செவ்வாய், 21 செப்டம்பர், 2021

சிறுகதை - உபகாரம் - ஷ்யாமளா வெங்கட்ராமன் 

Study room இல் படித்துக் கொண்டிருந்த வர்ஷா வேகமாக வெளியே வந்து ஹாலில் இருந்த போனை எடுத்துக் கொண்டு தோட்டத்தில் இருந்த அம்மாவை கூப்பிட்டாள். அம்மாவிடம் "எவ்வளவு நேரமா போன் அடிக்கிறது காதில் விழவில்லையா?" என்று கேட்டாள்.


"இல்லடி. நான் பூப்பறிக்கத் தோட்டத்துக்கு வந்தேன். இன்று சங்கடஹர சதுர்த்தி! 'என்று சுமதி கூறினாள். போனை  வர்ஷாவிடமிருந்து வாங்கி மிஸ்டுகாலில் யார் போன் பண்ணினார்கள் என்று பார்த்தாள். 

அவளுடன் வேலை பார்த்த ஆனந்திதான்! எதற்கு இவ்வளவு தரம் பண்ணி இருக்கிறாள்? என்று யோசனை பண்ணிக்கொண்டு அவளுக்கு போன் பண்ணினாள். 

போனை எடுத்த ஆனந்தி இடம் "என்ன இத்தனை போன் பண்ணி இருக் கே? என்ன விஷயம் 'என் று சுமதி கேட்க.... சுமதி.... "சௌந்தர்யா போன் பண்ணினாள்.. உன்னை லேண்ட் லைனில் பலமுறை கூப்பிட்டாலும் நீ எடுக்கவில்லையாம். நீ இந்தியாவில் இருக்கிறாயா? UKபோய் இருக்கிறாயா?" என்று கேட்டாள். அதான் உனக்கு போன் பண்ணி விஷயத்தை சொல்லலாம் என்று நினைத்தேன்.

"ஆமாம் சௌந்தர்யா எங்கே இருக்கிறாளாம்?" என்று சுமதி கேட்க....

"அவளுக்கு என்ன? இன்று ஒரு நாடு நாளைக்கு ஒரு நாடு என்று போவதற்கு உலகம் முழுவதும் உள்ள எல்லா நாட்டிலும் அவளுடைய பிள்ளைகளும் பெண்ணும் இருக்கிறார்கள். அவள் கொடுத்து வைத்தவள். நானும் இருக்கேனே? சென்னையை தாண்டி செங்கல்பட்டு கூட போனதில்லை "என்று அலுத்து கொண்டாள் ஆனந்தி!

”ஆமாம்! இக்கரைக்கு அக்கரை பச்சைதான். சௌந்தர்யா அவள் கணவனிடம் படும்பாடுதான் நமக்கு தெரியுமே! சரியான பிடுங்கல்! அந்த மனுஷரிடம் சௌந்தர்யாவால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும். அவருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அதே குணம். கொஞ்சம்கூட மாறவில்லை. பாவம் சௌந்தர்யா!! 'என்று கூறிவிட்டு "அடுத்த தடவை போன் பண்ணினால் என் மொபைல் நம்பரை கொடு
 என் லேண்ட்லைனை சரண்டர் செய்து விட்டேன் என்று கூறு " என்று சொல்லி போனை 'கட்' செய்தாள்.

மனம்தான் ஒரு குரங்கு ஆச்சே! அது பழைய நினைவுகளை அசை போட ஆரம்பித்தது. 60 வருடங்களுக்கு முன் சுமதி வேளாங்கண்ணி பள்ளியில் நான்காம் வகுப்பு ஆசிரியையாக பணியாற்றிக்கொண்டு இருந்தாள். அவளிடம் சௌந்தர்யாவின் பையன் படித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் சௌந்தர்யா வகுப்பிற்கு வந்தாள். "சுமதி என் பையனை இப்பள்ளியில் இருந்து TC வாங்கி எங்கள் அம்மாவின் ஊரில் சேர்க்கப் போகிறேன் அதற்காக உங்கள் தலைமை ஆசிரியையைப் பார்க்க வந்தேன். அவர்கள் பள்ளியில் இல்லை. நீ அவர்களிடம் சிபாரிசு செய்து சீக்கிரம் வாங்கித் தா" என்று கூறி சென்றாள்.

மறுநாள் சௌந்தர்யாவின் கணவர் வந்து "எனக்கும் சௌந்தர்யாவுக்கும் குடும்பத்தில்சிறு மனஸ்தாபம்.  அதனால் விவாகரத்து கோருகிறாள். குழந்தையை என்னிடம் இருந்து பிரித்துச் சென்றால்தான் விவாகரத்து கிடைக்கும். என்னால் குழந்தையையும் சௌந்தர்யாவையும் பிரிந்து இருக்க முடியாது.. எனவே குழந்தையின் டிசி கொடுக்காதீர்கள் "என்று அழாத குறையாக கூறிச் சென்றார்.

சுமதிவீட்டிற்குச் சென்றதும் அவர் கூறிய வார்த்தையே திரும்பத் திரும்ப அவள் காதில் ஒலித்தது.  

அவள் அம்மா "ஏன் ஒரு மாதிரியாய் இருக்கிறாய். ?பள்ளியில் ஏதாவது தகராறா?" என்று கேட்டார்கள். 

சுமதி பள்ளியில் நடந்த விஷயத்தைக் கூறினாள். 

அம்மா,  "இருவரை சேர்த்து திருமணம் செய்து வைப்பதுதான் கடினம். பிரிப்பது என்பது ஒரு நொடியில் முடிந்துவிடும். எனவே உன் தலைமையாசிரிடம் சொல்லி TC கொடுப்பதை தாமதம் ஆக்க செய். அதற்குள் அவர்கள் சமாதானமாக  ஒன்றாக சேர வாய்ப்பு உண்டு "என்று கூறினார்கள். 

சுமதி தலைமையாசிரியரிடம் தன் அம்மா கூறியதை கூறினாள். அவர்களும் 'அதுதான் சரி' என்று கூறினார்கள்.  

நாட்கள் கடந்தன. என்ன ஆச்சரியம்!! ஒருநாள் இருவரும் தலைமையாசிரியரிடம் வந்தார்கள். 'பையன் இந்தப் பள்ளியிலேயே படிக்கட்டும். நாங்கள் இருவரும் விவாகரத்தை தள்ளுபடி செய்து விட்டோம் சேர்ந்து வாழப் போகிறோம்' என்று சந்தோஷமாக கூறினார்கள்.

சில வருடங்களில் சௌந்தர்யா அதே ஊரில் வேறு ஒரு பள்ளியில் ஆசிரியையாக அமர்ந்தார் . ஆண்டுகள் உருண்டு ஓடின. இருவருக்கும் அவ்பொழுது தகராறுகள் வரும்.  

அதை சுமதியிடம் வந்து சொல்வாள். அவர்களுக்கு அடுத்தடுத்து இரண்டு ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் குழந்தையும் பிறந்தது..

குழந்தைகளும் மிக நன்றாகப் படித்து மிகப்பெரிய பதவிகளில் US, UK, Japan, Germany, ஆகிய நாடுகளில் இருந்தனர். அனைவருக்கும் திருமணமாகி குழந்தைகளுடன் வசதியாக உள்ளனர். சவுந்தர்யாவின் குழந்தைகள் அம்மாவை உள்ளங்கையில் வைத்துத் தாங்குகிறார்கள். சௌந்தர்யாவும் அனைத்துக் குழந்தைகளிடமும் மாறி மாறி சென்று  இருந்து வருகிறாள்.

சௌந்தர்யாவும் அவள் கணவரும் சுமதியை பார்க்கும்போதெல்லாம்" நீ செய்த உபகாரத்தால்தான் நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் மிக வசதியாக சந்தோஷமாக வாழ்கிறோம் "என்று கூறுவார்கள்.

அவர்கள் வீட்டில் எந்த விசேஷம் என்றாலும் முதல் பத்திரிக்கை சுமதிக்கு தான் என்பது எழுதப்படாத விதி ஆயிற்று.  ஒரு சிறிய ஆல  விதை எப்படி ஒரு பெரிய ஆலமரத்தை உண்டாக்குகிறது. அதுபோல சுமதிசெய்த சிறு உதவி ஒரு பெரிய குடும்பம் உருவாவதற்கு அஸ்திவாரம் ஆயிற்று!!!

= = = = =

29 கருத்துகள்:

  1. எல்லோருக்கும் காலை வணக்கம்.

    கதையின் மையக் கரு நன்றாக இருக்கிறது. கதாசிரியருக்கு வாழ்த்துகள்.

    கீதா

    பதிலளிநீக்கு
  2. சௌந்தர்யா அவள் கணவனிடம் படும்பாடுதான் நமக்கு தெரியுமே! சரியான பிடுங்கல்! அந்த மனுஷரிடம் சௌந்தர்யாவால் மட்டுமே குடும்பம் நடத்த முடியும். அவருக்கு 90 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. இன்னும் அதே குணம். கொஞ்சம்கூட மாறவில்லை. பாவம் சௌந்தர்யா!! //

    சௌந்தர்யா முதலில் கஷ்டப்பட்டாள் என்பது தெரிகிறது ஆனால் அதன் பின் அவளும் கணவனும் சேர்ந்து நன்றாக இருப்பதாகவும் குழந்தைகள் அவளைத் தாங்குவதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. அவளும் குழந்தைகளிடம் மாறி மாறிச்சென்று இருப்பதாகத் தெரிகிறது.

    இந்த வரிகளுக்கான விஷயங்களைக் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ! அழுத்தமாக?

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த வரிகளுக்கான விஷயங்களைக் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ! அழுத்தமாக?

      கீதா

      நீக்கு
    2. அதாவது கோட் செய்த வரிகள் என்பதை அடிக்கும் முன் கருத்து வெளியாகிவிட்டது.

      நீக்கு ஆப்ஷனைக் காணவில்லையே!!! கருத்தை நீக்கிப் புதிதாகப் போடுவது...

      கீதா

      நீக்கு
    3. 90 டைப்போ எரர் என்று தோன்றுகிறது. சரியா? ஷ்யாமளாக்கா?

      காலையில் கருத்து போட வந்தும் அப்புறம் கருத்து போவதில் சிரமம் இருந்ததால் பதிந்த கருத்து வரவில்லை என்று தெரிந்தது...

      கௌ அண்ணா வரைந்த படம்!! வாவ்! நன்றாக இருக்கிறது அண்ணா. உங்கள் பெயரை படத்தில் பதியுங்களேன்.

      கீதா

      நீக்கு
    4. வெட்டு, ஒட்டு முறையில் தயாரித்த படம் என்பதால், பெயரைப் போடவில்லை!

      நீக்கு
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

    எல்லோரும் என்னாட்களும் ஆரோக்கியம் அமைதியோடு
    இருக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. நல்ல கருத்துள்ள கதை.
    வயது கொஞ்சம் இடிக்கிறதோ.

    பதிலளிநீக்கு
  5. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்

    பதிலளிநீக்கு
  6. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.. இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்...

    பதிலளிநீக்கு
  7. //அம்மா, "இருவரை சேர்த்து திருமணம் செய்து வைப்பதுதான் கடினம். பிரிப்பது என்பது ஒரு நொடியில் முடிந்துவிடும். எனவே உன் தலைமையாசிரிடம் சொல்லி TC கொடுப்பதை தாமதம் ஆக்க செய். அதற்குள் அவர்கள் சமாதானமாக ஒன்றாக சேர வாய்ப்பு உண்டு "//

    சுமதியின் அம்மாவை பாராட்டவேண்டும். அவர்கள்தான் நல்ல யோசனை சொன்னார்கள் சுமதிக்கு.


    பதிலளிநீக்கு
  8. கதைக்கு பொருத்தமாய் கெளதமன் சார் படம் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெருகட்டும்.

    பதிலளிநீக்கு
  10. திருமதி சியாமளா வெங்கட்ராமன் கண்களில் ரெடினா மாற்று அறுவை சிகிச்சை முடிந்து நல்லபடியாகக் குணமடைந்து வருவதைக் கண்டு மகிழ்ச்சி. அவர் ஆரோக்கியத்துக்குப் பிரார்த்தனைகள். மத்யமரிலும் அவருடைய பதிவு பார்த்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எனக்கு சென்ற மாதம் 18 தேதி கார்னியா மாற்று அறுவை சிகிச்சை நடந்தது தற்போது குணமடைந்து வருகிறேன் உங்களுடைய பிரார்த்தனைக்கு மிக்க நன்றி

      நீக்கு
  11. சௌந்தர்யாவின் கணவரின் வயது 90? புரியலை. இந்த வயசில் மனைவி தெம்பாக இருந்தாளெனில் அவள் உதவி தேவைப்படுமே! அதோடு சௌந்தர்யா ஒவ்வொரு நாட்டுக்கும் போவது எனில் கணவரோடு போவதாகத் தான் கடைசியில் சொல்லி இருக்கீங்க. இத்தனை வருஷங்கள் ஆகியும் கணவர் படுத்தினாரெனில் எப்படி அவரோடு சந்தோஷமாகப் போக முடியும்? அதை சுமதியிடமும் சொல்ல முடியும்? புரியலை. அதோடு கதைக்கரு முக்கியமான விஷயத்தைத் தொடாமல் நழுவி விட்டதோ? கதை அரைகுறையாகப் பூர்த்தி ஆனாற்போல் உள்ளது. சொல்ல வந்த விஷயத்தைச் சரியாகச் சொல்லவில்லையோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெண்களுக்கு ஒரு வயது வரை தான் தன்னைப் பற்றியும் தன் ஈகோ பற்றியும் நினைக்கத்தோன்றும் குழந்தைகள் வளர வளர அவர்களுடைய வளர்ச்சியும் அவர்களுடைய அன்பும் பெரிதாகத் தோன்றும் அதற்கு முன் மற்றவையெல்லாம் தூசு போன்று உதறி தள்ளி விடுவார்கள் அதுதான் தாயின் இயல்பு

      நீக்கு
    2. சியாமளாக்கா இந்தக் கருத்து மிகமிகச் சரியே. டிட்டோ செய்கிறேன்.

      என்னவென்றால் இன்னும் கொஞ்சம் சொல்லியிருக்கலாமோ என்று தோன்றியது அவ்வளவே. உங்கள் கதையின் மையக்கருத்து நல்ல கருத்து!. அதுவும் சுமதியின் அம்மா சொன்னவை ரொம்ப நல்ல விஷயம்...

      கீதா

      நீக்கு
  12. இன்னும் கொஞ்சம் மையக்கருத்தின் போக்கில் எழுதி இருக்கலாமோ..

    பதிலளிநீக்கு
  13. சிறு உதவிதான் பெரிய நன்மையை கொடுத்தது.

    பதிலளிநீக்கு
  14. கணவர் படுத்தினார்என்றல் சில நச்சரிப்பு தொணதொணப்பு போன்றவைகள் சிலருக்கு எந்த வயதிலும் போகாது அவருக்கு 90 வயது ஆகியும் அந்த பழக்கம் போறதில்லை இவர்கள் இருவரும் குழந்தைகளின் அன்பினால் வாழ்ந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை

    பதிலளிநீக்கு
  15. அனைவருக்கும் அன்பான மதிய வணக்கங்கள்.

    கதை நன்றாக உள்ளது. ஒரு குடும்பம் பிரியாமலிருக்க செய்த உபகாரம் சிறப்பானது. அதனால் அவர்கள் இன்றுவரை நல்லமுறையில் வாழ்ந்து வருகிறார்கள் என அறியும் போது, உபகாரம் செய்தவர்களுக்கும் மனஅமைதி கிட்டும். அருமையான கதையை தந்த சகோதரிக்கு பாராட்டுகள், நன்றிகள்.

    கதைக்கு பொருத்தமாக அழகான இயற்கை முறையில் தோட்டத்துடன் படம் வரைந்த கெளதமன் சகோதரருக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  16. கதையும் கதையின் கருத்தும் நன்றாக இருக்கிறது.

    //"இருவரை சேர்த்து திருமணம் செய்து வைப்பதுதான் கடினம். பிரிப்பது என்பது ஒரு நொடியில் முடிந்துவிடும். எனவே உன் தலைமையாசிரிடம் சொல்லி TC கொடுப்பதை தாமதம் ஆக்க செய். அதற்குள் அவர்கள் சமாதானமாக ஒன்றாக சேர வாய்ப்பு உண்டு "//

    சிறந்த வரிகள். இப்படித்தானே விவாகரத்து கேஸ்களிலும் கூடப் பிரிந்து இருக்கச் சொல்லும் போது கால அவகாசம் கிடைக்கும் போது மனம் மாற வழியுண்டு என்பதால். இடைப்பட்ட காலத்தில் மனம் மாறிச் சேர்ந்தவர்களும் உண்டுதான்.

    கதாசிரியர் சகோதரி ஷ்யாமளா வெங்கட்ராமன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  17. சுமதியின் அம்மா நல்ல யோசனை கூறினார்கள். காலதாமதம் அவர்கள் ஒற்றுமையயாவதற்கு வழி தந்திருக்கிறது.

    பதிலளிநீக்கு
  18. நல்ல கதை.. கதைக்கான படம் அழகு..

    வாழ்க நலம்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!