எண்ணுகிறேன். என் அப்பாவும் எங்களுக்குப் பழங்களோ, காய்களோ எதுவும் வாங்கிக் கொடுத்ததில்லை. இந்தக் காய் வாயு, அந்தக் காய் வயிற்றுப் போக்கு வரும், இது நாமெல்லாம் சாப்பிடக்கூடாது என்றே சொல்லுவார். அதே போல் பழங்களும். மாம்பழமெல்லாம் ஒரு துண்டு சாப்பிட்டிருந்தால் அதிகம். முதல் முழு மாம்பழம் பதினைந்து வயதில் சின்னமனூரில் என் சித்தி வீட்டில் சாப்பிட்டேன். எதுவும் பண்ணவில்லை. அப்போத் தான் புரிந்தது, இதெல்லாம் வாங்கினால் செலவு என அப்பா வாங்கிக்கொடுக்கவில்லை என்பது. பின்னர் காய்களும் தாத்தா வீட்டில், பெரியப்பா வீடுகளில், சித்தி வீடுகளில் நன்றாகவே சாப்பிட்டிருக்கோம். எதுவும் பண்ணவில்லை.

   நீக்கு
  3. ஆஸ்த்மாவோ, அடிக்கடி ஜூரம் வந்து படுத்தாலோ பழையது வேண்டாம் என்பார்கள். அந்தக் காரணத்தினால் உங்க அம்மா சொல்லி இருக்கலாம். அம்மாவுக்குத் தன் குழந்தை மீது அக்கறை இருப்பது சகஜம் தானே! ஆனால் நானெல்லாம் முழுக்க முழுக்கப் பழையதிலேயே வளர்ந்தவள். பல நாட்கள் பள்ளிக்குக் கூடப் பழைய சாதம் மோர் விட்டுப் பிசைந்து மாவடுவோடு எடுத்துச் சென்றிருக்கிறேன். அதே உடம்பு சரியில்லை எனில் பழையது சாப்பிடக் கொடுக்க மாட்டார்கள். இது மரபணுவோடு சம்பந்தப்பட்டதல்ல. விருப்பங்கள், சாப்பாடில் பிடித்தங்கள் மரபணு சம்பந்தப்பட்டது என்றே எனக்குத் தோன்றும். எங்க குஞ்சுலுவுக்கும் இப்போ முறுக்கு, தட்டை, சீடை, தேன்குழல் எல்லாம் பிடிக்கும். ஆனால் அதே சாதம் என்றால் சாப்பிடாது. இது எங்க பெண்ணிடம் இருந்த குணம். சாதம் சாப்பிடுவது எனில் அவளுக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கும். கல்யாணம் ஆகிப் போன பின்னர் தான் அவள் சாதமே சாப்பிட ஆரம்பித்திருக்கிறாள். இங்கே இருந்தவரை, சப்பாத்தி, இட்லி, தோசை, அடை தான். சாதம் எனில் புளியஞ்சாதம், எலுமிச்சை சாதம், வெஜிடபுள் சாதம், புலவு போன்றவை தான். சர்க்கரைப் பொங்கல் சாப்பிடுவாள். கிட்டத்தட்டக் குஞ்சுலுவும் அப்படித் தான் இருப்பாளோ என நினைக்கிறேன்.

   நீக்கு
 10. திருமணம் ஆன புதிதில் பெண் புதியவள் அந்தச் சூழ்நிலைக்கு. கணவனோ பழக்கப்பட்டவன். ஆகவே அவன் கொஞ்சம் அதிகாரத்துடன் தனக்குக் கீழ்ப்பட்டவள் இந்தப்பெண் என்னும் எண்ணத்துடன் நடந்து கொள்கிறானோ? அதன் பின்னர் வருடங்கள் ஏற ஏறப் பெண்ணின் முக்கியத்துவம் கிட்டத்தட்ட ஆதிக்கமாக மாறிவிடுகிறது. அவளே எல்லாம் என ஆகிவிடுகிறது. அப்போது கணவன் தான் அவளுக்குக் கீழ்ப்பட்டவன் என ஆகிவிடுகிறானோ?

  பதிலளிநீக்கு
 11. ஆனாலும் கடைசிவரையிலும் தன் அகங்காரத்தைக் குறைத்துக்கொள்ளாமல் மனைவி தனக்குக் கட்டுப்பட்டவள் என எண்ணும் ஆணை எதில் சேர்ப்பது? தனக்கு வேண்டிய ஒவ்வொன்றுக்கும் பெண் கையேந்த வேண்டும் என எதிர்பார்க்கும் ஆண்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த வாரத்துக்கு கேள்விகளா?

   நீக்கு
  2. ஆமாம் அடுத்த வாரத்துக்குத் தான், சில நாட்களாகச் சில பெண்களின் நிலை பற்றிக் கேள்விப்படும் விஷயங்கள் மனதுக்கு உகந்ததாக இல்லை. :( இன்னமும் பெண்ணை/குறிப்பாக மனைவியைத் தன் அடிமை என நினைக்கும் ஆணை என்ன சொல்வது?

   நீக்கு
  3. இந்த பதில்கள் கிடைப்பதால் அந்தப் பெண்களுக்கு விடிவு கிட்டப் போவதில்லை. என்றாலும் பொதுவான ஆண் மனம் குறித்த ஒரு பார்வை கிடைக்கும். அவ்வளவே! மனைவியை அதிலும் உடல்நலம் குறைந்த மனைவிக்குப் பணிவிடை செய்யும் ஆணை, அதிலும் வருஷக்கணக்காக அலுத்துக்கொள்ளாமல் செய்யும் ஆணையும் பார்த்து வருகிறேன். நினைத்து நினைத்து நாங்கள் இருவரும் வியந்து கொள்வோம்.

   நீக்கு
  4. //பெண்ணை/குறிப்பாக மனைவியைத் தன் அடிமை என நினைக்கும்// - இந்தக் காலம் மலையேறிப் போயாச்சே. முந்தைய ஜெனெரேஷன் வேணுமானால் அப்படி இன்னும் நடந்துகொண்டிருக்கலாம்.

   கீசா மேடம்... அப்படிப்பட்ட ஆணுக்கு, வெளிநாட்டு வேலை, குறிப்பாக மேற்கத்தைய நாடுகளில் வேலை கிடைக்கணும் என்று ப்ரார்த்தித்துக்கொள்வதுதான் தீர்வு.

   நீக்கு
  5. உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம் நெல்லை. ஆனால் என் நெருங்கிய தோழி ஒருத்தி சிலநாட்கள் முன்னர் பேசும்போது கூடச் சொன்னாள். ஒவ்வொன்றுக்கும் கணவன் அனுமதி தேவையாக இருக்கிறது என்று. 30 வயதில் பிள்ளை இருக்கிறான். ஆனாலும் அவன் தலையிட முடியாது. அவன் இங்கேயும் இல்லை. வெளிநாட்டில் இருக்கிறான். இருந்தாலும் ஒன்றும் சொல்ல முடியாது! ஏன்! தோழிக்கே அப்பா இருக்கார். ஆனால் அவரும் தலையிட முடியாது! இப்படியும் சிலர் இன்னமும் இருக்காங்க நெல்லை!

   நீக்கு
 12. வணக்கம் சகோதரரே

  கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை,

  ஒவ்வொரு கேள்விகளுக்கும் பொறுமையாக அதற்கு தகுந்தவாறு பதில் அளிக்கும் எ.பி ஆசிரியர்களின் திறமையை பாராட்ட வார்த்தைகளில்லை. அதே போல மடக்கி, மடக்கி இன்றைய கேள்விகளை தொடுத்த சகோதரர் நெல்லைத் தமிழருக்கும். சகோதரி கீதா சாம்பசிவம் அவர்களுக்கும் என் வியப்பான பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேள்வி கேட்டவர்கள் சார்பிலும், பதில் சொன்னவர்கள் சார்பிலும், பாராட்டியவருக்கு நன்றி பகிர்கிறோம்.

   நீக்கு
 13. கேள்வி பதில்கள் - ம்ம்ம். இன்றைக்கு ___________ சம்பந்தப்பட்ட கேள்வி/பதில்களே அதிகமாக இருக்கிறதே!

  வீட்டுப் பச்சிலைக்கு வீரியம் கம்மி! :)

  பதிலளிநீக்கு
 14. திருமணம் ஆன காலத்தில் ஆணுக்கு இருக்கும் ஈகோ, வயது ஆக ஆக மறைந்து அட்ஜஸ்டபிளாக மாறிவிடுகிறதா?
  ///
  26 வருசமாச்சு. இன்னும் எங்களுக்குள் ஈகோ போகலை. ஆனா, இருவருக்கும் புரிதல் உண்டு. மிகச்சரியா என் மனசில் இருக்குறதை தெரிஞ்சுக்கிட்டு அதுக்கு நேர்மாறதான் மாமா நடப்பாரு:-(

  பதிலளிநீக்கு
 15. //நாம் தவறிழைக்கும்போது "இது தப்பு.. செய்யாதே " என்று நம்முள் ஒலிக்கின்ற.. //

  என்ன அவ்வளவு ஈஸியா சொல்லீட்டீங்க?.. குரல் ஒலிக்கும் என்கிறீர்கள்?.. அந்தக் குரல் ஒலிக்க சம்பந்தப்பட்டவருக்கு தப்பு - ரைட்டில் நியாயம் பார்க்கிற அடிப்படை தகுதி வேண்டாமா?..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது நியாயமாகத் தோன்றினாலும், ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாஷை அல்லது குறியீடு மூலம் மனசாட்சி அறிவுறுத்தும் - அது அவரை கண்டித்து வளர்த்த அன்னை முகமாகவோ அல்லது இடித்துரைக்கும் நண்பனின் முகமாகவோ கூட இருக்கலாம். சிலருக்கு அவர்களின் மனைவி முகம் தோன்றி அப்பளக்குழவி காட்டக்கூடும்!

   நீக்கு
  2. நீங்கள் சொல்வது சரிதான் கௌதமன் சார். தப்புச் செய்யாதே என மனசாட்சி உறுத்தல் சின்னச் சின்ன விஷயங்களில் கூட வரும்.

   நீக்கு
  3. //ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாஷை அல்லது குறியீடு மூலம்// - அது எப்படி? எனக்கு எப்போதுமே 'அவர் என்ன நினைப்பாரோ, அப்பா இப்படிச் சொல்லித்தந்திருக்கிறாரே' என்றெல்லாம் தோணாது. யார் முகமும் மனக்கண்ணில் வந்ததில்லை. என் மனதில் 'நீ செய்வது தவறு', 'இது துரோகம்' என்று தோன்றும். நம் அப்போதைய நிலைக்கு ஏற்ப, அதைக் கேட்பது, கேட்காமலிருப்பது என்று நடப்பேன். செயலுக்குப் பிறகும் மனசாட்சி, 'செய்தது தவறு' என இடித்துரைக்கும். தவறை உணர்ந்தால் அதனைச் சரி செய்யும் வழியைப் பார்ப்பேன்.

   ஒவ்வொரு உயிருக்குள்ளும் 'ஆத்மா' என்பது உயர்ந்த குணம் கொண்டது. முழு கெட்டவன், நல்லவன் என்று யாரும் கிடையாது. அந்த நல்ல குணம், நமக்கு எது சரி எது தவறு என்பதைக் காட்டும்.

   நீக்கு
  4. //சம்பந்தப்பட்டவருக்கு தப்பு - ரைட்டில் நியாயம் பார்க்கிற அடிப்படை தகுதி வேண்டாமா?..// - இது எனக்குப் புரியவில்லை. சிறு குழந்தைகளுக்கு இது பொருந்தாது. ஆனால் அடல்ட் என்ற தகுதியை அடைந்தவர்களுக்கு மனசாட்சி உண்டு. 'நியாயம்' என்பது வேறு, 'தவறு' என்பது வேறு. பழிக்குப் பழி என்பது நியாயமாக இருக்கலாம். ஆனால் அது தவறு. நம் மனசாட்சி அதனைக் காட்டிக்கொடுக்கும்.

   நீக்கு
  5. அடிப்படைத் தகுதி, தப்பு, சரி என்பதில் இருக்கணும்னா யாருக்குமே அது கிடையாது. எனக்குத் தப்பு என்றால் இன்னொருவருக்கு அது சரியாக இருக்கும். எனக்குச் சரி எனப் படுவது இன்னொருவருக்குத் தவறாகவோ/தப்பாகவோ தோன்றும். இதில் எல்லாம் அடிப்படைத் தகுதியை நிர்ணயிப்பதே முடியாத ஒன்று..

   நீக்கு
  6. அதே போல் மனசாட்சி உறுத்தலால் பழி வாங்கப்படுவது நிற்பதும் உண்டு. சம்பந்தப்பட்டவர் இறைவன் பார்த்துப்பான் என ஒதுங்கி விடுவார். மனசாட்சி என்பது எல்லோருக்குமே உண்டு. ஒரு சிலர் அதற்குக் கட்டுப்படுகிறார்கள். பலர் கட்டுப்படுவதில்லை.

   நீக்கு
 16. எதை எழுதினாலும் (அது கற்பனைக் கதையாக இருந்தாலும்) பொதுவாக வைத்துப் பார்க்காமல் அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! இது என்ன பிளாக்கர் நோயா?..

  (கதாநாயகி ஏஸி போட்டுக் கொண்டு ஃபேன் ரெகுலேட்டர் குமிழையும் திருப்பினாள் என்று ஒரு கதையில் எழுதினால், பின்னூட்டத்தில் ஏஸி போட்டுக்கொண்டால் நான் ஃபேனைப் போட்டுக் கொள்ளும் பழக்கமில்லை என்று சொல்வது)

  பத்திரிகை வாசிப்பு மாதிரி பொது வாசிப்பு என்ற பயிற்சிக்கு பிளாக்கர் உலகில் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. விபரீதமான கேள்வியா இருக்கே! அடுத்த வாரத்துக்கான கேள்வியா!

   நீக்கு
  2. விபரீதம் இல்லை. ப்ளாக்கர் உலக வாசிப்பில் பயிற்சி பெற வேண்டியதற்கான பதிலுக்கான கேள்வி.

   ஆரம்பத்தில் இன்றைய வாட்ஸாப் மாதிரி ஒருவொருக்கொருவர் மற்றும் ஒரு குழுவினர் தங்களுக்குள் பேசிக் கொள்கிற மாதிரி இணைய உலகம் இருந்த காலத்தில் ஆரம்பித்த பழக்கம் இன்றும் தொடர்கிறது. அவ்வளவு தான்.

   இப்பொழுதோ புத்தக வாசிப்பு உலகம் மாதிரி இணைய எழுத்துக்கள் மாறி விட்ட காலம். அதனால் தான் அதற்கான வாசிப்பு பயிற்சி நம்மிடையே வேண்டும் என்பதற்காகக் கேட்கிறேன்.

   நீக்கு
  3. இது நாமெல்லோரும் பெற வேண்டிய பயிற்சி ஆகையால் கேள்வி - பதில் மாதிரி இல்லை. உங்கள் கருத்து அல்லது ஆலோசனையை பதியுங்கள். இந்த வாரமோ, அடுத்த வாரமோ. உங்கள் செளகரியப்படி.

   நீக்கு
  4. இதெல்லாம் சொல்லிக் கொடுத்தோ, ஆலோசனைகள் கேட்டோ வரக்கூடியது அல்ல. ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு விருப்பம். அதற்கேற்பத் தேர்ந்தெடுத்துப் படிப்பார்கள். அதை ஒட்டியே அவங்க கருத்தையும் பகிரலாம். நாம் எதிர்பார்க்கும் கருத்தையே சொல்லணும்னு கூற முடியுமா? மேலும் ஒரு பதிவு எனில் அதன் முக்கியக்கரு மட்டுமின்றி ஒரு சிலரின் கருத்தை ஒட்டியும் மேற்கொண்டு பேச்சு வார்த்தைகள், கருத்துப் பரிமாற்றங்கள் தொடரும். இப்போ உங்க கருத்துக்கு நான் பதில் சொல்வது போல்! பலரும் வரும் இம்மாதிரி இடங்களில் இதெல்லாம் தவிர்க்க முடியாது. நமக்கு உயர்ந்த படிப்பு அனுபவம் இருக்கலாம். பலருக்கு அது இல்லாமல் இருக்கலாம். ஆகவே வாசிப்பு அனுபவம் இருந்தால் தான் கருத்துப் பரிமாற்றம் என்று எதிர்பார்க்க முடியாது.

   நீக்கு
  5. நீங்க எ.பி. ஆசிரியர் குழுவைத் தான் கேட்டிருக்கீங்க. ஆனால் நான் குறுக்கிட்டு பதில் சொல்லி இருக்கேன். எனக்குத் தெரிந்தவரை எ.பி.ஆசிரியர் குழு ரொம்பவே தீவிரமாக எதையும் எடுத்துக்கொள்ள மாட்டாங்க என்றே எண்ணுகிறேன். நட்புக்கும், கலந்துரையாடலுக்கும், சில மணி நேர மன மகிழ்ச்சிக்காகவுமே பதிவுகளுக்கு வருகிறார்கள். வெளியிடுகிறார்கள். பதில் சொல்லுகிறார்கள். அவர்களின் முக்கிய நோக்கம் நட்பைப் பேணுவதே என்பது என் சொந்தக் கருத்து. மாறுபட்ட கருத்து இருக்கலாம். மன்னித்து விடுங்கள். _/\_

   நீக்கு
  6. // அவர்களின் முக்கிய நோக்கம் நட்பைப் பேணுவதே என்பது என் சொந்தக் கருத்து.// முற்றிலும் சரி.

   நீக்கு
  7. (கீழ்க்கண்ட என் கேள்விக்கு மேற்கண்ட உங்கள் பதில். சரி. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.. இருக்கவே இருக்கு கெள அண்ணன் சொல்லக்கூடிய பதில்)

   எதை எழுதினாலும் (அது கற்பனைக் கதையாக இருந்தாலும்) பொதுவாக வைத்துப் பார்க்காமல் அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! இது என்ன பிளாக்கர் நோயா?..

   (கதாநாயகி ஏஸி போட்டுக் கொண்டு ஃபேன் ரெகுலேட்டர் குமிழையும் திருப்பினாள் என்று ஒரு கதையில் எழுதினால், பின்னூட்டத்தில் ஏஸி போட்டுக்கொண்டால் நான் ஃபேனைப் போட்டுக் கொள்ளும் பழக்கமில்லை என்று சொல்வது)

   பத்திரிகை வாசிப்பு மாதிரி பொது வாசிப்பு என்ற பயிற்சிக்கு பிளாக்கர் உலகில் என்ன செய்யலாம்? சொல்லுங்கள்...

   நீக்கு
  8. //முற்றிலும் சரி.//

   நட்பைப் பேணுவதற்கும் நான் கேட்ட கேள்விக்கும் என்ன சம்பந்தம் சார்?..

   நீக்கு
  9. //அதில் தன்னைப் பொருத்தி பலர் பார்க்கிறார்களே! // - இப்படிப் பார்க்கமாட்டாங்க யாரும். உங்க உதாரணத்துல, பின்னூட்டம் இடறவங்க, தங்கள் பழக்கத்தைச் சொல்வாங்களே தவிர அது கதையில் தன்னைப் பொருத்திப் பார்ப்பதாக ஆகாது. உங்க சமீப கதையிலும், 'ஒருவர் இன்னொரு பெண்ணிடம் தன் விருப்பத்தைச் சொல்ல, தன்னுடன் வேலை பார்க்கும் இன்னொரு பெண்ணைத் தூது போகச் சொல்கிறார்' என்பதைப் படித்ததும், பின்னூட்டத்தில் 'அது எப்படி தன் காதலுக்கு இன்னொரு பெண்ணைத் தூதுவிடுவது? அசட்டுத்தனமா இருக்கே' என்று எழுதியிருப்பேன். ஆனா 'கதாபாத்திரம் அப்படி தூது அனுப்பியிருக்கான். அதில் எனக்கு என்ன பிரச்சனை' என்று யோசிப்பதில்லை. இப்படி நம்ம கருத்தை எழுதலைனா, பின்னூட்டம் நம் எண்ணவோட்டத்தைக் கொண்டிருக்காது. 'அருமை', 'தொடர்கிறேன்', 'நன்றாக இருந்தது' என்று ஸ்டாண்டர்ட் டெம்ப்ளட் ஆக ஆகிவிடும்.

   பத்திரிகை வாசிப்பு மாதிரி பொது வாசிப்பு என்ற பயிற்சி - அப்படி ஒரு பயிற்சி கிடையாது என்பது என் அபிப்ராயம். உதாரணமா தி.ஜ என்றொரு எழுத்தாளர் அட்டஹாசமா எழுதுவார் என்பது பொதுவான கருத்தா இருக்கலாம். ஆனால் எனக்கு அவர் எழுத்து பிடிக்காமல் இருக்கலாம். 'தி.ஜ எழுதியிருக்கும் இதனை அப்ரிஷியேட் பண்ணணும், இந்த மாதிரி நிகழ்வுல அவர் எந்த மாதிரி எழுதியிருக்கார் என்பதை அனுபவிக்கணும்' என்றெல்லாம் சொல்வதற்கு, 'தி.ஜ' புத்தகங்களில் நாம் எக்சாம் எழுதப்போவதில்லை. வாசிப்பு என்பதே, நேரத்தை பயனுள்ள வகையிலோ இல்லை மனதை ரிலாக்ஸ்டாக வைத்துக்கொள்வதற்கோதான். இராமாயணம், மஹாபாரதம் இரண்டும் அட்டஹாசமான இதிகாசங்கள்தான். ஆனால் தொலைக்காட்சியை ஆன் செய்தவுடன் என் விருப்பம், 'சிரிப்பொலி', 'பாலிமர் செய்திகள்', கிரிக்கெட் அல்லது டிஸ்கவரி சேனல் போன்றவை. இன்னொன்று, இந்த மாதிரி பொழுதுபோக்கு விஷயங்களில் இப்படித்தான் இருக்கணும் என்ற 'சட்டத்தை' யாரும் விரும்ப மாட்டார்கள்.

   நீங்கள் சொல்வது கிட்டத்தட்ட 'எ.க.எ' என்ற குமுதம் தொடர் போல. எகஎ படித்துவிட்டு யாரும் கதை எழுத ஆரம்பிப்பதில்லை.

   நீக்கு
  10. ப்ளாக் படிப்பவர்கள் எந்தப் பதிவுக்கும், அந்தப் பதிவு தன்னுள் ஏற்படுத்திய தாக்கம் குறித்து கருத்து பதிவு செய்யலாம். அது வரவேற்கப்படவேண்டியதே. ஆஹா ஓஹோ பேஷ் பேஷ் வகை கடிதங்களை மட்டுமே விகடன் போன்ற பத்திரிக்கைகள் வெளியிட்டு வந்த நாட்களில் குமுதம் ஆசிரியரைக் திட்டி, கேலி செய்து வந்த கடிதங்களையும் வெளியிட்டு, புரட்சி செய்தார்கள்.

   நீக்கு
  11. நெல்லை என் மனதைப் படித்துவிட்டு எழுதுகிறார். ஒரு கதையை விமரிசித்தால் அதில் பொதுவான சில குறைகளைச் சொல்லுவோம். அதை நம்முடன் பொருத்திப் பார்த்துக்கொள்வது என்றெல்லாம் பொருள்படாது. எந்த இடத்திலும் நம்மைப் பொருத்திப் பார்த்துக்கொள்ளவே முடியாது. நம் அனுபவத்தை அதிலும் அந்தக் கதைக்கு அதில் சம்பந்தம் இருப்பது தெரிந்தால் மட்டுமே சொல்ல முடியும்.

   நீக்கு
 17. //இந்தக் காய் பிடிக்கும் இது பிடிக்காது, இந்தப் பழம் பிடிக்கும் என்பதெல்லாம் எங்கிருந்து வருகிறது? Geneலிருந்தா?//geneக்கும் முக்கிய பங்கு உண்டு என்றுதான் தோன்றுகிறது. எங்கள் அக்காவின் கணவர் சிறு வயதில் தயிர்,மோர் சாப்பிட மாட்டாராம். அந்த பழக்கம் அவர்கள் வீட்டில் பல குழந்தைகளுக்கு உண்டு. என் மகன் பழங்கள் சாப்பிட மாட்டான். குறிப்பாக ஆப்பிளும், வாழைப்பழமும் இருக்கும் இருக்கும் பையைக் கூட தொட மாட்டான். அதே பழக்கம் என் கணவரின் சித்தப்பா பேரனுக்கும் உண்டு என்று தெரிந்து ஆச்சரியமாக இருந்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்யமான தகவல்கள். நன்றி!

   நீக்கு
  2. இதுமட்டுமல்ல! ஒரு சில உடல் மொழிகளும் அப்பா, அம்மாவையோ அவங்க உறவுகளையோ ஒத்திருக்கும். எங்க பெரிய பேத்தி எங்க பையர் மாதிரி நடப்பாள். அவங்க அப்பா மாதிரி உடல் மொழி! எங்க பேத்தி குட்டிக் குஞ்சுலு எங்க மாமியார் மாதிரி உட்காரும். நம்ம ரங்க்ஸ் மாதிரி பின்னால் கையைக் கட்டிக் கொண்டு நடக்கும்.

   நீக்கு
  3. நாம பேசுவது, பதில் சொல்வது போல பசங்க செய்தா அது அப்சர்வேஷன்ல வருதுன்னு சொல்லலாம். நம்ம குணம், அப்பா/அம்மா அப்புறம் மனைவி சைடு இதிலுள்ள குணம்லாம் கலந்துகட்டி வருவதைப் பார்க்கும்போது ஜீன்ல இந்த விஷயம்லாம் இருக்குன்னு தோணுது. உடல்மொழியும் சில சமயம் என்னை ஆச்சர்யப்படுத்தும்.

   நீக்கு
 18. ரொம்பவே தீவிரமான ஒரு கேள்வி. நேற்றும், முந்தாநாளும் இந்த மதுக்கடைகளைப் பக்கத்து மாநிலங்களில் திறப்பது பற்றிக் கேள்விப் பட்டுத் தமிழக மன்னாதி மன்னர்கள் பலரும் போய் வரிசையில் நின்றிருக்கிறார்கள். கூடவே பல அரசிகளும்! அவர்களில் இளவயதுப் பெண்கள் அதிகம். இது சரியா? இதனால் எதிர்காலத்தில் வரப்போகும் தலைமுறைக்கு ஏற்படப் போகும் ஆபத்து நினைத்தால் கலக்கமாக இருக்கிறதே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கூடவே பல அரசிகளும்! அவர்களில் இளவயதுப் பெண்கள் அதிகம். இது சரியா? இதனால் எதிர்காலத்தில்/

   அக்கா அந்த பெங்களூர் கடை வாசல் போட்டோவை பார்த்திங்களா :) எனக்கு முதலில் ஒன்னும் புரியலை அப்புறம் கடைப்பேரை டைப்பினதும்தானா தெரிஞ்சது ஹையோ ஹயோ ..எங்கே போகும் பாதை :( 

   நீக்கு
  2. எபி ஆசிரியர்கள் இதுக்கு என்ன பதில் சொல்றாங்கன்னு பார்க்கிறேன். என் அனுபவத்தைச் சொல்றேன்.

   எங்கள் கம்பெனி பிஸினெஸ் ஹெட் (நான் கணிணித்துறை ஹெட்) லண்டலின் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது (அங்கு ஒரு இரவு தங்கும்போது ஒரு வைன் பாட்டில் இலவசமா தருவாங்க, ஒரு நாளைக்கு) என்னுடைய டோக்கன்களை வீணாக்காமல் விருப்பப்படும் அவரிடம் தருவேன். அவர் சிந்தி. அவர் என்னிடம், என் மனைவியும் இப்போ அவ்வப்போது குடிக்கறாங்க, என்னிடம் வாங்கிவரச் சொல்றாங்க, என்ன செய்யறதுன்னு யோசிக்கிறேன் என்றார். நான் அவரிடம், 'நீங்க குடிக்கிறீங்க இல்லையா. அப்போ மனைவி ஆசைப்பட்டால், அதைமட்டும் எப்படித் தடுக்கலாம்? இது நல்ல பழக்கம் இல்லைனு நீங்க நினைச்சால் நீங்கதான் நிறுத்திக்கணும். நீங்க குடிப்பீங்க, ஆனால் மனைவி குடிக்கக்கூடாது என்று நினைப்பது எப்படி சரியாகும்'' என்றேன்.

   ஒழுக்கம் இருபாலாருக்கும் ஆனது. கற்பு எப்படி பொதுவோ அதுபோல ஒழுக்கமும் இருவருக்கும் பொதுதான்.

   அடுத்த கேள்வி, எது 'ஒழுக்கம்', எது 'கற்பு' என்று வந்தால், 'நீரளவே ஆகும் நீராம்பல்' என்பதைத்தான் நான் சொல்லிக்காட்டமுடியும்.

   நீக்கு
  3. /அக்கா அந்த பெங்களூர் கடை வாசல் போட்டோவை பார்த்திங்களா :)//  நீங்கள் புகைப்படத்தை பார்த்து விட்டு சொல்கிறீர்கள், என் மருமகள் நேரிலேயே பார்த்து விட்டு அதிர்ச்சி அடைந்தாளாம். அவ்வளவு நீண்ட வரிசையைப் பார்த்ததும் ஏதோ மளிகை சாமான்கள் வாங்குவதற்காக நிற்கிறார்கள் என்று நினைத்தாளாம், கடையின் பெயர்  பலகையை பார்த்துத்தான் லிக்கர் ஷாப் என்று தெரிந்திருக்கிறது. 
   அதிர்ச்சிதான். 

   நீக்கு
  4. @ பானுக்கா ..எனக்கு ஊரில் என்ன கடை வந்திருக்கு இல்லாம போச்சு ஒண்ணுமே தெரியாதுக்கா :) அந்த spirit  கூட தப்பா வாசிச்சிட்டு குழம்பினேன் esprit பிராண்ட் போலன்னு அதுவும் ஒரு பொண்ணு உடை வேறே  அல்டரா மாடர்னா இருந்துச்சா (சாமீ நான் ட்ரஸ் பத்தி ஒன்னும் சொல்லலை ) 

   நீக்கு
 19. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஆண்/பெண்கள் மது இல்லாமல் தங்களால் இருக்க முடியாது என்று நடந்து கொள்வது சரியா?

  ஒரு பக்கம் சின்ன எழுத்துக்களில் குடி உடல் நலத்துக்குக் கேடு என்று சொல்லிவிட்டு இன்னொரு பக்கம் மதுக்கடைகளைத் திறந்து உட்கார்ந்து குடிக்க வசதியும் செய்து கொடுக்கும் அரசு மக்களுக்கு நன்மை செய்கிறதா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான ஆண்/பெண்கள் மது இல்லாமல் தங்களால் இருக்க முடியாது என்று நடந்து கொள்வது சரியா?//பையனுக்கு பெண் தெடிக் கொண்டிருக்கும் என் தோழியின் அனுபவம். ஒரு பெண்ணின் குடும்பம், அந்தஸ்து, படிப்பு எல்லாம் இரு வீட்டாருக்கும் பிடித்து நிச்சயம் செய்யலாம் என்று முடிவு எடுத்த பொழுது, அந்தப் பெண் என் சினேகிதியின் மகனை  தொலை பேசியில் அழைத்து, "எனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டு,என்னால் அதை விட முடியாது. உனக்கு அது ஓகே என்றால் ப்ரொசீட் பண்ணலாம், இல்லை யென்றால் நீயே ஏதாவது காரணம் சொல்லி நிறுத்தி விடு. ஏனென்றால் என்னுடைய புகைப் பிடிக்கும்  பழக்கம் பற்றி, என் பெற்றோருக்குத் தெரியாது. என்னாலும் அதைப் பற்றி அவர்களுக்குச் சொல்ல  முடியாது" என்றாளாம்.  இதற்காக எல்லாப் பெண்களும் அப்படி என்று கூறிவிட முடியாது. புகைப்பதும், மது அருந்துவதும் பெண்களுக்கும் பரவி வருவது கவலை தரும் விஷயம்தான்.  
   நீக்கு
  2. ஆனாலும் அந்தப்பெண்ணின் நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு .கல்யாணத்துக்கப்புறம் திருட்டு தம் அடிப்பதைவிட  என் உரிமை என் சுதந்திரம்னு இருப்பதைவிட ஆரம்பத்திலேயே சொல்லிட்டார் .

   நீக்கு
 20. பிடித்தஉணவு பிடிக்காத உணவு என்பது பெரும்பாலும் குடும்ப பழக்கத்திலிருந்து வருவதாகவே கருதுகிறேன் நாக்கின் சுவைக்கு நாம் அடிமையாவதால் அவ்வகை உணவையே மீண்டும் மீண்டும் விரும்புகிறோம்.

  நல்ல கேள்வி பதில்கள் .தொடரட்டும்

  பதிலளிநீக்கு
 21. இப்படி ஒரு தொற்று நோய் வரும் என எதிர்பார்த்தீர்களா? பலரும் சில பஞ்சாங்கங்களில் இது குறிப்பிட்டிருப்பதாகச் சொல்கின்றனர். அது உங்களுக்கு முன்னரே தெரியுமா?

  இப்போ உங்களை ஓட வைக்கும் ஒரு கேள்வி! இந்தக் கொரோனாவை இறைவன் ஏன் தடுக்கவில்லை? கொரோனாவுக்கு பயந்து அவன் கோயிலையே மூடிக் கொண்டு உள்ளே அல்லவோ இருக்கிறான்? அவனே பயப்படுகிறானே! இது பலர் கேள்வி. இதற்கு தர்க்க ரீதியாக என்ன பதில் சொல்வீர்கள்?

  வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவங்க மாநிலத்தில் பிழைக்க வழி இல்லை என்றே இங்கே வந்தார்கள். இப்போ மறுபடி அங்கே திரும்பிப் போய் என்ன செய்வார்கள்? அங்கே இப்போது வேலையோ சாப்பாட்டுக்கு வழியோ கிடைத்துவிடுமா? அல்லது உயிர் பயத்தினால் சொந்தத்திடம் போய்ச் சேரலாம் என்னும் எண்ணமா? எனக்கு அதுதான் சரியா இருக்கும் எனத் தோன்றுகிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இந்தக் கொரோனாவை இறைவன் ஏன் தடுக்கவில்லை?// - கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். கொரோனா, கோவிலுக்குள் வரும் கூட்டத்தால் பரவிவிடக்கூடாது, பூசாரிகள் affect ஆகக்கூடாது என்பதனால் அரசும் அறநிலையத்துறையும் சேர்ந்து எடுத்த முடிவு. கொஞ்சம் விட்டால், திருவரங்கப்பெருமாள்தான் கோவில் அர்ச்சகர்கள் கனவில் வந்து காலையில் ரொட்டி போன்றவையும், மதியம் பாசிப்பருப்பு சாதம், சீரக ரசம், இரவு அரவணைப்பாயசமும் கேட்டார் என்றும் சொல்வீர்கள் போலிருக்கே. இறைவனின் வேலை, 'நடந்ததற்குச் சாட்சியாக இருப்பதும்', 'நடந்ததற்கு ஏற்றவாறு அவர்களது பிறப்பிறப்பு மற்றும் பலன் தருவதும்'தான். இறைவனாக இருந்தாலும் (அவதாரமாக) இயற்கையின்/இறையின் ruleஐ மீறினால் அதற்கேற்ற பலன் உண்டு என்பது தெரியாதா? (மறைந்திருந்து வாலியைக் கொன்றது, வாலி அடுத்த ஜென்மத்தில் வேடனாக வந்து கண்ணனின் தன்னடிச்சோதிக்குக் காரணமாக இருந்தது....)..

   நீக்கு
  2. ////இந்தக் கொரோனாவை இறைவன் ஏன் தடுக்கவில்லை?//

   ஹாஹா கீதாக்கா கேட்டது யாராவது க .ம /இ .ம  முகப்புத்தகத்தில் கேட்டிருப்பாங்க அதைதான் பலர் கேட்பதுன்னு சொல்றார் :) இதற்கு என் மகள் என்ன சொல்வா தெரியுமா :)  we have the ability to choose , God  gives us counsel and wisdom and then lets us make our own decisions.

   நீக்கு
  3. நெல்லை! "கொரோனா"வை ஏன் இறைவன் தடுக்கவில்லை என்பது என் சொந்தக் கேள்வியே இல்லை. என்னைப் பலரும் கேட்ட கேள்வி. இங்கே எங்கள் ப்ளாக் ஆசிரியர்களை மாட்டி விட்டிருக்கேன். அம்புடே! :)))))))

   நீக்கு
 22. எல்லாரும் கம்பைத் தூக்கிண்டு வரதுக்குள்ளே நான் ஓடிடறேன்.

  பதிலளிநீக்கு
 23. ///& தனிமனிதன் சொல்லும் சொல்(பேச்சு), எழுதும் எழுத்து, செய்கின்ற செயல், உண்ணும் உணவு, உடுத்தும் உடை - எல்லாமே தனிமனித உரிமைகள்தான். ஆ னா ல் ... அதனால் மற்றொரு தனிமனிதனுக்கோ அல்லது சமூகத்துக்கோ எந்த பாதிப்பும் //

  superb

  பதிலளிநீக்கு
 24. ///இந்தக் காய் பிடிக்காது என்பது மரபணு சம்பந்தப்பட்டது என்றே நினைக்கிறேன். //

  என் விஷயத்தில் வேறா இருக்கு :) எனக்கு அவியல் தயிர் மோர் மட்டுமே  பிடிக்கும் எப்படி வந்ததுன்னு தெரியாது ஆன்னா கல்யாணத்துக்குபின் எனக்கேற்றபடி என் பழக்கத்தை மாற்றிக்கிட்டேன் என் விருப்பப்படி :) எங்கப்பா அம்மாவுக்கு தயிர் சாதம் அவியல் இதெல்லாம் அவங்க சாப்பிட்டிருப்பங்களான்னு எனக்கே டவுட் .எங்க குடும்பத்தில் யாரு யுமே தயிர் மோர் அவியல் சாப்பிட்டு பார்த்த நினைவில்லை 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போகூட தயிர்சாதம் கூட quavers சிப்ஸ்சாப்பிட்டேனே :) வீட்டில் kale / கேல் /காரட் பருப்பு கடைசல் ..ஆனாலும் தயிர் ஈர்க்குமளவுக்கு வேறெதுவும் எனக்கு ஹேப்பி தராது :)

   நீக்கு
 25. எங்க குடும்பத்தில் வாசனை மசாலா நிறைய சேர்ப்பங்க ஏலக்காய்  கிராம்பு பட்டைன்னு இதெல்லாம் எனக்கு பிடிக்காது :) எனது ஜீனில்  இவை வரல்லயே 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் என் திருமதிக்கும் கூட மசாலா வாசனை பிடிக்காது. காரமசாலா பிடிக்கவே பிடிக்காது.

   நீக்கு
 26. தனி மனித சுதந்திரம் என்பது ஒரு பெரிய பட்டிமன்றத்தில் பேசக் கூடிய டாபிக். எல்லாமே தனி மனித சுதந்திரம்தான். பேச்சு சுதந்திரம், எழுத்து சுதந்திரம், நடப்பு சுதந்திரம், செயல் சுதந்திரம் என் எல்லாமே தனி மனித சுதந்திரம்தான். ஆனால், அவை மற்றவரின் சுதந்திரத்தை தாக்கும் வரையில்தான். அதன் பிறகு அது ஒரு சட்டப் பூர்வமான பிரச்சனையாக உருவெடுக்கின்றது. உன் நடப்பு மற்றவரின் சுதந்திரத்தில் தலையிடாத வரையில் அது தனி மனித சுதந்திரமாக கருதப் படும்.

  பதிலளிநீக்கு
 27. நெல்லைத் தமிழன் சாரின் 3ஆவது கேள்வி : நான் திருமணத்திற்கு முன்னர் கடலெண்ணையும் உபயோகித்ததில்லை, கூட்டும் எங்கள் உணவில் அதிகம் பங்கு பெற்றதில்லை. ஆனால், புகுந்த வீட்டில் தினம் இரவு உணவு ஒரு கூட்டு, ரசம், தயிர்தான். அதே போல், பொரிப்பதற்கு கடலெண்ணைதான் உபயோகப் படுத்தப் படும். ஆரம்பத்தில், கஷ்டமாக இருந்தாலும், போகப் போக பழகி விட்டது. இப்போது இரவில் கூட்டில்லாமல் உண்ண கஷ்டமாக இருக்கும் அளவு மாறி விட்டேன். எனவே, பிடிப்பதும், பிடிக்காததும் பழக்கத்தில்தான் வருகின்றது என்பது என் அனுபவம்.

  பதிலளிநீக்கு
 28. நெல்லை சாரின் ஐந்தாவது கேள்வி : நீதிபதி, மருத்துவர், போலீஸ் ஆகியோர் பாவம் பார்த்தால் வாழ்க்கை திணறும் அல்லது முடிந்து விடும். ஒரு அரிய பழமொழி இருக்கின்றது : Any number of wrong doers can escape. But one innocent man should not be sentenced (என்பது போல் வரும்). இது நடக்க வேண்டுமென்றால், மேலே சொல்லியுள்ள மூவரும் மனதை கழட்டி வீட்டில் வைத்து விட்டு மூளையை மட்டும் சுமந்து கொண்டு தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம். ஆயிரம் குற்றவாளிகள் தண்டனை அடையாமல் தப்பிக்கலாம்; ஆனால் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது.

   நீக்கு
 29. கீதாவின் இரண்டாவது கேள்வி : ஒரு ஆண் பணியிலிருந்து ஓய்வுற்றால், அவன் நிரந்திரமாக ஓய்வுருகின்றான் என்று பொருள். ஒரு பெண் ஓய்வுற்றால், அவள் அலுவலகப் பணியிலிருந்து மட்டும் ஓய்வுருகிறாள் என்று பொருள். ஆனால், அவள் இன்னும் மருமகள், மனைவி, தாய், சகோதரி, நண்பி என்று மற்ற அனைத்து வேலைகளும் கடைசி வரை தொடரும். அதை முகம் கோணாமல் செய்வதே அவள் பெருந்தன்மை என்று மேலே ஏற்றி அதள பாதாளத்திற்கு இறக்கி விடுவார்கள். (ரொம்ப நாளா சொல்லனும்னு நெனைச்சேன். நன்றி கீதா.)

  பதிலளிநீக்கு
 30. கேள்விகள், அதற்கு பதில்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  தனிமனித சுதந்திரம் பற்றி சொன்னது அருமை.


  பதிலளிநீக்கு
 31. ஊரடங்கினால் வேலை பலு கூடியிருக்கின்றது. ஆனால், நல்லவை சிலவும் நடக்கின்றன. என் இரண்டாவது பெண் பூனாவில் தங்கி படிப்பதால், தொலைபேசியில்தான் அதிகம் உரையாடலே. அது இப்போது மாறி தினம் அவள் நான் என் கணவர் கலந்துரையாடுகிறோம். கருத்துக்களை பரிமாரிக் கொள்கிறோம். சண்டை வந்தாலும் பிறகு இணைந்து கொள்கின்றோம். Tolerance (பொறுமை அதிகரித்திருக்கின்றது யாவருக்கும்)

  பதிலளிநீக்கு
 32. தனிமனித உரிமை என்பது இன்று மிகைப்படுத்தப்படும் ஒன்று. நம் இந்திய சமூகம் ஒரு குழுவாய் வாழ்ந்தே பழக்கப்பட்டது. என்று தனி மனித உரிமை என பார்க்க ஆரம்பித்தோமோ அன்றே பல அனர்த்தங்கள் நடக்கத்துவங்கிவிட்டது. விரிவாய் எழுதினால் ஆணாதிக்கவாதி பிற்போக்கு மனிதன் என பெயர் கிட்டும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனிமனித சுதந்திரம், கருத்துரிமை, தனி மனித உரிமை எல்லாமே இன்றைக்கு எங்கோ தொடங்கி எங்கேயோ போய்க் கொண்டிருக்கின்றன.

   நீக்கு
 33. >>> அரசும், காவல்துறையும் இவ்வளவு கெடுபிடியுடன் இருந்தாலும் மக்கள் அதை அலட்சியம் செய்வது ஏன்?

  # அசட்டு தைரியம், முட்டாள்தனம். >>>

  அதெல்லாம் இல்லை... நம்மை யார் என்ன செய்து விட முடியும் என்ற திமிர்... ஆணவம்...

  இங்கே இந்த நாட்டில் ஊடங்கை மீறியவர்களும் ஊரடங்கை ஏளனம் செய்தவர்களும் தற்போது சிறைக்குள்...

  இதில் சில வெளிநாட்டவர்களும்..

  ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்பட்டவுடன் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள்...
  இனி இந்த ஜென்மத்தில் மீண்டும் இங்கு நுழைய முடியாது...

  நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் தனி மனித உரிமை...
  காரணம் அளவுக்கதிகமான சுதந்திரம்...

  அபாய நிலையை நோக்கிச் செலுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது நாடு...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதைப் படிக்கும்போது நம் நாட்டைப் பற்றிய ஆதங்கம் ஏற்படுகிறது.

   நீக்கு
  2. நம் நாட்டில் எதற்கெடுத்தாலும் தனி மனித உரிமை...
   காரணம் அளவுக்கதிகமான சுதந்திரம்...//

   ஏகப்பட்ட சுதந்திரம் ஏற்கனவே கொடுக்கப்பட்டிருக்கிறது, பெரும்பாலும் தகுதியற்ற பெருமக்களுக்கு. நன்றாக அனுபவிக்கிறார்கள். இருந்தும் போதவில்லை, அவர்களுக்கு இன்னும் வேண்டும். எவ்வளவு சீரழித்தும் இந்த நாடு.. சனியன்.. அழியமாட்டேன்கிறதே என்கிற எரிச்சல் அவர்களுக்கு. அஜெண்டா பூர்த்தியாகவில்லையே. பச்சையும், நீலமுமாக வரும் பணத்திற்குப் பதிலென்ன சொல்வது என்கிற கடமை உணர்வோ?

   நீக்கு
 34. தனி மனித உரிமை... சரி!...

  சில தினங்களுக்கு முன் பெங்களூருவில்
  மது வாங்குவதற்கு பெண்களும் வரிசை கட்டி நின்றதைப் பற்றி?...

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!