புதன், 29 செப்டம்பர், 2021

மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வது தவறா?

 

வல்லிசிம்ஹன்: 

1, ஒருவரது எழுத்தை விமரிசனம் செய்வது எப்பொழுதுமே புகழ்ந்து பேசுவது போல இருக்க வேண்டுமா?

# இரண்டு பக்கங்களையும் எடுத்துக் காட்டுவதுதான் நல்ல விமர்சனம்.  நம் அபிமான நபர்களின் குறைகளை எடுத்துச் சொல்லும் விமர்சனங்களை ஆக்க பூர்வமாக அணுகுவதுதான் நல்ல படிப்பு.

& நல்ல விஷயங்களை முதலில் சொல்லி, பிறகு, மற்றவற்றை சொல்லலாம் - என்று நான் நினைக்கிறேன். 

2, அதே போல அந்த எழுத்தில் காணப்படும் சில தவறுகளைச் சுட்டிக் காட்டுவதும் ஒரு தவறா?

# மேலேயே பதில் சொல்லி விட்டேன்.

& தவறுகளை சுட்டிக்காட்டுவதில் தவறே இல்லை. ஆனால் - முதலில் சில நல்ல விஷயங்களைப் பாராட்டி பிறகு தவறுகளை சுட்டிக்காட்டினால் கேட்பவருக்கு வலிக்காது. 

3, கருத்து வேறுபாடு இருந்தால் அதை நேரே சொல்வது நன்மையா இல்லையா. சர்க்கரை தடவிச் சொல்ல வேண்டுமா?

# சர்க்கரை தடவாவிட்டாலும் தரம் தாழ்ந்த சொற்களை வீசாமல் இருந்தால் நலம்.

கீதா சாம்பசிவம் :

1. கருத்து வேறுபாடு என்பது அப்பா/பிள்ளை, அம்மா/பெண், கணவன்/மனைவி, சகோதரன்/சகோதரி என்றிருப்பவர்களுக்குள்ளேயே இருக்கையில் மற்றவர்களுடன் கருத்து வேறுபாடு கொள்வது தவறா?

# கருத்து வேறுபாடுகள் எவருடனும் எது குறித்தும் இருக்கும்தான்.

& கருத்து வேறுபாடு கொள்வதில் தவறு இல்லை; அதை வெளிப்படுத்தும் வகையில்தான் தவறுகள் ஏற்படக்கூடும். 

2. எந்த ஒரு விஷயத்துக்குமே மாறுபட்ட கருத்துகள் இருக்கத்தான் செய்யும். அதை நாம் ஏற்றே ஆகவேண்டுமா? நம் கருத்து நம்மோடு/மற்றவங்க கருத்து அவங்களுக்கு என்று விலகிச் செல்வது தவறா?

# எந்த விஷயத்துக்கும் இரண்டு பக்கம் இருப்பதை உணர்ந்து அறிந்து கொள்வதே சிறப்பு.

& என் கருத்து எனக்கு; உங்கள் கருத்து உங்களுக்கு என்பது சரி. ஆனால் ஏன் விலகிச் செல்ல வேண்டும்? 

3. ஒரு பிரபலத்தைப் பற்றிய கருத்து அனைவருக்கும் ஒரே மாதிரித்தான் இருக்கணுமா? உதாரணம் அரசியல் தலைவர்கள்/திரைப்பட நடிகர்கள் பற்றிய கருத்து. அதில் மாறுபட்டால் தப்பா? என் கருத்தை ஒட்டித்தான் பேசணும் என்று நான் சொல்லலாமா?

# கருத்து விளக்கம் சரி, கருத்துத் திணிப்பு தவறு. எதிரணியை மட்டம் தட்டுவது கேவலம்.

& ஒரு பிரபலத்தைப் பற்றிய கருத்து, அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்கவேண்டும் என்னும் அவசியம் ஏதும் இல்லை. 

= = = = 

"தீராத விளையாட்டுப்பிள்ளை" பாடல் மெட்டில், KGY Raman இயற்றிய பாடல் :

தேறாத விளையாட்டுப் பிள்ளை 

குப்பன் (தேறாத ...)

தெருவிலே நண்பருக் கோயாத தொல்லை..


தின்னப் பணம் கொண்டு வருவான்  (ஓட்டலில்)

(நான்)பாதி தின்கின்ற போதிலே 

எழுந்து நடப்பான்

என்னப்பா பில் கொடு என்றால்

(அதை) நீயே கொடு என்று கொடுமையும் செய்வான்...(தேறாத)


பின்னலைப் பின்னின் றிழுப்பான் சவுரி

முன்னே விழுந்தபின் கைகொட்டிச் சிரிப்பான். 

வண்ணப் புது ஆடை தனிலே 

வகையாக மாட்ச் இல்லை என்றே

வருத்திக் குலைப்பான் .. (தேறாத) 


புல்லாங்குழல் கொண்டு வருவான் செவி

எல்லாம் செவிடுபட கீச்சிக் குலைப்பான்.. 

கல்லால் அடிக்க வரும் கூட்டம்  என

கைகால் உதறவே ஓடோடி மறைவோம்... (தேறாத விளையாட்டு)

= = = = =

எங்கள் கேள்விகள் :

1) திரைப்பட அரங்கில், ஒரு படம் பார்த்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்கள் முன் வரிசையில் உட்கார்ந்திருப்பவர், தனது பக்கத்து இருக்கையில் இருப்பவரிடம், உங்களுக்கு கேட்கின்ற உரத்த குரலில், கதையை முன்கூட்டியே (அவர் அந்தப் படத்தை ஏற்கெனவே பார்த்தவர்) சொல்கிறார். " இப்போ அவரு செத்துட்டாருன்னு நெனக்காதே  - திரும்பவும் வருவார் பாரு. " " இப்போ வருக்கிறவர்தான் ஹீரோயினுடைய அப்பா - அது அப்புறம் தெரியும் பாரு. " போன்ற உரையாடல்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? 

2) சங்கீதக் கச்சேரி - அல்லது மேடை மெல்லிசைக் கச்சேரி - பக்கத்தில் உட்கார்ந்துள்ள உங்களுக்கு அறிமுகம் இல்லாத நபர், மேடைப் பாடகரோடு அவரும் சேர்ந்து (அபஸ்வரமாக) பாடுகிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? 

3) ஒரு வேலையை, மிகவும் நம்பிக்கையுடன் ஒருவரிடம் ஒப்படைக்கிறீர்கள். அந்த வேலையை, குறிப்பிட்ட தேதியில் / நேரதிதில் அவர் செய்ய மறந்துவிடுகிறரர் - அல்லது அவரால் செய்ய இயலவில்லை. நீங்கள் என்ன செய்வீர்கள்? 

படம் பார்த்துக் கருத்துரையுங்கள் :

1) 

2) 

3) 



= = = = =

மின்நிலா 071 - இதழின் சுட்டி >>>>> இங்கே சொடுக்குக 

==  ==  ==

70 கருத்துகள்:

  1. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் இனிமை நிறைந்த நன்னாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. அருமையாக கேள்விகளை கேட்ட சகோதரிகளுக்கும், தகுந்த பதிலளித்த ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.

    தீராத விளையாட்டு பிள்ளை பாடல் மெட்டில் இயற்றிய பாடலை பாடிப் பார்த்தேன். வரிகள் அழகாக பொருத்தமாக, வந்துள்ளது. ஆசிரியர் கே. ஜி. ஒய். ராமன் அவர்களுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  3. அன்பின் அனைவருக்கும், ஸ்ரீராம்,அன்பு கமலா
    இன்னும் வரப்போகும் அனைவருக்கும்
    எல்லா நாட்களும் இனிய நாட்களக இருக்க வேண்டும்.
    இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. அன்பின் எபி ஆசிரியர்களுக்கு நன்றி.
    கேள்விகளுக்கு நல்ல பதில் கிடைத்தது.

    நீங்கள் சொல்வது உண்மைதான். இனிய உளவாக
    இன்னாத கூறல்
    சொல்வதை விடக் கருத்து சொல்லாமலே
    இருந்துவிடலாம்.
    இன்று நினைப்பது நாளைக்கு வேறாகத் தோன்றினால்
    நாளையே பதில் சொல்லலாம். எதையும் ஆறப் போடுவதும் நல்லதே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து சகோதரி. நானும் இப்படித்தான் நினைப்பேன். நினைக்கிறேன். நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    குழந்தைகளின் படங்கள் அனைத்துமே அருமை. "அதற்குள் எப்படி இவ்வளவு சாப்பிட்டு விட்டாய்..? என அதியசக்கிறது முதல் படத்திலுள்ள குழந்தை.

    சென்ற பதிவில் பசுங்கன்றோடு கவிதை பாடிய அழகிய குழந்தை என்றால், இந்த தடவை அழகிய ஆட்டின் இளங்கன்றோடு கு(சு)ட்டிக் குழந்தை. இருவரின் முகம் காட்ட மறந்தாலும், அங்கே எதையோ சுட்டிக் காண்பித்து இருவருமே அதிசயப்பது தெரிகிறது.

    "நானும் இப்போதே இதையெல்லாம் கற்றுக் கொள்கிறேனே.. " என தத்தித்தவழ்ந்து வரும் குழந்தையை கண்டு தாயும் அதியசிக்கிறாள். மூன்றும் அழகான படங்கள். எப்படி உங்களுக்கு பொருத்தமாக கிடைத்ததென நானும் அதிசயக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  6. "கருத்து வேறு பட்டால் நல்லதைச் சொல்லி மற்றதைச் சொல்லலாம் ".
    மிகச் சரி.

    சிலசமயம் இனிப்புப் பேச்சு தேவை. அதுவும் உள்ளத்திலிருந்து வந்தால். கசப்பும் கடுப்பும் எப்போதுமே வேண்டாம். நன்றி மா.

    பதிலளிநீக்கு
  7. திரு கேஜி ஒய் ராமனின்
    தீராத விளையாட்டுப் பிள்ளைப்
    பாடல்
    சுவை. நகைச் சுவை.
    சித்திரங்கள் கண் முன் விரிகின்றன,.:)

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..

    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  9. முதல் கேள்வி.......
    இது போல இன்னும் செய்கிறார்களா:(
    சிவனேன்னு பார்த்து விட்டு வரவேண்டியதுதான்.
    இல்லாவிட்டால் அவர் தோளில் தட்டி
    கவனத்தைத் திருப்பலாம்.
    இன்னும் இரண்டு வரிசை பின்னால் இருப்பவரிடம் (நம் நண்பர்)
    சங்கேத மொழியில் அந்த ஆளை நிறுத்துப்பா
    என்று ரிக்வெஸ்ட் செய்யலாம்.

    :சைலன்ஸ் " என்று அவர் சத்தம் போட்டால்
    நிவாரணம் கிடைக்க வாய்ப்புண்டு:)

    பதிலளிநீக்கு
  10. அது ஹாரர் படமாக இருந்தால்,
    அவர் தோளில் கைவைத்தாலே மிரண்டுவிடுவார்:)

    பதிலளிநீக்கு
  11. கூடவே பாடுபவரைக் கடுப்பேத்த நாமும் பாடலாம்.
    முக்கால் வாசி அடங்கி விடுவார்:)

    பதிலளிநீக்கு
  12. வேலையை ஒப்பித்துச் செய்ய முடியாவிட்டால்
    வருத்தம்தான். அடுத்தற்போல் இந்தத் தவறை செய்ய மாட்டோம்.

    படங்கள் அத்தனையும் அழகு.
    மிக ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  13. வல்லி அம்மாவின் முதல் கேள்வி சூப்பர்.

    பதிலளிநீக்கு
  14. வல்லிம்மாவின் முதல் கேள்விக்கான பதில்கள் இரண்டுமே டிட்டோ...3 வது கேள்விக்கான பதில் அதே தான்...

    கீதாக்காவின் முதல் கேள்விக்கான & பதில்...அதே அதே

    கீதா

    பதிலளிநீக்கு
  15. & என் கருத்து எனக்கு; உங்கள் கருத்து உங்களுக்கு என்பது சரி. ஆனால் ஏன் விலகிச் செல்ல வேண்டும்? //

    அதே அதே...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வீணான விவாதம்(?) தவிர்க்கத் தான். இதனால் மனக்கசப்பும் ஏற்படாதல்லவா?அவரவர் கருத்து அவரவருக்கு! நம் கருத்தை ஏற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்த முடியுமா?

      நீக்கு
    2. ஓ! கீதாக்கா கண்டிப்பாக. நானும் விவாதம் செய்யவே மாட்டேன். அதுவும் அந்த விவாதம் மனக்கசப்பிற்கு வழி வகுக்கும் என்றால் கண்டிப்பாக அந்த இடத்தில் நான் மௌனம் அல்லது மெதுவாக நடர்ந்துவிடுவேன். நீங்கள் சொல்லியிருக்கும் விலகிச் செல்லுதல் புரிந்தது. விலகிச் செல்லுதல் என்றதும் நான் நினைத்தது அவர்களோடு பேசாமல் விலகி இருத்தல் அல்லது பேசுவதைத் தவிர்த்தல் என்று....கண்டிப்பாகக் கட்டாயப்படுத்த முடியாது கூடவும் கூடாது. கருத்தைத் திணிப்பது கூடாது.

      அது போல முயலுக்கு மூன்றுகால் என்பவரோடு கூடியவரை ஒவ்வாத கருத்தைப் பேசுவதையும் தவிர்ப்பதுண்டு. அப்படியான டாப்பிக் வராமல் மேலோட்டமாக ஹை பை சொல்லி நகர்ந்துவிடுவது...

      நீங்கள் சொல்லியிருக்கும் விலகுதல் புரிந்தது கீதாக்கா

      கீதா

      நீக்கு
  16. தேறாத விளையாட்டுப் பிள்ளை சூப்பர். ரொம்பவே ரசித்தேன்...பாடியும் பார்த்தேன்!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ரெகார்ட் செய்து வாட்ஸ் அப் ல அனுப்புங்க. (ஏன் எல்லா வா அ குழுவிலிருந்தும் விலகிவிட்டீர்கள்? )

      நீக்கு
    2. கௌ அண்ணா விலகவில்லை...என் நம்பரில் வாட்சப்பை தற்காலிகமாக மூடி வைத்துள்ளேன். அதை ஆக்டிவேட் செய்தவுடன் வந்துவிடுவேன்.

      கீதா

      நீக்கு
  17. ஆசிரியர்களின் முதல் கேள்வி இரண்டாவது கேள்வி....நான் லையித்துவிட்டால் அருகில் பேசுவது பாடுவது எதுவும் என் காதில் விழாது. அது சில வருடங்கள் முன்பு வரை (திரையரங்கில் சினிமா பார்த்ததே அபூபூஊஊஊஊஊஊஊர்வம். அப்படிப் பார்த்தபோது....அதன் பின் என் செவிகேட்கும் திறன் குறைவு...எனவே அனுபவம் இல்லை. கற்பனை செய்து பார்த்தப்போ நான் அவர்களைத் தட்டி கொஞ்சம் வாயை மூடிக்கொண்டு படம் பாருங்க இல்லேனா வெளிய போய் பேசுங்கன்னு..

    இரண்டாவது கேள்விக்கும் முதல் பதிலில் பாதி பதில்...பெரும்பாலும் என் மகனோடு அல்லது எப்போதேனும் உறவினரொடுதான் போனதால் அருகில் யாரும் பாடிக் கேட்டதில்லை.

    அப்படி என் அருகில் உள்ளவர் பாடினால் நானும் ஏட்டிக்குப் போட்டியாகப்பாடிவிடுவேன்...ஹிஹிஹி...பின்னாடி முன்னாடி இருக்கறவங்க எங்களை துரத்திவிடவில்லை என்றால்!!!!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  18. முதல் படம்...ஆங்க் அப்படித்தான் சாப்பிடனும்....
    அவனுக்கு எவ்வளவு போட்டுருக்காங்க...ரெண்டு பேருக்கும் ஒரே அளவுதானா..

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உப்புமாவை இவ்வளவு ரசனையாக சாப்பிடும் குழந்தைகளும் உள்ளனரா !!

      நீக்கு
    2. கௌ அண்ணா அந்த உப்புமாவில் கொஞ்சம் தில்லு முல்லு செஞ்சு கொடுத்டுருப்பாங்களா இருக்கும்!!!!!!!

      கீதா

      நீக்கு
  19. கேள்விகளுக்கு அளித்த பதில்களுக்கு நன்றி. ஆனாலும் ஏதோ முற்றுப்பெறாதது போல் ஓர் எண்ணம். :( போகட்டும்.

    தியேட்டரில் போய்த் திரைப்படமே பார்க்கவில்லை. ஆனாலும் இந்த மாதிரிக் கதையை முன்கூட்டியே சொல்லுபவர்களிடம் ஓர் எரிச்சல்/கோபம் வரத் தான் செய்யும். என்றாலும் பொது இடத்தில் வாயை மூடிக்கொண்டு இருக்கணுமே! :(

    கச்சேரிகளுக்கெல்லாம் போனதில்லை. நான் போனதெல்லாம் அதிகமாக ஹரிதாஸ்கிரி அவர்களின் பஜனை! அதிலே எல்லோருமே பாடித்தானே ஆகணும். ஶ்ரீவாஞ்சியத்தின் அஷ்டபதி/இதிலேயும் எல்லோருமே பாடுவாங்க. எங்க திருப்பாவைக்குழுவின் பஜனைகள்னு.அதிகம் பஜனைதான் பண்ணி இருக்கேன். :)))) போறாததுக்குப் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெரியப்பா வீட்டில் நடக்கும் அவங்க வக்கீல்கள் சங்கத்தினரின் பஜனைகள். ஆகவே கச்சேரியில் பக்கத்தில் இருப்பவர் பாடுவதைக் கேட்கும் வாய்ப்பே கிடைச்சதில்லை.
    பொதுவாக யாரிடமும் எந்த வேலையையும் ஒப்படைப்பதில்லை. தவிர்க்க முடியலைன்னா அவங்களால் முடியுமானு ஒருதரத்துக்கு இரண்டு தரம் கேட்டுப்பேன். அநேகமாக நடந்துடும். இல்லைனாலும் என்ன சொல்ல முடியும்! தப்பு நம் மேல் தானே! :))))

    பதிலளிநீக்கு
  20. அது என்ன ப்ரெட் உப்புமாவோ? குழந்தைங்க இரண்டும் வைச்சுண்டு உட்கார்ந்திருக்கே!

    இந்த வாரம் ஆட்டுக்கார அலமேலுவா?

    இது ஏதோ திரைப்படத்தின் ஸ்டில்னு நினைக்கிறேன். அந்தப் பெண்ணைப் பார்த்தால் திரைப்பட நடிகை போல் இருக்கார். குட்டிப்பாப்பா அருமையாத் தவழ்ந்து வந்திருக்கே! பட்டுப்பாப்பா!

    பதிலளிநீக்கு
  21. தேறாத விளையாட்டுப்பிள்ளை யாருங்க? நல்லா எழுதி இருக்கார். திரு கேஜிஒய் ராமன் அவர்கள். பாடியும் பார்த்திருப்பார்னு நினைக்கிறேன். நல்ல நகைச்சுவை உணர்ச்சியுடன் எழுதப்பட்டிருக்கு.

    பதிலளிநீக்கு
  22. தேறாத விளையாட்டுப் பிள்ளை குப்பன் பிரமாதம்!

    பதிலளிநீக்கு
  23. என் கருத்து எனக்கு, உன் கருத்து உனக்கு என்று நினைப்பவர்கள் விவாதம் செய்ய மாட்டார்கள். விவாததிர்கு இரங்கினாலேயே எதையோ நிறுவ விரும்புகிறார்கள் என்றுதான் பொருள். கருத்தை மட்டும் விவாதித்தால் பிரச்சனை எதுவும் இல்லை. எதிரணியனர் மதிக்கும் ஒருவரை பட்டப்பெயர் வைத்து அழைப்பது, தனக்கு சார்பாக யாராவது கருத்து கூறும் பொழுது கை தட்டுவது, எள்ளலாக சிரிப்பது போன்ற சிறுபிள்ளைத்தனமான செய்கைகள் அடிதடியை தூண்டும் ஆபத்து உண்டு.

    பதிலளிநீக்கு
  24. அனைத்து கேள்விகளும் ,அதற்கு பதில்களும் அருமையாக இருந்தது.
    தேறாத விளையாட்டு பிள்ளை பாடலும் நன்றாக இருக்கிறது.

    படங்கள் எல்லாம் நல்ல தேர்வு.

    முதல் படம் பழம் யாருக்கு என்று கேள்வி வருகிறது.

    ஆட்டுகுட்டியும் குட்டிக்குழந்தையும்

    அடிச்செல்லமே ! இப்போதே சப்பாத்தி குழவியை உருட்ட ஆசையா !


    பதிலளிநீக்கு
  25. ஏங்கள் கேள்விகளுக்கு பதில் :-
    முதல் கேள்வி எரிச்சலும் , வருத்தமும் வரும்.

    அடுத்த கேள்வி இது என்ன தலை வேதனை! இசையை நன்றாக ரசிக்க முடியவில்லையே!

    நம்பிக்கையுடன் வேலையை கொடுத்து இருந்தால் முடித்து இருப்பார். இவன் முடிப்பானா என்ற யோசனையுடன் கொடுத்து இருந்தால் முடிக்க மாட்டார்கள்.

    நம் தப்பு என்று நம்மை நொந்து கொள்ள தோன்றும்.

    பதிலளிநீக்கு
  26. படம் பார்க்கும் போது பேசுபவர்கள் - கொஞ்சம் எரிச்சலாகவே இருக்கும்.

    கேரளத்தில் பொதுவாக தியேட்டரில் அமைதிகாப்பார்கள், குடிமகன்கள் வந்திருந்தால் ஒன்று தூங்கிவிடுவார்கள். பிரச்சனை இல்லை. ஆனால் ஏதேனும் உளறிக் கொண்டிருந்தால் அதுவும் படத்தைப் பார்த்து, வெளியே தள்ளப்படுவார்.

    யார் தவறு செய்தாலும் பொது இடத்தில் பழித்துக் கூறுவது மிகவும் தவறு. தனிப்பட்ட வகையிலும் கூட பக்குவமாகச் சொல்வதால் பல மனக்கசப்புகளைத் தவிர்க்கலாம். அதே போல வீண் விவாதங்களைத் தவிர்ப்பதும் நல்லது. கருத்துகள் மட்டும் விவாதிக்கப்பட்டால் கூடப் பரவாயில்லை ஆனால் அது தனிப்பட்டத் தாக்குதலுக்கு உள்ளாகும் போது உறவுகளில் விரிசல் விழும். கருத்துகளைத் திணிப்பது கூடாது. நம் பிள்ளைகளிடமும் கூட. நல்லது இது என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவதுதான் நல்லதாக இருக்கிறது தற்போதைய தலைமுறைகளிடம்.

    கேள்விகளும் பதிலும் சிறப்பாக இருக்கின்றன

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  27. தேறாத விளையாட்டுப் பிள்ளை பாடல் வரிகள் நகைச்சுவை உணர்வுடன் நன்றாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  28. தேறாத விளையாட்டு பிள்ளை நன்றாக உள்ளது.

     Jayakumar

    பதிலளிநீக்கு
  29. கேள்வி பதில்கள் நன்று.
    1) படம் நீ முதலில் சாப்பிட்டுவிட்டு சுவையாக இருக்கிறதா? என்று சொல்லு.
    2) இரண்டு பேரும் ஓடிப்பிடித்து விளையாடுவோம் வருகிறாயா?
    3) அம்மா ! நான் உன்னை விட நன்றாக உருட்டுவேனே.
    2)

    பதிலளிநீக்கு
  30. வணக்கம். இன்றைய கேள்விகள் கருத்து வேறுபாடு குறித்தே இருக்கிறதே! நீங்கள் கேட்ட கேள்விகளும் நன்று. படங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!