செவ்வாய், 13 ஏப்ரல், 2021

கேட்டு வாங்கிப்போடும் கதை - பொன்னுமணி - துரை செல்வராஜூ

பொன்னுமணி
துரை செல்வராஜூ 
*******************


" அம்மா... அப்பா கூப்பிடுறாங்க!.. " கையில் செல்போனுடன் ஓடி வந்த மகளைப் பார்த்து தொழுவத்தைக் கூட்டிப் பெருக்கிக் கொண்டிருந்த பொன்னுமணி -


" அதுக்காக நீ ஏம்மா இப்படி ஓடி வர்றே!.. கீழ விழுந்தா என்ன ஆவுறது?.. " - என்றபடி தொலைபேசியை வாங்கிக் கொண்டாள்...

தொலைபேசியின் அந்தப் பக்கத்தில் கடல் கடந்து இருக்கும் கணவன்..
.....

" சொல்லுங்க... நான் தான் பேசறேன்!... நல்லாத்தான் இருக்கோம்... அதுக்கெல்லாம் என்ன கேடு?.. "
.....

" பிரியமா பேசுறதா?.. போதும்.. போதும்.. பிரியமா பேசுன வரைக்கும்!.. இப்ப எதுக்குப் போன் பண்ணுனீங்க.. அதச் சொல்லுங்க மொதல்ல!.. "
......

" ஊருக்கா!.. அதத் தான் பதினஞ்சு நாளைக்கு முன்னால உங்க அக்கா மகன் அங்கேருந்து சொல்லிட்டானே... இப்ப தான் நீங்க  புதுசா சேதி சொல்றீங்க... "
.....

" என்னமோ பொட்டி பொட்டியா நீங்க தங்கமும் வயிரமும் கொண்டாற மாதிரியும் அதை எல்லாம் யாருக்கும் தெரியாம நா மறைச்சி வைக்கிற மாதிரியும் உங்க அக்கா என்னைப் போட்டுக் கொடையுறாங்க... "
......

" அவன் சொல்லாம இருப்பானா... எல்லாத்தையும் சொல்லிட்டான்... கம்பேனி தான் உங்க சீட்டைப் புடிச்சி கிழிச்சிடுச்சாமே... "
......

" பொழைக்கப் போனா - போன எடத்துல மானம் மரியாதயக் காப்பாத்திக்கிட்டு இருக்கணும்... அது முடியாத ஆளுங்க நாடு விட்டு நாடு போவக் கூடாது.. அங்கே போயி ஊரு மானத்தக் காத்துல பறக்க விடக்கூடாது... "
......

" யாரு?.. நானா ரொம்பப் பேசுறேன்!... நீங்க தான் உத்தம ராசா ஆச்சே...  நெஞ்சத் தொட்டு சொல்லுங்களேன் பார்ப்போம்... நா யோக்கியன் தான்..ன்னு!.. "
......

" இங்க தான் உருப்படலை.. ன்னு  மாட்டை வித்து மனைய வித்து வெளிநாட்டுக்கு அனுப்பி வெச்சா... அங்க போயும் நீங்க திருந்தலை... வருசம் எட்டு ஆச்சு... முழுசா ஒரு இருவதாயிரம் அனுப்பி வைச்சதா சரித்திரம் உண்டா?... "
......

" எது?... அங்க போயி ரெண்டு வருசத்துல புள்ளைக்கு நெஞ்சில ஆப்பரேசன் செய்யணும்... ன்னு சொன்னதும் ஓடியாந்தீங்க... போன கடனைத் திருப்பிக் கொடுக்காம கடனுக்கு மேல கடனா ரெண்டு லச்ச ரூவா வாங்கிக் கொடுத்தீங்க வைத்தியச் செலவுக்கு... அந்தப் பணத்துல முக்காலே மூனு வீசம் வட்டியோட சேர்த்து நான் அடைச்சி இருக்கேன்... "
..... 

" ஓ!... வச்சிருக்கேனே... நீங்க பணம் அனுப்புன லச்சணத்தை எல்லாம் நான் பேசலை..ன்னாலும் நீங்க அனுப்புன டிராப்ட்டு காப்பி எல்லாம் பேசுமே!... "
.....

" ஏதோ ஆபரேசன்..ன்னு புள்ளைக்கு பக்கத்தில இருந்தீங்க... அந்த மட்டுக்குப் புண்ணியம்... புள்ளைக்கு ஒன்னு கெடக்க ஒன்னு ஆகியிருந்தா... ஒன்னாலத் தான்டி இப்பிடி ஆச்சு.. ன்னு என்னயச் சொல்லியிருப்பீங்க... என்னமோ சாமி புண்ணியத்துல பொழச்சி அவளுக்கும் பதிமூனு வயசாச்சி... "
......

" ஆப்பரேசனுக்கு அப்புறம் மறுபடியும் பிளைட் ஏறிப் போன நீங்க ரெண்டு வருசத்துல திரும்பி வந்தீங்க... வந்தது தான் வந்தீங்க... புள்ளைக்கு அரைப் பவுனு மோதரம் கூடவா உங்களால வாங்கியாற முடியாது?... பொம்பளைப் புள்ளையாச்சே... அவளுக்கும் ஆசையிருக்குமே.... ன்னு நெனைச்சுப் பாக்காத சென்மம் என்ன சென்மம்?... சரி ... புள்ளைக்கு காது குத்தி விடுவோம்.. ன்னு எங்க அண்ணன் சீர் வரிசயோட வந்தா அவுங்க கிட்ட தகராறு பண்ணி இருந்த ஒறவையும் அறுத்து விட்டீங்க.. "

" அம்மா.. அழுவாதம்மா!.. " - தாயின் கண்ணீரைத் துடைத்து விட்டாள் மகள்..
.....

" என்னது போனை வைக்கிறீங்களா?.. ஏன்... பழைய கதை எல்லாம் வெளிய வந்துடும்... ன்னா?...  இன்னிக்கு எல்லாத்தையும் பேசிடனும்.. ன்னுதான் இருக்கேன்... எல்லாத்தையும் நல்லா கேட்டுட்டு ஒங்களுக்கு வேண்டியதை செஞ்சிக்குங்க... "
......

" இவ்வளோ நேரம் பேசிக்கிட்டு இருக்கிறேன் கிறுக்கு சிறுக்கி மாதிரி... இந்த இந்த மாதிரி ஆயிடுச்சிடி பொன்னு!.. ன்னு நடந்ததை எங்கிட்ட சொல்லாமத் தானே இதுவரைக்கும் பேசிக்கிட்டு இருக்கீங்க.. அவ்ளோ கவுடு சூது மனசுக்குள்ளே!.. "
.....

" அங்கே என்னா நடந்துச்சு... ன்னு நா சொல்றேன்.. கேட்டுக்குங்க... தலை கால் புரியாம குடிச்சிட்டு யாரையோ போட்டு அடிச்சிருக்கீங்க... அந்த ஆளு கம்பேனி..ல போய்ச் சொன்னதும் கூப்புட்டு வச்சி சீட்டைக் கிழிச்சிட்டாங்க... இது எவ்ளோ பெரிய கவுரதை... "
.....

" ஒங்களை ஊருக்குத் திருப்பி அனுப்பாம போலீஸ்..ல புடிச்சு கொடுத்திருக்கணும்.. அவங்க தான் சரியா சுண்ணாம்பு வச்சி அனுப்பி இருப்பாங்க... இதையெல்லாம் பார்க்கப்படாது... கேக்கப்படாது.. ன்னு தான் பெரியவங்க எல்லாம் போய்ச் சேர்ந்துட்டாங்க போல... "
.....

" என்னது?.. ஊருக்கு வந்து டீக்கடை வைச்சிக்கிட்டு ஒழுங்கா இருப்பீங்களா!.. வேணாஞ் சாமீ.. வேணாம்!.. "
.....


" நாலு ஆட்டுக்குட்டிய வாங்கி பட்டியில அடைச்சி ரெண்டு மாட்டை வாங்கி கொட்டாய்..ல கட்டி ஏதோ பொழப்பை நடத்திக்கிட்டு இப்பதான் நானும் எம் மகளும் நிம்மதியா இருக்கோம்... இங்கே வந்து எங்க பாவத்தைக் கொட்டிக்க வேணாம்... "
.....

" இத்தனை வருசத்தில நல்ல நாளு பெரிய நாளு... ன்னு ஏதாவது இருந்தது உண்டா எனக்கும் எம்மகளுக்கும்?... "
......

" பொண்டாட்டி புள்ளை..ன்னு திரும்பி வந்து ஒவத்திரவம் செய்யாம ஒதுங்கி  இருக்கிறதே பெரிய ஒபகாரம்... "
.....

" ஏன்?.. ஆம்பள தானே!.. நெஞ்சில தகிரியம் இல்லாமப் போச்சா!... மெட்ராஸ்க்கு வருவீங்களோ.. பம்பாய்..ல வந்து எறங்குவீங்களோ.. இல்லே கேரளாவுக்கு தான் போய்ச் சேருவீங்களோ... அப்பிடியே எங்கேயாவது போய்டுங்க... இந்தப் பக்கம் வரவேணாம்... அப்படியே வந்தாலும் வீட்டுப் பக்கம் வந்துற வேணாம்... எம் முந்தான அழுக்கானது போதும்!... "
......

" எம் மகளக் காப்பாத்த எனக்குத் தெரியும்.. நீங்க பாட்டுக்கு இங்க வந்து நிப்பீங்க.. மறுபடியும் குடிப்பீங்க... பழைய குடிகார நாய் எல்லாம் சுத்தி சுத்தி வரும்... கோழி காணாமப் போகும்... ஆடு காணாமப் போகும்... சடங்காகிற வயசில எம்பொண்ணு இருக்கா... அவளுக்கு ஒரு கவுரதை வேணும்.. பால்கார பொன்னு.. ன்னு ஒரு மரியாதய சம்பாரிச்சு வச்சிருக்கிறேன்... திரும்பி வந்து அதையெல்லாம் கெடுத்துடாதீங்க!... "
.....

" என்னது... புருசன் துணையா?... இப்ப மட்டும் என்ன புருசன் துணை பொங்கிக் கிட்டா  இருக்கு?.. நெருப்பு மாதிரி ஆகிட்டேன்.. கொடை புடிக்க நெனைக்காதீங்க!... "
.....

" அழுக்குத் தண்ணியில வேட்டி வெள்ளையாகிறது இல்லே!... "
- என்றபடி இணைப்பைத் துண்டித்தாள் - புருசனைத் தண்டித்தாள் பொன்னுமணி..

ஃஃஃ


90 கருத்துகள்:

 1. வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம் உள்ளத் தனையது உயர்வு..

  குறள் வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  நலம் வாழ்க எங்கெங்கும்...

  பதிலளிநீக்கு
 3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு...

  பதிலளிநீக்கு
 4. இன்று எனது கதையினைப் பதிவு செய்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும், அழகிய சித்திரங்களால் சிறப்பித்த அன்பின் கௌதம் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
 5. நான் இந்த மாதிரியான ஆட்களைப் பார்த்ததில்லை. நான் பார்த்தவர்கள் அனேகமா பணத்தைச் சேமிப்பவர்கள்தான். என்னுடன் கூட வருபவர்கள் எனக்குச் செலவழிக்கக்கூடாது என்பதையும் சொல்லிவிடுவேன்.

  நான் ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டேன் (துபாய், 94ல்). அவர் மனைவி மும்பையில். இவர் ஒரு கடையில் சூபர்வைசர். பல்லாண்டுகள் பணியாற்றி 58 வயதில் வேலை போய்விட்டது. மனைவி, நீங்கள் திரும்ப வரவேண்டாம், வேறு வேலை தேடி, எப்போதும்போல மாதச் செலவுக்கு பணம் அனுப்பச் சொன்னாளாம்.

  என்னுடன் வேலைபார்த்த நம்ம ஊர் பையன், என்னைவிட ஓரிரு வயது அதிகம், ஐந்தில் ஒரு பகுதி சம்பளம். 99ல்.. பிறகு பதினைந்தில் ஒரு பகுதி) ஆனால் எனக்கு இணையாக பெருமைக்கு செலவு பண்ணும் குணம். எவ்வளவோ சொல்லியும் திருந்தவில்ஙை. ஆனால் அங்கேயே குடும்பத்தை வைத்திருந்தான். கஷ்டப்பட்டு இன்னமுமே அங்கு இருக்கிறான்.

  என் வீட்டில் வார இறுதியில் சுத்தம் செய்ய வந்த பையன், ரொம்பவே ஒழுங்கு. அவனுக்கு நான்தான் சமைப்பேன். வேலை முடித்து சாப்பிட்டுவிட்டுச் செல்வான். பிறகு மதுரையில் சொந்தமாக ஸ்டேஷனரி கடை வைக்க வந்துவிட்டான். நல்ல நிலைமையில் இருப்பான்.

  இன்னொருவன், (பிறகு வேலைக்கு வந்தவன்) கஷ்டப்பட்டு அனுப்பும் பணத்தை, அவன் அப்பா.. அம்மா சகோதர சகோதரிகள் வெட்டிச் செலவு பண்ணுதுன்னு புலம்புவான். அப்பா ரொம்ப குடிக்கிறார் என்பான்.

  கதையில் வருகிற மாதிரியான பொறுப்பற்ற ஆட்கள் நிச்சயம் இருப்பார்கள். ஆனால் என் கண்ணில் படவில்லை.

  கதை நன்கு வந்திருக்கிறது. பாராட்டுகள் செல்வராஜு சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //என்னுடன் வேலை பார்த்த நம்ம ஊர் பையன்//

   "சரி"

   //என்னைவிட ஓரிரு வயது அதிகம்//

   "இது எப்படி"

   கொஞ்சம் இடிக்கிற மாதிரி இல்லை ?

   Chivas Regal சிவசம்போ-
   கொஞ்சம் இல்லை மொத்தமாகவே இடிக்கிறது.

   நீக்கு
  2. நாங்கள்லாம் கிட்டத்தட்ட ஒரே வயது. அவன் திருத்தணியைச் சேர்ந்தவன். நண்பர்கள் என்பதால் அப்படிப் பேசுவது வழக்கம்.

   நான் முதல் முதலில் மேட்டூருக்கு வேலைக்குச் சென்றபோது, என்னுடன் பணியாற்றும், ஆனால் எனக்கு அடுத்தடுத்த லெவலில் இருப்பவர்களை, ஒரே டிபார்ட்மென்ட் என்பதால், our boys என்ற பதம் உபயோகித்தேன். என்னைவிட வயதில் பெரியவர்கள். அவங்க சொன்னாங்க, சேலம் பகுதில boys என்று எடுபிடிகளைத்தான் சொல்லுவோம், அதனால் அதனை உபயோகிக்காதீங்க என்றார்கள். அதை நினைவுபடுத்திவிட்டீர்கள்.

   நீக்கு
  3. அன்பின் நெல்லை..
   கண்ணில் தென்பட்ட சில குடிகாரர்களின் பிரதிபலிப்பு தான் இந்தக் கதையின் அடித்தளம்..

   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...

   நீக்கு
 6. எத்தனை எத்தனையோ வித வித கேரக்டர்களைச் சந்தித்திருக்கிறேன். ஆனால் இந்த மாதிரி வாழ்க்கையை வீண்டித்தவனைச் சந்தித்ததில்லை. அப்படிப் பட்டவர்களால் குடும்பத்திற்கு என்ன பிரயோசனம்? மனைவிக்கு கெட்ட பெயரை வாங்கித் தருவதைத் தவிர?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைய பேரை சந்தித்திருக்கிறேன்.. உற்றம் சுற்றம் இரண்டிலும்.

   நீக்கு
  2. இப்படியானவர்கள் நிறைய பேர் இவ்வையக்கத்தில்...

   நீக்கு
 7. இப்படிப் பட்டவர்களும் இருக்கின்றார்கள். மனைவியின் வசையிலேயே கதை முடிந்து விட்டது நன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் ஜி..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 8. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நாளை பிறக்கப் போகும் புத்தாண்டில் இருந்து உலக மக்கள் அனைவருக்கும் தொற்று நீங்கி ஆரோக்கியம் மேம்பட்டு நிம்மதியான வாழ்க்கை வாழப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னிக்கு யுகாதிப் பண்டிகையும் கூட. அதற்கான வாழ்த்துகளைச் சொல்ல மறந்துட்டேன். எங்கள் ப்ளாக் ஆசிரியக் குழுவினருக்கும் மற்றும் இன்று யுகாதி கொண்டாடும் அனைவருக்கும் மனம் கனிந்த நல்வாழ்த்துகள். அனைத்து நலன்களும் பெற்று அனைவரும் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழவும் பிரார்த்திக்கிறோம்.

   நீக்கு
  2. வாழ்க வையகம்..
   வாழ்க வளமுடன்..

   நீக்கு
 9. உரையாடலில்/அதுவும் மறுபக்கப் பேச்சை எழுதாமல் நம்மை யூகங்கள் செய்ய வைத்துக் கதையை அருமையாகக் கொண்டு போயிருக்கிறார் தம்பி துரை. என்ன ஒரு கற்பனை வளம்! இம்மாதிரிக் கணவன்மாரைக் கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டுப் பின்னர் அதனால் எந்த விதத்திலும் பலன் இல்லாமல் தானும் கஷ்டப்பட்டுக் குடும்பத்தையும் கஷ்டப்பட வைத்தவர்களைப் பார்த்திருக்கேன். அவ்வளவு ஏன்? உறவிலேயே ஒரு குடும்பத்தின் மூத்த பிள்ளை வெளிநாட்டு வாசத்தின்போது எக்கச்சக்கமான பணச் சிக்கலில் மாட்டிக் கொண்டு இங்கே இந்தியாவில் தந்தை கட்டின வீட்டை வந்த விலைக்கு விற்றுப் பையருக்குப் பணத்தை அனுப்பிக் காப்பாற்றி அழைத்து வரும்படி ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியக்கா..

   நீக்கு
 10. மனிதர்களின் இந்தக் குணாதிசயங்களையே பார்த்துப் பார்த்து அலுத்து விட்டது. ஆனால் என்ன ஒரு ஆச்சரியம்னா நல்லதை மட்டுமே சொல்லும்/பார்க்கும்/எழுதும் தம்பி துரையும் கூட இப்படியான மனிதர்களும் உண்டு எனச் சொல்லி இருப்பது தான். வாழ்க்கையின் மறுபக்கத்தை அவரும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்திருக்கிறார். அல்லது என் போன்றோருடன் பழகிய தோஷமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க்கையின் இரு பக்கங்களையும் அறிந்திருந்தாலும் நல்லனவற்றையே சொல்லுவோம்.. எழுதுவோம் - என்று தான் இருளான மறு பக்கங்களைக் கிளறுவதில்லை..

   தங்கள் அன்புக்கு நன்றியக்கா..

   நீக்கு
 11. நல்லன என் கண்களிலும் பட்டுக்கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அவற்றைப் பற்றி மட்டுமே எழுதினால் எல்லோரும் வாழ்க்கை ஓர் ரோஜா மலர்களால் நிரம்பிய மிருதுவான பாதை என நினைப்பார்களோ என்னும் எண்ணம் அதைத் தடுக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்படியும் ஒரு கதை வேண்டும் என்று தான் எழுதினேன்..

   அன்பின் கருத்துரைக்கு நன்றியக்கா..

   நீக்கு
 12. கணவனை "என்னிடம் வராதே!" என்று மனசாரக் கூற வேண்டுமானால் அந்தப் பெண்ணின் மனம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கும்! அந்தக் கணவன் தான் எவ்வளவு மோசமானவனாக இருப்பான்! இப்படியானவர்கள் மனம் மாறித் திருந்த வேண்டும் என்று பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கதையின் நிறைவு வரிகளை எழுதும்போது என் மனமும் கலங்கியது..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியக்கா..

   நீக்கு
 13. வழக்கம்போல் கௌதமன் அவர்களின் படத் தேர்வு/அவர் வரைந்திருப்பது அருமை!

  பதிலளிநீக்கு
 14. அனைவருக்கும் இனிய செவ்வாய் காலை வணக்கம்.
  நல் ஆரோக்கியம் தர இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
 15. அப்பாடி தீப்பொறி பறக்கிறதே!!!. நம் துரை செல்வராஜு
  கதையா இது என்று திகைத்துப் போனேன்.
  வாழ்க்கையின் மறுபக்கம் கொடுமையைப் படம்
  பிடித்த ஒரு பக்க வசனம்.

  பொன்னுமணி ,தன் கணவன் என்ற பெயர்
  படைத்த கல்லை உலையில் உருக்கி இருக்கிறாள்.
  எத்தனை பாடு பட்டிருந்தால் இந்த மொழி
  வெளியே வரும்?

  இதையும் மீறி அவன் ஊருக்கு வராமல் இருக்க வேண்டுமே
  என்று பதைப்பாக இருக்கிறது.
  மனைவி மக்கள் பாசத்துக்கு ஏங்கி இருக்கும் மனிதர்களைத்
  துபாயில் பார்த்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மனைவி மக்களின் பாசத்துக்கு ஏங்கித் த்விக்கும் அப்பாவிகளைப் போலவே

   மனைவி மக்களை மறந்து திரியும் ஊதாரிகளும் அதிகம்.. அதிகம்...

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியம்மா..

   நீக்கு
 16. ''" அழுக்குத் தண்ணியில வேட்டி வெள்ளையாகிறது இல்லே!... "
  - என்றபடி இணைப்பைத் துண்டித்தாள் - புருசனைத் தண்டித்தாள் பொன்னுமணி..//''

  இந்த உரம் படைத்த பெண்கள்
  எல்லா இடத்திலேயூம் வேண்டும்.

  குடிப்பழக்கத்தில் திரியும் அத்தனை மூட ஜன்மங்களுக்கும்
  பாடம் சொல்ல வேண்டும்.
  அற்புதமான சொல்லாடல்.
  அன்பு துரைக்கு மனம் நிறை வாழ்த்துகள்.
  நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடிகாரர்கள் திருந்துவதென்பது அபூர்வம்.. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியம்மா..

   நீக்கு
 17. கௌதமன் ஜியின் படம் பொருத்தமாக
  பதிவாகி உள்ளது. முகம் தனியாகக் கோபமாகத்
  தெரிகிறது.

  பதிலளிநீக்கு
 18. அனைவருக்கும் காலை வணக்கமும், யுகாதி நல்வாழ்த்துக்களும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அனைவருக்கும் காலை வணக்கமும், யுகாதி நல்வாழ்த்துக்களும்!

   நீக்கு
  2. அன்பின் நல்வாழ்த்துகளுடன்..

   நீக்கு
 19. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 20. சாதாரணமாக இனிமையும்,குளுமையுமாக இருக்கும் துரை செல்வராஜ் அவர்களிடமிருந்து கோபக்கனலாக ஒரு கதை. வெறும் உரையாடலிலேயே அதுவும் ஒரு பக்கம் மட்டும் முழு கதையும் நகர்கிறது, ஆனால் அந்த பக்கத்தில் என்ன நடந்திருக்கிறது என்று புரிந்து விட்டது. அருமை! பாராட்டுகள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 21. வணக்கம் துரை செல்வராஜ் சகோதரரே

  அருமையான கதையை தந்திருக்கிறீர்கள். மறு பக்கம் கணவனின் பேச்சுக்களை கதை படிப்பவர்களின் ஊகத்திற்கு விட்டு மனைவி சொல்லும் நியாயங்களில் கதையை கொண்டு சென்ற நேர்த்தி பாராட்டத்தக்கது. அவன் வந்து விட கூடாதே என்ற தவிப்பு பொன்னுமணியின் உள்ளத்தில் இருப்பதை கடைசி வரை புரிந்து கொள்ள முடிந்தது. இப்படிபட்ட மனிதன் என்று திருந்துவான்.? எடுத்த முடிவுடன் தண்டனை சரிதான்..

  கதைக்கு ஏற்ப அழகாக அம்மா,பெண் ஓவியங்களை சிறப்பாக வரைந்த சகோதரர் கெளதமன் அவர்களுக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒதிய மரங்கள் பெருத்திருந்தாலும்
   அவற்றால் என்ன லாபம்?..

   தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 22. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 23. கதையை பொன்னுமணியின் உரையாடல் வழியாகவே சொன்ன முறை நன்றாக இருந்தது.
  இப்படி பேச வேண்டும் என்றால் பொன்னுமணி எவ்வளவு மனம் நொந்து போய் இருப்பார் என்று தெரிகிறது.

  கதை ஏற்ற படங்களும் நன்றாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   திரு. கௌதம் அவர்கள் கதைக்கான சித்திரங்களில் அசத்துகின்றார்...

   அவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி...

   நீக்கு
 24. இப்படியும் சிலர்.

  நல்லதொரு கதை. பொன்னுமணி எடுத்த முடிவு சரிதான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் வெங்கட்..
   தங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 25. அந்தப் பெண் பொன்னுமணியின் மன வேதனையை சரியான வார்த்தைகளில் மிகச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள், தம்பி. வஞ்சிக்கப்படும் ஏழை பாழைகளின் இயல்பான எழுச்சியே தன்னை வருத்திக் கொண்டு சமூகத்தின் முன்னால் நிமிர்ந்து நிற்பது தான் என்றாகி விட்டது.
  இதே இன்னொரு பக்கப் பார்வையாய் மகன் மக்களை வெளி நாட்டிற்கு அனுப்பி விட்டு அவர்கள் உழைப்பில் விளைந்ததை நகை நட்டுகளாய் கழுத்து நிறைய கைகள் நிறைய என்று வாரி வாரி போட்டுக் கொண்டு
  தங்களுக்கென்றே அமைந்து விட்ட சமூகச் சூழல்கள் மத்தியில் தங்கள் 'அந்தஸ்த்தை'ப் பேணிக் காப்பதாய் நினைத்துக் கொள்வோரையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியவில்லை.
  ஒரு பகுதியினரின் வாழ்க்கை வயிற்றுப் பாட்டிற்கே அல்லாடும் நிலை இருப்பது வருத்தத்தக்கது.
  உங்கள் எழுதுகோலின் தீவிரம், தனி மனித குறைபாடுகளில் மூழ்கிப் போய் விடாமல் சமூக மேன்மைகளுக்கான மாற்றங்களுக்கான குரலாய் அடுத்த கட்டத்திற்குப் போக வாழ்த்துக்கள், தம்பி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //உங்கள் எழுதுகோலின் தீவிரம், தனி மனித குறைபாடுகளில் மூழ்கிப் போய் விடாமல் சமூக மேன்மைகளுக்கான மாற்றங்களுக்கான குரலாய் அடுத்த கட்டத்திற்குப் போக வாழ்த்துக்கள், தம்பி.

   ஹிஹி.. போங்க ஜீவி சார்.. ரொம்ப குறும்பு பண்றிங்க..

   நீக்கு
  2. ஆமாம்... ஜீவி அண்ணா அவர்களது குறும்பே அலாதி!..

   நீக்கு
  3. அன்பின் ஜீவி அண்ணா..

   மகன் வெளிநாட்டில் ரத்த வியர்வை சிந்தி சம்பாதிக்கும் பணத்தை பன்னீராய் வாரித் தெளித்துப் பாழாக்கிய குடும்பங்களையும் அறிவேன்..

   அவர்களும் சரி... பாலை வனத்தில் கஷ்டப்பட்ட காசை அங்கேயே ஊதாரிகளும் சரி... தாமாகத் திருந்த மாட்டார்கள்..

   தங்களது அன்பின் கருத்துரைக்கு நன்றி..

   நீக்கு
 26. ராமனை சீதை மன்னித்தாள் !-னு கேக்க ஆசப்படறவராச்சே ஸ்ரீராம்! அவரால எங்களுக்கும் அப்படித்தானே பளக்கமாப் போயிடுச்சி..

  துண்டித்தாள்.. புருசனைத் தண்டித்தாள்!-னு கதய முடிச்சு கலவரப்படுத்திப்புட்டீகளே.. துரை செல்வராஜு சார்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட்சிங்ளே கமென்ட் ப்ரைசு.

   நீக்கு
  2. காலம் மாறிப்போச்சு ஏகாந்தன் ஸார்..    சீதை தீயைத்தவிர்த்து தன்போக்கில் நடந்தாள் என்றுதான் இனி கதை படைக்கணும்!  மன்னித்தாள் பாஹே கொடுத்த வரி!

   நீக்கு
  3. அதிலும் விதிவிலக்குகள் இருக்கலாம்..

   நீக்கு
  4. சீதைக்கே தெரிந்திருக்கும் இனி வரும் காலங்களில் நல்ல பெண்கள் துணிச்சலான முடிவுகளை எடுப்பார்கள் என்று!..

   நீக்கு
  5. ..மன்னித்தாள் பாஹே கொடுத்த வரி!//

   சரி!

   நீக்கு
 27. போனிலாவது துண்டிக்கவும்,தண்டிக்கவும் முடிந்ததே. கூடவே இருந்து குழிபறிப்பவர்களை என்னசெய்வது.படங்களும், கதைக்கேற்றார்ப்போல மிக்க அருமை.அன்புடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றியம்மா..

   நீக்கு
 28. சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா..

   நீக்கு
 29. மத்தியக் கிழக்கு நாட்டு நரகம் ஒன்றில் சில வருடங்கள் கழிக்க நேர்ந்த போது கவனித்திருக்கிறேன். நல்ல பதவியானதால் நிறைய சொகுசுகள், வசதிகள் கொடுத்திருந்தார்கள். வந்த முதல் வாரம்.. எனக்கு வழங்கியிருந்த டிரைவர் சமீபத்தில் ஒரு மாதம் இந்தியா சென்று திரும்பி வந்ததாகவும் சொந்த பெண்டாட்டியும் மச்சானும் அவரை அடித்து நொறுக்கியதாகவும் சொன்னது முதல் அதிர்ச்சி என்றால் சர்வ சாதாரணமாக "அதுக்கு தான் சார் பதினஞ்சு வருசமா இங்கயே சொந்தம் வச்சிருக்கேன்" என்றது இரண்டாவது அதிர்ச்சி!

  மத்தியக் கிழக்கு நாடுகளில் நிறைய நரகங்களுக்குச் சென்றிருக்கிறேன். அனேகமாக எல்லா இடங்களிலும் வேலைக்கென்று வந்தவர்கள் பலர் சொந்த ஊரில் ஒரு குடும்பமும் வந்த ஊரில் ஒரு குடும்பமும் வைத்திருப்பார்கள். வருடக்கணக்கில் ஓடும் இந்த வழக்கம்! அதிகம் சம்பாதிக்கும் ப்ரிடிஷ் வெள்ளைக்காரனும் சரி அதிகம் உழைக்கும் அடிமட்டத் தொழிலாளியும் சரி.. வந்த ஊரில் இன்னொரு குடும்பம், குறைந்த பட்சம் சேர்ந்து வாழும் கூட்டுத் துணையாகவாவது, இருப்பதை நிறைய கவனித்திருக்கிறேன். ஐரோப்பிய ரஷிய பிலிபினோ பெண்களுடன் பிற நாட்டு ஆண்கள் சேர்ந்திருப்பார்கள் - எல்லாருமே வேலைக்கு வந்தவர்கள் தான்!

  நிறைய இந்தியக் குடும்பங்கள் இதனால் அல்லல் படுகின்றன என்று சொல்வார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கும் இப்படியான நிகழ்வுகள் ஏராளம் ஏராளம்... சொந்த ஊரோ வந்த ஊரோ தான் - தன் சுகம் என்று வாழ்ந்த / வாழ்கின்றவர்கள் கண் எதிரில்...

   அன்பின் கருத்துரைக்கு நன்றி ஐயா..

   நீக்கு
  2. வெளிநாடுவாழ் இந்தியர்கள்பற்றி -அவர்கள் தங்கள் குடும்பத்துக்காகத் தியாகங்கள் பல செய்வதுபோலவும், தங்களை எரித்து உருக்கிக்கொள்வதுபோலவும் மட்டுமே - மட்டுமே - கதைகள், கமெண்ட்டுகள் வருகின்றனவே.. கதையின் ‘மறுபக்கத்தை’, ’அந்த மஹானுபாவர்களை’ நான் மட்டும்தான் கவனித்திருக்கிறேனா என எண்ணியதுண்டு. உங்களது அனுபவம் அந்த இருண்ட பக்கத்தில் கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சியிருக்கிறது.

   நீக்கு
  3. அன்பின் ஏகாந்தன்...
   தாங்கள் சொல்வது போல ஊதாரித் தனங்கள் அங்குமிங்குமாக சில நடக்கத் தான் செய்கின்றன.. ஆனாலும் பல்வேறு சிரமங்களையும் பொறுத்துக் கொண்டு உத்தமர்களாக வாழ்கின்றவர்களும் இருக்கின்ற்னர்..

   நேர்மையாக வாழ்ந்தாலும் அவர்களை எதிர்க்கின்ற உள்நாட்டு வெளிநாட்டு மூர்க்கர்கள் ஏராளம்.. இதையெல்லாம் வெளியில் பேச வேண்டாம் என்று தான் பலரது பேனாக்களும் மூடியே கிடக்கின்றன..

   தங்களது வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 30. எதார்த்தமான கதை. ரெட்டை மாடுகள் பூட்டிய வண்டி போல குடும்பம் என சொல்வர். இதில் ஒருவர் சரியில்லை என்றாலும் மற்றொருவருக்கு அதிக சுமையும், வேதனையும். எத்தனை பேர் இப்படி நிஜத்தில்?இனி ஒரு விதி செய்வோம் என்று அவள் தனக்கும், தனது மகளுக்குமான நிம்மதியான வாழ்வை முடிவு செய்துவிட்டாள்.நல்ல கதை அளித்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..

   நீக்கு
 31. அனைவருக்கும் யுகாதி திருநாள் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!