வியாழன், 2 செப்டம்பர், 2021

இன்றுடன் முடிவதில்லை..

 ஒருநாள் அந்தப் பெரியவர் ஸ்ரீயைப் பார்க்க வந்தார். விசாரித்துக் கொண்டே வந்த பெரியவரை யார் என்று தெரியாததால் ஸ்ரீயின் அம்மாவிடம் அழைத்து வந்தார் திருமதி ஸ்ரீ.

அம்மா அவரை ஓரளவு அடையாளம் கண்டுகொண்டார்.  சற்றே தூரத்து உறவு.  தாயாதி உறவு.  பார்த்து நெடுநாள் ஆச்சு..

"நீங்க...."

வந்தவர் தன் உறவுமுறையை நீளமாகச் சொன்னார்.

"இந்த ஊரிலா இருக்கீங்க..."  அம்மா கேட்டார்.

"இல்லை..  நான் மதுரைல இருக்கேன்.  எனக்கு 'இப்படி உறவுப் பையன் ஒருத்தன் உடம்பு சரியில்லாம கிடக்கான்' என்று தாக்கல் வந்ததது...   அதான்.. "

"யார் சொன்னா.."

"அவுங்கதான்...  கனவுல வந்தது...  பொய்யெல்லாம் சொல்லமாட்டாங்க..  அங்கங்கே விசாரிச்சேன்..  விவரம் தெரிஞ்சுது.. ..  விவரம்லாம் விசாரிச்சுக்கிட்டு வந்து சேர ஒரு வாரமாயிட்டுது..  'கவலைப்படாதே..  நான் பார்த்துக்கறேன்... அதுவரை ஒண்ணும் ஆகாது'ன்னாங்க..."

"அதான் யாரு...?

"யாரு ஏதோ ஒரு ரூபத்துல வந்து தலைமுறை தலைமுறையா நம்ம குடும்பத்தைப் பார்த்துக்கறாங்களோ அவுங்கதான்.   கிராமத்துல சொத்தை சமீபத்துல பிரிச்சீங்களா? .."

"ஆமாம்..  சமீபத்துல இல்லை, அது கிடக்குமே ஒரு வருஷத்துக்கு மேல..  அவுங்களா  தாக்கல் வுட்டாங்க?  அம்மா...  தாயே"  அம்மா கண்களை மேலே உயர்த்தி தாவாங்கட்டையைத் தொட்டுக்கொண்டார்.

"அதனால வந்த விரோதம்தான்.  சொத்து மேல ஆசை..  இந்தாங்க இந்த எலுமிச்சம்பழத்தைப் பிழிஞ்சு அவனுக்கு கொடுங்க..   இந்த விபூதியை நெற்றில பூசி விடுங்க...  இன்னிக்கி என்ன செவ்வாய்க்கிழமையா?  வர்ற வெள்ளிக்கிழமை பையனையும் அழைச்சுக்கிட்டு தோப்புக்கு வந்து பாருங்க..  தோப்பு எங்க இருக்குன்னு நீங்க தங்கற இடத்துல கேட்டா சொல்வாங்க"

"ஐயா...  நீங்க சொல்றதெல்லாம் எப்படி நடக்கும்?  நினைவில்லாம கிடக்கான் புள்ள.."

"நாளைக்கு ராத்திரி வீடு வந்துடுவீங்க...  வியாழன் ரெஸ்ட் எடுங்க..  வெள்ளிக்கிழமை வெத்தல பாக்கு பழத்தோட ஒரு ரூவா காசு வச்சு எடுத்துட்டு வாங்க...  குங்குமம் ஒரு பாக்கெட் தனியா வாங்கி வச்சுக்குங்க... வேற யார் கிட்டயும் ஒண்ணும் சொல்லிக்க வேணாம்.."

சென்று விட்டார்.

அங்கிருந்த நர்ஸ் புதிருடன் பார்த்துக் கொண்டிருந்தாலும், தடையேதும் சொல்லவில்லை.

அம்மா "எது கொடுத்தாலும் வாந்தியா வெளில வந்துடுது..  தங்கவே மாட்டேங்குது..  அம்மா.. தாயே..  காப்பாத்து.." என்று தனக்குள் முனகியபடியே விபூதியை அவன் நெற்றியில் இட்டுவிட்டு, எலுமிச்சம்பழத்தைப் பிழிந்து "தண்ணி, சர்க்கரை, உப்பு சேர்க்கலாமான்னு தெரியலியே...அப்படியே எப்படி சாப்பிடுவான் புள்ள" என்று தனக்குள் அரற்றியபடியே கொஞ்சம் தண்ணீர் மட்டும் சேர்த்து ஸ்ரீ வாயில் புகட்டி விட்டார்.  சற்றுநேரம் பதட்டத்துடன் காத்திருந்தார்.  வெளியே வரவில்லை.

கொடுக்க வேண்டிய மருந்துகளை நேரப்படி கொடுத்தாலும், அம்மாவின் செயல்களை ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார் அந்த நர்ஸ்.

ஒருமணிநேரம் கழித்து சற்றே தைரியத்துடன் கஞ்சி கொடுத்தார்.  மாலை இரண்டு ஆரஞ்சுப் பழங்களை எடுத்துப் பிழிந்து கொடுத்தார்கள், மனைவியும், அம்மாவும்.  உடம்பு எதிர்க்கவில்லை.  உள்வாங்கி கொண்டது.  அன்று இரவு இட்லி வாங்கி கொடுத்தார்.  மறுநாள் இடியாப்பம் வாங்கி சர்க்கரை தொட்டு சாப்பிடக் கொடுத்தார்.  

எலுமிச்சம்பழ சாறு உள் சென்றதிலிருந்தே ஸ்ரீயிடமிருந்து மயக்க நிலை அகன்றிருந்தது.  கண்விழித்தபடி படுத்திருந்தான்.  

மதியத்துக்குமேல் விசிட் வந்த மருத்துவர்கள், வியப்பைக் காட்டிக் கொள்ளாமல் இவர்கள் வேண்டுகோளின்பேரில் அன்று மாலை டிஸ்சார்ஜுக்கு எழுதி கொடுத்தார்கள்.

மாலை டிஸ்சார்ஜ் ஆகி வீடு வந்தாலும் சோர்ந்தே  காணப்பட்டான் ஸ்ரீ.  தூங்கிக் கொண்டே இருந்தான்.  

மனம் முழுக்க 'அம்மா' வியாபித்திருக்க, துணிந்து சத்துள்ள ஆகாரங்கள் கொடுத்தார் அம்மா. ஒன்றும் ஆகவில்லை.  உடம்பு ஏற்றுக் கொண்டது.  மறுநாள் முழுவதும் கூட பெரும்பாலான நேரம் படுத்துக் கொண்டே இருந்தான்.  அவன் அம்மா அவனிடம் அதுவரை நடந்ததை எல்லாம் மெதுவாய்ச் சொல்லி, மறுநாள் வெள்ளிக்கிழமை தோப்புக்குப் போகவேண்டும் என்றும் சொன்னார்.  களைப்புடன் பார்த்த ஸ்ரீயிடம் 'நாம் அங்கு போவதற்கு வண்டி ஏற்பாடு செய்கிறேன்' என்றும் சொன்னார்.

மறுநாள் பொழுது விடிந்தது. 

இதுவரை குறுக்கிடாமல் அவன் சொல்வதை என் மனக்கண்ணால் பார்த்தபடி கேட்டுக்கொண்டிருந்த நான் இப்போது ஆர்வம் தாளாமல் ஸ்ரீயிடம் கேட்டேன்...  

"அவுக, அம்மா என்றெல்லாம் சொல்றியே..  யாரு ஸ்ரீ அது?"

"நானே சொல்ல மாட்டேனா ஸார்...  அவசரப்படறீங்களே...  தெரியாமலா இருக்கப் போகுது?"

"அட, இப்பவேதான் சொல்லேன்.."

"அந்தந்த இடம் வரும்போது தெரியட்டும்னு நெனச்சேன் ஸார்..   கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்..."

=======================================================================================================

ஒரு வங்காள நாவலின் முன்னுரையிலிருந்து உருவப்பட்ட சில பகுதிகள்...

உண்மையில் வடமொழி இலக்கியம் படைக்கப்பட்டதன் நோக்கம், மனிதன் மற்ற பிராணிகளின் உலகத்தை அடக்கி ஆள்வதற்காக படைக்கப்பட்டவன் அல்ல என்பதை உணர்த்துவதற்காகததான்.  அதே நேரத்தில் இயற்கையுடன் ஆத்மபூர்வமாக ஒன்றுவதன் மூலமே மனிதன் முழுமை பெறுகிறான் என்பதை வலியுறுத்துவதற்காகவுமே எனலாம்.  காளிதாசனின் கவிதையில் ஆஸ்ரமத்தைத் தவிர வேறெங்கும் சாகுந்தலையைக் கற்பனை செய்து பார்க்க முடியாது.  வடமொழி இலக்கியங்களில் நாம் கேட்பது வேட்டைக்காரர்கள் வெறியோசை அல்ல, மிருகங்கள், பறவைகள் ஒலிகள்தான்.  பாரதத்தின் பண்பாடு பல இனங்களையும் பல மதங்களையும் சார்ந்ததாக இருந்தாலும் அது அடிப்படையில் ஒன்றாக இருப்பதற்கு காரணம் இந்த பாரம்பரிய வெளிப்பாடுதான்.

வங்காள வசன இலக்கியத்துக்கு முன்னோடி 1833 வரை வாழ்ந்த ராஜாராம் மோகன்ராய்.  சுதந்திர உணர்வை நாவலில் நுழைத்த பெருமை 'வந்தேமாதரம்' படைத்த பங்கிம் சந்திரரைச் சேரும்.  அவர் மதவெறி கொண்டவர் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.  ஆனால் அவர் மத வேறுபாடின்றி இந்து-முஸ்லீம் உழவர்கள் மேல் தன் அன்பை தாராளமாக பொழிந்திருப்பது அவரது "ஸாம்ய" (1879) கட்டுரைத் தொகுப்பிலிருந்து தெளிவாகும்.

காந்திஜி குருதேவர் என்று அழைத்த ரவீந்திரநாத் தாகூர் தனது நாவல் 'நௌகாடூபி' பற்றி பிற்காலத்தில் சொல்லும்போது "இந்தக் காலத்தில் நாவல்களில் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் குறைந்து உள்ளப் போராட்டங்களே முக்கியத்துவம் பெற்றுவிட்டன" என்கிறார்.  அவர் 1910 ல் எழுதிய 'கொரா', 1916 ல் எழுதிய 'கோரே பாயிரே' போன்ற நாவல்களில் சுதேசி இயக்கம் குறுகிய இனவெறியாக ஆவதைக் கண்டித்தார்.  1934 ல் எழுதிய 'சார் அத்யாய்' நாவலில் அரசியல் நடைமுறை மனிதனின் குணங்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைத் தெளிவாகக் காட்டினார்.  ஆனால் ரவீந்திரரின் படைப்புகளில் சிந்தனைக்குரிய கருத்துகள் வலுவில் திணிக்கப்படவில்லை.  அவை பாத்திரங்களின், அனுபவங்களின் வெளிப்பாடாக அவர்களுடைய பேச்சு வார்த்தைகளின் மூலமாக உருப்பெறுகின்றன.

சமூகத்தில் தாழ்த்தப் பட்டவர்களின் கதையை முதல் முதலாக எழுதியவர் சரத்சந்திரர்.  'ஸ்ரீகாந்தன்' நாவலில் நான்கு பாகங்களாய் அவர் எழுதி இருப்பதை தாகூரே பாராட்டுகிறார்.  கணவனை இழந்த பெண்ணும், சுமங்கலியும் பரபுருஷனைக் காதலிப்பது போன்ற சிக்கலான விஷயங்களைக் கூட (பள்ளி சமாஜ் - 1916, கிருகதாஹ் -1920) சரத்சந்திரர் பரிவு ததும்ப வர்ணித்திருக்கிறார்.   "குறை, குற்றம் பாவம் இவை மாத்திரமே மனிதனின் முழுமையான உருவம் ஆகிவிடாது.  இவற்றுக்குள்ளே அசல் மனிதன் இருக்கிறான்.  இதை ஆத்மா என்றும் சொல்லலாம்.  அவன் அந்தக் குறைகளையும் குற்றங்களையும் கடந்து மேலே நிற்கிறான்" என்கிறார் சரத்சந்திரர்.  1923 முதல் 1929 வரியில் கல்லோல் பத்திரிகை வாயிலாக சரீர சம்பந்தப்பட்ட இச்சைகளும் வாழ்க்கையின் அடக்க முடியாத வேகமும் பற்றி எழுதியவர்கள் கல்லோல் குழுவினர் என்று அழைக்கப்பட்டனர்.

ஒரு வட்டாரத்துக்குரியதை உலகத்துக்கே பொதுவானதாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குரியதை எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாகவும் செய்வதில் இலக்கியத்துக்கு அலாதித் திறன்.

இயற்கையுடன் உறவு கொள்வதுதான் இந்தியக் கலையின் சிறப்பு ....

- ஒரு வங்காள நாவலுக்கான முன்னுரையில் நிகிலேஷ் குஹா -

==============================================================================================


இன்றுடன் முடிவதில்லை..

ஸ்ரீராம் 


இதோ முடிகிறது இந்த நாள்.. 
குறுகிய தெருக்கள் அடர்ந்த குப்பைகள் 
இரும்பு சாமான்கள் காலடியில்.. 
தகரங்கள் தலைக்கு மேலே 
ஓயாத சத்தம் கூச்சல் 
பிழைக்க வழிதேடி உழைப்பின் சத்தங்கள் 
யாரோ யாரையோ அழைத்துக்கொண்டே 
இருக்கிறார்கள் 
யாரோ யாரையோ வசைபாடிக் கொண்டே 
இருக்கிறார்கள்.
மண்ணெண்ணெய் கிரீஸ் மணங்களுக்கு நடுவே 
எண்ணெயில் தீயும் வடை பஜ்ஜியின் மணமும் கலந்தே 
வருகிறது 
காலி தேநீர்க் கோப்பைகள் 
ஒரு கையில், 
கயிற்றில் சுற்றிய பம்பரம் 
மறுகையில் என 
பால்யத்தை ஒரு கையிலும், 
வாழ்க்கைப்போராட்டத்தை 
மறு கையிலும் ஏந்தி 
தாண்டிச்செல்லும் தேநீர்ச் சிறுவன்..
சமோசாக்களுக்கும் மீன்களுக்கும் 
விசிறியபடி 
அதனதன் எதிரே ஆயாக்கள் 

தகரம் காலில் குத்தாமல் 
எதிரில் வருபவர் மேல் இடித்துக் கொள்ளாமல் 
நாலு இட்லி, கெட்டிச் சட்னி பார்சலுடன் 
தாண்டிச் செல்கிறேன். 
இட்டுக் கட்டிப் பாடும் இட்லிக்கடை ஆயாவிடம் 
சட்னியும் சுவை, சந்தமும் சுவை 
இதோ முனை திரும்பியதும் 
வரும் முட்டுச்சந்தில்தான் 
யாரோ என்றோ கைவிட்ட 
என் வீடு..
 
திரும்பியதும் 
அழகிய ஆற்றங்கரையையும், 
அங்கே சில மரங்களையும், 
நடுவில் என் வீடு என்றும், 
அங்கே எனக்காகக் காத்திருக்கும் 
ஒரு தேவதை
என்கிற கற்பனையையும் 
சேகரித்துக் கொண்டு 
வளைவு திரும்புகிறேன்.

முட்டுச்சந்தோடு 
முடிந்து விடுவதில்லை 
கனவுகளும் வாழ்க்கையும் 
நாளைக்காலை 
யதார்த்தம் எதிர்ப்படும் வரை 
கனவு காணலாம் 

========================================================================================================

மதன்... மதன்.. 


"சின்னப்பையனா இருக்கும்போது...!!"


காலம் அறிய கவாஸ்கர் பெயர்..

வீட்டுக்காரரா?  தோட்டக்காரரா?

=====================================================================================================

காசு கொடுத்து கரப்பான் பூச்சி!ஆச்சர்யமூட்டும் தகவல்...  நன்றி இணையம்...


115 கருத்துகள்:

 1. அனைவருக்கும் இனிய வியாழன் காலை வணக்கம்.
  எல்லோரும் என்றும் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டி
  இறை அருள வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வல்லிம்மா...  வணக்கம்.  சீக்கிரமே வந்தாச்சா?!

   நீக்கு
  2. வணக்கம்மா.
   மகனுடன் பேசிக்கொண்டிருந்தேன்.
   அப்படியே எ பி பக்கம் வந்தேன் மா

   நீக்கு
 2. அப்பாடி கண் முழித்துக் கொண்டார் ஸ்ரீ.
  ஒரே மர்மமாக இருக்கிறதே.
  அவர்கள் குலதெய்வம் அம்மா வாக இருக்குமோ.
  வீட்டில் வாழும் தெய்வமா.
  இது போல செய்வினை கேள்விப்பட்டிருக்கிறேன். கொடூரம்.

  நல்ல வேளையாக அந்தப் பெரியவர் வழியாக
  நன்மை நடக்கிறது. வெகு சுவாரஸ்யம் ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அநேகமாக அடுத்த வாரத்தில் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன் அம்மா. அப்போ விஷயங்கள் தெளிவாகும்!

   நீக்கு
 3. Tomb of Tutankhamun
  இதை வைத்து எத்தனை கதைகள். எத்தனை படங்கள்.

  கிட்டத்தட்ட 3000 வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட
  கல்லறை. யார் யார் உள்ளே போகிறார்களோ அவர்கள் எல்லாம்
  வியாதி வந்து மேலுலகம் சென்று விடுவார்கள்
  என்றெல்லாம் செய்தி வரும். எகிப்து
  ஒரு மிஸ்டரி உலகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் அம்மா.. இது மாதிரி மர்மங்கள் எப்பவுமே ரொம்ப சுவாரஸ்யம்.

   நீக்கு
  2. பஹ்ரைன்ல இருந்தபோது, எகிப்து சென்று பார்க்கவேண்டும் என்ற ஆசை இருந்தது. பசங்களிடம் அங்க ஒரு வாரம் போய்வரலாம் என்று சொன்னேன். என் பெண், கண்டிப்பாக எகிப்து போகக்கூடாது, பிரமிட் உள்ளலாம் செல்லக்கூடாது என்று ஸ்டிரிக்டா சொல்லி, நாங்க யாருமே போகவில்லை.

   அதற்கு முன்பு, பாரிஸ் லூவர் மியூசியத்தில், எகிப்து பகுதி, மற்றும் மம்மிகள், அவைகள் வைக்கப்பட்டிருந்த பெட்டிகள் இருந்த ஹால் வழியாக வந்தபோதுதான் எனக்கு அலர்ஜி வந்தது. அதனால் அலர்ஜிக்கும் அதற்கும் (அதன் கெமிக்கலோ என்னவோ) சம்பந்தம் உண்டு என்ற எண்ணமும் எனக்கு உண்டு.

   ஆக மொத்தம் எகிப்து பிரமிடுகள் மம்மி....இவற்றையெல்லாம் பார்க்கப் போகவில்லை

   நீக்கு
  3. அடடா...   அவ்வளவு பக்கத்தில் சென்று அவற்றை பார்க்காமல் வந்து விட்டீர்களா?  எனக்கு இதிலெல்லாம் சுவாரஸ்யம் அதிகம்!  அலர்ஜி என்றால் என்ன செய்தது?  மயக்கமா?  அரிப்பு போலவா? 

   நீக்கு
  4. லூவர்ல மம்மில்லாம் பார்த்தேன் (வெகு அருகில்). (காய்ந்த பொணத்தைப் பார்ப்பதில் என்ன பெரிய சுவாரசியம்...)

   அலர்ஜி என்றால் மெதுவாக எரிச்சல் ஆரம்பித்து தடிப்பு தடிப்பாக வரும். பொதுவா எனக்கு எரிச்சல் ஆரம்பித்ததிலிருந்து 45 நிமிடங்கள்-1 மணிநேரம் வரை கூடிக்கொண்டே சென்று, அதற்குப் பிறகு ப்ரெஷர் மிகவும் குறைந்துவிடும். அதனால் ட்ரிப்ஸ் ஏற்றணும், அலர்ஜிக்குள்ள ஊசி போட்டுக்கொண்டு, 2 மணிநேரம் ஆஸ்பத்திரியில் இருக்கணும். இது பஹ்ரைனில் இருந்த கடைசி சில வருடங்களில் 3 மாதங்களுக்கு ஒரு முறை வரும். சென்னை வந்த பிறகு, கைலாஷ் பர்வத் தில், சென்னா பட்டூரா (அவங்களோட மசாலா கருப்பா இருக்கும்) சாப்பிட்ட பிறகு வந்தது (ஆனால் சிவியர் இல்லை). பெங்களூர்ல, பனீர் செய்து வெளியில் ரொம்ப நேரம் தவறுதலா வச்சுட்டு பிறகு ஃப்ரிட்ஜில் வைத்து, நான் இரண்டு நாட்களுக்குப் பிறகு சாப்பிட்டபோது சிவியராக வந்தது. (ஆஸ்பத்திரி போனேன்). அதனால், 5 மணி நேரம் ஆன எந்த உணவையுமே நான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன்.

   நீக்கு
  5. //காய்ந்த பொணத்தைப் பார்ப்பதில் என்ன பெரிய சுவாரசியம்...//

   :))))

   அவ்வளவு அலர்ஜியா>

   நீக்கு
 4. கரப்பான் பூச்சிகளை வறுத்து சாப்பிடுவதை
  ஒரு அமேஸிங்க் ரேசில் பார்த்தேன்.
  மருந்தும் தயாரிக்கிறார்களா?

  ஜின்செங்க் மாதிரி ஏதாவது கண்டுபிடித்து

  கோடி கோடியாகச் சம்பாதிக்கப் போகிறார்கள்.!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உசிலம்பட்டி அருகி ஈசல்களைதான் வறுத்து சாப்பிடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்மா...  அதில் சர்க்கரை தூவி சாப்பிடுவார்கள்.  தஞ்சையில் நான் இருந்தபோது என்னுடன் விளையாடும் நண்பன் வீட்டில் இந்த் வழக்கம் உண்டு.

   நீக்கு
  2. நானும் திருமங்கலத்தில் பார்த்திருக்கிறேன்.

   நீக்கு
  3. நரிக்குறவர்கள் தான் ஈசல்களை வறுத்துச் சாப்பிட்டுப் பார்த்திருக்கேன்.

   நீக்கு
  4. வேறு சிலரும் சாப்பிட்டுப் பார்த்திருக்கிறேன். உதாரணம் என் நண்பன்.

   நீக்கு
  5. பிரதமர் வாஜ்பாயி விசிட்டின் போது பேங்காக் (தாய்லந்து)-கிற்கு பணிநிமித்தம் போயிருந்தேன். ஒரு மாலையில் ஹோட்டலிலிருந்து வெளியேறி நடக்க ஆரம்பிக்கையில் கண்ணில்பட்டது, ரோட்டோர ஸ்னேக்காக ..அது என்ன வறுத்துக்கொண்டிருக்கிறாள் அவள் - நிலக்கடலையா, பட்டாணியா, சனாவா என்று இந்திய சிந்தனையோடு நெருங்க.. வண்டுகள் வறுபடுகின்றன சட்டியில். அசூயை, துக்கம் இப்படியான கலவர மனநிலையில், வேகமாக அந்த சாலையை விட்டு வெளியேறினேன்.

   நீக்கு
  6. சில மழைக்காலங்களிலோ அல்லது வேறு சமயங்களிலோ, சட் என்று ஈசல்கள் மிக மிக அதிகமாகப் பறக்கும். 74ல், அப்படிப்பட்ட ஒரு சமயத்தில், பலர் அந்த ஈசல்களைப் பிடித்துச் சேர்த்தார்கள். அவங்க வறுத்து, நம்ம பொரி உருண்டை மாதிரி பண்ணிச் சாப்பிடுவாங்களாம்.

   தாய்வானில், நான், வெஜிடேரியன் என்பதை எவ்வளவு சொல்லியும் புரிய வைக்கமுடியவில்லை. இங்க ஃபேமஸ் Bபீஃப் நூடுல்ஸ், அதைக் கண்டிப்பா சாப்பிடுங்க வெஜிடேரியந்தான் என்று சொன்னார்கள். அப்புறம் நான், பழங்கள் தவிர வேறு எதையும் சாப்பிடுவதில்லை என்று சொல்ல ஆரம்பித்துவிட்டேன். பழங்கள், தேன் இவைதான் என் உணவு என்று சொல்லிவிட்டேன். அங்க கொடுக்கும் பலவித Tea கூட, நான் சாப்பிடுவதில்லை என்று சொல்லிவிட்டேன்.

   அங்க இருக்கும் food street வழியாகப் போவதற்கே (போனால்தான் இரவு மார்க்கெட்லாம் பார்க்க முடியும்) எனக்கு அளவுக்கு அதிகமாக உவ்வேவாக இருக்கும். அவங்க உணவு ஸ்மெல் எனக்கு ரொம்பவே குமட்டும். என்றைக்காவது வாய்ப்பு இருந்தால் படங்கள் இங்க பகிர்கிறேன் (அதில் ஒரு சில படங்களை இங்க வெளியிடமாட்டாங்க)

   நீக்கு
  7. ஏகாந்தன் சார்   முன்பு ஒரு வீடியோ பார்த்திருக்கிறேன்.  உயிருடன் ஒரு மீனைப்பிடித்து அதன் பாதிப் பகுதியில் மசாலா, காரம் தடவி அபப்டியே எண்ணெயில் பொரிக்கிறார்கள்.  தலைப்பகுதி துடிப்பது பார்க்கவே கஷ்டமாக இருந்தது.

   நீக்கு
  8. நெல்லை...  வெஜிடேரியன் என்றால் முட்டை மீன் சாப்பிடுபவர்கள் என்று பொருள் கொள்கிறார்களோ அவர்கள்?  பாம்பு பல்லி மட்டும்தான் அசைவமோ அங்கு?!!

   நீக்கு
  9. என்னை கௌரவப்படுத்தும் விதமாக ஒரு ஜப்பானிய வெஜிடேரியன் ரெஸ்டாரண்டுக்கு என்னைக் கூட்டிக்கொண்டு சென்றார்கள். நான், நல்ல காலத்திலேயே குழம்புசாதம், கூட்டு தவிர வட இந்திய உணவையே டெஸ்ட் செய்ய மாட்டேன். இதுல ஜப்பானிய வெஜிடேரியன் சாப்பாடா? நான் அங்கு ஐஸ்க்ரீம் மட்டும் சாப்பிட்டதில், அவர்களுக்கு வருத்தம். இன்னொரு லஞ்சில், நான் பழங்கள் மட்டும் போதும் என்று சொன்னதால், பாதி மேசை அளவு பழங்களை நிரப்பிவிட்டார்கள். (லண்டலில், ஒரு லாயரைச் சந்தித்தபோது, லஞ்சுக்கு எனக்கு இங்க்லீஷ் ப்ரெட், வெண்ணெய், பழரசம் போதும்னு சொன்னேன். அவர் இரண்டு பெரிய லோஃப், 500 கிராம் வெண்ணெய், 2 பாட்டில் பழரசம்னு கொண்டுவந்து கொடுத்தார்..ஹாஹா)

   நீக்கு
  10. ஹா...  ஹா...  ஹா...   கஷ்டம்தான்.   இப்பவே இப்படின்னா, ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன் இது போன்ற நாடுகளுக்கு சென்றவர்கள் என்ன பாடு பட்டிருப்பார்களோ..

   நீக்கு
  11. இதயம் பேசுகிறது மணியன், தான் ஜப்பான் சென்றிருந்தபோது, சாதத்தில் கோகோகோலா கலந்து ரசம் போலச் சாப்பிட்டேன் என்று எழுதியிருந்தார். உண்மையை எழுதினாரா இல்லை சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டதை நமக்குப் புரியவைக்க எழுதினாரோ தெரியவில்லை.

   எனக்கு எந்த வெளிநாடு போனாலும், எலுமிச்சை கார ஊறுகாய் பாட்டில் வாங்கிக்கொண்டு போயாகணும். பழங்கள், ஜூஸ் போரடிக்கும்போது, இங்கிலீஷ் ப்ரெட் வாங்கி அதை எலுமிச்சை ஊறுகாய் தொட்டுக்கொண்டு சாப்பிட்டுடுவேன். (இங்கிலீஷ் ப்ரெட் என்று குறிப்பிடக் காரணம், பிலிப்பைன்ஸில் ப்ரெட்டில் கண்டதையும் சேர்ப்பார்கள் என்று கேள்விப்பட்டிருக்கேன். ஆனால் அங்கு உணவுப் பிரச்சனை எனக்கு வந்ததில்லை. ஒரு கோர்ஸ் படிக்கும்போது, வாழைப்பழத்தை மாவில் பிரட்டி நம்ம ஊர் பஜ்ஜி மாதிரி கொடுத்தார்கள். நான் பொரித்த உணவு எதையும் வெளிநாட்டில் சாப்பிடுவதில்லை என்பதால் சாப்பிடலை. நம்ம ஊர் நேந்திரம் பழம்பொரி மாதிரி இருந்தது. என்ன எண்ணெயோ, என்ன மாவோ என்ற சந்தேகமும்தான்)

   நீக்கு
  12. சாதத்தில் கொகாகோலாவைக் கலந்தா?  கர்மம்!

   ஓரு நேரத்தில் எனக்கு எலுமிச்சை ஊறுகாய் பிடிக்காமல் இருந்தது.  இப்போ பிடிக்கிறது!  நேற்று வீட்டில் நெல்லிக்காய் ஊறுகாய் போட்டேன்.  

   நீக்கு
  13. சப்பாத்தில் எலுமி ஊறுகாய், சுட சாதம் நல்லெண்ணெய் எலுமி ஊறுகாய், ரவா பொங்கல் எலுமி ஊறுகாய் போன்ற காம்பினேஷன் பிடிக்கும். நெல்லி ஊறுகாய் தி பதிவுல போடுங்களேன்

   நீக்கு
 5. முனை திரும்பும் கவிதையைப் படிக்கும் போது,
  புதுப்பேட்டை அருகே ஆட்டோ மொபைல்ஸ் ஸ்பேர் பார்ட்ஸ்
  கடையருகே விரியும் ,நான் கண்ட காட்சிகள் நினைவுக்கு
  வருகிறது.

  கெட்டிச் சட்டினியும், இட்லியும் யாருக்காகவோ. மரங்கள் நடுவே
  இருக்கும் வீட்டுத் தேவதைக்கா!!!
  அருமையான கவிதை ஸ்ரீராம்.

  கனவுகள் தான் நம்மைத் தேற்றுகின்றன.
  மனம் நிறை வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வீட்டில் தேவதை இல்லைம்மா...   அதுவும் அவனின் கற்பனை.   இட்லி அவனுக்குத்தான்.  கைவிடப்பட்ட ஒரு வீட்டில் வசிக்கும் அவனின் தனிமையான போர் அடிக்கும் வாழ்வை கற்பனைகளால் நிறைக்கிறான்!!

   நீக்கு
  2. ஆமாம் பா. அது புரிகிறது. எஸ்கேபிசம். ஆனால் அருமையான கற்பனை. உயிர் வாழ கனவுகளே ஆதாரம். நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.

   நீக்கு
  3. நன்றி அம்மா. உண்மை. வசதியான கனவுகள்!

   நீக்கு
 6. மதன் சின்னப்பையன் ஜோக் சூப்பர்ப்:)))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா.. ஹா.. ஹாமாம்!! ஓரிரு எழுத்துகள் மறைந்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிகிறது!

   நீக்கு
 7. ஒரு வட்டாரத்துக்குரியதை உலகத்துக்கே பொதுவானதாகவும் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குரியதை எந்தக் காலத்துக்கும் பொருந்துவதாகவும் செய்வதில் இலக்கியத்துக்கு அலாதித் திறன்./////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////////

  சரத் சந்திரரின் நாவல்களின் தமிழாக்கத்தை
  சிங்கத்தோட பாட்டி படிப்பார்.
  எனக்கென்னவோ அவ்வளவு பொறுமை
  இருந்ததில்லை.

  மனிதர்களின் அடிப்படை குணங்களைப் பற்றி
  எழுதுவதற்கும் ஒரு தைரியம் வேண்டும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனது பள்ளிக் காலத்தில் லைப்ரேரியிலிருந்து சரத்சந்திரர் புத்தகம் எதுவோ ஒன்று படித்திருக்கிறேன்.  அது போல கிரௌஞ்ச வதமும் அப்போது படித்திருக்கிறேன்.  இப்போது படிக்கப் பொறுமை இருக்குமா தெரியவில்லை.  தேவதாஸ் புத்தகமாக விழுந்து விழுந்து படித்திருக்கிறேன்.  இப்போது நிச்சயம் பொறுமை இருக்காது!

   நீக்கு
 8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்க எங்கெங்கும்..

  வாழ்க வையகம்..
  வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 9. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள். பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 10. திகில் கதையாக/நிகழ்வாக இருக்கே ஶ்ரீயின் அனுபவங்கள். தொடரக் காத்திருக்கேன். முக்கியமான இடத்தில் நிறுத்திட்டீங்க. நல்லபடிப் பிழைத்து வந்ததுக்கு இறைவனுக்கு/அந்தப் பெயரில்லா "அம்மா"வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கீதா அக்கா.. உங்கள் பெண்ணுக்கு (?) வயிற்றுவலி என்றதும் அது சம்பந்தமாக நான் கூட எழுத ஒரு சம்பவம் வைத்திருக்கிறேன் என்று முன்னர் சொல்லி இருந்தேன், நினைவிருக்கிறதா? இதுதான் அது!

   நீக்கு
  2. அட? அந்தக் கதையா இது? பெண்ணுக்கும் இன்னமும் பூரண குணமாகவில்லை. அது வேறே தனிக்கவலை! பிள்ளைக்கு இப்போத் தான் அவர் கன்டெயினரில் அனுப்பின சாமான்கள் வந்து சேர்ந்திருக்கின்றன. சுமார் ஒன்பது மாதங்கள் கழித்து! :( அலுவலக வேலைத் தொந்திரவு வேறே! நைஜீரியாவை விட்டுக் கிளம்பினால் போதும்னு இருக்கு! :( வீட்டைத் துடைக்கத் துடைப்பமும், மாப்பும் வாங்கப் போனால் கூடவே நாலு செக்யூரிடி! இரண்டு பேர் கடைக்கு வெளியே. கடைக்கு உள்ளே இவங்க இருவருக்கும் இரண்டு பேர்! :( ஜெயில் வாசம் மாதிரித் தான்!

   நீக்கு
  3. நைஜீரியாவை விட்டு கிளம்ப சான்ஸ் வந்திருக்கா?  எனில் சந்தோஷமாகக் கிளம்பி விடலாமே...  சென்ற சனிக்கிழமை என் நண்பர், தன் மகன் துனிசியாவில் சில வருடங்களுக்கு முன் வேலை பார்த்த அனுபவங்களை சொல்லிக்கொண்டிருந்தார்.  அதுவும் நினைவுக்கு வருகிறது.

   நீக்கு
  4. எங்கே! அப்படிக் கிளம்பினால் தான் நல்லதாச்சே! :(

   நீக்கு
 11. மதன் நகைச்சுவைத்துணுக்குகள் எக்காலத்துக்கும் பொருந்துபவை. அனைத்தும் அருமை. நீங்கள் வர்ணித்திருக்கும் இடம் சென்னையின் பரபரப்பான இடங்களை நினைவூட்டுகிறது. அங்கே தான் வீடுகளும் இப்படி அமையும். அந்த இளைஞனின் வளமான கற்பனைக்கு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மதன் நகைச்சுவை- ஆம், என்றும் ரசிக்கலாம். நான் வர்ணித்திருக்கும் இடம் எல்லா ஊரிலும் இருக்கும் அது போல ஒரு இடம்!

   நீக்கு
  2. அதான் இளைஞன் எனச் சொல்லி உங்களைப் பெருமைப் படுத்தினேன்! :))))))

   நீக்கு
  3. ஹா... ஹா... ஹா... உண்மையைத்தானே சொல்லி இருக்கிறீர்கள்!!

   நீக்கு
  4. ஸ்ரீராம் - எனக்கு இப்போ ஒரு உண்மை தெரிஞ்சாகணும்... நீங்க கீசா மேடம் உங்களைவிட ரொம்பப் பெரியவங்கன்னு சொல்கிற மாதிரி இருக்கு. இருவரின் வயதும் தெரியாததால் இந்தக் கேள்வி. ஹிஹி

   நீக்கு
  5. உண்மையைச் சொல்கிறேனே...  நான் குழந்தையெல்லாம் இல்லை.  இளைஞன்!

   நீக்கு
 12. சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், தாகூர் ஆகியவர்கள் தான் பள்ளி நாட்களில் அதிகம் படித்த/பிடித்த நாவலாசிரியர்கள். அடுத்தது வி.எஸ்.காண்டேகர். கிரௌஞ்ச வதம் நானும் படிச்சிருக்கேன். யயாதியும். சரத் சந்திரரின் பல நாவல்கள் தொலைக்காட்சி வந்த புதுசில் தூர்தர்ஷனால் தொடராக எடுக்கப்பட்டு தேசிய ஒளிபரப்பில் வந்திருக்கின்றன. விடாமல் பார்ப்போம்/பார்ப்பேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. யயாதி நான் படித்ததில்லை. சமீபத்தில் எங்கோ கேள்விப்பட்டு, படிக்க வேண்டும் என்று தோன்றியது.  இப்போது உபபாண்டவத்தில் மாட்டிக்கொண்டிருக்கிறேன்!

   நீக்கு
  2. யயாதி என்னிடம் இருக்கிறது. தொடவே இல்லை.

   நீக்கு
  3. ஹா.. ஹா.. ஹா... உண்மை. அப்பப்போ படிச்சிருந்தா உண்டு. ​விஷ்ணுபுரம் பத்து பக்கங்களுக்கு மேல் நகர மாட்டேன் என்கிறது. இந்த வருடம் உபபாண்டவம் வாங்கித் தொலைத்தேன். அதன் பாணியே படிக்க ஓடிஏ மாட்டேன் என்கிறது! இருபது பக்கங்கள் வந்திருக்கிறேன்.

   நீக்கு
 13. தாகூரின் "கோரா" "புயல்"(ஆந்தி) ஆகியவையும் நன்றாக இருக்கும். எல்லாம் த.நா.குமாரசாமி., த.நா.சேனாபதி ஆகியோரின் மொழிபெயர்ப்பு. காண்டேகர் மட்டும் சரஸ்வதி அம்மாளோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //காண்டேகர் மட்டும் சரஸ்வதி அம்மாளோ?//

   பி ஸ்ரீ?

   தாகூரின் கோரா பற்றி நான் சொன்ன அக்கட்டுரையில் இருக்கிறது.

   நீக்கு
  2. ஓ, பி.ஶ்ரீ. அவர்களை நான் மறந்தே விட்டேன். அவராயும் இருக்கலாம்.

   நீக்கு
 14. எகிப்து கல்லறைகள் பற்றிப் பல திடுக்கிடும் சம்பவங்களைப் படிச்சிருக்கேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும்.  படிக்கப் படிக்க சுவாரஸ்யம்!  சென்று பார்க்க ஆவல்.  அங்கு பார்க்க இப்போது ஒன்றும் மிச்சமிருக்காது என்பதால் போகவில்லை!!!!!

   நீக்கு
 15. தொடர் கதை (நிஜம்?) தொடரட்டும். ஒரு வாரம் பின்னிடும்போது கதை போன வாரம் என்று சிறு முன்னுரை கொடுத்தால் நன்றாக இருக்கும். 

  மாற்றி யோசிப்பதில் மதன் ஒரு expert. ஜோக்குகள் ஜோக்குகளாய் உள்ளன.
   
  உங்கள் வீட்டில் கரப்பான் பூச்சிகள் திரும்ப வந்து விட்டனவா? கரப்பான் பூச்சி வளர்ப்பது பற்றி எழுதிக்கிறீர்கள்?

  Jayakumar

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதோ முடித்து விடலாம் என்று எண்ணி எழுதும்போது நீண்டுவிடுகிறது!  அதனால் முன்கதை சொல்லவில்லை.  மேலும் சொல்வதற்கு இதில் பெரிதாக ஒன்றுமில்லை என்றும் தோன்றியது!

   ஆம் அவை மதன் ஸ்பெஷல்!

   கரப்பான் பூச்சிகள் திரும்பி வாத்து விட்டுதான்!  ஹா ஹா ஹா..   ஆனால் இது யதேச்சையாக வெளியிடப்பட்டது.  கீதா ரெங்கன் சொல்லி அமேசானிலிருந்து ஒரு கரப்பான் கொல்லி வாங்கி அதை அவர்கள் போட்டது போலவே போட்டேன்.  இரண்டு நாட்களாய் ஒன்றிரண்டாய் தரப்புகள் அவ்வப்போது நான் இருக்குமிடம் வந்து என்னை நக்கலாய்ப் பார்த்துச் செல்கின்றன!  அவர்களைதான் (பெஸ்ட் கண்ட்ரோல்) மறுபடி அழைக்க வேண்டும் போலும்!  

   சாதாரணமாய் கவிதை பற்றி ஏதாவது சொல்வீர்கள்.  இன்று ஒன்றும் சொல்லவில்லை!

   நன்றி ஜெயக்குமார் சந்திரசேகர் சார்.

   நீக்கு
 16. ..அங்கே எனக்காகக் காத்திருக்கும் ஒரு தேவதை..//

  கெட்டிச்சட்னி, இட்லியோடு வரும் ஆளுக்குக் காத்திருக்காமல் இருந்தால் எப்படி !

  பதிலளிநீக்கு
 17. ..சுதந்திர உணர்வை நாவலில் நுழைத்த பெருமை 'வந்தேமாதரம்' படைத்த பங்கிம் சந்திரரைச் சேரும். அவர் மதவெறி கொண்டவர் என்று சிலர் குற்றம் சாட்டுகின்றனர்.//

  பங்கிம் சந்தரை மதவெறிகொண்டவர் என ஒருவன் சொன்னால், அவனைச் சொறிநாய் கடித்து நாளாகிறது என்றர்த்தம்...

  பதிலளிநீக்கு
 18. அகிலப் பகுதினா? ஏதாவது திராவிட சொற்கோர்வையோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா...  வழக்கம்போல என் தட்டச்சுப் பிழை ஜீவி ஸார்...   மாற்றி விட்டேன்!

   நீக்கு
 19. //ராசாராம் மோகன்ராய்..//

  ராஜாராம் மோகன்ராய். விஷயம் தெரிந்த நீங்களாவது பெயர் சிதைப்பில் கவனம் கொண்டு தவிர்க்கலாமில்லையா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தட்டச்சும்போது அதுவே அப்படிதான் வந்திருக்கிறது.  இப்போது மாற்றி விட்டேன்!

   நீக்கு
 20. //இன்றுடன் முடிவதில்லை..//

  அந்த அற்புதமான யதார்த்த கவிதைக்கு சொந்தம் கொண்டாடும் பெருமை பெற்ற கவிஞர் பெருமான் யார்? யார்? யார்?

  வாசிக்கும் பேறு பெற்று புகளித்துப் போனேன்..

  அவர் பெயரைப் பொறித்து எபி பெருமை கொள்ள வேண்டுகிறேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. * புளகாங்கித்துப் போனேன்.

   நீக்கு
  2. கலாய்க்கிறீர்களா, நிஜமா என்று தெரியவில்லை.  எனினும் மற்றவர் கவிதையை வெளியிடுவதாய் இருந்தால் அவர்கள் பெயரோடுதான் வெளியிடுவேன்.  நான் எழுதியதைதான் பெயரில்லாமல் வெளியிடுவேன் - நீங்கள் எல்லாம் புரிந்து கொ(ல்)ள்வீர்கள்  என்று!  எனவே அது நான் எழுதியது என்று அறிந்து கொ(ல்)ள்க!

   நீக்கு
  3. பிரமாதம், ஸ்ரீராம். நீங்கள் என்று அறிந்ததில் இன்னும் கொஞ்சம் கூட பூரிப்பு!!

   நீக்கு
  4. கவிதை உங்களுடையது என்பது படிக்கையிலேயே புரிந்தது ஶ்ரீராம்.

   நீக்கு
  5. //பிரமாதம், ஸ்ரீராம். நீங்கள் என்று அறிந்ததில் இன்னும் கொஞ்சம் கூட பூரிப்பு!!//

   நன்றி ஜீவி ஸார்.

   நீக்கு
 21. கவிதை, கார்டூன் ரெண்டுமே டாப்.

  பதிலளிநீக்கு
 22. கரப்பான் பூச்சியை பார்த்தாலே....

  ஆண்கள் மட்டும் கை தொட்டு அரவணைத்து, முகம் வருடி, காது கவ்வி, உதடு உரசி குலாவிக் களிப்பார்களாக்க்கும்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குறைந்தபட்சம் பயந்து அருவெறுப்பில்  அலறமாட்டார்கள்!

   நீக்கு
 23. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்

  பதிலளிநீக்கு
 24. //"அந்தந்த இடம் வரும்போது தெரியட்டும்னு நெனச்சேன் ஸார்.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்களேன்..."//

  அட எங்களுக்கும் அடுத்த வாரமா?

  // விவரம்லாம் விசாரிச்சுக்கிட்டு வந்து சேர ஒரு வாரமாயிட்டுது.. 'கவலைப்படாதே.. நான் பார்த்துக்கறேன்... அதுவரை ஒண்ணும் //
  ஆகாது'ன்னாங்க..."

  ஸ்ரீயும் அவர்கள் குடும்பத்தினரும் கும்பிடும் தெய்வம் வழி காட்டி விட்டது போல !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா..  ஹா..  ஹா   அடுத்த வாரம் முடிந்து விடும் என்றுதான் நம்புகிறேன் அக்கா.

   நீக்கு
 25. ஸ்ரீ கதை ஸ்வாரஸ்யம். கவிதையும் நன்று.

  துணுக்குகளும் பிடித்திருந்தது.

  தொடரட்டும் கதம்பம்.

  பதிலளிநீக்கு
 26. ரவீந்தர், வேர்ட்ஸ்வொர்த்.
  சரத்தோ, மாக்ஸிம் கார்க்கி.

  பதிலளிநீக்கு
 27. அனைவருக்கும் முகம் மலர காலை வணக்கங்கள்! அற்புதங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதற்கு ஸ்ரீ அவர்கள் பிழைத்து வந்ததே சாட்சி. அந்த தெய்வத்திற்கு நன்றி! நேரில் பார்த்தது போல விவரித்திருந்தீர்கள்.ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த வார தொடர்ச்சிக்காக. கவிதை அருமை. நுரைகளால் நிரம்பிய காப்பி கோப்பை போல கனவுகளால் நிரம்பிய வாழ்க்கை! மதன் ஜோக் எப்பொழுதும் போல அசத்தல்! நிறைய நாவல்கள் படிக்க வேண்டும் என்று ஆவல் உண்டு.வேறு மொழி நாவல்களும், மொழிபெயர்ப்பு நாவல்களும் படித்ததில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க வானம்பாடி.  சந்தோஷமான வரவேற்பு.

   //நுரைகளால் நிரம்பிய காப்பி கோப்பை போல கனவுகளால் நிரம்பிய வாழ்க்கை! //

   ஹா..  ஹா...  ஹா...  நல்ல உவமை!

   இப்போதெல்லாம் மொழிபெயர்ப்பு நாவல்கள் கொஞ்சம் தேடித் படிக்கிறேன்!  அதற்காகவே கடந்த இருமுறை புத்தகக் கண்காட்சியில் சாஹித்ய அகாடமி அரங்கில் சற்று நேரம் செலவழித்தேன்!

   நீக்கு
 28. கமலா எங்கே? உடல்நலம் இன்னும் சரியாகலையா? நான் இரண்டு நாட்களாகத் தொடர்ந்து வரேன். அவங்களைக் காணோமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்று மறுபடி நானும் காணோமே என்று நினைத்தேன்.  சாயந்திரத்துக்கு மேல் மெதுவாக வருவார்களோ என்னவோ...   நலமாக இருப்பார்கள்.

   நீக்கு
 29. @ ஏகந்தன்...

  // பங்கிம் சந்தரை மதவெறிகொண்டவர் என ஒருவன் சொன்னால், அவனைச் சொறிநாய் கடித்து நாளாகிறது என்றர்த்தம்...//

  சொறி நாயால் கடிபட்டவர்கள் சத்ரபதி சிவாஜி மகாராஜையும் விட்டு வைக்க வில்லை... இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் அவர்களையும் விட்டு வைக்க வில்லை...

  அவர்களால் பெருத்த நட்டம் அடைந்ததே காரணம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. துரை செல்வராஜு சார் நம்ம பாடத்திட்டத்தை ஒழுங்காகப் படிக்கவே இல்லை. அனேகமாக வரலாறு பாடத்தில் பாஸ் மார்க்குக்கு ஒரு மார்க் கம்மியாக வாங்கியிருப்பார் போலிருக்கிறது. நான் படித்ததைச் சொல்கிறேன்.

   இந்தியா சுதந்திரமடைய நேரு மட்டுமே ஒரு காரணம். காந்தி சுதந்திரம் அடைவதற்கும் நேருவின் பங்களிப்புதான் பெரிது. நேரு ஆசியாவின் ஜோதி. சமாதானப் புறா. இந்தியர்கள் அனைவருக்கும் மாமா. அவருடைய மகள் இந்திரா காந்திதான் (உடனே நேரு மகள் எப்படி காந்தியாக முடியும்னு இடக்கு மடக்காக யோசிப்பீங்க. அதனாலத்தான் நீங்க பாஸ் மார்க்குக்கு 1 மார்க் கம்மி). நேரு குடும்பமே தங்கள் ஒரே சொத்தான பெரிய பங்களாவை தேசத்துக்கு வழங்கினார்கள் (உடனே, லட்சம் ரூபாய் பெருமானமுள்ள வீட்டைக் கொடுத்துவிட்டு, ஆயிரம் கோடிகளைச் சம்ம்ம்ம்ம்பாதித்துவிட்டார்களே என்று யோசிக்கறீங்க..அது தப்பூ). நேருவின் சுதந்திரப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர் பங்குபெற்றனர். அவர்களில் சாஸ்திரி, படேல், போஸ் முதலானோரும் உண்டு.

   நீக்கு
  2. அன்பின் நெல்லை...
   நன்றாகச் சொன்னீர்கள்... இதே கதை தான் -

   டோக்ராவில் பளிங்கு குடிசை கட்டியதும்!..

   நீக்கு
  3. நெல்லை, இந்திய வரலாற்று நாயகர்களில் ஒவ்வொருவர் சரித்திரமும் அவரவர் பங்களிப்பில் உயர்வானது. இவர் உசத்தி, இவர் தாழ்த்தி என்று ஏதுமில்லை. அந்தந்த வரலாற்று சூழல்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதத்தில் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

   இதில் ஏற்ற தாழ்வுகள் பார்ப்போமானால் வரலாற்று ரீதியில் பிழை செய்தவர்கள் ஆவோம்.

   ஒரு அரசியல் கட்சிக்குள் வேண்டுமானால் இந்த மாதிரியான அளவுகோல்கள் யார் உயர் பதவிக்கு வருவது போன்ற போட்டா போட்டிகளுக்கு உதவலாம்.

   ஆனால் தேசத் தலைவர்கள் என்று வரும் பொழுது அவர்கள் கட்சி சார்ந்த எல்லையைக் கடந்து ஒரு தேசத்தின் நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட தலைவர்களாய் தங்கள் பங்களிப்பை செலுத்தியவர்களாகின்றனர். வரலாற்று சூழல்களே அவர்களுக்கான பங்களிபுக்ளைத் தீர்மானித்திருக்கிறது என்பது இன்னொரு பக்க உண்மை.

   அதனால் ஒரு தேசத்தின் தலைவர்களுக்குள் உயர்வு தாழ்வு கணக்கீடுகள் கொள்வது வரலாற்று ரீதியான பிழையாய் முடியும்.

   உண்மையில் தனி நபர்களைத் தாண்டி
   அந்தந்த நேரத்து வரலாற்றுச் சூழல்கள் தாம் நாயகராய் இருப்பது புரியும்.

   நீக்கு
  4. ஆயினும் ஜீவி ஸார்...   வரலாற்றின் சில பக்கங்களை மறைக்க முற்படுவதும் தவறுதானே?  சில தவறுகளை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா?

   நீக்கு
  5. அபுரி. உதாரணம் சொல்லுங்கள்.
   முடிந்தால் விளக்க முயற்சிக்கிறேன்.

   நீக்கு
  6. ஜீவி சார்.. ஒருத்தர் செய்த தவறுகள் ஒருபுறம் இருக்கட்டும்... தான் சார்ந்த மதத்திற்காக, ஹிந்து மதத்தை அழிக்க முற்பட்டது (அதாவது மற்ற மதங்களுக்கு சலுகைகள் கொடுத்து) இருக்கட்டும்... தன்னைவிட அதிகமாக சுதந்திரத்திற்குப் பாடுபட்டவர்களை இருட்டடிப்பு செய்தது நியாயமா? தில்லியில் நூறு ஏக்கர் நிலங்களை தங்கள் தங்கள் சமாதிக்கு வளைத்துப்போட்டுக்கொண்டு, போஸ், சாஸ்திரி மற்றும் பலரை கிள்ளுக்கீரைகளாக ஒதுக்கித் தள்ளியது, அவர்களின் உண்மையான ரூபத்தைக் காட்டவில்லையா? தங்கள் குடும்பம் மட்டும்தான் இந்தியாவை ஆளணும் என்று நினைத்ததே மிகப் பெரிய பிழை இல்லையா?

   நீக்கு
  7. ஸ்ரீராம் சொல்லட்டும். பிறகு உங்களிடம் வருகிறேன்.

   நீக்கு
  8. நான் ஒரு பெரிய வட்டத்தில் தேசம், அதன் உயர்வில் தீராத பற்று வைத்திருந்த தலைவர்கள் என்று சிந்தனையை செலுத்தினால் நீங்கள்
   ரொம்ப சின்ன வட்டத்தில் ஏதோ நம்ம குடும்பத்தில் நடப்பது போல, "அண்ணனுக்கு மட்டும் ஐஸ் க்ரீமா, தம்பிக்கு இல்லையா?" என்று கேட்டால் எப்படி நெல்லை?..

   ஒரு பரந்த தேசம், அதில் உள்ளடங்கிய பல்வேறு ஆசை, அபிலாஷைகள் கோட்பாடுகள் கொண்ட மக்கள் திரள், ஜனநாயகம்,
   தேர்தல், பெருவாரியான ஆதரவு கொண்ட கட்சி ஆட்சி அமைப்பது, அதற்காக அந்தக் கட்சி தன் தலைவரைத் தேர்வு செய்வது, இதையெல்லாம் நீங்கள் கணக்கில் கொள்ளவேயில்லையா, நெல்லை?

   உள்கட்சி போட்டி அரசியல் என்பது எல்லா கட்சிகளிலும் உண்டு. அது அந்தந்த கட்சி சம்பந்தப்பட்ட விஷயம்.
   அதில் குமுறுவதற்கு என்ன இருக்கிறது? சொல்லுங்கள்.

   அன்னியன் ஆட்சி காலத்தில் சுபாஷின் சிந்தனையும் செயல்பாடுகளுமே வேறே. அவரை சம்பந்தமில்லாமல் இங்கு இழுக்காதீர்கள்.

   நீக்கு
  9. //அதன் உயர்வில் தீராத பற்று வைத்திருந்த தலைவர்கள் // - என்னத்தை பற்று வைத்தார்களோ (இல்லை வேறு தேசத்திற்காகப் பாடுபட்டார்களோ.

   சுபாஷ் சந்திரபோஸ் போன்ற பல தலைவர்களை நேருவின் அரசாங்கம் இருட்டடிப்புச் செய்தது உண்மையா இல்லையா? தான் ஆட்சிக்கு வருவதற்காக ஒரு பிரதமரே இறக்கக் காரணமாக இருந்தது உண்மையா இல்லையா?

   நீக்கு
 30. @ ஸ்ரீராம்...

  // நானும். படிக்கப் படிக்க சுவாரஸ்யம்! சென்று பார்க்க ஆவல். அங்கு பார்க்க இப்போது ஒன்றும் மிச்சமிருக்காது என்பதால் போகவில்லை!.. //

  நானும் இங்கிருந்து ஒரு வார சுற்றுலாவில் எகிப்து சென்று வருவதற்கு முயற்சித்தேன்..

  புதைகுழி மண்ட்பத்தில் பார்ப்பதற்கு என்ன இருக்கின்றது ?../ என - கேள்வி வந்தது...

  அத்தோடு விட்டு விட்டேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படி நினைக்கக்கூடாது. எகிப்தின் நாகரிகமும் பழமையானதுதான். உலகில் இந்தியாதான் நாகரீகத்தில், கல்வியில், பண்பில் முன்னணியில் இருந்தது. பாரத தேசத்தினருக்கு பெரிய கட்டிடக் கலை என்றால் அது கோவில்கள். முகலாயர்களுக்கு சமாதி. எகிப்தியர்கள் மறு உலகு என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்ததால், அவர்கள் இறந்தவர்கள் மறு உலகத்திலும் அனுபவிக்கும்படியாக செல்வத்துடன் அவர்களை மம்மிஃபை செய்தார்கள்.

   மெக்சிகோவில் மாயன் நாகரீகத்தை பழமையாகச் சொல்கிறார்கள். அந்த இடங்களில் சிலவற்றைக் கண்டிருக்கிறேன். நம் பாரத தேசத்தின், கட்டிடக் கலை, நாகரீகம், திறமை ஆகியவற்றுக்கு கால்தூசி கூடப் பெறாது அவை என்பது என் எண்ணம்.

   நீக்கு
  2. மயன் நாகரீகம் பற்றி 2012 ல் உலகமே பற்றியெரிந்தது!  இப்பவும் கூட அங்கு சென்று வந்த ஒரு பயணக்கட்டுரை படித்தேன்.  சுவாரஸ்யம்தான்!

   நீக்கு
 31. ஒரு வங்காள நாவலின் முன்னுரையிலிருந்து உருவப்பட்ட சில பகுதிகள் பகிர்வு அருமை.


  மதன் நகைச்சுவை ரசித்தேன்.
  கரப்பான் பூச்சி வியாபாரம் அவரின் வயிற்றுபிழைப்புக்கு என்றால் பயம் எங்கிருந்து வரும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கரப்பான் பூச்சி வியாபாரம் அவரின் வயிற்றுபிழைப்புக்கு என்றால் பயம் எங்கிருந்து வரும்!//

   அதுதானே!

   நன்றி கோமதி அக்கா.

   நீக்கு
 32. ஆப்பரேசன் தியேட்டரில் படம்காட்டுவது சூப்பர் ஜோக்.
  கவிதை ரசனை. கதை சுவாரசியமாக செல்கிறது.

  பதிலளிநீக்கு
 33. முத லில் படிக்கும் போதுசொந்த அனுபவமோஎன்று நினைத்தேன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!