திங்கள், 13 செப்டம்பர், 2021

'திங்க'க்கிழமை :  திப்பிசங்கள் - கீதா சாம்பசிவம் 

 "திங்க"ற கிழமை எனில் திங்கத் தான் சமையல் குறிப்புப் போடணுமா என்ன? ஒரு சில மாறுதல்களோடு சில திப்பிச வேலைகளை இங்கே தரப் போறேன். பிடித்தவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளவும். கட்டாயம் எல்லாம் இல்லை. 

காலை ஆகாரத்துக்கு இட்லிக்குத் தேங்காய்ச் சட்னி அரைச்சால் மிஞ்சிப் போனால் அதை மாலைக்குள் எப்படிச் செலவு செய்வது? என்ன தான் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சாலும் அது மறுநாள் அவ்வளவு நன்றாக இருக்காது தான். ஆகவே அன்றே செலவழித்து விடுங்கள். ஒண்ணும் வேண்டாம். அன்றைய சமையல் திட்டத்தில் மோர்க்குழம்பைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.  மோர்க்குழம்புக்குச் சாதாரணமாப் பருப்பு வகைகள் ஊற வைச்சு அரைச்சோ இல்லைனா பச்சை மிளகாய், இஞ்சி மட்டும் தேங்காயோடு சேர்த்து அரைச்சோ இல்லைனா மிளகாய் வற்றல், வெந்தயம், தேங்காய் வறுத்து அரைத்தோ பண்ணுவார்கள். இவை ஒவ்வொன்றிற்கும் செய்முறைக்கேற்பப் பெயர் மாறினாலும் இங்கே மோர்க்குழம்புன்னே குறிப்பிடுகிறேன்.

அந்த மோர்க்குழம்பு பண்ணுவதற்கு இந்தச் சட்னி இருந்தால் போதும். கொஞ்சம் போல் தனியா/ கொத்துமல்லி விதை, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு வகைக்கு ஒரு டீஸ்பூன் எடுத்து ஊற வைச்சு அரைக்கவும். மிளகாயோ அல்லது மிவத்தலோ வேண்டாம். அதான் சட்னியிலே போட்டு அரைச்சிருக்கீங்களே அது போதும். காரம் தேவைப்பட்டால் ஒரே ஒரு பச்சை மிளகாய் பருப்புக்களோடு சேர்த்து அரைக்கலாம். இதையும் சட்னியையும் ஒன்றாகக் கலந்து கொள்ளவும். அல்லது சட்னியைத் தனியாகவே வைக்கலாம், பரவாயில்லை. அடுப்பில் மோர்க்குழம்புக்கான தானைப் போட்டு அதற்கு மட்டும் உப்பு, மஞ்சள் பொடி போட்டு வேக வைக்கவும். வெண்டைக்காய் எனில் தே.எண்ணெயில் கடுகு தாளித்துக் கொண்டு கருகப்பிலை சேர்த்து வெண்டைக்காயைப் போட்டு மஞ்சள் பொடியும் வெண்டைக்காய்க்கு மட்டும் உப்பும் போட்டு நன்றாக வதக்க வேண்டும். இந்தப் பருப்பு அரைத்த விழுதோடு தேவையான அளவு தேங்காய்ச் சட்னி மிச்சத்தைச் சேர்த்துக் கலந்து கொண்டு அடுப்பில் ஏற்றிக் கொதிக்க விடவும்.

நல்ல கெட்டியான மோரில் கொஞ்சம் போல் உப்பு, மஞ்சள் பொடி, பெருங்காயம் சேர்த்துக் கொண்டு கொதிக்கும் கலவையில் சேர்க்கவும். சிறிது நேரத்திலேயே கெட்டியாகிப் பொங்கி வர ஆரம்பிக்கும். கீழே இறக்கித் தேங்காய் எண்ணெயில் கடுகு, வெந்தயம், மி.வத்தல், கருகப்பிலை தாளிக்கவும்.

அடுத்த திப்பிச முறை! மிஞ்சி இருக்கும் சட்னியை உடனே எடுத்து வீணாகி விடாமல் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும். மாலை அரிசி உப்புமாவுக்கான ஏற்பாடுகளைப் பண்ணவும்.அரிசி உப்புமாவுக்கு அந்தச் சட்டினியையே போட்டுக் கொண்டு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம். அல்லது அரிசி உப்புமாவுக்கு அரைத்து விடலாம். ஹிஹிஹி! மேலே சொன்னாப்போல் துபருப்பு, கபருப்புக்களோடு சின்னதாய் ஒரு மி.வத்தல் சேர்த்து ஊற வைக்கவும் இதை நன்கு நைஸாக அரைக்காமல் கொஞ்சம் கொரகொரவென அரைக்கவும். அரிசி உப்புமாவுக்கு உருளி அல்லது வெண்கலப்பானை அல்லது கடாயில் நீங்கள் வழக்கம் போல் தாளிக்கும் முறையில் தாளிக்கவும். இந்த அரைத்த விழுதோடு தேவையான அளவுக்குச் சட்டினியைக் கலந்து கொண்டு அரிசி உப்புமாவுக்குத் தேவையான நீரைச் சேர்த்துக் கலக்கிக் கொண்டு தாளித்திருக்கும் உருளி/வெண்கலப்பானை/கடாயில் கொட்டவும். தேவையான உப்புச் சேர்க்கவும். கொதி வந்ததும் அரிசி உப்புமாவுக்கு உடைத்து வைத்திருப்பதைப்போட்டுக் கிளறவும்.

இன்னொரு முறையில் மாலை டிஃபனுக்கு கோதுமை ரவை, கொஞ்சம் புழுங்கல் அரிசி/பச்சரிசியோடு கபருப்பு, உபருப்பு, துபருப்பு வகைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் நனைச்சு ஊற வைக்கவும். நன்கு ஊறியதும் ஒன்றிரண்டு மி.வத்தல், உப்புக் கொஞ்சமாக, பெருங்காயம் போட்டு அரைத்ததும் ஊற வைச்ச தானியங்களைப் போட்டு அரைத்த பின்னர் இந்தச் சட்னித் தேங்காய் விழுதையும் சேர்த்து அரைக்கவும். பின்னர்  அடை தோசை போல வார்க்கலாம். எல்லாவற்றுக்கும் நீங்கள் கலவையைச் சேர்க்கும் விகிதத்தில் தான் இருக்கிறது.  முந்தாநாள்/அக்ஷய த்ரிதியை அன்று வடைக்கு அரைத்த மாவு எல்லாம் வடையாகத் தட்டவில்லை. கொஞ்சம் மாவு மிச்சம். கோதுமை மாவு சேர்த்து இந்த உளுந்து மாவைப் போட்டு கோதுமை தோசை வார்க்கலாம்னு நினைச்சேன். அப்படியும் செய்யலாம் தான். ஆனால் கோதுமை ரவை நிறைய இருப்பதால் அதைச் செலவு செய்ய வேண்டி கோதுமை ரவையோடு அரிசி+பருப்பு வகைகள் கொஞ்சம் போல் நனைத்துக் கொண்டு ஊறியதும் ஒரே ஒரு மிவத்தலோடு ஊறியதை அரைத்துக் கொண்டு வடை மாவையும் போட்டு நன்றாகக் கலந்து தோசை வார்த்தால் அடை மாதிரியே வாசனையாக நன்றாக இருந்தது.  இதே போல் ஆமவடைக்கு அரைத்த மாவு இருந்தால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிட்டு மறுநாள் பருப்பு உசிலி போல் பண்ணலாம். அல்லது அரிசி மட்டும் ஊற வைத்து அரைத்துக் கொண்டு இந்த வடைமாவையும் போட்டு ஒரு சுற்று சுற்றிவிட்டு அடை தோசையாகவும் வார்க்கலாம்.

கூடியவரை மிஞ்சாமல் சமைப்பதே நல்லது! மிஞ்சினால் அதை உடனடியாக வேறு விதத்தில் மாற்றிச் செய்து விடலாம். ரவை உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா போன்றவை காலை செய்தது மிச்சம் இருந்தால் மதியம் ஒரு உருளைக்கிழங்கு அல்லது 2 கிழங்கை நன்கு வேக வைத்துக் கொண்டு ப்ரெட் இருந்தால் இரண்டு ஸ்லைஸையும் தண்ணீரில் நனைத்துச் சேர்த்துக் கொண்டு உப்புமாவையும் போட்டுக் கலந்து கொண்டு கட்லெட்டாகப் பண்ணிவிடலாம். தொட்டுக்க சாஸ் அல்லது தக்காளிச் சட்னி! மாற்றிப் பண்ணுவதற்கேற்ற பொருட்கள் வீட்டில் இருக்கணும்! இரண்டே நபர்கள் தான் என்றால் கூடியவரை கொஞ்சமாகப் பண்ணுவதே நல்லது. முந்தாநாள் சேவை செய்ய வேண்டி இரண்டு ஆழாக்குப் புழுங்கலரிசி ஊற வைத்து அரைச்சேன். சேவைக்கு எனக்கு மூன்று ஈடு இட்லிக்கான மாவே தேவை. மிச்சம் மாவு இருந்தது. அதற்கேற்றாற்போல் அரைக்கிண்ணம் பச்சரிசியை ஊற வைத்துத் தேங்காய்த் துருவலைப் போட்டு நன்கு அரைத்து மிச்சப் புழுங்கலரிசி மாவோடு கலந்து கொண்டு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து நேற்று நீர் தோசையாகப் பண்ணி விட்டேன். மாவு செலவு ஆகி விட்டது. புழுங்கலரிசி மாவு சேவைக்கு அரைத்தது நிறையவே இருந்தால் அதைக் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பின்னர் துணியில் வடிகட்டி நீரை எடுத்து விட்டு வறுத்து அரைத்த உளுத்தமாவும் வெண்ணெயும் போட்டுக் கொண்டு சீரகம் சேர்த்துக் கை முறுக்கு,  தேன்குழல் அல்லது காரம் போட்டுத் தட்டை  போன்றவையும் பண்ணலாம்.


எல்லாம் சரி, சாதம் மிஞ்சினால்? காலை வடித்த சாதம் எனில் இரவே அதைத் தயிர்சாதம் பிடித்தால் பிசைந்து சாப்பிடலாம். இல்லை எனில் கொஞ்சம் போல் பாசிப்பருப்பை வறுத்து வேக வைத்துக் கொண்டு, காய்கறிகளைப் போட்டு, இஞ்சி, ஏலக்காய், கிராம்பு, வெங்காயம் போட்டு வதக்கி மிச்சம் சாதத்தையும் வெந்த பருப்பையும் கொட்டிக் கலந்து நெய்யில் பெருங்காயம், மிளகு, ஜீரகம், கருகப்பிலை பொரித்துப் போட்டு வட இந்தியக் கிச்சடி மாதிரிச் செய்யலாம். வெங்காயம் நறுக்கி வதக்கி உ.கி. தக்காளி, வேர்க்கடலை போட்டுப் பச்சை மிளகாய், கருகப்பிலை தாளித்துக் கொண்டு மஞ்சள் பொடி சேர்த்து இந்தச் சாதத்தையும் கொட்டிக் கலந்து எலுமிச்சம்பழம் பிழிந்து கொத்துமல்லி தூவிக் கொண்டு அவல் உப்புமா மாதிரியும் பண்ணிச் சாப்பிடலாம்.  பிடித்தால் துபருப்பு வேக வைத்துக் கொண்டு நீர்க்கப் புளி ஜலம் ஊற்றிக் கொண்டு உப்பு, மஞ்சள் பொடி போட்டு சாதத்தையும் போட்டுக் கலந்து கொண்டு நெய்யில் காய்களை வதக்கிச் சேர்த்துக் கடுகு, கருகப்பிலை, பச்சை மிளகாய் தாளித்துக் கொண்டு கொஞ்சம் சாம்பார்ப் பொடி போட்டுக் கலந்தும் சாப்பிடலாம்.அல்லது மிவத்தல், தனியா, கபருப்பு, வெந்தயம், சோம்பு, கிராம்பு வறுத்துப் பொடித்துக் கலக்கலாம்.

இதை எல்லாம் படித்து விட்டு எப்போவும் மிஞ்சும்; இப்படித் தான் பண்ணுகிறேன் என நினைக்க வேண்டாம். மிஞ்சும் சமயங்களில் எப்போதேனும் யாரேனும் இருந்தால் பண்ணுவேன். சாப்பிடவும் ஆள் வேண்டுமே! எங்க இரண்டு பேருக்கெனில் நான் சாதம் வைப்பதே ஓரே ஓரு ஆழாக்குத் தான். கைப்பிடி மிஞ்சும். அதை ராத்திரி இரண்டு பேரில் யாரானும் போட்டுக் கொள்வோம். சில நாளைக்கு மிச்சமே இருக்காது. இப்போது வேலை செய்யும் பெண்மணி வருவதால் குழம்பு, ரசம் மிஞ்சினால் அவர் கொண்டு போகிறார். இவை எல்லாம் வீட்டில் நிறையப் பேர் இருந்து சமைத்து மிஞ்சும்போது செய்ய வேண்டியவை. அல்லது இரண்டு பேருக்கே சிலர் சமைக்கத் தெரியாமல் நிறையச் சமைத்துவிடுகிறார்கள் அப்போது இம்மாதிரிச் செய்து செய்தவை வீணாகாமல் தீர்க்கலாம். ஆகவே எங்க வீட்டுக்கு வரவங்க பயப்படாமல் சாப்பிட வரலாம். புதுசாவே சமைச்சுப் போடுவேன். அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே! உச்சி மீது வானிடிந்து வீழ்ந்த போதிலும் அச்சமில்லாமல் சாப்பிடலாமே!

79 கருத்துகள்:

  1. அட? போணியே ஆகலையா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ...  இப்போ எல்லாம் மெதுவாத்தான் தொடங்கும்.  அதிலும் வல்லிம்மா முதலில் வருவாங்க..   அவங்களுக்கும் முதுகு வலி...

      நீக்கு
  2. சரி, சரி, நானே போணி பண்ணிக்கிறேன். அனைவருக்கும் நல்வரவு, காலை/மாலை வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  3. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், கௌ அண்ணா மற்றும் எல்லோருக்கும்.

    நேற்று சும்மா நெல்லைய புல் பண்ணினாலும் நினைத்தேன் இன்று வேறு யாருடைய ரெசிப்பியாக இருக்கும் என்று ஆனால் கீதாக்காவின் திப்பிஸம் எதிர்பார்க்கவில்லை!!

    கீதா

    பதிலளிநீக்கு
  4. சமையல் குறிப்பு இல்லைனா என்ன? உபயோகமான குறிப்புக்கள் கொடுத்திருக்கேனே, அது போதாது? ம்ஹூம், யாருக்கும் ரசிக்கத் தெரியலை. கோவிச்சுண்டு வெளிநடப்புச் செய்யலாமானு யோசிக்கிறேன். அப்போவும் யாரும் கண்டுக்கலைனா என்ன செய்யறது? :))))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் கண்டு கொண்டேனே பதிலும் கொடுத்திருக்கிறேனே! நீங்க ஓடிட்டீங்களா அக்கா?

      கீதா

      நீக்கு
    2. வருவாங்க... மெதுவா வருவாங்க.. பொறுமை.. பொறுமை...!!!

      நீக்கு
    3. கீதா வந்து சொல்லி இருக்கும் பதில்களை அக்கா பார்க்கவில்லை போல...!

      நீக்கு
    4. ஆமாம், அத்தனை அதிகாலையில் திடுக்கிடும் செய்தி. வேலை செய்யும் பெண்மணி இன்று விடுமுறை போட்டுட்டாங்களாம். நேற்று இரண்டாவது டோஸ் தடுப்பு ஊசி போட்டுக் கொண்டாங்க. அதன் பிரதிபலிப்புப்போல! இந்த அதிர்ச்சியில் கணினியை மூடினேன். திரும்ப இப்போத் தான் திறக்கிறேன்.

      நீக்கு
  5. சாதம் மிஞ்சினால் சிலர் அதை அரைத்துக் கொண்டு பச்சரிசி மாவோடு சேர்த்துத் தேங்காய் போட்டுத் தோசையாக வார்ப்பார்கள். அப்படியும் செய்யலாம். அல்லது மிஞ்சின சாதத்தில் பச்சை மிளகாய், உப்பு, பெருங்காயம் போட்டு அரைத்துக்கொண்டு எலுமிச்சம்பழம் பிழிந்து கொண்டு சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிப் போட்டுக் கலந்து கொண்டு உருட்டி உருட்டி கருவடாம் மாதிரி வெயிலில் வைத்துக் காயவைத்து எடுத்துத் தனியாக வைத்துக் கொண்டால் தேவைப்படும்போதோ அல்லது மாலையில் காஃபி, தேநீரோடவோ பொரித்துச் சாப்பிடலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்கள் வீட்டில் புனர்பூஜை அன்று இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டது.  பாஸிடம் இந்த இரண்டாவது ஐடியாவைச் சொன்னேன்.  அவர் செயல்படுத்தவில்லை!

      நீக்கு
    2. ஸ்ரீராம் - நான் அப்படிச் செய்யவா என்று பாஸிடம் கேட்டிருந்தால் ஓகே என்று சொல்லியிருப்பார். அவரைச் செய்யச் சொன்னால், இருக்கும் வேலையில் எப்படி இதையும் செய்வார்? ஹாஹா

      நீக்கு
    3. தோசை மாவு இருந்தால் இந்த மிச்ச சாதத்தைத் தேங்காய் சேர்த்து அரைத்துக் கலந்து ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்துக் கரைத்துக் கொண்டு. ஆப்பம் மாதிரி வார்க்கலாம். பூப் போல் வரும். ஆப்பச்சட்டியை எல்லாம் இப்போத் தூக்கிச் சுழட்டினால் நான் சுழண்டு போக நேரிடும் என்பதால் அந்த வேலையை எல்லாம் விட்டு எத்தனையோ வருஷங்கள் ஆச்சு! :(

      நீக்கு
  6. கீதாக்கா கிட்டத்தட்ட நானும் இப்படித்தான் பயன்படுத்துகிற வழக்கம் மீந்து போனால்.

    கூடியவரை மீறாமல் செய்கிறேன் அதுவும் இப்போதெல்லாம். காரணம் குளிர்சாதனப்பெட்டி இல்லை, நாங்களும் இருவர் என்பதால்.

    சட்னி பலவித மோர்க்குழம்புகளாகும் இல்லைனா அன்று மதியம் கூட்டு ஏதேனும் செய்து அதில் கலந்துவிடுவேன்.

    கொஞ்சம் கற்பனையும் திட்டமிட்டும் செய்தால், இப்படித் திப்பிஸத்தில் பிறந்த நிறைய வகைகள் நன்றாகவே இருக்கும் திப்பிஸம் என்பதும் தெரியவே தெரியாது புது வகை ரெசிப்பிஸ் கிடைத்திருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நாங்கள் அளவாய்ச் செய்து விடுகிறோம்.  மிஞ்சினால் வீட்டில் வேலை செய்பவர் எடுத்துக் கொள்வார்.

      நீக்கு
    2. அப்போ, கீதா ரங்கன்(க்கா) ஒரு தடவை கொடுத்த கேக், எதன் திப்பிசமாக இருக்கும்? சேவை எதனுடைய திப்பிசமாக இருக்கும்? ஒன்றும் தெரியாமல் அப்பாவியாகச் சாப்பிட்டுவிட்டாயே (என்று என்னைச் சொல்லிக்கறேன்)

      நீக்கு
    3. ஸ்ரீராம் ஆமாம் நானும் பெரும்பாலும் அளவாய் சமைத்துவிடுகிறேன். இப்ப ரெண்டே பேர் இல்லையா...வேலைக்கு ஆளும் கிடையாது. சில சமயம் வெகு கொஞ்சம் மிஞ்சும்.

      நெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....ஆனால் சிரித்துவிட்டேன்...

      கீதா

      நீக்கு
    4. இன்னிக்கு முருங்கைக்காய்க் குழம்பும், வேப்பம்பூ ரசமும். புளியை நீர்க்கக் கரைத்திருந்தேன் ரசத்தில். அதனால் மிச்ச ரசத்தை நன்கு வடிகட்டிக் குடித்து விட்டேன். ஒரே ஒரு கரண்டி குழம்பு மிச்சம். வைச்சிருக்கேன். ராத்திரிக்கு மோர் சாதத்திற்குத் தொட்டுக்கலாம்னு.

      நீக்கு
  7. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கமலாக்கா நேற்று நீங்கள் கொடுத்திருந்த பதிலைப் பார்த்தேன். கோமதிக்கா பதிவில் கொடுத்த கருத்துகளுக்கு உங்கள் கருத்தைக் கண்டு மிக்க நன்றி கமலாக்கா. அது என்னவோ நேற்று சட்டென்று மனசுல பட்டது. எல்லா நேரத்திலும் அப்படி வருவதில்லை.

      வெங்கட்ஜி யின் இன்றைய பதிவின் வாசகம் கோட் செய்கிறேன்...

      மிக்க நன்றி கமலாக்கா

      கீதா

      நீக்கு
    2. காலை வணக்கம் சகோதரி.

      அங்கு (சகோதரி கோமதி அரசு பதிவில்) நன்றாக கவிதையாக பதில் தந்திருந்தீர்கள். அதை படித்தவுடன் உங்களை இங்கு கண்டதும் உடனே சொல்லத் தோன்றியது. என் கருத்தை படித்து பார்த்தமைக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்

      நீக்கு
    3. ஆஆஆஆஆ கமலாக்கா கவிஞர் ஸ்ரீராம் மற்றும் இன்னும் பல கவிஞர்கள் இருக்கையில் நான் எழுதியதைப் போய் கவிதை என்று சொல்லிட்டீங்களே!!!!!! அதெல்லாம் கவிதையே அல்ல அல்ல அல்ல.... மடக்கிப் போட்ட உரைநடை! உரைநடை!

      கீதா

      நீக்கு
  8. வணக்கம் கீதா சாம்பசிவம் சகோதரி

    நேற்று நானும் திங்கள் தொடர் வருகை பதிவாக சகோதரர் நெல்லையின் சமையல் குறிப்பாக இருக்குமென நினைத்து, அவருக்கு ஒரு கருத்து போட்டிருந்தேன். ஆனால் "யார் சமையல்" எனக் கேட்ட உங்களது பதிவே வரும் என்பதற்காகத்தான் சகோதரர் ஸ்ரீராம் கோடிட்டு காண்பித்திருக்கிறார் என்பதை புரிந்து கொள்ளவில்லை.:) டியூப் லைட் இப்போதுதான் எரிகிறது. ஹா.ஹா.

    உங்கள் திப்பிச விளக்கங்கள் அருமை. இதே போல்தான் நானும் பல விதத்தில் செய்து பொருட்களை வீணாக்காமல் சாப்பிட்டு வருகிறோம். சட்னி மோர்குழம்பாகவோ, அல்லது கீதா ரெங்கன் சகோதரி சொல்வது போல் கூட்டிலோ பயன்படுத்துவேன். வடை மாவையும் அடையாக மாற்றி விடுவேன். ஆனால் சேவை மாவை முறுக்கு, தட்டை செய்வது என்ற உங்கள் பாணி நன்றாக உள்ளது. நான் கிருஷ்ண ஜெயந்திக்கு மாலை கலந்த தேன்குழல் மாவையே சில சமயங்களில் கு. ச. பெட்டியில் வைத்து மறுநாள் கரைத்து தோசையாக்கி இருக்கிறேன்.
    பயனுள்ள திப்பிச வகைகளை தந்தமைக்கு நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் சேவைக்குப் புழுங்கலரிசியைத் தான் ஊற வைச்சு அரைச்சுப் பண்ணுவேன் கமலா. அதில் எல்லா மாவிலேயும் சேவை பிழிந்தால் நிறைய ஆயிடுமே. ஆகவே மிச்ச மாவில் கை முறுக்குச் சுத்தலாம், தட்டை பண்ணலாம். வெறும் உளுத்தமாவு சேர்த்துத் தேன்குழலாகவும் பிழியலாம். கடலை மாவு சேர்த்து முள்ளூத் தேன்குழல் பண்ணலாம்.

      நீக்கு
  9. அன்பின் வணக்கம் அனைவருக்கும்.
    இறையருள் சூழ்க எங்கெங்கும்...

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  10. @ கீதாக்கா...

    // இரண்டு பேருக்கே சமைக்கத் தெரியாமல் சிலர் அதிகமாக சமைத்து...//

    நான் எனக்கு மட்டுமே சமைக்கிறேன்.. அற நெறிப்படி அது பிழை.. அந்த மாதிரி சமைக்கக் கூடாது... ஆனாலும் வேறு வழியில்லை!..

    சமைக்கப்பட்ட உணவும் வீணாகக் கூடாதே!..

    சுற்றிச் சுழன்று எல்லாப் பக்கங்களிலும் மாமிசப் பட்சிணிகள், சர்வ பட்சிணிகள்..

    நடுவில் நான் ஒருவன் தர்ம பட்சிணி..

    மதியத்தில் அறைக்குத் திரும்பி சமைத்தால் 4:00 மணியளவில் மதிய உணவு.. இரவுக்கு டிபன் பாக்ஸில் எடுத்து வைத்து - பாத்திரங்களைக் கழுவி விட்டால் மறுபடி அடுத்த நாள் தான்...

    என்றாவது பாயசம், கேசரி செய்தால் மற்றுமொரு வேளைக்கு இருக்கும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பழகிக் கொண்டு விட்டீர்கள் துரை. அதான் கணக்காச் சமைக்க வருது. இங்கே என்னதான் பார்த்துப் பார்த்துச் செய்தாலும் கொஞ்சம் மிஞ்சத் தான் செய்யும்.

      நீக்கு
  11. காலை வணக்கம் அனைவருக்கும்.

    நல்லவேளை என் மனைவி எபி தி.பதிவுகளை எப்போதும் படிப்பதில்லை. அப்படிப் படித்திருந்தால், இப்போ போட்ட டிஃபன் ஒரிஜினலா இல்லை திப்பிசமா, சப்பாத்திக்குப் போட்ட, தால் புதிதாகப் பண்ணினதா இல்லை திப்பிசமா, ரவா இட்லி ஒருவேளை காலையில் பண்ணின ரவா உப்புமாவின் திப்பிசமா என்றெல்லாம் ஒவ்வொரு தடவையும் யோசித்து ப்ரெஷரிலிருந்து எல்லாவித பிரச்சனைகளும் வந்திருக்கும்.

    நல்லவேளை திப்பிச எக்ஸ்பர்ட்டின் ஆலோசனைகளை அவர் படிப்பதில்லை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நெல்லை, திப்பிசத்தப்புப் பண்ணறீங்க. ரவா உப்புமா, அவல் உப்புமா, சேமியா உப்புமா ஆகியவற்றில் இருந்து கட்லெட் தான் பண்ணலாம். ரவா இட்லியெல்லாம் பண்ண முடியாது. அவல் இட்லியோ, சேமியா இட்லியோ பண்ண முடியாது. இஃகி,இஃகி,இஃகி! இதை எல்லாம் உங்க மனைவி கிட்டேச் சொல்லி வைக்காதீங்க. அப்புறமா இங்கே வரவே பயப்படப் போறாங்க. :)))))

      நீக்கு


  12. //கூடியவரை மிஞ்சாமல் சமைப்பதே நல்லது! // வாய்க்கு ருசியாக சமைத்தால் மிஞ்சவே மிஞ்சாதல்லவா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரண்டு பேருக்குனு சமைக்கையில் கொஞ்சமானும் மிஞ்சத்தான் செய்கிறது.

      நீக்கு

  13. ////எல்லாம் சரி, சாதம் மிஞ்சினால்/// அதில் சிறிது உப்பும் மிளகாய் பொடி சேர்த்து பிசைந்து சிறிய அளவில் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெய்யிலில் காயவைத்து எடுத்து கொண்டால் சோற்று வடகம் ரெடி எதற்கு வேண்டுமானாலும் பொரித்து சாப்பிடலாம்

    பதிலளிநீக்கு
  14. இப்ப எங்கவிட்டிலும் ரென்டு பேருதான் சமைக்கவே தோன்றமட்டேங்கிறது ஏதாவது மிஞ்சினால் அதை அப்படியே பிரிசரில் வைத்து தேவையான சமயத்தில் எடுத்து சூடுபடுத்தி சாப்பிடுவோம். நல்லா வகையாக சமைக்க ஆசை இருந்தும் இப்ப இங்க சாப்பிட ஆள் இல்லை கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்


    1. கடந்த வெள்ளிகிழமை என் மகளை அவள் கல்லூரிக் சென்று அழைத்து வந்தேன் நாளை திங்கள் கிழமை அவளைக் கொண்டு போய்விடுவேன்.. அவள் வந்ததால் அவளுக்கு பிடித்தவைகளை சமைத்தேன்... அவளுக்கு தேவையான பருப்பு பொடி ஊறுகாய் போன்றவற்றை தயாரித்து கொடுத்து இருக்கின்றேன் அவள் கல்லூரி வீட்டில் இருந்து 175 மைல் தூரத்தில் இருப்பதால் அவளை அழைத்து வந்து பார்த்து மகிழ முடிகிறது

      நீக்கு
    2. அதுவும் நல்லதுதான் மதுரைத் தபிழன். உங்க சமையலைச் சாப்பிட்டுவிட்டு ஹாஸ்டல் சாப்பாடு பெட்டர்னு ஃபீல் பண்ண வச்சிடுவீங்களோ?

      நீக்கு

    3. கீதா சாம்பசிவம் மேடம் இந்த ரிசிப்பையை எழுதியது கீதா ரங்கன் என்று நினைத்து கீதா என்று உங்களை அழைத்துவிட்டேன் மன்னிக்கவும்

      நீக்கு
    4. அதனால் என்ன? உண்மைத்தமிழரே! பரவாயில்லை. அம்பேரிக்காவில் வயதானவர்களையும் பெயர் சொல்லித் தானே அழைக்கின்றனர். குழந்தைகள் வகுப்பாசிரியரைக் கூடப் பெயர் சொல்லித் தானே சொல்கின்றனர். நான் ஒண்ணும் நினைச்சுக்கலை. மன்னிப்பெல்லாம் தேவை இல்லை.

      நீக்கு
  15. திப்பிசம் என்பது தமிழ்ச்சொல் தானா? பெயர்க்காரணம்? 

    பதிலளிநீக்கு
  16. சட்னி மிஞ்சினால்... என்று நீங்கள் சொல்லியிருக்கும் திப்பிசங்கள் உபயோகம்தான் என்றாலும், சட்னி எப்படி அவ்வளவு மிஞ்சும்? இது, ஒரு வீடு கட்டும்போது, ஒரு கதவு மிஞ்சிவிட்டால் கவலையில்லை, மொட்டை மாடியில் சின்ன ரூம் ஒன்றைக் கட்டி அதற்கு உபயோகப்படுத்துங்கள் என்று சொல்லுவதுபோல இருக்கிறது.

    நேற்று நீங்கள் மிரட்டல் விடும்போதே நினைத்தேன், ஶ்ரீராம் உங்கள் செய்முறையை வெளியிட்டுவிடுவார் என்று. ஹாஹா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சட்னியைத் தேவையான அளவுக்குப் போட்டுக் கொண்டாலும் மிஞ்சத்தான் செய்கிறது. எங்க அம்பத்தூர் வீட்டில் டைல்ஸ் போடும்போது எடுத்த பழைய மரக் கதவுகளை எல்லாம் தேவையானவங்களுக்கு வித்துட்டோம்.

      நீக்கு
  17. சாப்பிட அச்சம்லாம் கிடையாது. அதைத்தானே நீங்களும் சாப்பிடுவீர்கள்.

    இப்போ அச்சம்லாம், ஸ்பூனில் எல்லாம் பண்ணுகிறீர்களே..சட்னு வீட்டுக்கு வந்துவிட்டால், இந்த அட்ரஸுக்குப் போய் ஹோட்டல்ல சாப்பிட்டுக்கோங்க என்று சொல்லிடுவீர்களோ என்பதுதான்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா, இன்னிக்குக் கூட வாக்குவாதம். குழம்பு மிஞ்சிடுத்துனு. நாளைலேருந்து அவரையே புளி எடுத்துத் தரச் சொல்லி இருக்கேன். :)))))

      நீக்கு
    2. இங்கே எந்த ஓட்டலிலும் சாப்பிடும்படி இருப்பதில்லை. இந்த அழகில் உங்களை நான் எந்த ஓட்டலுக்குப் போகச் சொல்றது?

      நீக்கு
  18. மதியம் வருவதற்குள் எல்லோருக்கும் காலை வணக்கம் கூறி விடுகிறேன். அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  19. கீதா திப்பிசம் மன்னிக்கவும், கீதா சாம்பசிவம் அவர்களின் திப்பிசங்கள் பாராட்டப்பட வேண்டியவை. Don't waste food, food is God என்று பல மகான்கள் கூறியிருக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //கீதா திப்பிசம் மன்னிக்கவும்,// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் :))))))

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
  20. அரிசி உப்புமா மீந்தால் அதை உப்புமா கொழுக்கட்டை ஆக்கி விடலாம் இல்லையா?
    சமையல் கற்றுக் கொள்ளும் முன் திப்பிசம் செய்ய கற்றுக் கொண்டு விடுகிறீர்கள் என்பார் என் அண்ணா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இட்லி மீந்தால் இட்லி உப்புமா. ஆனால் அரிசி உப்புமா மீந்தால் கொழுக்கட்டையாக்கலாம் என்பதை இப்போதுதான் கேள்விப்படறேன். இனி பா.வெ. மேடம் எது கொடுத்தாலும், இது ஒரிஜனலா இல்லை இன்னொன்றின் திப்பிசமா என்றே மனது நினைக்குமே...

      நீக்கு
    2. அரிசி உப்புமா மிச்சத்தை மறுநாள் வத்தக்குழம்போடு அப்படியே சாப்பிடலாம். பண்ணின அன்றை விட மறுநாள் உப்புமாத் தான் ருசியாக இருக்கும். சரி! சரி! அது வேண்டாம்னா கொஞ்சம் பருப்பு வகைகளைக் கூட அரைத்துச் சேர்த்துத் தவலடையாப் பண்ணிடலாம்.

      நீக்கு
    3. இரவுக்கு பண்ணிய அரிசி உப்புமாவாவை இட்லி தட்டில் உப்புமா கொழுக்கட்டைகளாக பண்ணி வேக விட்டு வைத்தால், மறு நாள் மதியம் வரை நன்றாக கெடாமல் இருக்கும்.இரு தடவைகளாக வேகும் போது சீக்கிரம் வம்பாக போகும் நிர்பந்தம் அதற்கு வராது. ஒரு தட்டில் நீர் விட்டு அதில் உ. கொழுக்கட்டைகள் அடங்கிய பாத்திரத்தை இறக்கி வைத்து விட்டால்,வெய்யில் காலத்திலும் சிறிதேனும் கெட்டுப்போக வாய்ப்பேயில்லை. சாதம், சாதம் சம்பந்தபட்ட வகைகளை ப்ரிஜ்ஜில் வைக்கும் தயக்கமும் நம்மை விட்டு அகலும். சாதம் பத்து இல்லையா? ("அப்படி என்றால் என்ன? என்று இப்போதுள்ள உறவுகள் என்னை கேட்கிறார்கள். சமயங்களில் அடுப்பிலிருந்து கீழே இறக்கிய பின் உப்பை சேர்க்கும் புளிக்காய்ச்சல் போன்றவைகளை பத்து இல்லை என கு.சா.பெட்டியில் வைக்கிறீர்கள். சாதத்தை உப்பில்லாமல்தானே சமைக்கிறோம். அதைப்போய் பத்து,பதிணொன்று எனச் சொல்கிறீர்களே?"என நியாயமான கேள்விகளும் ஆஜர்படுத்தப்படுகிறது. நமக்கு அம்மா வழி பழக்கங்கள் மனதுக்குள் இருப்பதால், அவர்களுக்கு என்ன பதில் சொல்வது எனத் தெரியாமல், மென்று முழுங்க வேண்டியிருக்கிறது.எங்கள் அம்மா நவராத்திரிக்கு இனிப்பு புட்டு பண்ணினாலும், மீதமிருப்பதை தட்டில் நீர் வைத்து அதில்தான் இறக்கி வைப்பார்கள். மூன்று நாட்களுக்கு மேலாக வைத்து சாப்பிடுவோம். அப்போது கு. சா.பெட்டி வசதிகள் கிடையாது. அது பயன்பாட்டுக்கு வந்த பின்னும் அதே கட்டுப்பாடுகள்தான்.அதே பழக்கங்கள் என்னுள்ளும் இன்று வரை வியாபித்திருக்கிறது. என்ன செய்வது?

      நீக்கு
    4. நான் எறும்புகளுக்குப் பயந்து பால், தயிர், மாவு, சாப்பாடு எல்லாவற்றையுமே எப்போதுமே ஒரு தட்டில் நீர் வைத்துத் தான் பாத்திரங்களை அதில் வைக்கிறேன். நான் படுத்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் நெய்யில் கூட எறும்பு வந்திருக்கு! :( அதைச் சாப்பிடாமல் வேறு பயன்பாட்டிற்குனு வைச்சிருக்கேன்.

      நீக்கு
    5. //சமயங்களில் அடுப்பிலிருந்து கீழே இறக்கிய பின் உப்பை சேர்க்கும் புளிக்காய்ச்சல் போன்றவைகளை பத்து இல்லை// - கமலா ஹரிஹரன் மேடம்..

      உங்களுக்குத் தெரிந்திருக்கும். சமைத்ததில் எது விரைவில் வீணாகப் போய்விடுமோ (வெளியில் வைத்தால்) அது பத்து. சர்வ சாதாரணமாக பல நாட்கள் இருக்கும் மற்ற எல்லாம் பத்தல்ல. நெய், ஊறுகாய், புளிக்காய்ச்சல், இனிப்புகள் எல்லாவற்றிர்க்கும் இந்த லாஜிக் பொருந்தும். பொதுவா எண்ணெய் அதிகம் சேர்த்தால் அது விரைவில் கெட்டுப்போகாது.

      கெட்டுப் போகும் வகையறாவைத் தொட்டுவிட்டு, கை அலம்பாமல், மற்ற வஸ்துக்களை (நெய், ஊறுகாய், மிளகாய்பொடி, பருப்புப்பொடி....) தொடக்கூடாது.

      நீக்கு
    6. வணக்கம் சகோதரரே

      உண்மைதான்.. எப்போதுமே தயிர், மோர் ஊறுகாய், நெய், சட்னி, துவையல் வகையறாக்கள், இனிப்பு போன்றவைகள்,( ஏன் குடிக்கும் தண்ணீர் உட்பட) இதை சாதம், சாதத்துடன் சேர்ந்து சமைக்கும், சாம்பார், ரசம், கறி, கூட்டு வகைகள் இவைகளுடன் சேர்த்து வைக்காமல் தனியே ஒரு ஓரமாக வைத்து கொண்டுதானே பரிமாறுவோம். தனியாக அமர்ந்து சாப்பிடும் போதும் இவைகளை இடது கையால்தான் எடுத்துப் போட்டுக் கொள்வோம். அப்படியே இடையே சாம்பார் இவைகளை தொட்டு பரிமாறிக் கொண்டாலும், மீண்டும் இடது கையை அலம்பி விட்டுதான் தயிர் போன்ற மற்றவைகளை எடுத்து போட்டு கொள்வோம். சமைக்கும் அடுப்பிலிருந்து கீழே இறக்கிய பின்பு பதார்த்தங்களுக்கு உப்பு சேர்த்தால் பத்தில்லை என்று சிலர் அதை பின்பற்றுகிறார்கள். அந்த காலத்தவர்கள் அதையும் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அதைச் சொன்னேன். இப்போது காலத்திற்கேற்ப எல்லாம் மாறி விட்டது. நீங்கள் சொன்ன தகவல்கள் அனைத்தும் உண்மைதான். நன்றி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
    7. வணக்கம் சகோதரி

      எறும்பு வராமலிருக்க நானும் சமைத்தவற்றையும்,மாவு, தயிர். பால் போன்றவற்றையும், உங்களைப் போல், நீர் விட்ட தட்டில் வைத்து பாதுகாத்திருக்கிறேன். இப்போதும் சமயங்களில் அப்படித்தான் செய்கிறேன். கு.சா.பெ வாங்காத என் அந்த காலத்தில் இதுதான் ஏழைகளின் கு.சா.பெட்டி என்பேன்.கருத்துக்கு நன்றி சகோதரி.

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      நீக்கு
  21. எல்லாமே சூப்பர் ஐடியா.. மோர் குழம்பு தவிர்த்து மற்றவை சுலபமாக தோன்றவில்லை.
    இத்தனை நாள் திப்பிசாம்னா கெட்ட வார்த்தைனு நினைச்சிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  22. திப்பிசம் எந்த ஊர் வழக்கு?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. திப்பிசத்தோட சேர்ந்து தீராமைனு வரும். திப்பிசமும் தீராமையும் ஜாஸ்தினு சொல்லுவாங்க.

      நீக்கு
  23. சமையல் செய்வதற்கு முன்னரே திப்பிச வேலைகளை யோசித்து வைத்துக் கொள்வது வழக்கமாகி விட்டது போலும்! ஹாஹா... இந்த திப்பிச வேலைகளை நினைத்தாலே கொஞ்சம் டரியல் ஆகி விடுகிறது! :)

    பதிலளிநீக்கு
  24. உணவுகளை வீணாக்காமல் இப்படி மாற்றி செய்வது நல்லதுதான்.


    புதிதாக நாம் செய்ய நினைத்த சமையல் சில நேரம் சரியாக வராமல் போய் விடும். அதையும் எப்படி சமாளித்து வேறு மாதிரி உணவாக செய்து அசத்துவது என்று தெரிந்து கொள்வதும் நல்லதுதான்.

    அடுத்து அதுவும் வரும் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் இதை ஏற்கெனவே போட்டிருக்கேன். கோமதி. ஐ.ஆர். 20 அரிசியில் சேவைக்கு அரைச்சுட்டுப் பண்ணவே முடியலை. அந்த மாவில் (இத்தனைக்கும் வெந்த மாவு) புளியைக் கரைத்து ஊற்றி உப்புச் சேர்த்துப் பின் வெங்காயம், கடுகு, உபருப்பு, மி.வத்தல் தாளிச்சுப் புளி உப்புமாவாக மாற்றினேன். சுட்டி கிடைக்குதானு பார்க்கிறேன்.

      நீக்கு
  25. சமையல் த்ப்பிசங்களுக்கு அணுகவும் கீசா மேடம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எத்தனை அருமையான பதிவு.
      அன்பு கீதாமா.

      திப்பிசம்னு சொல்லி எவ்வளவு நல்ல டிப்ஸ் கொடுத்திருக்கிறீர்கள்!!!
      இதை சேமித்து வைக்கிறேன்.

      மிக அருமையான யோசனைகள்.

      மிக மிக நன்றி மா.

      நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!