செவ்வாய், 1 டிசம்பர், 2020

நெடுங்கதை - ஜுல் (நிறைவுப்பகுதி)  - அப்பாதுரை 


அப்பாதுரை 

முன்கதை

    குண்டு பாய்ந்த இடம் கலவரம் தருவதாகவும் அதீத ரத்தக் கசிவு ஜூலை உயிருக்கு ஆபத்தான நிலைக்குத் தள்ளிவிட்டதாகவும் சொல்லி அவசரச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றார்கள். ஐவி ஏற்றி ஜூலை ஒரு பொட்டலம் போலக் கட்டிக்கொண்டு ஓடினார்கள். துக்கம் பொங்கத் தெருமுனை வரை வழியனுப்பினேன். பனி பெய்யத் தொடங்கியிருந்தது. தாறுமாறாகத் தெருவில் கிடந்த என் வெலொவை அவசரமாக எடுத்துத் தட்டி மேலும் பனி படாமல் நிறுத்தி வீட்டுள் நுழைந்தேன்.

எனக்கு ஆத்திரம் வந்தது. பன்னிக்குப் பொறந்த கோட்டான்களா, வயதான நாயைச் சுட எப்படி மனம் வந்தது? ரத்தம் கசிய ஊமையாக அழுதானே என் ஜூல்? முண்டங்களா, துப்பாக்கி இல்லின்னா அஞ்சு நொடி தாக்கு பிடிச்சிருப்பிங்களா ஜூல் கிட்டே? ஜூல்! உனக்கு இந்த கதி வர நான்தான் காரணம். பீர் கொடுத்து போதைல தள்ளிட்டனா? நீ எப்படி அவங்களை கவனிக்காம போனே? எனக்கு நரகம்தான். நீயே வந்து எண்ணைக் கொப்பறையில் என்னைத் தள்ளு. ஜூல், உனக்கு இந்த கதி செய்தவர்களை அடுத்த மூன்று பிறவிகளுக்கு துரத்திக் கொல்வேன். ஏதேதோ பிதற்றினேன்.

நாலைந்து விழுங்கு லப்ராய்க் விஸ்கிக்குப் பிறகு நான் செய்ய வேண்டியவை கல்லூரிக்கால உள்ளங்கை பிட் நோட் போலத் தெரிந்தது:
    1. ஜூலைத் தாக்கியவர்களைக் கருணையில்லாமல் சித்திரவதை செய்ய வேண்டும்
    2. நிவாவைச் சிக்க வைக்கத் தடயங்கள் சேகரிக்க வேண்டும்
    3. பாதுகாப்பான இடத்தில் ஜூலைச் சேர்க்க வேண்டும்

சமையலறையிலும் கராஜிலும் ஆயுதம் தேடினேன். சிறிய கத்திகள், ஐஸ் குத்திகள், குறடு, சிகரெட் லைடர், மெர்குரி பல்புகள், துருச்சுரண்டி,போ கழி.. கறுப்பு ஸ்வெட்டர், பருமனான பனிக்கால ஜாக்கெட்டுகள், முகமூடித் தொப்பிகள்.. எண்ண ஓட்டத்தில் என்ன எடுக்கிறேன் என்றறியாமல் இதுவும் அதுவும்... என் நைலான் கைப்பையில் கொண்டதைத் திணித்தேன். மறக்காமல் துப்பாக்கியிலும் தோட்டா சேர்த்துக்கொண்டு கிளம்பினேன். தடியர்களைக் கதறடிக்கப் போகும் உற்சாகத்தில் ஜூலைக் கணம் மறந்து சினாத்ரா மெட்டு ஒன்றை முனகினேன். ஷோ டைம்!

**
    னி பலமாகப் பெய்யத் தொடங்கியிருந்தது பொருட்டில்லை என்றாலும் மோட்டார் பைக் ஓட்டுவது சிரமமாக இருந்தது. ஒன்றன் மேல் ஒன்றாக இரண்டு பனி ஜாக்கெட்டுகள் அணிந்திருந்தேன். தடியர்கள் எங்கே இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் இருந்தது. கயவர் கெட்டால் ஓயெசிஸ். நைட் கிளப் பின்புறம் இருந்த நிர்வாண நடன அறை தாண்டிச் சிறிய சந்தின் முனையில் என் வெலொவை மறைவாக நிறுத்தினேன். கைப்பையைத் தோளில் மாட்டி நடந்தேன். கிளப் வெளியே நோட்டமிட்டேன். நிவாவின் டாட்ஜ் கார் எதிர்பார்த்தபடி அவளுக்கான இடத்தில் நின்றிருந்தது. ஒரு பயல், போலீஸ் உள்பட, அங்கே கார் நிறுத்த மாட்டான். தடியர்கள் இங்கேதான் வந்திருப்பார்கள். நிவாவிடம் பெருமை சொல்லி பொறை வாங்கித் தின்னும் பிச்சைப் பெருச்சாளிகள். இருங்கடா வரேன். முதல் காரியம் முதலில்.

நிவாவின் காரைச் சுற்றி வந்தேன். கார் கதவுகள் முன்புறக் கண்ணாடி என்று ஆங்காங்கே பனி பரவி மூடத் தொடங்கியிருந்தது. பின்புற ஜன்னல் கண்ணாடியில் டக் டேப் தாராளமாக ஒட்டி துப்பாக்கியின் பின்புறத்தால் ஓங்கி அடித்தேன். டேப்பில் சிதறாமல் ஒட்டிக்கொண்ட கண்ணாடித் துண்டை சிறிய கதவு போல ஒதுக்கி கார் ஜன்னலின் உளளே கைவிட்டு, தாமதிக்காமல் பின் கதவின் பூட்டை உடைத்துச் சிதைத்துக் கதவை மூடினேன். கண்ணாடி டேப்பை மறுபடி பொருத்தினேன். கீழே கிடந்த பனியை அள்ளி டேப் ஒட்டிய இடத்தை மூடினேன். சடுதியில் மறைவாக ஒளிந்தேன். எதிர்பார்த்தபடி அலாரம் ஒலிக்க, எதிர்பார்த்தபடி தடியர்கள் வெளியே வந்து பார்த்து அலாரத்தை நிறுத்தி, எதிர்பார்த்தபடி யாரையோ தோராயமாகத் திட்டி உடைந்த ஜன்னலைக் கவனிக்காமல் எதிர்பார்த்தபடி பனியில் அவசரமாக உள்ளே ஓடினார்கள்.

சில நொடிகள் பொறுத்தேன். மறைவிலிருந்து வெளிவந்தேன். பத்து மணிக்குத் தொடங்கிய நிர்வாண நடனங்கள் முடிய இன்னும் இரண்டு மணி நேரம் ஆகும் என்று தோன்றியது. பூட்டு விலக்கிய நிவாவின் கார் பின்கதவைத் திறந்து நுழைந்தேன். குரங்கு போல ஓட்டுனர் இருக்கைக்குத் தாவினேன். ஓசை தவிர்த்து ஸ்டியரிங் கீழே தேடி அலாரம் ஒயர்களை இழுத்து அறுத்தேன். இக்நிஷன் உயிர் ஒயரை என்னிடமிருந்த பூஸ்டரில் இணைத்து வண்டியைக் கிளப்பினேன். கார் திருடுவதை ஒலிம்பிக் போட்டிகளில் சேர்த்திருக்கிறார்களா என்று பார்க்க வேண்டும்.

இரண்டு நிமிடங்களில் வைரநகைக் கண்காட்சி வளாகத்துக்கு வந்தேன். கண்காணிப்பு காமெராவுக்கு நேர் பார்வையில் வண்டியின் பின்புற லைசென்ஸ் பிளேட் தெரியும்படி நிறுத்தினேன். சில நொடிகள் பொறுத்து முகமூடி அணிந்து கதவைத் திறந்து வெளியே வந்து எனக்குப் பழக்கமில்லாமல் வேடிக்கையாக நடந்தேன். காரும் யாரோ காரிலிருந்து வெளியே வருவதும் இந்தப் பனி மூட்டத்திலும் காமெராவில் பதிவாகியிருக்கும். பதினைந்து நிமிடங்களில் திரும்பியபோது பனி காரை சுத்தமாக மூடியிருந்தது. உள்ளே நுழைந்து பின் இருக்கையைச் சுற்றி மூன்று பக்கமும் சுத்தமாகக் கத்தியால் கீறித் தூக்கினேன். திரும்ப அப்படியே தடம் தெரியாமல் வைத்தேன். பலமாக சிரிக்க முயன்று முகமூடிக்குள் சிரிப்பது சிரமம் என்று தெளிந்தேன்.

அடுத்த இரண்டு நிமிடங்களில் நைட் கிளப் வந்து நிவாவின் கார் முன்பிருந்த இடத்தில் நிறுத்தினேன். என் தடயம் ஏதுமின்றி சுத்தம் செய்து கைப்பையுடன் ஓசையின்றி வெளிவந்தேன். துருச்சுரண்டியால் பின்புற டயர்கள் இரண்டையும் கூராகக் கிழித்தேன். என் வெலோவை நோக்கி நடந்தேன். பனி குறையத் தொடங்கியது. ஜாக்கெட்டுகள், முகமூடியைக் கழற்றிக் கைப்பைக்குள் திணித்து என் வெலோவில் மறைத்தேன். குளிருக்கு அடக்கமாக ஸ்வெட்டர் அணிந்தேன். போ கழியைச் சில நிமிடங்கள் சுழற்றிப் பயிற்சி செய்தேன். பரபரப்பும் அழுத்தமும் அடங்கப் பெருமூச்சுகள் சில விட்டேன்.

    எல்லாமும் வல்லவென் ஆண்டவனே நானுனக்கு
    நல்மதுவும் மாமிசமும் தந்திடுவேன் - பொல்லாரை
    வெல்லுமென் திட்டம் நிறைவேற நீயெனக்கு
    நல்லாசி கட்டாயந் தா
என்று பொதுவாக வானை நோக்கிக் கும்பிட்டேன். என் கடவுள் நம்பிக்கை வீணாகாது.

சில ஆயுதங்களை மட்டும் எடுத்துக்கொண்டு நைட் கிளப்புக்கு நடந்து மறுபடி மறைவுக்கு வந்தேன். தடியர்களுக்குப் பாவத்தின் சம்பளம் வழங்க வேண்டும். காத்திருந்தேன்.

**
    நைட் கிளப் கதவடைத்து கூட்டமடங்கிய சில நிமிடங்களில் நாலு நடனப் பெண்டிர், தடியர்கள், நிவா என்று பட்டாளம் வெளியே வந்தது. காற்றின்றித் தரை தேய்த்த தன் காரின் பின் டயரைப் பார்த்த நிவா ஏராளமாகக் கடிந்தாள். தடியர்களின் காரைக் கடன் வாங்கிப் பெண்டிருடன் ஏறினாள். “என் வண்டியை சரி செஞ்சு வீட்டுல விட்டு உன் வண்டியை எடுத்துகிட்டுப் போ” என்று தன் கார் சாவியை ஒரு தடியனிடம் எறிந்தாள். காணாமல் போனாள். தொடர்ந்து பனி விழும் ஓசை தவிர அரவம் அடங்கித் தெரு அமைதியானது.

“குளிருக்கு அந்தப் பொண்ணுங்களயாச்சும் நம்மகிட்ட விட்டுப் போயிருக்கலாம்ல ஹிப்போ ராணி?” என்று சலித்தபடி இரண்டு தடியரும் காரைச் சுற்றி என் பக்கமாக வந்தனர். இரண்டு கத்திகளையும் ஐஸ் குத்தியையும் சரமாக எறிந்தேன் ஒரு தடியன் மேல். பின் கழுத்திலும் தோளிலும் இடையிலும் வலியுடன் அவன் சரியத் தொடங்கிய கணத்தில், பாய்ந்து மற்றவனை போ கழியால் பத்து மைல் வேகத்தில் முகத்தில் விளாசினேன். ஆயிரம் கிலோ ஜி சக்தியாவது இருக்கும். வலது தாடையின் பற்கள் உதிற வாய்சதை கொட்டிப் பேச்சு மூச்சில்லாமல் கோணங்கித்தனமாக விழுந்தான். சில கணங்களில் அவன் முகம் பலூனாக வீங்கியது. கிழிந்த உதடு கூட சதை போல தொங்கும் என்பதை அன்றுதான் தெரிந்து கொண்டேன். கத்தி பாய்ந்து சரிந்தவன் எழ முயன்றான். ஓங்கி அவன் வயிற்றில் உதைத்தேன். குறடால் அவன் கால்களுக்கிடைப்பட்ட பகுதியில் மிக அழுத்த்த்த்தினேன். அலறத் தொடங்கியவன் வாயில் கழியை வைத்து அழுத்தினேன். துடித்தான். “இது என் ஜூலுக்கு” என்றேன். தலையை அசைத்துக் கைகளைக் கும்பிட்டான். அவனிடம் சக்தியில்லை என்று தெரிந்து பிடியைத் தளர்த்தினேன். அவன் பையிலிருந்த நிவாவின் கார் சாவியைப் பிடுங்கினேன். மெர்குரி பல்பு ஒன்றை அவன் நெற்றியில் உடைத்தேன். கூச்சலிட முயன்றவன் வாயில் கத்தியைச் செருகி எடுத்தபோது நாக்கோடு வந்தது. மயங்கி விழுந்தான். கையிலிருந்த கடைசி ஆயுதம் துருச்சுரண்டி. சும்மா விடுவானேன்? முகம் வீங்கி மயங்கிக் கிடந்த தடியனின் தொடையில் ஆழமாக நுழைத்துத் திருகி எடுத்தேன். செத்த பாம்பை அடிப்பது போலிருந்தது. இருக்கட்டும். அடுத்த இரண்டு மாதங்களுக்கு வலிக்கும். “ஜூலுக்கு” என்றேன்.

தென்பட்ட என் தடயங்களைத் துடைத்தேன். கிளப் வாசலில் இருந்த பொதுத் தொலைபேசியில் அவசர போலீசை அழைத்து “ஒயெசிஸ் வாசலில் சிலர் ஆயுதங்களோடு அடித்துக் கொள்கிறார்கள்” என்று சொல்லி உடனே நகர்ந்தேன். நிவாவின் காரை எடுத்து அடுத்த தெருமுனையில் ஒதுங்கி அமைதி காத்தேன். சில நிமிடங்களில் அவசர உதவி வந்து இரண்டு தடியரையும் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது. உடன் வந்த போலீஸ் மேலும் சில நிமிடங்கள் இடத்தைச் சுற்றிவிட்டு விலகியது. மீண்டும் அரவமற்ற அமைதி. இந்த இடத்திலா இத்தனை ரகளை நடந்தது?

பஞ்சர் சக்கரம் தீப்பொறியத்தேய நிவாவின் காரை ஓட்டி அவள் வீட்டில் நிறுத்தி அங்கிருந்து தடியனின் புது மஸ்டேங் காரை எடுத்து என் பழைய வீட்டு கராஜில் பூட்டி மீண்டும் நைட் கிளப் சென்று என் வெலோவை எடுத்துக் கொண்டு வீடு சேர்ந்தபோது அதிகாலை. மிகக் களைத்திருந்தேன். திட்டப்படி கடைசியாக செய்ய வேண்டியது பாக்கி இருந்தது. என் பரோல் ஆபீசரை அழைத்தேன்.. கருப்..உஹூம்.. ஆப்பிரிக்க அமெரிக்கரென்று அழைக்க வேண்டுமாம்.. புதிதாக கிளின்டன் என்பவன் இப்படி ஏதாவது தினம் கிளப்பி விடுகிறான். பரோல் ஆபீசர் ஒருவழியாக போன் எடுக்க, சில தகவல்கள் கொடுத்தேன். சில்லென்று ஒரு புட்டி பீரை சில மிடறுகளில் விழுங்கினேன். கடுஞ்சுடுநீரில் குளித்து துடைத்த டவலுடன் படுக்கையில் விழுந்தேன். சற்று ஓய்வெடுத்து காலையில் ஜூலைப் பார்க்க...

**
    டெலிபோன் ஒலிக்க விழித்தேன். எழுந்தேன். நன்றாக விடிந்திருந்தது. ஏழு மணியாவது இருக்கும். தொடர்ந்து வரும் டெலிபோன் ஒலி தலைவலி தரும் போலிருந்தது. எடுத்தேன். மறுமுனையில் பரோல் ஆபீசரை எதிர்பார்த்தால் மருத்துவர். “ஜூல் பற்றி பேசணும்” என்றார். “குண்டு கிழித்த சேதம் மிக அதிகம். பிழைக்க வைக்க நிறைய செலவாகும். பிழைப்பது கடினம். அப்படியே பிழைத்தாலும் நரம்புக்கோளாறு பக்கவாதம் என்று விளைவுகள் வரும். தொடர்ந்து மருத்துவ செலவுகள். ஜூலின் வாழ்க்கைத் தரம் இதனால் உயரப் போவதில்லை. என் மருத்துவ அபிப்பிராயம் ஜூலுக்கு இந்த வலிகளிலிருந்து விடுதலை தருவது.. யுதனெசியா..” என்றார்.

“உன்னை எல்லாம் எவனய்யா டாக்டராக்குனது?” எனக்கு வந்த கோபத்தில் கத்தினேன். “செலவப்பத்திக் கவலைப்படாம உன் வேலையைப் பாருய்யா”.

“உங்கள் கோபம் புரிகிறது.. இது ஜூலின் வாழ்க்கை அல்லவா? வலியில்லாமல் இனி ஜூல் வாழ்வது சிரமம்.. நீங்கள் வந்து ஜூலைப் பார்த்துவிட்டு முடிவு சொல்லுங்கள்”

நிதானித்தேன். “எனக்கு சற்று அவகாசம் வேண்டும் டாக்டர்.. ஜூலைக் காப்பாற்ற முயற்சி செய்யுங்கள்..”

போனை வைத்தேன். இரண்டு தடியர்களையும் இன்னும் சித்திரவதை செய்திருக்க வேண்டும். மறுபடி போன். மருத்துவரை எதிர்பார்த்தால் ரீனா. பதறினாள். “ஓடு. தப்பித்துப் போ..”

“நில். கவனி, காதலி. சற்று அமைதியாகச் சொல்” என்றேன். “ஏன் பதறுகிறாய்?”

“உனக்கு விஷயம் தெரியாதா? இல்லை நடிக்கிறயா? போலீஸ் நிவாவைக் கைது செய்துவிட்டது. வைரநகைக் கொள்ளைக்காக. டிவியில் பார்.. ஒரே செய்தி மயம்..”

“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாது”

“ஆமாம்.. கண்காணிப்பு கேமராவில் அவள் காரில் வந்தது.. அவள் காரிலிருந்து வெளியேறி உள்ளே சென்றது.. பின் இருக்கையில் ஏதோ செய்தது.. எல்லாம் காமெரா டேப்பில் பதிவாகி இருக்குது ..”

“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாது”

“அவள் போலவே பருமனான ஆள்.. பனியில் சரியாகத் தெரியல.. நடையை வச்சு.. எனக்கு அவள் போலத்தான் தெரியுது.. டிவியில் பார்த்தேன்.. சந்தேகத்தின் பேரில் போலீஸ் அவள் வீட்டில் சோதனை செய்து அவள் காரின் பின் இருக்கையை வெட்டி அதனுள் கொள்ளை போன பாதி நகையைக் கண்டெடுத்திருக்காங்க..“

“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாது”

“..கேளு.. யாரோ 911 வேறே கூப்பிட்டிருக்காங்க..தடியர்களிடம் கார் சாவி கொடுத்து காரை வீட்டில் விடச் சொன்னதாக நிவாவின் டேன்சர்ஸ் சாட்சி.. அதை வச்சுட்டு போலீஸ் அந்த ரெண்டு பேரையும் சோதனை போட்டப்ப அவங்க ஜட்டிக்குள்ள வைர நகை, வைரக்கற்கள் எடுத்திருக்காங்க.. ஆனா ரெண்டு பேரும் சரியான அடி வாங்கி கட்டு போட்டு கிடக்காங்க.. பேச்சு மூச்சில்லே.. எல்லாத்தையும் முடிச்சு போட்டு நிவாவை கைது பண்ணிடடாங்க.. மிச்ச நகைக்காக விசாரணை செஞ்சிட்டிருக்காங்க..”

“அப்படியா? எனக்கு எதுவுமே தெரியாது”

“என்ன நீ? எதுவுமே தெரியாத போல பேசுற? உன் ஒவ்வொரு உடல் பகுதிக்கும் சன்மானமும் வெகுமதியும் அறிவிச்சிருக்கா நிவா.. நீ இப்ப என்ன செய்வே?”

“எனக்கு எதுவுமே தெரியாது.. விதிகளை மீறி நைட்கிளப் வந்ததால என் பரோலை ரத்து செய்து மறுபடி ஜெயில்ல தள்ளிட்டாங்க..”

“என்னது.. எப்ப?”

“இப்ப..” போனை வைத்தேன்.

மறுபடி போன் ஒலித்தது. எடுத்தால்.. இல்லை வாசல் அழைப்பு மணி. கவனமாகப் பார்த்துக் கதவைத் திறந்தேன். என் ஆப்பிரிக்க அமெரிக்க பரோல் ஆபீசர். கையில் புகையுடனும் முகத்தில் நகையுடனும். “உன் பரோல் ரத்தாகி விட்டது. நீ உடனே சிறைக்குத் திரும்ப வேண்டும். என்னுடன் வா” என்றார்.

**
    சிறை வசதியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது. இரண்டாம் நாளே மூன்று பேர் என்னைப் பார்க்க வந்தார்கள். சிறையில் என்னைப் பார்க்க இப்படிக் கூட்டம் அலை மோதும் என்று எதிர்பார்க்கவில்லை.

முதலில் வந்தவள் ரீனா. “உன் காதலி எப்படி இருக்கிறாள்?” என்றேன்.

பிழைத்தாலும் பிழைப்பது சிரமம் என்றாள். “முதுகெலும்பில் குண்டு பாய்ந்ததால் உடலின் ஒரு பக்கம் இயங்காது” கொஞ்சம் அழுதாள். பிறகு “என்னால் தானே உனக்கு இந்த நிலை?” என்று வருந்தினாள். என்ன இருந்தாலும் பழைய காதலி இல்லையா?

“உன் தவறு எதுவும் இல்லை.. பரோல் ரத்தாகி விட்டது.. எப்படியும் சிறைதான்”

“உனக்கு ஏதாவது உதவி தேவையென்றால் சொல்”

சொன்னேன். “நீ எனக்கு இந்த உதவியைச் செய்தால் உனக்கு ஐம்பதாயிரம் டாலர் தருகிறேன். உனக்காக இல்லாவிட்டாலும் உன் காதலிக்காக வைத்துக் கொள். செலவுக்கு உதவும்”

“வேண்டாம். எங்கிருந்தாலும் எங்களைத் தேடிப் பிடித்துக் கொன்றுவிடுவாள் நிவா”

“யோசி”.

தயங்கினாள். மருண்டாள். பிறகு “உன்னிடம் ஏது இத்தனை பணம்? நீ ஏதோ திட்டம் போட்டு இதையெல்லாம் செய்திருக்கிறாய் போலிருக்கிறது..”

“எனக்கு எதுவுமே தெரியாது” என்றேன்.

இரண்டாவதாக வந்தவர் பரோல் ஆபீசர். “எதற்காக ரத்து செய்யும்படி கேட்டாய்? நீயே முன்வந்தாய்? ஒரே ஒரு விதி மீறலுக்காக அதுவும்?”

“நிவா என்னைக் கொள்ளை அடிக்கச் சொல்லி வற்புறுத்தினாள்.. குண்டர்கள்.. என் நாய்.. என்று என்னை சம்மதிக்க வைக்க முயற்சி செய்தாள்.. அதான் விவரமாகச் சொன்னேனே? கொள்ளை அடித்ததும் என்னைக் காட்டிக் கொடுத்து மாட்டி விடுவாள் என்று தோன்றியது.. ஒரு பாதுகாப்புக்காகத் தான்..”

“ஹ்ம்.. உனக்கு ஏதாவது உதவி தேவையா?”

சொன்னேன். “எனக்கு இந்த உதவியைச் செய்தால் பதிலுக்கு..” காதோடு மிக மென்மையாக ஓதினேன்.

“உன்னிடம் ஏது இத்தனை பணம்? இந்த வைரக் கொள்ளையில் உனக்கு ஏதாவது பங்குண்டா? நீ ஏதோ திட்டம் போட்டு இதையெல்லாம் செய்திருக்கிறாய் போலிருக்கிறது..”

“எனக்கு எதுவுமே தெரியாது” என்றேன்.

மூன்றாவதாக வந்தது நிவா. முடிந்தால் என்னை சிறையிலேயே துப்பாக்கியால் சுட்டிருப்பாள். முடியாததால் கண்களால் சுட்டாள். அப்படி ஒரு தீ.

“என்னை ஏமாத்திட்டதா நினைக்கிறே இல்லே?”

“தெய்வமே.. உன்னை ஏமாத்துவனா? அந்த நைட்கிளப் வந்தா என் பரோலுக்கு ஆபத்துனு சொன்னனா இல்லையா? நீ சொன்னது போலவே வங்கிக் கொள்ளைக்காக இடம் பார்த்து திட்டம் எல்லாம் போட்டு உன் கிட்டே சொல்லலாம்னு கிளப் வந்தப்ப பின்னாலயே பரோல் ஆபீசர் தொடர்ந்திருப்பாருனு எதிர்பார்க்கலே.. பரோலை ரத்து பண்ணி இங்கே...”

“போதும் நிறுத்து.. மிச்ச வைரங்களை எங்க வச்சிருக்கே? பிழைக்க வச்சு பிழைக்க வச்சு சித்திரவதை பண்ணுவேன்.. என்னை ஏமாத்திட்டு நீ தப்பிக்கலாம்னு பார்க்காதே”

“தெய்வமே.. உன்னை ஏமாத்துவனா? நீ என்ன சொல்ற புரியலியே? ஆமா.. உன்னைக் கைது பண்ணிட்டதா சொல்றாங்களே,. வைரநகைக் கொள்ளையாமே? அரை மிலியன் பெயிலாமே?  நான் வேணா சாட்சி சொல்லவா? வங்கிக் கொள்ளை அடிக்கத்தான் திட்டம் போட்டோமே தவிர வைரநகைக்கும் நமக்கும் தொடர்பே இல்லேனு.. உன்னோட ரெண்டு ஆட்களை சாட்சி சொல்ல வச்சு வழக்கை உடைச்சுடலாம்..”

“நாயே.. என் ஆட்களை பேச்சு மூச்சில்லாமல் அடிச்சுப் போட்டு நகையையும் கொள்ளை அடிச்சுட்டு இப்ப என் கிட்டயே..”

“எனக்கு எதுவுமே தெரியாது..” என்றேன். என் கண்களில் தெரிந்த வெறியையும் முகத்தில் தெரிந்த புன்னகையையும் அவள் கவனிக்கத் தவறவில்லை.

அடுத்த சில மாதங்களில் நிவாவின் வழக்கு தீர்ப்புக்கு முன்னேறியது. பரோல் ஆபீசர் தானாகவே கண்டுபிடித்த துப்புகளின் பேரில் ரீனாவும் நானும் சாட்சி சொன்னோம். நிவா என்னை வங்கிக் கொள்ளையடிக்க வற்புறுத்தியதைச் சொன்னேன். அதே நேரத்தில் வைரங்களை கொள்ளையடித்து இரண்டிலும் என்னைச் சிக்கவிடும் திட்டத்தை ரீனா புட்டு வைத்தாள். நடனப் பெண்டிர் நால்வரும் நிவா கொள்ளை நகைச் சண்டையில் நைட்கிளப் வாசலில் தன் ஆட்களை அடித்துப் போட்டதை நேரில் பார்த்ததாகக் சொன்னார்கள். நைட்கிளப் வாசலில் அடிபட்டு கிடந்த ஆட்கள், அதைப்பற்றிய அனாமத்து தொலைபேசி விவரம், மீட்கப்பட்ட வைரநகைகள் மற்றும் சந்தர்ப்ப சாட்சிகளை வைத்து.. கொள்ளை, சித்திரவதை, கொலை முயற்சி என்று குற்றமாக அடுக்கி நிவாவுக்கு பதினொரு வருடம் கடுங்காவல் தண்டனை விதித்தார் நேர்மைமிகு நீதிபதி.

எட்டு மாதங்கள் சிறையில் இருந்தேன். இடையில் இரண்டு மூன்று முறை என்னைப் பார்க்க வந்தாள் ரீனா. அவள் காதலி இறந்து விட்டதாகச் சொன்னாள். என்னிடம் பணம் வேண்டாம் என்றாள். தண்டனை முடிந்து அவளை சந்திப்பதாகச் சொன்னேன்.

தினமும் ஆறு மணி நேரம் என்னுடன் சிறையில் தங்க ஜூலை அழைத்து வந்தார் பரோல் ஆபீசர். நெருங்கிய நட்பு எங்களிடையே மலர்ந்தது என்பேன். ஜூலின் உடல் மோசமாகிக் கொண்டே வந்தது என்றாலும் என்னுடன் இருந்த நேரங்களில் அவன் மகிழ்ச்சியாக இருந்தான். கடைசி மாதம் ஒரு புதன்கிழமை என்னுடன் விளையாடியபடி உயிர் நீத்தான் ஜூல்.

**
    ன் தண்டனைக் காலம் முடிந்ததும் வெளி வந்தேன். முதல் வேலையாக என் வெலோவை எடுத்துக்கொண்டு ரீனாவைச் சந்திக்கப் போனேன். அரை நிர்வாணப் பெண்களை வேலைக்கு வைத்து அமோகமாக கூட்டம் சேர்த்த ஹூடர்ஸ் என்ற புது ரெஸ்டாரன்டில் வேலை செய்த ரீனா என்னைப் பார்த்ததும் உடை மாற்றி ஓடி வந்தாள்.

பேசினோம். பேசினோம். பேசினோம்.

அவள் உள்ளங்கையில் திணித்ததைத் திறந்து பார்த்தாள். சிறு வைரக் கல். “எங்கிருந்து வந்தது உனக்கு இத்தனை பணம்?” என்றாள்.

“எனக்கு எதுவுமே தெரியாது” என்றேன்.

சிரித்தாள். நிவாவால் இனி ஆபத்து இல்லை என்று புரிந்திருந்தாள். ஜூல் பற்றிப் பேசினோம்.

“எப்படி பரோல் ஆபீசரை சரிக்கட்டினாய்?” என்றாள்.

“பத்தாயிரம் டாலரும் என் பழைய கராஜில் கிடந்த புது மஸ்டேங் காரும் தந்தேன். வாங்கிய காசுக்கு வஞ்சனையில்லாமல் ஜூலைக் கவனித்துக் கொண்டார்”

ஜூல் என் மடியில் இறந்ததைச் சொன்னதும் என் தோள்களைப் பிடித்துக் கொண்டு சில நிமிடங்கள் விம்மினாள்.

“என்ன செய்யப் போகிறாய்?” என்றாள்.

“ஊரை விட்டுப் போகப் போகிறேன்.. இங்கே இருந்தால் ஜூல் நினைவுகள் வாட்டும்.. I miss my jewel”

தலை குனிந்தபடி தயங்கி நான் கொடுத்த வைரக் கல்லைத் திருப்பிக் கொடுத்தாள். “உனக்கு விருப்பமிருந்தால்.. I can be your jewel”.

"பிராமிஸ்?" அவள் கையை இழுத்தேன்.

“ஜூல் பிராமிஸ்” என்று வெலோவில் ஏறி என் முன்னால் குறுக்கே கால் போட்டு உட்கார்ந்தாள். என் முகத்தைக் கட்டி, “என்னை இந்த நரகத்திலிருந்து மீட்டு உன்னோட கூட்டிப்போறியா?" என்றாள்.

<முற்றும்>

41 கருத்துகள்:

 1. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் இயல்பான நிலை திரும்பப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்பாடி...   ஒரு ஆள் வந்தாச்...   வாங்க கீதா அக்கா...  வணக்கம்.

   நீக்கு
 2. இன்னிக்கும் நான் தான் போணியா? எல்லோருக்கும் என்ன ஆச்சு? சௌக்கியம் தானே? அப்பாதுரையின் கதை வழக்கம் போல் பிரமாதம். தமிழ்க் கதைகளின் சாஸ்திரப்படி சுபமான முடிவு. பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  எல்லோரும் பிஸி போல...   வாங்க..   அப்புறமா வாங்க...

   நீக்கு
 3. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  என்றென்றும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 4. அந்தக் காலத்துல சொல்லுவாங்க...

  ராசியில்லாதவங்க கையில வைரம் இருக்காது.. நிறைய்ய பிரச்ச்னை வரும் ன்னு..

  இங்கேயும் அதே மாதிரி...

  நல்லவிதமாக சுபம்...

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை வணக்கம். கதை இவ்வளவு சீக்கிரம் முடிந்து விட்டதே..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெடுங்கதை என்று அறிவித்து விட்டு இரண்டே வாரத்தில் முடிந்து விட்டதைத்தான் குறிப்பிட்டேன்.

   நீக்கு
 6. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். கௌதமன் ஜிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

  துரையின் கதை படிக்க நிறைய தில் வேண்டும். எல்லோருக்கும் பிடித்திருப்பதால் நல்ல கதை என்று நினைக்கிறேன்.
  டிடெக்டிவ் ஸ்டோரீஸ் out of my league:)

  பதிலளிநீக்கு
 7. கதை நல்லா இருந்தது.

  ஆனால், நெடுங்கதைக்குத் திட்டம்போட்டு படிக்கறவங்களையே எல்லாவற்றையும் கற்பனை பண்ணவச்சு மெதுவாஎழுதப் பொறுமையில்லாமல் அவசர அவசரமாக முடித்தது போன்று இருக்கிறது.

  3 மணி நேர சினிமாவை முதல் பத்து நிமிடங்களுக்குப்பின் மீதிக் கதையை அடுத்த பத்து நிமிடத்தில் சுருக்கின மாதிரி

  பதிலளிநீக்கு
 8. கருத்தும் நடையும் முதிர்ந்த வாசகர்களுக்கு என்று கூறி எதையும் எழுதுவதுதான்அப்பாதுரையின் டச்சா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சென்ற வாரமே எனக்கு இது தோன்றியது. நான் கூட லா.ச.ரா., மெளனி, கரிசல் காட்டு ராஜ்நாராயணன் ரேஞ்சுக்கு எதிர்பார்த்து விட்டேன். பொங்கல் சிறப்பிதழில் பதில்களை நினைத்தால் பயமாக இருக்கிறது.

   நீக்கு
  2. ஒரு விதத்தில் அவர் சொன்னது சரிதானே பானுமதி. ஆனால் அப்பாதுரை அந்த அளவிலும் எழுதுவார். இப்படியும் எழுதுவார். அவருடைய நசிகேதன் படிங்க! விசாலமான அவர் அறிவு புரியும். அநாயாசமாக அசத்துவார். இந்தக் கதை ஏதோ விளையாட்டாக எழுதி இருக்கார் போல!

   நீக்கு
  3. //சென்ற வாரமே எனக்கு இது தோன்றியது. நான் கூட லா.ச.ரா., மெளனி, கரிசல் காட்டு ராஜ்நாராயணன்..
   இவங்களையெல்லாம் நான் படிச்சது கூடக் கிடையாதே..

   நீக்கு
  4. /அநாயாசமாக அசத்துவார். இந்தக் கதை ஏதோ விளையாட்டாக எழுதி இருக்கார் போல!
   ரொம்ப நன்றி
   சமீபத்தில் படித்த erle stanley gardner பார்த்த john wick படங்களின் பாதிப்பில் கட்டிய கதை.. ரசித்து தான் எழுதினேன் 😁

   நீக்கு
  5. அப்பாதுரையின் பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் தான் அவரை இத்தகையதொரு (மொழிபெயர்ப்புக் கதை போல்) கதையைப் படைக்க வைத்திருப்பதை நேற்றைய எ.பி. வாட்சப் குழு மூலம் அறிந்து கொண்டேன். அப்பாதுரையிடமிருந்து நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் விரைவில் அவருடைய முத்திரையுடன் கூடிய ஓர் கதை/நெடுங்கதையை எதிர்பார்க்கிறேன். இதை திருஷ்டி கழிச்சதாக வைச்சுக்கலாம். :))))))))

   நீக்கு
 9. காலை வணக்கம். கதை பிறகு தான் படிக்க வேண்டும் - மொத்தமாக.

  பதிலளிநீக்கு
 10. ஜூல் போச்சு
  ஜூல் வந்துது
  டும்..டும்..டும்..!

  பதிலளிநீக்கு
 11. காலம்பரவே சொல்லணும்னு. கு.கு. கூப்பிட்டதால் அவசரமாப் போயிட்டேன். கதை இன்னும் 2,3 வாரங்களுக்குப் போகும்னு நினைச்சால் அப்பாதுரை இவ்வளவு சீக்கிரம் முடிச்சுட்டார். ஆனால் வழக்கத்துக்கு மாறாக சுபமான முடிவு. எப்போதும் அடுத்த என்ன நடந்திருக்கும் என்பதை நாம் தான் யோசிச்சுக்கணும். யூகத்தில் விடுவார். அல்லது அப்போதைய நிகழ்வோடு முடிச்சிருப்பார். இம்முறை சுபமான முடிவோடு மங்களகரமா முடிச்சுட்டார்! :)))))

  பதிலளிநீக்கு
 12. படித்ததற்கும் கருத்திட்டதற்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 13. நெடுங்காலத்துக்கு அப்புறம் எபியில் அப்பாதுரை ஸாரை பார்க்கக் கொடுத்து வைத்ததில் ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது. மூசுவில் தொடர்ந்து எழுதியதில் விட்டுப் போன அவர் எழுத்து வீரியம் கொஞ்சமேயாயினும் மங்கிப்போயிருக்குமோ என்ற ஐயத்தில் லவலேச நியாயமும் இல்லாது போனதில் பரம திருப்தி. புதுக்கருக்கு கலையாத துள்ளலும் ஆவேசமும் போட்டி போடும் கதையை வாசிப்புக்கு உட்படுத்தியதில் மகிழ்ச்சி.

  பதிலளிநீக்கு
 14. இந்த மாதிரி கதை, அந்த மாதிரி கதை என்று கதைகள் எந்த வகைப்படுத்தலுக்கும் அப்பாற்பட்டவை. என் பார்வையில் கதைகள், கதை சொல்லல் திறமையில் கதை என்ற ஒரே ரூபமாகத் தான் வடிவெடுக்கிறதே தவிர, மசாலா கதை--திகில் கதை--காதல் கதை -- துப்பறியும் கதை என்ற எந்த பாகுபாடும் கதைகளுக்கு இல்லை;
  எல்லாக் கதைகளிலும் எழுதுபவனின் கதை சொல்லல் திறமை தான் வெளிப்படுகிறது.
  அப்பாதுரை ஸார் தன் திறமையில் கொஞ்சம் கூட குறைவு வைக்காமல் வாரி வழங்கியிருக்கிறார். அவரது எழுத்து சாகசத்திற்கு என் பாராட்டுகளை சொல்லியே ஆக வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. வாசிப்புப் பக்குவம் என்று ஒன்று இருப்பதாக நம்புகிறேன். இது எழுதுபவனையும் உள்ளடக்கிய ஒரு பக்குவம். அந்த பக்குவம் இல்லை எனில் அவனால் சிறப்பாக எழுதவே முடியாது என்பது இன்னொரு உண்மை. சொல்லப்போனால் எழுதுபவன் தன் எல்லாக் கதைகளையும் தன் வாசிப்பு அனுபவத்துணை கொண்டே எழுதுகிறான். அந்த விதத்தில் தான் எழுதுபவைக்கும் அவனே முதல் வாசகனாகிப் போகிறான். அப்படி தன் எழுத்தை தானே ரசித்து எழுத்துவது ஒரு செம்மாந்த பெருமை. எதற்கு இதை இங்கு குறிப்பிட நேர்ந்தது என்றால்---

  பதிலளிநீக்கு
 16. நீண்டு வரும் இந்தக் கதையில் ஒரு வெண்பாவை வாசித்த பொழுது மனம் மகிழ்ந்து போனேன். இதான் எழுதியவனின் எழுத்து அனுபவம். எழுத்து என்பது கதை, கட்டுரை, கவிதை என்ற செயற்கை வடிவங்களிலிருந்து மீறி வெளிப்படும் நேர்த்தி. இந்தக் கதைக்கு இந்த இடத்தில் இந்த வெண்பா எழுதுதல் ஏற்புடைத்தா என்ற வரம்பு சட்டங்களையெல்லாம் உடைத்துக் கொண்டு வெளிப்படும் நேர்த்தி. எழுதிக் கொண்டே வரும் கதைக்கு நடுவே ஒரு கவிஞனாகவும் கதை எழுதுகிறவன் தோற்றம் கொள்கிறான் பாருங்கள், அதான் அவனது சொல்லிச் சொல்லி வியந்து போகிற சிறப்பு. நான்கு தடவைகள் அந்தக் கவிதையை வாசித்திருப்பேன். திருப்தி அடையவில்லை. மீண்டும் மீண்டும் வாசிக்கத் தோன்றியது.

  'பொல்லாரை வெல்லுமென் திட்டம் நிறைவேற நீயெனக்கு
  நல்லாசி கட்டாயந் தா' -- என்னவொரு நியாயமான வேண்டுகோள்!

  ஒரு சக எழுத்தாளரின் எழுத்து மேன்மை கண்டு சிலிர்த்துப் போனேன்!..

  பதிலளிநீக்கு
 17. ஒரு கதை எப்படி வார்த்தை வார்த்தையாக உருவெடுக்கிறது என்பதை அணு அணுவாக ரசித்து வெளிப்படுத்தும் மேம்பாடு கைவரப் பெற்றவன் எழுத்தாளன். இந்த உருக்கொள்ளும் சாகசத்தை வாசகன் அறிய வாய்ப்பில்லை என்பதினால் ஒட்டுமொத்த கதையை ஒரு சின்ன பேப்பர் Bag-கில் அடைத்து 'ப்பூ' இவ்வளவு தான் இந்தக் கதையா?- என்று வாசித்து நகர்வர். நேர்த்தியாக வாசக உள்ளத்தையும் தன் வசமாக்கிக் கொண்ட அப்பாதுரை போன்ற எழுத்தாளர்களால் இதெல்லாம் சாத்தியப்படாத காரியம் ஆகையால் தான் அவர் எழுத்து எப்படிப்பட்ட இடைவெளியையும் தகர்த்து கொண்டு, பாறாங்கல்லைத் துளைத்துக் கொண்டு பூ மலர்வது போல மலர்கிறது என்று உணர்கிறேன்.

  பதிலளிநீக்கு
 18. நல்லதொரு வாசிப்பு அனுபவத்தைத் தந்தமைக்கு நன்றி அப்பாதுரை ஸார்! முடிந்த பொழுதெல்லாம் எழுதுங்கள். நன்றி.;

  பதிலளிநீக்கு
 19. இது எப்படி முடியும் என்று யாருக்காவது ஏதாவது தோணுதா?
  //ஹா ஹா ஹா கீதாக்கா நல்லா கேட்டீங்க. இப்ப கதையாளு டென்ஷன்ல இருக்காப்ல...எப்படி வைரத்தை ஆட்டைய போடறது, நிவாவை எப்படி ஆட்டத்தை அடக்கறதுனு கேல்குலேஷன்ல இருக்கப்ப//
  பாருங்க உங்க கேள்விக்கு நான் போன வாரம் கொஞ்சம் சொல்லிட்டேன்ல எப்படி முடியப் போகுதுன்றதுக்கு!!
  கதை ஆள் ரொம்பவே ஸ்பீடா அதி வேகமா ப்ளான் போட்டு எல்லாரையும் மாட்டி விட்டுட்டாரு. கதை கொஞ்சம் ஆங்கிலப் புத்தக ஸ்டைல் நினைவூட்டியது.
  ஜூல் பாவம் ஏன் அது இறக்கணும்…அதுக்கு குடிக்க எல்லாம் கொடுத்து….அது கொஞ்சம் கஷ்டமாருந்துச்சு. கடைசி முடிவை கதையின் போக்கிலேயே அப்படியே விட்டிருந்தா நல்லாருந்துருக்குமோ…..வாசிக்கறவங்க முடிவுல
  மத்தபடி உங்கள் எழுத்து நடை ஈர்த்தது.
  கீதா

  பதிலளிநீக்கு
 20. அட இங்கிலிஷ் நிலத்தில் நடக்கும் கதைக்குள்ள ஒரு தமிழ் பா. அழகா எழுதியிருக்கீங்க அதை ரசித்தேன். // பொல்லாரை
  வெல்லுமென் திட்டம் // ஹா ஹா ஹா பொல்லாரை?!! பொல்லாரிலும் நல்லாரோ!!

  எபி ல எப்பவுமே உணர்வு பூர்வமான கதைகள், நகைச்சுவை மண் சார்ந்தவை என்று வரதுக்கிடையில் தல அஜீத் படம் பில்லா போல ஓன்னு!!
  கீதா

  பதிலளிநீக்கு
 21. நேற்று ’டும் டும்’ -க்குப்புறம் திரும்பி வர நினைத்தேன். நேரமில்லை. இன்று கிரிக்கெட்டுக்கு முன் இதனை எழுதிவிடுகிறேன்!

  Crime thriller- அமெரிக்கக் குற்றப் பின்புலம். தமிழ் நடையில் வார்த்தைகள் சீறுவது quite interesting. சுவாரஸ்யம்! அப்பாவி ஜூல் ஆடிப்பாடியே போனதில் சந்தோஷம். அதென்ன நிவா? வீட்டில் ரவா தீர்ந்துபோய்விட்ட கவலையில் இருக்கும்போது மனதில் வந்த பாத்திரமா?

  ரொம்பப்பேருக்கு கதையில் ஏமாற்றம் எனப் படித்தேன்! எனக்கோ பெருங்குறை.. படமெங்கே? கவர்ச்சிப்படமில்லாமல் க்ரைமாவது, த்ரில்லராவது? எப்படி ரசிப்பது!

  Erle Stanley Gardner, James Hadley Chase, Sydney Sheldon என இந்தமாதிரி ஆசாமிகளையே இன்னும் படித்துப் பொழுதுபோக்குகிறீர்களா.. வேறேதும் வாசிப்பில் உண்டா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ESG JHC எல்லாம் ரொம்ப ரொம்ப நாளைக்கப்புறம் படித்தேன்.. இதெல்லாம் அதிகம் படிப்பதில்லை.. ஒரு கதை படிச்சா நூறு கதை படிச்ச மாதிரி :-)

   நீக்கு
  2. ESG புத்தகங்கள் அவர் காலத்தில் ஒரு நாளைக்கு 50000 காபி விற்குமாம். ஒரு நாளைக்கு!!

   நீக்கு
  3. வாசிப்பில் இருக்கும் இன்னும் சில டூமசின் count of mc (my favorite fiction in english (?), ஆதி சங்கரரின் விவேகசூடாமணி (என்றைக்காவது தமிழில் தரணும்)

   நீக்கு
  4. Count of MC (obridged ) எனக்கு பள்ளிக்கூட நாட்களில் Non-de-tail text book.

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!