புதன், 11 மே, 2022

நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டு அதற்கு பதில் எழுதியிருக்கிறீர்களா?

 

ஜெயகுமார் சந்திரசேகரன் : 

கேள்விக்கு பதில் எழுதுவது கஷ்டமா அல்லது பதிலுக்கு தகுந்தாற்போல் கேள்வி உண்டாக்குவது கஷ்டமா? 

# சில கேள்விகளுக்கு பதில் சொல்வது கஷ்டமாக இருக்கும்.  ஆனால் அதற்கும் "தெரியவில்லை" என்ற எளிய விடை அளித்து விடலாம் .  பதிலுக்குத்தக்க கேள்வியை எளிதில் பிடித்து விடலாம்.

& பதில் என்ன வரும் - (குறிப்பாக எங்களிடமிருந்து!) என்று தெரியாமல் அதற்குத் தகுந்தாற்போல் கேள்விகள் கேட்க இயலாது. எனவே கடினமான கேள்விக்கு பதில் எழுதுவதுதான் கஷ்டம்.  

நீங்களே கேள்வி கேட்டுக் கொண்டு அதற்கு பதில் எழுதியிருக்கிறீர்களா? கோராவில்  சிலர் அப்படி செய்கிறார்கள். 

# பலருக்கும் அதிகம் தெரியாத ஒரு சுவாரசியமான விஷயம் நமக்குத் தெரிந்திருந்தால் அதை விடையாகத் தரத் தக்க ஒரு கேள்வியை யாரோ கேட்டது போல் போடலாம்தான்.  இதில் எங்களுக்கு ஆர்வம் இல்லை; அப்படியான மகத்தான எதுபற்றியும்  தெரியவும் தெரியாது.

& இல்லை. 

கோரா போன்ற கேள்வி பதில் தளங்கள்  எவை எவை? 

# தளங்கள் குறித்து முழு விவரம் தளங்களிலேயே கிடைக்குமே.

& Quora தவிர வேறு எதுவும் தெரியாது. அதையும் எப்போதாவதுதான் பார்ப்பது உண்டு. 

Blogger தவிர wordpress, tumblr போன்று  வாசகர்களுக்கு எழுத, பிரசுரிக்க உதவும் தளங்கள் எவை?

# விரிவான விவரங்கள் தெரியவில்லை.

& Blogger wordpress தவிர வேறு எதுவும் எனக்குத் தெரியாது. 

= = = = =

எங்கள் கேள்விகள் : 

1) ஆன்மீகம் படித்து உங்கள் மனதில் பெருத்த மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்ததுண்டா ?  ஆம் எனில்  விபரம் சொல்லுங்கள்.

2) " முதியோர் இல்லங்கள் தேவை / தேவை இல்லை"  இதில் நீங்கள் எந்தக் கட்சி?

3) உங்கள் முக்கிய பொழுதுபோக்கு என்ன ?  சினிமா நடிகர் பற்றிய செய்தி, அரசியல் மோசடி பற்றிய எதிர்ப் பிரச்சாரம் போன்ற பரபரப்பு செய்திகளை விடாமல் படிப்பதுண்டா ?

4) பிரார்த்தனைகள் பலிப்பதுண்டா ? இல்லை தற்செயல் நிகழ்வுகள் அவை பலன் தருவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன வா?

5) அம்மாக்கள் தினம், மகளிர் தினம் போன்ற நாட்களில் வாழ்த்து பரிமாறிக் கொள்வது பற்றிய உங்கள் கருத்து என்ன?

6) பெரும் பதவி பெரிய சம்பளம் இவற்றுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும்  பிள்ளைகள் பெற்றோருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதம் ஒப்புக் கொள்ளக் கூடியதா ?

= = = =

படம் பார்த்து கருத்து எழுதுங்க :

1) 


2) 


3) 

= = = =

119 கருத்துகள்:

  1. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
    அனைவரும் ஆரோக்கியம் நிறை வாழ்வு கிடைக்கப் பெற வேண்டும்.

    பதிலளிநீக்கு
  2. கோரா கேள்விகளும் பதில்களும் பல சமயம்
    அர்த்தமில்லாமல் இருக்கும்,.

    பதிலளிநீக்கு
  3. 1, ஆன்மீகம் , மகான் மற்றும் புண்ய ஸ்தலங்கள் பற்றி
    படிக்க பிடிக்கும்.
    ராகவேந்திரர் மகிமை புத்தகம் எத்தனையோ ஆறுதல்
    கொடுத்திருக்கிறது.

    அது போல் ஷீர்டி பாபா பற்றிய சரிதைகளும்
    படிப்பதுண்டு. மன நிம்மதி தருபவை இது போன்ற நூல்கள்.
    மஹா பெரியவா பற்றிய ரா.கணபதியின் தெய்வத்தின் குரலும் அது போலத் தான்.

    ஆத்ம திருப்தி கொடுப்பவை.

    பதிலளிநீக்கு
  4. 2, முதியோர் இல்லங்கள் சிலருக்குத் தேவை.

    பெற்ற பிள்ளைகளின் ஆதரவு இல்லாதவர்கள்
    எங்கே போவார்கள்?

    பெற்ற குழந்தைகள் இருந்தும் முதியோர் இல்லத்தில் இருக்கும் சில
    பெண்களை அறிவேன். மிக சந்தோஷமாக இருக்கிறார்கள்.

    சுற்றத்தார், மகங்கள் மகள்கள் ஆதரவு
    இருந்தால் அங்கே செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சிலர் தானே விரும்பியே அங்கு சேர்கிறார்கள், இருக்கிறார்கள்.

      நீக்கு
    2. ஆமாம். அதற்கும் நல்ல பக்குவம் தேவை.
      என் மாமா சில நாட்கள் அங்கே இருந்துவிட்டுத் தன்வீட்டுக்கு வந்து சொந்த வீட்டில்
      இறைவன் பாதம் அடைந்தார்.
      அவர் பெண்கள் வேறு நாட்டில் இருந்தார்கள்.

      கேட்டரிங்க் உணவு, அக்கம் பக்கத்தோர் அன்பு அவருக்குப் போதுமானவையாக
      இருந்தன.

      நீக்கு
  5. 3, அரசியல், சினிமா எதுவும் சுவாரஸ்யம் இல்லை.
    அலுத்தும் போய்விட்டது.

    கதைகளின் பாட்காஸ்ட் பிடிக்கும்.

    பதிலளிநீக்கு
  6. 1986இல் கர்மயோகி அவர்கள் எழுதிய "அன்னையின் தரிசனம்" புத்தகம் படித்தேன். ஸ்ரீஅரவிந்த அன்னையின் வரலாறு, பாண்டிச்சேரி ஆசிரம வரலாறு, அங்குள்ள சமாதியின் மகிமை ஆகியவற்றை பக்திச் சுவையோடு வர்ணிக்கும் புத்தகம். அன்று முதல் இன்று வரை என்னையும் என் குடும்பத்தையும் ஆட்சி செய்துவருகிறது அன்னையின் அருள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்பா அந்தப் புத்தகம் வைத்திருந்தார் என்று நினைவு.  நான் படித்ததில்லை.

      நீக்கு
  7. 4, பிரார்த்தனைகள் பலிக்கும்.
    கடவுளின் நினைவில்லாமல் எதுவும் நடப்பதில்லை.

    பதிலளிநீக்கு
  8. அன்பின் வணக்கம்
    அனைவருக்கும்...

    இறையருள் சூழ்ந்து எங்கும் இன்பமே நிறைந்து வாழ்க..

    வாழ்க நலம்..
    வாழ்க தமிழ்..

    பதிலளிநீக்கு
  9. என் மாமனாருக்குப் புற்று நோய் என்று தெரிந்ததும்,
    மாமியார் ( மிகப் பெரிய ஆன்மீகவாதி)
    பிரார்த்தனை செய்தது. அவருக்கு எது நல்லதோ அது நடக்கட்டும்
    என்பதுதான்.
    ஒரே மாதத்தில் மாமனார் இறைவன் அடி அடைந்தார்.
    மாமா அதிகம் கஷ்டப்பட வில்லை என்பதே
    அவரது எண்ணம். மிக வருத்தப்பட்டார் .ஆனால்
    அமைதியாக இருந்தார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஓ - அப்படியா ! கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
    2. //அவருக்கு எது நல்லதோ அது நடக்கட்டும்//

      வெகு சிறப்பு இதற்கு மனப்பக்குவம் வேண்டும்.

      நீக்கு
    3. ஆமாம் மா. அந்த நோய் வந்து மாதக் கணக்கில் வதை பட்டவர்களையும் பார்த்திருக்கிறோம்.
      இறைவன் அனைவரையும் காக்க வேண்டும்.

      நீக்கு
    4. என் அம்மா நான்கு வருடங்கள் கஷ்டப்பட்டார். ஆனால் நடமாடிக் கொண்டும் வேலைகள் செய்து கொண்டும் தன் வலியைப் பிறரிடம் சொல்லாமலும் இருந்தார். அவர் கடைசியாப் படுக்கையில் படுத்தது மூன்றே மாதங்கள் தான். மார்கழி மாதம் படுத்தார். மாசியில் இறந்து விட்டார்.

      நீக்கு
  10. 5, ஏன் கணவர்கள் தினம், தாத்தா பாட்டி தினம், வேட்டி தினம்
    ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்கு சுபதினம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ..தாத்தா பாட்டி தினம், வேட்டி தினம்
      ஆண்டுக்கு ஆண்டு தேதிக்குத் தேதி ஆயிரம் இருக்கு சுபதினம்//

      ஐ.நா.காரனுங்க இந்தப் பாட்டைப் போட்டுக் கேட்கட்டும் ஒருமுறை. வெட்டி தினங்கள் விலகிடும்..!

      நீக்கு
  11. 1.//ஆன்மீகம் படித்து உங்கள் மனதில்..//
    ஆன்மீகம் படிக்கக் கூடியதல்ல.. அது உணரப்படுவது.. வாழ்வில் கடைபிடிக்கப்படுவது..

    2. அவரவர் வாங்கி வந்த வரம்..

    3. Tom & Jerry

    4. பிரார்த்தனை என்றால் என்ன?..

    5. !?...

    6. வாழ்க்கை முழுதும் வாதம் தான்!..

    பதிலளிநீக்கு
  12. பெரிய பதவி, வெளிநாடு செல்வது தவறில்லை.

    மற்றொரு புறம் தாய்-தந்தையை கவனமாக கொண்டு செல்ல வேண்டும்.

    பெரிய பதவி என்றால் நல்ல சம்பளம்தானே... ? இவர்களை அழைத்து செல்லலாம் அல்லது அடிக்கடி வந்து போகலாம். பணம் செலவானால் என்ன ?

    சமூகத்தில் பணக்கார வரிசையில் முதலில் வரவேண்டுமென்று எண்ணமே இந்த முதியோர் இல்லங்களின் வரவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல கருத்து.  ஆனால் விதிவிலக்காக சில வயதானவர்கள் சொந்த நாட்டை விட்டு, ஏன் சொந்த ஊரை விட்டே வெளியே செல்ல விரும்புவதில்லை.

      நீக்கு
    2. எல்லாவற்றுக்கும் கொடுப்பினை வேண்டும் ஸ்ரீராம்.
      மைலாப்பூர் வழக்கு பார்த்திருப்பீர்கள். தம்பதிகளையே
      பணத்துக்காக அழித்தவர்கள் இருக்கும் உலகம்.

      நீக்கு
    3. மயிலாப்பூர் சம்பவம் மனதை மிகவும் வருத்துகின்றது..
      இரத்த சம்பந்தங்களே எதிரியாகிப் போகும் போது எங்கிருந்தோ வந்திருக்கும் பணிக்காரனை எதற்கு நம்புவது?..

      மற்ற நிகழ்வுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதற்கு யாரும் தயாராக இல்லை..

      நீக்கு
    4. பெயரில்லா11 மே, 2022 அன்று AM 7:47

      அன்பின் துரைசெல்வராஜு, என் கணவரின் அக்கா மற்றும்அவர் கணவர் 90 வயது அங்கேயே இருக்கிறார்கள். மகள்கள் வெளி நாட்டில் . மறைந்த தம்பதியனரின் டிரைவர் 11 வருடங்களாக அங்கே இருக்கிறான். விதி என்று தான் சொல்ல வேண்டும்.

      நீக்கு
  13. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன் !

    பதிலளிநீக்கு
  14. கேள்விகளும், பதில்களும் நன்றாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  15. 1) ஆன்மீகம் படித்து உங்கள் மனதில் பெருத்த மாற்றம் ஏற்படுவதாக உணர்ந்ததுண்டா ? ஆம் எனில் விபரம் சொல்லுங்கள்


    இல்லை. நான் வேஷம் போட விரும்பவில்லை. நான் எப்போதும் போலவே என்னுடைய நம்பிக்கையில் (கடவுள் உண்டு) விசுவாசிக்கிறேன். ஆனால் பகவான் ராமகிருஷ்ணரின் உபதேசங்கள் என்னை கொஞ்சம் சீர்படுத்தின என்பது உண்மை. எம்மதமும் சம்மதம்.


    2) " முதியோர் இல்லங்கள் தேவை / தேவை இல்லை" இதில் நீங்கள் எந்தக் கட்சி?


    நாங்கள் முதியவர்கள் தான். பல காரணங்களால் தனியாகத்தான் வசிக்கிறோம். ஆனால் ஒருவர் மறைந்தால் என்ற நினைப்பு சில சமயம் வாட்டுவதுண்டு. அப்போது முதியோர் இல்லம் தேவைப் படலாம். தற்போது open mind. இங்கு திருவனந்தபுரத்தில் முதியோர் இல்லங்கள் குறைவு.


    3) உங்கள் முக்கிய பொழுதுபோக்கு என்ன ? சினிமா நடிகர் பற்றிய செய்தி, அரசியல் மோசடி பற்றிய எதிர்ப் பிரச்சாரம் போன்ற பரபரப்பு செய்திகளை விடாமல் படிப்பதுண்டா ?


    பொழுது போக்கு இணையத்தில் மேய்வது மற்றும் கணினி விளையாட்டுகள் அல்லது புத்தக வாசிப்பு.


    4) பிரார்த்தனைகள் பலிப்பதுண்டா ? இல்லை தற்செயல் நிகழ்வுகள் அவை பலன் தருவது போன்ற பிரமையை ஏற்படுத்துகின்றன வா?


    பலிப்பதும் பலிக்காததும் தற்செயல் தான். பலித்தால் கடவுள் காப்பாற்றி விட்டார் என்பதும், பலிக்காவிட்டால் கடவுளுக்கு கண் இல்லை என்பதும் வழக்கம் தான். பிரார்த்தனை செய்வது உண்டு. ஆனால் கட்டாயம் பலிக்கும் என்று எதிர்பார்ப்பு இல்லை. பிரார்த்தனைகள் just peace of mind.


    5) அம்மாக்கள் தினம், மகளிர் தினம் போன்ற நாட்களில் வாழ்த்து பரிமாறிக் கொள்வது பற்றிய உங்கள் கருத்து என்ன?


    ஒப்புக்கு கூறும் வாழ்த்துக்கள். ஆனாலும் கிடைக்கும் வாழ்த்துக்கள் கொண்டு மகிழ்ச்சி அடையும் அம்மாக்கள் மகளிர் இவர்களுக்காக கூறுவது தவறில்லை. வாழ்த்து கூறுவதால் நஷ்டம் ஒன்றும் ஏற்படுவதில்லையே.

    6) பெரும் பதவி பெரிய சம்பளம் இவற்றுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதம் ஒப்புக் கொள்ளக் கூடியதா ?


    இல்லை. சுயநலத்திற்காக பிள்ளைகளின் வாழ்க்கையை முறைப்படுவது சரியில்லை. அவர்கள் வாழ்க்கையை அவர்களுக்கு தீர்மானிக்கும் உரிமை உண்டு.

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நல்ல பதில்கள். நன்றி.

      நீக்கு
    2. எங்களுக்குள்ளும் ஒருத்தர் போய்விட்டால்? என்னும் மிகப் பெரிய கேள்வி தான் கடந்த சில வருடங்களாகவே! யாரறிவாரோ! எல்லாம் அந்த ஈசன் விட்ட வழி!

      நீக்கு
  16. நெல்லையையும் கீதா மாமியையும் காணவில்லை. இருவரும் ஏன் களத்தை விட்டு ஒதுங்கி இருக்கிறார்கள்.

     Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கும் தெரியவில்லை.

      நீக்கு
    2. நெல்லை பத்ரிநாத் பயணத்தில் இருக்கார். எ.பி. வாட்சப் குழுமத்தில் கூடப் படங்கள் பகிர்ந்திருந்தார். அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கிறார். எங்க வீட்டில் சுமார் பதினைந்து நாட்களாக வேலைகள் நடக்கின்றன. முதலில் தச்சரின் வேலை. அது முடிந்து கழிவறையை மாற்றிக் கட்டியதில் அது பத்து நாட்கள் ஆகிவிட்டது. இப்போது வீடு வெள்ளையடிக்கும் வேலை, ஒரு நாளைக்கு ஒரு அறையாக முகக்கவசம் போட்டுக் கொண்டு சமைத்ததும் சமையலறையை விட்டு வெளியேறி வந்துடுவேன். பின்னர் ஆட்கள் மாலை ஆறுமணிக்குச் சென்றது வேலைகள்/வீட்டை ஒழுங்கு செய்வது எனத் தொடரும். நேற்றும் இன்றும் காலை நான்கு மணியிலிருந்து சாமான்களை வெள்ளையடிக்கும் அறையிலிருந்து வேறொரு இடம் கொண்டு வருவது. ஏற்கெனவே வைத்திருந்த சாமான்களை அதனதன் இடத்தில் வைப்பதுமாக எட்டு மணி வரை. அதன் பின்னர் வீடு சுத்தம் செய்துக் கஞ்சி குடிச்சுக் குளித்துச் சமைத்துச் சாப்பிடும்போது பனிரண்டு ஆயிடும். அதோடு வைஃபை இணைப்பையும் துண்டித்து வைத்திருந்தோம். இன்று தான் இணைத்தோம். நான் மொபைல் டாட்டா மூலம் அவ்வப்போது வாட்சப், முகநூல் பார்ப்பதோடு சரி! அநேகமா ஏன் கேட்டோம்னு ஜேகே சாருக்கு இருக்கும். :))))))))

      நீக்கு
    3. நான் செவ்வாய்/சனி இரண்டு நாட்களில் வரும் பதிவுகளிலிருந்து ஒதுங்கி இருக்கத் தீர்மானித்திருப்பது என்னமோ உண்மை தான். அதான் நேற்றைய பதிவிற்கும் கூட இன்று கருத்துச் சொல்லலாமோ/கூடாதோ எனத் தயங்கிப் பின்னர் கருத்துச் சொன்னேன்.

      நீக்கு
    4. தகவல்களுக்கு நன்றி.

      நீக்கு
  17. படைக்கருத்துக்கள். 
    1. சதுரகிரி மறு பிறவி 

    2. பழம் நீ சாப்பிட்டுக்கோ. தோலை எனக்குக் கொடு. 

    3.மீன் நல்ல மீன் வாங்கோ வாங்குங்கோ!

    Jayakumar

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. படை என்பதை பட என்று திருத்திக் கொள்ளுங்கள்

      நீக்கு
    2. புரிந்துகொண்டோம். கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  18. நம்மால் சில கேள்விகளுக்கு விடை கிடைக்காத போது மனம் சஞ்சலம் படும் அந்த நேரம் ஆன்மீக புத்தகங்களை படிக்கும் போது விடை கிடைக்கும். நூல்சாற்றி பார்ப்பது என்று படிப்பார்கள்.
    அதில் தேவையான விடை கிடைக்கும். மனம் அமைதி அடையும்.

    பதிலளிநீக்கு
  19. கேள்வி பதில்கள், படங்கள் என அனைத்தும் சிறப்பு.

    பதிலளிநீக்கு
  20. காலை வணக்கம் சகோதரரே

    அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  21. முதியோர் இல்லங்கள் சகல வசதிகளுடன் தங்கும் விடுதிகளாக மாற்றம் அடைந்து இருக்கிறது. பெற்றோர்களின் கையில் காசு இருக்கிறது, குழந்தைகளிடம் போய் வந்த நாட்கள் போக மீதி நாட்களில் தனியாக இருக்க வேண்டும், அதை தவிர்க்க இது போன்ற இல்லங்கள் இப்போது முதியவர்களுக்கு தேவை படுகிறது. 24 மணி நேர மருத்துவ உதவி, பேச்சு துணைக்கு தன் வயதை ஒத்தவர்கள் நட்பு, வேலை பளு குறைவு. பாதுகாப்பு என்று நிறைய காரணங்கள் சொல்கிறார்கள் அங்கு தங்கி இருக்கும் உறவினர்கள்.

    பதிலளிநீக்கு
  22. வலைத்தளத்தில் நட்புகளின் பதிவுகளை படிப்பது, சினிமா, பக்தி பாடல்களை கேட்பது, பழைய புதிய படங்கள் (நல்லபடங்கள்) பார்ப்பது. இறை வழிபாடு, புத்தகம் படித்தல் உறவுகள், நட்புகளுடன் போனில் உரையாடுவது என்று போகிறது. அரசியல் பரபரப்பு செய்திகள் பார்ப்பது இல்லை. ஒருத்தருக்கு ஒருத்தர் கருத்து மோதல்கள் செய்வதையும் கேட்பது இல்லை.

    பதிலளிநீக்கு
  23. நேற்று தோடு காணாமல் போய் கிடைத்தது.வழக்கம் போல அரைக்காசு அம்மனிடம் வேண்டிக் கொண்டேன். கிடைத்து விட்டது. கை மறந்து என்ங்கோ வைத்து விட்டு தேடும் பொருட்களை அம்மாவிடம் வேண்டிக் கொள்வேன் க்ண்ணில் காட்டு என்று காட்டி விடுவார். நம்பிக்கைதான்.
    என் கணவர் நான் ஏதாவது தொலைத்து விட்டு அதை தேடி களைப்பு அடைந்தால் சொல்வது " உனக்கு கிடைக்க வேண்டும் என்று இருந்தால் கிடைக்கும் அமைதியாக இரு"என்பார்கள்.
    பிரார்த்தனை செய்வது நம் கடமை அதை கொடுப்பது அவர் விருப்பம்.

    பதிலளிநீக்கு
  24. இப்போது நிறை தினங்கள் வந்து விட்டது, வாழ்த்துக்கள் பரிமாறி கொள்வதில் மகிழ்ச்சிதான் அனைவருக்கும்.

    பதிலளிநீக்கு
  25. 1) ஆன்மீகம் எல்லாம் படிக்க முடியாது...! அதனால் வருவதும் ஆன்மீகம் அல்ல...! அதை அவரவர் செயல் மூலம் மட்டுமே உணரத்தான் முடியும்... அப்புறம் மாற்றம் எனும் எண்ணமே இருந்ததில்லை... ஆனால் உணர்ந்ததிற்கான காரணம், "நடப்பதெல்லாம் நம்மலாலே"

    பதிலளிநீக்கு
  26. 2) ஒவ்வொருவருக்கும் மனிதம் என்பது இருந்தால், முதியோர் இல்லங்கள் என்பதே அவசியமில்லை...!

    பதிலளிநீக்கு
  27. "திரை கடல் ஓடியும் திரவியம் தேடு"

    வெளி நாடுகளுக்கு சென்று தன் குடும்பத்தை காப்பற்றிய கதைகள் நிறைய இருக்கிறது. அந்த காலத்தில் கப்பலில் அவர்கள் வந்து வந்து எல்லாம் அடிக்கடி போக முடியாது குடும்பத்திற்கு பணம் மட்டும் அனுப்புவார்கள்.

    இப்போது குடும்பத்துடன் சென்று இருக்கிறார்கள் வெளி நாடுகளில் கணவன், மனைவி என்று இருவரும் வேலை பார்க்கிறார்கள். தன் பெற்றோர்களை அழைத்து போகிறார்கள், வருகிறார்கள் பெற்றோர்களை பார்க்க, நிரந்தர குடியுரிமை பெற்றவர்கள் பெற்றவர்களை உடன் வைத்து கொள்கிறார்கள். அதுதான் இந்த காலகட்டத்தில் முடிந்தது அதற்கு மேல் பிள்ளைகளை குறை சொல்லமுடியாது.
    சென்னையில் இருந்து கொண்டு திருநெல்வேலி தூரம் என்று பெற்றோர்களை வந்து பார்க்காத குழந்தைகள் இருக்கிறார்கள் கேட்டால் வேலை தொந்திரவு என்பார்கள். பெற்றோர்களும் தான் வாழ்ந்த பழகியய் ஊரை விட்டு வர மாட்டேன் என்று சொல்பவர்கள் இருக்கிரார்கள். சொந்த தொழில் செய்பவர்கள் பெற்றோர், மகன்கள் என்று கூட்டு குடும்பமாக இருக்கலாம். வேறு ஊரில் தொழில் புரிபவர்கள் எப்படி கூட்டு குடும்பமாக இருக்க முடியும்?

    பதிலளிநீக்கு
  28. 4) வேண்டுதல் என்பதே பிறருக்கானது தான்... அப்படிப்பட்ட வேண்டுதல் நடப்பது கண்டதுண்டு... காரணம் அதற்கான முயற்சியில் அவர்கள் இருந்ததையும் கண்டதுண்டு...! இதனால் எனக்கான வேண்டுதல், உடம்பு வருந்தும் அளவிற்கு கூலி கிடைத்தததை கண்டு திருப்தியுடன் மகிழ்ந்ததுண்டு...! ஆனால் இரண்டு வேண்டுதலிலும் சுயநலத்தால் கேடு வருவதையும் கண்டதுண்டு...!

    பதிலளிநீக்கு
  29. 5) நாள்தோறும் அல்லவா வாழ்த்து பரிமாறிக் கொள்ள வேண்டும்...? இதற்கேன் ஒரு தினம்...?

    பதிலளிநீக்கு
  30. 1) தந்தையின் பெருமிதம் "என்ன தவம் செய்தேனோ...!"

    2) பத்துத் திங்களாய் அங்கமெல்லாம் நொந்து ஓர் குழந்தையைப் பெற்றவேளை, பேறுகாலத்தில் தான் பட்ட துயரெல்லாம் மறந்து மகிழ்வதை விட, தனது குழந்தையை, கல்வி, ஒழுக்கம், பண்பாடு போன்ற அனைத்து நற்குண நற்செய்கைகள் நிறைந்த 'சான்றோன்' என்று ஊரார் பாராட்டுவதைக் கேட்பதைவிட பெற்ற தாய்க்கு வேறு மகிழ்ச்சி இருக்க முடியுமா...?

    மேற்கண்ட இரண்டும் சில பெற்றோர்களுக்கும் அவர்களின் பிள்ளைகளுக்கும் (சுருக்கமாக ஒரு இனமே) அறிந்து - தெரிந்து - புரிந்து கொள்ள வாய்ப்பு இல்லை...! காரணம் நீதி-அநீதி, தர்மம்/அதர்மம், நியாயம்/அநியாயம் இவைகளை மட்டுமே கற்று, அவற்றிலும் சிலவற்றை காற்றில் பறக்க விட்டு இருப்பார்கள்...! பிறகென்ன அறிந்து தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்...? அதுவே :-

    அறம்

    பதிலளிநீக்கு
  31. 3) "முக்கிய பொழுதுபோக்கு என்ன ?" என்கிற கேள்வி என்பதால் இதை முடிவில் எழுதுகிறேன்... மனித குலத்தை சீரழிக்கும் பல அரசியல் செய்திகள் என்றைக்கு முடிவு வருமோ...? மற்றபடி கடந்த மூன்று வருடங்களாக திருக்குறள் கணக்கியல் ஆய்வு தான் முக்கிய பொழுதுபோக்கும் ...!

    பதிலளிநீக்கு
  32. கோரா போன்ற மோசமான தளம் வேறே எதுவும் இல்லை. தினம் தினம் நமக்குள் எழும் பல கேள்விகளுக்கு நாம் தானே நமக்கு நாமே விடை சொல்லிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  33. படக்கருத்துகள். இம்மாதிரி பூமிக்குள் ஆழத்தில் சென்று பார்த்த குகைகள் அம்பேரிக்காவில் இருக்கின்றன. இது எங்கேனு தெரியலை. அடுத்த படம் அந்தத் தோலுக்காக ஆடு நிற்குதா இல்லைனா ஃபோட்டோ ஷாப்பிங்கா? பூனை எதை எடுத்துச் சாப்பிடலாம்னு யோசிக்குது போல.

    பதிலளிநீக்கு
  34. முதல் கேள்வி நாத்திகராய் இருந்துவிட்டுப் பின்னர் ஆத்திகர் ஆனது உண்டானு இருந்திருக்கணுமோ? ஏனெனில் ஆன்மிகம் என்பதே வேறே! முற்றிலும் வேறே. இங்கே குறிப்பாய்த் தமிழர்கள் பக்தியைத் தான் ஆன்மிகம் என்கிறார்கள். ஆகவே ஆன்மிகம் சார்ந்த புத்தகங்கள் எனில் நம்ம நெல்லை அனுப்பித் தந்த யோகியைப் பற்றிய புத்தகம் மற்றும் யோகியின் சுயசரிதை பரமஹம்சர் எழுதினது. காஞ்சிப் பெரியவரின் அருள் வாக்கைத் தொகுத்து அளித்திருக்கும் திரு ரா.கணபதி அவர்களின் தெய்வத்தின் குரல் போன்றவை படித்து அனுபவித்தது உண்டு. மாற்றம் எதுவும் இல்லை. புத்தகங்கள் தான் என் தேவைக்கேற்ப அவ்வப்போது இடம் மாறும். :( எதுக்கும் கொடுத்து வைச்சிருக்கணுமே!

    பதிலளிநீக்கு
  35. முதியோர் இல்லங்கள் பல நன்மை தந்தாலும் சிலவற்றில் பிரச்னைகள் இருக்கு. எது நல்லதுனு போய்ப் பார்த்துத் தான் அல்லது அங்கேயே வருடக்கணக்காய்த் தங்கறவங்களைக் கேட்டுத் தான் தெரிஞ்சுக்கணும். கோவையில் ஒரு முதியோர் இல்லத்தில் எங்கள் உறவில் மூன்று பேர் ஒரு கணவன்/மனைவி/கணவனின் சகோதரி போய்த் தங்கியதில் கணவன்/மனைவிக்கு அந்த இடம் ஒத்துக்கலை. சகோதரி அங்கேயே இருக்கார். இன்னொரு சிநேகிதி கோவையின் பிரபலமான ஒரு முதியோர் இல்லம் போயிட்டுப் பிடிக்காமல் ஒரு மாதத்திலேயே பழையபடி பழைய வீட்டுக்கே வந்து பின்னர் மன வருத்தத்தில் நோய்வாய்ப்பட்டு இறந்தே போய்விட்டார். :(

    பதிலளிநீக்கு
  36. முன்னர் பொழுதுபோக்கு எனில் புத்தகங்கள் தாம்! அவை இல்லாமல் ஒரு நாள் கடந்ததில்லை. இப்போப் புத்தகங்கள் படித்தாலும் தினமும் முடியறதில்லைதான். இணையம் தான் பெரும்பாலும் இப்போதைய பொழுதுபோக்கு. பரபரப்புச் செய்திகள் எல்லாம் தொலைக்காட்சிகளில் பார்ப்பது தான்.

    பதிலளிநீக்கு
  37. மற்றபடி சினிமானு பார்க்காட்டியும் இன்னமும் விடாமல் டாம்&ஜெரி கார்ட்டூன்கள் பழசு/புதுசு எல்லாமும் பார்ப்பேன்.

    பதிலளிநீக்கு
  38. மனம் உருகிப் பிரார்த்தித்தால் பலிக்காமல் இருக்குமா? நிச்சயம் பலிக்கும்.

    பதிலளிநீக்கு
  39. எனக்கு எந்த தினமும் கொண்டாடப் பிடிக்காது. முன்னெல்லாம் நண்பர்கள் கேட்டதால் ஒரு சில வருடங்கள் மகளிர் தினம், அன்னையர் தினம், வாலன்டைன்ஸ் தினம் எல்லாவற்றிற்கும் பதிவு போட்டேன். இப்போ நிறுத்திட்டேன்.

    பதிலளிநீக்கு
  40. குழந்தைகள் அவரவர் விரும்பும் இடத்தில் இருப்பதே அவங்களுக்கு நல்லது. எங்க பெண்ணைக் கல்யாணம் செய்து கொடுக்கையில் மும்பையில் தான் இருந்தாள். மாப்பிள்ளை டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வேலை. ஆகவே அங்கே தான் இருப்பாள் என நாங்க நினைக்க இரண்டே மாதத்தில் அம்பேரிக்கா போயிட்டாங்க. பையர் அப்போப் படிச்சுட்டு எல்&டியில் பரோடாவில் காம்பஸில் செலக்ட் ஆகி வேலையில் சேர்ந்தார். அங்கேயே குப்பை கொட்டுவார்னு நினைச்சு நாங்க பரோடாவில் வீடெல்லாம் பார்க்கணும்னு பேசிக் கொண்டு அவர் எங்களை எப்போ பரோடா அழைக்கப் போகிறார்னு காத்துக் கொண்டிருக்கன் அவரோ அம்பேரிக்கா போகத் தயார் செய்து கொள்ள வேண்டி ஜிஆர் ஈ/டோஃபல் எல்லாம் எழுதிட்டு டெக்சாஸில் ஹூஸ்டனில் அவருக்குப் பிடித்த மேற்படிப்புக்கு விண்ணப்பித்துத் தேர்ச்சி பெற்றுப் பின்னர் அம்பேரிக்கா போகப் போவதாக அறிவித்துப் போய்விட்டார். அப்போவிலிருந்து அம்பேரிக்காத் தான். இப்போத் தான் கம்பெனியிலேயே நைஜீரியாவுக்குப் போகச் சொல்லிப் போயிருக்கார். பெண் அம்பேரிக்கா முழுவதும் கிழக்கே/மேற்கே/வடக்கேனு சுத்திட்டு மெம்பிஸில் சில வருடங்கள் இருந்த பின்னர் இப்போ அவளும் ஹூஸ்டன் தான். எங்கே! அவங்களாலே இந்தியாவுக்கு விடுமுறையில் கூட வரமுடியலை! :( நாங்க போறோம்னால் கூட இங்கே இருந்து கொஞ்ச நாட்களாவது இந்திய சுகத்தை அனுபவிக்கிறதில்லையேனு நாங்க நினைச்சுப்போம். என்ன செய்ய முடியும்! :(

    பதிலளிநீக்கு
  41. வணக்கம் சகோதரரே

    இன்றைய கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. பகிர்ந்த படங்களும் நன்றாக உள்ளது.

    என்னிடம் முறைத்து ஒன்றும் ஆகப் போவதில்லை. மேலேயுள்ள பெண்ணைப் போல் சாகச வேலை செய்து வந்தால்தான் உனக்கு இந்தப் பழத்தை பரிசாக தருவேன். அதில் தோற்று விட்டால், அந்த மூன்றாவது படத்திலிருக்கும் மீன்களை பத்திரமாக காவல் காக்கும் பூனையை போல அந்த வேலையைத்தான் தருவேன். என்று கொஞ்சம் கண்டிப்புடன் ஆனாலும், முறைத்து வாதிடும் அந்த ஆடு புரிந்து கொள்ளும் வகையில் நிதானமாகவே மிரட்டுகிறாரோ நம் மூதாதையர்...
    பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா - எல்லாவற்றையும் இணைத்த கருத்துரை! நன்றி.

      நீக்கு
  42. வணக்கம் சகோதரரே

    எங்களிடம் கேட்ட கேள்விகள் அனைத்தும் நன்றாக உள்ளன. அதற்கு அனைவரும் அனுபவப்பூர்வமாக தந்த பதில்களும் மிக அருமை.

    ஆன்மீகம் என்பது ஆன்மீக புத்தகங்களை படிக்கும் போதும், ஆன்மீக சொற் பொழிவுகளை கேட்கும் போதும் சில மாற்றங்களை நம் மனதில் பதிப்பது உண்மைதான். ஆனால், இந்த உலகின் ஆசைகள் என்ற இயல்பு சூழ்நிலையில், முக்கியமாக பந்த பாசங்களில் அடிபட்டு அவை சில நேரங்களில் காணாமல் போய் விடும் அபாயமும் இருக்கிறது. அவைகளை முழுமனதோடு விலக்கி விட்டு, மனதினால் நம் உள்ளே குடி கொண்டிருக்கும் பரமாத்மாவின் சக்தியை உணரும் ஆற்றல் எப்போது ஏற்படுகின்றதோ அன்றே நாம் சிறந்த ஆன்மீகவாதி ஆகிறோம். அதற்கு மனதில் நம்பிக்கை என்ற அந்த பரமாத்மாவின் இறையருளும் வேண்டும். அவை என்று கூடி வரப்போகிறதோ? அதற்கு இன்னும் எத்தனைப் பிறவிகள் எடுத்து இந்த மாய உலகில் உழலப் போகிறோமோ என்ற சிந்தனை எனக்கும் வந்து கொண்டேதான் உள்ளது. அதற்குத்தான் நானும் இந்தப் பிறவியில் பிரார்த்தித்து கொண்டேயுள்ளேன். சென்ற பிறவிகளில் இந்த சிந்தனைகள் சிறிதளவாவது வந்திருந்தால், அதன் சாராம்சம் இந்தப்பிறவியில் சிறிது கண்களில் பட்டிருக்குமே.. அவைகள் இல்லையென்பதற்கு சாட்சிதான் இன்னமும் இந்த பந்த பாசமென்ற கட்டுக்குள் நாம் அடங்கி கிடப்பது.

    "உன் பாப புண்ணிய கணக்கை உன் அக்கவுண்ட்டில் சேமித்துக் கொண்டு உன்னுடனேதான் ஒவ்வொரு பிறவி தோறும் நானும் வந்து கொண்டேயிருக்கிறேன். நீ எந்தப் பிறவியில் அந்தக் கணக்கிலுள்ள பாபங்களை செலவழித்து முழுதாக தொலைத்து விட்டு புண்ணியங்களை மட்டும் சேமிப்பாக கொண்டு வருகிறாயோ அந்தப்
    பிறவியில் நீ என்னுடன் இணையும் முக்தி நிலையை நான் ஏற்படுத்துவேன்" என பரமாத்மா கருணையுடன் கூறி ஒவ்வொரு பிறவியிலும் நம்முடனிருந்து காத்துதான் வருகிறார். எந்தப் பிறவியில் அவரின் உபதேசத்தை நாம் காது கொடுத்து ஏற்றுக் கொள்ளப் போகிறோமோ..? அதற்கும் அவனருள் என்ற ஒன்று கண்டிப்பாக வேண்டும்.

    இப்போதுள்ள கால கட்டங்களில் நம் குழந்தைகள் அவர்களின் முடிவை தைரியமாக எடுக்கும் தைரியம் வந்து விட்டது. அதை நாம் பாராட்டித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. அப்போது நாம் தனித்திருக்கும் சூழ்நிலையை ஜீரணித்துக் கொள்ளும் மனப் பக்குவத்தையும் பெற்று விட வேண்டும். உலகில் ஜனித்தவுடன் அன்பு, பாசம் போன்ற கட்டுகளுடன் வாழ கற்றுக் கொள்கிறோம். போகும் போது நம் ஜீவன் தனியாகத்தான் போக வேண்டுமென்ற நிலை உணர்ந்து நம்முள்ளிருக்கும் பரமாத்மாவை துணையாக பற்றிக் கொள்ள வேண்டும். முதல் கேள்விக்கும், இறுதி கேள்விக்கும் ஒரே பதில்தான் என் மனதில் தோன்றுகிறது.

    இடையில் அன்றாடம் வரும் கொண்டாட்டதினங்கள் நம்மை நாமே மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டிய உபாயங்களாகவும் தோன்றுகிறது.

    இந்த எண்ணங்கள் அனைத்தும் நல்லபடியாக நிறைவேற நம்முள்ளிருக்கும் பரமாத்மாவின் அருள் வேண்டி எந்நாளும் பிரார்த்தனை செய்வோம்.. என்னவோ என் மனதில் தோன்றியவைகளை பகிர்ந்து அனைவரையும் போரடித்து விட்டேன் அனைவரும் என்னை மன்னிக்கவும். நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  43. ஆன்மீக புத்தகங்கள் படிப்பதால் மனதுக்கு ஒரு ஆறுதல் கிடைக்கிறது.

    காலத்தின் தேவையாக பிள்ளைகள் இல்லாதவர் வெளிநாட்டில் பிள்ளைகள் என முதியோர் இல்லங்களும் வேண்டும் தான்.

    பொழுது போக்கு என்று சொல்லமுடியாது ஆவல் என்றே வலை புத்தகங்கள் படிப்பது .

    வெளிநாட்டில் பிள்ளைகள் இருப்பது பெற்றோருக்கு அநீதி என கருதமுடியாது அவர்கள் முன்னேற்றம் நல்வாழ்வு வேண்டியதுதானே.

    பதிலளிநீக்கு
  44. உங்கள் கேள்விகள்

    1. ஆன்மீகம் படித்ததில்லை. கேட்டதும் மிக மிகக் குறைவு. ஆனால் பொன்மொழிகள் அவ்வப்போது கண்ணில் படுவதை வாசித்ததுண்டு. அல்லது எழுதுவதற்குத் தேவைப்பட்டால் தேடிப் பார்த்து வாசித்ததுண்டு.

    2. முதியோர் இல்லங்கள் தேவை தேவை இல்லை இதற்கு ஒற்றைச் சொல்லில் பதில் சொல்ல இயலாதே.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 1. நம்மை மீறிய, பிரபஞ்சத்தையே ஆளும் சக்தியை உணர்ந்தாலே ஆன்மீகம் தானே இல்லையோ? முந்தைய பதிலில் சேர்க்க விட்டுப் போய்விட்டது

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  45. 3. பரபரப்பான செய்திகள் பக்கம் போவதில்லை.

    4. பிரார்த்தனைகள் மனதிற்கு ஒரு தெம்பு, நம்பிக்கை, பற்றிக் கொளல். நமக்கு நடக்க வேண்டும் நேரமும் பிரார்த்தனையும் சரியான புள்ளியில் இணைந்தால் பலிக்கும். அதனால் பலன் தரும் என்று ஒரு நம்பிக்கை. ஆனால் எல்லோருக்கும் நடப்பதில்லை. எனவே நடக்க வேண்டும் என்று இருந்தால் மட்டுமே நடக்கும்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தினமுமே செய்யும் சக்தியைத் துதிப்பது பிரார்த்தனைதானே, எனவே வேண்டுதல் பிரார்த்தனை என்பது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். வேண்டுதல் பிரார்த்தனை அனுபவங்கள் இல்லை. இதுவும் விட்டுப் போச்சு பதிலில்.

      கீதா

      நீக்கு
    2. கருத்துரைக்கு நன்றி.

      நீக்கு
  46. 5. உதட்டளவு வாழ்த்துகள்! அல்லது விரல் அளவு வாழ்த்துகள்! just forwards! (இப்போது) எனக்கு அதில் சுத்தமாக ஆர்வம் இல்லை.

    6. இதுவும் கொஞ்சம் பெரிய ஆழ்ந்து பதில் தர வேண்டிய கேள்வி.

    கீதா

    பதிலளிநீக்கு
  47. அட குகைக்குள்ள புகுந்து கீழ பார்த்தா அட நம்ம செல்லங்களுக்கு லஞ்ச் டைம் போல!!!! என்ன பேச்சு பார்ப்போம்.....குரங்கார் ஆட்டிடம் ...அங்க பாரு கீழ அவனுக்கு வேண்டியது அவனுக்குக் கிடைச்சிருச்சு. ஆட்டைய போடப் போறான் பாரு வயிறு முட்ட தின்ன எவ்வளவு மீனு பாரு..... எனக்கு ஒரே ஒரு பழம்தான் கிடைச்சுது. அதுவும் கரெக்ட்டா சாப்பிடற நேரத்துல வந்திட்டியே ..ஹூம் ...சரி நீ பாதி நான் பாதி!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. ப்ளாகர், வேர்ட் ப்ரெஸ் மட்டுமே பார்த்திருக்கிறேன். வேறு தளங்கள் உண்டா என்று தெரியவில்லை. முகநூலிலும் கூட எழுதுபவர்கள் இருக்கிறார்களே.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  49. 1 வது கேள்விக்கு - ஆன்மீகம் உணர்வு உண்டு. புத்தகங்கள் என்று வாசித்ததில்லை.

    2 வது கேள்விக்கு - முதியோர் இல்லங்களின் தேவை குடும்பச் சூழலைப் பொருத்து. சில குடும்பங்களில் தேவை இருக்கிறதுதான் குழந்தைகள் இல்லாத முதியவர்களுக்கு அதுவும் அவர்களுக்கும் பண வசதி இருந்தால் தானே தங்க முடியும். கேரளத்தில் முதியோர் இல்லங்கள் குறைவு.

    3 வது கேள்விக்கு - வலைப்பக்கங்கள் வாசிப்பது, டிவியில் சினிமா, யுட்யூப் பார்ப்பது, டிவி பார்ப்பது, . அதுவும் நேரம் கிடைக்கும் போதுதான். கல்லூரிப் பணி, ரப்பர் தோட்டப் பணிகள், வகுப்பிற்கான யுட்யூப் காணொளிகள் என்று நேரம் சரியாக இருக்கிறது.

    4 வது கேள்விக்கு - இறைவனிடம் பிரார்த்தித்தல் தினமுமே நடப்பதுதான். நடக்க வேண்டும் என்று இருந்தால் நடக்கும். நடந்தாலும் நடக்கவில்லை என்றாலும் அது இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ளும் மனம்.

    5 வது கேள்விக்கு - வாழ்த்துகள் சொன்னதில்லை.

    6 வது கேள்விக்கு - குழந்தைகளின் எதிர்காலம் அவர்கள் முடிவு செய்வது. அவர்களின் நன்மை எதுவோ அதுதான். காலம் மாறிவிட்டது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  50. மறுமொழி :

    1) பெருத்த மாற்றம் என்பதைவிட மன நிறைவு அடைகிறேன்.

    2) இக்காலகட்டத்திற்கு அவசியம் தேவை.

    3) வாசிப்பு. குறிப்பாக செய்திகள் வழங்கப்படும் விதத்தை அழகியல் நோக்கில் ரசிப்பதுண்டு.

    4) பிரார்த்தனைகள் பலித்ததுண்டு.

    5) தேவையற்றது. அதற்கு பதிலாக தொடர்புடைய சமூக சேவை செய்யலாம்.

    6) பெரும் பதவி பெரிய சம்பளம் இவற்றுக்காக வெளி நாடுகளுக்குச் சென்று சம்பாதிக்கும் பிள்ளைகள் பெற்றோருக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதம் ஒப்புக் கொள்ளக் கூடியதா ?

    பதிலளிநீக்கு
  51. நீங்கள் கேட்டிருக்கும் கேள்விகள் அர்த்தமுள்ளவை. வரும் வாரத்துக்குள் எழுதி அனுப்புகிறேன். -ஹரித்வார் கங்கைக் கரையிலிருந்து

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!