சனி, 24 ஏப்ரல், 2021

ஏன் தடுப்பூசி அவசியம்?

 

உயிரை பணயம் வைத்ததற்கு குவிகிறது பாராட்டு. 

மும்பையில் உள்ள வாங்கனி  ரயில் நிலையத்தில் ஒரு பெண்ணும்  அவரது ஆண் குழந்தையும் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

அப்போது,  குழந்தை தவறி தண்டவாளத்தில் விழுந்து விட்டான் ப்ளாட்பாரத்தின் மேல் ஏற சிறுவன் முயற்சித்தான்.  ஆனால் முடியவில்லை. 

அச்சமயத்தில் ஒரு மின்சார ரயில் அதிவேகத்தில் வந்தது.

இதைப் பார்த்ததும் ரயில்வே ஊழியர் மயூர் செல்கே  தண்டவாளத்தில் குதித்து வேகமாக ஓடி வந்தார்.  ரயில் வேகமாக நெருங்கியபோதும் துளியும் பதற்றமின்றி  குழந்தையை தூக்கி ப்ளாட்பாரத்தில் போட்டுவிட்டு, தானும் மேலே ஏறினார். 

சென்ற சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி வீடியோவை ரயில்வே தனது  ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

தைரியமாக செயல்பட்டு குழந்தை உயிரை காப்பாற்றிய  ஊழியர் மயூருக்கு சல்யூட் என ரயில்வே பாராட்டியுள்ளது.

தன் உயிரைப் பணயம் வைத்து குழந்தை உயிரை காத்த ஊழியரின் துணிச்சலைக் கண்டு பெருமிதம் கொள்வதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் புகழாரம் சூட்டினார். 

காணொளி : 


= = = = 
மும்பை மசூதிகளில் கொரோனா நோயாளிகளுக்கு இலவச ஆக்ஸிஜன். 

மும்பை: மும்பை மசூதிகளில் தொண்டு நிறுவனம் மூலமாக கொரோனா நோயாளிகளுக்கு இலவசமாக ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் கொரோனா 2வது அலை பரவி வருவதால் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பெருநகரப் பகுதி, மும்ப்ரா, மீரா சாலை, கல்யாண் மற்றும் பிவாண்டி உள்ளிட்ட பல மசூதிகளில் இலவசமாக ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வழங்கப்படுகின்றன. ரெட் கிரசண்ட் சொசைட்டி ஆப் இந்தியா என்ற தொண்டு நிறுவனத்தின் தலைவர் சித்திக் இதனை வழங்கி வருகிறார்.


இது குறித்து சித்திக் கூறியதாவது: அனைத்து கொரோனா நோயாளிகளும் மருத்துவமனைகளில் படுக்கைகளை கிடைப்பதில்லை, பலர் வீட்டில் சிகிச்சை பெறுகிறார்கள் என்பதால், ஆக்ஸிஜனை தேவைப்படுபவர்களுக்கு வழங்க முடிவு செய்தோம். மதம், சாதி எதுவாக இருந்தாலும் மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. இது கடவுளின் வீடு, ஒரு புனிதமான இடம். ஒரு நல்ல முயற்சி ஒரு புனிதமான இடத்திலிருந்து தொடங்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

அதேபோல், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு மசூதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மசூதியில் 50 படுக்கைகளுடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

= = = = 

வயிற்றில் சிசுவுடன் ரோந்துப்பணி. 

இளம் போலீஸ் டிஎஸ்பி ஷில்பா, ஊரடங்கு விதிகளை அமல்படுத்தும் பணியில் ஈடுபட்டிருக்கும் வீடியோ வலைதளங்களில் ேஷர் ஆகிறது. ஷில்பா, ஐந்து மாத கர்ப்பிணி. அவர், வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் ஏரியா, சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள தண்டேவாடா. தண்டேவாடா என்றதும் நினைவுக்கு வருவது மாவோயிஸ்ட்களும் துப்பாக்கிச் சண்டையும்தான். பதற்றம்மிக்க அந்த ஏரியாவில் ஷில்பா, லத்தியுடன் சுட்டெரிக்கும் வெயிலில் சாலையில் பணி செய்கிறார். வாகனத்தில் வருவோரிடம் கொரோனாவின் தீவிரத்தை எடுத்துக் கூறி, ஊரடங்கு விதிகளை கடைப்பிடிக்கும்படி அறிவுரை கூறுகிறார். கொரோனா வேகமா பரவுது நாடே நிம்மதி இல்லாம கிடக்குது. இந்த நிலைமைல லீவு எடுக்க மனம் வரலை ஊரடங்கை நல்லமுறையில அமல்படுத்துனாதான் நோய் பரவலை கட்டுப்படுத்த முடியும். அதான் 5 மாசமா இருந்தாலும் களமிறங்கி வேலை பாக்குறேன் என்றார், ஷில்பா. தண்டேவாடாவில் மாவோயிஸ்ட் ஒழிப்பு பணியிலும் துணிச்சலுடன் செயல்பட்டு பரபரப்பாக பேசப்பட்டவர்தான் இந்த ஷில்பா. ஷில்பாவின் கணவரும் போலீஸ் அதிகாரிதான். மாவோயிஸ்ட் ஒழிப்புப் பணிதான் இவர்களை சேர்த்து வைத்தது. இருவரும் வெவ்வேறு போலீஸ் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கி சென்று மாவோயிஸ்ட் தேடுதல் வேட்டையில் ஈடுபடுவது வழக்கம். அப்போது காதல் மலர்ந்தது. 2019ல் திருமணத்துக்கு பிறகு இருவருக்கும் தண்டேவாடா நகரில் டிஜிபி போஸ்டிங் போட்டார். ஊரடங்கை அமல்படுத்த இரவுபகலாக உழைக்கும் போலீசாருக்கு ஊக்கமூட்டும் வகையில் ஷில்பா பணியாற்றி வருவதாக சத்தீஸ்கர் மாநில போலீஸ் அதிகாரிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

காணொளி : 


= = = = 

ஆன்லைனில் டேட்டா சயின்ஸ் படிப்பு 

 

 


கல்வி நிறுவனங்களுக்கு சென்று படித்த காலம் கனவாக மாறும் வகையில் தற்போது பள்ளி, கல்லூரி பாடங்கள் மற்றும் தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வாய்ப்புகள் மிகுந்த டேட்டா சயின்ஸ் பட்டப்படிப்பு, இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனத்தால், ஆன்லைனில் வழங்கப்படுகிறது. ஆம், இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி - சென்னை, புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸில் ஆன்லைன் பி.எஸ்சி., பட்டப்படிப்பை அறிமுகப்படுத்தி உள்ளது.

முக்கியத்துவம்

கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல், தகவல் அறிவியல் போன்ற துறைகளின் பயன்பாட்டுடன், கொட்டி கிடக்கும் தகவல்களை ஒழுங்குபடுத்துதல், பகுப்பாய்தல், அவற்றை முறையாக பயன்படுத்துதல் என பல நிலைகளை உள்ளடக்கியுள்ளது, டேட்டா சயின்ஸ் துறை! 

ஆன்லைன் வாயிலாக, உணவுப் பொருட்கள், வாடகை வாகனம், சேவை பயன்பாடுகள் என பல்வேறு பணிகளையும் ஆன்லைன் வாயிலாக இன்று நாம் எளிதாக நிறைவு செய்து கொள்கிறோம். இந்த கட்டமைப்புக்கு பின்னால் உதவுவது ‘டேட்டா சயின்ஸ்’. எளிதான பயன்பாடு முதல் உயர் ஆராய்ச்சிகள் வரை அனைத்திலும் ‘டேட்டா சயின்ஸ்’ பங்கு மிக அவசியம். மேலும், ஏராளமான நிறுவனங்களிலும் இத்துறை சார்ந்த நிபுணர்களின் தேவை அதிகரித்துவருகிறது. இந்நிலையில், சென்னை ஐ.ஐ.டி., ஆன்லைன் வாயிலாக, புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் துறையில் சான்றிதழ், டிப்ளமா மற்றும் பட்டப்படிப்பை வழங்குகிறது. 


படிப்புகள்:

பவுண்டேஷனல் சர்ட்டிபிகேட்

டிப்ளமா இன் புரொகிராமிங்

டிபளமா இன் டேட்டா சயின்ஸ்

பி.எஸ்சி., இன் புரொகிராமிங் அண்ட் டேட்டா சயின்ஸ்


சேர்க்கை நிலைகள்:

ரெகுலர் என்ட்ரி மற்றும் டிப்ளமா என்ட்ரி என இரண்டு முறைகளில் மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ரெகுலர் என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள், படிப்படியாக புவுண்டேஷன், டிப்ளமா நிலைகளை நிறைவு செய்து இறுதியாக பி.எஸ்சி., பட்டத்தை பெறலாம். டிப்ளமா என்ட்ரி முறையில் சேர்க்கை பெறுபவர்கள் டிப்ளமா பட்டத்தை மட்டுமே பெற முடியும். டிப்ளமா படிப்பு, வேலைக்கு செல்பவர்கள் மற்றும் அடிப்படைகளை அறிந்தவர்களுக்காக வழங்கப்படுகிறது.


விண்ணப்பிக்க தகுதி:

10ம் வகுப்பில் கணிதம் மற்றும் ஆங்கிலத்தை படித்திருக்க வேண்டும். மேலும், மூன்றாண்டு டிப்ளமா படிப்பு அல்லது 12ம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும், தற்போது கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இந்த படிப்பை இரண்டாம் பட்டமாக தொடரலாம். பட்டதாரிகள் மற்றும் பணிபுரியும் தொழில் வல்லுநர்கள் சேர்க்கை பெறலாம். வயது வரம்பு இல்லை.


விண்ணப்பிக்கும் முறை

குவாலிபயர் 1, பவுண்டேஷன், குவாலிபயர் 2 மற்றும் குவாலிபயர் 3 ஆகிய தேர்வுகள் வாயிலாக, தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இவற்றிற்கு விண்ணப்பிப்பதற்கான தேதிகள் மாறுபடும். தகுதியானவர்கள் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். 


விபரங்களுக்கு: www.onlinedegree.iitm.ac.in

= = = = =

ஏன் தடுப்பூசி அவசியம்? பரப்பப்படும் வதந்திகளும், நிபுணர்களின் விளக்கமும். 

சென்னை :கொரோனா தடுப்பூசி போட்டு கொள்வதால், சமூகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாவதுடன், உடல் உள் உறுப்புகள் பாதிக்கப்படுவதையும் தடுக்க முடியும். எவ்வித ஆய்வறிக்கையும் இல்லாத தகவல்களை, சமூக வலைதளங்களில் வீணாக பகிர வேண்டாம் என, டாக்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

நம் நாட்டில், கொரோனா தொற்றை தடுக்க, கோவாக்சின், கோவிஷீல்டு என, இருவகை தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. சமூகத்தில் பரவலான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், மே, 1ம் தேதி முதல், தடுப்பூசி போடப்பட உள்ளது. மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டப்படி, அனைத்து தரப்பினரும் தடுப்பூசி போட்டு கொள்ளும் பட்சத்தில், சமூக நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, கொரோனா தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என, மருத்துவ நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், கொரோனா தடுப்பூசி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், தடுப்பூசி குறித்த பல்வகை சந்தேகங்களுக்கு பதில் அளித்துள்ளார், பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குனர் குழந்தைசாமி.டெங்கு, பன்றிக்காய்ச்சல் போன்ற கொடிய நோய்களை கட்டுப்படுத்துவதில், முக்கிய பங்காற்றி உள்ள இவர், தற்போது, மக்கள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ள கொரோனா குறித்தும், தடுப்பூசி போட்டுக்கொள்வதால் ஏற்படும் நன்மை குறித்தும் அளித்த பேட்டி:

கொரோனா தடுப்பூசி வேகமாக கண்டுப்பிடிக்கப்பட்டதால் சந்தேகம் உள்ளதே?

உலகின் பல்வேறு நாடுகளில், 50 ஆண்டுகளுக்கு முன், ஆராய்ச்சி நிறுவனங்கள் மட்டுமே, தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டன. 'பயோ டெக்' எனப்படும், உயிரி தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, பல்வேறு நிறுவனங்கள் ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றன. இந்த வளர்ச்சி காரணமாக தான், கொரோனா பரவ ஆரம்பித்து, ஓராண்டுக்குள் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதில், எவ்வித சந்தேகமும் வேண்டாம். இரண்டு தடுப்பூசிகளும், 100 சதவீதம் பாதுகாப்பானவை.

தடுப்பூசி போட்டுக்கொள்வதால் உயிரிழப்பு ஏற்படுமா?

கொரோனா தடுப்பூசியால், மாரடைப்பு, ரத்தம் உறைதல், பக்கவாதம் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பில்லை. ஆனால், காய்ச்சல், தலைவலி, உடல் வலி, போன்ற சிறு தொந்தரவுகள் ஏற்படலாம். இவையும், அனைவருக்கும் ஏற்படுவதில்லை. மற்றபடி, தடுப்பூசி போட்டுக்கொள்வதால், உயிரிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பே இல்லை.

தடுப்பூசி போடுவதால் ஏற்படும் நன்மை என்ன?

தடுப்பூசி போடுவதே நன்மை தான். அதனால், நமக்கு மட்டுமின்றி, சமூகத்திற்கும் நோய் எதிர்ப்பு பாதுகாப்பை உறுதி செய்கிறோம். குறிப்பாக, நாம் தடுப்பூசி போடுவதால், அதன் பின் தொற்று ஏற்பட்டாலும், நமது உடல் உள்ளுறுப்புகள் பெரியளவில் பாதிக்கப்படாது.நோயின் தாக்கமும் குறைவாக இருக்கும். நம்மிடமிருந்து மற்றவர்களுக்கு, நோய் தொற்று பரவுவதற்கான வாய்ப்பு இல்லை. அனைவரும் தடுப்பூசி போடுவதால், போலியோ, டெங்கு உள்ளிட்ட நோய்களை போல், கொரோனா தொற்றையும் நாம் கட்டுப்படுத்தலாம்.

தடுப்பூசியின் நோய் எதிர்ப்பு தன்மை எவ்வளவு?

கொரோனா தடுப்பூசிகளை பொறுத்தவரையில், இவ்வளவு சதவீதம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்பதல்ல. அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்வதால், 90 சதவீதம் சமூக நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்கலாம். இதனால், ஆண்டாண்டுக்கு கொரோனாபரவலின் வீரியம் இருக்காது.

தடுப்பூசி போட்டப்பின், முக கவசம் ஏன் அணிய வேண்டும்?

தடுப்பூசி போட்ட உடனேயே, உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி விடாது. முதல் 'டோஸ்' தடுப்பூசிக்கும், இரண்டாவது டோஸ் தடுப்பூசிக்கும், நான்கு முதல், எட்டு வாரங்கள் இடைவெளி உள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி போட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் தான், நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும். அதன்பின், தொற்று ஏற்படாது என்றும் கூற முடியாது. அதனால், அனைவரும் தடுப்பூசி போட்டபின் தொற்று கட்டுக்குள் வரும் வரை, முககவசம் அணிய வேண்டும்; சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கொரோனாவுக்கு மட்டும் முக கவசம் அல்ல. பல்வேறு நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்கவும் முக கவசம் அவசியம்.

கோவாக்சின், கோவிஷீல்டு இந்த இரண்டில் எது சிறந்தது?

இந்த இரண்டு மருந்துகளும், தயாரிப்பு முறையில் மட்டுமே மாற்றம் உள்ளன. மற்றபடி, இரண்டும், ஒரே மாதிரியான நோய் எதிர்ப்பு சக்தியை தான் மக்களுக்கு வழங்குகின்றன. பெரிய அளவிலான பக்கவிளைவுகள் இல்லாமல், பாதுகாப்பை உறுதி செய்கின்றன.

தடுப்பூசிக்கு முன், சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை அவசியமா?

சி.ஆர்.பி., ரத்த பரிசோதனை என்பது, உடலில் வேறு ஏதேனும் நோய் தாக்குதல் இருக்கிறதா என்பதை கண்டறிய தான் செய்யப்படுகிறது. குறிப்பாக, புற்றுநோயாளிக்கு பரிசோதனை செய்யும்போது, அவரது புற்றுநோய் கட்டியை வகைப்படுத்தி காட்டலாம். அவ்வாறு காட்டும்போது, அவர் தடுப்பூசி போடக்கூடாது என்றில்லை. அவர்களுக்கு தான், முக்கியமாக தடுப்பூசி தேவை. இந்த பரிசோதனை, தடுப்பூசி போட்டு கொள்ளலாமா, கூடாதா என்பதற்காக அல்ல. அதனால், தடுப்பூசி போடுவதற்கு முன், சி.ஆர்.பி., பரிசோதனை அவசியமில்லை. அதற்கு பதிலாக, சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனை செய்வது போதுமானது.

யாரெல்லாம் தடுப்பூசி போடக்கூடாது?

அரசு அறிவித்துள்ள படி, 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தடுப்பூசி போட தகுதியானவர்களே. கர்ப்பிணியர், பாலுாட்டும் தாய்மார்கள் தடுப்பூசி போட வேண்டாம். மற்ற அனைவரும் தடுப்பூசி போடலாம். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நாள்பட்ட நோயாளிகள், தடுப்பூசி போடுவதற்கு முன், அவர்கள் சிகிச்சை பெறும் டாக்டரிடம் ஆலோசனை பெற்றபின், போட்டு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

உலகம் முழுதும் பரவி உள்ள கொரோனா பாதிப்பை தடுக்க, தடுப்பூசி மட்டுமே ஆயுதமாக உள்ளது. அனைத்து தடுப்பூசிகளிலும், சிறு சிறு பாதிப்புகள் இருக்க தான் செய்யும். உதாரணமாக, போலியோ சொட்டு மருந்தை பொறுத்தவரையில், இரண்டு கோடி பேரில், ஒருவருக்கு பாதிப்பு ஏற்படுத்தும். போலியோவை அனைவருக்கும் வழங்கியதால் தான், அந்நோயை கட்டுப்படுத்த முடிந்தது.இந்தியாவில், 1.7 கோடி பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், இயற்கையாகவே, 30 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டிருக்கும். மற்ற அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுத்த வேண்டுமென்றால், அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். இதுவரை, தடுப்பூசி போட்டு கொண்ட, 12 கோடி நபர்களில், யாருக்கும் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. அது குறித்து ஆய்வுகளும் இல்லை. எனவே, சமூக வலைதளங்களில் பகிரப்படும் வதந்திகளை புறம்தள்ளிவிட்டு, தவறாமல் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும்.

- டாக்டர். ஜெயலால், தேசிய தலைவர், இந்திய மருத்துவ சங்கம்: 

அச்சம் வேண்டாம்

டாக்டர் என்ற முறையில், என்னிடம் வரும் நோயாளியின் உயிரைக் காக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், கவச உடை அணிந்து, நோயாளிக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். எனவே, நான் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். என் பெற்றோர், சக மருத்துவர்கள் அனைவரும், இரண்டு, 'டோஸ்' தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். பெரிதாக பக்க விளைவுகள் இல்லை. சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாள் காய்ச்சல் வந்தது. அவ்வளவு தான். இன்றைய நிலையில், தடுப்பூசி ஒன்று தான், தொற்றை வெல்ல நம்மிடம் இருக்கும் ஒரே வழி. எவ்வளவு விரைவாக முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

டாக்டர் மன்சூர் ஷேக்,அவசர சிகிச்சை மருத்துவ ஆலோசகர், சென்னை: 

கோவாக்சின், கோவிஷீல்டு' ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே பாதுகாப்பானவை. எங்கள் மருத்துவமனையில், நாள்தோறும், 400 முதல், 500 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்கின்றனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு, தொற்று ஏற்பட்டாலும் பாதிப்பு மிகவும் குறைவாகவே இருக்கும். எனவே, அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

சி. பழனிவேல், 48,தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, குரோம்பேட்டை: 

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக, தடுப்பு மருந்து போட வேண்டுமா வேண்டாமா என்ற விவாதம், தற்போது அதிகமாகி விட்டது. இது அவசியம் இல்லாத ஒன்று. தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம், ஏற்கனவே நம் உடலில் உள்ள எதிர்ப்பு சக்தியை மேலும் அதிகரிக்கலாம். குழந்தைப் பருவத்தில் அம்மைக்கு தடுப்பூசி போட்ட போது காய்ச்சல் வந்திருக்கும். அதுபோல தான் தற்போது சிலருக்கு காய்ச்சல் வருவது. இதனால் யாரும் பயப்படத் தேவையில்லை. தடுப்பூசி போடாவிட்டால் தொற்றின் விளைவுகள் மோசமானதாக இருக்கும்.

டாக்டர் நீலமேகம், தலைவர், குடல், இரைப்பை நுண் துளை துறை,போர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை: 

தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. காரணம், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வேகமாக தொற்று பரவுகிறது. இந்தச் சூழலில், பெரிய அளவில் அனைத்து மக்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான், இரண்டு பேரில் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

டாக்டர் பி.கண்ணன்,மீனாட்சி மிஷன் மருத்துவ ஆராய்ச்சி மையம், மதுரை.: 

தடுப்பூசி நடைமுறைக்கு வந்து, இரண்டு டோஸ் போட்ட பின், தைரியமாக நோயாளியின் அருகில் சென்று சிகிச்சை தர முடிகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்ட யாருக்கும் லேசான உடல் வலி தவிர, பக்க விளைவுகள் எதுவும் இல்லை. தடுப்பூசி நமக்கு அவசியம் தேவையான ஒன்று. நமக்கு மட்டுமின்றி, சமுதாயத்திற்கும் அது நன்மை விளைவிக்கும்.

டாக்டர் ரோஸ் ரேச்சல்,தலைவர், இன்டர்னல் மெடிசின், மேத்தா மருத்துவமனை, சென்னை.

ஒரே தீர்வு தடுப்பூசி!

சாமிநாதன், பொது மருத்துவ துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: 

கொரோனா என்ற கொடிய வைரஸ், தற்போது உலகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இருமுறை மரபு மாற்றம் அடைந்த வைரஸ் (டபுள் மியூட்டன்ட் வைரஸ்) என்பதால், வேகமாக பரவும் தன்மை கொண்டது. அதிலும், இணை நோய் இருப்பவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள், தீவிரமாக பாதிக்கப்படுகின்றனர். தனி மனித பாதுகாப்புக்கு அடுத்தபடியாக இதற்கு ஒரே தீர்வு, தடுப்பூசி மட்டுமே. மத்திய, மாநில அரசுகள் இதை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றன.தடுப்பூசி போடுவதால், இறப்பு சதவீதம் குறைகிறது. மேலும், நோய் தொற்று ஏற்பட்டாலும், பெரியளவில் பாதிப்புகள் உண்டாக்குவதில்லை. அதேசமயம், தடுப்பூசி போட்டுக்கொண்டாலும், பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக, தடுப்பூசி போட்டுக் கொண்டாலும், இணை நோய்களை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம்.

பக்கவிளைவுகள்இல்லை!

பூமா, குழந்தைகள் நல துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: 

கொரோனாவுக்கு முன், 1940களில் உலகையே அச்சுறுத்திய, 'ஸ்பேனிஷ் ப்ளூ', அதன்பின் வந்த 'ஸ்வைன் ப்ளூ' போன்ற பல்வேறு கொடிய வைரஸ்களை கட்டுப்படுத்த முக்கிய காரணமாக இருந்தது தடுப்பூசிகள்தான். எனவே, கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது, அரசே, 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என அறிவித்துள்ளது. சர்க்கரை, இருதய நோய் உள்ளவர்கள் போட்டுக்கொள்ளலாம். ஒருவேளை, வேறு ஏதேனும் பிரச்னை இருந்தால், மருத்துவர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். கோவை அரசு மருத்துவமனையில் இதுவரை, 40 ஆயிரம் பேருக்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. யாருக்கும், பக்கவிளைவுகள் ஏற்படவில்லை.

வதந்திகளை நம்ப வேண்டாம்!

வெங்கடேஷ், மூளை நரம்பியல்தண்டுவட அறுவை சிகிச்சை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: 

தற்போதைய சூழலில், தடுப்பூசியின் பயனை காட்டிலும், அதனால் ஏற்படும் சிறிய விளைவுகளைதான் அதிகம் மிகைப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதனால் பக்க விளைவுகள் இல்லை. எனவே, தடுப்பூசி போட்டுக் கொண்டால், உடல் நலம் பாதிக்கப்படும் என கூறும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். தைரியமாக தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

இரண்டு தடுப்பூசிகளும் சிறந்தது. 

அலி சுல்தான், காது மூக்கு தொண்டை துறை தலைவர், கோவை அரசு மருத்துவமனை: 

நானும் என் குடும்பத்தினரும் தடுப்பூசி போட்டுக் கொண்டோம். கடந்த சில தினங்களுக்கு முன், பரிசோதனை செய்து பார்த்ததில், நோய் எதிர்ப்பு சக்தி நிறையவே அதிகரித்திருந்ததை பார்க்க முடிந்தது. தற்போதுள்ள இரண்டு தடுப்பூசிகளில் எதுவாக இருந்தாலும், போட்டுக் கொள்ளலாம். ஆனால், முதல் முறை எந்த தடுப்பூசி பயன்படுத்துகிறோமோ, இரண்டாம் தவணையின்போதும் அதே தடுப்பூசிதான் பயன்படுத்த வேண்டும்.

டாக்டர்களிடம் கேளுங்கள்!

அருள்செல்வன், குடல் இரைப்பை மற்றும் கல்லீரல் மருத்துவ உதவி பேராசிரியர், கோவை அரசு மருத்துவமனை: 

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால், சிலருக்கு உடல் அசதி, ஒன்று இரண்டு நாட்கள் காய்ச்சல் வரலாம். இதுதவிர, பெரிய அளவில் பக்கவிளைவுகள் ஏற்படாது. உடலில் பெரிய அளவில் பாதிப்புகள் இருப்பவர்களும், டாக்டர்களின் ஆலோசனை கேட்டு தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். அதேபோல், கல்லீரல் சுருக்கம், வயிறு வீக்கம், நீண்ட நாட்கள் மாத்திரைகள் சாப்பிடுபவர்களுக்கு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். அதுபோன்ற நோயாளிகளும், டாக்டர்களின் அறிவுரை கேட்டு தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

இணைநோய் கவலை வேண்டாம்!

மோனி, மூத்த மனநலமருத்துவர், பாலாஜி மூளை நரம்பியல் மற்றும் மன நல மருத்துவ மையம்: 

எனக்கு சர்க்கரை, ரத்த கொதிப்பு, கொழுப்பு சத்து போன்ற இணை நோய்கள் இருக்கின்றன. இதற்காக, தினமும் மாத்திரைகள் சாப்பிடுகிறேன். தடுப்பூசி போட்ட பின் எவ்வித பிரச்னையும் ஏற்படவில்லை. மேலும், என்னிடம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் நிறைய பேர் தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். இணைநோய் மற்றும் பிற நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் டாக்டர்களின் ஆலோசனையின் பேரில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். சமூக வலைதளங்களில் தடுப்பூசி குறித்து வரும், வீண் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

= = = = 

38 கருத்துகள்:

 1. அன்பு நட்புகளுக்கு இனிய காலை வணக்கம் .
  அனைவரும் தொற்று காலத்தில் மிக மிகப்
  பாதுகாப்புடன் இருக்க இறைவன் அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 2. அனுவருக்கும் காலை வணக்கம். இன்றைக்கு தடுப்பூசி புராணமாகவே இருக்கிறதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லை..  வாங்க...   அதுதானே ஹாட் டாபிக் இப்போ..

   நீக்கு
  2. ஹாட்டாபிக்கறங்குத்துக்காக இல்லே. அவங்க அவங்க வேக்ஷினேஷன் புராணத்தை ஆரம்பிப்பதற்கு சரியான பதிவு களம்ன்னு ஸாரி பதிவு தளம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம் என்று சொல்லுங்கள். ஊசி போடுகிற தருண தத்ரூப புகைப்படங்களும் வரவேற்கப்படுகின்றன என்று தலைப்பிலேயே போட்டிருக்கலாம்.

   நீக்கு
 3. நான் முதல் தடுப்பூசி போட்டுக்கொள்ளச் சென்றபோது என் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டேன். அவர் உடனே எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். இரண்டாவதற்கு மட்டும் பயந்தேன்.

  தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் சர்டிபிகேட்டை தரவிறக்கம் செய்துக்கணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இரண்டாவது ஊசியும் போட்டுக்கொண்டாச்சு இல்லையா?

   நீக்கு
  2. ஆச்சு... இன்று மூன்றாவது நாள். யோகாவையும் ஆரம்பித்தாகிவிட்டது.

   நீக்கு
 4. தன் உயிரையும் லக்ஷியம் செய்யாது
  ஓடி வந்த ஊழியரை என்ன சொல்லி பாராட்டுவது என்றே தேவலை.
  இத்தனை சீக்கிரமாக,சட்டென்று குதித்துக்
  காப்பாற்றிய மயூர் அவர்களுக்கு மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  குழந்தையின் தாய் பாதுகாப்பான தூரத்தில் நின்று அலற, இவர் காப்பாற்றுவது பாராட்டத்தக்கது.

   நீக்கு
  2. அது குழந்தையின் தாயா இல்லை வாடகைக்கு குழந்தையை வாங்கிவந்தவளா?

   நீக்கு
  3. என்ன செஞ்சிருக்கணும் அந்தத் தாய்? அவருக்குப் பார்வைக்குறைபாடு உண்டு என்பது தெரியுமா? ஓர் ஆணைப் போல் அதுவும் மூன்றாம் நபரைப் போல் குழந்தையின் தந்தையால் கூட அந்தக் குழந்தையைக் காப்பாற்றி இருக்க முடியாது. எப்போதும் பெண்கள் மேல் குற்றம் சுமத்துவதை விட்டுவிட்டு யோசித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

   நீக்கு
  4. குழந்தையின் தந்தையாக இருந்திருந்தாலும் அவசரத்திலும், பதட்டத்திலும் அவரும் சேர்ந்து விபத்தைச் சந்தித்திருக்கலாம். ரயில்வே ஊழியர் என்பதால் ரயில் வரும் நேரத்தைத் திட்டமிடுதல் சாத்தியம் ஆகி இருந்தது.

   நீக்கு
  5. நெல்லை, அந்த வழக்கமான ஹாஹ்ஹாஹா-வைப் போட்டிருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் உங்கள் கேள்வியின் வெப்பம் குறைஞ்சிருக்கும். :))

   நீக்கு
  6. //எப்போதும் பெண்கள் மேல் குற்றம்// - அந்த இடத்தில் குழந்தையின் அப்பாவாக இருந்தாலும் அதுதான் விமர்சனம். எப்போதுமே குழந்தைகள் சட் சட் என்று ஓடும் என்று எனக்கே தெரிகிறதே... அம்மாவோ அப்பாவோ..அவங்களுக்குத் தெரிய வேண்டாமா? இன்னொன்று, எப்போதுமே 4-5 அடிக்கு அப்புறம்தான் நடக்கணும், அதிலும் இரயில் வரும்போது. அது இழுக்கும் தன்மை வாய்த்தது.

   நீக்கு
  7. இதெல்லாம் எதிர்பாராமல் நடப்பது நெல்லை. நீங்க அந்த வீடியோவை முழுசும் பார்த்துட்டு உங்க விமரிசனத்தை முன் வைங்க! அந்த இடத்தில் நானாக இருந்தாலும் இப்படித் தான் அலறி இருப்பேன்.

   நீக்கு
  8. நாம வீட்டிலே உட்கார்ந்து கொண்டு சொல்வது மிக எளிது.

   நீக்கு
 5. தடுப்பூசி பற்றிய விவரமான பதிவுகள்
  மிக மிக உபயோகமாக இருக்கும். நன்மை தரும்.

  பதிலளிநீக்கு
 6. டி எஸ்பி ஷில்பா.
  கருத்தரித்துக்கும் இந்த வேளையில் தடுப்பூசி
  போட்டுக் கொள்ள முடியாது.
  இருந்தும் இந்த சுட்டெரிக்கும் வெய்யில்
  காலத்தில் இத்தனை வேலை செய்வது
  மனதை நெகிழ்விக்கிறது.
  பத்திரமாக இருக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு
 7. மும்பையில் இத்தனை உயிர் நஷ்டம்
  இருக்கையில் , இஸ்லாமிய சகோதரர்கள் அவர்களது மசூதியில்
  ஆக்ஸிஜன் உதவி செய்து
  மக்களைக் காப்பது எவ்வளவு பெரிய தர்மம்.
  நல்ல செய்தி. மனதுக்கு உகந்த பாசிட்டிவ் செய்தி.

  பதிலளிநீக்கு
 8. தடுப்பூசி பற்றிய தகவல்கள் அருமை.

  இரயில்லே ஊழியரின் செயல் பாராட்டத்தக்கது.

  அந்தப்பெண் குழந்தையை கூட்டிக் கொண்டு தண்டவாளம் ஓரமாக நடப்பதற்கு காரணம் செல்பேசிக்கொண்டு வருவதே... இவர்கள் திருந்த மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  அதுமட்டுமல்ல, அந்தத்தாய் ரயில் தன்னை ஏதும் செய்யா தூரத்தில் நின்று குழந்தையை மேலே ஏறி வரச் சொல்லிப் பதறுவது..

   நீக்கு
 9. இஸ்லாமியர்கள் அனைவரும் போற்றத் தக்கவர்கள்...

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் காலை வணக்கம். ஆக்ஸிஜன் அளிக்கும் இஸ்லாமிய சகோதரர்களுக்கு நன்றி. DSP.ஷில்பா பற்றியும், தண்டவாளத்தில் விழுந்த குழந்தையை காப்பாற்றிய ஊழியர் பற்றியும் ஏற்கனவே படித்தேன்.
  B.Sc. Data scince பற்றிய தகவலும், தடுப்பூசி பற்றிய தகவல்களும் மிகவும் பயனுள்ளவை.

  பதிலளிநீக்கு
 11. கீதா அக்கா எங்கே? மீனாட்சி கல்யாணம் பார்த்துக் கொண்டாருக்கிறாரா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதெல்லாம் இல்லை. இன்னிக்கு மீனாக்ஷி கல்யாணம் என்பதே நினைவில் இல்லை. அதோடு நேற்று ஊசி போட்டுக் கொண்டதன் விளவு. இடப்பக்கமாய்ப் படுக்க முடியலை. வலி! கொஞ்சம் உட்கார்கிறேன்.கொஞ்சம் படுக்கிறேன். இத்தனை நேரம் படுத்துக் கொண்டிருந்தேன். இப்போது வந்து உட்கார்ந்திருக்கேன். அவருக்கு லேசாகத் தலை சுற்றல்/வலி இருக்கு. சமாளிக்கிறோம்.

   நீக்கு
 12. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோதரரே

  இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.

  மின்சார இரயில் வரும் சமயம் விரைவுடன் செயல் பட்டு குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியரை மனமாற பாராட்டுவோம்.

  கருவுற்றிருக்கும் போதும் தன் கடமையை தவறாது செய்யும் காவல் துறை அதிகாரியின் செயலும் போற்றத்தக்கது.

  தடுப்பூசியின் நன்மைகளை பற்றிய செய்திகளும் சிறப்பாக உள்ளது.
  அனைத்துப் பகிர்வினுக்கும் மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 14. தடுப்பு ஊசியின் அருமை/பெருமைகளை விவரித்துச் சொன்ன பதிவுக்கு நன்றி. அந்த ரயில்வே ஊழியர் குழந்தையைக் காப்பாற்றியது அன்றே பார்த்தேன். காவல்துறை அலுவலரின் கடமை உணர்வு பாராட்டத் தக்கது. மொத்தத்தில் அருமையான செய்திகள். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. அனைத்தும் நல்ல செய்திகள். பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 16. கடமை தவறாத கன்னியமானவர்கள் இருப்பதைக் காண்கையில் மனம் நெகிழ்கிறது.

  எனது பதிவு

  என் அழகான நாட்கள்...!
  https://inaiyaidhazh.blogspot.com/2021/04/en-azhagana-naatkal.html

  பதிலளிநீக்கு
 17. குழந்தை காப்பாற்றப்ப்டும் வீடியோ பார்த்திருக்கிறேன். அது கவனக்குறைவு இல்லையா? ப்ளாட்ஃபார்ம் ஓரத்தில் நடப்பது அதுவும் குழந்தையோடு நடப்பது மக்களின் கவனக்குறைவுதான் காரணம். பெற்றவர் கூட அருகில் செல்லவில்லை! காப்பாற்றிய ஊழியருக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் பாராட்டுகள்.

  தடுப்பூசி பற்றிய தகவல்கள் மிகவும் அருமை. தேவையான ஒன்றும் கூட

  எல்லா செய்திகளும் அருமை

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 18. குழந்தையைக் காப்பாற்றியவரைப் போற்றுவோம்
  தடுப்பூசி அவசியம்தான்
  நான் இரண்டு முறை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளேன்

  பதிலளிநீக்கு
 19. குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

  இஸ்லாமிய சகோதர்களுக்கும் நன்றிகள்.
  அனைத்தும் நல்ல செய்திகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!