செவ்வாய், 5 ஏப்ரல், 2022

சிறுகதை : நிழல் - துரை செல்வராஜூ

 நிழல்

துரை செல்வராஜூ 

*******

பேருந்து நிலையம்.. அதனை ஒட்டினாற்போல ரயில்வே ஸ்டேஷன்..

எதிர்புறமாக குளிர் சாதன வசதியுடன் கூடிய கல்யாண மண்டபம்.. நல்ல விஸ்தாரமாக இருந்தது.. 

இதற்கு முன் இந்த இடத்தில் தென்னந்தோப்பு இருந்ததோ..
மாந்தோப்பு இருந்ததோ.. புளியந்தோப்பு இருந்ததோ.. தெரியவில்லை.. ஆயிரமாயிரம் பறவைகளுக்கு சரணாலயமாக இருந்திருக்கும் என்பது மட்டும் சர்வ நிச்சயம்..

அதெல்லாம் பழங்கதை.. அதை இப்போது நினைத்துப் பார்க்க யாருக்கு நேரம் இருக்கின்றது?..

கல்யாண மண்டபத்தின் வாசலில் தூண்கள் இல்லாத முன் வாசல் தளம்  நீண்டிருந்தாலும் அதையும் கடந்து வரவேற்புப் பந்தல்.. தஞ்சை மண்ணின் கலை அலங்காரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது.. 

கடைத்தெருவில் நம்பிக்கையானது
செந்தூர் மளிகை.. அந்த நம்பிக்கையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும் வேலுமணியின் மகளுக்குக் கலியாணம்.. விடியற்காலை ஐந்து மணியில் இருந்தே விருந்து உபசரிப்பு நடந்து கொண்டிருக்கின்றது.. எட்டரை மணிக்கு மேல் தான் முகூர்த்தம்..

உறவுகளும் நண்பர்களும் வந்து கொண்டிருக்க - வேலுமணியின் மகன் முன் நின்று வரவேற்று  விருந்தினர்களை உணவுக் கூடத்திற்கு நகர்த்திக் கொண்டிருந்தான்..

" மாமா.. சித்தப்பா சாப்பிட்டீங்களா?.. "

நெய்யொழுகும் பொங்கல் போல அன்பொழுகும் விசாரிப்பு..

" சாப்பிட்டோம்.. ஐயா... சாப்பிட்டோம்!.. முதல் பந்தியிலேயே சாப்பிட்டுட்டோம்!.. " - என்றபடி புன்னகைத்தார் குருசாமி..

செந்தூர் மளிகை வேலுமணிக்கு இரண்டாம் வட்டத்து சொந்தம்.. சின்ன வயது சினேகமும் கூட.. நேற்று இரவு பரிசம் போடுவது என்று சாயங்காலமே மனைவியுடன் வந்து விட்டார் குருசாமி..
பிள்ளைகள் இன்னும் கொஞ்ச நேரத்தில் வருவார்கள்...

குருசாமியும் மளிகை மண்டி வைத்திருந்தவர் தான்.. இரண்டு ஆண்டுகளுக்கு முன் சின்னதாக சரிவு.. அதிலிருந்து மீண்டு விட்டார் என்றாலும் பிறத்தியார் பார்வையில் அவர் நஷ்டப்பட்டவர்..

அருகில் வந்து நலம் கேட்கின்ற உறவுகளுக்கு இடையே - கண்டும் காணாமலும் செல்கின்றவர்களைக் கண்டு உள்ளூர நகைத்துக் கொண்டார்..

இங்கே மண்டபத்தில் பொழுதுக்கும் பேச்சுத் துணையாக மைத்துனன் முறையான மயில் வாகனம்.. இருவருக்குமே சம வயது..

" மாமா... ஆயிரம் தான் சொல்லுங்க.. இந்த காலத்துக் கல்யாணம் எல்லாம் கொஞ்சம் ஆடம்பரம் தான்!... "

" மயிலு.. அந்தக் காலம் மாதிரியா இப்போ இருக்கு!.. வீட்டுக்கு வீடு ஆறு ஏழு... ன்னு இல்லாம ஒரு பொண்ணு.. ஒரு ஆணு.. ன்னு ஆகிட்டாங்க..  அம்பது வருசத்துக்கு முன்னால இந்த ஊர்..ல நாலு டியூப் லைட் கட்டறதுக்குக் கூட ஆள் கிடையாது.. நல்லது கெட்டது.. ன்னா தீவட்டியும் பெட்ரோமாக்ஸ் விளக்குந்தான்..  இந்த லட்சணத்தில கல்யாண வீட்ல லவுட் ஸ்பீக்கர் கட்டி பாட்டு போடுறது எங்கே!..

இன்னைக்குப் பாரு.. இந்த மண்டபத்துல டிஜிட்டல் சவுண்ட்.. எல்சிடி ஸ்கிரீன்!...  சர்க்கார் உத்யோகம் ஜாஸ்தி ஆயிடுச்சி.. காசு பணத்தை சேர்த்து  வண்டி வாகனம் வாங்குனது போக மிச்சத்துல  செலவு பண்ணி சந்தோசம் கொண்டாடுறாங்க.. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.. வேலுமணி மாதிரி ஓடி ஓடி உழைக்கிறவங்களுக்கு இது ஒரு லட்சியம் - மகளுக்கு கல்யாணம் சிறப்பா செய்யணும்... ன்னு.. இதுல நாம சொல்றதுக்கு என்ன இருக்கு?.. "   சிரித்தார் குருசாமி..

சட்டென விழிப்பான மயில் வாகனம் வாசலை நோக்கி விரலைக் காட்ட -  குருசாமி அங்கே நோக்கினார்..

இரு சக்கர வாகனத்தில் இருந்து இளம் தம்பதியர் இறங்கிக் கொண்டிருந்தனர்..


" வர்றது யாரு.. ன்னு தெரியுதா மாமா!.. "

கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்ட குருசாமி திகைத்துப் போனார்..

" எந்தம்பியப் பார்த்த மாதிரி இருக்கே... இந்தப் பையன் சின்னவன் மகன் தானே!.. "

" அவனே தான்!.. உங்க தம்பி மகனும் மருமகளுந்தான்!.. "

சில மாதங்களுக்கு முன்பு தம்பி தன் மகனுக்கு திருமணம் செய்வித்தது குருசாமியின் நினைவுக்கு வந்தது..

கல்யாணத்துக்கு முதல் நாள் கிடைக்கும்படியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்தது..  

ஒருவருக்கொருவர் சகஜமாகப் பேசி பதினைஞ்சு வருசத்துக்கு மேலாகின்றது... 

பேச்சு வார்த்தை நின்று போனதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை..

அங்கிருந்து வந்தது அழைப்பு அல்ல.. அறிவிப்பு என்பதைப் புரிந்து கொண்டதும் குருசாமியின் மனதில் உண்டான வலி அவருக்குத் தான் தெரியும்..

அதற்குள் வரவேற்பு மேஜையில் இருந்து சந்தனம் குங்குமத்துடன் ரோஜாப் பூ ஒன்றையும் எடுத்துக் கொண்டு வந்த - அவர்களை இடை மறித்தார் மயில் வாகனம்..

" தம்பீ!.. இவங்க யாருன்னு தெரியுதா?... "

அந்த இளைஞன் மௌனமாக நின்றான்..

" இவர் உன்னோட பெரியப்பா!..  உங்க அப்பன தூக்கி வளர்த்தவரு.. ஞாபகம் இருக்கா!.. "

அந்த வார்த்தைகளைக் கேட்ட மாத்திரத்தில் - " ஆசீர்வாதம் பண்ணுங்க மாமா!.." - என்றபடி குருசாமியின் கால்களைத் தொட்டு  வணங்கினாள் அந்தப் பெண்..

இதை சற்றும் எதிர்பாராத குருசாமி திடுக்கிட்டு எழுந்தார்..

" நல்லாயிருக்கணும்... நல்லாயிருக்கணும்!.. " - என்றபடி வரவேற்பு மேஜையில் இருந்த  தாம்பூலத்தை எடுத்து அதில் ஐநூறு ரூபாயை வைத்துக் கையில் கொடுத்தார்..

மறுபடியும் வாழ்த்தினார்.. மடியில் எப்போதும் வைத்திருக்கும் ஜவ்வாது விபூதியை எடுத்து -  " ஆயிரங் காலம் நல்லா இருக்கணும்!.. " - என்றபடி
இருவருக்கும் பூசி விட்டார்... 

இடையில் ஏதோ சொல்ல முயன்றார் மயில் வாகனம்..
அவரைக் கையமர்த்திய குருசாமி - 

" மயிலு..  புள்ளைங்க சாப்பிடாம  வந்திருப்பாங்க.. அப்படியே அழைச்சுக்கிட்டுப் போயி சாப்பிட வை.. சந்தோஷமா போய்ட்டு வாங்க கண்ணுகளா.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்!.. " - என்றபடி அவர்களை அனுப்பி வைத்தார்..

சற்று நேரத்தில் திரும்பி வந்த மயில் வாகனம் -

" மாமா!.. மூத்தவராப் பொறந்த நீங்க இல்லாமலா அவங்க வளந்துட்டாங்க?.. அன்னைக்குக் கை தூக்கி விடாமலா இன்னைக்கு இவ்வளவு தூரத்துக்கு முன்னேறி இருக்காங்க!?... " - என்றார் கோபத்துடன்..

மயில் வாகனத்தின் ஆதங்கம் மனதைக் குடைந்தது...

" மயிலு.. பழசு எதையும் பேச வேண்டாம்.. அவங்க முன்னேறி இருக்குறாங்க... ன்னா அது அவங்க வாங்கிக்கிட்டு வந்த வரம்!.. "

" மாமா!.. "  - மயில் வாகனம் மலைத்தார்..

" பாதாம் பால் இருக்கிறதால பாத்திரத்துக்கு பெருமை தான்.. அதுக்காக  பாதாம் பால் ருசிக்கு பாத்திரம் ஆசைப்பட. முடியுமா?.. அதுதான் நடக்குமா?.. சர்க்கரைப் பொங்கல் ஆகற வரைக்குந்தான் சட்டியும் சட்டுவமும்.. அதுக்கு அப்புறம்?.. "

" மாமா!.. " - மயில் வாகனத்தின் கண்களில் நீர்..

" அற்ற குளத்து அறுநீர்ப் பறவை.. ன்னு படிச்சிருப்பியே!.. "

பாக்குப் பொட்டலத்தைப் பிரித்து வாயில் போட்டுக் கொண்டார்..

" ஒரு காலத்துல இங்கே பெரிய ஆலமரம்.. யானைகளுக்கு நிழலா இருந்தது.. இன்னைக்கு இதே இடத்துல குரோட்டன்ஸ்.. எறும்புகளுக்கு நிழலா இருக்குது!.. யானையா இருந்தா என்ன.. எறும்பா இருந்தா என்ன?.. நிழல் - நிழல் தானே!.  "

- என்றபடி, குருசாமி மயில் வாகனத்தின் தோளை தட்டிக் கொடுத்த வேளையில் -

கடைத்தெரு  கூட்டத்தின் ஊடாக இரு சக்கர வாகனம் ஒன்று..

அது கல்யாண மண்டபத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது..

" உங்க அண்ணனும் அண்ணியும் கல்யாணத்துக்கு வந்திருப்பாங்க.. இல்லே!.. "

" அவங்க நேத்து சாயங்காலமே வந்துட்டாங்களாம்..  அந்த சேதி உனக்கு எதுக்கு இப்போ?.. "

" புள்ளைங்க ரெண்டு பேரும் முன்னால போயிருக்காங்க.. கூப்பிட்டு வச்சு பழய கதையப் பேசறேன்.. னு குழப்பி விட்டுடப் போறாரு!... "

*** *** ***

55 கருத்துகள்:

 1. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
  பெற்றான் பொருள் வைப்புழி..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. அன்பின் வணக்கம் அனைவருக்கும்..
  இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வாழ்கவே...

   வாங்க துரை செல்வராஜூ ஸார்..  வணக்கம்.

   நீக்கு
 3. இன்று கதைக் களம் காண்பதற்கு வருகை தரும் அனைவருக்கும் நல்வரவு..

  பல்வேறு பணிகளுக்கு இடையேயும்
  கதையைப் படித்து பரிசீலித்துப் பதிப்பித்த அன்பின் ஸ்ரீராம் அவர்களுக்கும் அழகு செய்த அன்பின் சித்திரச் செல்வர் அவர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.  நண்பர்களை அன்புடனே வரவேற்பதோடு துரை செல்வராஜூ ஸாருக்கும் நன்றி.

   நீக்கு
 4. சித்திரச் செல்வர் அவர்களது கை வண்ணம் அருமை..

  அடித்து ஆடுகின்றார்..
  வாழ்க.. வாழ்க..

  பதிலளிநீக்கு
 5. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். இனி வரும் நாட்களில் மக்கள் அனைவரும் எந்தவிதமான தொற்றுக்கான அச்சமும் இல்லாமல் சரளமான வாழ்க்கை வாழ்ந்திடப் பிரார்த்திக்கிறோம்.

  பதிலளிநீக்கு
 6. ஹை! இன்னிக்கு ரோபோ வரலை. கல்யாணச் சத்திரம் படம் நுணுக்கமாக வாயில் கோலம் முதற்கொண்டு பார்த்து வரைந்திருக்கார் திரு கௌதமன் அவர்கள். கதையும் பாதியில் நின்றுவிட்டாற்போல் இருக்கே! இதிலிருந்து கிளைக்கதை வருமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரோபோ ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு நாட்களுகு மட்டுமே வரும்.

   நீக்கு
  2. கதையே அவ்வளவு தான்..

   தன்னை ஒதுக்கி வைத்த தம்பியின் மகனையும் மருமகளையும் கார்த்து குருசாமி மனம் நெகிழ்ந்திருக்க

   குருசாமியின் தம்பி மனைவியோ - அவர் தன் மகனின் மனதைக் குழப்பி விட்டு விடுவார் என்று யோசிக்கின்றாள்..

   இது தான் கதை...

   நீக்கு
  3. அப்போக் காலை நேர அவசரத்தில் படிச்சதில் கடைசியில் பேசிக்கிறதும் குருசாமியும் மயில் வாகனமும் என நினைத்துவிட்டேன். இப்போ மறுபடி கதையைப் படிக்கையில் நன்றாகவே புரிந்து கொண்டேன். :( தாமதமான புரிதல். :(

   நீக்கு
 7. குருசாமி தான் மூத்தவர் என நினைக்க அவரிலும் மூத்தவர் முதல்நாளே வந்திருக்கார் என்பதும் அந்த இளம் தம்பதிகளிடம் அவர் குருசாமி பத்திச் சொல்லிக் குழப்பி விட்டுடுவார் என்பதும் புரியலை! :( கொஞ்சம் விளக்கமாக இருந்திருக்கலாமோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குடும்பத்துக்கு உழைத்த குருசாமியும் அவரை ஒதுக்கி வைத்த தம்பியும் தான் கதை மாந்தர்கள்..

   அவர் தனது தம்பி மகனையும் மருமகளும் கண்டு நெகிழ்கின்றார்.. ஆனால் அவரது தம்பி மனைவியோ அவர் குடும்பத்தில் குழப்பம் செய்து விடுவாரோ .. என்று யோசிக்கின்றாள்...

   தம்பி தம்பியின் மனைவி உரையாடலை சற்று இலைமறைவாக வைத்தேன்..

   சரியாக விளங்கவில்லை எனில் பிழை என்னுடையதே...

   பொறுத்துக் கொள்ளவும்..

   அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி..நன்றியக்கா..

   நீக்கு
  2. இப்போப் புரிந்தது தம்பி. நன்றாகவே புரிந்து கொண்டேன்.

   நீக்கு
 8. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. //இடையில் ஏதோ சொல்ல முயன்றார் மயில் வாகனம்..
  அவரைக் கையமர்த்திய குருசாமி -

  " மயிலு.. புள்ளைங்க சாப்பிடாம வந்திருப்பாங்க.. அப்படியே அழைச்சுக்கிட்டுப் போயி சாப்பிட வை.. சந்தோஷமா போய்ட்டு வாங்க கண்ணுகளா.. இன்னொரு நாளைக்குப் பார்க்கலாம்!.. " - என்றபடி அவர்களை அனுப்பி வைத்தார்..//

  மருமகள் கீழே விழுந்தவுடன் ஆசீர்வாதம் செய்தவர். பெரியஉள்ளம் படைத்தவர்தான். தம்பி மனைவி சொல்வது போல குழப்பிவிடவில்லை.

  அருமையான கதை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // தம்பி மனைவி சொல்வது போல குழப்பிவிடவில்லை..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 10. கெளதமன் சார் வரைந்த ஓவியம் கதைக்கு பொருத்தமாக இருக்கிறது.
  அருமையாக இருக்கிறது.
  கல்யாண மண்டப வாசலில் குழந்தைகள் விளையாடுவதை கூட வரைந்து இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 11. பதில்கள்
  1. அன்பின் தனபாலன்..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 12. ஒவ்வொருவர் எண்ணங்களும் ஒரு விதம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எண்ணங்கள் ஆயிரம் என்றும் சொல்லி வைத்திருக்கின்றார்களே!..

   தங்கள் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி ஜி..

   நீக்கு
 13. அனைவருக்கும் முகம் மலர இனிய காலை வணக்கங்கள்! இன்றைய கதை நிகழ்காலத்தின் நிதர்சனத்தை உணர்த்தும் வகையில் இருக்கின்றது. நிறைய வீடுகளில் நடக்கும் கதையே. எனக்கு தெரிந்த ஒரு பெரியவர், கூட தான் படிக்கவில்லை என்றாலும் தான் உழைத்து தம்பிகளை படிக்க வைத்தார். தம்பிகள் தத்தம் மனைவி, குழந்தைகள் என நல்ல வசதியான வாழ்வில். இவரோ இன்றும் உழைத்துக்கொண்டே இருக்கின்றார். இவரின் பிள்ளைகளும் படித்து நல்ல வேலையில் வேறு ஊர்களில். யாரிடமும் எதிர்பாராமல் வசதிகள் அதிகம் இல்லாமல் அவரும், அவர் மனைவியும் வாழும் எளிமையான வாழ்வில் நிம்மதி இருக்கின்றது. உறவு முறைகள் நல்ல முறையில் இருந்தாலும், ஒரு கஷ்டம் என வரும் பொழுது , அவரவர் சூழ்நிலைகளின் படி உதவி செய்யவும் இயலாமல் இருக்கின்றனர். தம்பதிகளில் ஒருவற்கு உதவ வேண்டும் என்று இருந்தாலும் மற்றவர் எவ்விதமோ அவ்விதமே அமைகிறது. ஒரு கூட்டு பறவைகள், திருமணத்திற்கு பிறகு வேறாகிறது. இருவரும் ஒருமனதாக அனைவரையும் அரவணைக்கும் பண்பு மிக அபூர்வமே. குருசாமி சொல்வது போல, அவரவர் வாங்கி வந்த வரமே. நல்லதொரு கதைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. // ஒரு கூட்டுப் பறவைகள், திருமணத்திற்கு பிறகு வேறாகின்றன.. இருவரையும் ஒருமனதாக அனைவரையும் அரவணைக்கும் பண்பு மிக அபூர்வமே..//

   தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 14. இன்னிக்கு என்ன ரேவதியைக் காணோம்? எங்கள் ப்ளாக் குழுமத்திலும் பார்க்கலைனே நினைக்கிறேன். உடல் நலமாக இருக்காரா? அல்லது ஊருக்குக் கிளம்புகிறாரா? மற்றபடி தி/கீதா அவர் சௌகரியம் போல் வருவார்னு நினைக்கிறேன். கமலா இன்னமும் உடல் நலமில்லாமல் இருக்காரோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எனக்கும் இதே நினைவு தான் அக்கா.. அவர்கள் எல்லாம் வரவில்லையே என்று வருத்தமாக இருக்கின்றது..

   நீக்கு
  2. அக்கா வல்லிம்மா மனசு கஷ்டத்துல இருப்பாங்கனு நினைக்கிறேன். ஒரு நிகழ்வு சொல்லிருந்தாங்களே அவங்க ப்ளாக்ல..

   ஆமாம் அக்கா வேலைப் பளு. அதனால் சௌகரியம் போல்தான் வருகிறேன். ஒரோரு நாள் ஒருவிதமாக.

   கமலாக்கா உடல் இன்னும் சீராகலையோ...அன்று சொன்னதிலிருந்து ஒரு ஊகம். வீட்டிலும் வேலை நடப்பதாகச் சொல்லியிருந்தாரே.

   கீதா

   நீக்கு
  3. ரேவதியும், நீங்களும் பதில் சொல்லிட்டீங்க. கமலாவைத் தான் இன்னும் காணோம். :( நல்லபடியாக உடல் நலத்தோடு இருக்கப் பிரார்த்தனைகள்.

   நீக்கு
 15. இந்த வார புதன் கேள்வி:
  இந்த வார ‘கர்மா’ தொடரில் பூவிலங்கு மோகன் தன் மூதாதையர்களின் பெயர்களை வரிசையாக சொல்லும்போது அவரவர்களின் பெயரோடு சர்மா, சாஸ்த்ரி, தீஷிதர், கனபாடிகள் என்றெல்லாம் சொல்கிறார். ஒரே குடும்பத்தில் இவ்வாறு வருமா? ஒவ்வொன்றுக்கும் தனிப்பட்ட பொருள் என்ன?

  வைஷ்ணவி

  பதிலளிநீக்கு
 16. கதை அருமை. மனித உணர்வுகளில் எவ்வளவு மாறுதல்கள்.

  குடும்பத்தில் யதார்த்தமாக நிகழக் கூடிய நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது சார். முதலில் கதை முடியாமல் தொடர்கிறதோ என்று நினைத்தேன். அப்புறம் புரிந்தது.

  துளசிதரன்

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @ துளசிதரன்.

   // குடும்பத்தில் யதார்த்தமாக நிகழக் கூடிய நிகழ்வுகள் சொல்லப்பட்ட விதம் நன்றாக இருக்கிறது..//

   தங்கள் அன்பின் கருத்துரைக்கு மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 17. கதை நன்று. இரு மனங்களின் வெவ்வேறு சிந்தனைகள். ஒன்று நேர்மறை, மற்றொன்று எதிர்மறை. குற்றமுள்ள நெஞ்சின் குறு குறுப்பு!

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அன்பின் துளசிதரன்..
   தங்கள் வருகையும் கருத்துரையும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 18. துரை அண்ணா கடைசிப் பகுதி வாசித்த போது முதலில் டக்குனு புரியலை. அதன் பின் புரிந்தது வண்டியில் வந்து கொண்டிருந்தவர்களின் உரையாடல் என்று.

  கதை நன்றாக இருக்கிறது. இப்படி முடித்திருப்பது வித்தியாசமாக இருக்கிறது. பெரும்பாலும் குடும்பங்களில் மூத்தவர்கள் குடும்பத்திற்காக உழைத்து அதன் பின் கைவிடப்படுபவர்கள். பெரியவர்களுக்குள்தான் பிரச்சனை அது ஏன் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது என்பதும் வேதனை. இப்போதும் பல குடும்பங்களில் அப்படித்தான்.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தில் சகஜமான நிகழ்ச்சி கதை உரைக்காமல் உணர்த்துகிறது. அன்புடன்

   நீக்கு
  2. @ கீதா..

   // பெரியவர்களுக்குள் தான் பிரச்சனை.. அது ஏன் அடுத்த தலைமுறைக்கும் செல்கிறது?.. //

   இதுதான் மிகப் பெரிய ஆச்சர்யம்.. ஆனாலும் தவிர்க்க முடியவில்லை..

   அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு
 19. @ காமாட்சி..

  // உறவுகள் தொடரட்டும் இது இக்காலத்தில் சகஜமான நிகழ்ச்சி.. //

  அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றியம்மா..

  பதிலளிநீக்கு
 20. நெகிழ்ச்சியான கதை. குருசாமி பெரியவர் மட்டுமல்ல பெரிய மனிதரும் கூட.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்கள் அன்பின் வருகையும் கருத்தும் மகிழ்ச்சி.. நன்றி..

   நீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!