செவ்வாய், 6 ஏப்ரல், 2021

சிறுகதை : பக்கத்து வீட்டில் பாம்பு - புதுக்கோட்டை வைத்தியநாதன்.

 பக்கத்து வீட்டில் பாம்பு 

புதுக்கோட்டை வைத்தியநாதன்


நகரத்தை விட்டுச் சற்றுத்   தூரமாக அமைதியாக இருக்கலாம் என்று ஆறு வருஷங்களுக்கு முன் இந்த வீட்டைக் கட்டி இங்கே வந்தோம்.

' அமைதியைத் தேடி மட்டுமே    ' என்றும் சொல்லிவிட முடியாது. ரிடையர் ஆன பின் கையில் கிடைத்த பணத்திற்குள் இதற்கு, அதற்கு என்று எதிர்காலத் தேவைகளுக்கு ஒதுக்கியபின் தேறிய மிச்சத்தில் இங்குதான் ஒரு கிரவுண்ட்  வாங்க முடிந்தது.  மகன்கள் இரண்டு பேரும் வெளிநாட்டிலேயே குடும்பத்துடன் நிரந்தரமாகத்  தங்கிவிட்டதால், நானும் அவளுமாக இரண்டே பேர்தானே ? அதனால் கீழே ஒரு வராண்டா , ஹால் , ஒரு பெட் ரூம், சமையலறை , அதற்குள்ளேயே ஒரு குட்டி பூஜை அறை , பின்னால் இவள் விரும்பியபடி ஒரு சின்னத் தோட்டம் . மாடியில் ஒரு சற்றே பெரிய பெட் ரூம் , பையன்களும் பேரக்குழந்தைகளும் வந்தால் தங்குவதற்கு என்று இப்படி ..

வசதியான வீடுதான் . ஆனால் நகரத்தை விட்டுத் தள்ளியிருக்கலாம் என்று நாங்கள் நினைத்து வந்தது நடக்கவில்லை . தேடித் தேடி வளர்ந்து வந்த நகரம் எங்கள் இடத்தையும் விழுங்கிவிட்டு மேலும் மேலும் வளர்ந்துகொண்டேயிருக்கிறது  . எங்கள் தெருவில் இப்போது இருபது வீடுகள் . வலப்பக்கம்  என் அடுத்த வீட்டைத் தாண்டித்தான்  மெயின் ரோடு. இரவும் பகலுமாக அதில் ஓடும் வண்டிகள் அதிகமாகிக்கொண்டே போகின்றன  . ' ஒரு வீடு தள்ளியிருப்பதால் அவ்வளவாகக் சத்தமில்லை ' என்று எங்களை நாங்களே தேற்றிக்கொண்டு , ஓரளவு நிம்மதியாகத்தான் இருக்கிறோம்.

இருக்க, முன் வராண்டாவில் , வழக்கம்போல் காலை ஆறரை மணிக்குக் காப்பியைக் குடித்துவிட்டு, பேப்பர் பையனை எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன் . பையன் மின்னல் வேகத்தில் சைக்கிளில் வருவான் . பேப்பரைச் சுருட்டிக் குறிபார்த்து, இவள் வாசல் தெளித்து ஈராமாயிருக்கும் இடத்தில் எறிந்துவிட்டு , நொடியில் மறைந்து விடுவான்.  ' கொஞ்சம் பார்த்துப் போடேன் ' என்று சொல்லலாம் . ஆனால் கண்ணிலேயே சிக்க மாட்டான். அவன் பெயர் தெரியாது. ஆனால் இப்படிப் பளீரென்று கடவுள் போல் தோன்றி மறைவதால் இவள் அவனுக்குக்   ' கிருஷ்ணா ' என்று பெயர் வைத்துவிட்டாள் .


சைக்கிள் மணி சத்தம் கேட்பதற்குள் , கிருஷ்ணா  தோன்றிப்    பழக்கம் மாறாமல் பேப்பரை எறிந்து நொடியில் மறைந்தான் . .  மேல் பக்கமெல்லாம் ஈரமாகி அதன் பின்னிருந்த எழுத்துகளும் முன்னிருந்த எழுத்துகளும் கலந்து தெரிந்தன. ' சரி , தெளிவாகவே எழுத்து தெரிந்தாலும்  ஒரே குழப்பமாய்த்தானே செய்திகள் போடுகிறார்கள் ' என்று சமாதானப்படுத்திக்கொண்டு உலர வைக்கும் முயற்சியாய் , இப்படியும் அப்படியுமாய் அதை வீசிக்கொண்டிருந்தேன். 

அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.

வாசலில் சைக்கிள் மணி அடித்தது. பார்த்தால் கிருஷ்ணா ! இவன் எதற்காகத் திரும்பி வந்திருக்கிறான் ? கேட்பதற்குள்  கையை உயர்த்தி என்னை அழைத்தான்.  கிடைத்த சந்தர்ப்பத்தை விடாமல் , ' இனிமேல் பேப்பரைக் கொஞ்சம் பார்த்துப் போடு ' என்று சொல்லிவிடலாம் என்று நினைத்தபடியே நானும் வாசல் கேட்டைத் திறந்து கொண்டு போனேன் . நான் வாயைத் திறப்பதற்குள் , ' சார் , கொஞ்சம் இப்படி வாங்க   .' என்று மெல்லிய குரலில் அவசரமாய் என்னை, அடுத்த வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போனான். ' அந்த வாசல் படியில் பாருங்க '

பார்த்தால் ,  ஒரு பெரிய பாம்பு !

சுமார் எட்டடி நீளத்தில் , கைப்பிடி  மொத்தமாய்ப்   , பள   பளவென்று , காலைச் சூரிய ஒளியில் ஒரு பழுப்பும்   மஞ்சளுமாய்  மின்னும்உடலோடு , அசையாமல் படுத்திருந்தது . '  இரை விழுங்கிட்டு வந்திருக்கு சார்   . அதனால்தான்அசையாமல்படுத்திருக்கு , . கோதுமை நாகம்  போலத் தெரியுது  .    தெரியாம மிதிச்சிட்டாக் கடிச்சிரும் .     நீங்க , வீட்டுக்காரங்க யாரையாவது கூப்பிட்டுச் சொல்லிடுங்க  , எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு' என்று சொல்லிவிட்டு , நொடியில் பொதுச்   சேவை செய்து விட்ட திருப்தியுடன் பறந்துவிட்டான்.​​

பக்கத்து வீட்டு அமைப்பும் என் வீடு மாதிரிதான் தெரிந்தது. மூன்று படி ஏறினால் , கம்பிக்கதவு போட்ட வராண்டா. கீழே  மூன்றாவது படியில்தான் அந்தப் பாம்பு !

என்ன செய்யலாம் ?  சட்டென்று நினைவுக்கு வந்தது. சில நாட்களுக்கு முன் ' விலங்குகளின் நண்பன் ' என்ற ஒரு அமைப்பின் விளம்பரத்தில்
' பாம்புகளை அடிக்க வேண்டாம். நகரத்தில் எங்கு பாம்பு வந்தாலும் எங்களை அழைத்தால் , அதைப் பிடித்துக் காட்டில் விட்டு விடுவோம் ' என்று , அழைப்பு  எண்ணுடன் ஒரு செய்தியைக் கண்டதும் , அந்த எண்ணைக்குறித்து வைத்துக்கொண்டதும் ஞாபகம்  வந்தது .

' ஒரு எழுத்து விடாமல் படிக்க அந்தப் பேப்பரில் என்னதான் இருக்கிறதோ ' என்று இவள் அலுத்துக்கொள்வாளே , ' பார்த்தாயா, இன்றைக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கிறது ? ' என்று கொஞ்சம் பெருமிதமாக நினைத்துக்கொண்டே என் டைரியையும் மொபைலையும் எடுத்து வர  வீட்டுக்குத்   திரும்பினேன்.

நடந்ததை அவசரமாய் இவளுக்கு விளக்கிவிட்டு , டைரியைப் பார்த்து அந்த எண்ணுக்கு ஃபோன் செய்தேன். ஒரூ மூன்று முறை மணியடித்தபின் ஒருவர் எடுத்தார். 

' இளங்கோ , விலங்குகளின் நண்பன் பேசுகிறேன். உங்களுக்கு என்ன வேண்டும் ? '

' சார், நான் இங்கே  பாரி நகரத்தில் இருந்து  பேசுகிறேன். என் பக்கத்து வீட்டில் வாசல் படியில் ஒரு பெரிய பாம்பு அசையாமல் படுத்திருக்கிறது .' 

'சரி, விலாசம் கொடுங்கள் , பத்து நிமிடத்திற்குள் அங்கே வருகிறேன் .'

கொடுத்தேன்.  சரியாகப்    பத்தே நிமிஷத்தில்  ஒரு பைக்கில் இளங்கோ வந்திறங்கினார்.

நான் ஏதோ பாம்பு பிடிக்க என்றால் கையில் மகுடியுடன் முண்டாசு கட்டிய ஒரு ஆள் வருவார் என்று நினைத்துக்கொண்டிருந்தேன் . ஆனால் இளங்கோ  இளமையாக ,டி - ஷர்ட் , காதில் ஒரு வளையம், கையில் ஒரு முனையில் கொக்கியுடன் ஒரு குச்சி, ஒரு கான்வாஸ் பையுடன்  ஒரு சின்னத்திரை ஹீரோ போல்  காட்சி அளித்தார்.' நீங்கதான் கூப்பிட்டீங்களா ? '

' ஆமாம், ஆனா பாம்பைப் பிடிக்கப்போறது யாரு ? '

இளங்கோ வசீகரமாய்ப் புன்னகைத்தார்  ' நானேதான். விலங்குகள் நண்பன் இயக்கத்திலே எங்க மாதிரி ஒரு பத்து பேர் இருக்கோம். இது ஒரு சேவை இயக்கம். நாங்க வாலன்டியர்கள். அவங்கவங்க வேலை, படிப்புக்கு நடுவே இதையும் செய்யறோம். '

' இதுக்கு ஏதாவது சார்ஜ் உண்டா? '

' சார்ஜுன்னு கிடையாது. எங்களுக்குப் பணம் தேவையில்ல . ஆனா இப்படிப் பாம்பு போன்ற விலங்குகளைப் பிடிச்சுப் பாதுகாத்து உணவு கொடுத்து வச்சு , வாரம் ஒருமுறை  பக்கத்துலே காட்டுலே கொண்டுபோய் விட்டுரோவோம் . அந்த செலவுக்காக இயக்கத்துக்குப் பணத் தேவைக்காக , விசிட்டுக்கு நூறு ரூபாய் வாங்குவோம். அவ்வளவுதான் .'

எனக்குப் பிரமிப்பாக இருந்தது . இந்த இளைஞர்களுக்கு எத்தனை அர்ப்பணிப்பு இருக்கிறது ? ஒன்றுமில்லாத ஒரு நூறு ரூபாயில் இவர்கள் எப்பேர்ப்பட்ட சேவை செய்கிறார்கள் ? இளங்கோவைப் புது மதிப்புடன் பார்த்தேன். அதை அவர் கவனித்ததாகவே தெரியவில்லை. என்னிடம் கேட்டார்.

' பாம்பு எங்கே ? அதை  எங்கே போகுதுன்னு   யாராவது பாத்துட்டிருக்காங்களா   ? '

எனக்கே  என் அசட்டுத்தனத்தை எண்ணி அவமானமாய் இருந்தது. முதலிலேயே  அந்த வீட்டுக்காரரைக் கூப்பிட்டுச் சொல்லியிருக்கவேண்டும். இதற்குள் அந்தப் பாம்பு எங்கேயாவது நகர்ந்து போயிருந்தால் ?    பக்கத்து வீட்டு கேட்டைத் திறந்து கொண்டு, இளங்கோ முன்னேயும் , நான் என் உயிரை ஜாக்கிரதையாய்ப் பிடித்துக்கொண்டு  பின்னேயுமாய் எட்டிப்  பார்த்தோம் . 

பாம்பு இன்னும் அசையாமல் அங்கேயே படுத்திருந்தது, 'புஸ், புஸ்' சென்று சீறல்  சத்தம் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது.

வீட்டிலிருந்து யாரும் வெளியில் வந்ததாகத் தெரியவில்லை. வாசல் வராண்டாவில் ஒரு கட்டிலில் யாரோ போர்வையை இழுத்து மூடிக்கொண்டு படுத்திருந்தது தெரிந்தது. உள்ளே போய் கதவைத் தட்ட முடியாததால் , நான் வெளியிலிருந்தே குரல் கொடுத்தேன் .

' சார்,​ ​சார் '

உள்ளேயிருந்து எந்தச் சலனமும் இல்லை. இன்னும் கொஞ்சம் கத்திக் கூப்பிடலாமா ?

' சாஆஆர், சாஆஆர் ' 

யாரோ  உள்  கதவுத் தாழ்ப்பாளை நீக்கி வெளியே வரும் சத்தம் கேட்டது. அடுத்த வீட்டுக்காரர் வெளியே வராண்டாவுக்கு வந்தார்.

இந்தத்தெருவில் அநேகமாக எல்ல வீட்டுக்கார்களுடனும் எனக்குப் பரிச்சயம் உண்டு. வாக்கிங் போகும்போதும் மற்றபடி மின்சாரம் போகும்போது வெளியில் வந்து  சேர்ந்து   அரசைத்   திட்டவும்  என,  ஒரு 'ஹலோ , ஹலோ ' அளவிலாவது தெரியும் ,  ஆனால் இவரைத்தவிர.   இவர் யாருடனும் சகஜமாகப் பேசியோ, பழகியோ நாங்கள் பார்த்ததில்லை. இரண்டு மூன்று தெருக்கள் தள்ளி , ஏதோ நாட்டுச் செக்கு எண்ணெய்க் கடை வைத்திருப்பதாக மனைவி வழியாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். மற்ற விவரம், பெயர் தெரியாததால்  இவரை 'எண்ணெய் ' என்றே எங்களுக்குள் குறிப்பிட்டுக்கொள்வோம் . 

முதல் முறையாக 'எண்ணை ' யைச் சற்றுக் கூர்ந்து கவனித்தேன். நடுத்தர உயரம். முண்டா பனியன்மேல், தொந்தி கீழே விழுந்துவிடாமல் ஒரு பழுப்பான வேட்டியை இறுக்கிக் கட்டியிருந்தார். முன்தலை வழுக்கை. அதை ஈடு செய்வது போல் அடர்த்தியான , இந்த நரசிம்மருக்கெல்லாம் இருக்குமே , அப்படி மேல்நோக்கி வளைந்த புருவம். மீசை , தாடி யென்று இல்லாமல் ஆனால் மழித்து இரண்டு நாட்கள் ஆகியிருப்பதுபோல் முள்முள்ளாய் முகத்தில் முடி.  நெற்றியில் கோடாய்க் குங்குமம். அந்த வியாபாரத்தின் விளம்பரமாய் , வழுக்கையையும் மதிக்காமல் தலையில் தடவிய எண்ணெய் .  குறுக்கி எங்களைப்  பார்த்த கண்ணில் சிநேகிதம் இல்லை. 

' யாரு ,என்ன வேணும் ? '

'சார் , நான் உங்க  பக்கத்து வீட்டிலேதான் இருக்கேன். அவ்வளவாக நமக்குள்ள  பழக்கமில்லை ...'

அதற்குள் எண்ணெய் குறுக்கிட்டார் .

' அதான் எனக்குத் தெரியுமே . நீங்கள்ளாம் பெரிய மனுஷங்க. நம்ப மாதிரி சாதாரண யாவாரிங்ககூட பழக்கம் எதிர்பார்க்க முடியுமா ? '

என்ன இவர் ? ஏதோ உதவி செய்யலாம் என்று வந்தால் ஏதோ சண்டைக்கு இழுப்பதுபோல் பேசுகிறாரே ? சரி, போகட்டும் . வாக்கு வாதத்திற்கு இது நேரமில்லை. 

மேலே பேச நான் முற்படுவதற்குள் உள்ளேயிருந்து அவர் வீட்டம்மாவும் பையனும் ( நினைக்கிறேன் ) வந்தார்கள். 

அந்த அம்மா எண்ணையை விட ஒரு அடி உயரம் குறைவாகவும், சுற்றளவில் ஒரு அடி அதிகமாகவும் இருந்தாள்  . பையன் ஒரு சின்ன சைஸ் எண்ணையேதான். ஒரு பத்துப் பன்னிரண்டு வயதிருக்கலாம். மூவர் தலையிலும் அவர்களுடைய விற்பனைப் பொருள் ஏகத்துக்கு இருந்தது.

' இவர்களுக்கு மிஞ்சி வியாபாரத்திற்கு ஏதாவது இருக்குமா ? ' என்று நினைத்ததில் வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டேன் . மிசஸ் எண்ணெய் புடவையை இழுத்துப் போர்த்திக்கொண்டு வந்த தமிழ்ப் பண்பாட்டை வியந்த மதிப்பு, அவர் மேலே சொன்னதைக் கேட்டவுடன் காணாமல் போயிற்று.

' யாருங்க, காலம் கெட்டுக் கிடக்குது , கதவப் பட்டுனு திறந்துறாதீங்க .'  

எனக்குக் கோபம் வந்தது.

'அம்மா. எங்களுக்கு ஒண்ணும் வேணாம் . கதவைத் திறக்கவும் வேணாம் . அப்படியே கம்பி வழியா எட்டிப் பாருங்க. உங்க வீட்டு வாசப் படியில ஒரு பாம்பு படுத்திருக்கு. பேப்பர் பையன் பாத்துட்டு சொன்னான். அதைப் பிடிச்சிட்டுப் போக விலங்குகள் நண்பன் இயக்கத்திலேருந்து , இவரை நான்தான் ஃபோன் பண்ணிக் கூப்பிட்டேன். '

மூவரும் வரிசையாக நின்று வராண்டாக் கிராதி வழியாக எட்டி அந்தப் பாம்பைப் பார்த்தார்கள் .

' இவர் அந்தப் பாம்பைப் பிடிச்சிட்டுப்  போய் அடுத்த வாரம் காட்டிலே விட்டுருவார் . ஒரு நூறே ரூபாய்தான் நீங்க குடுக்கணும் .'

பாம்பைப் பார்த்தவுடன் காணாத அதிர்ச்சி , நூறு ரூபாய் என்று கேட்டவுடன் எண்ணெய் மற்றும் பரிவாரங்கள் முகத்தில் தெரிந்தது .

' என்னது, நூறு ரூபாயா ! ' 

' என்ன சார் , ஒரு நூறு ரூபாய்தானே ? பாம்பு வேற புஸ் புஸ்னு மூச்சு விட்டுக்கிட்டு இப்படிப் படுத்துருக்கு, யாருக்கும் சேதமில்லாமே கொண்டுபோய்க் காட்டிலே விட்டுட்டா நல்லதுதானே ? ' 

எண்ணெய் என்னைக் குரோதமாகப் பார்த்தார் .

'  புஸ் புஸ்னு மூச்சு விட்டுக்கிட்டுப் படுத்திருந்தா? கொண்டுபோய்க் காட்டிலே விட்டுரணுமா ? '   வராண்டா கட்டிலைக்  காட்டினார் '  இதோ , இவ அம்மா இப்படியேதான் மூச்சு விட்டுக்கிட்டுப் பல வருஷமாப் படுத்திருக்கா . அதுக்காகக் கொண்டு போய்க் காட்டிலே விட்டுரலாமா ? '

அவர் வீட்டம்மா முறைத்தாள். பையன் சிரித்தான் . எனக்கு கோபம் அதிகமாயிற்று .

' என்னதான் பண்ணலாங்கறீங்க ? ' 

' நான் எதுக்குப் பணம் குடுக்கணும் ? பாம்பு     உங்க வீட்டிலேயிருந்துதான் தான் வந்திருக்கணும் .'

' நாங்க என்ன  பாம்பா வளக்குறோம் ? ஏன், உங்க வீட்டுக்கு அந்தப் பக்கத்திலேயிருந்து வந்திருக்கலாமில்ல ?'

எண்ணெய் ஏளனமாகப் பார்த்தார் .

' எது, எட்டடிப் பாம்பு அந்த மெயின் ரோட்டைக் கிராஸ் பண்ணி இங்கே வந்துச்சா  ? இதோ, இவளே நாலு நாளா அந்தப்பக்கம் ஒரு கடைக்குப் போகணும்னு பாக்கறா, இந்த ட்ராஃபிக்கிலே முடியாம திரும்பி வந்துட்டா. அஞ்சடிக்காரியால முடியாதது எட்டடிப் பாம்பினால முடியுமா ? '  

எனக்குப் பொறுக்க முடியவில்லை. ' என்ன, ஒரு நூறு ரூபாய்க்கு இத்தனை பேச்சு எதுக்கு ? '

' ஆமாங்க, எங்களுக்கு நூறு ரூபாய் பெருசுதான். ஏதோ பரம்பரைத் தொழில விடக்கூடாதுன்னுட்டு  நஷ்டத்தைப் பொறுத்துக்கிட்டுப் பண்ணிட்டிருக்கோம் . அன்னைக்குக் கூட உங்க வீட்டுக்காரம்மா ஒரு டின் எண்ணை  வாங்கிக்கிட்டுப் போனவங்க, சரியில்லன்னுத் திருப்பிக்குடுத்துட்டாங்க . நாம்ப என்ன செய்றது ?நாம்ப சீல் வச்ச டின்னை  வாங்கறோம் , நாலு காசு மேலே வச்சு விக்கறோம் . அது சரியில்லைன்னா ? பிடிவாதமாக்  காசுதான் திருப்பி வேணும்னுட்டாங்க . நான் ஏதோ பண்ண செலவுக்கு நூறு ரூபா பிடிச்சிக்கிட்டுத் திருப்பிக்கொடுத்தேனா , இல்லையா ? எவ்வளவு நஷ்டம்.  ஏண்டா உனக்கு ஞாபகம் இருக்கில்ல ?. '  பையனைக் கேட்டார்.

சின்ன எண்ணெய் வழி மொழிந்தான் . ' ஆமாம்பா , அதைத்தவிர அத வேறே டின்னில மாத்தி மறுபடியும்  சீல் பண்றதுக்கான செலவு   வேற   ? '

இப்போது அப்பாவும் அம்மாவுமாகச் சேர்ந்து பையனை முறைத்தார்கள். ' நீ எதுக்குத் தவளை மாதிரி குதிச்சிக்கிட்டு அவசியமில்லாததையெல்லாம் பேசறே ? வாய அடச்சிக்கிட்டு இரு. '

தவளையைத் தேடித்தான் பாம்பு வந்திருக்கிறது என்று நினைத்தவுடன் என் கோபம் போய் சிரிப்பு வந்து விட்டது. எண்ணையின் குரோதத்திற்கான காரணமும் பிடிபட்டது .

' சரி , இதையெல்லாம் விடுங்க. அவர் நூறு ரூபாய் கேட்டது அவருக்காக அல்ல. இந்தப் பாம்பைப் பிடிச்சிட்டுப் ஒரு வாரம் பாதுகாப்பா வச்சிருந்து காட்டிலே கொண்டு போய் விடத்தான் . நூறு ரூபாய்தானே ? '

' அதெல்லாம் நமக்கு கட்டுப்படி ஆகாது. வேணும்னா அதோட சாப்பாட்டுக்காக நம்ம கோடௌன்லே நிறைய எலி இருக்கு . ஒரு அஞ்சாறைப் பிடிச்சிக்கிட்டுப் போகட்டும். ' அவர் வயிறு குலுங்கச்  சிரித்தார். கோரஸாகச் சின்ன எண்ணையும் அவன் அம்மாவும்  சிரித்தார்கள்  .

நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இவர்கூடப்   பேசி ஒரு பிரயோஜனமும் இல்லை. ' இளங்கோ, நான் பணம் குடுக்கறேன் . நீங்க இதைப்பிடிச்சிட்டுப்  போங்க . '

எண்ணையும் ஒரு முடிவுக்கு வந்தார்  . ' அதெல்லாம் ஒண்ணும் நீங்க தர்மம் பண்ண வேணாம் . நாளைக்கு ஊரெல்லாம் போய் எனக்காகச் செலவழிச்சேன்னு சொல்றதுக்கா ? இதைப் புடிக்கவும் வேணாம் , வளக்கவும் வேணாம்.ஏய் , நீ போய் அந்தக் கட்டைய எடுத்துட்டு வா . அப்படியே பின் பக்க வழியா சுத்தி  வந்து ரெண்டு அடிபோட்டா செத்துப் போகுது. தூக்கி ரோட்ல எறிஞ்சாக் கதை முடிஞ்சுது .'  அந்த அம்மாவும் கிளம்பினாள்.  

இது வரை ஒன்றுமே பேசாமலிருந்த இளங்கோ குறுக்கிட்டார் .

'சார், ஒரு நிமிஷம், அத மட்டும் பண்ணிடாதீங்க .'

எண்ணெய் புருவத்தை உயர்த்தினார் . ' ஏன், உங்களுக்கு வலிக்குமா ? '

இளங்கோ கொஞ்சங்கூடக் கோபப்படவில்லை .

' சார், இது அந்தப் பையன் சொன்னது போலக்  கோதுமை நாகம்தான் . கவனிச்சீங்களா ? '

' இருக்கட்டுமே, அது கோதுமையா இருந்தா என்ன, அரிசியா இருந்தா என்ன , நாம்ப என்ன சப்பாத்தியா பண்ணப் போறோம் ? அடிச்சுத்  தூக்கித்தானே போடப் போறோம் ? '

'அப்படியில்ல சார், இந்த நாகப் பாம்பு மட்டும் அடிச்சவனைப் படம் புடிச்சுப் பாத்துட்டுத்தான் சாகும். அப்படியே அந்தப் படம் அவங்க இணைப் பாம்பு ,குட்டிக்கெல்லாம் போய்ச் சேந்துரும் . அதெல்லாம் பழி வாங்காம விடாது .' 

எண்ணையின் முகத்தில் சற்றுக் கலவரம் தெரிந்தது . அந்த அம்மாவின் முகத்தில் பீதி.

' இதெல்லாம் சும்மாக் கதைதானே ? ' எண்ணையின் கேள்வியில் சுரம் இறங்கியிருந்தது.

' எனக்கு அது தெரியாது. ஆனா ரெண்டு மாசத்துக்கு முன்னே இது மாதிரிதான் எனக்குத் தெரிஞ்சவங்க வீட்லே ஒரு நாகப் பாம்பை அடிச்சாங்க. ஒரு வாரம் முன்னே, நீங்க கூடப் படிச்சிருப்பீங்களே பேப்பர்லே . வீட்லே ரெண்டு பேர் பாம்பு கடிச்சு செத்துப் போனாங்க . அது எனக்குத் தெரிஞ்சு நடந்தது .' 

இப்போது எண்ணையின் முகத்தில் கலவரம் தெளிவாகத் தெரிந்தது . அந்த அம்மா முகத்தை அழுத்தித் துடைத்துக்கொண்டு அவரைக் கூப்பிட்டாள் . ' என்னங்க ,   கொஞ்சம் இப்படி வாங்க .' இரண்டு பெரும் குசு குசுவென்று ஏதோ பேசியதும் எண்ணெய் தலையை ஆட்டியதும் தெரிந்தது. எண்ணெய் திரும்பி வந்தார் .

வந்தவர் கை தேர்ந்த அரசியல்வாதிபோல் ஒரே நிமிடத்தில் நிலையை மாற்றிக்கொண்டார் .

' தம்பி '   இளங்கோ இப்போது இவருக்கு உறவாகி விட்டார் ' அதெல்லாம் கிடக்கட்டும். அதுவும் ஒரு உயிர்தானே? ஒரு உயிருனு வரும்போது  நாம்ப நூறு ரூபாயைப் பாக்கலாமா ? அது பாட்டுக்குக்  காட்டிலேயே எங்கேயோ போய் நிம்மதியா இருக்கட்டும் . என்ன நாஞ்சொல்றது ? '  அந்தம்மாவை ஏறெடுத்துப் பார்த்தார். குறிப்பறிந்து, அந்த அம்மாவும் உள்ளே போய் ஒரு எண்ணைப் பிசுக்கடைந்த ( வேறெப்படி இருக்கும் ) நூறு ரூபாய் நோட்டைக் கொண்டு வந்து அவரிடம் கொடுத்தாள் . அதைக் கம்பி வழியாக இளங்கோவிடம் நீட்டினார். இளங்கோ அதை வாங்கிப் பேண்ட் பாக்கெட்டிற்குள் செருகிக்கொண்டார் .

அப்புறம் நடந்ததெல்லாம் மின்னல் வேகம். இளங்கோ பாம்பின் அருகில் போய் , லாவகமாக , அது தலையைத் தூக்கியவுடன் கொக்கியைக் கழுத்துக்குக்   கீழ் நுழைத்துத் தூக்கினார். அதன் வாலைப் பிடித்துக் காலிடுக்கில் வாய்திறந்து வைத்திருந்த பைக்குள் விட்டார். சட்டென்று வாலையும் உள்ளே தள்ளிப் பையைக் கட்டிக் கையில் எடுத்துக்கொண்டு  . ' நான் வருகிறேன் , எங்கள் இயக்கத்துக்கு நூறு ரூபாய் கொடுத்து ஆதரித்ததற்கு நன்றி .' என்று சொல்லிக் கிளம்பினார். எண்ணையின் முகத்தில் தெரிந்த வருத்தம் கண்டிப்பாகப் பாம்பு போனதற்காக இருக்க வாய்ப்பில்லை.

நான் இளங்கோவின் கூடவே,   அவர் கைப் பையை விட்டு மூன்றடி தள்ளி நடந்து , தெருவுக்கு வந்தேன். இளங்கோ பையைப்   பைக்கின் பின்னாலிருந்த பெட்டிக்குள் இறக்கினார் . பைக்கை ஸ்டார்ட் செய்தார். 

 'என்ன, இளங்கோ , ஒரு பொய்யைச் சொல்லி அப்படியே அவரைக் கவுத்துட்டீங்களே , பெரிய ஆள் நீங்க ! ' 

இளங்கோ சிரித்தார். ' சார், நான் பொய்யெல்லாம் சொல்வதில்லை. பாம்பை அடித்துக் கொன்றதும் நிஜம். பாம்பு கடித்துச் செத்ததும் நிஜம். ஆனால் நடந்தது வெவ்வேறு வீடுகளில் என்பதை மட்டுந்தான் நான் சொல்லவில்லை . வரவா, வணக்கம் பல .' என்று சொல்லிப் பறந்து விட்டார்.

நான் ' அஸ்வத்தாமோ ஹத ; குஞ்சர ' என்று முணுமுணுத்துக்கொண்டே வீட்டுப் பக்கம் திரும்பி நடந்தேன்.
= = = = 

53 கருத்துகள்:

 1. நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை..

  வாழ்க குறள் நலம்..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  நலம் வாழ்க என்றென்றும்...

  பதிலளிநீக்கு
 3. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 4. வணக்கம் சகோதரரே

  இன்றைய செவ்வாய் கதை கலகலப்பாக நன்றாக இருக்கிறது. ஆங்காங்கே நகைச்சுவை மிளிர இருந்த கதையை படித்து மகிழ்ந்தேன். தங்கு தடங்கல் இல்லாத லாவகமான வார்த்தைகள் மிகச்சிறப்பு. கதையை முடித்திருந்த விதமும், கதையில் வரும் அனைவருக்கும். பட்டப் பெயர்களும் வாய் விட்டு சிரித்து ரசிக்க வைத்தன. அருமையான கதையை தந்த கதாசிரியருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள். பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  சகோதரர் கெளதமன் அவர்கள் கதைக்குப் பொருத்தமாக வரைந்திருந்த பேப்பர் போடும் கிருஷ்ணா படமும் அமர்க்களம். கெளதமன் சகோதரருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள். நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  அனைவரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்கவும்,
  நாட்டில் நல்லாட்சி வரவும் இறைவனிடம் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 6. நல்ல நகைச்சுவையோடு கதை கொடுத்திருக்கும் திரு வைத்திய நாதனுக்கு
  மிக மிக நன்றியும் வாழ்த்துகளும்.

  வீடு கட்டுவதில் இருந்து
  தற்போது நடக்கும் பிரச்சினை வரை
  அருமையாகக் கதையை அமைத்திருக்கிறார்.

  எண்ணெய்க் கதை ஹாஹாஹா.
  அப்பா எண்ணெய் அம்மா எண்ணெய், குட்டி எண்ணெய்.
  சூப்பர் விவரணை.
  அடேங்கப்பா . அருமை அருமை.

  பதிலளிநீக்கு
 7. மின்னி மறையும் 'கிருஷ்ணா'க்கள் சென்னை
  முழுவதும் உண்டு. அதைச் சொல்லி இருக்கும் விதம்
  சிறப்பு.

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. //வந்தவர் கை தேர்ந்த அரசியல்வாதி போல் ஒரே நிமிடத்தில் நிலையை மாற்றிக் கொண்டார்//

  ஹா.. ஹா.. இன்று பார்த்தா இந்த வார்த்தையை படிக்கணும் ? மிகவும் ரசித்தேன் வாழ்த்துகள் புதுக்கோட்டை சார்.

  நல்ல நகைச்சுவை பதிவு முழுவதும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று பார்த்து இது வந்ததற்குப் பாராட்டும் குற்றச்சாட்டாயிருந்தால் அதுவும் Sriram Balasubramaniam க்குச் சேரவேண்டியது. ரசித்ததுற்கு நன்றி.

   நீக்கு
 10. //கோதுமை நாகம் போலத் தெரியுது . தெரியாம மிதிச்சிட்டாக் கடிச்சிரும் . நீங்க , வீட்டுக்காரங்க யாரையாவது கூப்பிட்டுச் சொல்லிடுங்க , எனக்கு ஸ்கூலுக்கு நேரமாச்சு' என்று சொல்லிவிட்டு , நொடியில் பொதுச் சேவை செய்து விட்ட திருப்தியுடன் பறந்துவிட்டான்.//

  சின்ன கிருஷ்ணனை பாரட்டவேண்டும் , கடமை, பள்ளிசெல்லும் அவசரம் அப்படி இருக்கும் போதும் பிறர் நலத்தில் அக்கறை எடுத்து தகவல் சொன்னதற்கு.
  நல்ல கதை தந்ததற்கு கதை ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

  கதை நன்றாக இருக்கிறது.
  கதைக்கு ஏற்ற படம் நன்றாக வரைந்து இருக்கிறார் கெளதமன் சார்.

  பதிலளிநீக்கு
 11. கதை முழுவதும் நிரவி இருக்கும் சுவை
  சிரிப்பு மட்டுமே.
  பெயர் சொல்லாதது படுத்தபடி மூச்சு விடுவதும்
  சிறப்பாகச் சிரிப்பாக இருக்கிறது.
  கௌதமன் ஜியின் ஓவியம்
  கச்சிதமாகப் பொருந்துகிறது. வாழ்த்துகள்.
  வாலண்ட்டியர் இளங்கோவின் சமயோசித
  புத்திசாலித்தனம் சிந்திக்க வைக்கிறது. இது போல எத்தனை
  மனிதர்களைப் பார்த்திருப்பாரோ.!!!

  நல்ல நகைச்சுவைக் கதைக்கு மிகவும் நன்றி மா.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி. வாசகரின் பாராட்டைவிட எழுதுபவருக்கு வேறு ஊக்கம் தேவையில்லை. நிற்க, அதுபோல யாரையும் நான் பார்த்ததில்லை. கற்பனை, கற்பனை, கற்பனையேதான் !

   நீக்கு
 12. நகைச்சுவை மிளிரும் நல்ல கதை. மத்யமரிலும் படித்த ஞாபகம். ஆனால் அங்கு இருக்கும் நெரிசலில் படித்ததற்கும், இங்கு விஸ்ராந்தியாக படிப்பதற்கும் நிறைய வித்தியாசம். இங்கு சேம்பர்ட் மியூசிக்கில் கச்சேரியை ரசித்த திருப்தி.
  நல்ல கதையைத் தந்த கதாசிரியருக்கும், அதற்கு பொருத்தமான ஒவியம் வரைந்த கெளதமன் சாருக்கும் நன்றியும், வாழ்த்துக்களும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் பல. குறிப்பாக மீண்டும் வாசிக்க நேரம் ஒதுக்கியதற்கும் பாராட்டுக்கும்.

   நீக்கு
 13. அருமையான நகைச்சுவைக் கதை. நகைச்சுவையினூடே, தனித்திருக்கும் வயதான தம்பதியினரின் வாழ்வும், சுற்றியிருப்போரின் தன்னலமற்ற பண்பும் (கிருஷ்ணா மற்றும் இளங்கோ), சுயநலமும்(எண்ணெய்க் குடும்பம்), அதனை வெல்ல நமக்கு இருக்கவேண்டிய சாமர்த்தியமும் என கதை அழகாக நிறைவைடைகிறது. நல்ல கதை அளித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றிகள் பல. உங்கள் மகிழ்வில் என் மகிழ்ச்சி.

   நீக்கு
 14. ஜெமோ யானை கதைக்கு இணயான கதை வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 15. எதேச்சையாக பக்கத்து வீட்டு வாசல்படிப் பக்கம் பார்த்த பொழுது தூக்கி வாரிப் போட்டது -- என்று கதையை ஆரம்பித்திருக்கலாம்.
  அப்படிச் செய்து விட்டால் அதில் என்ன இருக்கிறது. கிருஷ்ணாவை கிடைத்த சைக்கிள் கேப்பில் எங்களுக்கும் அறிமுகப் படுத்தியது பிரமாதம். கிருஷ்ணாவிற்கு தகுந்த காரணத்தோடு பெயர் சூட்டிய அவங்களுக்கும் (எண்ணைய்க்குக் கூட அவங்க தானே!) எங்கள் பாராட்டுக்கள். கிருஷ்ணாவை அச்சு அசலாகப் படம் பிடித்தக் காட்டிய கேஜிஜிக்கும்.

  பதிலளிநீக்கு
 16. 'இளங்கோ. விலங்குகளின் நண்பன் பேசுகிறேன்' என்றவுடனேயே லேசான மென்முறுவல் முகத்தில் பளிச்சிட்டது கதை நிறைவுறும் தருணம் வரை படிப்படியாக தன்னுள் வளர்ச்சி கொண்டு ஒரு 'பகபக' சிரிப்புடன் தான் வெளிப்பட்டது. கதை ஆரம்பித்தது தெரியவில்லை, முடிந்தது தெரியவில்லை.. வாசகரை பக்கத்தில் இருத்தி வைத்துக் கொண்டு கதை சொல்லும் அதுவும் அசால்ட்ட்டாக அந்தத் திறமையை வெளிப்படுத்தும் திறமை கைவந்த கலையாக வெளிப்பட்டது.

  பதிலளிநீக்கு
 17. எண்ணையின் குடும்ப சகித அறிமுகம் அற்புதம். அந்த நூறு சமாச்சாரம் வந்ததும் இன்னும் தூக்கலாக எண்ணை மிளிர்கிறார். ஆனா, நான் என்ன நினைச்சேன்னா அந்த நூறுலேயும் சரி பாதியாக ஆளுக்கு அம்பது என்று பங்கு போடுவாராக்கும் என்று. எண்ணையை ரொம்பவும் கீழிறக்காமல் நிமிர்த்தியும் இருக்கிறீர்கள். கதை முடியும் தருவாயில் கூட பக்கத்து தெருத் திருப்பத்தில் மண்டியிருக்கும் புதர்க் காட்டில் இயற்கைச் சூழலுடன் ஒன்று கலக்கிறேன் பேர்வழி என்று அந்த இளங்கோ சாக்குப்பையை உதறிவிடுவாரோ என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. ஆனால் அந்த ஸ்மார்ட் இளங்கோ உண்மையிலேயே சமூக நல உணர்வு, வாயில்லா ஜீவன்களின் நல உணர்வு என்று எல்லா நல்ல உணர்வுகளையும் கலந்து கட்டி தன்னுணர்வாய்க் கொண்டிருக்கும் இளைஞராய்த் தான் இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 18. வாட்ஸாப்பைத் திறந்தாலே, முக நூல் பக்கம் போனாலே தேர்தல் திருவிழா நிகழ்வு நிரல் தான். அத்தனையும் புறந்தள்ளி இன்று செவ்வாயாச்சே என்று நினைவில் பளீரிட்டு எ.பி. பக்கம் வந்தால் வஞ்சனை வைக்காமல் எங்களை குஷிப்படுத்தியிருக்கிறீர்கள்.

  நகைச்சுவையுடன் எழுதுவது என்பது சிலருக்கே சாத்தியப்பட்டிருக்கும் ஒரு கலை.
  அந்த கலை உங்களுக்கும் வசப்பட்டிருக்கு என்பது எ.பி. வாசகர்களுக்குமான பெருமை.
  இதோ இன்னொரு பாக்யம் ராமசாமி என்று நினைத்துக் கொண்டேன். வாழ்த்துக்கள், வைத்தியநாதன்! உங்கள் எழுத்துப்பணி வளர்ந்தோங்கட்டும், நண்பரே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஜீவி, நீண்ட கணிப்பு உங்களுடையது. ஆழ்ந்து படித்ததற்கு நன்றி. கதை எழுதுவதில் சில சோதனைகளில் நான் ஈடுபட்டிருக்கிறேன். மிட்டாய் கொடுத்துக் குழந்தைகளைப் பள்ளிக்கு இழுப்பதைப் போல், நகைச்சுவையைப் பயன்படுத்துகிறேன். சில சீரியஸின கதைகளும் வரும். படியுங்கள், விமரிசியுங்கள். நன்றி.

   நீக்கு
 19. சைக்கிள் பொடியன் மனதைக் கவர்கின்றான்...

  KGG அவர்களின் கைவண்ணம் அருமை..ம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கெளதமனுக்குப் பாராட்டும் நன்றிகளும். என் கதைகளுக்குப் படம் வரைய ஆஸ்தான ஓவியராக நியமிக்கலாம் என்று இருக்கிறேன். சைக்கிள் பொடியனின் நன்றி.

   நீக்கு
 20. மத்யமரிலும் படிச்சேன் இந்தக் கதையை, நல்ல கருத்துள்ள கதை. வெகு அசாதாரணமாகச் சொல்லிக் கொண்டு போகிறார். கதை கொஞ்சமும் தொய்வில்லாமல் பக்கத்து வீட்டு நிகழ்வைப் பார்க்கிறாப்போல் இருந்தது.

  பதிலளிநீக்கு
 21. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 22. முதல் முறையாக உங்கள் எழுத்தைப் படிக்கிறேன் என்று நினைக்கிறேன்.
  பிரமாதம்.
  எழுத்தில் நகைச்சுவையைப் புகுத்தும் இடம் சரியாக இருக்க வேண்டும். உங்களிடமிருந்து படிக்கலாம் போலிருக்கிறது.
  மிக ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சிரமப்பட்டு நுழைக்கும் நகைச்சுவை, கதையின் ஓட்டத்தைக் குறைத்துக் கெடுக்கும். கதையோடு இழையவேண்டும். நகைச்சுவைக்கதையாகவே இருந்தாலும், முதலில் அது கதை, அப்புறந்தான் அங்கங்கே இழைந்து தெளிக்கும் சிரிப்பு. அதை உணர்ந்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 23. நல்ல கதை. கடைசியில் முடித்த விதம் சிறப்பு.

  பெயர் சூட்டுதல் - :) எல்லோருக்கும் பெயர் வைப்பது சிலருக்கு மட்டுமே கை வந்த கலை!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சரியான பாயிண்ட். மிகவும் கஷ்டமான வேலை. நன்றி.

   நீக்கு
 24. கேஜிஜி, அந்த படத்தில் நா மிகவும் ரசித்தது நகரும் சைக்கிளின் ஃபோக்ஸ் கம்பிகள். எபபடித் தான் வரைந்தீர்களோ தெரியவில்லை, தத்ரூபமாக இருந்தது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!