சனி, 22 ஜனவரி, 2022

தாய்க்குத் தாயான சேய் - நான் படிச்ச கதை

 புழல் :புழல் அருகே, தவறுதலாக குப்பை கிடங்குக்கு சென்ற, 9 சவரன் 'நெக்லஸை' கண்டெடுத்து ஒப்படைத்த துாய்மை பணியாளருக்கு பாராட்டுகள் குவிகின்றன.புழல் அடுத்த வினாயகபுரம், காஞ்சி நகரைச் சேர்ந்தவர் ரோஜா ரமணி, 47. இவர், நேற்று முன்தினம் பொங்கலுக்காக வீட்டை சுத்தம் செய்தார். வீட்டில் பொருட்களை சீரமைத்து, நகைகளை சரிபார்த்த போது, ௯ சவரன் 'நெக்லஸ்' காணாமல் போனது தெரியவந்தது.

இதையடுத்து, வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட குப்பை கழிவுகளுடன், நகையும் வீசப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. அந்த பகுதியில் குப்பை அகற்றும் துாய்மை பணியாளர் சஞ்சீவ் குமார், 36, என்பவரிடம், நடந்ததை தெரிவித்துள்ளார். பெரம்பூர், வீனஸ் நகரில் வசிக்கிறார் சஞ்சீவ் குமார். குப்பைகள் அகற்றப்பட்டு, மாதவரம் மண்டலம் 26வது வார்டு, வினாயகபுரம், வளர்மதி நகர் அருகே உள்ள கிடங்கில் கொட்டப்பட்டிருந்தது. இதை அறிந்து, துாய்மை பணியாளர், சஞ்சீவ் குமார் அங்கு சென்றார். அங்கு, காஞ்சி நகர் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட குப்பை, தரம் பிரித்து கொட்டப்பட்டிருந்தன.


மக்கும் குப்பை, மக்கா குப்பையாக இரு பிரிவுகளாக கொட்டப்பட்டிருந்தது. அதில், பொறுமையாக தேடிய போது, 9 சவரன் நெக்லஸ், பெட்டியுடன் இருந்தது. அதை, தன் வார்டு கண்காணிப்பாளருடன் சென்று, ரோஜா ரமணியிடம் ஒப்படைத்தார்.நகை கிடைத்த சந்தோஷத்தில், ரோஜாரமணியும் அவரது குடும்பத்தினரும், சஞ்சீவ் குமாருக்கு நன்றி தெரிவித்தனர். பெரம்பூரில் சஞ்சீவ் குமாரின் வீடு தேடிச் சென்று பொங்கல் பரிசும் வழங்கினர்.துாய்மை பணியாளர் சஞ்சீவ் குமாரின் நேர்மையை, அந்த பகுதி மக்களும், அவரது சக பணியாளர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் பாராட்டினர்.

'ஹீரோ'வாக்கிய நேர்மைரோஜாரமணியின் மகன் ஸ்ரீநாத் கூறியதாவது:நாங்கள் தொலைத்த நகையின் மதிப்பு, 4 லட்சம் ரூபாயாகும். அவ்வளவு தொகைக்குரிய நகையை யாருக்குத்தான் திரும்ப கொடுக்க மனது வரும். அதனால், அந்த நகை கிடைக்கும் என்ற நம்பிக்கையே இல்லை. ஆனால், சஞ்சீவ் குமாரின் நேர்மையால், எங்களுக்கு அது திரும்பக் கிடைத்தது. அதற்காக, அவருக்கு எத்தனை முறை நன்றி தெரிவித்தாலும், எங்களது மகிழ்ச்சி குறையாது. அவர், எங்களுக்கு 'ஹீரோ'வாகி விட்டார் .இவ்வாறு ஸ்ரீநாத் கூறினார்.

==========================================================================================================================

புதுடில்லி-ஜம்மு - காஷ்மீரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த நம் ராணுவ வீரர்கள் பிரசவ வலியால் துடித்த பெண்ணை, கடும் பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றது நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.  ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக்கின் எல்லை பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. எனினும் அதை சிறிதும் பொருட்படுத்தாமல் நம் வீரர்கள் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுவது அனைவரையும் பெருமிதப்பட வைக்கிறது.




கிழக்கு லடாக் எல்லையில் மிகக் கடுமையான பனிப் பொழிவு மற்றும் காற்றுக்கு மத்தியில் ராணுவ வீரர்கள் எல்லையை பாதுகாக்கும் காட்சிகள் அடங்கிய, 'வீடியோ' நேற்று முன்தினம் வெளியானது.  இந்நிலையில் ஜம்மு - காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு ராணுவத்தினர் உதவி புரிந்துள்ளனர். ராணுவத்தின், 'சினார் கார்ப்ஸ்' படைப் பிரிவினர், பிரசவ வலியில் துடித்த ஒரு பெண்ணை, ஸ்ட்ரெச்சரில் வைத்து பனிப்பொழிவுக்கு மத்தியில் மருத்துவமனைக்கு துாக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதேபோல், காயமடைந்த ராணுவ வீரரை, ஹெலிகாப்டரில் சிகிச்சைக்கு அழைத்து செல்லும் வீடியோவும் வெளியாகி உள்ளது.

============================================================================================================================================

மஹாராஷ்டிராவின் புனே மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு மினி பஸ்சில் ஷிரூர் பகுதியில் உள்ள வேளாண் சுற்றுலா மையத்திற்கு 20க்கும் மேற்பட்ட பெண்கள், தங்கள் குழந்தைகளுடன் சுற்றுலா சென்றனர்.சுற்றுலாவை முடித்துவிட்டு ஊர் திரும்பிய போது டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டு உள்ளது.   சாலையிலேயே வண்டியை அவர் நிறுத்தினார். பஸ்சில் பயணித்த யோகிதா சதாவ், 42, என்ற பெண், சிறிதும் தயங்காமல் டிரைவர் இருக்கையில் வந்து அமர்ந்தார். பஸ்சை சாதுர்யமாக இயக்கி அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று நிறுத்தினார்.


வலிப்பு ஏற்பட்ட டிரைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன்பின் 10 கி.மீ., துாரம் பஸ்சை ஓட்டிச் சென்ற யோகிதா, இதர பயணியரை பாதுகாப்பாக இறக்கி விட்டார். யோகிதாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
========================================================================================================================

தளவாய்புரம்--ராஜபாளையம் அருகே சேத்துாரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை, அவரது மகள் தாயை போன்று கவனித்து வருவது கல்நெஞ்சம் கொண்டோரையும் கண்கலங்க வைக்கிறது.

தந்தை கைவிட்ட நிலையில், படிக்கும் வயதில் சிறுவன் கட்டட பணிக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றுகிறார்.விருதுநகர் மாவட்டம் சேத்துாரை சேர்ந்தவர் குரு பாக்கியம் 38. தென்காசி மாவட்டம் புளியங்குடியை சேர்ந்த கட்டட தொழிலாளி கனகராஜ் உடன், 17 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.


2 குழந்தைகள் பிறந்த நிலையில், குரு பாக்கியத்துக்கு ஏற்பட்ட வலிப்பு நோயால் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். கணவர்பிரிந்து சென்றதால் குடும்பத்தை காப்பாற்ற வேலைக்கு சென்ற நிலையில், நோய் பாதிப்பால் தொடர்ச்சியாக வேலைக்கு செல்ல முடியவில்லை. 2021 டிச.,ல் சமையல் செய்த போது வலிப்பு வர, கொதிக்கும் எண்ணெய் கொட்டியதில் குரு பாக்கியத்தின் முகம் உடலின் ஒரு பகுதி காயம் ஏற்பட்டது. இதனால் கையை நீட்டவும் ,மடக்கவும் முடியாமல் போக மனநலம் பாதிப்புக்கு ஆளானார்.  இதனால் வருமானமின்றி குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கியது. வீடு வாடகை ரூ.400, வைத்திய செலவு ஏற்பட உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது.இதையடுத்து பத்தாம் வகுப்பு படித்து வந்த மகன் சுரேஷ் குடும்பத்தை காப்பாற்ற கட்டட வேலைக்கு செல்கிறார்.
வீட்டின் சமையல் துணி துவைப்பது உள்ளிட்ட பணிகளை 8 வயது மகளான மகாலட்சுமி செய்து வருகிறார். இவர் ஒரு தாயை போன்று தனது அம்மாக்கு உணவு ஊட்டல் என அனைத்து பணிகளையும் செய்வது பார்ப்பபோரை கண்கலங்க வைக்கிறது. இவர்களுக்கு ரேஷன்கார்டு இல்லாததால் அரசு உதவியும் பெறமுடியாது தவிக்கின்றனர்.
ராஜபாளையம் தாசில்தார்ராமச்சந்திரன்: குரு பாக்கியம் குடும்பத்தினரின் ஆதரவற்ற நிலை அறிந்து அரசு உதவிகள் பெற்றுத்தர ஏற்பாடுகள் செய்யப்படும், என்றார்.  இதனிடையே இக்குடும்பத்தாரின் நிலையை அறிந்த விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டி, தனது டுவிட்டரில் 'குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்து வருகிறோம். இன்று குடும்பத்தாரை சந்தித்து தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, குறிப்பிட்டுள்ளார்.
==============================================================================================================




உடுமலை அடுத்த சின்னவீரம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு அருகே வசிக்கும், மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்த ஆறுமுகம் மனைவி, தாயம்மாள். இளநீர் விற்பனை செய்கிறார். 'இல்லம் தேடி கல்வி' திட்ட பயிற்றுனராக உள்ள தாயம்மாள், தனது சேமிப்பு பணத்தில், ஒரு லட்சம் ரூபாயை வழங்கியுள்ளார். இவரது இச்செயலை கலெக்டர் வினீத் உட்பட பலர், பாராட்டி வருகின்றனர். தேசிய ஆசிரியர் சங்க மாவட்ட செய்தித் தொடர்பாளர் ராமகிருஷ்ணன், உடுமலை எஸ்.கே.பி., பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அன்பரசு உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து, இனிப்பு வழங்கி தாயம்மாளை பாராட்டினர். பள்ளி தலைமை ஆசிரியர் இன்பக்கனி, முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் சோமசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
=====================================================================================================================




நான் படிச்ச கதை 

ஜெயக்குமார் சந்திரசேகர் 



நான் படிச்ச கதை பற்றி யாரும் எழுதவில்லை என்று ஜீ வீ சார் ஆதங்கப்பட்டிடுகிறார். கதை படிப்பது வேறு அது பற்றிய கருத்துக் கூறுவது வேறு. விவரம் உள்ள விமரிசனம் எழுதுவதும் எளிதில் அமைவதில்லை. 

நான் படிச்ச இந்தக் கதை கதையே  அல்ல. ஒரு ஒன் லைன் மட்டுமே. அந்த ஒன் லயனை கண் காது கை கால் வைத்து ஒரு சிறுகதையாக உருவாக்கும் திறமை ஜ ரா சுந்தரேசன் போன்ற ஆசிரியர்களுக்கு மாத்திரம் முடியும்.

 2011 இல் ஒய் திஸ் கொலவெறி டீ என்ற பாடல் பிரபலம். ஆக தலைப்பு கிடைத்து விட்டது.

கதையின் ஒன் லைன் "மாமா மாமியிடம் சொன்னதை மாமி அரைகுறையாக புரிந்து கொண்டது" அம்புட்டுதான். 

கதை நடந்ததாக சொல்லப்படும் காலம். காலை 5 மணி. அப்போது தான் சொன்ன வார்த்தைகளுக்கும் கேட்டவரின் புரிதலுக்கும் உள்ள ஒற்றுமை வேற்றுமை கிடைக்கும். 

கடைசியாக ஒரு ஆர்பிட்ரேட்டர் வந்து சம்பவத்தை முடிவுக்கு கொண்டு வருதல். இது போன்ற சிந்தனைகள் ஒரு கதாசிரியருக்கே உரியவை. 


முக்கிய பாத்திரத்தின் பெயர் சாம்பசிவம் என்பது தவிர வேறு பெயர்கள் எதும் கதையில் இல்லை. 

 கதையைப் படித்த பின் இதை வடிவேலு நடித்தால் எப்படி இருக்கும்  என்று சிரிப்பீர்கள்.

 இந்த கதைக்கும் எனக்கும் வேறு சம்பந்தம் ஏதும் இல்லை. எல்லாப்புகழும் சுந்தரேசனுக்கே. 



54 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. எல்லோரையும் விட சஞ்சீவ் குமார் உயர்ந்து விட்டார்.

    சுட்டிக்கு செல்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. சஞ்சீவ் குமார் மனதைக் கவர்ந்தார்.

    இருந்தாலும் சுரேஷ், மகாலட்சுமி இந்த இரண்டு குழந்தைகளும் மனதில் நிற்கின்றனர். வாழ்க்கைதான் எவ்வளவு வினோதமானது. சிறிய வயதிலேயே பெரும் பொறுப்பு. (உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு... கவஞர் வரிகள் எத்தனை அர்த்தம் பொதிந்தவை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். பாராட்டுவோம்.

      நீக்கு
    2. குழந்தைகளைக் குழந்தைத் தன்மையை வெளிக்காட்ட முடியாமல் பார்க்கையில் மனம் பரிதவிக்கிறது. :(

      நீக்கு
  4. அனைவருக்கும் காலை/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

    பதிலளிநீக்கு
  5. அனைத்து நல்ல செய்திகளுக்கும் பாராட்டுகள். வாழ்த்துகள், எதுவும் படிச்சதில்லை. திரு ஜேகே அவர்களின் விமரிசனம் நறுக்குத் தெறித்தாற்போல் உள்ளது. கதையும் படிச்சது தான் எப்போவோ/எங்கேயோ!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கீதாக்கா நீங்க அப்பப்ப சொல்லுவீங்களே மாமா காய் கடைக்குப் போய் வாங்கி வருவதைப் பத்தி அதுவும் நினைவுக்கு வந்தது இந்தக் கதையை வாசித்ததும்!! ஹாஹாஹா

      கீதா

      நீக்கு
  6. செய்திகள் அனைத்தும் அருமை...

    டீ to தீ - என்னா அலப்பறை...!

    பதிலளிநீக்கு
  7. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
    இறையருள் சூழ்க எங்கெங்கும்..
    வாழ்க வையகம்..
    வாழ்க வளமுடன்..

    பதிலளிநீக்கு
  8. செய்திகள் நன்று. மனிதம் இப்போதும் உண்டு என்பதை எல்லா செய்திகளும் உணர்த்துகின்றன.

    நான் எழுதியதை நானே படிக்கும்போது தான் எனக்கு உள்ள குறைகள் புரிந்தன. சொல்ல வந்தது முழுவதும் சொல்லப்படவில்லை.கதையின் தலைப்பு சொல்லப்படவில்லை.


    எனக்கு மற்றவர்கள் போன்று கோர்வையாக எழுத வரவில்லை. இது போன்ற பல குறைகள். எழுத எழுத சரியாகும் என்று நினைக்கிறேன்.

    இனிமேல் எழுதியதை திரும்ப திரும்ப படித்து சீராக்கி அனுப்ப முயற்சிக்கிறேன்.


    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க ஜெயக்குமார் ஸார்...   இப்போது அனுப்பினாலும் உடனே திருத்த வேண்டியவற்றை திருத்தி விடுகிறேன்.

      நீக்கு
    2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    3. எழுத எழுத சரியாகும் என்று நினைக்கிறேன்.//இனிமேல் எழுதியதை திரும்ப திரும்ப படித்து சீராக்கி அனுப்ப முயற்சிக்கிறேன்.//

      நிச்சயமாக. எழுதியதும் ஆறப் போட்டுருங்க!! (என்னை மாதிரி மாசக்கணக்குல வருஷக் கணக்குல எல்லாம் இல்லை!!!!!!!)

      அப்புறம் எடுத்துப் பார்க்கும் போது தெரியும் அப்ப விட்டுப் போனது வெட்ட வேண்டியது எல்லாம்...ஒரு வாசகனாகப் பார்க்க வேண்டும் அவ்வளவுதான்..இனி நீங்களும் களத்துல குதிச்சுடுங்க!!

      கீதா

      நீக்கு
    4. கதையில் வரும் மாமி கேரக்டருக்கு ஊர்வசி யும் மாமா கேரக்டருக்கு கமலும் எதிர்த்தவீட்டு மாமா கேரக்டருக்கும் கிரேசியும் செஞ்சா எப்படி இருக்கும் என்று நினைத்துப் பார்த்தேன்...காட்சி செமையா வரும்...

      கீதா

      நீக்கு
    5. நான் தேர்ந்தெடுப்பது கோவை சரளா, வடிவேலு, பசுபதி.
      Jayakumar

      நீக்கு
    6. //அப்புறம் எடுத்துப் பார்க்கும் போது தெரியும் அப்ப விட்டுப் போனது வெட்ட வேண்டியது எல்லாம்.// - இது என்ன புதுவித அட்வைஸ்? கதை எழுதணும்னா ஒரே மூச்சுல எழுதி முடிச்சுடணும். பிறகு ஆற அமர எடிட் பண்ணலாம். கால் கதை, பாதிக்கதைனு எழுதி பிறகு எழுத உட்கார்ந்தா, எப்படிக் கொண்டுபோவது என்ன என்ன நல்ல திருப்பங்கள்/வசனங்கள் எழுதநினைத்தோம் எல்லாம் மறந்து எப்படியோ வெட்டி ஒட்டி அனுப்பிடுவோம். இதுதான் என் அனுபவம்

      நீக்கு
  9. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். ஆரோக்கிய வாழ்வு மேம்பட இறைவன் அருள வேண்டும்.

    பதிலளிநீக்கு
  10. சுரேஷ் மஹாலக்ஷ்மி போன்ற குழந்தைகளை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி. காலம் அவர்களுக்கு நன்மை தர் வேண்டும்.
    அன்பு வாழ்த்துகள் .மனம் உருகுகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிறு வயதிலேயே அவர்களுக்கு என்ன ஒரு அனுபவம்... பாவம் அம்மா. இல்லையா?

      நீக்கு
    2. மனநிலை சரியில்லாத அம்மாவைப் பார்த்துக்கொண்ட (கீழப்பாக்கம் ஹாஸ்பிடலில்) ஒரு பெண்ணை 89களில் நான் அறிவேன். அத்தகைய பெண்கள் ரொம்ப நல்ல குணம் உடையவர்களாகவும், சர்வீஸ் மைண்டட் ஆகவும் இருப்பாங்க. அவங்களுக்கு வாழ்க்கை நன்றாகவே அமையும்

      நீக்கு
  11. ராணுவ வீரர்களின் சேவை மகத்தானது. அவர்களைப் பெற்ற தாய்கள் புண்ணியம் செய்தவர்கள்.

    பஸ் வீராங்கனை வாட்ஸாப்பில் வந்தார்.
    சஞ்சீவ்குமார் போன்ற நாணயஸ்தர்கள் இருக்கும்போது
    நம்பிக்கை அதிகரிக்கிறது.
    அனைத்து செய்திகளுக்கும் நன்றி.


    கதை விமர்சனம் கச்சிதம். திரு ஜயக்குமார் அருமையாகச்
    சொல்லி இருக்கிறார்.
    எனக்கெல்லாம் படிக்கத் தெரிந்த அளவுக்கு விமரிசனம் செய்ய
    வராது. நன்றி மா.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பாராட்டுவோம், வாழ்த்துவோம்.

      நீக்கு
    2. இந்திய ராணுவம் எப்போதுமே பாராட்டுக்கு உரியது. அவர்கள் சேவையும் போற்றத்தக்கது. சுமார் 30 வருடங்கள் நேரில் கண்டு அனுபவித்திருக்கேன்.

      நீக்கு
  12. இன்றைய மனித நேயச் செயல்கள் - - இணையத்தில் வாசிக்கப்பட்டவை தான் எனினும் மீண்டும் அறியும் போது மனம் எங்கும் மகிழ்ச்சி..

    நல்லவர் வாழ்க என்றென்றும்.

    பதிலளிநீக்கு
  13. வணக்கம் வெச்சிட்டு போறேன். பிறகு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
  14. தளவாய்புரம்--ராஜபாளையம் அருகே சேத்துாரை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவை, அவரது மகள் தாயை போன்று கவனித்து வருவது கல்நெஞ்சம் கொண்டோரையும் கண்கலங்க வைக்கிறது.//

    வாசித்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது. இரு குழந்தைகளும் எப்படியேனும் படிக்க முடிந்தால் நல்லது. இப்படியான பொறுப்பு இந்த வயதில்...நல்ல குழந்தைகள். நல்ல வழி பிறக்க வேண்டும்.

    ராணுவத்திற்கு சல்யூட்! வார்த்தைகள் வேறு இல்லை.

    சஞ்சீவ் குமார் முன்னுதாரணம்

    யோகிதா சூப்பர் லேடி

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. //வாசித்ததும் கண்ணில் நீர் வந்துவிட்டது.//

      உண்மை.

      நீக்கு
  15. தாய்க்குத் தாய் சேய் - நான் படிச்ச கதை என்பதைப் பார்த்ததும் ஓ கதையின் தலைப்போ என்று நினைத்துவிட்டேன்.

    ஜெகே அண்ணா நீங்க சுருக்கமா கரெக்ட்டாதான் சொல்லியிருக்கீங்க. கதையும் சின்ன கதைதானே. நல்ல எழுத்தாளர் நகைச்சுவை அவருக்கு லாகவமாக வருகிறது.

    சாம்பசிவம் பெயர் உடனே கீதாக்காவின் மாமா நினைவுக்கு வந்துவிட்டார்

    கீதா

    பதிலளிநீக்கு
  16. ஜெயக்குமார் சார்! முயற்சிக்கு வாழ்த்துக்கள்.
    எழுத எழுத சரியாகும் என்று நீங்கள் சொல்லியிருப்பது தான் எல்லோருடைய அனுபவ உண்மையும்.
    தான் எழுதியதை தானே படிச்சு அதில் தவறுகள் தனக்கே தெரிவதும் பாக்கியம்.
    ரொம்பப் பேருக்கு சாத்தியப்படாத விஷயம் இது.
    அந்த பாக்கியம் உங்களுக்கு கிடைச்சிருக்கு. அடிக்கடி இந்தப் பகுதிக்கு எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி அய்யா. கதையைப் படித்தீர்களா? 

      நீக்கு
    2. வாசித்தேன்.

      முதல் தடவையா நான் ஜராசு ஐயாவை குமுதம் ஆபிஸில் பார்த்துப் பேசிக் கொண்டிருந்த பொழுது பேச்சு வாக்கில் "உங்க கதைகளில் எனக்கு ரொம்பவும் பிடிச்சது 'பாசாங்கு' தான்" என்றேன்.

      "அப்படியா?" என்று அவர் எழுத்தாள அன்புடன் என்னை பார்த்தது இப்பொழுதும் நினைவில் இருக்கிறது.

      ஜராசு மிகப் பிரமாதமான கதைகளை எழுதியிருக்கிறார்.

      ஜனரஞ்சக வாசக ரசனைக்காக பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் அவர் எழுதியவைகள் அவ்வளவாக என்னைக் கவர்ந்ததில்லை.

      நீக்கு
    3. ஆனால் அப்புசாமி சீதாப்பாட்டி கதைகள் தான் குமுதத்தை நம்பர் 1 பத்திரிக்கை ஆக்கியது எனலாம். ஆசிரியரின் கருத்துக்களோடு  ஒத்துப் போவதும் உதவி ஆசிரியர்களின் பொறுப்புகளில் ஒன்றல்லவா. 

      நீக்கு
    4. என்னைக் கவர்ந்ததில்லை என்று தான் சொன்னேன்.
      என்னைக் கவர்ந்த ஜராசு வேறு வகையான எழுத்துக்கு சொந்தக்காரர்.

      நீக்கு
  17. சஞ்சீவ் குமார், அன்றைக்கு தாயாகும் குழந்தை, பனியில் சேவைசெய்யும் பணியாளர்கள் , ஓட்டுனரான பெண் என அனைத்து உதவிக்கரங்களையும் வாழ்த்துவோம்.

    பதிலளிநீக்கு
  18. அன்னைக்கு தாயாகும் என வரவேண்டும்.

    பதிலளிநீக்கு
  19. பாசிட்டிவ் செய்திகள் அனைத்தும் நன்று. அந்த சிறுகுழந்தைகள் மனதை என்னவோ செய்துவிட்டார்கள். இறைவன் அவர்களுக்குத் துணையிருப்பாராக.

    ஜெயக்குமார் சந்திரசேகர் சாரின் முதல் முயற்சிக்கு. வாழ்த்துகள் சார். சுட்டிக்குச் சென்று இனிதான் வாசிக்க வேண்டும்.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  20. கடுமையான பனிப்பொழிவில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற ராணுவ வீரர்கள், நாலு லட்சம் பெறுமாறு மற்ற நகையை திருப்பிக் கொடுத்து வறுமையில் செம்மையை காட்டிய சஞ்சீவ் குமார், தாய்க்கு தன் தாயாகும் மகாலட்சுமி, கடுமையான நேரத்தில் பதட்டமடையாமல் பேருந்தை ஓட்டிய பெண்மணி எல்லோரும் வாழ்த்துக்களுக்கும், வணக்கங்களும் கும் உரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  21. பெறுமானமுள்ள
    தாய்க்குத் தாயாகும்
    என்று திருத்திக் கொள்ளவும்.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் சகோதரரே

    இன்றைய பாஸிடிவ் செய்திகள் அருமை.
    குழந்தைப்பருவத்தில் தன் தாயை தன் குழந்தையாக நினைத்து காப்பற்றி வரும் செய்தி மனம் கலங்க வைத்து விட்டது. நல்ல செயல்களை புரிந்த அனைவரையும் வாழ்த்திப் போற்றுவோம்.

    கதை பகுதியில் கதையை அறிமுகப்படுத்தி, விளக்கமளித்த சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். நன்றிகள்.

    இந்தக் கதையை முன்பே படித்த நினைவு வந்தது. இப்போதும் சுட்டிக்கு சென்று படித்து ரசித்தேன்.
    நேற்று வர இயலவில்லை. அதனால் தாமத வருகை. பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  23. முதல் கதை விமரிசன முயற்சிக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும் தெரிவித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி

     Jayakumar

    பதிலளிநீக்கு
  24. அனைத்தும் சிறப்பான செய்திகள். நல்ல மனம் கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். படித்த கதை குறித்த ஜெயக்குமார் சந்திரசேகரன் ஐயா அவர்களின் அனுபவம் நன்று. சுட்டி வழி நானும் சென்று கதையைப் படித்தேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  25. செய்திகள் அனைத்தும் மிக அருமையான செய்திகள். தாயை கவனித்துக் கொள்ளும் சேய்கள் மனதை கனக்க வைத்து விட்டது. தாயின் உடல் நிலை சரியாகி குழந்தைகளுடன் மகிழ்வாய் வாழ வேண்டும்.


    ஜெயக்குமார் சார் பகிர்ந்த கதை அருமை. சிரிக்க வைத்தது.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!