வியாழன், 8 ஏப்ரல், 2021

நாலு விரல் புரட்சி! தவிர்க்க முடியாத தர்மங்கள்

 "​பூத்​ ஸ்லிப் கொடுத்துட்டாங்களா?​"  நானும் ஒரு வாரமாக என் பழைய வீட்டுக்கருகில் விசாரித்துக் கொண்டிருந்தேன்.  கடைசி வரை கொடுக்கவில்லை.

"ஸார்...  உங்களுக்குத் தெரியாதா?  ஆதார், பான்கார்ட், வோட்டர் ஐடி, டிரைவிங் லைசன்ஸ் எதையாவது ஒன்றைக் காட்டி வோட்டுப் போடலாம்!"

எங்களுக்குத் தெரியாத புதிய விவரமா என்ன இது!  பூத்ஸ்லிப் இல்லாத கஷ்டமும் எங்களுக்குத் தெரியாததா என்ன!

அங்கிருந்தவரை காலை ஆறு ஐம்பதுக்கு நானும் பாஸும் சென்று முதல் ஆளாக அல்லது இரண்டாவது மூன்றாவது ஆளாக வாக்களித்து விடுவது வழக்கம்.  பின்னர் ஒழிந்த நேரத்தில் மகன்கள் வாக்களித்து விடுவார்கள்.

வழக்கத்தை மாற்றுவது என் வழக்கமல்ல...

எனவே வழக்கம்போல ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு காலை ஏழு மணிக்கு முன்னரே பூத்துக்குச் சென்றால் வழக்கத்துக்கு மாறாகக் கூட்டம்.  

என்னடா..  என் பூத்துக்கு வந்த சோதனை!

ஆட்டோவிலிருந்து இறங்கியதும் ஆட்டோகாகாரரை காட்டுக் கத்தலாய்க் கத்தி தள்ளிப்போகச் சொன்னார் அரை மாஸ்க் போலீஸ்காரர் ஒருவர்.  பாட்ரோல் வண்டி நின்று கொண்டிருந்த உதறல் தந்த கடமை உணர்ச்சி!

"இந்த பூத்ல எப்பவுமே பிரச்னை வந்ததில்லை ஸார்..   அமைதியான ஜனங்க..."  பாட்ரோல் ஆபீஸருக்கு சொல்லிக் கொண்டிருந்தார் இந்த இடத்தின் பொறுப்பு போலீஸ் ஆபீசர்.

உள்ளே இன்னொரு போலீஸ்காரர் மாஸ்க்கை மூக்குக்கும், பாதி வாய்க்கும் கீழே இறக்கிக்கொண்டு எல்லோரையும் "மாஸ்க் போடுங்க"  சொல்லிக் கொண்டிருந்தார்!

கையில் பன்னீர் தெளித்து தாம்பூலம் கொடுப்பது போல சானிடைசர் தெளித்து கையுறை கொடுத்தார் ஒரு பெண்மணி!  அக்கறையாக  ஜுரம் இருக்கா என்றும் பார்த்தார்!

சமூக இடைவெளி விட்டு நிற்க முயற்சித்தால் குறுக்கே வந்து நிற்கத் தலைப்பட்டனர் வாக்காள ஜனங்கள்!

வரிசையில் கேட்டபோது அங்கிருந்த யாருக்குமே பூத் ஸ்லிப் தரவில்லை என்று தெரிந்தது.  

​"உ....  க்கும் ..   அங்கங்கே ஒவ்வொருத்தனும் ஐநூறு, ஆயிரம்னு கொடுத்தாங்ககளாம்...   அதுவே எங்களுக்கெல்லாம் வரலை..."  பெண்கள் வரிசையிலிருந்து ஒரு கிழவி சத்தமாக அலுத்துக்கொண்டார்!  

முதல் ஆளாய் பெண்கள் செக்ஷனில் உள்ளே வாக்களிக்கச் சென்ற அவர் பூத் ஸ்லிப் கேட்டதும் ஒரு சாமியாட்டம் ஆடினார்.  அந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று கத்திக்கொண்டிருந்தார்.  "இலைக்குதான் வோட்டுப் போடப்போறேன்..  யாரு என்னைத் தடுக்கறது...  வருஷக் கணக்கில் இங்கே வோட்டுப் போட்டுக்கிட்டிருக்கேன்..  இதோ ஆதார்..."

அவர் உதாரால் அந்த இடம் பேஜார் ஆகிப்போயிருந்தது.  என் பாஸ் உட்பட மற்ற பெண்கள் கவலையுடன் வெளியில் காத்திருந்தனர்.  கவலைக்கு இரண்டு காரணம்.  அவர்களிடமும் பூத் ஸ்லிப் இல்லை!  தரவில்லை.  இன்னொன்று ஒரு முடிவு தெரியாமல் லேட் ஆகிறது!

அலைபேசி அனுமதி கிடையாது என்று சொல்லி இருந்ததால் ஆட்டோவிலேயே வைத்திருந்து விட்டு வந்தேன்.  பார்த்தால் எல்லோரும் செல்லைக் கையில் வைத்து முகத்தைக் கோணலாக்கி செல்பி எடுத்துக் கொண்டிருந்தார்கள்.  போலீசும் ஒன்றும் சொல்லவில்லை.

ஆனால் உள்ளே சென்ற முதல் இரண்டு ஆட்களும் அது இல்லாததால் வெளியே அனுப்பப்பட,  இன்னொருவர் சண்டை போட்டுக்கொண்டிருக்க, நானும் உள்ளே சென்று விவரம் கேட்டால், என்னைத் தெரிந்த அந்த ஏரியாக்காரர்கள் - கட்சி சார்பில் அமர்ந்திருந்தவர்கள் - உதவ மறுக்கிறார்கள்.

அங்கிருந்த ஆபீஸர் மாஸ்க்கை இறக்கி விட்டுக்கொண்டு பஞ்சாயத்துப் பேச, நான் சற்று தூரத்திலிருந்தே 'மாஸ்க்கை இழுத்து விட்டுக்குங்க' என்று ஜாடை காட்டினேன்.  சரி செய்து கொண்டார்.  மறுபடியும் ஒருமுறையும் அப்படியே ஆனது.

முன்னால் நின்றவர் சண்டையிட்டுக் கொண்டிருக்க, எண் சரிபார்ப்பவர் ஸ்லிப் வைத்திருந்த ஒருவரை அடுத்து அழைத்துவிட்டார்.

ஆபீஸர்  என்னை அருகில் அழைத்து உதவ முற்பட்டார்.  ஆனால் மை வைக்கும் கண்ணம்மா அதை ஆட்சேபிக்க, இவர் என்னை "வெளியே போய் சீரியல் நம்பராவது தெரிஞ்சிக்கிட்டு வாங்க..  உங்களை நான் குறுக்கே முன்னாடியே போட விட்டுடறேன்" என்றார்.  ஆதார் இருந்து என்ன, பான் இருந்தென்ன...   வோட்டர் ஐடியே இருந்தென்ன...  தேட அலுப்பு!

"ஓகே..  ஆனால் நீங்க மாஸ்க் விஷயத்துல இறக்கி இறக்கி விட்டுக்கறீங்க...  பாருங்க..  வரிசை வரிசையா பப்ளிக் வருவாங்க..  நீங்கதான் ஜாக்கிரதையா இருக்கணும்...  மாஸ்க்கை இறக்காதீங்க" என்று சொல்லி விட்டு வந்தேன்.

பூத் ஸ்லிப் தேடி வந்தால் பின்னர் தெரிகிறது இந்த வருடம் பூத்தையே வேறு இடத்துக்கு மாற்றி விட்டார்கள் என!

அங்கு சென்று நாங்கள் நான்குபேர்களும் வாக்களித்தபோது மணி ஏழே முக்காலைத் தாண்டிக் கொண்டிருந்தது எனக்கு கொஞ்சம் அகௌரவமாக இருந்தது.  பின்னே ஏழு மணிக்கே வாக்களிக்கும் எனக்கு இது லேட் அட்டண்டன்ஸ் இலையா!  ஹிஹிஹி...

அதோடு எங்களுக்கு முன்னால் பத்துபேர் நின்று கொண்டிருந்தார்கள்.  வழக்கமாக நாங்கள்தான் முன்னால் நிற்போம்.

அங்கும் வேறொரு பாட்டி தூள் கிளப்பிக் கொண்டிருந்தார்.  

"எதை அமுக்கறதுன்னு தெரியலியே..."

"அந்த சின்னத்துக்கு பக்கத்துல ஒரு பட்டன் இருக்கு பாருங்க..  அதை அமுக்குங்க..."

"எந்த சின்னம்?"

"நீங்க எந்த சின்னத்துக்குப் போடறோம்னு நினைக்கறீங்களோ அந்த சின்னம்"

"அதுதான் எதுன்னு தெரியலியே..."

என்ன பதில் சொல்ல?  அடுத்து நின்ற ஒரு பெண் பாட்டிக்கு உதவ ஓரடி எடுத்து வைத்ததை பூத் பொறுப்பாளர்கள் தடுத்து விட்டனர்.   "அது தப்புங்க..."

"நாங்க இதுக்காக ரொம்ப நேரம் வோட்டுப் போடாம நிக்கறதும் தப்புங்க..."

கடைசியில் பாட்டி எதையோ அமுக்கி விட்டு நகர்ந்தார்.

 ஆக, எப்படியோ எங்கள் நாலு வோட்டு காலை ஏழே முக்காலுக்கே பதிவாகி விட்டது.  ​ நாலு வோட்டால் என்ன செய்ய முடியும் என்று நாலு பேர் நாக்கில் பல்லு  போட்டு பேச மாட்டார்கள் என்று தெரியும்!  


வீட்டுக்கு வந்து முழுக்கு போட்டோம்!

மாலை ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது.  ஒரு தொலைபேசி அழைப்பு.  யாரென்று எடுத்தால், வழக்கமாக பழைய வீட்டுக்கு கணக்கெடுக்க வரும் பெண்மணி.  என்னை அடையாளம் விசாரித்துக்கொண்டு, நான் வந்து வாக்களித்தேனா என்று கேட்டுக்கொண்டார்.  என் பெயரில் கள்ள வோட்டு போட்டார்களா என்று செக் செய்துகொண்டாரோ என்னவோ..."பூத் ஸ்லிப் தராம விட்டுட்டீங்களேம்மா" என்று நான் அங்கலாய்த்ததை அவர் அவ்வளவாகக் கண்டு கொள்ளவில்லை.

=======================================================================================================

பேஸ்புக்கில் ஜவர்லால் யாசகம் பற்றி ஒரு போஸ்ட் போட்டிருந்தார்.  அதைப் படித்ததும் தோன்றிய இருவகைச் சிந்தனைகளை கீழே தருகிறேன்..  அதை இந்த வாரக் கவிதைக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாமா?

'தர்ம'சங்கடம்!

ஐம்பது காசா
அஞ்சு ரூபாயா

நீட்டப்படும்
யாசகத்தட்டில்
எவ்வளவு போடலாம்
என்று முடிவு 
செய்யும் முன்னரே
பச்சை விளக்கு 
விழுந்துவிட்டது

*****

தவிர்க்க முடியாத 
தர்மங்கள்

யாசகக் கண்களில்
வாசக ஆர்வம்

"அவரே தர்மம் பண்றாரு
உனக்கென்னய்யா 
பொறாம?"
விரட்டும் 
ஆட்டோக்காரரிடம் சீறி,
குழைவாய் நீள்கிறது 
கை உள்ளே

அலுவலகக் குறிப்பைத்
தேடி 
பைக்குள் கைவிட்டவன்
விழிக்கிறான்
​தர்மம்
போடாமல் இருந்தால்
ஆட்டோக்காரனும் 
நகைக்கலாம்

=================================================================================================

தினமலர் 'சொல்கிறார்கள்' பகுதியில் அவர்கள் வேறு திலிருந்தோ எடுத்துப்போடும் பகுதிகள் வரும்.  சில சுவாரஸ்யங்கள் கிடைக்கும்.  அவற்றில் ஒன்று...

சிவகுமாரால் புகைப்பதை விட்டேன்!

புகைப்பிடிக்கும் பழக்கத்தை விட்டது தொடர்பாக, பிரபல குணச்சித்திர நடிகர், 'டில்லி' கணேஷ்: 


"சினிமா உலகில் நான் நுழைந்த புதிதில், புகைப்பிடிக்கும் பழக்கம் எனக்கு இருந்தது. நடிகர் சிவகுமாருடன் இணைந்து, பல படங்களில் நடித்துள்ளேன்.

அப்படி நடிக்கும் போது, அவர் முன் அமர்ந்து கூட, சிகரெட் பிடித்துள்ளேன். சிகரெட் போன்ற எந்த தீய பழக்கங்களும் இல்லாத சிவகுமார்,  நான் புகைப் பிடிப்பதை, சில சமயம் கூர்ந்து பார்ப்பார்; ஒன்றும் சொல்ல மாட்டார். அதனால் தான் தொடர்ந்து, அவர் முன் சிகரெட் பிடித்து வந்தேன்.அவர் பார்வை, எப்போதும் கூர்மையாகவே இருக்கும். ஒரு முறை காரணத்தோடு பார்த்தார். அந்த பார்வையின் அர்த்தம் எனக்கு புரியவில்லை.

தொடர்ந்து, வழக்கம் போல சிகரெட் பிடித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒன்றும் சொல்லாத அவர், இரண்டு நாட்கள் கழித்து, என்னை அழைத்தார்.


அப்போது நான் சிகரெட் பிடிக்கவில்லை. சிவகுமார், 'என்ன மிஸ்டர் கணேஷ், சிகரெட் பிடிக்கவில்லையா... சிகரெட் எங்கே?' என கேட்டார்.நான், 'இப்பத் தான் பிடித்தேன்; கொஞ்ச நேரம் கழித்து தான் அடுத்து பிடிப்பேன்' என்றேன். 'ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பீர்கள்?' என்றார், சிவகுமார். 'சரியாக தெரியவில்லை சார்... நான், 'செயின் ஸ்மோக்கர்' கிடையாது; எப்பப்ப மூடு வருகிறதோ, அப்பப்ப சிகரெட் பிடிப்பேன்' என்றேன்.

அவரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.அருகில் இருந்த இயக்குனர் ஒருவர், என்னை தனியாக அழைத்தார். 'சிவகுமார் எவ்வளவு பெரிய கலைஞர். அவர் முன் சிகரெட் பிடிக்கலாமா?' என்றார். 

மேலும், 'அவருக்கு சிகரெட் பிடிக்காது' என்றார். அதன் பின், சிவகுமார் முன் சிகரெட் பிடிப்பதை நான் விட்டு விட்டேன். ஆனால், சிவகுமார் விடவில்லை என்னை. 'என்ன மிஸ்டர் கணேஷ், சிகரெட்டோடு உங்களை ரொம்ப நாளாச்சு. ஏன் பிடிக்கிறது இல்லையா?' என்றார்.

நான் உடனே, 'ரொம்ப சாரி சார். இனிமேல் அப்படி செய்ய மாட்டேன்' என்றேன். 

அதற்கு சிவகுமார், 'எனக்கு மரியாதை கொடுக்கவில்லை என நினைத்து, அப்படி கேட்கவில்லை. வீணாக காசு கொடுத்து, வியாதியை வாங்குகிறீர்களே என்ற எண்ணத்தில் தான் அப்படி கேட்டேன்' என்றார்.

மேலும், 'இதற்கு காரணம், நீங்க ரொம்ப காலத்திற்கு உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்பது தான்; வேறு ஒன்றும் இல்லை' என்றார்.


இது நடந்தது, 1978ம் ஆண்டு. சிவகுமார் என்னிடம் சொன்ன அறிவுரை, இப்போது வரை என் நினைவில் நிற்கிறது. அவர் சொன்ன பிறகு, சிகரெட் பக்கமே நான் செல்லவில்லை. புகைப்பதை அடியோடு விட்டு விட்டேன்.

எல்லா புகழும் சிவகுமாருக்கே!  

=========================================================================================================

முதல்முறை நான் வைகையில் வந்தபோது வன்னியர்கள் போராட்டம்.  சாலைகள் முழுவதும் மரங்களால் தடைப்பட்டிருக்க, பேருந்துகள் ஓடாததால் ரயிலில் ஏகக் கூட்டம்.  எனக்கா, கூட்டமே ஆகாது.  மற்ற சமயங்கள் என்றால்  வேண்டாம் இந்தப் பயணம் என்று விட்டு விடலாம்.  நான் வருவதோ என் வாழ்க்கைப் பிரச்னை ஒன்றுக்கு!   தவிர்க்க முடியவில்லை.   சுகுமார் குடும்பத்துடன் சென்னை வந்த அந்த அனுபவம் மறக்க முடியாதது.  மதுரையிலிருந்து விழுப்புரம் வரை ஒற்றைக் காலிலேயே நின்றபடி வந்த பயணம்.  அப்புறம்?  

இரண்டு கால்களில் நிற்க இடம் கிடைத்தது!

2014 டிசம்பர் மாதம்.  என் அத்தை மரணமடைய, நான் மதுரை செல்ல வேண்டிய நிலை.  அதே வைகை.  அன்று நான் சென்னையிலிருந்து மதுரை செல்லும்போது திருச்சி வரை இதே நிலைதான் - அதாவது கீழே படத்தில் உள்ள நிலை!  திருச்சியில் அந்தக் கம்பார்ட்மெண்ட்டில் ஏழெட்டு பேர் ஏறிவிட, தனிமை பறிபோனது!!2015 ஜனவரியில் மதுரையில் அப்பாவைப் பார்க்க சென்றபோது ஒருநாள் அங்கு சமையலறையில் என் கைவண்ணம்!========================================================================================================

பொக்கிஷம் பகுதியில் மறுபடியும் கொஞ்சம் தமிழ்வாணன்....
128 கருத்துகள்:

 1. இன்று என்ன இன்னமும் யாரையும் காணோம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தெரியலியே!  என் கண்ணுக்கும் யாரும் தெரியலை- உங்களைத்தவிர!

   நீக்கு
 2. காளான்களைப் பற்றி நான் முதன் முதலாக அறிந்தது 79ல். எங்கள் பள்ளியில் புதிதாக கெமிஸ்ட்ரி, பயாலஜி, உயிரியல் போன்ற படிப்புக்கு மூன்று பிஜி டீச்சர்களை அப்பாய்ன்ட் பண்ணினார்கள். யூனியில் படித்துவிட்டு வெளிவந்த இளைஞர்கள். பயாலஜி டீச்சர் எப்படி காளான் வளர்க்கிறார்கள், அது எவ்வளவு பெரிய பிசினெஸ் என்றெல்லாம் விளக்கி வைக்கோல்களை வைத்து காளான் வளர்த்துக் காண்பித்தார். அப்போ புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ..  நான் முதலில், அதைச் சாப்பிடுவார்கள் என்று அறிந்தபோது 'எப்படி இதையெல்லாம்...' என்று யோசித்திருக்கிறேன்!

   நீக்கு
  2. வேர்க்கடலை, காளான், கத்தரிக்காய்... (எனக்கு மசாலாப் பொடி) அலர்ஜியைத் தூண்டக் கூடியவை.

   நீக்கு
  3. வேர்க்கடலை எனக்கு ஆகாது.  கத்தரிக்காய் ரொம்பப் பிடிக்கும்!

   நீக்கு
 3. காமராஜரின் அரசு பள்ளித் திட்டமும், எம்ஜிஆரின் தனியார் கல்லூரிகள் திட்டமும் தமிழகத்தில் அறிவுப் புரட்சியை ஏற்படுத்தின. படிப்பு பலரை அவர்கள் சமூகத்திலிருந்து உயர்த்தியிருப்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.

  நான் வேலை பார்த்த கம்பெனி ஹெச் ஆர் ஹெட், என்னிடம், உங்க ஊரில் தெருவுக்கு ஐந்து இஞ்சினீயர், நாலு டாக்டர் எல்லோரும் போஸ்ட் க்ராஜுவேட் என்பது போல எங்கள் ஊரான இங்கிலாந்தில் கிடையாது என்றார் (ஆனால் அவர் சீப் வெள்ளையர்கள் என்று நாங்கள் சொல்லும் தென் ஆப்பிரிக்கர்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எம் ஜி ஆர் திட்டத்துக்கு காமராஜ் திட்டம் ஒரு முன்னோடி.  

   நீக்கு
 4. அடை படத்தைச் செய்முறையோடு முன்பு நீங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.

  பதிலளிநீக்கு
 5. முதல் கவிதை, முடிவு செய்யும் முன்னரே... ரசித்தேன். நிறைய தடவை நிகழ்ந்திருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா...  ஹா...   அதற்குதான் சொல்வார்கள், தர்மம் செய்ய வேண்டும் என்று தோன்றினால் யோசிக்காமல் தர்மம் செய்துவிட வேண்டும் என்று!

   நீக்கு
 6. அனைவருக்கும் நீண்ட நாட்கள் கழித்துக் காலை/மாலை/மதிய வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கி மகிழ்ச்சி பெருகவும் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதா அக்கா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 7. எங்களுக்கும் பூத் ஸ்லிப் கொடுக்கவில்லை என்பதோடு எந்தக் கட்சியும் ஓட்டுக் கேட்டுக்கொண்டு பிரசாரத்துக்கும் வரவில்லை. ஆளும் கட்சியின் சில பெண் ஊழியர்கள் ஓட்டளிப்பவர்கள் பட்டியலை மட்டும் சரி பார்த்துவிட்டுச் சென்றார்கள். நாங்களே பூத்தில் போய் வாக்காளர் அடையாள அட்டை மூலம் எங்கள் வரிசை எண்ணைத் தெரிந்து கொண்டு போய் வாக்களித்துவிட்டு வந்தோம். ஒண்ணும் பிரச்னை இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒருவேளை பாஜக ஆதரவாளர்கள் என்று சந்தேகிக்கப்படுபவர்களுக்கு பூத் ஸ்லிப் கொடுப்பதில்லையோ?

   நீக்கு
  2. ஜெயக்குமார் ஸார் சொல்லி இருப்பதுபோல ஆன்லைனில் வரிசை எண் தெரிந்துகொண்டு சென்றிருக்கலாம் நாங்களும்!   எங்கள் வீட்டுக்கருகில் பிரச்சாரம் எதுவும் நாணல் பார்க்கவில்லை.  ஆனால் அலுவலகம் சென்று திரும்பும் வழியில் எடப்பாடி, சீமான் உட்பட நிறைய பிரபலங்களை பார்த்தோம்.

   நீக்கு
 8. ராஜாஜி காலத்தில் தமிழகத்தில் எத்தனை மாவட்டங்கள் இருந்தன? காமராஜர் காலத்திலும் அதே தான் இருந்திருக்கும். ஏனெனில் அப்போதெல்லாம் மாவட்டங்களை அவ்வளவாய்ப் பிரிக்கவில்லை. 16,000 பள்ளிகள் திறந்தார்கள் எனில் ஒரு மாவட்டத்துக்கு எத்தனை பள்ளிகள்? அதற்கான நிர்வாகம்/செயல்பாடுகள்/கட்டுமானங்கள் எல்லாம் அப்போ இருந்தனவா? அல்லது மரத்தடிப் பள்ளிகளா? அந்த அரசுப் பள்ளிகள் எல்லாம் செயல்படத் தேவையான இடங்கள்/பராமரிப்புகள்/அத்தனை ஆசிரியர்கள் அப்போது இருந்தனரா? எனில் ஏன் அப்போது படிக்கும் விகிதம் குறைவாக இருந்தது? இந்தப் புள்ளி விபரக் கணக்கே தப்புனு யாருக்கும் தெரியலையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கணக்கீட்டை எல்லாம் நான் யோசிக்கவில்லை!  ஜஸ்ட் பார்த்ததை பகிர்ந்தேன்.

   நீக்கு
  2. ஹிஹிஹி, உங்களைப் போலத்தான் இன்னொருத்தரும் குழுமத்தில் சில ஆண்டுகள் முன்னர் இதைச் சொல்லிட்டு என் கிட்டே மாட்டிக்கொண்டார். :))))))

   நீக்கு
 9. ராஜாஜி ஆரம்பிக்க இருந்த மதிய உணவுத் திட்டத்தைக் கைவிடாமல் (அதே சமயம் ராஜாஜி கொண்டு வந்த தொழிற்கல்வித்திட்டம்/குலக்கல்வி என்னும் பெயரில் அடியோடு ஒழிக்கப்பட்டது.) காமராஜர் ஆட்சிக் காலத்தில் தொடர்ந்தார். கிராமப்புற மாணவர்கள் மதிய உணவு வரைக்குமாவது பள்ளிக்கு வந்து பின்னர் அவங்க சொந்தத் தொழிலைக் கவனிக்கச் செல்லட்டும் என்றெல்லாம் திட்டங்கள் கொண்டு வந்தார். 18,000 பள்ளிகளைத்திறந்தார் எனச் சொல்லுவது எளிது. நடைமுறையில் அது சாத்தியம் இல்லாத ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மக்களின் விமர்சனத்துக்குள்ளான திட்டம்.

   நீக்கு
  2. சமீபத்தில் ஒருவர் தமிழ் நாட்டில் 18 விமான நிலையங்கள் இருப்பதாக பேசினார். எனக்குத் தெரிந்து ஏழு விமான நிலையங்கள்தான் உள்ளன. ஏர்ஃபோர்ஸின் விமான தலங்களையும் சேர்த்து சொல்லியிருப்பாரோ? என்று தோன்றியது. அப்போது கூட 18 வருகிய வாய்ப்பில்லை. புள்ளி விவரங்களை யாரும் சரி பார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கை போலும். 

   நீக்கு
  3. சரிபார்க்க யாரும் முனைவதில்லை.  அவர்களை பாதிக்காத வரையில் 'அப்படியா சரி' என்று சென்று விடுவார்கள்!

   நீக்கு
  4. தாம்பரம், ஆவடி, தஞ்சை, அரக்கோணம் போன்ற சில குறிப்பிட்ட ஊர்களில் ராணுவ விமான நிலையங்கள் உள்ளன. அவற்றையும் சேர்த்துக் கொண்டிருப்பாங்களோ என்னமோ!

   நீக்கு
 10. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 11. பொய் எதுக்குச் சொல்லணும்? தெருவில் செல்லும்போதோ/கோயில் வாசல்களிலோ பிச்சை/யாசகம் எடுப்பவர்களை ஆதரிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. நம்மவர் சில்லறைகளை மாற்றி வைத்துக் கொண்டு பொதுவில் ஓரிருவருக்குக் கொடுத்துவிட்டுப் பிரித்து எடுத்துக் கொள்ளச் சொல்லுவார். ஒரே அடிதடியாகிவிடும். :( சிலர் அவங்க இஷ்டத்துக்கும் கேட்பாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துவாரகை யாத்திரையில், ருக்மணி கோவிலில் பிச்சையெடுப்பவர்களில் ஒருவர் வந்து, யாராவது ஒருவரிடம் தானம் செய்தால் போதும், நாங்களே பங்குபிரித்துக்கொள்வோம் என்றார்.

   நீக்கு
  2. மிகச்சில சமயங்களில் சிக்னலில் பார்க்கும் வயதானவர்களோ, குழந்தையுடன் காணப்படும் பெண்ணோ மனதில் ஈரத்தை உண்டாக்குவார்கள். கோவில் வாசலில் எல்லாம் நான் போடுவதே இல்லை.  ஆனால் நெல்லை சொல்லியிருப்பது போல காசி கயா சென்றபோது சுகுமார் சொல்லியிருந்தபடி கோவில் வாசலில் காத்திருந்த நிறைய பேருக்கு தர்மம் செய்தேன்.

   நீக்கு
 12. அடையை ஏற்கெனவே முன்னரே பார்த்துச் சாப்பிட்டாயிற்று.
  இனிமையான வார்த்தைகளைப் பேசணும்னு சொல்ற அதே வாய் தான், யாரேனும் குழைவாகப் பேசினால் நம்பிடாதே! அவங்க உள்ளுக்குள்ளே பொல்லாதவங்களா இருப்பாங்கனும் சொல்லுது! எதை நம்பறது? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத்தானே ஶ்ரீராம் எழுதியிருக்கார். மோசமான எண்ணங்களை வெளிய விடாதே என்று. அதனாலத்தான் பொல்லாதவங்க குறைவா பேசறாங்களோ என்னவோ

   நீக்கு
  2. நான் முன்னர் பகிர்ந்து சென்னை அடை.  இது மதுரை அடை!

   இந்த மாதிரி முரணான பழமொழிகள் பற்றி நானே முன்பு பதிவொன்று இட்ட நினைவு!

   நீக்கு
 13. கதம்பம் மிக நன்றாக இருக்கிறது.
  ஜனநாயக கடமை ஆற்றிய விவரம் அருமை.
  நேரம் மாறிவிட்டது கவலை அளிக்கும் தான்.

  'தர்ம'சங்கடம்! கவிதை நன்றாக இருக்கிறது.
  சில நேரம் சிக்னலில் வந்து கேட்பவருக்கு பர்ஸை திறந்து எடுப்பதற்குள் பச்சை விளக்கு வந்து விடும் போட முடியாமல் போய்விடும்.

  சமையலறையில் என் கைவண்ணம்!//
  அடை நன்றாக இருக்கிறது.
  பொக்கிஷபகிர்வும் அருமை.


  பதிலளிநீக்கு
  பதில்கள்

  1. நன்றி கோமதி அக்கா.

   //நேரம் மாறிவிட்டது கவலை அளிக்கும் தான்.//

   :-))   பாராட்டுகளுக்கு நன்றி.

   நீக்கு
 14. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
  எல்லோரும் தொற்று நோய் அணுகாமல்
  ஆரோக்கியமாக இருக்க இறைவன் அருள் செய்யட்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 15. ஸ்ரீராமின் அடை ,தோசையை மீண்டும் பார்த்து சாப்பிட்டேன்:)

  திடீரென்று கை நீட்டுபவர்களைக் கண்டால்
  பயம் தான் வரும். யாசகம் என்ற பெயரில்
  குழந்தைகளை Abuse செய்பவர்களைக்
  கண்டால் அத்தனை கோபம் வருகிறது.
  உங்கள் கவிதை இனிமை ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி அம்மா.  திடீரென்று நீளும் ன்பதை விட, அவர்கள் பக்கத்து வாகனங்களில் கையேந்தும்போதே ஜாக்கிரதை அடைந்துவிடுவேன்.  ஆனால் இன்னொன்று சொல்லவேண்டும்.  மின்சார ரயிலில் நான் மாற்றுப்பாலினத்தவர் கைநீட்டி வரும்போது பயப்படுவேன்.

   நீக்கு
 16. தமிழ்வாணன் சொல்லியிருக்கும் கீலர் பற்றி இப்போதுதான்
  க்ரௌன் சீரியலில் பார்த்து முடித்தோம்.
  எந்தப் புத்தகமும் ,சென்சேஷனல் டாபிக் என்று எடுத்துக் கொண்டால்
  விற்றே தீரும்.

  பதிலளிநீக்கு
 17. காளான்கள்' இந்த வார்த்தையே எனக்கு
  ஒத்துக் கொள்ளாது. சிங்கம் விரும்பி சாப்பிடுவார்.
  ஏதோ அருவருப்பு அதன் பேரில்!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் அப்படியேதான் ! கிராம வாழ்க்கையின் மழைக்காலங்களில், பெருமரங்களுக்குக் கீழே திடீரென முளைத்திருக்கும். அதுகளைப் பூச்சியைப் பார்ப்பதுபோல் பார்த்துத்தான் வழக்கம்! அப்புறம் எப்படித் தின்பது..

   நீக்கு
  2. ஆனால் வல்லிம்மா, ஏகாந்தன் ஸார்..  அந்தக் காளான் வேறு இந்தக் காளான் வேறு என்று நினைக்கிறேன்.  சமீப காலங்களில் நான் காளான் விரும்பிச் சாப்பிட ஆரம்பித்திருக்கிறேன்.

   நீக்கு
  3. அப்ப இதுகளுக்கு வேற பேர் வச்சிடவேண்டியதுதானே..! புதுசா நெனச்சு.. பாத்து, வாங்கக்கூடும்!

   ஆம். காளான்களில் வகைகள் பல.

   நீக்கு
  4. என் மகன் மஷ்ரூமுக்குள் மசாலா பொதிந்து  தருவான்.  நன்றாய் இருக்கும்.  காளான் என்று சொல்வதைவிட மஷ்ரூம் என்று சொல்வது பிரச்னை இல்லாமல் இருக்கிறது!!!!

   நீக்கு
  5. எங்க பையர் மஷ்ரூம் சப்ஜி செய்யப் போவது எனில் அன்னிக்கு நாங்க தால்/ரொட்டி வைத்துக் கொண்டு முன்னாடியே சாப்பிட்டுவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்துடுவோம். :))))

   நீக்கு
  6. நான் முதலில் மஷ்ரூம் சூப் சாப்பிட்டேன்.  பின்னர் இதெல்லாம் பழகி விட்டது!

   நீக்கு
  7. @ Geethama, @ Ekanthan ji. can understand.hahahha. Sriram enjoy mushroom in good health!!!!

   நீக்கு
 18. ஓட்டுப் போட்ட சரித்திரம் அருமை. என் தோழிகளில் அனேகமாக அனைவருமே
  சமூக இடைவெளியுடன் நின்று போட்டு வந்ததாகச் சொன்னார்கள்.

  உங்கள் தளரா நடவடிக்கைகளுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் கிளம்பும்போதே பெரியவன் வருகிறேன் என்று சொன்னான்.  அப்புறம் சின்னவனும் இணைந்தான்.  அதைப் பார்த்ததும் பாஸும் புறப்பட்டுவிட, ஊர்வலம் போல சென்று வாக்களித்து வந்தோம்.

   நீக்கு
 19. ரயிலில் தனிமையாகச் செல்ல வேண்டுமா:)
  ஆனால் ஒழுங்கு முறை இல்லாமல் கூட்டத்தில் நெரி
  படுவது மிகக் கஷ்டம்.

  நாங்கள் பயணம் செய்த காலங்களில்
  இவ்வளவு அவதிப் படவில்லை.
  2013 மார்ச்சில் சேலத்திலிருந்து வரும்போது
  வண்டியில் அதீதக் குளிர் இருந்ததால் சிங்கம் உறங்க முடியாமல் அவதிப் பட்டார்
  பாவம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

   நீக்கு
  2. கடைசிப் பகுதியில் வரவேண்டிய கருத்து இங்கு வந்து விழுந்தது. இடமாற்றினேன்!

   நீக்கு
  3. கொரோனா காலத்துக்கு முன் அனுபவம் அம்மா அது!  இப்போது இப்படி இருந்தால் சந்தோஷமே!  எல்லோரும் ரயில் பயணம்தான் சௌகர்யம் என்று விரும்புவார்கள்.  எனக்கு ஏனோ அது அலர்ஜி.

   நீக்கு
  4. //கடைசிப் பகுதியில் வரவேண்டிய கருத்து இங்கு வந்து விழுந்தது. இடமாற்றினேன்!//

   அவ்வப்போது நானும் செய்திருக்கிறேன்!

   நீக்கு
 20. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

   நீக்கு
 21. ..கையில் பன்னீர் தெளித்து தாம்பூலம் கொடுப்பது போல சானிடைசர் தெளித்து கையுறை கொடுத்தார் ஒரு பெண்மணி!//

  காலந்தான் எப்படி மாறிவிட்டது..

  நீங்கள் இனி எத்தனைத் தேர்தலிலும் ஓட்டுப்போடலாம். ஆனால் இந்தத் தேர்தலை நெஞ்சிலிருந்து நீக்கமுடியாது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...   அது என்னவோ உண்மைதான்.  சமயங்களில் வருங்காலம் இன்னும் வியப்புகளை வைத்திருக்கவும் கூடும்!

   நீக்கு
 22. வோட்டு போட்ட கதை சுவாரசியம். பூத் ஸ்லிப் கொடுக்க வேண்டியவர்கள் எப்போதும் இப்படித்தான். தேர்தல்  தினத்தில் வாக்கு சாவடியில் அருகே எங்காவது இருந்துகொண்டு கேட்பவர்களுக்கு தேடி எடுத்து கொடுப்பார்கள். நான் வாக்காளர் பட்டியலை ஆன்லைனில் பார்த்து சாவடி எண், இருக்குமிடம், கிரம எண் போன்றவற்றை குறித்துகொண்டேன். தேர்தல் தினத்திற்கு ஒரு நாள் முன்பு மூன்று கட்சியினரும் slip கொடுத்தார்கள். ஆகவே சிரமம் இல்லை. 

  நீங்கள் நிற்க கூட இடம் இல்லாமல் பயணம் செய்தது போன்று வைகையில் வழியில் கீழே அமர்ந்து பயணம் செய்த அனுபவம் எனக்கும் உண்டு. அதுவும் ஒரு மரணத்திற்கு தான

  அது ஏங்க அடைக்கு 4 ஓட்டை. 5 ஆக போட்டிருந்தால் 5 குழி மூணு வாசல் அடை எனக் கூறலாம். 
  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முதலில்  நான் மட்டுமே வாக்களிக்கச் செல்வேன் என்று நினைத்தேன்.  ரியா மாறி விட்டதால் இந்நிலை.  பின்னர் மற்ற மூவரும் இனைந்து விட, உடனே புறப்பட்டதால் தயாராய் செல்ல முடியாமல்  போனது.  வரிசை என் சொன்னால் போதும் என்றால் அதைத்தேடவே சிரமமாயிருந்தது.

   ஓ...   உங்களுக்கும் அந்த அனுபவம் உண்டா?   ரயிலில் அப்போது கூட்டத்துக்கு என்ன காரணம்?

   ஸ்மைலி போட நினைத்து செய்தது ஜெயக்குமார் சந்திரசேகர் ஸார் அது!

   நீக்கு
  2. // ரியா மாறி விட்டதால் இந்நிலை.//

   ஏரியா மாறி விட்டதால்...!!

   நீக்கு
  3. ஹூம்! ஶ்ரீராம், உங்களோட ரயில் பயணங்கள் எல்லாம் ஒண்ணுமே இல்லை என்னும் வண்ணம் நாங்க முன்பதிவு செய்துட்டு அந்த வண்டியைக் கோட்டை விட்டுவிட்டு வேறொரு வண்டியில் கழிவறைப் பக்கமெல்லாம் உட்கார்ந்து/நின்று கொண்டு போயிருக்கோம். என்னமோ சொல்றீங்க! இதெல்லாம் பதிவாக வந்திருக்காக்கும்!

   நீக்கு
  4. உண்மை.  ஆனால் நான்தான் எனக்கு ரயில் பயணம் பிடிப்பதில்லை என்று சொல்லி இருக்கிறேனே...   முடிந்தவரை அவாய்ட் செய்து விடுவேன்.

   நீக்கு
 23. அனைவருக்கும் காலை வணக்கம்.
  ஓட்டுப் போட்ட அனுபவத்தை சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறீர்கள். 
  உங்களுக்கு ஏற்பட்ட அத்தனை மோசமான அனுபவங்களும் சென்ற தேர்தலில் எங்களுக்கு ஏற்பட்டது. ஓட்டு போட வேண்டும் என்பதற்காக மெனெக்கெட்டு பெங்களூரிலிருந்து சென்னை வந்து  முதலில் வழக்கமான பூத்திற்கு சென்றோம். பூத் மாற்றப்பட்டிருப்பது தெரிந்தது. அங்கு போனால் எங்கள் பெயரே இல்லை. என் கணவருக்கு மிகவும் கோபம் வந்து விட்டது. 
  என் சகோதரிகளும் காலை ஏழு மணிக்கு ஓட்டுச்சாவடியில் நல்ல கும்பல் என்றார்கள். மதியம் மூணு மணிக்கு ஓட்டுப் போடச் சென்ற அக்கா பெண் கும்பலே இல்லை, வாக் இந்த வாக் அவுட் என்றாள். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்.  கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் இதுதான் நிலை.  மதியங்களில் காற்றாடியது - வழக்கம்போல.  நாமும் அந்த வெயிலில் செல்ல விரும்புவதில்லை!

   நீக்கு
 24. நாங்கள் ஒரு முறை கோகுலாஷ்டமி அன்று சென்னையிலிருந்து திருச்சிக்கு வைகையில் சென்ற பொழுது இப்படித்தான் காற்று வாங்கியது. 
  காளான் சாப்பிட்டிருக்கிறேன், சுவை மோசம் என்று சொல்ல முடியாது ஆனாலும் என்னால் சுவைக்க முடியவில்லை. மனத்தடைதான் காரணம். இப்போதெல்லாம் சாப்பிடுவதே இல்லை. 
  அப்பாவுக்கு வார்த்த அடையை நிறைய பேர்கள் நினைவு கூர்ந்து விட்டார்கள். மீ டூ.
  எட்டணாவா? ஐந்து ரூபாயா? நானும் குழம்பியிருக்கிறேன். 
  பொக்கிஷ தகவல்கள் சுவை. எல்லாப் புகழும் தமிழ்வாணனுக்கும், கொஞ்சம்  ஸ்ரீராமுக்கும். 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுக்கு பதில் எழுதினா திரும்பவும் பா.வெ. மேடத்துக்கு நெற்றிக்கண் திறந்திடுமோ என்று சந்தேகமா இருக்கு. ஆனால் அவங்க, ஆர்.எம்.கே.வி, சென்னை சில்க்ஸ், நல்லி இங்கல்லாம் பட்டுப் புடவையைப் பார்த்தாங்கன்னா, உங்க நெசவாளர்களுக்கு கொஞ்சமே கொஞ்சம் பாராட்டும், மீதி பாராட்டு எல்லாம் பட்டுப் புழுவுக்குத்தான் என்றும் சொல்லிடுவாங்களோ?

   நீக்கு
  2. ஹா..   ஹா...  ஹா...   ஏதோ கொஞ்சம் க்ரெடிட்டாவது கிடைக்கிறதே...

   நீக்கு
 25. வணக்கம் சகோதரரே

  தாங்கள் ஓட்டுப் போட்ட விபரங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்தது அருமை. அங்கு சென்றும் மக்கள் எப்போதும் போல் செல்ஃபிதானா? பணம் தரவில்லையே என புலம்பல் வேறு.. இப்படியிருந்தால் நாடு எப்படி முன்னேறும்? எனக்கே அரசியல் புரியாது.. இதில் என்னவெல்லாம் இயல்பாக நடக்கிறது... இதில் நீங்கள் ஒவ்வொரு தடவையும் ஜனநாயக கடமையை சிறப்பாக செய்து வருவதற்கு பாராட்டுக்கள். இந்த தடவையும் ஒரு மணி நேர வித்தியாசத்தில் சிறப்பாக கடமையாற்றி வந்துள்ளீர்கள். உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் வாழ்த்துகள்

  நாங்கள் அங்கிருக்கும் போது "பூத் சிலிப் இன்னமும் வரவில்லையா" என என் கணவர் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் கேட்கும் முதல் கேள்வி. சில சமயம் தீடிரென ஒரே நாளிலேயே நிறைய வேறு வந்து விடும். இங்கு வந்தும் சில தேர்தல்களை சந்தித்தாகி விட்டது. அடுக்கு மாடி குடியிருப்புகளில் வந்து பூத் சிலிப் தருவது கொஞ்சம் சிரமந்தான். ஆதார், மற்றும் வோட்டர்ஐடி கார்டு இருந்தால் போதுமென எங்கள் வீட்டில் அனைவரும் செல்வார்கள்.

  கவிதை அருமை. இரு கவிதைகளும் நன்றாக உள்ளன. ரசித்தேன். தர்மம் செய்யவும் நேரமென்ற ஒன்று வர வேண்டும்.. மனம் என்ற ஒன்று இருக்க வேண்டுமென இரு கவிதைகளும் சிறப்பாக உணர்த்துகின்றன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி கமலா அக்கா..   சென்ற தேர்தல்வரை மாமியாரும் வாக்களித்தார்.  இந்தமுறை ஏரியா மாறிவிட்டதால், அவரின் வயது, தள்ளாமை காரணமாகவும் அவர் வாக்களிக்கவில்லை.  தபால் வாக்குக்கு ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்ன பெண்மணி செய்யவில்லை!

   பூத்ஸ்லிப் ஏதாவது ஒரு கட்சிக்காரர் தருவார்.  நான் யாருக்கு வாக்களிப்பேன் என்பதைவிட யாருக்கு அளிக்கமாட்டேன் என்று அங்கிருப்பவர்களுக்குத் தெரியும்.  ஆனாலும் அங்கு நண்பர்கள் அதிகம்.  அவர்கள் உதவ தயங்க மாட்டார்கள்!

   கவிதையை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
  2. இங்கே திருச்சி மாநகராட்சி மூலம் நகராட்சி ஊழியர்கள் எண்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீட்டில் வந்து ஓட்டுப்பதிவை நடத்தி வாக்குகளை வாங்கிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். திருவானைக்காவில் எங்கள் உறவினர்கள் இருவர் கணவன்/மனைவி அவ்விதம் வாக்களித்துள்ளனர்.

   நீக்கு
  3. ஆம், இங்கேயும் கேட்டார்கள்தான்.  ஆனால் வவில்லை.

   நீக்கு
 26. எனக்கென்னவோ... மாற்றுக் கட்சிக் காரங்க என்று நினைத்துக்கொண்டு பூத் ஸ்லிப் அரசியல் கட்சிகள் தருவதில்லையோ? முன்னெல்லாம் ரொம்பவே ஆர்வத்துடன் திமுக அதிமுக செய்துகொண்டிருந்தது. யோசிக்கவேண்டிய விஷயம்தான்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதற்கு மேலே கமலா அக்காவுக்கு பதில் சொல்லி இருக்கேன்!  இந்தமுறை எந்த கட்சிக்காரருமே பூத்ஸ்லிப் கொடுப்பதில் முனைப்பு காட்டவில்லை.

   நீக்கு
 27. பூத் ஸ்லிப் இணையம் மூலம் பிரிண்ட் செய்து எடுத்துப் போயிருக்கலாம்...

  கவிதைக் கணக்காகத் தான் ஆகி விட்டது...!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுவரை செய்ததில்லை.  தேவை இருக்காது என்று நினைத்தேன்.  எப்படியோ நல்லபடி முடிந்தது!

   நன்றி DD.

   நீக்கு
 28. பூத் ஸ்லிப் - அவசியமில்லை. வாக்காளர் பட்டியல் இணையத்தில் இருக்கிறது. வரிசை எண், பூத் எண் தெரிந்து கொண்டு, அதைச் சொன்னால் போதுமானது.

  தில்லி கணேஷ் - ஏற்கனவே படித்திருக்கிறேன்.

  மற்றவையும் நன்று.

  தொடரட்டும் பதிவுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அலைபேசி கொண்டுசெல்லவில்லை.  முதலிலேயே வரிசை எண் இணையம் மூலம் அறியவில்லை.  அவர்களும் முதலில் பூத்ஸ்லிப் வலியுறுத்தினார்கள்.  தேட அலுப்பு!

   நன்றி வெங்கட்.

   நீக்கு
 29. அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
  எங்கெங்கும் நலம் வாழ்க..

  பதிலளிநீக்கு
 30. கல்கண்டு காலத்தில் எல்லாம் காளான் தின்பது அவ்வளவு ,.......

  அப்போதெல்லாம் காளான் தின்பது வசவுச் சொல்...

  பதிலளிநீக்கு
 31. இன்று வரை காளான் தின்றதில்லை.. அது நல்லதோ கெட்டதோ அந்தப் பக்கம் திரும்பியதில்லை..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சமீபத்தில்தான் சாப்பிட்டுப் பார்த்தேன்.  கொரோன காலத்தில்!  நல்ல புரதம் என்றார்கள்.  பிடித்திருந்தது.

   நீக்கு
 32. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! எல்லோரும் எல்லா நலமும் பெற்றிட இறைவனை பிரார்த்திக்கிறேன். சிரமப்பட்டாவது நம் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டதில் ஒரு திருப்தி. எங்கள் பூத்தில் மிகுந்த கூட்டம். வேலையெல்லாம் முடித்துவிட்டு, 12:30 மணிக்கு சென்று, 1:45 மணிக்கு வீடு திரும்பினோம்.

  சிலசமயம், தர்மம் கேட்பவருக்கு, மனம் நெகிழ்ந்து, கொடுக்கிரோம். சில சமயம், மனம் வருவதில்லை. நம் சூழ்நிலையைப் பொறுத்து. எனக்கு தெரிந்து, எங்கள் வீட்டருகே ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் ஒரு வயதான பிச்சைக்காரர் வருவார். அவருடைய நெற்றியில், சந்தனமும் குங்குமமுமாய் பக்திமான் போல காட்சியளிப்பார். நாங்களும் , எங்கள் தெருவாசிகளும் அவருக்கு எங்களால் இயன்றதைக் கொடுத்து வந்தோம். பணமாக அல்லாமல், சாப்பாடு கொடுத்தாலும் வாங்கி கொள்வார். சனிக் கிழமையன்று பொங்கல் செய்வோம். மீதமிருந்தால் அவருக்கு கொடுப்போம். வெகு நாட்களுக்குப் பிறகு தான் தெரிய வந்தது, அவர் பிச்சை எடுக்கும் அளவுக்கு ஏழையல்ல என்று. இதை ஒரு தொழிலாக செய்து வந்தார் போலும். அவருக்கு 5 வீடுகள் இருக்கிறதாம். வருகிற வாடகையே போதுமாம். இப்படியும் சில மனிதர்கள். நாம் தான் ஏமாளிகள் ஒரு படத்தில் வருவது போல.

  ரயில் பயணம் பிடிக்கும். மஷ்ரூமும் பிடிக்கும்.
  அருமையான கதம்பம் பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி வானம்பாடி.

   பிச்சைக்காரர்கள் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன்.    ஆனால் அப்படியான ஆட்களை சந்தித்ததில்லை!

   நீக்கு
 33. இன்றைய தொகுப்பில் அனைத்துமே அருமை!

  பதிலளிநீக்கு
 34. நாலு பேரின் விரல் புரட்சி :) ஓட்டளித்த அனுபவம் என்னுடைய 24 வைத்து வயதில் ஏற்பட்டது அப்புறம் ஒட்டு போட அங்கே நான். இல்லை .எங்களுக்கு பூத் அட்டை வீட்டுக்கு போஸ்டில் வரும் .எலெக்சனுக்கு முன்னாடி சுமார் ஒன் மந்த் முன்னாலே வந்துடும் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏதாச்சும் இருந்தாலும் ஆன்லைனில் சரி பண்ணலாம் .

  பதிலளிநீக்கு
 35. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் தான் டிலீட்டினேன் :) ஆசிரியர்னு சொல்லுது இங்கே :)

   நீக்கு
  2. இங்கு ஒவ்வொன்றும் சிரமம்தான்!

   நீக்கு
 36. யாசக கவிதை ..என்னமோ செய்கிறது மனசை அப்படி நீளும் கைகளை பார்த்து பல வருஷமாகுது .சிக்கனலில்தான் கைகள் நீளுமில்லையா .இங்கே யாசகம் கேட்போர் இருக்காங்க ஆனா ஒரு ஸ்டார்பக்ஸ் மக் வைத்து அமைதியா அமர்ந்திருப்பாங்க கை  நீளாது நம்ம கைதான் நீட்டி கொடுக்கணும் .இப்போல்லாம் கையில் சில்லறை பணமேயில்லை எல்லாம் கார்ட் டிரான்சாக்ஸனில் வாழ்க்கை ஓடுது   

  பதிலளிநீக்கு
 37. டெல்லி கணேஷ் கொஞ்சம் முரட்டு சுபாவாம்ன்னு நினைப்பேன் .ஒரு படம் ஸ்ரீகாந்த் மீரா ஜாஸ்மின் நடிச்சது பார்த்து ரொம்ப வெறுப்பா வந்தது .சிவக்குமார் நிறையபேரை மிரட்டித்தான் வச்சிருக்கார் :))) ஆனால அந்த சிகரெட்டில் அப்படி என்னதான் இருக்கோ . அந்த வாசனை எனக்கு மூச்சடைக்க வைக்கும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டெல்லி கணேஷ் முரட்டு சுபாவமா?  அப்படியா நினைத்தீர்கள்!  எனக்கு அப்படித் தோன்றியதில்லை.

   நீக்கு
 38. அப்பா வீட்டில் நாலுபுள்ளி அடை அருமை :)ட்ரெயினில் காற்று வாங்க பயணிப்பதும் சுகம் 

  பதிலளிநீக்கு
 39. ஹோட்டல் விஷயம் உண்மைதான் ..அனால் நமூரில் நிறைய ஓட்டல்கள் வந்திருச்சில்ல .யூ டியூபில் பார்த்து வெப்ப இருக்கு பக்கட் மென்யூ என்றெல்லாம் காட்டறாங்க .ஆராய்ந்து சாப்பிடற பழக்கம் சின்ன வயதில் இருந்து இருக்கு எனக்கு :) அதே வழக்கம் என் மகளுக்கும் இருக்கே :) மஷ்ரூம்ஸில் edible வகைகளை ஐடென்டிபை செய்ய தனி வழிமுறைகள் கொடுத்திருக்காங்க .இங்கேயும் காட்டு வனப்பகுதியில் நிறைய உண்டு எல்லாவற்றையும் சாப்பிட கூடாதது .எனக்கு மஷ்ரூம் பிடிக்காது . வாய்வு இருக்கிற எதையும் தவிர்ப்பேன் .சிலருக்கு மஷ்ரூம் அலர்ஜியும் இருக்கு . நம் நாட்டில் எல்லாரும்  கிடைச்சதை சாப்பிடறாங்க அது நமக்குகந்ததா இல்லையானு முதலில் தெரிஞ்சிட்டு சாப்பிடணும் 

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இப்போ ஆளாளுக்கு ஹோட்டல் ஆரம்பிச்சுடறாங்க...   சிறிய, பெரிய, நடுத்தர ஹோட்டல்கள்.  சென்னையில் தள்ளுவண்டிகள் பிரபலம். மதுரையிலும்தான்.  இப்போது சென்னையில் ஒரு பெரிய ட்ரக் போல வந்து நிற்கும்.  அதன் பக்கவாட்டு போர்ஷன்கள் திறக்கபப்டும்.  இப்போது அது ஒரு உனவு விடுதி.  நடுவில் அடுப்பு இருக்கும்.  மற்ற பொருட்கள் இருக்கும்!

   நீக்கு
 40. கடைசியா சொன்ன இனிய வார்த்தைகள் மட்டும் வெளிப்படுத்துதல் சூப்பர்ப் .கெட்டதை  அப்படியே விழுங்கிடணும் 

  பதிலளிநீக்கு
 41. //வழக்கத்தை மாற்றுவது என் வழக்கமல்ல...// ஹா ஹா ஹா கிட்டத்தட்ட என் கட்சிதான் நீங்களும்:))..

  அதுசரி இடது கைச் சுட்டுவிரலிலோ மை வைப்பினம்.. நான் இலங்கையில் ஒரு தடவைதான் வோட் போட்டேன் மை வைத்து.

  இங்கு மை எல்லாம் இல்லை, பெயர் லிஸ்ட் வைத்திருப்பார்கள்.. எங்கே வோட்டிங் ஸ்டேசன் என்பதுகூடத் தெரியாமல், குட்டியா ஒரு போர்ட் இருக்கும், யாரும் வெளியே இருக்க மாட்டினம், உள்ளே இருவர் இருப்பினம், பெயர் லிஸ்ட்டுடன்... நாம் எமது வோர்ட் பண்ணும் கார்ட்டைக் காட்டியதும், பென்னால அந்த லிஸ்ட்டில் இருக்கும் நம் பெயரை வெட்டி விடுவார்கள்.. அவ்வளவே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இங்கு அப்படிச் செய்தால் அதே நபர் மறுபடி வேறொரு பெயரில் வருவாரே...!  கையில் மை வைத்தாலே அழித்துவிட்டு மறுபடி வருவார்கள்!

   நீக்கு
 42. தர்ம சங்கடம்... உண்மைதான் நானும் இப்படி சிக்னல் லைட்டில் பிச்சை எடுப்போர், மற்றும் ஸ்டேசனில்.. பயப்பிடாமல் பொருட்கள் விற்கிறார்கள், இளநி வாங்கிக் குடிச்ச பின்பே காசைக் கொடுக்கினம், அப்போ அதற்குள் ரெயின் புறப்பட்டு விட்டால்ல்? இப்படி எல்லாம் பயம் வரும்...

  சில நேரங்களில் யோசிக்காமல் கொடுப்பதும் நல்லது:))..

  நல்ல கவிதை .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதையே பயன்படுத்திக்கொண்டு சிலர் மட்டமான சரக்கை விற்று விடுவார்கள்.  இரண்டுபக்கமும் தவறு நடக்கும்!

   //நல்ல கவிதை //

   நன்றி.

   நீக்கு
 43. டெல்லி கணேஸ், சிவகுமார் இருவரையும் எனக்குப் பிடிக்கும்.. ஆனா சிவகுமார் அங்கிள், கொஞ்சம் சுய தம்பட்டம் அடிப்பது கூடுதல் எனப் ஃபீல் ஆகும் அவர் பேசும்போது.

  இந்தியாவில் ரெயின் வெறுமையாக இருப்பது, நம்ப முடியவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும்!  ஆனால் அன்று என் அதிருஷ்ட தினமாய் இருந்திருக்க வேண்டும்!  அன்று இந்நடுங் என் மாமாவும் (கடந்த நவம்பரில் கொரோனாவுக்கு பலியானவர்) மதுரைக்கு பயணித்தார்.

   நீக்கு
 44. அது தோசையா அடையோ? ஏன் பெரும்பாலானோருக்கு தோசை வட்டமாக வருவதில்லை:)))..

  உணவு மட்டர் உண்மைதான்.. எங்கட டெய்சிக்கூட தெரியும்... கொஞ்சம் , காலை போட்டதை உடனே சாப்பிடுவா, கொஞ்சம் ரைம் ஆனால் சாப்பிட மாட்டா, அதை மீறிச் சாப்பிட்டால் சத்தி எடுப்பா.

  காளான் நன்கு பழகியோருக்கே தெரியும் விசம் இல்லாதது எது என.. மற்றும்படி கடையில வாங்குவதே நல்லது. இன்று நிறைய விசயங்கள் சொல்லியிருக்கிறீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வட்டமா செய்தால், அதில் என்ன கிரிக்கெட் விளையாடப் போறோமா? சில சமயங்களில் பிய்ந்து வந்தாலும் நான் கவலைப்படமாட்டேன். கையால விள்ளும் வேலை மிச்சம் என்று.

   அடையை வட்டமா பண்ணுவது சுலபம் அல்ல. கொஞ்சம் தண்ணி ஜாஸ்தி விட்டு மாவைக் கலக்கினால், தோசையின் டேஸ்ட் வந்துடும். (இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு நினைக்கிறேன். இல்லைனா உங்க யூடியூப் சேனல்ல போடுங்க)

   நீக்கு
  2. வட்டமாக வரும்.  அதில் சங்கடமில்லை.  இது சும்மா டிஸைன் போடநினைத்து இப்படி ஆனது!

   நீக்கு
  3. நெல்லை..   அடையை வட்டமாக பண்ணுவது சுலபம் என்றுதான் நினைக்கிறேன்.  ரவா தோசைதான் வட்டமாக வருவது கடினம்!

   நீக்கு
  4. வட்டமாகவும் வரும்
   வட்டத்துக்குள்ளும் வரும் !

   நீக்கு
  5. ஆஆஆஆ இவ்ளோ டங்கதி போயிருக்கே.. நான் இப்போதான் பார்க்கிறேன்:))..

   நெ தமிழன், கடையில ஒரு உணவு எனில் அழகைப்பார்த்துத்தானே முதலில் எடுக்கிறோம், வாங்கிய பின்புதான் சுவை தெரியும், ஒரு கடையில ரோல்ஸ் இருக்கெனில், மிக நேர்த்தியானதைத்தான் முதலில எடுப்போம், வளைஞ்சுபோய், பிஞ்சுபோய் இருந்தால் எடுப்போமா?:))..

   அதை விட்டுப்போட்டு எப்பூடி இருந்தாலும் நான் ஜாப்பிடுவேன் என ஞானிபோல பேசுறார் இருந்தாப்போல கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா..

   உண்மைதான் ஸ்ரீராம் சொல்வதைப்போல அடையை வட்டமாக எடுப்பது ஈசி, ஏனெனில் தண்ணிபோல இல்லாமல் இறுக்கமாக எல்லோ இருக்கும் அடை மா...

   என்ன ஸ்ரீராம்??? டிசைன் போட நினைச்சீங்களோ? அப்பாவுக்கோ? ஹா ஹா ஹா வரவர எல்லோரும் நல்லாவே பேசப் பழகிட்டீங்கள்:)).

   //(இதெல்லாம் உங்களுக்கு எங்க தெரியப்போகுதுன்னு நினைக்கிறேன். இல்லைனா உங்க யூடியூப் சேனல்ல போடுங்க)//

   ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் சனல் ச்ச்சும்மாவே தள்ளாடுது:)) இதில இழுத்து மூடச் சதி நடக்குதோ?:)))

   நீக்கு
  6. டிசைன் போட்டது எல்லாம் அப்பா சாப்பிட மாட்டார் அதிரா..  அது எனக்கும் அண்ணனுக்கும், மாமாவுக்கும்!

   நீக்கு
 45. வாக்களித்து வந்த அனுபவம் சுவாரஸ்யம். கடமையைச் சரிவர ஆற்றியாயிற்று!

  நல்ல தொகுப்பு.

  பதிலளிநீக்கு
 46. எபியில் வியாழன்கருத்துஇடுவது எப்படொயோ விட்டுப்போய் விட்டது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. Vote போடுமிடம் மட்டுமில்லை,பல இடங்களில் இந்த பன்னீர் தாம்பூலம் சம்பிரதாயத்தில் எனக்கு ஒரு சந்தேகம்...கேட்க துடித்து,நாகரிகம் கருதி நகர்ந்து விடுவேன்... டெம்பரேச்சர் பாத்ததும் சொல்லுங்க எவ்ளோ என கேக்கணும்,காமிக்க சொல்லணும்...பல இடங்களில் வேலை செய்வதே இல்லை.sanitizer கூட சிக்கனம்...அவர்கள் போடுவது இல்லை...நாமாக போட்டுக்கணும்.ஒரு பார்வை.. எவ்வளவோ என...shhhh அப்பா..எப்போ போகும் இந்த pandemic..

   நீக்கு
  2. ஆமாம் உஷா..  ஆனால் அரசாங்கம் சரியாக எதையும் கொடுக்கா விட்டால் அவர்கள்தான் என்ன செய்வார்கள்?  எங்களுக்கு அவர்களேதான் கையில் தெளித்தார்கள்.

   நீக்கு
 47. சனநாயகக் கடமையினை ஆற்றியமைக்கு வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!