சனி, 26 டிசம்பர், 2020

நல்ல செய்திகள்

 

6 மாதத்தில் 5 லட்சம் சம்பாதித்த கல்லூரி மாணவிகள். 


==== 
புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் 2024-ல் வருகிறது ஆப்பிள் கார்:


கலிபோர்னியா: ஆப்பிள் நிறுவனம் டைட்டன் திட்டம் என்ற பெயரில் தனித்துவமான பேட்டரி தொழில்நுட்பத்துடன் 2024-ல் தானியங்கி மின்சார காரை விற்பனைக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது.

பெட்ரோலிய எரிபொருட்களின் தட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு காரணமாக மின்சார வாகனங்களின் சந்தை வளர்ந்து வருகிறது. அமெரிக்காவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம் லாபகரமாக இயங்கி வருகிறது. தற்போது ஆப்பிள் தனது சொந்த காரை 2024-ம் ஆண்டில் அறிமுகப்படுத்த உள்ளது. புதிய பேட்டரி தொழில்நுட்பத்துடன் வரப்போகும் இக்கார் இத்துறையின் அடுத்த கட்டமாக இருக்கும் என கூறுகின்றனர். மின்சார வாகனங்களை பொறுத்த வரை பேட்டரிகள் தான் அதிகம் செலவு வைக்கக்கூடியவையாக உள்ளன. ஆப்பிள் நிறுவனத்தின் மோனோ செல் தொழில்நுட்பம் அதனை குறைக்கும். அதன் மூலம் செலவு குறையும், நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்கின்றனர்.

ஆப்பிள் காரின் திட்டம் அந்நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு மற்றும் மெஷின் லேர்னிங் பிரிவு துணை தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர் முன்னதாக கூகுள் தேடுபொறியின் செயற்கை நுண்ணறிவு பிரிவுக்கு தலைவராக இருந்தவர். ஆப்பிளின் சி.இ.ஓ., டிம் குக் இந்த கார் திட்டத்தை செயற்கை நுண்ணறிவின் தாய் திட்டம் என அழைக்கிறார். ஆப்பிளின் கார் வெளிவரும் போது அது முதன்முதலில் ஆப்பிள் போனை பார்த்தது போன்ற அனுபவத்தை தரும் என ஊழியர்கள் கூறியுள்ளனர்.
===== 

துல்லியமான அணுக் கடிகாரம்!

உலகிற்கு நேரம் காட்டும் நேர அளவுகோலாக இருப்பது அணுக் கடிகாரம். இந்தக் கடிகாரத்தைக்கூட, மேலும் துல்லியமாக நேரம் காட்டும்படி செய்ய முடியும் என்பதை விஞ்ஞானிகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, கடந்த, 1968லிருந்து, சர்வதேச நேர அளவு கோலாக இதுவே இருந்து வருகிறது.

தற்போது, அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியி லுள்ள விஞ்ஞானிகள், யட்டெர்பியம்-117 என்ற பொருளின் 350 அணுக்களை, இரண்டு லேசர் கதிர்கள் மூலம் அளந்துள்ளனர். இது முந்தைய அணுக் கடிகார முறைகளைவிட அதிக துல்லியமானது என 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பேரண்டத்தின் ஆயுட்காலம் முழுவதையும் யட்டெர்பியம்-117 கடிகாரம் அளப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுகூட, அது வெறும் 100 மில்லி செகண்ட் நேர வேறுபாட்டையே காட்டும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

===== 
கையடக்க அல்ட்ராசவுண்டு கருவி!


மருத்துவர்கள் பயன்படுத்தும் அல்ட்ரா சவுண்டு கருவி, சிறிய சக்கர வண்டியில் வைத்து தள்ளி வருமளவுக்கு பெரியது. புதிதாக வந்திருக்கும் வேவ் என்ற புதிய அல்ட்ராசவுண்டு கருவியை பாக்கெட்டுக்குள் அடங்குமளவுக்கு சிறியது.

வேவ் கருவியைக் கொண்டு, இதயம், நுரையீரல், வயிறு மற்றும் மகளிர் பிணி தொடர்பான; ஸ்கேனிங்' சோதனைகளை மேற்கொள்ள முடியும். இத்தனைக்கும் வேவ் கருவியின் எடை, 340 கிராம் தான்.

ஒரு லித்தியம் அயனி மின்கலனை 4 மணி நேரம் மின்னேற்றம் செய்தால், தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேவ் கருவியால் ஸ்கேன் செய்து தரும். ஒரு மொபைல் செயலி மூலம், இந்த ஸ்கேனரிலிருந்து உருவப்படங்கள் அலசப்பட்டு, இணையம் வழியே அவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

வேவ் அல்ட்ராசவுண்டு ஸ்கேனர் கருவியை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம், அதை சந்தா முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. மாதம் ரூ.7,300 கட்டினால், இக்கருவியை மருத்துவர்கள் வாங்கி வைத்து பயன்படுத்த முடியும். ஒரு பெரிய கருவி, சாதாரண ஸ்டெத்தாஸ்கோப் போல ஆகியிருப்பது வரவேற்கத்தக்கது தானே?
==== 

திருப்பதியில் மயக்கமடைந்த பக்தர்கள்; 6 கி.மீ தூக்கிச் சென்று காப்பாற்றிய முஸ்லிம் காவலர்.


திருப்பதி: ஏழுமலையானை தரிசிப்பதற்காக மலைப் பாதை வழியாக வந்த வயதான பக்தர்கள் இருவர் மயக்கமடைந்திருந்த நிலையில், அவர்களை முஸ்லிம் காவலர் ஒருவர் 6 கி.மீ., சுமந்து சென்று காப்பாற்றியுள்ளார்.
கொரோனா சூழலால் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பக்தர்கள் வருகைக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள், 55 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களை அனுமதிக்காமல் இருந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது தினமும் 30 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று வருகின்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி 10 நாட்கள் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. 2 லட்சம் பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக தரிசிக்க டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில் டிச.,22 அன்று ஒரு வயதான தம்பதியினர் மலைப்பாதை வழியாக கோயிலுக்கு சென்றுள்ளனர். அவர்களுக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த இடத்தில் பணியில் இருந்த ஷேக் அர்ஷத் என்ற காவலருக்கு இது குறித்த தகவல் கிடைத்தது. உடனே அங்கு விரைந்த அவர், முதலில் வயதான ஆணை தனது முதுகில் சுமந்து சென்று சாலையில் விட்டுள்ளார். பின்னர் 58 வயது நாகேஷ்வரம்மா என்ற பெண்மணியையும் சமந்து சென்று இறக்கிவிட்டுள்ளார். அங்கிருந்து அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தை ஆந்திர போலீசார் தங்களின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு காவலர் ஷேக் அர்ஷத்தை பாராட்டியுள்ளனர். இச்செயல் அவரது பணியின் மீது அவருக்குள்ள பக்தியை காட்டுகிறது என மாநில டி,ஜி.பி., புகழ்ந்துள்ளார்.

==== 
ஒரு ரூபாய்க்கு சாப்பாடு.

புதுடில்லி:   கவுதம் காம்பீர், ஒரு ரூபாய்க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர்,  , அவருடைய கிழக்கு டில்லி தொகுதியின் காந்தி நகர் பகுதியில் ஏக் ஆஷா ஜன ரசோய் என்ற பெயரில் புதிய திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார். இத்திட்டத்தின்கீழ், கவுதம் காம்பீர் அறக்கட்டளையானது 1 ரூபாய்க்கு உணவு வழங்கும்.

இது குறித்து கவுதம் காம்பீர் கூறியதாவது: உணவின்றி வெறும் வயிற்றுடன் ஒருவரும் உறங்க செல்ல கூடாது என நாங்கள் விரும்புகிறோம். அதனால், டில்லியில் இதுபோன்று 5 அல்லது 6 சமையற்கூடங்களை விரைவில் திறக்க இருக்கிறோம். சாதி, மதம், இன பேதமின்றி ஒவ்வொருவருக்கும் ஆரோக்கியம் நிறைந்த மற்றும் சுகாதார உணவு பெறுவதற்கு உரிமை உள்ளது என நான் எப்பொழுதும் நினைப்பவன். வீடின்றி, கைவிடப்பட்டவர்கள் ஒரு நாளைக்கு இரண்டு வேளை உணவு கூட கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது.


இந்த திட்டத்தின்படி, ஒரு தட்டு உணவுக்கு ரூ.1 கொடுக்க வேண்டும். நாளொன்றுக்கு மொத்தம் 500 பேருக்கு உணவு வழங்கப்படும். இரண்டாவது முறையாகவும் உணவு பெற்று கொள்ளலாம். உணவு தேவையானவர்களுக்கு ஊட்டச்சத்துமிக்க, சுகாதாரம் நிறைந்த உணவு வழங்கப்படும். கொரோனா பாதிப்புகளை முன்னிட்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ள சூழலில், கேண்டீனில் ஒரு நேரத்தில் 50 பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

==== 

இந்தியாவின் இளம் மேயர்: திருவனந்தபுரத்தில் 21 வயது பெண் சாதனை.


திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மேயராக 21 வயது இளம்பெண்ணான ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். இந்தியாவின் முதல் இளம் மேயர் என்ற பெருமையை இவர் பெறவுள்ளார்.

கேரளாவில் சமீபத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தல் முடிவுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர் பெரும்பான்மையான இடங்களில் வென்றனர். தற்போது பஞ்சாயத்து போர்டு, வார்டு கவுன்சிலர், மேயர் ஆகிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பதவி ஏற்று வருகின்றனர். அந்த வகையில் திருவனந்தபுரம் பெருநகர மாநகராட்சி மேயராக, முடவன்முகல் வார்டு கவுன்சிலர் ஆர்யா ராஜேந்திரன் பதவியேற்கவுள்ளார். 21 வயதே நிரம்பிய இவரை, புதிய மேயராக சி.பி.எம் கட்சி அறிவித்துள்ளது.

ஆர்யா ராஜேந்திரன், ஆல் செயிண்ட்ஸ் கல்லூரியில் பி.எஸ்சி., கணிதம் படித்துள்ளார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, எஸ்.எப்.ஐ மாநிலக் குழுவின் உறுப்பினர் மற்றும் தலைவராகவும் இருந்துள்ளார். மேலும், சி.பி.எம் கேசவதேவ் சாலை கிளைக் குழுவின் உறுப்பினராகவும், பாலாஜனசங்கத்தின் மாநிலத் தலைவராகவும் உள்ளார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பிலேயே தேர்தலில் வென்று மேயராக பொறுப்பேற்க உள்ள ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவின் இளம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

==== 

24 கருத்துகள்:

 1. எங்கள் திருவனந்தபுரத்துக்கு வரவுள்ள புதிய மேயரை பற்றி குறிப்பு வெளியிட்டதற்கு பெருமை அடைகிறேன்.

   Jayakumar

  பதிலளிநீக்கு
 2. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். இன்றைய துவாதசி பாரணை அனைவருக்கும் நல்லபடி முடியவும் அனைவரும் ஆரோக்கியம் பேணவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 3. இந்த வாரம் பெரும்பாலானவை அறிந்த/தெரிந்த செய்திகள். இளம்பெண் ஆர்யா ராஜேந்திரன் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருந்தாலும் அவர் சார்ந்திருக்கும் கட்சி உறுத்துகிறது. நல்ல நகராட்சியாகத் திருவனந்தபுரத்தை மாற்றிப் புகழ் பெறவும் அந்த இளம்பெண்ணிற்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 4. திருப்பதி விஷயமும், வேவ் அல்ட்ரா சவுண்டு பயன்பாடும், அணுக்கடிகாரமும் (கேட்டதே இல்லை) புதியவை. மற்றவை ஏற்கெனவே அறிந்த செய்திகளே! பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. போற்றத்தக்கோரின் அரிய சேவைகள், பணிகள். தேர்ந்தெடுத்துப் பகிர்ந்த விதம் சிறப்பு.

  பதிலளிநீக்கு
 6. இனிய காலை வணக்கம்.

  அனைவரும் நன்மை பெருக வாழ வேண்டும். இறைவன் துணை.

  பதிலளிநீக்கு
 7. இன்று வேலைகள் . மீண்டும் கடவுள் கிருபையில் வருகிறேன். நற் செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. எல்லாமே அருமையான செய்திகள் ஜி

  பதிலளிநீக்கு
 9. அருமையான செய்திகளுக்கு நன்றி சார்.
  பேட்டரி கார்கள் கூடிய சீக்கிரம் நம் நாட்டிற்கும் வரவேண்டும்.
  அணு கடிகாரங்களால் நேரத்துல்லியம் பெருகுவது மட்டுமல்ல, அணு சக்தியால், மின்சாரமும் அபரிவிதமாக உற்பத்தி செய்யவுள்ளோம், அதுவும் செவ்வாய் போன்ற கிரகத்தில் குடியிருப்பு அமைத்து வாழும் அளவிற்கு.
  கேரள இளம் மேயருக்கு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 10. வேவ் கருவி வியக்கும்படி அமைந்திருக்கிறது. சீக்கிரமாக
  வியாடியைக் கண்டுபிடித்து அனைவரும் நலம் பெற வேண்டும்.

  திருப்பதியில் காவலர்கள் செய்த உதவி மிகப் பெரியது. அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துகள்.
  திரு கௌதம் கம்பீர் செய்யும் அன்ன உதவி சிறக்கட்டும்.

  பதிலளிநீக்கு
 11. சிறப்பான செய்திகள். அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!