சனி, 11 செப்டம்பர், 2021

24 மணி நேரமும் குடிநீர் குழாய்களில் சுத்தமான குடி நீர்

 'Drink from tap(குழாயிலிருந்து குடியுங்கள்) என்னும் கொள்கையை செயல்படுத்தியதன் மூலம் இந்தியாவிலேயே 24 மணி நேரமும் குடிநீர் குழாய்களில் சுத்தமான குடி நீர் கிடைக்கும் நகரம் என்னும் பெருமையை ஒடிசாவின் பூரி நகரம் பெற்றுள்ளது. 

பூரியின் கிராண்ட் ரோடிலும், நகரின் சில முக்கியமான இடங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் 120 குடி நீர் குழாய்களில் வருடம் முழுவதும் சுத்தமான குடி நீரை அருந்தலாம். இதனால் பூரியின் இரண்டரை லட்சம் மக்கள் தொகை மட்டுமல்லாமல் அந்நகருக்கு வருகை புரியும் இரண்டு கோடி யாத்ரீகர்களும்  பயனடைவார்கள். மேலும் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்களை தவிர்க்கலாம், அதனால் வருடத்திற்கு 400 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேராது என்பது சுற்றுச் சூழலுக்கும் நன்மை சேர்க்கும் விஷயம். 

https://www.indiatoday.in/india/video/watch-puri-becomes-first-indian-city-to-have-drink-from-tap-facility-1834217-2021-07-29?jwsource=cl

தகவல் - டைம்ஸ் ஆஃப் இந்தியா.    (நன்றி பானுமதி வெங்கடேஸ்வரன்)

==============================================================================================================

நாட்டின் சிறந்த நிறுவனமாக சென்னை ஐ.ஐ.டி., தேர்வு

சென்னை :உயர்கல்வி நிறுவனங்களுக்கான தேசிய அளவிலான தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. மூன்றாவது முறையாக தேசிய அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது. வேலுார் வி.ஐ.டி. - கோவை அம்ரிதா, பாரதியார் பல்கலைகளும் 'டாப் - 100' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

மத்திய கல்வித்துறை சார்பில் தேசிய அளவில் உயர்கல்வி நிறுவனங்களின் செயல்திறன் அடிப்படையிலான தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. நாடு முழுதும் இருந்து மொத்தம் 1657 நிறுவனங்கள் இதில் பங்கேற்று உள்ளன.முதல் 100 நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடம் பெற்று ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளது. இன்ஜினியரிங் பிரிவில் தொடர்ந்து ஆறாம் ஆண்டாக முதலிடம் பெற்றுள்ளது.பெங்களூர் ஐ.ஐ.எஸ்.சி. நிறுவனம் 2ம் இடம் பெற்றுள்ளது. மும்பை, டில்லி, கான்பூர், கரக்பூர், ரூர்க்கி, கவுஹாத்தியில் உள்ள ஐ.ஐ.டி.க்கள் முறையே மூன்று முதல் எட்டாம் இடங்களை பெற்றுள்ளன. டில்லி ஜே.என்.யூ. ஒன்பது; வாரணாசி பனாரஸ் பல்கலை 10ம் இடத்தையும் பெற்றுள்ளன....
=======================================================================================================

லண்டன்:சர்வதேச அளவிலான சிறந்த ஆசிரியருக்கான பரிசுப் போட்டியில் 50 சிறந்த போட்டியாளர்கள்பட்டியலில் இரண்டு இந்திய ஆசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனைச் சேர்ந்த வர்கி அறக்கட்டளையும், யுனெஸ்கோவும் இணைந்து சர்வதேச ஆசிரியர் பரிசை ஆண்டு தோறும் அளித்து வருகின்றன. இதில் வெற்றி பெறும் ஆசிரியருக்கு 7.50 கோடி ரூபாய் பரிசு தொகையுடன் விருதும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டுக்கான சர்வதேச ஆசிரியர் பரிசை, மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ரஞ்சித் சின்ஹ் திசால் என்பவர் வென்றார்.இந்த ஆண்டுக்கான அறிவிப்பு வெளியானதும் 121 நாடுகளில் இருந்து 8,000 ஆசிரியர்கள் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து 50 சிறந்த ஆசிரியர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், பீஹாரின் பாகல்பூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் சத்யம் மிஷ்ரா மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர் மேக்னா முசுனுரி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவை தவிர சர்வதேச மாணவருக்கான பரிசு போட்டியில் புதுடில்லி, குஜராத், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்த நான்கு மாணவர்கள்'டாப் 50' பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.சிறந்த ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான 'டாப் 10' பட்டியல் அடுத்த மாதம் வெளியிடப்படும். அதில் இருந்து சிறந்த ஆசிரியர், மாணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பரிசு அளிக்கப்படும்.

= = = =

நந்திதா அருண் : 

பெருமூச்செறிந்து, உள்ளங்கை தேய்த்து, உடல் இறுக்கி ஒருவர்பின் ஒருவராக பளு துாக்கி இறக்க, தொழில்முறை பளு துாக்கும் வீராங்கனை அல்லாத நந்திதா அருண் மேடையேறுகிறார்; வாகை சூடுகிறார். குழுமியிருந்தோரின் புருவங்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன. காரணம்... இவர் மருத்துவர்!


'இந்தியன் பவர்லிப்டிங் பெடரேஷன்' 2021 பிப்ரவரியில் நடத்திய, 'சென்னை மாவட்ட பவர்லிப்டிங் சாம்பியன்ஷிப் டோர்னமென்ட்' அது! பெண்களுக்கான 57 கிலோ எடைப்பிரிவு 'டெட்லிப்ட்'டில் 82.5 கிலோ துாக்கியதால் தங்கம் கிடைத்தது; 'ஸ்குவாட் மற்றும் பெஞ்ச் பிரஸ்' பிரிவில் 172.5 கிலோ துாக்கியதால் வெள்ளி பதக்கம் வசமானது!

பெண்ணின் எப்பருவம் வரம் நந்திதா?பிறந்து வளர்றப்போ வீட்டுக்கு வரமானேன்; திருமணமானதும் கணவருக்கு வரமானேன்; மகள் பிறந்ததும் அவளுக்கு வரமானேன்; இப்போ, என் பொண்ணு எங்களுக்கு அழகான வரமா நிற்கிறா!

தனக்கான வாழ்க்கையை வாழாத பெண் வாழ்க்கை எப்படி வரமாகும்?உண்மைதான்; தன்னை சார்ந்திருக்கிறவங்களுக்கு ஒரு பிரச்னைன்னா தவிச்சுப் போற பெண், தன் உடல்நலனை கவனிச்சுக்கிறதில்லை. 'நோயில பெண் படுத்துட்டா குடும்பத்தோட ஆரோக்கியம் கெட்டுப் போகும். பல்வேறு படிநிலைகளை சந்திக்கிற பெண் உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்! என்கிட்டே சிகிச்சைக்கு வர்ற பெண்களுக்கு தாய்மை உணர்வோட நான் தவறாம சொல்ற அறிவுரை இது!

சென்னை ஆழ்வார்பேட்டையை வாழ்விடமாகக் கொண்ட நந்திதா அருண், தனியார் மருத்துவமனையில் நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவராக செயல்படுகிறார். மருத்துவரான கணவர் அருண் தோள் கொடுக்கிறார்.

'இந்த நிலை மாறணும்' - எதை குறிப்பிடுவீர்கள்?நீரிழிவு நோய் தொடர்பா 2006 மற்றும் 2016ம் ஆண்டுகள்ல நாங்க பண்ணின ஆராய்ச்சி முடிவு... ரத்த அழுத்தம், உடல் பருமன் பிரச்னை ஆண்களைவிட பெண்களுக்கு பலமடங்கு அதிகரிச்சிருக்குன்னு சொல்லுது; இந்த நிலை மாறணும்.

மனம் - மூளை; இரண்டில் எதன் பேச்சை நந்திதா கேட்பார்?'இன்னைக்கு உடற்பயிற்சி வேண்டாமே'ன்னு மனசு சொல்றப்போ மூளை சொல்றதை கேட்பேன்; அதனாலதான், என்னைத்தேடி வர்ற நோயாளிகள்கிட்டே குற்ற உணர்வில்லாம என்னால பேச முடியுது. 'உழைச்சது போதும்'னு மூளை சொல்றப்போ, 'உனக்காக காத்திருக்கிறவங்க நிறைய பேர்'னு மனசு சொல்றதை கேட்குறேன்; அதனாலதான் திருப்தியா என்னால துாங்க முடியுது!

உங்களின் உடல் வலிமையை நிரூபிக்க வேண்டிய அவசியம்? 'நம்மால் எல்லாம் முடியும்'ங்கிற தன்னம்பிக்கை எல்லா பெண்களுக்கும் என்னால வரணும்.
 
= = = =

19 கருத்துகள்:

 1. கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு மாடல்ல மற்றை யவை..

  குறள் நெறி வாழ்க...

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
  இறையருள் சூழ்க எங்கெங்கும்...

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்..

  பதிலளிநீக்கு
 3. ​தற்கொலைகள் என்ற கறை படிந்த IIT சென்னை கல்வி நிறுவனங்களில் முதல் இடம் அடைந்த ​பாசிட்டிவ் செய்தி பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திரு(த்)ந்தி விட்டார்களோ என்னவோ...!

   நீக்கு
  2. Incompetentsதான் தற்கொலை பண்ணிக்கொள்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்கும் கலவி நிறுவனத்தின் efficiencyக்கும் சம்பந்தமில்லை

   நீக்கு
 4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியமும், மன மகிழ்ச்சியும் மேலோங்கப் பிரார்த்திப்போம்.

  பதிலளிநீக்கு
 5. கடைசி இரு செய்திகள் புதியவை. முதலிரண்டும் செய்தித்தாள்களில் வந்தவை. அனைத்து நல்ல செய்திகளுக்கும் நன்றி.
  இன்று மஹாகவி பாரதியாரின் நினைவு நாள் அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் திரு ஹரிகிருஷ்ணன் முகநூலில் தெரிவித்திருக்கிறார். அரசுக்கும் இதற்கு முனைந்து செயல்பட்டவர்களுக்கும் மனமார்ந்த நன்றி. மஹாகவிக்கு மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவிப்போம்.

  பதிலளிநீக்கு
 6. சர்வதேச சிறந்த மாணவர்களில் ஒருவர்கூட தமிழகத்தில் இல்லை. சிறந்த ஆசிரியர்கள் தமிழகத்தில் இல்லாதபோது மாணவர்கள் மட்டும் எங்கேயிருந்து வருவாங்க?

  தெலுங்கானாவைச் சேர்ந்த ஒருவர் சர்வதேச சிறந்த ஆசிரியர் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

  பதிலளிநீக்கு
 7. அனைத்தும் நற்செய்திகள். அவர்களுக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. 'நோயில பெண் படுத்துட்டா குடும்பத்தோட ஆரோக்கியம் கெட்டுப் போகும். பல்வேறு படிநிலைகளை சந்திக்கிற பெண் உடலுக்கு உடற்பயிற்சி அவசியம்! என்கிட்டே சிகிச்சைக்கு வர்ற பெண்களுக்கு தாய்மை உணர்வோட நான் தவறாம சொல்ற அறிவுரை இது!//

  நந்திதா சூப்பர்!!! அட நீரிழிவு நோய் சிறப்பு மருத்துவர்!!

  பீஹாரின் பாகல்பூரைச் சேர்ந்த கணித ஆசிரியர் சத்யம் மிஷ்ரா மற்றும் தெலுங்கானாவின் ஐதராபாதை சேர்ந்த ஆங்கிலம் மற்றும் கணித ஆசிரியர் மேக்னா முசுனுரி //

  வாழ்த்துகளும் பாராட்டுகளும் சொல்லிக் கொள்வோம்.

  அனைத்துச் செய்திகளும் சிறப்பு

  கீதா

  பதிலளிநீக்கு
 9. செய்திகள் எல்லாம் அருமை.
  '//நம்மால் எல்லாம் முடியும்'ங்கிற தன்னம்பிக்கை எல்லா பெண்களுக்கும் என்னால வரணும்.//
  கடைசி செய்தி மனம் கவர்ந்தார் மருத்துவர் நந்திதா.

  //பெண்ணின் எப்பருவம் வரம் நந்திதா?பிறந்து வளர்றப்போ வீட்டுக்கு வரமானேன்; திருமணமானதும் கணவருக்கு வரமானேன்; மகள் பிறந்ததும் அவளுக்கு வரமானேன்; இப்போ, என் பொண்ணு எங்களுக்கு அழகான வரமா நிற்கிறா!//
  அழகாய் சொன்னார்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!