சனி, 28 மே, 2022

ஒரு கைப்பிடி அளவு மண்ணை கூட... ​மற்றும் 'நான் படிச்ச கதை' (JC)

 மும்பை : மும்பையில் பூ வியாபாரம் செய்து வந்த மாணவிக்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பி எச்.டி., எனப்படும் ஆராய்ச்சி படிப்பு படிக்க இடம் கிடைத்துள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையைச் சேர்ந்தவர் சரிதா மாலி, ௨௮. இவரது தந்தை, சாலையோரத்தில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்தே, பூக்களை மாலையாக கட்டி தந்தையுடன் சென்று வியாபாரம் செய்வது சரிதாவின் வேலையாக இருந்து வந்தது.  டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலையில், ஹிந்தியில் முதுகலை பட்டம் பெற்ற சரிதா, அதில் எம்.பில்., மற்றும் ஆராய்ச்சி படிப்பும் படித்து முடித்து உள்ளார். இந்நிலையில், சரிதா மாலிக்கு அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலையில், பிஎச்.டி., படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.இது பற்றி, சரிதா மாலி கூறியதாவது:என் வாழ்க்கையில், கஷ்டங்களை தான் அதிகம் சந்தித்துள்ளேன்.  சிறு வயதிலிருந்தே பூக்களுடன் தான் வாழ்ந்து வருகிறேன். பள்ளி மாணவியாக இருந்த போதிலிருந்து, தந்தைக்கு உதவியாக பூ வியாபாரம் செய்து வந்தேன்.நேரு பல்கலையில் பட்டப்படிப்பு சேர்ந்த பின், விடுமுறையில் வீட்டுக்கு வரும் போது, பூ வியாபாரத்தை தொடர்ந்தேன். எனக்கு இரண்டு மூத்த சகோதரிகள், இரண்டு தம்பிகள் உள்ளனர். என் படிப்புக்கு தந்தை எந்த தடையும் விதிக்கவில்லை.  இப்போது, அமெரிக்காவில் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. அமெரிக்காவில் படித்து முடித்த பின், குடும்ப முன்னேற்றத்துக்காக பாடுபடுவேன்.  இவ்வாறு, அவர் கூறினார்.

====================================================================================

கோவையை சேர்ந்த 3 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் மொத்த பஞ்சாங்கத்தையும் கற்று, தின பலன்களை கணித்து கூறுவது பலரையும் வியப்படைய செய்துள்ளது.


கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியை சேர்ந்தவர்கள் மணிகண்டன் - நீலம் தம்பதியினர். இவர்களுடைய மகன் திரிசூல வேந்தன் அங்குள்ள தனியார் பள்ளியில் 3 ஆம் வகுப்பு படித்துவருகிறார். 7 வயதான திரிசூல வேந்தன் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள யுகங்கள், நட்சத்திரங்கள், நல்ல நேரம் ஆகியவற்றை விரல்நுனியில் படித்து வைத்திருக்கிறார். மேலும், ஒருவருடைய பிறந்த தேதியை கொண்டு அவருடைய ராசி, நட்சத்திரம் ஆகியவற்றை சில நிமிடங்களில் கணித்து கூறுகிறார் இந்த அதிசய சிறுவன்.

திரிசூல வேந்தனுக்கு பஞ்சாங்கத்தின்மீது ஏற்பட்ட ஆர்வம் குறித்து பேசிய அவரது தாய் நீலம்," வீட்டில் இருந்த காலண்டரை ஆர்வத்துடன் அடிக்கடி பார்க்கும் வழக்கம் அவனுக்கு இருந்தது. அதனாலேயே மாதங்கள் மற்றும் கிழமைகளை கற்றுக்கொண்டான். அதைத் தொடர்ந்து தினசரி நாட்காட்டிகளில் உள்ள பஞ்சாங்க குறிப்புகள் குறித்து எங்களிடம் கேள்வியெழுப்பியபோது அவனுக்கு பஞ்சாங்கத்தில் ஆர்வம் இருப்பதை புரிந்துகொண்டோம்" என்றார்.

தனது மகனுக்கு பஞ்சாங்கத்தில் ஆர்வம் இருப்பதை அறிந்துகொண்ட தம்பதியர் அவர்களது வீட்டிற்கு அருகில் இருந்த பூசாரி ஒருவரிடம் பஞ்சாங்க குறிப்புகளை கற்றுக்கொள்ள மகனை அனுமதித்துள்ளனர். வாரம் இரண்டு நாட்கள் இந்த பயிற்சியை மேற்கொண்டுவந்த சிறுவன் திரிசூல வேந்தன் சீக்கிரத்திலேயே அதனை கற்றுத் தேர்ந்திருக்கிறார்.

கொரோனா காலத்தில் வீட்டில் இருந்த போது, கூடுதல் சிரத்தையுடன் பஞ்சாங்க குறிப்புகளை படித்துவந்த சிறுவன், ஒவ்வொரு நாளுக்கான திதி, நல்ல நேரம் ஆகியவற்றை கணிக்க கற்றுக்கொண்டார்.

தங்களது மகனின் இந்த திறமையை உலகறிய செய்யும் நோக்கில் திரிசூல வேந்தனின் விபரங்களை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்புக்கு அனுப்பினர் இந்த பெற்றோர். இதனையடுத்து திரிசூல வேந்தனின் பெயர் அந்த சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அடுத்த ஆண்டு வெளியாக உள்ள, இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் சிறுவன் திரிசூல வேந்தன் குறித்த குறிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

7 வயதே ஆன கோவை சிறுவன் முழு பஞ்சாங்கத்தையும் கற்று, தனது விரல்நுனியில் வைத்திருக்கும் சம்பவம் பலரையும் திகைப்படைய வைத்துள்ளது.  [Thank you JK Sir]

================================================================================================

விலைமதிப்புள்ள ஆற்று மணலை எடுக்க பலர் போட்டா போட்டி போட்டு வரும் நிலையில், குண்டாற்றில் ஊரை ஒட்டி ஒரு கைப்பிடி அளவு மணலை கூட யாரும் எடுத்து விடாமல் பாதுகாத்து வருகின்றனர் இலுப்பையூர் கிராமமக்கள்.

நரிக்குடி இலுப்பையூரை ஒட்டி ஓடும் குண்டாற்றில், 25 அடி ஆழம் வரை மணல் உள்ளது.  அக்கிராமத்தினர் ஒன்றுகூடி, எல்லை பகுதியான 2 கி.மீ., தூரம் வரை, ஒரு கைப்பிடி அளவு மண்ணை கூட யாரும் எடுத்து விட முடியாதபடி பாதுகாத்து வருகின்றனர். இன்றளவும் ஆற்றில் ஊற்று தோண்டி குடிநீர் எடுக்கின்றனர்.அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் சீராக உள்ளது. எந்த சூழ்நிலையிலும் இங்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டது கிடையாது. தங்கத்தைப் போல விலைமதிப்புள்ள மணல்களை சுரண்ட பலர் போட்டா போட்டி போட்டும், ஒற்றுமையுடன் செயல்பட்டு, யாரும் எடுக்கக் கூடாது என்பதில் உறுதியுடன் இருப்பதால் அதிசய கிராமமாக உள்ளது.பொன்னையா, ஊர் பெரியவர்: குண்டாற்றில் அளவு கடந்த மணல்கள் கிடந்தன. பல்வேறு ஊர்களில் மணல்கள் சுரண்டப்பட்டதன் விளைவாக நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்பட்டு, கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது. இப்பிரச்னை எங்கள் கிராமத்திற்கு வரக்கூடாது என கருதி, ஊர் ஒன்று கூடி, குண்டாற்றில் யாரும் ஒரு கைப்பிடி அளவு மணலை கூட எடுத்து விடக் கூடாது என உறுதி ஏற்றோம். என்ன பிரச்னை ஏற்பட்டாலும் மணல் விஷயத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என முடிவு செய்து, அதனடிப்படையில் இங்குள்ள மணலை பாதுகாத்து வருகிறோம். இங்கு தண்ணீர் பிரச்னை ஏற்பட்டது கிடையாது. மணல் இருப்பதால் மட்டுமே ஆறு இருப்பதற்கான அடையாளம் தெரிகிறது. மற்ற பகுதிகளில் ஆற்றில் உள்ள மணல்கள் சுரண்டப்பட்டதால், சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து, ஆறு இருந்த அடையாளமே தெரியாமல், எலும்புக் கூடாய் உள்ளது. எந்தச் சூழ்நிலையிலும், என்ன பிரச்னை ஏற்பட்டாலும் விலை மதிப்புள்ள மணலை எடுக்க மட்டும் யாரையும் அனுமதிக்க மாட்டோம், என்றார்.

=====================================================================================================================================================================================

நான் படிச்ச கதை

ஜெயகுமார் சந்திரசேகரன்

***************


சண்டையும் சமாதானமும்

கதையாசிரியர்நீல பத்மநாபன்

 

 முன்னுரை.

திருவனந்தபுரம் தமிழ், மலையாளம் கலந்ததாக இருக்கும். அது மூன்று வகைப்படும். பிராமணர் தமிழ், பிள்ளைமார் தமிழ், நாடார் தமிழ். இது இல்லாமல் என்னைப் போன்று குடியேறியர்கள் தமிழும் உண்டு. கட்டுரை, திருவனந்தபுரம் நாடார் தமிழாக இருக்கும். அங்கங்கே வரும் மலையாளச் சொற்களுக்குப் பொருந்தும் தமிழ் சொற்களை நீங்களே உருவகப்படுத்திக் கொள்ளலாம். 

********************************************************************************** 

அண்ணாச்சி உட்காருங்கோ என்ன சொல்றீரு? 

இடவப்பாதி வன்னுட்டு, கன்னிப்பூ வேலை தொடங்கோணும்.

(தென்மேற்கு பருவ மழை வந்தாச்சு. குறுவை சாகுபடி தொடங்கணும்) 

நம்ம திருவோந்தரம் தமில் எழுத்துக்காரர் பப்பநாபன்  இருக்காருல்ல 

ஆமா, அவருக்கு என்ன ஆச்சு? 

அவருக்கு ஒன்னும் ஆகல. அவரோட கதை ஒன்னுசண்டையும் சமாதானமும்அது பத்தி எழுதலாம் ன்னு இருக்கேன். 

சண்டையும் சமாதானமும்ங்கிறது ருசியக்காரர் எழுதியதில்லா? அதெ  இவர் மலயாளத்தில எழுதீருக்காரா? 

இல்ல, இது இவர் எழுதுனது. 

அப்போ கதையை கொஞ்சம் சொல்லுங்க கேப்போம். நமக்கும் நேரம் போக்கு வேணும் ல்ல. 

கதை  என்னா கதை. அம்மாயி,  மருமக சண்டையும்,  இடையில மகன்க எந்தப் பக்கம் சேரரதுன்னு முழிக்கிறதும், கடோசியிலே எப்படியோ சமாதானம் ஆகுரதும் தான் கதை. 

அப்போ இதிலே என்ன புதுசா? 

அதுவா, திருவோந்தரம் தமிழு. அப்புறம் இங்கே இருக்கிற தமிழர்கள் எப்படி மலையாள பழக்கங்களையும் புடிச்சிக்கிட்டாங்கங்கிறதெல்லாம் இருக்கு. சுத்த தமில்லா எழுதுன காலத்தில இப்படி யதார்த்தமா கதை எழுதினா பாண்டிக்காரங்களுக்கு புதுசு தானே! 

ஹாங் 

சரி கதையை சொல்றேன். 

மாரியம்மையோட புருஷன்  போயிட்டாரு. அவோளுக்கு மூணு மக்கள்;  ரெண்டு ஆணு, ஒரு பெண்ணு. செல்லையா மூத்தவர். அடுத்தவர் தங்கசாமி.  மூணாவது தாயி; மகள். மூணு பேரும் வேற வேற ஊர்ல இருக்காக. 

செல்லையா  நாரொயில்ல இருக்கார். தங்கசாமி  திருவோந்தரத்தில. தாயி பணகுடில…. மூணு பேருக்கும் கல்யாணம் ஆகிடுச்சு. செல்லையாவுக்கு  பஞ்சு மில்லில வேலை. இப்போ என்னமோ ட்ரைனிங்காம்.  பெங்களூர்ல இருக்காரு. தங்கசாமிக்கு திருவோந்தரம் ஜி  ஆபிஸிலே வேலை. தங்கசாமியோட பெண்டாட்டி  தமிழ்க்கொடி பூந்துறை பள்ளிக் கூடத்தில வேலை செய்யறா. 

தங்கசாமி திருவநந்தபுரத்தில் ஒரு வீட்டில மாடில வாடகைக்கு குடியிருக்கிறார். அவரும் மருமகளும் வேலைக்கு போற வரை சகல வேலைகளையும் மாரியம்மை தான் செய்யவேணும், சமையல் உள்ளிட்டு.  போதாதற்கு பேரக்  கைக்குழந்தையையும் நாள் முச்சூடும்  பார்த்துக்கோணம். அதுக்கு மேல சொந்த காரியம் வேற. இப்படியெல்லாம் மாடா உழைச்சா. 

கத கொள்ளாம். சண்டை எங்கேய்ய? 

இனிதானே  வரும். பொறும்.  இது வரை ஒரு ஆரம்பம் தானே சொன்னேன். 

நாலு  மாசம் மின்னாடி ஒரு நாள். மாரியம்மை கிணத்தடில புடவை துவச்சிட்டு இருந்தப்போ தங்கசாமி வீட்டை  பூட்டி சாவியை வீட்டுகார அம்மாவிடம் கொடுத்துட்டு குடும்பத்தோட முளகுமூட்டில் இருக்க அவனோட மாமனார் வீட்டுக்கு போயிட்டான். போனது போனான். ஒரு வார்த்தை அம்மை கிட்டபுள்ளையோட பொறந்த நாள் கொண்டாட மாமனார் வீட்டுக்கு போறேன்ன்னு சொல்லப்பிடாதோ? 

வேலைக்காரிக்கிட்டே கூட சொல்லிட்டு போவாங்க. நான் என்ன அவளை விட மோசமா?’ ன்னு மாரியம்மைக்கு ஒரு ஆங்காரம். பிணங்கிட்டு மகள் தாயி வீட்டுக்கு போனா. இப்படி ரண்டு மாசம் போச்சு. ஸ்கூல்  லீவானதால பிரச்னை இல்ல. ஸ்கூல் திறந்தப்போ தமிழ்க்கொடி அவ அம்மா வீட்டிலே இருந்து ஒரு 12 வயசு குட்டிய வேலைக்கு கூட்டி வந்தா.  அவளுக்கு பிள்ளையை பாத்துக்க கூறு இல்ல. மாரியம்மைக்கு வாசி. தங்கசாமி வந்து கூப்பிட்டா தான் போகணும்னு. இப்படி ரண்டு மாசம் போச்சு. 

தாயி மாப்பிள்ளைக்கு மதுரைக்கு மாற்றல் ஆயிட்டு.  அதாலே அவர் குடும்பத்தை  தக்கலலே  விட்டுட்டு தனியா மதுரைக்கு போயிட்டாரு. மாரியம்மைக்கு போக்கிடம் இல்லை. வேற வழியில்லாம தங்கசாமி வீட்டுக்கு திரும்ப வந்துட்டா. 

அப்ப அடுத்த சண்டை தொடங்குகிச்சா? 

அது எப்படி கரெட்டா சொல்றீரு. 

எனுக்கும் ஒரு மாமியா இருந்தாள்ள. 

பணகுடியில் இருந்து வந்த அசதி. உச்சையாயிட்டு. மாரியம்மைக்கு நல்ல விசப்பு (பசி). கொஞ்சம் வறுத்த மாவு இருந்துச்சு. எடுத்து ஓறட்டி (அரிசி ரொட்டி) சுட்டு சாப்பிட்டா. வைக நேரம் தமிழ்க்கொடி வந்தா. ரொட்டி சுட்டு தின்னதுக்கு ஒரு ஏச்சு. ‘எனக்க அம்மை வீட்டில் இருந்து வறுத்த மாவு கொண்டு வந்தா இவ ராசாத்தி மாதிரி ஓறட்டி சுட்டு சாப்பிட்டு தீத்துட்டா.’ மாரியம்மைக்கு பொறுக்கவில்லை. மதியாதார் தலைவாசல் மிதிக்க மாட்டேன் ன்னு கீழே வந்து திண்ணயில பாயைப் போட்டு படுத்தவதான். 

தொ இன்னைக்கு நாலு நாள் ஆச்சு. நாலு நாளா கொலப் பட்டினி. இப்போ காய்ச்சல் வேற வந்துடுச்சு. தூக்கி தூக்கி போடுது. வீட்டுகார அம்மாதான் பெரிய மவனுக்கு தெரியப் படுத்தினா. 

அப்போ இதான் லகலையா? (சண்டையா?) 

செல்லையா பெங்களூரில் இருந்து வந்தார். அம்மையைப் பார்த்தாரு. தூக்கமா மயக்கமான்னு தெரியலை. மாடிலே போய் தம்பியையும் பாத்துட்டு கீழே வந்தப்போ அம்மை முழித்திருந்தா. அம்மாட்ட  பேச்சு கொடுத்து விவகாரம் எல்லாம் அறிந்தார். 

வீட்டுகார அம்மாகிட்ட சாயா வாங்க ஒரு பாத்திரம் வாங்கிட்டு போய் சாயா, ரொட்டி, ஆரஞ்சு, மாத்திரை எல்லாம் வாங்கி வந்தார். அம்மாவை சமாதானப்படுத்தி மாத்திரைய முழுங்க வச்சார். பின்னே சாயா குடிக்க வச்சார். ரொட்டியும் ஓரஞ்சும் சாப்பிட்ட உடனே மாரியம்மைக்கு தெம்பு வந்துச்சு. நல்லா உட்காந்தாள். 

இதுவரை அம்மை சொன்னத எல்லாம் சரி எண்டு சொன்ன செல்லையா இப்போ கொஞ்சம் அம்மை பேரிலும் குத்தம் சொல்றாப்ல. ‘ஒனக்கு இங்கே அதிகாரம் இல்லையா? எனுத்துக்கு இப்படி விருந்துக்கு வந்தவ மாதிரி விலகிப் போய் இருக்கணும்? கூடமாட வேலை செய்யணும். உள்ளதை விட்டுக் குடிக்கணும். அதை விட்டுட்டு எனுத்துக்கு இந்த அவதாளியெல்லாம்?’ 

 மேல குழந்தை அழுவறது கேட்டப்போ மாரியம்மைக்கு என்னவோ போல் இருந்துச்சா. செல்லையாவும்வயசான காலத்திலே நானோ நானல்லவோன்னு பிடிவாதம் பிடிக்காமே அவ்வகூட ஒத்துப்போகப் பாரு.’ ன்னு சொல்லிட்டு மேல்க்கொண்டு பேசாம ஊருக்கு போய்ட்டார். அப்புறம் மாரியம்மைக்கு என்ன செய்ய முடியும். 

ஆமா சமாதானம் ஆச்சுன்னு ஏன் செரியா சொல்லலை? 

அதுவா உடம்புக்கு தெம்பு வந்தாச்சு. மாரியம்மைக்கு வேற போக்கிடம் இல்லேன்னு வெளிப்படையா தெரிஞ்சுச்சு. பட்டினி கிடந்து சாக விடமாட்டேங்கிறாங்க. இருக்குற வரை எப்படியாவது இருந்துட்டுதான் போக வேணும். அப்படின்னு அவளுக்கு தோணிச்சு. அதான் சமாதானம். குழந்தை மேலயும் ரொம்ப பாசம். அதூவும் தான். 

செரி நான் வாறன். 

ஆசிரியர் அறிமுகம். 

 

நீல பத்மநாபன் என்னும் நீலகண்டப்பிள்ளை பத்மநாபன் (பிறப்பு: ஏப்ரல் 26, 1938, கன்னியாகுமரி மாவட்டம்), தமிழகத்தின் ஒரு முன்னணி எழுத்தாளர். புதினம், சிறுகதை, கட்டுரை, கவிதை என பல வகைகளிலும் எழுதுபவர். இலை உதிர் காலம் புதினத்துக்காக 2007ஆம் ஆண்டின் தமிழ் நூல்களுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றுள்ள நீல பத்மநாபன், பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். இவரின் படைப்புகள் கடந்த 25 ஆண்டுகளாக நவீனத்துவ வடிவ இலக்கணத்தால் மதிப்பிடப்பட்டு எதிர்மறைகள் சுட்டப்பட்டுள்ளன. 

நன்றி : விக்கி

இவருடைய இணைய தளம். 

விமரிசனம். 

இந்தக் கதை கா சு விதித்த சிறுகதை விதிகள் யாவும் பொருந்தியதாக உள்ளது. நல்ல துவக்கம். செல்லையா பெங்களூரில் இருந்து திண்ணையில் உண்ணாவிரதம் இருக்கும் அம்மையைக் காண வருவதில் இருந்து கதை தொடங்குகிறது.

நடுப்பகுதியில் வாசகர்களுக்குத் தெரிய வேண்டிய  முழு விவரங்கள் சில பின்னோட்டமாகவும், சில மற்ற கதா பாத்திரங்கள் வாயிலாகவும் வாசகர்களுக்குத் தெரிய வருகின்றன. 

நவீனத்துவ முறைப்படி சில முடிவுகளை வாசகர்களின் ஊகத்திற்கே விட்டு விடுகிறார் ஆசிரியர். 

இந்தநான் எப்படி எல்லோரையும் ஆட்டுவிக்கிறது என்பதை இந்தக் கதை வாயிலாக நன்றாகப் புரிந்து கொள்ளலாம். 

மக்கள் வளர்ந்து ஆளாகியபின் தலைமைப் பதவி என்பது தனக்கு இல்லை என்பதை பொருக்க முடியாத மாரியம்மை, சந்தர்ப்பத்திற்கு  ஏற்ப பேசியும், நடந்தும் காரியங்களைச் சமாளிக்கும் மூத்த மகன் செல்லையா, எனக்கு ஒன்றும் தெரியாது, ஒன்றும் நான் முடிவு செய்ய முடியாது, என்று நழுவும் இளைய மகன் தங்கசாமி, மாமியாரை எப்போதும் நிலைக்கு நிறுத்துவேன் என்று அதிகாரம் செய்யும் மருமகள் தமிழ்க்கொடி என்று கதாபாத்திரங்களின் குணங்களை நன்றாக சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர்.

கதை யதார்த்த நடையில் பேச்சுகள் யாவும் பேச்சு மொழியிலும் ஆசிரியர் சொல்வது இலக்கண மொழியிலும் இருப்பதால் ஒரு ஈர்ப்பு ஏற்படுவது உண்மை. கதை மாந்தர்கள் பேசும் போதும் சுத்த தமிழில் இலக்கணப்படி பேசுவது போல் கதை எழுதி வந்த காலத்தில் இது போல் எழுதியது ஒரு புதுமையே. 

குறைகள்  இல்லாமல் இல்லை. 

அந்தக் காலத்தில் பெங்களூரில் இருந்து திருவனந்தபுரம் வர ஒரு நாள் பிடிக்கும். கடிதம் போய் சேர 3 நாள் பிடிக்கும்.  செல்லையா என்னமோ நாகர்கோயிலில் இருந்து சுருக்க வருவது போல் இருக்கிறது கதை. ஒரு வேளை  நாகர்கோயிலில் இருந்து வருவது போல் எழுதிவிட்டு, பின்னர்ஏன் செல்லையா மாரியம்மையை நாகர்கோயிலுக்கு கூட்டிச் செல்லவில்லைஎன்ற கேள்வி எழலாம் என்பதால் செல்லையா பெங்களூரில் இருந்து வருவதாக மாற்றி விட்டாரோ ஆசிரியர் என்றும் தோன்றுகிறது. 

கதைக்கு ஒரு முடிச்சு (knot) இல்லை என்பதும் ஒரு குறை. 

கதையின் சுட்டிகள்

அழியாச்சுடர்கள்

சண்டையும் சமாதானமும் | சிறுகதைகள்

45 கருத்துகள்:

 1. இனிய உளவாக இன்னாத கூறல் கனிஇருப்பக் காய் கவர்ந்தற்று..

  வாழ்க குறள் நெறி..

  பதிலளிநீக்கு
 2. இனிய சொற்களே உறவாக
  இறையருள் சூழ்க நிறைவாக..

  வாழ்க நலம்..
  வாழ்க தமிழ்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாழ்க வாழ்கவே..

   வாங்க துரை செல்வராஜூ ஸார்.  வணக்கம்.  பிரார்த்திப்போம்.

   நீக்கு
 3. கதையை விவரித்தது அருமை. கதை நடக்கும் காலம், கம்யூனிகேஷன், ட்ராவல் சந்தேகம் எனக்கும் வந்தது. கதையை போஸ்ட்மார்ட்டம் செய்வது எப்போதுமே சரியாக இருக்காது. இங்கு பதிவு செய்வதற்கும் பாராட்டுகள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. "ஊக்கமது கைவிடேன்"​.

   நீக்கு
 4. திரிசூல வேந்தன் - சிவபெருமானின் இந்தப் பெயர் இதுவரை கேள்விப்பட்டதில்லை

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏற்படுத்திட வேண்டியதுதான்.  சிலர் சிவாஜியை நினைத்துக் கொள்வார்கள்!!!

   நீக்கு
 5. அனைவருக்கும் இனிய காலை வணக்கம். இறைவன் அருளால்
  ஆரோக்கிய வாழ்வு தொடர வேண்டும்.

  பதிலளிநீக்கு
 6. சிறுவன் திரிசூல வேந்தன் பற்றிய செய்தி
  மிகவும் வியப்பைத் தருகிறது.

  எவ்வளவு பெரிய சாஸ்திரத்தை இத்தனை
  சின்ன வயதில் கற்றுத் தேர்வது
  மஹா பெரிய விஷயம்.

  அருமையான செய்தியை இங்கே பதிந்ததற்கு மிக நன்றி.

  பதிலளிநீக்கு
 7. சரிதா மாலி அவர்களின் தந்தைக்கு பாராட்டுகள்... வாழ்த்துகள்...

  பதிலளிநீக்கு
 8. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம். நல்வரவு. வாழ்த்துகள், பிரார்த்தனைகள். அனைவர் வாழ்விலும் ஆரோக்கியம் மேம்படப் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 9. பூக்காரப் பெண்ணிற்கும் திரிசூல வேந்தனுக்கும் வாழ்த்துகள்/பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. நீல.பத்மனாபன் கதைகள்/நாவல்கள் நிறையப் படிச்சிருக்கேன். பிடித்தது தலைமுறைகள் (ரொம்பச் சின்ன வயசில் படிச்சேனா! கதையின் தாக்கம் பல ஆண்டுகள் மனதிலேயே) அடுத்துப் பள்ளிகொண்டபுரம்! சிறுகதைகளும் இந்தக் கதை உள்படப் படிச்சிருக்கேன். யதார்த்தத்தை அதன் போக்கிலேயே வெளிப்படுத்துவார். மிகப் பிடித்த நாவலாசிரியர்களில் இவரும் ஒருவர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் இவரது 'தலைமுறைகள்' கதை மட்டும் படித்திருக்கிறேன்.

   நீக்கு
 11. திரு ஜேகே அவர்களின் கதை அறிமுகம் பாணி மிக வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கிறது. அதிலும் மலையாளம் கலந்த தமிழாளத்தில் புகுந்து விளையாடி இருக்கார். கதைகளின் விமரிசனம் இப்படியும் இருக்கலாம் எனச் சொல்லாமல் சொல்லி இருப்பதும் அருமை. இத்தனை நாட்கள் இவர் திறமையை நாம் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டாலும் இப்போதாவது அறியத் தந்து கொண்டிருக்கும் எங்கள் ப்ளாக் ஆசிரியர் குழுவுக்கும் மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாராட்டுகளுக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி. "ஊக்கமது கைவிடேன்"​.

   நீக்கு
  2. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஶ்ரீராம்/கௌதமன் சார் இருவரும் வாயே திறக்கலை! :(

   நீக்கு
 12. எத்தனை கருத்துப் போகுமோ/எத்தனை விடுபடுமோ/மறையுமோ! தெரியாது. போயிட்டுப் பின்னர் வரேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எத்தனை கமெண்ட் போட்டீர்களோ...  இதெல்லாம் வந்திருக்கிறது!

   நீக்கு
 13. மணலைப் பற்றிச் சொல்லாமல் விட்டுட்டேனே! நாங்க ஶ்ரீரங்கம் வந்த புதிதில் 2012 ஆம் ஆண்டு கல்லணை வழியாகக் கும்பகோணம் செல்வதும்/வருவதும் ரொம்பச் சிரமமாக இருந்தது. வழியெங்கும் மணல் லாரிகள். இரு பக்கங்களும் வரிசை கட்டி நிற்கும். பின்னர் வந்த ஆட்சியில் அவை எல்லாம் (நீதி மன்ற உத்தரவும் கூட) முழுக்க முழுக்க நிறுத்தப்பட்டுப் பயணம் செய்ய வசதியாகவும்/சுகமாகவும் இருந்தது. இப்போச் சென்றபோதும் அதற்கு முன்னும் ஆங்காங்கே ஒன்றிரண்டு/பத்து/இருபது எனக் காணப்பட்ட லாரிகள் கடைசியாகக் கும்பகோணம் சென்றப்போ இரு பக்கங்களிலும் மறுபடி வரிசை கட்டி நிற்க ஆரம்பித்து விட்டன. போக்குவரத்து ரொம்பக் கஷ்டமாக இருந்தது. ஆனால் இதானே "விடியல்" என நினைத்துக்கொண்டோம். வேறே என்ன செய்யறது! :(((((( காவிரியின் மடி சுரண்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது. குண்டாற்றின் காவலர்கள் சொல்வது போல் ஆங்காங்கே மணலைச் சுரண்டி அந்தப் பள்ளங்களில் கன்னாபின்னாவெனச் செடிகள், காட்டு மரங்கள். மொத்தத்தில் ஆறு என்றே சொல்ல முடியாது. அதிலும் அரிசிலாற்றின் நிலை! :( எப்போ விடிவு காலம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தத் தடவை பெங்களூரில் மழை. காவிரிப்பகுதியில் மழை பெய்யலைனா தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் வரத்து குறைந்துவிடும். ஒருவேளை ஆற்றில் பூங்கா உருவாக்கலாம் என்று தமிழகம் திட்டமிட்டிருக்கிறதோ என்னவோ

   நீக்கு
  2. என்ன சொல்லி இந்தத் திருடர்களை நிறுத்த.. சொந்த வீட்டிலேயே திருடி வெளியில் விற்கிறார்களே.. நாளைய நம் தலைமுறைகளுக்கு செய்யும் துரோகம் அல்லவா இது..

   நீக்கு
 14. காலை வணக்கம் சகோதரரே

  அனைவருக்கும் அன்பான காலை வணக்கங்களுடன் அனைவருக்கும் இந்த நாள் எவ்வித கலக்கங்களும் இல்லாத நல்ல நாளாக அமையவும் இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம்! வாழ்க வளமுடன் !

  பதிலளிநீக்கு
 16. சரிதாமாலிக்கும், திரிசூல வேந்தனுக்கும் வாழ்த்துக்கள்.

  கதை பகிர்வு நன்றாக இருக்கிறது.
  இவர் கதைகள் நிறைய படித்து இருக்கிறேன்.

  //இருக்குற வரை எப்படியாவது இருந்துட்டுதான் போக வேணும். அப்படின்னு அவளுக்கு தோணிச்சு. அதான் சமாதானம். குழந்தை மேலயும் ரொம்ப பாசம். அதூவும் தான். //

  பேரக்குழந்தைகள் மேல் வைக்கும் பாசம் தான் எல்லாவற்றையும் சகித்து கொள்ள சொல்கிறது.

  நீல பத்மநாபன் அவர்களை திருவனந்தபுரத்தில் கடைத்தெருவில் பார்த்தோம். என் எழுத்தாளர் மாமா காந்திமதி நாதன் அவர்கள் அறிமுகபடுத்தி வைத்தார்கள்.

  இந்த படத்தில் பார்ப்பது போலவே இருந்தார். மிக எளிமையானவர்.
  மாமாவுக்கும் இவருக்கும் நல்ல நட்பு. மாமா எழுதிய புத்தகங்களை இவர் வெளியிட்டு இருக்கிறார்.

  பதிலளிநீக்கு
 17. திரிசூலவேந்தன் சரிதா மாலி
  இருவருக்கும் வாழ்த்துகள்.

  நீலபத்மநாதனின் கதை அறிமுகம் நன்று.
  மணல் அகழ்வு எங்கும் இயற்கை அழிவுதான் செய்கிறார்கள். காக்கும் கிராம மக்களை பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 18. சரிதாவுக்கு வாழ்த்துகள்.

  திரிசூல வேந்தன் பிரமிப்பு.

  இலுப்பையூர் மக்களுக்குப் பாராட்டுகள்.

  எங்கள் ஊரில் ஆற்று மணல் கொள்ளையில் ஆறே இப்போது எப்படியோ ஆகிவிட்டது.

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மணல் திருடர்களை மாற்றவே முடியாது. இப்போதைய "அற" நிலையத்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தின்போது திமுக வெற்றி என்று செய்தி வரும்போதே நீங்கள் லாரிகளுடன் மணலெடுக்க வந்து விடுங்கள் என்று கட்சியினருக்கு கூறியவர்.

   நீக்கு
 19. ஜெ கே அண்ணா இக்கதையைப் பற்றிச்சொல்லிய விதம் அருமை. வித்தியாசம். ஒவ்வொரு பதிவிலும் வித்தியாசம் காட்டுகிறார். நீல பத்மநாபன் அவர்களின் கதைகள் யதார்த்தமாக இருக்கும். இதுவும் வாசித்திருக்கிறேன். கதையில் நாரோயில் தமிழ் வாசனை நல்ல தூக்கலாக இருக்கும்.

  ஆ மாதவன் அவர்களின் கதையிலோ திருவனந்தபுரத்து தமிழ் அதுவும் சாலை மக்கள் பேசும் தமிழ்

  இங்கும் அண்ணா கதையைப் பற்றி திருவனந்தபுரத்து தமிழில் சொல்லியிருப்பதை ரசித்தேன்!

  கீதா

  பதிலளிநீக்கு
 20. நன்றி ஜேகே ஸார். ஒரு தனியான பாணியை பின்பற்றி வருகிறீர்கள். வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 21. கதை அறிமுகம் மற்றும் வித்தியாசமான விமர்சனம் நன்று. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 22. கதை, அறிமுகம் இரண்டும் வெகு சுவாரசியம். நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!