சனி, 19 டிசம்பர், 2020

இ வா நே ம செ : அனைருக்குமான வீடு

 

** அம்மா மினி கிளினிக் திட்டம்: முதல்வர் பழனிசாமி துவக்கி வைத்தார். 

சென்னை: தமிழகம் முழுவதும் 'அம்மா மினி கிளினிக்' திட்டத்தை முதல்வர் பழனிசாமி இன்று (டிச.,14) துவக்கி வைத்தார்.

மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, முதல் கட்டமாக 630 ‛அம்மா மினி கிளினிக்'குகள் துவக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் மினி கிளினிக் துவங்கப்படுகிறது.

இந்த ‛அம்மா மினி கிளினிக்'கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும். சளி, காய்ச்சல், தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும், சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காலை 8 மணி முதல் 12 வரையும், மாலையில் 4 மணி முதல் 8 மணி வரையும் கிளினிக்குகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

** அம்மா மினி கிளினிக் என்பது, 'அம்மா நலமகம்' என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பிறகு வந்த செய்தி தெரிவிக்கிறது. 

==== 


ஐதராபாத்:தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில், பசித்தவர்கள் வந்து இலவசமாக சமைத்து சாப்பிட்டு, ஓய்வெடுத்து செல்லவும், மாணவர்கள் படித்து பயன்பெற, பல புத்தகங்கள் அடங்கிய, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை, அப்பகுதியை சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ். இவரது மனைவி டாக்டர் காமேஸ்வரி, கடந்த, 14 ஆண்டுகளாக செய்து வருகிறார். 


இதன் ஒரு பகுதியாக, 'அனைவருக்குமான வீடு' என்ற சேவையை துவங்கினார். ஐதராபாதின், கோத்தாபேட் என்ற இடத்தில், நான்கு அறைகளை உடைய வீடு ஒன்றை உருவாக்கி, அதை ஏழை மக்களுக்காக, 24 மணி நேரமும் திறந்து வைத்துள்ளார்.இந்த வீட்டுக்கு, யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அங்கு, சமையலுக்கு தேவையான அரிசி, காய்கறி, மளிகை உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் இருக்கும். தங்களுக்கு தேவையானதை சமைத்து சாப்பிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்து செல்லலாம். இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது.  

====================== 


உதவி என்பது ஒரு கை கொடுப்பது மற்றொரு கைக்கு தெரியக்கூடாது என்பார்கள். அது முதுமொழி.இன்று ஒருவர் செய்யும் உதவி ஊடகத்தின் மூலமாகவோ மற்றவர்கள் மூலமாக அடுத்தவர்களுக்கு தெரிந்தால் மட்டுமே அவர்களும் உதவ முன்வருவார்கள். துவக்கத்தில் சம்பளம் கொடுத்து வெளியில் சமைத்து உணவு வழங்கினோம். ஆனால் அந்த செலவையும் மிச்சப்படுத்துவதற்காக தினமும் வீட்டிலேயே என்னுடைய மனைவியும், அம்மாவும் சமைத்து தருகிறார்கள். சமூக ஆர்வலர்களின் பங்களிப்பு இல்லாத நாட்களில் எங்கள் சொந்த பணத்தில் உணவு வழங்குகிறோம். பசியை போக்க உதவுவதற்கு 63799 87846ல் தொடர்பு கொள்ளலாம்.
தவபாலன்,
நிறுவனர்,
பசி புரட்சி அறக்கட்டளை  


இந்த அமைப்பினர் கொரோனா தொற்று காலத்தில் சமூக ஆர்வலர்களின் உதவியோடு மக்களின் பசி போக்க பத்து ரூபாய் பசிப்புரட்சி மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டகுடும்பங்களுக்கு தலா ரூ. 1000 மதிப்புள்ள பலசரக்கு மற்றும் 5 கிலோ அரிசி வழங்கினர்.தொடர்ந்து 67 நாட்கள் ஆதரவற்றோர், மனநலம் குன்றியோர், முதியோர்களுக்கு 3 வேளை உணவுகள் வழங்கினர். இதை ஆண்டு முழுவதும் தினம்தோறும் 100 நபர்களுக்கு மதிய உணவு வழங்கும் நோக்கத்தில்பசி புரட்சி அறக்கட்டளை துவக்கப்பட்டுள்ளது.

===================== 

உடுப்பி மாவட்டம் பைண்டூரைச் சேர்ந்த அனுதீப் ஹெக்டேவுக்கும், மினுஷா காஞ்சனுக்கும், சமீபத்தில் திருமணம் நடந்தது. லட்சத்தீவுக்கு தேனிலவு செல்வது குறித்து ஆலோசித்த அவர்களுக்கு, தங்கள் சொந்த ஊரில் சோமேஷ்வரா கடற்கரையில், கழிவுப் பொருட்கள் சேர்ந்திருப்பது நினைவுக்கு வந்தது. அவற்றை அகற்ற இருவரும் முடிவு செய்தனர்.அடுத்த நாள் தேனிலவுக்கு செல்லாமல், கையுறைகள் மற்றும் கோணிப்பையுடன் கடற்கரைக்கு புறப்பட்ட அவர்களை பார்த்து உறவினர்களும், நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அதுபற்றி கவலைப்படாத அவர்கள், தங்கள் பணியை ஆர்வமுடன் துவக்கினர். இதுகுறித்து அவர்கள், சமூக வலைதளங்களில் தகவல் ஏதும் பகிரவில்லை. இருப்பினும், சேவை குறித்து அறிந்த, 1,500க்கும் மேற்பட்ட இளைஞர்கள அவர்களுடன் கைகோர்த்தனர். அனைவரும் இணைந்து கடற்கரையில் இருந்த, 600 டன் கழிவுகளை சேகரித்து, உள்ளாட்சி நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர். இந்த தகவல் சமூக ஊடகங்களில் பரவியதால், புதுமண தம்பதியருக்கு பாராட்டுகள் குவிகின்றன.  

======================== 

தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப நிபுணர் மல்லேஸ்வர் ராவ், ஓட்டல், திருமணங்களில் வீணாக்கப்படும் உணவுகளை சேகரித்து, 2,000 பேரின் பசியை போக்கும் சேவை செய்து வருகிறார்.  என் முயற்சியை பலர் கிண்டல் செய்தனர். நண்பர்களுடன் இணைந்து, இந்த முயற்சியை தொடர்ந்தோம்.விழாக்கள் எப்போதாவது தான் நடக்கும்.அதனால், ஓட்டல்கள் உள்ளிட்டவற்றை தொடர்பு கொண்டோம். விற்பனையாகாத உணவுகளை வீணடிக்காமல், அவர்கள் அதை எங்களுக்கு தருகின்றனர்.இந்த முயற்சியால், 2,000க்கும் மேற்பட்டோருக்கு தினமும் உணவளித்து வருகிறோம்.

===================== 

மதுரை கலெக்டர் அலுவலகத்தில், நேற்று காலை, மனுவுடன் ஒரு மூதாட்டி நின்றிருந்தார். அவரிடம் கலெக்டர் அன்பழகன் விசாரித்தபோது, அவர் கோரிப்பாளையம் பாத்திமா, 78, எனத் தெரிந்தது.அவர், வயல்காட்டு தெருவில், பாண்டியராஜன், வனஜா தம்பதி வீட்டில், 50 ஆயிரம் ரூபாயில் ஒத்திக்கு குடியிருந்தார்.தற்போது, வீட்டை காலி செய்து அருகில் வசிக்கிறார். ஒத்திப் பணத்தை திரும்பி தராததால், மனு கொடுக்க வந்தது தெரிந்தது. உடனடியாக, பாத்திமாவை, அவரது வீட்டிற்கு தன் காரில் கலெக்டர் அழைத்து சென்றார். தாசில்தார் முத்துவிஜயனிடம், விசாரித்து, விரைவில் பணத்தை பெற்று கொடுக்க உத்தரவிட்டார். தாசில்தார் விசாரித்தபோது, வனஜாவும் வறுமையில் இருப்பதால், வீட்டை மறு ஒத்திக்கு விட்டு, பணத்தை திருப்பி வழங்குவதாக உறுதியளித்தார்.


=========================== 

சூரிய சக்தி மின்சாரம் பள்ளிகளுக்கு வருவாய்: 

புதுடில்லி : டில்லியில், அரசு பள்ளி கூரைகளில் பொருத்திய, 'பேனல்'கள் வாயிலாக உற்பத்தியாகும் சூரிய மின்சக்தியால், ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.


டில்லியில், உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளின் கூரைகளில், சூரிய மின்சக்திக்கான பேனல்களை அமைக்க, மாநில அரசு முடிவு செய்தது. மத்திய அரசின் சிறப்பு திட்டத்தின் கீழ், இதற்கான பணி மேற்கொள்ளப்படுகிறது. டில்லியில் தற்போது, 150 பள்ளிகளின் கூரைகளில், 21 'மெகா வாட்' மின்சாரம் உற்பத்தி செய்யும் பேனல்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இவற்றை பள்ளிகள் உபயோகிப்பதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனையாகிறது.

இதனால், பள்ளிகளின் மின் கட்டணத்தில் ஆண்டுதோறும், 8.8 கோடி ரூபாய் சேமிக்கப்படுவதுடன், கூடுதல் மின்சாரம் விற்பனை வாயிலாக, அரசு பள்ளிகள் ஆண்டுக்கு, 8.5 கோடி ரூபாய் வருவாய் ஈட்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

====  

ரூ.29 ஆயிரம் கோடி நன்கொடை: அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவி தாராளம். 


வாஷிங்டன்: அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட் 4 மாதங்களில் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.

உலகின் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் நிறுவனத்தின் தலைவரும் உலகப் பணக்காரர்களில் ஒருவருமான ஜெப் பெசோசின் மனைவி மெக்கன்சி ஸ்காட். இவர்கள் இருவரும் கடந்த ஆண்டு முறைப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். அப்போது அமேசான் நிறுவனத்தின் 4 சதவீத பங்குகளை தனது மனைவி மெக்கன்சிக்கு ஜெப் பெசோஸ் ஜீவனாம்சமாக வழங்கினார். இதன் அப்போதைய மதிப்பு சுமார் ரூ.2 லட்சத்து 94 ஆயிரம் கோடி ஆகும். தற்போது மெக்கன்சியின் சொத்து மதிப்பு 60.7 பில்லியன் அமெரிக்க டாலராக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 லட்சத்து 46 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது.

இதன் மூலம் அவர் உலகின் 18-வது பணக்காரராகவும், உலக அளவில் பெண்களில் 3-வது பணக்காரராகவும் விளங்குகிறார். தனது சொத்து மதிப்பு உயர்ந்து வரும் அதேநேரத்தில் அவர் அறக்கட்டளைகளுக்கு நன்கொடை அளிப்பதிலும் வள்ளலாகத் திகழ்கிறார். ஏற்கெனவே கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதிலிருந்து கடந்த ஜூலை மாதத்துக்குள் 1.7 பில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.12 ஆயிரத்து 500 கோடி) பல்வேறு அறைக்கட்டளைகளுக்கு நன்கொடையாக வழங்கியிருந்தார்.

இந்நிலையில் அடுத்த 4 மாதங்களில் மீண்டும் 4 பில்லியன் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.29 ஆயிரத்து 437 கோடி) 384 தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். தொற்றுநோயுடன் போராடும் அமெரிக்கர்களுக்கு உதவ விரும்பியதாகவும், அதற்காக இந்த நன்கொடைகளை வழங்கியதாகவும் மெக்கன்சி தெரிவித்துள்ளார்.

=======  


45 கருத்துகள்:

 1. காலை வணக்கம் அனைவருக்கும்.

  இன்றைய பாசிடிவ் செய்திகள் மிகவும் நன்று

  பதிலளிநீக்கு
 2. அனேகமான செய்திகள் படித்திராதவை.

  இலவச தங்கும் மற்றும் உணவு தயாரித்துக்கொள்ளும் வசதி - புதுமைச் சிந்தனை. இதைப் படித்தவுடன், மும்பையில் அந்தக் காலத்தில் இத்தகைய facility ஒன்று இருந்ததை எனது அண்ணன் உபயோகித்தது நினைவுக்கு வருது (மிக்க் குறைந்த பணத்துக்கு ஒரு படுக்கை, அங்கு தங்கி மும்பை வேலைகளை முடித்துக் கொள்ளலாம். ஹோட்டல்ல தங்க எக்கச்சக்கமாக ஆகும் என்ற நிலைமை)

  பதிலளிநீக்கு
 3. வீணாகும் உணவு -- மிகப் பெரிய சேவை இது. மற்றவர்களுக்காக தான் இரந்து சேவை செய்ய மனமும் நேரமும் உழைப்பும் வேண்டும். வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  உண்மை.  என்னால் எனக்கான அத்யாவசிய வேலைகளையே நேரத்துக்கு ஒழுங்காய்ச செய்து கொள்ள முடிவதில்லை!

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் அன்பு ஸ்ரீராம். அன்பு முரளிமா.
   எல்லா நாட்களும் நல்ல நாட்களாக அமைய இறையிடம் பிரார்த்தனைகள்.

   நீக்கு
  3. வணக்கம் வல்லிம்மா...  வாங்க..

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் நன்மை பெருகிடப் பிரார்த்தனைகள். மழை நின்று சூரியன் வெளிவந்து ஒளி வீசிப் பிரகாசிக்கவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 5. அத்தனை செய்திகளும் நலமானவை நன்றி. தேனிலவை,கடற்கரை சுத்தத்தில் செலவழித்த தம்பதியர்க்கௌ இறைவன் நல் வாழ்வை அளிக்கட்டும்.
  பசி போக்கும் அனைவரும் வித விதமான முறையில் நன்மை
  செய்து வருகிறார்கள்.

  அதுவும் வீணாகும் உணவைச் சேகரித்துக் கொடுப்பவர்களுக்கு
  எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

  இந்தக் கொரோனா காலம் தான் எத்தனை
  விதமான நன்மைகளை வெளிக்கொணர்கிறது!!!!!!

  இந்த செய்திகள் அனைத்தும் நம்பிக்கை கொடுப்பதாக அமைந்திருக்கிறது.
  மிக நன்றி மா ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 6. எல்லாச்செய்திகளும் புதுசு. மும்பைப் படுக்கை நெல்லை சொன்னது போல் புனேயிலும் உண்டு. கல்கத்தாவிலும் உண்டு. ஆனால் அதுவும் இப்போதெல்லாம் அதிகக் கட்டணம். பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கட்டணம் என்றால் அத்தமில்லையே...

   நீக்கு
  2. வெளில தங்க 500 ரூபாய் ஆகும் என்ற நிலைமையில் அப்போ (89) படுக்கைக்கு 30-50 ரூபாய். இது வேலைக்கு இண்டர்வியூக்கு போறவங்க, எம்பஸி வேலைக்காகப் போறவங்களுக்கு உபயோகம்.

   ஆனா பணம் உள்ளவங்களும் இதை மிஸ்யூஸ் பண்ணுவதுதான் இத்தகைய facilityயின் நோக்கத்தைச் சிதைப்பது. (உதாரணமா கோவை சாந்தி இண்டஸ்ட்ரீஸ்.... ஏழைகளுக்காக அமைத்த ஃபார்மஸி, உணவு சேவை..என்று பலவற்றையும் பணமுள்ளவர்களும், தங்கள் பணத்தைச் சேமிப்பதற்காக உபயோகித்தாங்க. அந்த ஏரியாவில் உள்ள வீடுகள்லாம் வாடகை அதிகமாம், 20 ரூபாய்லயே உணவுலாம் அங்க சாப்பிட்டுக்கொள்ளலாம் என்பதற்காக. ரேஷன்ல ஏழைகளுக்குக் கொடுப்பவைகளை (2000 ரூ முதற்கொண்டு) காரில் வந்து வாங்கிட்டுப் போறவங்க அனேகர். இப்படி இருக்கு நம்ம மக்களின் நல்லெண்ணம்.

   நீக்கு
  3. காரில் வந்து இறங்கி ரேஷனில் இலவச அரிசி வாங்கியவரைப் பார்த்திருக்கிறேன்!  

   நீக்கு
  4. பராமரிப்புக்குச் செலவு செய்ய வேண்டாமா? புனேயில் அறை கிடைப்பது கஷ்டம் எனில் வாடகை அதை விட அதிகக் கஷ்டம். ஆகவே ஒரு நீண்ட கூடத்தில் ரயில்வே டார்மிடரி மாதிரிக் கட்டில்கள் போட்டுப் பக்கத்திலேயே ஒரு அலமாரியும் கொடுத்துடுவாங்க. கட்டணத்தோடு தான். சாப்பாடு அங்கேயே போடுபவர்களும் உண்டு. இல்லை எனில் வெளியே சாப்பிட்டுக்கலாம்.

   நீக்கு
 7. திருமதி .மெக்கென்சி.... இன்னும் நிறைய நலங்களாய்ச் செய்யட்டும்.
  இந்த ஊரில் என்ன செய்தாலும் அதிலும் குற்றம் கண்டுபிடிப்பார்கள்.
  அப்படி ஒரு நல்லவரை காயப் படுத்த முயற்சித்துத்
  தோற்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குற்றம் கண்டு பிடிப்பவர்கள் எங்குதான் இல்லை?!!

   நீக்கு
 8. திரு சூரியப் ப்ரகாஷும் அவர் மனைவியும் செய்யும்
  தொண்டு மனதுக்கு நெகிழ்ச்சி. மேன்மேலும் வளம் அடையட்டும்.

  பதிலளிநீக்கு
 9. போற்றத்தக்கோரின் அருமையான செயல்களுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. மருத்துவர் சூரிய பிரகாஷ் மற்றும் அவரது மனைவியின் சேவை போற்றுதலுக்குறியது

  பதிலளிநீக்கு
 11. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க நலம்.  வாங்க துரை செல்வராஜூ ஸார்...  வணக்கம்.

   நீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இந்த வார பாஸிடிவ் செய்திகள் அனைத்தும் அருமை.

  தெலுங்கானா ஐதராபாத்தை சேர்ந்த டாக்டர் சூரிய பிரகாஷ் தம்பதியரின் நல்ல மனம் போற்றப்பட கூடியது. அவர்களின் அனைவருக்குமான வீடு என்ற திட்டத்தில் உதவி செய்யும் அந்த மனப்பான்மைக்கு வாழ்த்துக்கள்.

  அதே தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த மல்லேஸ்வர் ராவ் அவர்களின் முயற்சியால் தினமும் இரண்டாயிரம் பேருக்கு மேலாக பசியைப் போக்கும் சேவை உண்மையிலே சிறப்பானது.

  தேனிலவை ரத்து செய்து விட்டு, கடற்கரை சுத்தம் செய்யச் சென்ற தம்பதிகளை மனமாற வாழ்த்துவோம்.

  இன்றைய நே.ம.செய்திகள் அனைத்தும் மனதிற்கு மகிழ்வூட்டுகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. தேனிலவுக்கு செல்லாமல் கடற்கரையை சுத்தப்படுத்திய இளம் தம்பதியினர் வாழ்க பல்லாண்டு. விவாகரத்து பெற்று தொண்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கும்,மெக்கன்ஸி கருத்தை கவர்கிறார்.
  புது ஊர்களுக்கு செல்பவர்களுக்கு தங்கும் இடம் ஒரு பிரச்சனை. அப்படிபட்டவர்களுக்கு உதவும் டாக்டர்.சூர்ய பிரகாஷ்,அவர் மனைவி காமேஸ்வரி இருவரும் பாராட்டுக்குரியவர்கள்.
  உணவகங்களில் வீணாகும் உணவால் பசியாற்றுபவர்களின் சேவை சிறப்பானது. மொத்தத்தில் இன்றைய பாசிட்டிவ் செய்திகள் எல்லாமே எத்தனை நல்ல உள்ளங்கள்!என்று எண்ண வைத்தது.

  பதிலளிநீக்கு
 15. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் கில்லர் ஜி.

  பதிலளிநீக்கு
 16. இன்றைய பாசிட்டிவ் செய்திகள் அனைத்துமே சிறப்பு. அனைவருக்கும் பாராட்டுகள்.

  பகிர்ந்து கொண்ட உங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. அனைத்துச் செய்திகளும் போற்றப்பட வேண்டியவையே!

  பதிலளிநீக்கு
 18. அம்மா மினி கிளினிக் நல்ல முயற்சி. வெளி நாடுகளில் இவை போன்றவற்றை ஹெல்த் சென்டர் என்பார்கள். இந்த கொரோனா காலத்தில் சாதாரண சளி, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்கு பெரிய ஆஸ்பத்திரிகளில் வைத்தியம் பார்ப்பதில்லை. தனியார் மருத்துவனைகள் ஆன் லைனில் வைத்தியம் பார்த்துக் கொள்ளச் சொல்கிறார்கள். ஏழை மக்கள் என்ன செய்வார்கள்? மினி கிளினிக் கண்டிப்பாக உதவியாக இருக்கும். 
  அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சோலார்  பேனல்கள்  அமைப்பதும் வரவேற்க்கத்தக்க முயற்சி. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் மட்டுமல்லாது பெரிய குடியிருப்பு வளாகங்களிலும் இதை பின்பற்றலாம்

  பதிலளிநீக்கு
 19. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 20. போற்றுதலுக்கு உரியவர்கள்
  போற்றுவோம்

  பதிலளிநீக்கு
 21. இப்படி சில மனிதர்களால் தான் உலகம் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது .

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!