வியாழன், 1 ஏப்ரல், 2021

முந்நூறு ரூபாய்க்கு முதல் பூ.. 

 பூச்செடிகள் விற்பவர் இப்படி இருக்கலாமோ!!!

அவர் பார்க்கவே அப்படி முரட்டுத்தனமாய் இருந்தார். 

"ஏம்ப்பா...   செம்பருத்திச் செடி இருக்கா?"

சில ஊர்களில் "என்னய்யா" "சொல்லய்யா" என்றால் மரியாதை.  சில ஊர்களில் 'என்னங்க' என்றால் மரியாதை.  சென்னை மாதிரி ஊர்களில் 'என்னப்பா' என்றால் சௌஜன்யம், மரியாதை.   ஆனால் எனக்கு 'என்னப்பா' என்றால், வயது குறைந்தவர்களை அழைப்பது போல இருக்கும்.  நான் இருந்த  ஊர் அப்படி.  ஆனால் இப்போது 'என்னப்பா'வுக்கும்  'ஏம்பா' வுக்கும் பழகி விட்டாலும் இது மாதிரி உருவங்களை பார்க்கும்போது நாக்கு தயங்கும்!!


அவர் இதையெல்லாம் மதித்ததாகத் தெரியவில்லை.  உட்கார்ந்திருந்த நாற்காலியிலிருந்து எழுந்து வந்து கேட்டார்.

"சாதாவா?  அடுக்கா?"   - இது வேறயா?

"அடுக்கு"

"180 ரூபாய்..  "

என்னது?  150 ஆ?  அம்மாடி..."

"180 ங்க..  150 இல்லை...  சாதா இருக்கு தரவா?  அது 60 ரூவாதான்...   இது ஹைப்ரிட்..."

"எனக்கு அடுக்குதான் வேணும்"

"இல்லீங்க..   அடுக்கு செம்பருத்தில சாதா...  இது அடுக்கு செம்பருத்தில ஹைப்ரிட் வெரைட்டி"   - தோசைல 'ஸ்பெஷல் சாதா'ம்பாங்களே ...   அதுபோல போலிருக்கு!

"ஹைப்ரிட் வாங்கறதுதான் நல்லது"   என்றார் பாஸ் ஃபோனில்!  என்றார் ஆ.  ஆட்டோக்காரர் நேரில்.

"மண்ணு ரொப்பி தொட்டியும் வாங்குங்க..." - பாஸ்.

"தொட்டி எவ்வளவுப்பா?"

"150"    - பார்வையை எங்கோ வைத்துக்கொண்டு அலட்சியமாக வந்தது பதில்.

அம்மாடி...    இது 150 ரூபாயா?

"போனவாட்டி 100க்குதானே வாங்கினேன்?   இங்கேதான் வெற்றிலைச்செடி வாங்கிப் போனேன்...  ஆனா அப்போ வேற ஒருத்தர் இருந்தார்.."  -  'அவர் உங்களை விட சாஃப்டானவரா இருந்தார்னு அர்த்தம்' - மைண்ட் வாய்ஸ்!

"கொரோனா வந்து எல்லாமே விலை ஏறிப்போச்சுங்க..."  - இதுக்கும் கொரோனா மேல பழியா?  

"மண்ணு ரொப்பி நீங்களே செடியை அதுல வச்சுக் கொடுங்க ?"

"மண்ணுக்கு 40 ரூபாய்"

மண்ணுக்கும் காசா?  அதுவும் இத்தனூண்டு மண்ணுக்கு என்ன இவ்வளவு காசு?  கொஞ்சம் போனா இவ்வளவு நேரம்பேசின பேச்சுக்கெல்லாம் வார்த்தைகளை அளந்து காசு கேட்டு விடுவாரோ!  

"ஸார்..  செடி வளர ரெண்டுவ் வகை மண் சரியாய் கலந்து பதப்படுத்தி வச்சிருப்பாய்ங்க ஸார்"  என்றார் ஆ. ஆட்டோக்காரர்.

"கொஞ்சம் குறைச்சுக்குங்க..."  என்றேன் கடைக்காரரிடம்.

அவர் நெருங்கி வந்து பையில் இருந்த செடியை  எடுத்து உள்ளே வைத்து, தொட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினார்.

'ஐயோ...   பாஸுக்கு என்ன பதில் சொல்வது?'   நீண்ட நாட்களாய்க் கேட்டுக் கேட்டு இன்றுதான் நர்சரி கடையில் இறங்கி இருந்தேன்.

உதவியற்றவனாய் என் ஆஸ்தான ஆட்டோக்காரரைப் பார்க்க, அவர் களத்தில் இறங்கி, அனைத்தும் சேர்த்து முந்நூறுக்கு 'முடித்து'க் கொடுக்க, கடைக்காரர் கூடவே உரமும் வைத்துத் தந்தார்.  


ஃபோன் ஒலித்தது.  எடுத்தேன்.  பாஸ்.

"வாங்கியாச்சா?"

"ம்ம்ம்.....  முன்னூறு ரூபாய்க்கு மேல  ஆச்சு!"

"இன்னும் இரண்டு செடி சொல்வேன்...   மல்லிகை, ரோஜா...   பார்க்கறீங்களா?"

"கையிருப்பு காலிம்மா...    அடுத்த வாட்டி பார்க்கலாம்!"  உண்மையில் அவரிடம் மறுபடி முதலிலிருந்து பேரம் ஆரம்பிக்கப் பொறுமை இல்லை!

அந்தச் செடியில்தான்....  முந்நூறுக்கும் மேல் செலவு செய்து இப்படிப் பேசி வாங்கிய அந்த அடுக்கு செம்பருத்திச் செடியில்தான் பத்து நாட்களுக்குப் பிறகு முதல் பூ பூத்திருக்கிறது!



 உடன் இரண்டு மொட்டுகளும் இருக்கின்றன...    அடுக்கடுக்காய் அடுக்கு செம்பருத்தி  நிறைய நிறைய பூக்கும் நாளுக்காய் காத்திருத்தலுடன்...  

=======================================================================================================


பல வருடங்களாக நீங்கள் சென்று வந்து கொண்டிருந்த சாலை திடீரென உருமாறுகிறது.  விரிவாக்கம் அடைகிறது அல்லது பாலம் உருவாகிறது.  எப்படி இருக்கும்?  சிலசமயம் முன்னர் எப்படி இருந்த இடம் என்பதே கூட மறந்து போகும்.    அப்படிதான் கத்திப்பாரா ஆரம்பிக்கும் முன் அங்கிருந்த நேரு சிலையுடன் ஒரு புகைப்படம் எடுத்திருந்தேன்.  அப்புறம் அங்கு பாலம் வந்த உடன் இரண்டையும் போட்டு ஒப்பீடு செய்து போடலாம் என்ற யோசனையுடன்!  அது போன இடம் தெரியவில்லை.  இப்போது எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த காலி இடம் படிப்பபடியாக கட்டிடமாக உருமாறுவதைப் படம் எடுத்தேன்.  வைத்திருக்கிறேன்.  அது  அப்புறம்...  இது வேறு இடம்.


இங்கு மேலே பகிர்ந்திருப்பது நான் எடுத்த புகைப்படம்.  அசோக் பில்லர் ஏரியா.  மெட்ரோ வேலைகள் ஆரம்பிப்பதற்கு முன் எடுத்த படம்.  எவ்வளவு காலியாய் இருக்கிறது பாருங்கள்.  இப்போது அங்கு மெட்ரோ ரயில் பாலத்துடன் இடமே மாறிப் போயிருக்கிறது!  அது ஆரம்பிக்கும் முன் இப்படி இருந்தது.  

இப்போது?  இணையத்தில் தேடி ஒன்றை எடுத்துக் கீழே தருகிறேன்.  


=================================================================================================

ஒரு புதுக்கவிதை.  புதுக்கவிதை என்றால் புதுசாக நேற்றிரவு சட்டெனத் தோன்றியதை எழுதியது.  

முந்தாநாள்  
எனக்கு யாருமே இல்லை 
என்று தோன்றியது 
நேற்று 
எல்லோருமே என் நட்புகள்தான், 
எவ்வளவு பேர் 
நம்முடன் இருக்கிறார்கள் 
என்று தோன்றியது 
இன்று 
எல்லோரும் அவரவருக்காகவே வாழ்கிறார்கள் 
நான் தனி 
என்று தோன்றுகிறது.
நாளை என்ன தோன்றுமோ..

எல்லாமே நிஜம்தானோ...

=======================================================================================================


பம்மல் சம்பந்த முதலியார் "நான் கண்ட நாடகக் கலைஞர்கள்" என்கிற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.




அதில் திரு எஸ் ஜி கிட்டப்பா பற்றியும், திருமதி கேபி சுந்தராம்பாள் பற்றியும் அவர் எழுதி இருப்பது :

திரு கிட்டப்பா அவர்கள் 




இவரது பெயர் கிருஷ்ணசாமி என்றிருந்தும் எல்லோரும் இவரை கிட்டப்பா என்றே அழைப்பார்கள்.  கன்னையா நாடக கம்பெனியில் இவர் சிறு வயதிலேயே சேர்ந்து நடித்து வந்தார்.  கன்னையா அவர்களால் இவர் நடிப்புக் கலையைக் கற்றார்.  பிறகு பெரியவனான பிறகு இவரே அக்கம்பெனியில் முக்கிய பாத்திரங்களை நடித்து வந்தார். 

இவரது சங்கீதம் மிகவும் சிலாகிக்கத் தக்கது.     கந்தர்வகானம் என்றே இதை சிலர் கூறக் கேட்டிருக்கிறேன்.  பாடுவதில் மூன்று ஸ்தாயிகள் வரை எட்டுவார்.   அப்படியிருந்தும் ஒரு அபஸ்வரமாவது கேட்கப்படாது.  இவரும் ஸ்ரீமதி சுந்தராம்பாளும் ஒரு நாடகத்தில் நடிக்கிறார்கள் என்று பிரசுரம் செய்யப்பட்டால் நாடக தினத்திற்கு மூன்று நான்கு நாட்களுக்கு முன்பாகவே டிக்கட்டுகள் ஆகிவிடும்.   

ஒருமுறை பீபிள்ஸ் பார்க் கொட்டகையில் சுகுணா விலாஸ சபையார் லீலாவதி சுலோச்சனா நாடகத்தை ஒரு தர்மம் பண்டுக்காக நடத்தியபோது நான் ஸ்ரீதத்தனாக வேஷம் தரித்துக் கொண்டிருக்கையில், தான் அதுவரையில் நாடகங்களில் தரித்துக் கொண்டிருந்த விலையுயர்ந்த ரத்னங்கள் இழைத்த நகைகளையும் பொன் நகைகளையும் எடுத்துக்கொண்டு வந்து "நீங்கள் இவைகளில் என்ன வேண்டுமென்றாலும் அணியுங்கள்" என்று அன்புடன் கேட்டார்.  

அதற்கு நான், "நீ கேட்டதே போதும் எனக்கு, மிகவும் சந்தோஷம்.  நான் இன்று நடிக்கும் நாடகத்தில் சன்யாசி வேடம் பூணவேண்டியவனாய் இருக்கிறேன்.  பிறகு வேண்டுமானால் கேட்டனுப்புகிறேன்" என்று நான் பதில் சொன்னது ஞாபகமிருக்கிறது.  

இப்படிப்பட்ட நற்குணவானாயிருந்தபோதிலும் தன் உடல்நலத்தைப் பாதுகாக்காதபடியால் இளவயதிலேயே இவர் பரலோகம் சென்றார்.  இதை நான் இங்கு எழுதுவது இவரது குற்றத்தைக் கூறும் பொருட்டன்று.  நடிகர்கள் முக்கியமாக தங்கள் உடல் நலத்தை ஜாக்கிரதையாய் பாதுகாக்கவேண்டுமென்றுதான்.


ஸ்ரீமதி கே பி சுந்தராம்பாள் :


இப்பெண்மணி சிறுவயதிலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார்கள்.  பெரியவர்களானவுடன் முக்கிய பாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார்கள்.  

பன்முறை கிட்டப்பா அவர்களுடன் கதா நாயகியாய் நடித்து பெரும்பெயர் பெற்றார்கள்..  நடிப்பதில் மிகவும் திறமை யுடையவர்கள்.   ஆயினும் இவருடைய பெயர் தமிழ் நாடெங்கும் பரவச் செய்தது இவர்களுடைய அபாரமான சங்கீதக் கலையே.  நல்ல ஏழு தாள ஞானமுடையவர்.  நான் கண்ட அளவில் இவருடைய சங்கீதத்தில் ஈடு ஜோடு இல்லாத பெருமை இவர்கள் பக்க வாத்தியங்கள் இல்லாமலே மிகவும் இனிமையாகப் பாடும் திறமேயாம்.  

அநேக சங்கீத வித்வான்கள் பக்க வாத்தியதோடு பாடுவது ஒரு மாதிரி இருக்கும்.  பக்க வாத்தியம் இல்லாமல் பாடுவது வேறு மாதிரியாய் இருக்கும்.  இவரது பாட்டில் அப்படியில்லை.  பக்க வாத்தியங்கள் இல்லாமல் பாடினாலும் மிகவும் காதுக்கு இனிமையாயிருக்கும்.  இது ஒரு அரிய குணம்.  

காலஞ் சென்ற கிட்டப்பா அவர்கள் ஆடவர்களுக்கு சங்கீதத்தில் எப்படி பெயர் பெற்றாரோ அப்படியே பெண்டிருக்குள் இவர்கள் பெயர் பெற்றனர்.  இவர்கள் எப்போதும் ஸ்திரீ வேடம் தான் தரிப்பது வழக்கம்.   ஒரு முறை வடக்கிலிருந்து வந்த பேசும் படம் பிடிக்கும் முதலாளியின் வேண்டுகோளுக்கிற்கிணங்கி நந்தனாராக -ஆண் வேடம் தரிக்க இசைந்தார்கள்.  அப்படம் சரியாக சோபிக்கவில்லை.  

இதற்கு ஒரு முக்கிய காரணம் ஒரு பெண்மணி ஆண்வேடம் தரித்து காலனிகளில் வேலை செய்யும் ஆதி திராவிடன் வேடம் தரிப்பது மிகவும் அசாத்தியமான காரியம்.  இதற்குமேல் நான் சொல்வதற்கில்லை.  இவர்களும் இனி ஆண்வேடம் தரிப்பதில்லை என்று தீர்மானித்தார்கள் என்று நினைக்கிறேன்.  

நந்தனாருக்குப் பின் மணிமேகலை என்னும் பேசும் படத்தில் கதா நாயகியாய் நடித்தார்கள்.  இது யாது காரணத்தாலோ முதலில் காட்டிய போது ஜனங்களுக்குத் திருப்தியாயில்லை.  அதன்பேரில் அந்தப் படம் எடுத்தவர் ஹிந்து பத்திரிகை ஆசிரியராக இருந்த காலஞ்சென்ற எனது நண்பர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசன் அவர்களிடம் போய்க் கேட்க, அவர் பிலிம் முதலாளியை என்னிடம் அனுப்பினார்.  அதன்பேரில் அம்முதலாளி அந்தப் படத்தை சீர்திருத்தி நன்றாகச் செய்து கொடுக்கவேண்டுமென்று என்னைக் கேட்க, நான் அதற்கிசைந்து கோயமுத்தூருக்குப்போய் பல விஷயங்களில் அதை மாற்றி என்னால் இயன்ற அளவு திருத்திக் கொடுத்தேன்.  அதன் பேரில் அப்படம் நன்றாக ஓடியது என்று அறிந்தேன்.  

அச்சமயம் ஏறக்குறைய மூன்று மாதம் இவர்களுடன் பழகாலானேன்.  அப்போது அவர்களுடைய ஒரு சிறந்த நற்குணத்தைக் கண்டு மகிழ்ந்தேன்.  அதாவது சுந்தராம்பாள் கிட்டப்பாவுடன் பன்முறை கதாநாயகியாய் நடித்ததைக் கருதி மேற்படி கிட்டப்பா அகால மரண மடைந்த உடனே இவர்கள் அதுமுதல் கைம்பெண் வேடத்தை எப்பொழுதும் தரித்ததாகும்.  பேசும் படங்களில் நடிக்கும் காலம் தவிர மற்ற காலங்களில் எல்லாம் வெள்ளை உடையே (வெண் பட்டாடையே) தரித்து ஆபரணங்கள் ஒன்றும் போடாமல் வாழ்ந்து வந்தனர்.  இப்போதும் அப்படியே இருக்கின்றனர்.  இது மிகவும் மெச்சத் தக்க குணமாம்.  

1957 வது ஆண்டில் சுதந்தர போராட்ட நூற்றாண்டு விழாவில் நாடகத் தமிழுக்காக எனக்கும் ஒரு சிறந்த பொற் பதக்கமும், வெள்ளி வேலைப்பாடமைந்த தட்டையும், சென்னை ராஜாஜி ஹாலில் கூட்டிய ஓர் பெரும் கூட்டத்தில் அளித்த போது இசைத்தமிழில் பெருமை பெற்றதற்காக ஸ்ரீமதி கே பி சுந்தராம்பாளுக்கும் அதே மாதிரி பொற் பதக்கமும், வெள்ளித் தட்டையும் அளித்தனர்.  

இவர்கள் இன்னும் ஜீவந்தராய் இருப்பது இசை அபிமானிகளுடைய பெரும் பாக்கியமாம்.  இவர்கள் இவ் வருடம் தேசீய பாதுகாப்பு நிதிக்காக ஒரு பெரும் தொகையை நன்கொடை கொடுத்ததை நான் சந்தோஷமாக   எழுத வேண்டியவனாயிருக்கிறேன்.  இவர்கள் தற்காலம் வசிக்கும் திருப்பப்பண்டிக் கொடுமுடி என்னும் ஊரிலிருக்கும் சிவபெருமானது அருளால் பல்லாண்டு வாழ்ந்து தமிழ் நாடகக் கலையை இன்னும் முன்னேறச் செய்வார்களாக!

===================================================================================================

சென்ற வாரம் அல்சைமர் பற்றி பார்த்தோமா...   இந்த வாரம் டெமென்ஷியா பற்றி..!  2015 இல் கல்கியிலிருந்து எடுத்து பேஸ்புக்கில் பகிர்ந்தது.  

டெமென்ஷியா
மனச்சிதைவு நோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவத்தில் முத்திரை பதித்து வரும் ஸ்கார்ஃப் (scarf), முதியவர்களுக்கு ஏற்படும் டெமென்ஷியாவை (ஞாபக மறதி நோய்) கையாள, இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் நிதியுதவியுடன் புதிய மையத்தைச் சென்னையில் தொடங்கி இருக்கிறது. மனநல மருத்துவர் ஸ்ரீதர் வைத்தீஸ்வரன் இது தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளார். அவரைச் சந்தித்தபோது,
அது என்ன டெமென்ஷியா?
எல்லோருக்கும் ஞாபக மறதி ஏற்படும். அது டெமென்ஷியா கிடையாது. ஆனால் வார்த்தைகளை மறந்து விடுவதும், பேச்சு சரியாக வராததும், மற்றவர்கள் பேசும்போது புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவதும், உறவினர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியாமல் போவதும், சமையலறைக்குள் நுழைவதாக நினைத்துக் கொண்டு பாத்ரூமுக்குள் நுழைவதும், பல வருடங்களாக ஒரே இடத்தில் வசித்தும் கூட வெளியில் சென்று வீடு திரும்பும்போது வழி தெரியாமல் தவிப்பதும், வயதானவர்களுக்கு ஏற்பட்டால் அது கவனிக்க வேண்டிய நிலையாகும்.
இது டெமென்ஷியவின் ஆரம்ப அறிகுறிகளாகக் கூட இருக்கலாம்.
டெமென்ஷியாவுக்கு முதுமைதான் காரணம். மறதிநோய் தொடர்பான ஒரு கணக்கெடுப்பின்படி 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 5 சதவிகித ரிஸ்க், 75 க்கு மேல் 10 சதவிகித ரிஸ்க், 85 வயதுக்கு மேல் 20% ரிஸ்க், 95 வயதுக்கு மேல் 40% ரிஸ்க் இருப்பதாகத் தெரிகிறது.
ஆனால் எல்லா முதியவர்களையும் டெமென்ஷியாதாக்கும் என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. இது வராமல் தடுப்பதற்கு நிறைய முறைகள் உள்ளன. இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும். எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.
டெமென்ஷியாவை எப்படி அடையாளம் காண்பது?
கேட்ட கேள்வியையே திருப்பித் திருப்பிக் கேட்பார்கள். உணவு சாப்பிட்ட பிறகும் கூட உடனே வந்து மறுபடியும் சாப்பாடு போடச் சொல்வார்கள். இரவு பகல் தெரியாமை, நேரத்தை உணர முடியாத நிலை போன்ற அறிகுறிகள் அடிக்கடித் தென்பட்டால் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை அவசியம் தேவை.
சில வகையான டெமென்ஷியாக்கள் அல்லது டெமென்ஷியாவின் சாயலை ஒத்த நோய்கள் ஒருவருக்கு இருந்தால், அதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்து இந்த மையம் சிகிச்சை அளிக்கும். இந்த நோய்க்கான தீர்வு முறைகளையும், நோய் வந்தவர்களுக்கு உதவும் வகையில் செயல் முறைகளை வகுப்பதும் இங்கு மேற்கொள்ளப்படும். விட்டமின் பற்றாக்குறையாலும், தைராய்ட் பிரச்னை போன்ற ஹார்மோன் குறைபாடுகளினாலும் இது போன்ற அறிகுறிகள் தோன்றலாம். அந்த மாதிரியான தருங்கங்களில் மருந்து மாத்திரைகள் தரலாம். டெமென்ஷியாதான் என்று உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் வேகமாக மோசமான நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும் மருத்துவ சிகிச்சைகளும் இங்கு உண்டு.
இந்த நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் வராமல் தடுக்கும் முறைகள், வந்து விட்டால் நோயாளிகளைப் பொறுமையுடன் எப்படிக் கையாளுவது ஆகியவற்றையும் இம் மையம் சொல்லித் தரும்.

-- கல்கி --

=========================================================================================================

ஜோக்...

====================================================================================================


137 கருத்துகள்:

  1. மிக அருமையான தலைப்புகள். பிறகு வந்து நிச்சயம் எழுதுவேன்.

    பல, என் அனுபவத்துடன் கூடியது ie I can relate

    பதிலளிநீக்கு
  2. அன்பு ஸ்ரீராம். இனிய காலை வணக்கம்.
    அனைவரும் என்றும் நலமுடன் இருக்க வேண்டும்.
    மிக சுவாரஸ்யமான பதிவு.
    மீண்டும் வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. வெகு நாட்களுக்குப் பிறகு உங்கள் ஜோக்,
    நகைச்சுவை அளவில்லாமல் சிரிக்க வைத்தது. ஹாஹா.
    மிக மிக நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா...   அசடு மாதிரி பதில் சொல்லிக்கொண்டிருந்திருக்கிறான்...!

      நீக்கு
  4. அவர் நெருங்கி வந்து பையில் இருந்த செடியை எடுத்து உள்ளே வைத்து, தொட்டியைத் தூக்கிக் கொண்டு உள்ளே போகத் திரும்பினார்.😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂பயங்கரமா இருக்காரே , செடி விக்கறவர்.
    சாலையோர நர்சரியோ.

    ஆட்டோக்காரர் 'பேரம்' பேசி நல்ல படியாக முடித்து வைத்தார்.
    செடிக்கும் கொரோனாவுக்கும் என்ன சம்பந்தம்?
    கடவுளுக்குத் தான் வெளிச்சம்.
    இத்தனூண்டு மண்ணுக்கு அத்தனை விலையா. !!!!'
    கடவுளே.

    நல்ல வேளையாக ஒரு பூவாவது வந்திருக்கே.
    செம்பருத்தி பார்க்க ஆரோக்கியமாக இருக்கிறது.

    இன்னும் கொஞ்சம் வளர்ந்த பிறகு தரையில்
    நட்டுவிடலாம். பால்கனி என்றால் பெரியதொட்டி,
    நிறைய மண் வாங்க வேண்டும்.
    மனம் நிறை வாழ்த்துகள் பா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தரையில் எங்கேம்மா நடுவது?  அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறோம்.  பெரிய தொட்டி ஒன்று இருக்கிறது.  ஆனால் மண் வேண்டுமே...  நான் வைத்திருப்பது பால் அஃவர்கள் வைக்கும் அந்த பெரிய பிளாஸ்டிக் பொருள்.  மண் வாங்க வேண்டுமென்றால் ஆயிரம் ரூபாய் வேண்டும்!!!!

      நீக்கு
  5. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேலோங்கப் பிரார்த்திக்கிறோம். இன்றைய தினம் யாரும் யாரிடமும் ஏப்ரல் ஃபூல் முத்திரை வாங்காமல் சமர்த்தாக கெட்டிக்காரர்களாய்த் திகழவும் பிரார்த்தனைகள். :))))))(முக்கியமாய் நான்.)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க தனியா இருக்க பயப்படறீங்கன்னுட்டு நான் வந்தால், நீங்க காணாமல் போய் அரை மணி நேரம் கழித்து வந்திருக்கீங்க... ஆனால் இன்னைக்கு பயப்படலை நீங்க.

      நீக்கு
    2. வாங்க கீதா அக்கா..   வணக்கம்.   இருப்போம்!  எபப்டியும் ஆறாம் தேதி ஏமாறணும்!

      நீக்கு
  6. இந்த மாதிரித் தொட்டிச் செடிகள் வளர்க்கும் ஆசையே போய்விட்டது. உங்களுக்காவது நல்லபடியாக நிறைவேறட்டும்.ஹைப்ரிட் செம்பருத்தியை விடச் சாதா செம்பருத்தி/அடுக்கு வாங்கி இருக்கலாமோ? எனக்கென்னமோ ஹைப்ரிட் வகைகள் பிடிப்பதே இல்லை. :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழைய வீட்டிலும் சில செடிகள் வளர்த்ததுண்டு...   ஆனால் மற்றவர்களுக்கு இருக்கும் பொறுமை எங்கள் யாருக்குமே இல்லை!

      நீக்கு
  7. சென்னை மிகவும் மாறித்தான் விட்டது. மேம்பாலங்கள் போக்குவரத்தை
    ஒழுங்கு செய்திருக்கலாம்.
    ஆனால் சாலைகளின் அழகைக் கெடுத்து விட்டது.
    என்னவோ ஓடுவது ஒன்றே பிரதானமாகப் போனது!!
    எங்கு பார்த்தாலும் தடுப்பு. எங்கு பார்த்தாலும் வாகனங்கள்.
    இப்போ வெய்யிலும் அதிகமானால்
    பொறுமையும் போய் விடும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்கள் நெருக்கம் அதிகமாக ஆக பாலங்கள், போக்குவரத்துத் தேவைகளும் அதிகமாகிறதே அம்மா...

      நீக்கு
  8. இங்கிருப்போர் நாளை இங்கே இருப்பது......
    அதுதான் நட்புக்கும் அடையாளம் மா.

    நம் மனம் தான் மாறிக் கொண்டே இருக்கும். அது அது அந்த நாளுக்கானது.

    உங்கள் கவிதை போலத்தான் நிறைய பேர்களின் நிலைமை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மக்களை புரிந்து கொள்ள முடியவில்லையா, நம் மனதுக்கு தெளிவில்லையா!

      நீக்கு
  9. திரு பம்மல் சம்பந்த முதலியாரின்
    எழுத்து மிகச் சிறப்பு.
    பழங்காலத் தமிழில் கிட்டப்பா அவர்களைப் பற்றியும்
    சுந்தராம்பாள் அவர்களின் சங்கீதத்தையும் மிகவும் கௌரவமாகச்

    சொல்லி இருக்கிறார்.
    எனக்கு கே பீ. சுந்தராம்பாள் குரல் மிகவும் பிடிக்கும்.

    திரு கிட்டப்பாவின் காலமான செய்தியையும் உறுத்தாமல் சொல்கிறார்.
    இந்த எழுத்தின் நாகரிகம் மிகச் சிறப்பு.

    ஔவையாரை மறக்க முடியுமா.
    மிக மிக நன்றி ஸ்ரீராம். மிக மிக சுவாரஸ்யமாக
    இருந்தது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அந்தக் கால பேச்சு முறையிலேயே எழுதி இருக்கிறார்.

      நீக்கு
  10. ரோபோ வந்துவிட்டது படுத்துவதற்கு.க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், இந்த ஆங்கில நகைச்சுவையைப் படங்களோடு பார்த்த நினைவு இருக்கு. எஸ்.ஜி.கிட்டப்பா/கே.பி.சுந்தராம்பாள் பற்றி ஏற்கெனவே படிச்சிருக்கேன். டிமென்ஷியா பற்றி/அல்சைமர் பற்றி எல்லாம் படிக்கக் கொஞ்சம் கவலை/பயம் வருது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு இரண்டு நாட்களாய் ரோபோ வரவில்லை.  நல்லவேளை!

      நீக்கு
  11. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க கமலா அக்கா..  வணக்கம்.  இணைந்து பிரார்த்திப்போம்.

      நீக்கு
  12. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    நலமே வாழ்க எங்கெங்கும்...

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் சகோதரரே

    எப்போதும் போல் முதல் கட்டுரை அருமை..செடிகள் வாங்க எனக்கும் நிறைய ஆசை.ஆனால் சிறு தொட்டியோடு அதன் விலைகள்தான் பயமுறுத்துகின்றன. நல்ல நகைச்சுவையோடு மனதோடு பேசி ரசித்து செடிகள் வாங்கியதை, எழுதியிருக்கிறீர்கள். ஒரு குழந்தையை வளர்ப்பது மாதிரி இந்த மாதிரி செம்பருத்தி செடிகளிடம் பேசி வேறு சில தொட்டிச் செடிகளையும் வளர்த்தேன். பால்கனியில் தொட்டியிலேயே நிறைய பூக்கள் பூத்தன.

    உங்கள் வீட்டு அடுக்கு செம்பருத்தி பூக்கள் நன்றாக அழகாக உள்ளன. நம் வீட்டில் வளரும் பூக்களை பார்க்கும் போது ஒரு சினேக பாவம், மகிழ்ச்சி, உற்சாகம் நம் மனதில் உண்டாகும். செடி நன்கு வளரட்டும். உற்சாகத்தோடு நிறைய பூக்களைத் தரட்டும். வாழ்த்துகள்.

    தங்கள் கவிதை அருமை. ரசித்தேன். மாறி மாறி நினைவுகள் வந்து தினம் நம்மை புரட்டி விட்டுத்தான் போகின்றன. "தினம் ஒரு மனம்" என்ற தலைப்பு தந்து விடலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி. மீண்டும் வருகிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் கட்டுரையைப் பாராட்டி இருப்பதற்கு .நன்றி கமலா அக்கா.    கவிதைக்கு தலைப்பு மிகப் பொருத்தம்.

      நீக்கு
  14. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  15. முதல் புகைப்படத்திலிருப்பவரின் கையில் பூவைக் கொடுப்பதற்கு பதிலாக கோடரியை கொடுத்து இருக்கலாம்.

    சில இடங்களில் இப்படித்தான் கறிக்கடையில் வேலை செய்பவர் இரக்ககுணம் உள்ளவராக இருப்பார் கோவில் பூசாரி, அர்ச்சகர் காமுகனாகவும் இருப்பார்.

    தேவகோட்டையே அன்றாடம் மாறும்போது சென்னை மாறுவதில் வியப்பில்லை ஜி

    பதிலளிநீக்கு
  16. மாயவரத்தில் வித விதமாக அடுக்கு செம்பருத்தி வைத்து இருந்தேன்.
    சிமெண்ட் தொட்டி மிக பெரிதாக இருக்கும் 100 , அப்புறம் செடி 50, ரூபாய், 30 என்று வாங்கி இருக்கிறேன். . தொட்டி மண், செடி எல்லாம் சேர்த்து 300 ரூபாய் கொஞ்சம் அதிகம் தான். மதுரையிலும் சில செடிகள் வாங்கினேன். மண் போட்டு தொட்டியில் வைத்து கொடுத்தார்கள்.
    தொட்டியில் மலர்ந்த மலரை பார்த்தவுடன் மகிழ்ச்சி வந்து விடும்.செம்பருத்தி பூ
    முகநூலில் போட்டு இருந்தீர்கள் பார்த்தேன். நிறைய பூத்து மகிழ்ச்சி அலையை பரப்பட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹையோ...    அங்கே சீப்பாக இருந்திருக்கிறதே...  பழைய வீட்டில் மல்லிகை, ரோஜா எல்லாம் கூட வைத்திருந்தோம்.  ஆனால் அவ்வப்போது உரம் வைப்பது போன்ற வேலைகள் எல்லாம் செய்வதில்லை.

      நீக்கு
  17. புதுக்கவிதை எங்களை போன்றவர்கள் மனநிலையில் தோன்றுவது போல் இருக்கிறது. உங்களுக்கு இப்பவே ஏன் அப்படி தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா...   இந்த மாதிரி எண்ணங்கள் பொதுதானே கோமதி அக்கா?

      நீக்கு
  18. திரு எஸ் ஜி கிட்டப்பா பற்றியும், திருமதி கேபி சுந்தராம்பாள் பற்றியும் படித்த நினைவு இருக்கிறது.

    டெமென்ஷியா கட்டுரை பயன் உள்ளது.

    பதிலளிநீக்கு
  19. செம்பருத்தி பூக்கள் 300-யை டெமென்ஷியா ஆக்கி விடும்...

    பதிலளிநீக்கு
  20. ஒரு பூவின் கதை..

    கதைக்குள் பூவை வைத்தார்..
    கவிதைக்குள் பூவை வைத்தார்..
    கண்ணெதிரில் பூவை வைக்க
    கைப்பையைக் கழற்றி வைத்தார்..

    மண்ணுக்கு விலை வைத்து
    மலருக்கும் விலை வைத்தது
    மனித மனதிற்கா..
    மலரின் மணத்திற்கா?..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வயிற்றுப் பிழைப்புக்கு!!!!

      கவிதை ஸூப்பர் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
  21. KB சுந்தராம்பாள் அவர்களைப் பற்றிய செய்திகள் மனதை நெகிழ்விக்கின்றன...

    பதிலளிநீக்கு
  22. அந்த நோய் இந்த நோய்
    எந்த நோய் என்றாலும்
    கந்தன் கழலடி ஒன்றே
    சந்ததம் காப்பு..

    பதிலளிநீக்கு
  23. நல்ல தொகுப்பு. நான் வீட்டை விட்டு கிளம்பி 45 நாட்களாகி விட்டது. எங்கள் வீட்டு செடிகளை பக்கத்து வீட்டில் ஒப்படைத்து விட்டு வந்தோம். அவர்களும் இப்போது ஊருக்குச் சென்றிருக்கிறார்கள். என் செல்லங்கள்(செடிகள்) என்னவானதோ? என்று அவ்வப்பொழுது தோன்றும். உங்கள் பதிவை படித்ததும் அந்த கவலை அதிகமாகி விட்டது. ஹீம்..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடே...   இப்படி வேற ஒண்ணு இருக்கா பானு அக்கா?  சரியாய் இருக்கும்.

      நீக்கு
  24. சிறப்பான தகவல்கள்.

    முரட்டு ஆசாமியாக இருக்கிறாரே பூக்காரர்!

    கவிதையும், மற்ற விஷயங்களும் நன்று.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முரட்டு ஆசாமிக்கு கூகுளுக்குதான் நன்றி செலுத்த வேண்டும்!

      நன்றி வெங்கட்.

      நீக்கு
  25. உங்கள் கவிதை நிதர்சனம்!
    சென்னை அசோக் நகரில் வசிக்கும் என் சகோதரிக்கு 1981ல் திருமணமாகியது. அப்போது அந்த இடம் 'ஹோ' வென்றிருக்கும். என் அக்காவின் வீட்டிற்கு எதிரில் இருக்கும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் கிடையாது. அதை பைபாஸாக உபயோகிப்பார்கள். என் அக்கா வீடு இருக்கும் தெருவில் நடமாட்டமே இருக்காது. நிசப்தம்! இப்போதோ ஏகப்பட்ட வாகனங்கள் ஓசையிட்டபடி விரைகின்றன. மற்றொரு சகோதரி வசித்த அண்ணாநகர்,திருமங்கலம் பகுதி அடியோடு மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பிருந்த சென்னைப் புறநகர்கள் இன்று சென்னை சிட்டி ஆகிவிட்டன.  பரபரப்பு, அடைசல், போக்குவரத்து நெரிசல்...

      நீக்கு
  26. முந்தாநாள்
    எனக்கு யாருமே இல்லை
    என்று தோன்றியது//

    நாலாம்நாளில் என்ன தோன்றியதோ
    நானறியேன் பராபரமே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பெல்லாம் சனிக்கிழமைகளில் பள்ளிக்கூடம் வைத்தால் தனி பாடத்திட்டம் இருக்காது.  திங்கள்கிழமை பாடவரிசை, செவ்வாய் பாடவரிசை என்று சொல்வார்கள்.  அதுபோல நான்காம் நாள் இப்போது சொல்லியுள்ள மூன்று நிலைகளில் ஏதோ ஒன்று.  இல்லாவிட்டால் எதுவுமே இல்லாத பரப்ரும்மம்!!

      நீக்கு
  27. எஸ்.ஜி.கிட்டப்பா எட்டுக் கட்டையில் பாடுவாரோ? கே.பி.சுந்தராம்பாளுக்கு மிகவும் இனிமையான குரல். அவர்களின் கதையை வசந்தபாலன் படமாக எடுத்தார்(காவியத் தலைவன்?). அந்தப் படத்தில் கூட நல்ல பாடல்கள் உண்டு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்கள் கதையையா காவியத்தலைவன் என்று எடுத்தார்?  எனக்கு செய்தி!

      நீக்கு
    2. என்ன இப்படி சொல்லி விட்டீர்கள்? இதை வசந்தபாலனே கூறியிருந்தாரே? கே.பி.சுந்தராம்பாள், எஸ்.ஜி. கிட்டப்பாவுக்கு எழுதிய காதல் கடிதங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவையாம். அதை அடிப்டையாக வைத்து அந்தப் படத்தில் "யாருமில்லா தனியரங்கில் ஒரு குரலினைப் போல் நீ எனக்குள்ளே.." என்று ஒரு இனிமையான பாடல் உண்டு. முடிந்தால் ஒரு வெள்ளியன்று பகிருங்கள். "ஏ மிஸ்டர் என்னை ஏன் நீ அழைக்கிற.." என்று ஒரு பெப் சாங்கும் உண்டு.

      நீக்கு
    3. கேபி சுந்தராம்பாள் சொல்லியிருக்கிறார்... இலங்கையில் எனக்கும் அவருக்கும் (அப்போ திருமணம் நடக்கலை..எஸ் ஜி கிட்டப்பா) நாடகத்தில் போட்டி. என்னை பாடி ஜெயிக்கமுடியாது என்று அந்த ஐயர் என்னைக் கல்யாணம் பண்ணிக்கொண்டார் எனச் சொல்லியிருக்கிறார். காதல் கடிதங்கள் பிறகு, பிரச்சனைகள் வந்த பிறகு

      நீக்கு
    4. ஓ...   பானு அக்கா...   நான் அதையெல்லாம் கேள்விப்பட்டதில்லை, படித்ததில்லை.  

      நெல்லை...  பாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்பதால் கல்யாணம் பண்ணிக்கொண்டாரா...   ஆ...

      நீக்கு
  28. //அசோக் பில்லர் ஏரியா. //

    அட! டென்த் அவென்யூ ரோடு!
    ஹையா.. எங்க வீட்டு தெரு அல்லவோ!! ஸ்ரீராம் நீங்கள் தான் நெருங்கிய உறவினர் (நண்பர்) குழாமுடன் வந்திருக்கிறீர்களே! ஆமாம், அப்போலாம் மெட்ரோ பாலம் இல்லை தான்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா..   பதிவிலேயே உங்களைக் குறிப்பிட மறந்தேனே.. நீங்கள் அந்த ஏரியா இல்லையா ஜீவி ஸார்?  ஆனால் இது உதயம் தியேட்டருக்கு முன்னே உள்ள சாலை.  படத்தின் ஆரம்பத்தில் வலது பக்கம் மறைந்துள்ளது உதயம் தியேட்டர்!

      நீக்கு
    2. உதயம் தியேட்டருக்கு முன்னே என்றால் பில்லர் பின்னாடி அல்லவோ இருந்திருக்கும்?

      இடது பக்கம் திரும்பினால் டென்த் அவென்யூவும் (TNSC Bank) வலது பக்கம் போஸ்ட் ஆபிஸூம். போஸ்ட் ஆபிஸுக்கு எதிரே ஹவுஸிங் போர்ட் காம்ப்ளெக்ஸூம் அதைத் தாண்டி உதயம் தியேட்டரும்.

      நீக்கு
    3. இன்றைய மெட்ரோ ரயில் பாலத்திற்கு எதிர் திசையில் படம் இருக்கிறது என்றால் நீங்கள் சொல்லும் உதயம் தியேட்டருக்கு முன்னே என்பது சரி தான். இடது பக்கம் போஸ்ட் ஆபிஸ். சரியே.

      நீக்கு
    4. அந்த ஏரியாவில் எவ்வளவு ப்ரீயாக உலா வந்திருக்கிறேன் என்பதை இப்பொழுது நினைத்துப் பார்த்தால் கட்டிப் போட்ட மாதிரி இருக்கிறது. சொந்த வீடு தான்.
      அப்பப்போ மறுபடியும் அந்தப் பக்கமே போய் விடலாம் என்று கூடத் தோன்றுகிறது.
      பார்க்கலாம். ( ஒரு வார்த்தையை உச்சரித்தால் கூட அவர் நினைவுக்கு வந்து விடுகிற மாதிரி பெரியவர்கள் அந்தக் காலத்தில் எய்படி வாழ்ந்திருக்கிறார்கள் என்று வியக்கத் தான் வேண்டியிருக்கிறது.)

      நீக்கு
    5. நீண்ட காலங்கள் வசித்த இடத்தை மறப்பது கடினமாகத்தான் இருக்கிறது.  அதுபற்றி கூட ஒரு கவிதை எழுதி வைத்திருக்கிறேன்.  பல நாட்களாச்சு...   ஒருநாள் வெளியிடுகிறேன்.

      நீக்கு
  29. தெரியாமல் பால்கனியில்
    செடித் தொட்டி வைத்தேன்
    தரையெல்லாம் செக்கச்
    செவேன்று செம்மண் கோலம்
    ஹைப்ரீட் செடியென்றான் விற்றவன்
    கொசுக்கும் சேர்த்துச் சொல்லியிருக்கான்
    என்று தெரியாது போயிற்று!!

    பதிலளிநீக்கு
  30. இங்கு வந்த பிறகு, பால்கனில செடிகள் வைக்கணும் என்ற ஆசையில், கொஞ்சம் தொலைவு போய், செடிகள் (துளசிலாம் 5 ரூ, 10 ரூ, கற்பூரவல்லி 20 ரூ, மல்லிகை 40 ரூ, ரோஜா 40 ரூ, மணி ப்ளாண்ட்-25 ரூ) வாங்கிவந்தோம். தொட்டிகள் 80 ரூபாய் வீதமும் (கீழே வைக்கும் தட்டு உட்பட), மண் மூடை 100 ரூபாய் (25 கிலோ), நார் மற்றும் சீர் செய்த மண் 1 மூட்டையும் வாங்கிவந்தோம். செம்பருத்தி 70 ரூபாய்னு சொன்னான். அப்போ வாங்கவில்லை.

    அப்புறம் கச்ச முச்சான்னு பிரண்டை, சும்மா வேர்க்கடலை (உரித்துச் சாப்பிட சோம்பேறித்தனம்), அப்புறம் உறவினர் வீட்டிலிருந்து கொண்டுவந்த வல்லாரை (ஏகப்பட்டது வளர்ந்துவிட்டது. மனைவி இன்னும் துவையல் அரைக்கலை), பத்தும் பத்தாதற்கு தர்ப்பைப்புல் போட்டேன் (சரியா வளரலை).

    இப்படிப் போய்க்கிட்டிருக்கு எங்க பால்கனி. இப்போ அதற்கு உரம் தயாரிக்க (அமேசான்ல 50 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒன்றை, 20 லி தண்ணீர் + 1/2 கிலோ வெல்லம் போட்டு பத்துநாள் கலக்கிவிட்டால் நல்ல உரமாம். புழு, கொசுலாம் வந்தால் மனைவி நெற்றிக்கண்ணைத் திறப்பாள்)

    நீங்கள் என்ன என்ன செடிகள் போட்டிருக்கீங்க? நாம ஏன் பொதுவா 'வரவு' உள்ல செடிகள் மட்டும் போட ஆசைப்படறோம்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. செடிகள் சீப்.  நீங்கள் சொல்லும் செடிகள் இங்கும் அந்த விலைக்கு வாங்கலாம். சின்னஞ்சிறு பையில் வைத்துக் கொடுப்பார்கள்.  மண்மூடை 100 ரூபாய் சரி, நார் மண் தனிக்காசா?  அதைத்தவிர சீர் செய்த மண்ணா?  அது எவ்வளவு?

      நாங்களும் வைக்கும்போது இருக்கும் வேகம் அப்புறம் காட்டுவதில்லை!!!   உரம்?  ஊ..ஹூம்!

      நாங்கள் இப்போ பெரிசா எதுவும் போடவில்லை.  துளசி (இது இல்லாமலா?), கற்றாழை, வெற்றிலை (ஒருமுறை வீணாய்ப்போய் மறுபடியும் வருகிறது) அப்புறம் ஏதோ அலங்காரச்செடி ஒன்று, இப்போது செம்பருத்தி...    அஷ்டே!

      நீக்கு
    2. ///இங்கு வந்த பிறகு//

      நோஓஓஓஓஓஓ இது கொஞ்சம்கூட நல்லாவே இல்லை.. எங்களுக்குச் சொல்லாமல் நீங்கள் எப்பூடிக் குடிபுகுதல் நிகழ்ச்சி செய்திருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. அதீஸ்பலஸ் க்கு ஓடரும் வரவில்லை:))... சரி சரி ஓகே நல்ல விசயம் சொன்னபடி 21 இல் புதுமனைக்கு வந்திட்டீங்கள் மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்...

      எங்கட நாடுகளில் கத்தரி மிளகாய் கூட ஒரு கன்று நட்டாலே போதும் வீட்டுக்குத் தேவையானது காய்க்கும்.. அப்படியானதை வாங்கி வையுங்கோ.. புதினா மல்லி எல்லாம் கடையில மலிவாக எப்பவும் வாங்கலாம் எல்லோ.. அது திக இடம்பிடிக்கும் வீட்டில்.

      வல்லாரை நன்கு வளருதோ.. அவ்வ்வ்வ்வ் இங்கு நாங்கள் ஒரு கட்டு[400-500 கிராம்] 5 பவுண்ட் கொடுத்து வாங்கிறோம்..

      நீக்கு
    3. கத்தரி, மிளகாய், தக்காளி, கீரை, கொத்துமல்லி, கறிவேப்பிலை வகைகள் வைக்க எனக்கும் ஆசை!  நெல்லை வீடு மாறி கனகாலம் ஆச்சே அதிரா...

      நீக்கு
    4. // நெல்லை வீடு மாறி கனகாலம் ஆச்சே அதிரா...//

      அப்படியா?? அவர் எங்கும் சொல்லவே இல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) அல்லது நான் தான் எங்கும் வரவில்லையோ.. இப்போ ஈஸ்டர் ஹொலிடே என்பதால் வரமுடிகிறது:))

      நீக்கு
    5. சென்ற வருடமே மாறிவிட்டார்!

      நீக்கு
    6. தக்காளிச் செடி, கத்தரிலாம் போட்டேன்... ஆனா அதில் எதுவும் உபயோகிக்கலை.

      @அதிரா - நான் இந்த ஊருக்கு ஜனவரி முடிவில் 2020ல் வந்துட்டோம். நீங்க இணையத்துக்கு வந்து இரண்டு மூன்று வருடங்கள் ஆகிறது என்பதால் பாவம் மறந்திருப்பீங்க. அதுனால வல்லாரை ஜூஸ், துவையல் ஏதாவது யூடியூபில் போடுங்க. அதற்குப் பிறகு உங்களுக்கு ஞாபகசக்தி அதிகமாகும்.

      நீக்கு
    7. ஆஆஆஆ 2021 இல் மாறுவோம் எனத்தானே சொல்லியிருந்தார்.. அப்போ வாக்குத் தவறிவிட்டார்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஹா ஹா ஹா. 2021 வந்த பின்புதான் நான் கவனிக்கிறேன், சொன்னாரே.. மாறிவிட்டாரோ என, அதனாலயே கண்டுபிடிச்சேன்:)).. பெரும்பாலும் என் பழக்கம் எதையும் ஆராய்வதோ, தேடிப் புதினம் அறிவதோ கிடையாது:)) ஹா ஹா ஹா பொதுவாக பெண்கள் எனில்.. ஊர்க்கதை பேசுவார்கள், கிசுகிசுக்கள் பேசுவதில் ஈடுபடுவார்கள் என்பினம், ஆனா நான் இதில மாறுபட்ட பிறப்பு ஹா ஹா ஹா:))

      நீக்கு
    8. //அதுனால வல்லாரை ஜூஸ், துவையல் ஏதாவது யூடியூபில் போடுங்க.//

      ஹா ஹா ஹா கர்:)) வடிவேல் அங்கிள் கொமெடிபோல... வல்லாரை ஊஸ் குடிச்சது மட்டும்தான் நினைவில இருக்குது:)).. புதுவீடு 21 இலதானே கட்டி முடியும் என்றீங்கள்..

      நீக்கு
    9. காய்கறிகளை வீட்டில் அறுவடை செய்து சமைப்பதில் எனக்கு ஆர்வம் உண்டு நெல்லை.  ஆனால்...   ஆர்வம் இருக்கும் அளவு உழைப்பு இல்லை!!!

      நீக்கு
    10. //(அமேசான்ல 50 ரூபாய்க்குக் கிடைக்கும் ஒன்றை, 20 லி தண்ணீர் + 1/2 கிலோ வெல்லம் போட்டு பத்துநாள் கலக்கிவிட்டால் நல்ல உரமாம். புழு, கொசுலாம் வந்தால் மனைவி நெற்றிக்கண்ணைத் திறப்பாள்)// இவை மட்டும் போதாது. அதோடு மாட்டு சாணம்,மூத்திரம் இரண்டும் சேர்க்க வேண்டும். அந்தக்கரைசலுக்கு அமிர்த கரைசல் என்று பெயர். செடிகளுக்கு நல்ல உரம். தொட்டது மண்ணில் புழு வர வேண்டும். இதற்காக மண் புழு கூட விலைக்கு கிடைக்கிறது. 

      நீக்கு
    11. தோட்டத்து மண், தொட்டது மண்ணாகி விட்டது. 

      நீக்கு
    12. பா.வெ. மேடம்... அப்பா ச்ராத்தத்துக்கு இங்கு வரட்டி எங்க கிடைக்கும்னு தேடிக்கொண்டிருந்தேன். அப்போ அங்க இருந்த ஒருத்தர் சொன்னார்... இதையெல்லாம் தேடணுமா? பேசாம ரோட்டில் இருக்கும் சாணியை எடுத்து சுவற்றில் வீசி வைத்தால் ரெண்டு நாளில் விராட்டி ரெடி என்றார். வீட்டுக்கு சாணம் இதெல்லாம் எடுத்துவந்தால் அவ்வளவுதான்.... ஹாஹா

      நீக்கு
    13. @அதிரா... Flat 2019ல் handover பண்ணினார்கள். பிறகு இண்டீரியர். ஜனவரி 2020ல் இங்கு சென்னையிலிருந்து வந்துவிட்டோம் (எங்கள் லக்.. இல்லைனா 1 வருடம் இங்கு வந்திருக்கமுடியாது, கொரோனா பிரச்சனைகளால்) இப்போ இந்த ஊருக்கு வந்து 1 வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது.

      நீக்கு
    14. சிறுவயதில் நான் பள்ளியிலிருந்து வந்தபோது மாமாவுக்கு உதவுகிறேன் என்று  டிபன் பாக்சில் சாணம் அள்ளி வந்ததது நினைவுக்கு வருகிறது!

      நீக்கு
    15. அப்போ நெல்லைத்தமிழன், நீங்கள் 2020 என்பதற்குப் பதிலாக 2021 என கொமெண்ட்டில் எழுதினீங்கபோலும்:))..
      உண்மைதான் கொரோனாவால எத்தனையோ பிரச்சனைகள்.. இங்கு ஸ்கொட்டிஸ் குடும்பம் ஒன்று செல்ஃப் ஸ்பொன்சரில கனடா போக இருந்தார்கள் 2020 யூன் இல்.. விசாவும் வந்திட்டுது. ஆனா லொக்டவுனால, பின்பு இப்போ மனம் மாறி விட்டினம், இனிப் போகவில்லையாம்.

      நீக்கு
  31. எங்கள் நாட்டிலும் கணவனை.. என்னப்பா.. வாங்கோப்பா... சொல்லுங்கோப்பா.. இப்படி அழைப்பது நோர்மல்:)).. மரியாதையாம்:))..

    செம்பருத்தி மிக அழகாக இருக்குது, ஆனா ஒரிஜினலாக இல்லாமல் அடுக்காகி, ரோஜாப்போல எல்லோ தெரியுது. நல்ல உரம் போட்டிருக்கினம், அந்த உரம் முடியும்வரை பூக்கும் நன்றாக, இலையும் கருகரு என இருக்கும்... பின்பு உங்கள் பராமரிப்பைப் பொறுத்தே மிகுதி:)).. மல்லிகை ரோஜா வாங்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா..  ஹா..  ஹா..  என் தங்கை பெண் செடிவளர்ப்பில் மிகுந்த ஈடுபாடு உள்ளவள்.  நேற்று இங்குவ அந்த அவள் படுக்கும் அறைக்குள்ளேயே வளர்க்கும் சில செடிகள் பற்றிச் சொல்லிச் சென்றாள்.  அவ்வ்ப்போது திறக்கும் ஜன்னல் வெளிச்சமும், டியூப் லைட் வெளிச்சமுமே போதுமாம்.

      நீக்கு
    2. அதேதான் ஸ்ரீராம், வீட்டு லைட் வெளிச்சம் போதும், வெளிநாடுகளில் அப்படித்தானே வளருது... ஆனா அளவான சூடு இருக்கோணும். வீட்டுக்குள் வளர்க்க பல செடிகள் இருக்குதுதானே அவை வீட்டுக் காற்றை சுத்தம் செய்து நம்மைப் பாதுகாக்கும்...
      வீட்டுக்குள் அனில் பெரிய சாடியில ஐந்தூரியம் வாங்கி வையுங்கோ ஸ்ரீராம், நல்ல பெரிய மரம்போல வந்து நிறையப் பூக்கும்.. கண்ணுக்கும் அழகு.

      நீக்கு
    3. ஐந்தூரியம்??

      பார்ப்போம்.   நகரவே இடம் இலை என்றால் செடி எங்கே வைக்க?  ஆனால் அந்த ஆசையும் இருக்கிறது!

      நீக்கு
    4. பொருட்களைக் குறையுங்கோ ஸ்ரீராம்... கண்ணை மூடிக்கொண்டு 2 வருடம் முற்பட்டவற்றை எல்லாம் எறிஞ்சிடுங்கோ..

      நீக்கு
    5. ஏற்கெனவே நிறைய தூக்கி எறிஞ்சாச்சு!   இன்னும் இருக்கு அடைசல்!

      நீக்கு
  32. //விரிவாக்கம் அடைகிறது அல்லது பாலம் உருவாகிறது. எப்படி இருக்கும்? //

    எனக்கு நெஞ்சுக்குள் என்னமோ செய்யும்:)).. பழைய நினைவுகள் உலாவிய காலங்கள் வந்து கவலைப்படுத்தும்:)) ஹா ஹா ஹா..

    இன்ஸ்டண்ட் கவிதை சூப்பர்... இன்று நினைப்பது மட்டும்தானே நிஜம்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமக்கு என்னவோ எப்பவும் முன்னர் இருந்ததுதான் நன்றாய் இருந்ததாகவே தோன்றும்!  மனித மனம்.

      நீக்கு
  33. பாதிக்கு மேலே பிளாக் அண்ட் வைட் ஆக்கிட்டீங்கள்:))

    கே பி எஸ் கதை நன்று.

    மருத்துவக் குறிப்பு சூப்பர்.

    கடைசி ஜோக்.. இன்று புரிஞ்சே சிரிக்கிறேன் ஹா ஹா ஹா.. ஏனெனில் நீங்கள் போடும் ஜோக்ஸ் பல தடவை எனக்குப் புரிவதில்லையாக்கும்:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யூடியூப் செஃப் என்றால், வெறும்ன காணொளி போட மட்டும்தான் தெரியும். மத்தபடி சமைக்கத் தெரியாது என்று சொல்வதுபோல இருக்கே

      நீக்கு
    2. //மத்தபடி சமைக்கத் தெரியாது என்று சொல்வதுபோல இருக்கே//

      ஹா ஹா ஹா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என் சிஸ்டர் இன் லோ.. எப்பவும் எனக்கு ஃபோன் பண்ணி.. “நீங்க கடையில வாங்கி வச்சுப்போட்டுத்தானே, நீங்க செய்ததுபோல வீடியோ எடுக்கிறீங்க என்னால நம்ப முடியாது” என்கிறா கர்ர்ர்ர்ர்

      நீக்கு
    3. ஜோக் புரிந்து சிரித்ததற்கு நன்றி அதிரா!  எஸ்ஜிக்கே, கேபிஎஸ் கட்டுரை சற்றே பெரிதாகி விட்டது!

      நீக்கு
    4. //என்னால நம்ப முடியாது” என்கிறா// - ஓ... அப்படி நினைப்பது நாங்கள் மட்டும் இல்லை போலிருக்கே... உங்கள் உறவினரும் (உறவினர்களும்) அப்படி நினைக்கறாங்களா? ஹாஹா... அவங்க நினைத்தால் அது 200 சதவிகிதம் உண்மையாத்தான் இருக்கும்.

      நீக்கு
    5. இல்லை நெல்லை...   நீங்கள் பார்க்கவில்லையா?  அதிரா படிப்படியாக ஒவ்வொன்றையும் பொறுமையாக செய்து காட்டுகிறார்.  அவ்வளவு பொறுமை நமக்கு வராதுப்பா...!

      நீக்கு
    6. //அவங்க நினைத்தால் அது 200 சதவிகிதம் உண்மையாத்தான் இருக்கும்.///கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 45673987620 @ நெல்லைத்தமிழன்:))

      நீக்கு
    7. //அதிரா படிப்படியாக ஒவ்வொன்றையும் பொறுமையாக செய்து காட்டுகிறார்.//
      ஹா ஹா ஹா நன்றி ஸ்ரீராம்..
      நெல்லைத்தமிழன் இப்போ என் வீடியோக்களைப் பார்ப்பதில்லைப்போலும்:)) ஒழுங்காகப் பார்த்து லைக் போடாதுவிட்டால்:), நெல்லைத்தமிழனின் பல்கனியில் இருக்கும் கத்தரிமரம் காய்க்காது சொல்லிட்டேன்ன்ன்ன்ன்ன்ன்:)).. ஆண்டவா அண்ணி என்னை மன்னிக்கோணும்:))))

      நீக்கு
  34. அனைவருக்கும் இனிய ஏப்ரல் ஃபூல் வாழ்த்துக்கள்:)).. இதுவரை என்னை ஆரும் ஏமாத்தவில்லை, நானும் ஆரையும் இம்முறை ஏமாற்றவில்லை பிக்கோஸ் மீ ரொம்ப நல்ல பொண்ணு:)).. போனவருடம் டெய்சிப்பிள்ளைக்கு ஒரு பேபி வாங்கிட்டொம் எனச் சொல்லி அஞ்சுவை ஏமாத்தினேனே:)) ஹா ஹா ஹா:))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இதுவரை இன்று ஏமாறவில்லை, யாரையும் ஏமாற்றவுமில்லை!

      நீக்கு
  35. திருமணமான புதுசில்
    தெரிந்திருக்கவில்லை
    நாள் கணக்கு இல்லையென்றாலும்
    போகப்போகத் தான் தெரிந்ததது
    வளர்ந்த வீடு புகுந்த வீட்டிற்கு
    வித்தியாசம் இல்லையென்று தெரிந்தது
    நான் தனி இல்லை என்று
    தெரிந்தது தான் முக்கியம்
    குழந்தை வந்து குதித்ததும்
    அம்மா உணர்வு தன்னாலே வந்தது
    'அப்பாடா' என்று குழந்தைக்குச்
    சொல்லும் பொழுது அத்தனை
    சந்தோஷம் அவருக்கு.
    அந்தக் 'குழந்தை'க்கும் அப்பா அம்மா
    ஆனவர்கள் 'நீ கூட இப்படித் தாண்டா
    கன்னம் குழிய சிரிப்பே'' என்ற பொழுது
    அவர் அப்பா அம்மா சந்தோஷம்
    இந்தக் குழந்தைக்கு அப்பா அம்மாவான
    எங்களிலும் தொற்றிக் கொண்டது
    குழந்தையைத் தொட்டு அம்மா - அப்பா
    தாத்தா - பாட்டி என்று வீடு முச்சூடும்
    எந்நேரமும் ஒருத்தர் மாற்றி ஒருத்தரென்று
    குழந்தையைக் கொஞ்சிக் குலவும் கூட்டம் தான்
    மனிதர் யாரும் தனித்தீவல்ல என்று
    யாரோ சொன்னார்கள்; உண்மை தான்.

    பதிலளிநீக்கு
  36. //எங்கள் வீட்டுக்கு அருகில் இருந்த காலி இடம் படிப்பபடியாக கட்டிடமாக உருமாறுவதைப் படம் எடுத்தேன். // பொதுவா நான் ஒரு செய்முறையைப் படங்கள் எடுத்து வைத்திருந்தால், அனுப்புவதற்குள் பானுமதி வெங்கடேஸ்வரன் அவர்கள் அதனை எபிக்கு முதலில் அனுப்பிவிடுவார்கள்.

    எங்கள் Towerக்கு அருகில் இன்னொரு Tower இப்போதுதான் கட்ட ஆரம்பித்திருக்கிறார்கள் (அது போகும் 26 மாடிகள்). இன்னும் ஒரு தளம்கூட வரலை. ஆனால் தினமும் ஒரு படம் எடுத்துவைத்துக்கொள்கிறேன். அப்போதுதான் ஒரு அடுக்கு மாடி எப்படி உருவாகிறது என்பது தெரியும் என்பதற்காக. இங்க பார்த்தால் நீங்களும் படங்கள் எடுத்துவைக்கிறீர்கள் என்று தெரிகிறது. இருந்தாலும் நான் எடுப்பதைப்போல தினமும் எடுக்க உங்களுக்கு வாய்ப்பும் பொறுமையும் இருக்கான்னு தெரியலை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் அனுப்பி இருந்த படங்கள் பார்த்தேன் நெல்லை.  நான்  எடுத்த படங்கள் அவ்வளவு   தெளிவு இல்லை.  மேலும் ஒவ்வொன்றாகத் தேடவேண்டும்!

      நீக்கு
  37. உங்கள், மொபைல் போன், டாய்லட் - எனக்கு நடந்த நிகழ்வை நினைவுபடுத்தியது. செல்போன் வந்த புதிதில் சீனியர் மேனேஜர்களுக்கு மொபைல் போன் வாங்கிக்கொடுத்தார்கள், பில்லும் கம்பெனியே கட்டும். Information Tech. support team என்பதால் என் டிபார்ட்மெண்டில், சிலருக்கும் மொபைல் பில் கம்பெனியே கட்டுவதாக ஏற்பாடு. ஆனால் பக்கத்தில் உள்ளவனிடம் பேசவே மொபைலை உபயோகப்படுத்த ஆரம்பித்தனர் (டாய்லெட்லேர்ந்து இன்னொரு சப்போர்ட் ஸ்டாஃபுடன் மொபைலில் பேச்சு). இப்படி மிஸ்யூஸ் பண்ணியதால் முதல் இரண்டு மாதங்களிலேயே கம்பெனிக்கு பெரிய பெரிய பில்களாக வர ஆரம்பித்தது. அதனால் பிறகு கம்பெனி, மாதம் 30 தினார் அலவன்ஸாகக் கொடுத்தது. அதிகமான அது ஸ்டாஃபே கொடுக்கணும் என்று சொல்லிவிட்டது. Finance controller சொன்னார், இந்த மாதிரி மாதாமாதம் அலவன்ஸ் கொடுப்பதில் கம்பெனியிலேயே உங்களுக்கு மட்டும்தான் லாபம் என்றார். (நான் ரொம்ப காஸ்ட் கான்ஸ்ஷியஸ், எனக்கோ இல்லை கம்பெனிக்கோ)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்.  அந்தக் காலத்தில் இதற்கெல்லாம் காசு கொடுத்துக் கொண்டிருந்தார்கள்!  அப்புறம் அது என் அனுபவமல்ல!!!   ஹா..  ஹா..  ஹா...

      நீக்கு
  38. எங்கள் வீட்டி ல் பலவித செடிகள் இருந்தனஇப்போது இருப்ப்துவெகு சொற்பமே அது என்னவோ தெரியவில்லை தொட்டிகளில் பூ மட்டும் வருவதில்ல ரொம்ப அபூர்வம் டெமென்ஷியா அல்ஜிமெர் வித்தியாசம் தெரிவதில்லை என் பெரிய அண்ணிமிகவும் கஷ்டப்ப்பட்டிருக்கிறார்பாலக்காட்டில் என் நண்பன் ஒரு இல்லம் நடத்துகிரான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொட்டிகளில் வைக்கும் செடியை அப்புறம் மண்ணுக்கு மாற்றி விடுதல் நலம் ஜி எம் பி ஸார்...  அதற்கு வழி இல்லாதபோது ஓரிரு பூக்கள்தான் லாபம்.  

      பக்கத்துத் தெருவில் கிளைகள் தெரியாத அளவில் காய்த்துத் தொங்கிக்கொண்டிருந்த முருங்கை போத்து ஒன்றை வாங்கிவந்து எங்கள் வீட்டு வாசலில் வைத்தேன்.  அது வருடத்துக்கு மூன்று நான்கு காய்கள் காய்த்தது!

      நீக்கு
  39. பூச்செடி விற்பவருக்கு ஏதேனும் அனுபவம் அப்படி இருந்திருக்கும். அதனால் அப்படி நடந்திருப்பார். மிகச் சரியான கவிதை. ஜோக் படித்ததும் சிரிச்சாச்சு....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி எழில்.  இரண்டாவது வருகை என்று நினைக்கிறேன்.  வருக..  வருக...

      நீக்கு
  40. கே.பி.எஸ். என்றாலே எனக்கு இந்தப் பாடல் நினைவுக்கு வந்து விடும்.

    மதுரை ஹார்வி மில்லில் நெடுநாள் பிரச்னைகளின் தீர்வு வேண்டி வேலை நிறுத்தம்.
    தொழிலாள்ர்கள் திரண்டிருக்கும் கூட்டத்தின் நடுவில் கே.பி. சுந்திராம்பாள் அவர்கள்
    தேனினுமிய குரலெடுத்துப் பாடுகிறார்கள்:

    காலுக்குச் செருப்பு மில்லை
    கால்வயிற்றுக் கூழுமில்லை
    பாழுக் குழைத்தோமடா – என் தோழா
    பசையற்றுப் போனோமடா.

    குண்டிக்கொரு துண்டு மில்லை
    கொல்வறுமை தாள வில்லை
    ஒண்டக் குடிசை யில்லை – என் தோழா
    உழைத்திளைத்துப் போனோ மடா.

    நோய்நொடிகள் வெம்புலி போல்
    நூறுவிதம் சீறு வதால்
    தாய்தந்தையர் பெண்டு பிள்ளை –என் தோழா
    சாய்ந்து விழக் கண்டோமடா.

    பாலின்றிப் பிள்ளை அழும்
    பட்டினியால் தாய ழுவாள்
    வேலையின்றி நாம ழுவோம் – என் தோழா
    வீடுமுச் சூடும் அழும்

    கோணல் மாணல் திட்டங்களால்
    கோடி கோடி யாய்க்குவித்தே
    வீணா்சிலர் கொழுக்கக் கண்டால் – என் தோழா
    வெஞ்சினம் பொங்கு தடா...

    தோழர் ஜீவாவின் பாடல் இது. கேபிஎஸ்ஸின் உருக்கமான குரலில் மேலும் உருகுகிறது.
    சுந்திராம்பாள் அவர்கள் தேசத்தின் சுதந்திர போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டவர். கதர் உடுத்து அவர் தெருவில் இறங்கி விட்டால் அவர் பின்னால் பெண்கள் கூட்டம் அணிஅணியாகத் திரண்டு வரும்.

    எஸ்.ஜி. கிட்டப்பாவும், கொடுமுடி சுந்திராம்பாளும் இந்த தேசத்திற்கு இறைவன் அருளிய சொத்தாகத் திகழ்ந்தவர்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஸ்ரீமதி கேபி சுந்தராம்பாள் அவர்களைப் பற்றி ஓரளவுக்கு அறிந்திருந்தாலும் அன்பின் ஜீவி அண்ணா அவர்கள் அளித்திருக்கும் செய்தியால் அவர்கள் மீது மேலும் மதிப்பு ஓங்குகின்றது...

      நீக்கு
    2. எனக்கு கே பி எஸ் என்றாலே "காலத்தில் அழியாத"  பாடல்தான் நினைவுக்குவ யாரும்.

      நீக்கு
  41. //இதயத்தையும், மூளையையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள என்னென்ன செய்கிறீர்களோ, அவற்றை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும். எப்போதும் க்ரியேட்டிவ்வாக, சுறுசுறுப்பான முறையில் இயங்கினாலே இந்த நோய் வருவதைத் தவிர்க்கலாம்.//

    டெமென்ஷியா நோய் அறிகுறிகள் நம்மில் படிந்திருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அவை நம்மிலிருந்து விடுபடுவதற்கு அருமையான பரிந்துரை இது. இந்தப் பகுதி மிகச் சிறப்பாக அமைந்து வருவதைப் பார்க்கிறேன். தொடர்ந்து வாசிக்கிறேன், நன்றி, ஸ்ரீராம்.



    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஜீவி ஸார்..   சமீபத்தில் எனக்கு சில குறிப்பிட்ட சொற்கள் மட்டும் சட்டென நினைவுக்கு வராமல் கழுத்தறுத்தன.  கண்ணெதிரே அதே பொருளே இருக்கும்.  ஆனாலும் அதன் பெயர் வாயில் சட்டென வராது.  இதன் ட்ரீட்மெண்ட் என்பது மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்வது என்று அறிந்த உடன் புத்தகங்கள் படிக்கத்தொடங்கி விட்டேன்.

      நீக்கு
  42. பம்மல் சம்பந்த முதலியார் பற்றியும் ஒரு தனிக் கட்டுரை எழுதுங்கள். மறந்து போனவர்களையும், மறக்கடிக்கப் பட்டவர்களையும் நினைவு கொண்டு உத்வேகம் பெற அருமையான பகுதிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்யோசனையுடன் செய்யவில்லை எனினும் அவ்வப்போது தோன்றுவதை, கிடைத்ததை வெளியிட்டு வருகிறேன் ஜீவி ஸார்.

      நீக்கு
    2. இதில் உங்கள் தேர்வு தான் முக்கியம்.
      எ.பி.க்கு ஏற்ற மாதிரி என்று நீங்கள் நினைக்காத மாதிரி வாசகர் விரும்பப் போவதில்லை என்று தெரிந்தும் விஷயத்தின் மேன்மை கருதி வெளியிட வேண்டும் என்ற வேகமும் உங்களிலிருந்து தொடங்க வேண்டும்.
      கொஞ்சம் கொஞ்சமாக நவீனத்திற்கும் பழமைக்கும் பாலம் அமைந்து எபியின் முக விலாசமே மாறலாம். இலட்சியங்கள் லேசில் கிட்டி விடுவதில்லை என்பதும் வரலாற்று உண்மை தான்.

      நீக்கு
    3. இதை சாதித்துக் காட்டிய திறமை குமுதத்திற்கு மட்டுமே இருந்தது.
      பெட்ரண்ட் ரஸலைப் பற்றி எழுதினாலும் சரி, நடிகையரின் மூக்கு வித்தியாங்கள் பற்றி விலாவரியாக விவரித்தாலும் சரி இரண்டையும் ஒரு சேர வாசிக்க வாசகரைப் பக்குவப்படுத்தியவர்கள் அவர்கள். சுவையாக எழுதத் தெரிந்தால் போதும் 'நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா' என்று வாசகரை வாசிக்க வைக்கலாம்.

      நீக்கு
  43. ஹ்ஹ்ஹ்ஹாஹா.. ஷோக்கான ஜோக். மேல் நாட்டினர் எல்லாவித மன சேஷ்டைகளையும் ஒரு கை பார்த்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம். மூடு திரையற்ற அப்பழுக்கற்ற பகிர்ந்தல்கள் பல மனச்சோர்வுகளை களைய உதவுகின்றன என்பதே என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  44. முதலியார் அவர்களின் கட்டுரைகள் அடடா !
    கிட்டப்பாவைப்பற்றிச் சொல்லும்போது சும்மா.. சாதாரணம். சுந்தராம்பாள் கதை வருகையில் என்ன ஒரு பண்பு, பதவிசு.. வார்த்தைகள் எல்லாமே வளைகின்றனவே, நெளிகின்றனவே !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவரவருக்கென்று ஒரு பாணி இருக்குமல்லவா ஏகாந்தன் ஸார்...!

      நீக்கு
  45. அடுக்கு செம்பருத்தி அழகா இருக்கு .ஹைபிரிட் னாலே பெரிய இலை பெரிய பூ .எங்கப்ப கீழ்ப்பாக் கார்ட்னலருந்து வாங்கி வருவார் பூத்தொட்டி மண் செடி எல்லாம் .இப்பவும் அங்கே கடைகள் இருக்கா ?. ஸ்ரீராம் இப்போதான் இப்படி செடிகடைகள் எல்லாம் பிரபலம் .முந்தி 90 கலீல் எங்க பெரியப்பாதானே பதியன் போட்டு நட்புகளுக்கு தருவார் .க்ரோட்டன் கிங் அவர்தான் எங்க ஏரியாவில்.மல்லியும் சீக்கிரம் வாங்கிக்கொடுங்க :) எனக்கு நிறைய பூச்செடி வளர்க்க ஆசை .இங்கே வெதர் சரி வராது 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஏஞ்சல்...   என் பள்ளி நாட்களில் நானும் எங்கள் வீட்டில் ரோஜா மல்லிகை போன்றவற்றை பதியன் போட்டு நண்பர்களுக்கு கொடுத்ததைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
  46. பழம்நீயப்பா பாட்டி  மற்றும் கிட்டப்பா எல்லார் பற்றியும்      அலசி தேடி படிச்சிட்டு வந்தேன் ..கிட்டப்பா 27 வயசிலேயே சோமபானத்துக்கு அடிமையானத்தில் மேலே போய்ட்டார்னு சொல்றாங்க ..குடி அந்த  அக்காலத்திலும் இந்த காலத்திலும் குடிகளை கெடுக்குது .

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தக் காலத்திலும் அது உண்டே...   எம் ஜி ஆர் மட்டும் அது கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.

      நீக்கு
  47. ஆஆ டிமென்ஷியா !!! நானா கொஞ்சம் காலம் அதில் இருந்தேன் இப்பவும் கேர் கோ ஆர்டினேட்டர் விஷயமா சிலரை சந்திப்பதுண்டு .55 வயதில் டிமென்ஷியா பாதித்த ஒரு பிசிக்ஸ் ப்ரொபஸரும் தெரியும் இங்கே ..அவர்களிடம் பொறுமை மிக அவசியம் 

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் என்னை நினைத்து ரொம்பவே பயந்தேன் சமீபத்தில்...   இப்போ கொஞ்சம் பரவாயில்லை என்று நினைத்துக் கொள்கிறேன் எனக்குள்ளேயே....

      நீக்கு
  48. வணக்கம் சகோதரரே

    கதம்பத்தின் பிற பகுதிகளும் சுவாரஸ்யமாக இருந்தது. நாம் பார்த்த போது வளர்ச்சியேதும் அடையாத இடம் நம் கண்ணெதிரே படிபடிப்படியாக தினம் தினம் வளர்ந்து விடுவது பற்றிய உங்களின் சாலைப் படங்களைப் பார்த்தேன்.அழகாக படம் எடுத்துள்ளீர்கள்.

    பாடகர் கிட்டப்பா, கே.பி சுந்தராம்பாள் இருவரைப்பற்றி சிறப்பாக சொல்லியுள்ளார் திரு. சம்பந்த முதலியார். இருவரையும் பற்றி ஏற்கனவே படித்துள்ளேன்.இருவரின் குரல் இனிமையும் மறக்க முடியாதது. கணீரென பாடும் கே.பி.சுந்தராம்பாள் அவர்களின் குரல் வளம் இனி யாருக்காவது அமைய பெறுமா என்பது சந்தேகமே..இசை உலகத்திற்கு அவர்கள் இருவரும் இறைவன் தந்த பரிசு.

    வயதானவர்களுக்கு வரும் நோய்கள் எனப் படிக்கையில் சற்று பயம் ஏற்படுகிறது. "யாருக்கும் தொந்தரவு இல்லாமல் உன்னிடம் வரவேண்டும்" என்பதும் கடவுளிடம் நான் தினமும் வைக்கும் ஒரு சுயநல விண்ணப்பந்தான்.

    ஜோக் அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  49. என்ன ஸ்ரீராம் மனைவி பூ வாங்கி கேட்டா இப்படி அப்பாவியாக 300 ரூ செலவழித்து ஆட்டோவிற்கு செலவழித்து வாங்கி தருவீங்களா என்ன? என் கிட்ட கேட்டு இருந்த அதிக செலவு இல்லாமல் ஒரு வழி சொல்லி இருப்பேன்ல.

    சரி எத்ற்கும் இப்ப சொல்லுறேன் நோட் பண்ணி வைச்சுகுங்க அடுத்த தடவை பூ செடி கேட்டால் வீடில் இருக்கும் செடியில் உங்கள் மனைவியின் போட்டோவை லெமினேஷன் செய்து தொங்கவிட்டு இந்த பூவிற்கு ஈடு இணை ஏதும் உண்டா என்று உங்கள் மனைவியிடமே கேளுங்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்க வேற மதுரை...    அவங்க கேட்டது பூ இல்லை, பூச்செடி!  உங்க இந்த கமெண்ட்டை இப்போதுதான் பார்க்கிறேன்!  என்ன கஷ்டம் என்றால் உங்கள் கமெண்ட்ஸ் மட்டும் மெயிலுக்கு ஏனோ வருவதில்லை!  

      நீக்கு
  50. அடுக்கு செம்பருத்தி அழகு. நன்கு உயரமாகவும் நிறையப் பூக்கவும் கூடிய செடி. நடுவில் மகரந்தக் காம்பு உள்ளதா? படத்தில் தெரியவில்லையே.

    சிறந்த பாடகர்களைப் பற்றிய பகிர்வும், டெமன்ஷியா பற்றிய விழிப்புணர்வு தரும் தகவல்களும் நன்று.

    நல்ல தொகுப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நடுவில் மகரந்தக் காம்பு கண்ணில் படவில்லை.

      நன்றி ராமலஷ்மி.

      நீக்கு
  51. உங்கள் தயவில் திருப்பப்பண்டிக் கொடுமுடி என்று ஒரு ஊர் இருப்பதைத் தெரிந்து கொண்டேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!