செவ்வாய், 24 மே, 2022

சிறுகதை - மொழிபெயர்ப்பு- தலைகுளத்தூர் பட்டதிரி 6- ஜெயக்குமார் சந்திரசேகரன் 

 

கொட்டாரத்தில் சங்குண்ணி எழுதிய

ஐதீக மாலை என்ற தொகுப்பிலிருந்து ஒரு கதை

தலைகுளத்தூர் பட்டதிரி.

மொழியாக்கம்

ஜெயக்குமார் சந்திரசேகரன்

பாகம் 6 (நிறைவுப் பகுதி.) 

[தலைகுளத்தூர் பட்டதிரி 19 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு பிரபல ஜோசியர். இவரது இல்லம் பிரிட்டிஷ் மலையாளத்தில் இருந்தது (மலபார்). ஜாதகக்கணிப்பு, ஜோசியம், பிரச்ந ஜோசியம் இவற்றில் விற்பன்னர். சோழி உருட்டி பிரச்நம்  பார்ப்பது இவரது சிறப்பு.] 

முன்கதைச் சுருக்கம். 

பாகம் 1. : குருகுல வாசம். ஜோசிய திறமை வெளிப்படுதல்.

தலைகுளத்தூர்-1

பாகம் 2. : மகன் மரித்தல்-ஜோசியத்தின் மேல் வெறுப்பு-வெறுப்பு

                    நீங்குதல்-கள்ளன் காக்கையை கண்டுபிடித்தல்-வெட்டி

                    முறிச்ச கோட்டை கதை.

தலைகுளத்தூர்-2

 

பாகம் 3. : தன்னுடைய ஜாதகம் கணித்து ஜாதி பங்கம் உண்டாகும்

                    என அறிதல் - தரித்திர பிராமணனுக்கு தரித்திரம்

                    போக்கும் வழி சொல்லிக்கொடுத்தல்.

தலைகுளத்தூர்-3 

பாகம் 4.  : ஜாதி பங்கம் உண்டாகும் நாள் வருதல் - ஜாதி பங்கம்

                     சம்பவிக்காதிருக்க நாள் முழுதும் ஆற்றில் படகில்

                     இருத்தல்  - தவறுதலாக கணியாட்டியைப் புணர்தல் -

                     அதன் மூலம் பிறந்த புத்திரன் பட்டதிரி போலவே சிறந்த

                     ஜோசியன் ஆகுதல்.  

 தலைகுளத்தூர்-4 

பாகம் 5.  : பட்டதிரியின் மகன் கணியார் நம்பூதிரிக்கு ஒன்பது

                     பெண்களுக்குப் பின் பத்தாவதும் பெண் என்று ஜாதகம்

                     குறித்தல்- வேறு ஒரு பிராமணன் அதை மாற்றி ஆண்

                     ஆக்குதல்-காசிவாசியின் வேஷத்தில் தந்தையை கண்டு

                     முட்டுதல். தந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச்  செல்லல்.

தலைகுளத்தூர்-5 

சிறு குறிப்பு. படிப்புரை என்பது படி+புரை என்று காணலாம். வீட்டின் நுழைவு வெராண்டா அல்லது திண்ணை. வருபவர்களை வீட்டில் உள்ளவர் காணும் இடம்.

கதையைத் தொடர்வோம்.

கணியாரும் பட்டதிரியும் கணியாருடைய வீட்டை அடைந்தனர். பட்டதிரிக்கு ஜாதி பங்கம் ஏற்பட்டபின்பு வேறு போக்கிடம் இல்லாததாலும்,  மகனுக்கு ஜோதிடம் சம்பந்தமாக மேற்கொண்டு கற்பிக்கும் எண்ணத்துடனும், சாகும் வரை மகனுடன் வசித்தார். தான் மரித்தால் இந்த வீட்டின் படிப்புரையிலேயே உடல் அடக்கம் செய்யவேண்டும் என்றும், அவ்வாறு அடக்கம் செய்த படிப்புரையில் இருந்து செய்யப்படும் பிரஸ்னங்கள் மிகச் சரியாக இருக்கும் என்றும், மகனிடம் கூறி உயிர் துறந்தார். அவ்வாறே பூத உடல் படிப்புரையில் அடக்கம் செய்யப்பட்டது. கணியாரும் அந்த படிப்புரையில் அல்லாது வேறு எங்கும் பிரஸ்னம் வைப்பதில்லை என்ற ஒரு நியமம் கடைப்பிடித்தார். இவ்வாறு பாழூர் படிப்புரை பிரஸ்னத்திற்கு விசேஷமும் பிரசித்தியும் உண்டானது. 

பாழூர் மனையில் மூன்று படிப்புரைகள் உண்டு. ஒன்று வீட்டின் தெற்கு பக்கத்தில் நதிக்கரையில் இருக்கிறது. அந்த படிப்புரையில்தான் பட்டதிரி கணியாட்டியைக் கூடினார். அந்த நிகழ்வின் அடிப்படையில் இப்போதும் அங்கு எந்தக் காரியமும் செய்வதில்லை. 

மற்ற இரண்டு படிப்புரைகள் வீட்டில் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன. மேற்கில் உள்ள படிப்புரையில் பட்டதிரியின் சமாதி உள்ளது. கணியார்  அங்கு தான் இன்றளவும் ப்ரஸ்னம் வைக்கிறார். அது தான் புகழ் பெற்றதும். அங்கும் அதற்கு கிழக்கே உள்ள புரையிலும் ஜோஸ்யங்கள் பார்ப்பது உண்டு.

பட்டதிரியின் சமாதி. (உதவி Facebook)

பாழூர் படிப்புரை (உதவி Facebook)

கிழக்கே உள்ள படிப்புரைக்கும் முக்கியத்துவம் ஒன்றும் குறைவில்லை. அந்த படிப்புரைக்கு முக்கியத்துவம் வந்த காரணம் பின்வருமாறு. 

பட்டதிரியின் அனுக்கிரகம், அனுபவம், விஷயஞானம், கணிப்பில் துல்லியம், போன்ற காரணங்களால் கணியார் பிரசித்தமடைந்தார். அது பொறுக்காமல் அவருக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என புதன், சுக்கிரன் (கிரகங்கள்) தீர்மானித்தனர். பிராமணர்களை போல் வேஷம் தரித்து அவர்கள் சென்று இருந்தது அந்த கிழக்கு படிப்புரையில் தான்.

புதன், சுக்கிரன் இருந்த படிப்புரை (உதவி Facebook)

கணியார் பிராமணர் வேஷத்தில் வந்த புதனையும் சுக்கிரனையும் வரவேற்று வந்த காரியம் பற்றி வினவினார். 

அதற்கு அவர்கள் “தற்போது புதனும் சுக்கிரனும் எந்த ராசிகளில் உள்ளனர்? என்று அறிய வேண்டி வந்தோம்.”  கணியார் பஞ்சாங்கம் நோக்கி அவர்கள் இருக்கும் தற்போதைய நிலையைச் சொன்னார். 

அவர்கள் திருப்திப்படவில்லை. “கிரகங்கள் நிலையை கணிப்பதற்கும்  மற்றும் எங்களுக்கும் கொஞ்சம் தெரியும். நாங்கள் கண்ட நிலை நீங்கள் சொல்லியபடி இல்லை. இன்னும் கொஞ்சம் துல்லியமாகப் பார்த்து சொல்ல வேண்டும்.” என்றனர். கணியார் “திரும்பிப் பார்க்க ஒன்றுமில்லை. இந்த பஞ்சாங்கம் நான் மிக்க கவனத்துடன், துல்லியமாக, சுத்தமாக எழுதியது. திரும்பப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. நான் சொன்னது சரிதான்.” என்றார். 

அதற்குப் பிராமணர் “இந்தப் பஞ்சாங்கம் அவ்வளவு சரி என்று எங்களுக்குத் தோன்றவில்லை. கணியார் திரும்பவும் பஞ்சாங்கம் கணித்து நிலை கூறவும்.” என்று கூறினர். பிராமணர்களின் நிர்ப்பந்தத்தால் கணியார் மீண்டும் பஞ்சாங்கம் கணிக்க புதன், சுக்கிரன்  நிலைகள், தான் முன்பே கூறியபடி இல்லை என்று கண்டார். அப்போது பிராமணர் “பஞ்சாங்கம் சரியில்லை என்று நாங்கள் சொன்னது சரிதானே? இப்போது கணித்ததும் சரி என்று தோன்றவில்லை, மிகச் சரியாக மீண்டும் கவனத்துடன் கணித்துச் சொல்லவேண்டும்.” என்றனர். 

கணியார் மீண்டும் பஞ்சாங்கம் கணிக்கத் தொடங்கினார். அப்போது பிராமணர் இடம் மாறி அமர்ந்தனர். தற்போதைய கணிப்பில் முன்பே பஞ்சாங்கத்தில் உள்ளது போலவோ, திரும்ப கணித்தபோது போலவோ அல்லாமல் வேறு விதமாய் இருந்தது.  அப்போது பிராமணர் “இதுவும் சரியில்லை, மீண்டும் கணிக்கவும்.” என்று கூறினர்.” 

இப்படிப் பல தவணைகள் ராசி இருப்பு கணிக்க வைத்தனர். ஒவ்வொரு கணிப்பும் பொய்யானவுடன் கணியாருக்கு வந்தவர்கள் யார் என்பது புலனாகியது. வந்தவர் பிராமணர்கள் அல்லர். பிராமண வேஷத்தில் வந்த புதன் சுக்கிரன் கிரகங்களே என்று அறிந்து கொண்டார். 

கணியார் அவர்களை நோக்கி “அடியேன் வேறு ஒரு கிரந்தம் கூடி பார்க்க வேண்டி இருக்கிறது. அதையும் பார்த்துக் கணித்தால் ஒரு போதும் தவறாகாது. உள்ளே சென்று அதையும் எடுத்து வந்து கணிக்கலாம். அதுவரை தாங்கள் இங்கே பொறுக்க வேண்டும்.”  என்றார். 

“அப்படியே ஆகட்டும்” என்று புத சுக்கிரன்மார் கூற கணியார் “அப்படி சொன்னால் போதாது. இங்கு இந்த ராசி இருப்புப் பிரச்சினையை தீர்க்காமல் நீங்கள் இவ்விடம் விட்டு நீங்கினால் எனக்குக் கேவலம் ஆகிவிடும். பெயர் கெடும். ஆகவே தாங்கள் இந்தப் பிரச்சினை தீராமல் இவ்விடம் விட்டு போக மாட்டோம் என்று சத்தியம் செய்ய வேண்டும்.” என்றார். 

பிராமணர் அப்பிரகாரம் சத்தியம் செய்தனர். உள்ளே சென்ற கணியார்  தற்கொலை செய்து கொண்டார். கணியார் வராமல் புதனும் சுக்கிரனும் அவ்விடம் விட்டு நீங்க முடியாததால் அந்தப் படிப்புரையிலேயே தற்போதும் கணியாரைக் காத்து இருக்கின்றனர். அதுவே இந்த கிழக்குப் படிப்புரை. 

தலைகுளத்தூர் பட்டதிரி கதை முடிந்தது. 

மூலம் சுட்டி இங்கு

21 கருத்துகள்:

 1. மிக அருமையான மொழிபெயர்ப்பு. இப்போதும் அங்கேயே ஜோசியம் பார்க்கிறார் என எழுதிவிட்டு, தற்கொலை செய்துகொண்டார் எனவும் எழுதியிருப்பது குழப்பம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நெல்லை ஐயா. இன்றளவும் அந்த கணியாருடைய பின்காமிகள் ஆகிய கணியார் அங்கே ஜோசியம் சொல்கிறார்கள். அதைத்தான் ஆசிரியர் குறிப்பிடுகிறார். 

   நீக்கு
 2. ஜெயகுமார் சாருக்குப் பாராட்டுகள். புதுமையான ஒன்றைப் பகிர்ந்துகொண்டமைக்கு

  பதிலளிநீக்கு
 3. அனைவருக்கும் காலை/மதியம்/மாலை வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள், பிரார்த்தனைகள். நேற்றைய என் பிறந்த நாளை அமர்க்கப் படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றி. மறக்க முடியாத நாளாக ஆக்கிவிட்டீர்கள். ஶ்ரீராம் எங்கே? நேற்றும் காணோம். இன்றும் காணோம்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஸ்ரீராம் பத்திரமாக இருக்கிறார். அலுவலக வேலைகளில் பிஸி.

   நீக்கு
 4. அருமையானதொரு மொழி பெயர்ப்பைப் பகிர்ந்து கொண்ட ஜேகே சாருக்கு மிக்க நன்றி. கணியாரின் தற்கொலை தான் ஆச்சரியமாய் இருக்கு. காரணமே இல்லாமல் ஏன் தற்கொலை? புதனும், சுக்கிரனும் அதே இடத்தில் இருப்பதற்காகவா?

  பதிலளிநீக்கு
 5. இந்த வீட்டைப் போய்ப் பார்த்து ஜோசியம் கேட்க வேண்டும் என்னும் ஆவல் அதிகமாக ஆகி விட்டது. மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆ மாதவனுடைய இந்தக்கதையை  "சாத்தான் திரு வசனம் " என்ற

    https://azhiyasudargal.blogspot.com/2009/11/blog-post_20.html

   கதையை படித்தால் நீங்கள் இந்த ஜோசியம் கேட்கும் ஆவலை விட்டு விடுவீர்கள். எதிர்மறை. 

   Jayakumar

   நீக்கு
  2. படிச்சேன்/படிச்சிருக்கேன். இந்த மாதிரிக் குறி சொல்லுவதை எல்லாம் நான் எப்போவும் நம்புவதே இல்லை. முதலிலேயே யூகித்தது தான் முன்னர் படிக்கையிலே! இப்படியான ஜோசியங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் சொல்லுவது பட்டதிரி மாதிரியும் கணியார் மாதிரியும் உண்மையான ஜோசியர்கள். அப்படியான ஜோசியர்களைப் பார்க்கவும் பார்த்திருக்கேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

   நீக்கு
 6. அனைவருக்கும் வணக்கம் ! வாழ்க வளமுடன்!

  பதிலளிநீக்கு
 7. //பிராமண வேஷத்தில் வந்த புதன் சுக்கிரன் கிரகங்களே என்று அறிந்து கொண்டார். //

  அறிந்து கொண்டவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
  புதனும், சுக்கிரனும் அங்கேயே அமர்ந்து விட்டதால் (காத்து இருப்பதால்) என்ன நன்மை?
  புதனால் ஜோசியம் சொல்பவர்கள் அறிவும் அதிகமாகி இருக்குமோ!
  சுக்கிரனால் பொருள் வரவு அதிகமாகி இருக்குமோ!
  பட்டத்திரி போல் நிறைய வயதுக்கு இருந்து போய் இருக்கலாம் கணியார்.

  நன்றாக மொழிபெயர்த்து கொடுத்தார் கதையை சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம், கணியார் தற்கொலை செய்து கொண்டதைத் தான் ஏற்க முடியலை. காரணமே இல்லை! :(

   நீக்கு
  2. கோமதிக்கா, கணியாருக்கு அவர்களின் ட்ரிக்/தந்திரம் புரிந்துவிட்டதால் அதிலிருந்து மீள முடியாது என்று தற்கொலை செய்துகொண்டுவிட்டாராக இருக்கும்

   கீதா

   நீக்கு
 8. படங்கள் அந்த இடத்தை நேரில் சென்று பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தருகின்றன.

  கதையை ஜெ கே அண்ணா மொழியாக்கம் செய்து இங்குப் பகிர்ந்தது சிறப்பு.

  கீதா

  பதிலளிநீக்கு
 9. மொழி பெயர்ப்பு அருமை. படங்களும் நன்றாக இருக்கிறது .

  பதிலளிநீக்கு
 10. ஜெயக்குமார் சந்திரசேகர்ன் சார் சொல்லியிருக்கிறார் பாழூர் படிப்புரா பற்றிய தகவல்கள். பாழூர் படிப்புரையைத்தான் கேரளத்தவர் ஜோதிட சாஸ்திரத்தின் தலையாய இடமாகக் கருதுகின்றனர். அது போல தலக்குளத்தூர் பட்டதிரியைத்தான் புதாமகனாகவும் கருதுவதால், கேரளத்தவர்கள், இப்போது தலைமுறைகள் மாறியிருந்தாலும், அங்கு இப்போதும் ஜோதிடத்திற்காகச் செல்பவர்கள் உண்டு. கேரளத்தவர் அன்றி பல இடங்களிலிருந்தும், ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள மக்கள் வந்து இந்த இடத்தில் பிரஸ்னம் வைத்துப் பார்ப்பதில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் சகோதரரே

  இன்றைய மொழிப் பெயர்ப்பு கதை படங்களுடன் அருமை. . இதன் மூலம் பலபலச் செய்திகளை தெரிந்து கொண்டேன். இதுவரையிலும் தந்த இந்த கதைச் செய்திகளுக்கு சகோதரர் ஜெயக்குமார் சந்திரசேகர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
 12. கதை குறித்த வாசிப்பனுபவம் தொடராக இங்கே பகிர்ந்து கொண்டது சிறப்பு. வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!